முகப்புகட்சிகள்அ.தி.மு.ககபாலி காலிடா ! திரை விமர்சனம்

கபாலி காலிடா ! திரை விமர்சனம்

-

IMG_20160722_062827
கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும்தான் கபாலி டிக்கெட்டுகள், சாதா ரேட்டுகளான ரசிகர்களுக்கு இல்லை! கோபத்தில் பேனரைக் கிழிக்கும் ரசிகர்கள்!

பாலி படத்தின் கதை என்ற வஸ்து கோடம்பாக்கத்து சிற்பிகளால் கொத்தி கைமா போடப்பட்ட பாலிதீன் போன்றோதொரு அயிட்டம் என்பதால் அதை எந்த பழையை பொருள் கடைக்காரரும் பத்துரூபாய்க்கு கூட வாங்க மாட்டார். ஒரு ஊருல ஒரு நல்ல ரவடியாம். ஊருக்கு நல்லது செய்யிற அந்த நல்ல ரவுடியை குடும்பம் குட்டியா வாழ விடாம கெட்ட ரவுடிங்க சேந்து பிரச்சினை பண்றாங்களாம். பிறகு நல்ல ரவுடி கெட்டவுங்களை அழிக்கிறாராம்.

இந்த பாட்டி வடை சுட்ட கதையை மலேசியாவில் எடுத்தால் என்ன, மணிப்பூரில் எடுத்தால் என்ன? கபாலியை பார்ப்பதற்காக பணம் பறிக்கப்படுபவர்கள் தமிழ் என்பால் மலேசியா, தோட்டத் தொழிலாளிகள், குடும்பம், காதல், பாசம், பிரிவு, ஏக்கம் என்று வடபழனி சிக்னலில் கிடைக்கும் இத்துப் போன சினிமா காஸ்ட்யூமால் போர்த்தியிருக்கிறார்கள்.

முதல் காட்சியில் ரஜினி சிறை வாயில் கம்பியில் தொங்கு தண்டால் எடுக்கும் போதே காமரா கவனமாக இடுப்பளவோடு நிற்கிறது. நாமும் நைந்துபோன பாலீதீன் பை ஓட்டைகளைப் பார்த்து கதை இதுதான் என்று 2.30 மணி நேர சித்திரவதைக்கு தயாராகிறோம். படம் முழுக்க ரஜினி முதுகைக் காட்டிக் கொண்டு கோட்டு போடுவது, கையை வெட்டுவது, முகத்தை திருப்புவது, சரித்து பார்ப்பது, கோட்டை விலக்கி விட்டு வெட்டி நடப்பது என்று சுமார் ஒரு எட்டரை ஆக்சன் ஐயிட்டங்களை வைத்து ஓட்டுகிறார். அதையே ஸ்லோமோஷன், ஸ்டெடி மோஷன், மியூசிக் மோஷன், வித்ஃ அவுட் சப்ஜக்ட்ஃபிரீஸ் மோஷன், காமரா வியூ மோஷன் என்று படுத்தி எடுக்கிறார்கள்.

கொஞ்சம் கூர்ந்து பார்த்தீர்களென்றால் சன் டி.வி சீரியல்களில் நான்கைந்து பாத்திரங்களுக்கான நாலைரை செகண்டு கதையை இருபது நிமிடங்களாக இழுப்பதற்கு மாமியார் பேச்சு, மருமகள் ரியாக்ஷன், இடையில் இருக்கும் மண்சட்டி குளோசப், மண்சட்டியில் தெரியும் மாமனார் ரியாக்சன், காற்றிலாடும் சன்னல் திரையாக்சன், பிறகு இசை ரியாக்சன், கடைசியாக எடிட்டர் ரியாக்சன் என்று காட்டுவார்கள் அல்லவா அதே அதே. மொத்தத்தில் செத்துட்டேன் என்றோ சாகப்போகிறேன் என்றோ மாமியார் சொன்னால் இத்தனை பேர்களும் – பொருள்களும் சேர்ந்து சாக வேண்டும்.

சூப்பர் ஸ்டாருக்கு கண்ணுபடப் போகுதய்யா சின்னக்கவுண்டர் பாணி ஓப்பனிங் சாங்கில் பாடும் கலைஞர்கள் மிதுன்சக்கரவர்த்தி கால சேட்டு மைனர் உடைகளை அதுவும் கறைபோன கதியில் உடுத்திக் கொண்டு பாடுகிறார்கள். சண்டைக் காட்சிகளில் அரை இஞ்சி கூட காலை தூக்காமல், ஒரு அடி கூட நடக்காமல், பத்து டிகிரி கூட உடலைத் திருப்பாமல் ரஜினி பின்னி எடுக்கிறார். அடிபட்டவர்களின் ரத்தமும், அந்த ரத்தத்தை வரவழைத்த இசையமைப்பாளரின் சப்தமும் மட்டுமே அதை சண்டைக் காட்சி என்று நம்மை நம்பச் சொல்கின்றன.

25 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு வெளியே வரும்போது திரும்ப ஆரம்பிக்காதீங்க என்று போலீஸ்கார் சொல்லும் போது ரஜினி சொல்லும் “மகிழ்ச்சி”-தான் தீம் பன்ஞ்சாம். அதற்கொரு தீம் மியூசிக்கும் உண்டாம். மற்ற படங்களில் நெகட்டிவ் பொருள் தரும் செஞ்சுருவேன், வெச்சுருவேன், ஒரு தபா நூறு தபா சொன்ன மாறி இல்லாமல் இது பாசிட்டீவ் பஞ்சாம். இதற்கு ரஞ்சித் படை நான்கு மாதங்களாவது டிஸ்கஷன் போட்டிருப்பார்கள்! பாவம் அந்த நொறுக்குத் தீனிகள்.

கெட்ட ரவுடிகள் மனைவியை கொன்றார்களா, விட்டார்களா என்று தெரியாமல் இருக்கும் ரஜினிக்கு முதலில் மகள் கிடைக்கிறாள். அந்த மகளும் வில்லன்களால் ரஜினியைக் கொல்வதற்கு அனுப்பப்படுகிறாள். பின்னர் கபாலிதான் தந்தை என அறிந்து அவரை காப்பாதற்காக பின் தொடர்ந்ததாக சொல்கிறாள். இப்படி எதிர்பாராத இம்சைகளாய் பல திருப்பங்கள் படத்தில். பாவம் ஹிட்ச்காக். அவளும் கேங்க்ஸ்டராக சூழலால் மாற்றப்பட்டவளாம். முதல் காட்சியில் அப்படி தன்ஷிகா உட்காரும் போது அவர் முகத்தில் நாம் எப்படி நோக்கினும் ஒரு ரவுடியைப் பார்க்க முடியவில்லை. அத போல அவரும் காலிங் பெல் கேட்டு நடுங்கும் மெல்லியளாள்தான் என்பதை கபாலியே கையும் களவுமாக பிடிக்கிறார்.

IMG_20160722_062559
விளம்பர வருமானங்களுக்காக கபாலி காய்ச்சலை உருவாக்கும் ஊடகங்கள்! கொள்ளையில் பங்காளிகள்!

சூப்பர் ஸ்டார் படத்தில் அனைவரும் சூப்பராக நடிக்க வேண்டும் என்று  தாணுவும், ரஞ்சித்தும் கண்டிஷனோடு சொல்லி விட்டார்கள் போலும். உண்டி வள்ளல்கள் வயிறாரா சாப்பாடு போடுவது போல இவர்கள் உடலாற நடித்து தள்ளியிருக்கிறார்கள். அட்டக்கத்தி தினேஷ் இதுவரையிலும், இனிமேலும் தான் நடிக்கப்போகும் அத்தனை படங்களின் எனர்ஜியையும் இதில் கொட்டி கொட்டி நடித்திருக்கிறார். இதனால் ஹைப்பர் ஆக்டீவ் பிரச்சினை அவருக்கு வராமல் இருக்க கவுன்சிலிங் கொடுப்பது நல்லது.

மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி சென்னையில் இருக்கிறாள் என்ற சேதி தெரிந்ததும் அரண்மனை வீட்டு புல்வெளியில் முட்டியிட்டவாறு முதுகைக் காண்பித்து  ரஜினி அழுவதை பிரமதாமான நடிப்பு என்று உலக சினிமா ஜெங்கிஸ்கான்கள் எழுதுகிறார்கள். இதுநாள் வரை மனித குலத்தின் ஆகச்சிறந்த நடிப்பிற்கான விருது, பாராட்டு, கைதட்டல் அனைத்தையும் முகமே பெற்றிருக்கும் போது இம்முறை அதை ஒரு முதுகு பெற்றிருப்பதைப் பார்த்தால் ஆனந்தக் கண்ணீர்தான் வருகிறது. அதற்காக நாம் முதுகுக் கண்ணீர் விட முடியாது. முதுகு மன்னிக்க வேண்டும். முகம் பொறுக்க வேண்டும்.

பிறகு மலேசியாவிலிருந்து உடனே சென்னைக்கு பறக்க வேண்டும் என்று மகளுக்கு உத்தரவு போடுகிறார் கபாலி. திடீரென்று எப்படி என்கிறாள் மகள். கபாலி மகளா இருந்துட்டு இது கூட தெரியாதா என்று அக்கக்கா சிரிப்பு சிரிக்கிறார் ரஜினி. படத்தில் இந்த அக்கக்கா சிரிப்பு 10 முதல் 15 முறை வரை வருகிறது. ரஜினியே சிரிக்கிறார் என்று மற்ற நடிகர்கள் சிரிக்க திரையே சிரிக்கிறது என்று நாமும் சிரிக்க வேண்டுமாம். உலக நகைச்சுவை வரலாற்றிலேயே இப்படி பார்வையாளர்கள் சிரிப்பதற்கு முன்னுரை, அறிமுகம், வகுப்பு, செய்முறை விளக்கமெல்லாம் கொடுத்து சிரிக்க வைக்க இயக்குநர் எடுத்துக் கொண்ட பாடு படபடக்க வைக்கிறது.

அடுத்த காட்சியிலேயே விமானம் சென்னைக்கு பறக்கிறது. நாமும் முதலில் ஏதோ ஜீ பூம்பா போல சென்னைக்கு போவார் என்றுதான் நினைத்தோம். நல்லவேளை லாஜிக் மீறல் செய்ய இயக்குநர் அனுமதிக்கவில்லை. சென்னை விமான நிலையத்தில் இறங்கி, டாக்சிபிடித்து, நட்சத்திர ஓட்டலில் ரூம் போடுவதற்கு கூட கபாலியால் தனியாக முடியவில்லை, பெரும் படையே தேவைப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் இது பெரிய பட்ஜெட் ரஜினி படம் என்பது நினைவுக்கு வந்தது.

ரஜினியோடு ராதிகா ஆப்தேவைப் பார்க்கும் போது வயது,தோற்றம் குறித்து விமரிசிப்போர் பழையை பஞ்சாங்கம் என்று தூற்றப்பட வாய்ப்பிருப்பதால் தவிர்க்கிறோம். இருப்பினும் தமிழ் மனைவி என்ற பாத்திரத்தில் வெட்கப்படுவதற்காக அவர் பட்ட பாட்டை நினைத்தால் எந்தப்பாட்டும் கண்ணீர் விடும்.

இந்தப் படத்தில் வில்லன் யார் என்றே தெரியவில்லை அதாவது மனதில் பதியவில்லை என்பதால் ஹீரோ யார் என்ற குழப்பம் சாதாரண ரசிகனுக்கு ஏற்படும் என்றார் ஒரு நண்பர். ஒரு வேளை அந்தப் பொறுப்பை ரஜினி, ரஞ்சித், தாணு போன்றோரே எடுத்திருப்பதால் அந்த மலேசியா வில்லனைப் பார்க்கும் போது வாங்க சார் ஒரு பெக் அடிச்சுட்டு போகலாம் என்றே ஒரு ரஜினி ரசிகன் நினைக்க கூடும். இருப்பினும் இன்னொரு வில்லனான கிஷோருக்கு நம்பியார் காலத்து தேர்வடச் செயின், கைவடச் செயின் என்று போட்டிருக்கிறார்கள். நமக்கோ நல்ல காலம் பொறக்கலையோ குடுகுடுப்பைக்காரர் நினைவுக்கு வருகிறார். என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்?

இதற்கு மேல் கோட்டு சூட்டு, அம்பேத்கர், காந்தி போன்ற தத்துவ விளக்கங்களை பொருட்படுத்த வேண்டும் என்று கோருபவர்களுக்கு ஒரு பதில் உண்டு. ஐந்து நட்சத்திர விடுதிகள் நடத்தும் பொங்கல் கொண்டாட்டங்களை ‘வில்லேஜ்’ தீமில் நடத்துவார்கள். குடிசை வீடு, திண்ணை மேசை, வாழை இலை, வேட்டி கட்டிய பரிசாரர், சிறு தானிய விருந்து, கரும்பு – மஞ்சள் குலை அலங்காரம்………………போதுமா?

பிறகென்ன?

உலகமே அழியும் போது ஒளிப்பதிவு என்ன, இசை என்ன, நடனம் என்ன, படத்தொகுப்பு என்ன என்றெல்லாம் பார்ப்பதற்கு நாம் ஒன்றும் உலக சினிமா ஜெங்கிஸ்கான் அல்ல. ஏன் ஜெங்கிஸ்கான்? அவரது படையோடு நடக்கும் படையெடுப்பில் முதலில் ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ என்ற பேரிரைச்சல் வரும். படை போன பிறகு அந்த ஊரில் எதுவுமிருக்காது. இந்த உவமைக்கான விளக்கத்தை கேட்டு கொடுமைப்படுத்த மாட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டு……………..

________________

காலையில் காசி திரையங்கின் முன் நிற்கும் போது ரசிகர்களுக்கு டிக்கெட்டு இல்லை என்றானது. உடனே சில பல ஆயிரம் செலவழித்து பிளக்ஸ், பேனர் கட்டிய ரசிகர்கள் அதைக் கிழித்தனர், கார்ப்பரேட்டு வாடிக்கையாளர்களை மூன்று நாட்களுக்கு மிரட்டி பிடித்திருப்பதால் சாதா ரேட்டு ரசிகர்களுக்கு மதிப்பில்லை. ரோகிணியில் கபாலி பார்த்துவிட்டு வந்த் ரசிகரைச் சந்தித்தோம். ஆழ்நிலை சோகத்தில் இருந்த அவரை தேற்றி சில பல வார்த்தைகள் பேச வைக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று.

யாரும் கேட்டுவிடக் கூடாது என்று சுற்று முற்றும் பார்த்து விட்டு அவர் கூறினார், “பரவாயில்லை, ஆனா எங்கள மாதிரி ரசிகர்களுக்கு திருப்தியில்லை, பாட்சா – படையப்பா மாதிரியெல்லாம் இனி வராது சார்” என்று காற்றில் கரைந்து மறைந்து விட்டார். மாலை சென்று பார்த்தால் மூன்று நாள் தங்காது என்றார் ஒருவர். நல்ல வேளை 500 ரூபாய் டிக்கெட்டு ஐந்து வாங்கி அதே விலைக்கு விற்றுவிட்டு தப்பித்தேன் என்றார் ஒரு மளிகைக் கடை அண்ணாச்சி.

ஆனால் அமெரிக்காவில் பார்த்தவர்களும், ஏர் ஏசியாவில் பறந்தவர்களும், காக்னிசன்டாக பார்த்தவர்களும் தங்களது மாமூல் பணத்தை ஜெயா சசி கும்பலின் “ஜாஸ் சினிமா’வுக்கு எழுதிவிட்டனர். அதிகாரம், கட்சி, ஊடகங்களின் அடிமைத்தனத்தை வைத்து இந்த கும்பல் பெரும் பகற்கொள்ளையே நடத்திருக்கிறது. இதில் தாணு, ரஜினி போன்றோர் பங்காளிகளாக பிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ரஞ்சித் போன்றோர் கதையெழுத மலிவு விலையில் தேவைப்பட்டனர். இருப்பினும் ஒரு பகற்கொள்ளையில் மனதை மயக்கும் ஒரு கலை இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

 1. Mr.Vinavu
  You also gave the required advertisement for the film. On your part you gave the negative comment but anything talked about KABALI makes popular in the fools(Film)world

 2. வினவு , பின்னி எடுத்து விட்டீர்கள். அண்ணா ஹஜாரே பதிவுகளுக்கு பிறகு சிரிக்க வைத்த பதிவு.

  #தொங்கு தண்டால் எடுக்கும் போதே காமரா கவனமாக இடுப்பளவோடு நிற்கிறது#
  #மண்சட்டியில் தெரியும் மாமனார் ரியாக்சன்#
  #அதற்காக நாம் முதுகுக் கண்ணீர் விட முடியாது. முதுகு மன்னிக்க வேண்டும். முகம் பொறுக்க வேண்டும்.#
  #அக்கக்கா சிரிப்பு சிரிக்கிறார் ரஜினி. படத்தில் இந்த அக்கக்கா சிரிப்பு 10 முதல் 15 முறை வரை வருகிறது. ரஜினியே சிரிக்கிறார் என்று மற்ற நடிகர்கள் சிரிக்க திரையே சிரிக்கிறது என்று நாமும் சிரிக்க வேண்டுமாம்#

  இதெல்லாம் அருமை , ஆனால் கடைசி ஒரு பத்தி தான் டொப்,

  #இதற்கு மேல் கோட்டு சூட்டு, அம்பேத்கர், காந்தி போன்ற தத்துவ விளக்கங்களை பொருட்படுத்த வேண்டும் என்று கோருபவர்களுக்கு ஒரு பதில் உண்டு. ஐந்து நட்சத்திர விடுதிகள் நடத்தும் பொங்கல் கொண்டாட்டங்களை ‘வில்லேஜ்’ தீமில் நடத்துவார்கள். குடிசை வீடு, திண்ணை மேசை, வாழை இலை, வேட்டி கட்டிய பரிசாரர், சிறு தானிய விருந்து, கரும்பு – மஞ்சள் குலை அலங்காரம்………………போதுமா?#

  இங்கு யாழில் கூடஇந்த அலப்பறை தங்க முடியவில்லை. வேறு நாட்டில் இருக்கும் இருக்கும் ஒரு நண்பன் நண்பன் கூட இந்த கறுமத்துக்கு தான் போவேன் என்றான் , அவனுக்கும் தெரியும் இந்த சினிமா கொள்ளை ம் ஆனால் அவன் சொன்ன பதில் , ‘வேற என்ன செய்ய்ய வாரம் முழுவதும் வேலை, இறுதியில் இதொன்றுதான் கொஞ்சம் பொழுதுபோக்கு என்று ‘
  வினவை படிடா என்றால் கேட்க்கிறான் இல்லை.

  ஆனால் ஒரு விஷயம், பல வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் மொக்கை என்று கூகிளில் தேடியபோது தான் உங்கள் தளமும் அறிமுகம். இப்போது தான் உண்மை அரசியல் அறிகிறேன். நன்றி. பலரை மாய வலையில் இருந்து விடுவித்து கொண்டுஇருக்கிறீர்கள். நகைச்சுவை பதிவுகள் அவசியம். சார்லி சாப்ளினின் படங்களின் ஆழம் இப்போது என் அறிவுக்கு எட்டுகிறது உங்களால்.

  எழுத்து பிழையா ? #எந்தப்பாட்டும் கண்ணீர் விடும்#

  பாடும்? அல்லது பாட்டு தானா ?

  • எதெல்லாம் சரியாக வந்திருக்கிறது என்று ரசித்ததால் கடைசி பத்தி சரியாகவரவில்லை என்ற உண்மையை கச்சிதமாக கண்டுபிடித்திருக்கிறீர்கள். வெளிநாட்டு நண்பரிடம் வார இறுதி ஓய்வைக் கொண்டாடும் நிலையில் இருப்பவரிடம் “வினவை’ படிடா என்று கேட்டு அவர் இல்லை என்று சொன்னது ஒரு யதார்த்தமான நிலவரம்தான். ஆனால் “வினவை” இப்படி ஒரு குண்டு போட்டு கலாய்த்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் வார இறுதி ஓய்வை நாடும் உழைப்பாளிகளுக்கு என்ன கொடுத்தால் இங்கு வருவார்கள் என்று யோசிப்போம்.
   வினவு உங்களுக்கு ஒரு அரசியல் அறிமுகமாக இருப்பதில் மகிழ்ச்சி.

   “எந்தப் பாட்டும்” என்பது சோகப்பாட்டுக்களை மனதில் வைத்துதான். இருப்பினும் பாடு என்று நினைத்து எழுத விசைப்பலகையில் அழுத்தி அது பாட்டு என்று வந்ததும் இதுவும் சரியாகத்தானே இருக்கிறது என்று விட்ட பிழை. சில சமயம் நகைச்சுவை இப்படி தவறுகளாலுல் வரலாம். இதையும் கண்கொத்திப் பாம்பாக கண்டுபிடித்தமைக்கு ஒரு உம்மா!

   வினவில் நீங்கள் ரசித்த நகைச்சுவை பதிவுகள் அனைத்தும் அப்படி நினைத்து எழுதப்பட்டவை அல்ல. உண்மையை சொல்லப் போனால் கபாலி விமரிசினம் இந்த வடிவில் இருக்கும் என்பது அது எழுதி முடித்த பின்தான் தெரிய வருகிறது – உள்ளடக்கம் முன்பே தீர்மானிக்கப்பட்ட போதும்.

   நகைச்சுவை எழுத்து குறித்து வாய்ப்பிருந்தால் பின்னர்….

   யாழ்ப்பாணத்தில் நண்பர்களை கேட்டதாக கூறவும். நன்றி

  • இல்லை இல்லை, கடைசி பத்தி தான் அருமை என்று சொல்லவந்தேன், டாப்பு என்பதைத்தான் டொப் என்றுவிடடேன் , யாழ் தமிழ் அல்லவா. இந்த கோப்பரேட் சினிமா கொள்ளையில் சென்டிமென்ட், புரட்ச்சி என்று தூவுவதைத்தானே அப்பிடி சொன்னீர்கள் , அந்த உவமானம் அருமை.

   இல்லை வினவை கலாய்க்கவில்லை , பல நண்பர்களுக்கு பொதுவுடைமை , புரட்ச்சி என்றாலே எதோ ஏலியனை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நானும் அப்படி தான் இருந்தேன், சிரிப்பை தேடிவந்து லெனின் அறிந்தேன் ஸ்டாலின் , ஏங்கெல்ஸ் அறிந்தேன் , முன்பு இவர்களளெல்லாம் எதோ சும்மா பாடப்புத்தகங்களில் வந்து போனவர்கள் . சிலை கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்க உலகம் மேலும் மேலும் தெளிவாக புரிகிறது. உதாரணம் பாப்கோர்னும் பாமரர் விடுதலையும்வினவு இங்கும் வினை செய்கிறது நீங்கள் அறியாமலே.

   மேலும் ஒரு, கணேசன் என்பவர் கேடடதக்கு நீங்கள் அண்ணா ஹஜரேவை பற்றி எழுதியது இப்போதும் சிரிக்க வேண்டுமென்றால் படிப்பேன் , இந்த கோமாளிக்கூத்துகளின் உண்மையை முகத்தில் அடிப்பதுடன் குடல் அற சிரிக்கவும் வைக்கும் பதிவு.

   அண்மையில் மதுக்கடை போராட்ட்ங்களில் மக்கள் அடிபடத்தை பார்க்க பொங்கியது , அனால் இங்கு இன்னமும் எம் ஜி ஆர் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். இங்கத்தையு தமிழர் படித்த முட்டாள்கள்.

   தொடர்ந்து எழுதுங்கள் . நன்றி .

 3. நீங்க சொல்றதப் பார்த்தால்…..
  கபாலி-2 வரும்போல….
  சோனியாவுக்கு வாந்திபேதி வந்தால்,மலச் சிக்கல் வந்தால் எனக்கென்ன?

 4. குப்பைனு தெரிஞ்சும் ஏந்தான் அத கிளருதேலோ தெரியல பழைய பேப்பர் கடைக்காரன் பத்து ரூபா கூட குடுக்க முடியாத இந்த கிழிந்த பாலித்தின் பைய ஏன் எங்களுக்கு காட்டுரேல் ,புரச்சிய சமைக்க அரிசியும் பருப்பும் இல்ல போல அதன் கபாலிய பிடிச்சு தொங்குறீங்க,படம் பாக்குற ஆர்வத்த ரசிகசிகாமனிகளுக்கும் தோழர்களுக்கும் தூண்டுறீகளா இல்ல ஆர்வத்த குறைக்கிறீங்கள ஒன்னும் புரியல ஆனந்த விகடன் 64 மார்க் போட்டா நீங்க ஒரு 32 மார்க்காவது குடுத்து இருபிங்க போல ஆக மொத்தம் 96 காபாலிக்கு ஏ பிளஸ் கிரேடுதான்…..

 5. தமிழ்நாட்டிற்க்கு இந்த சினிமா களேபாரங்கள் புதிதா? எம்ஜியார் காலத்திலிருந்து நடக்கிற கூத்துதானே இது.திராவிட இயக்க அரசியல் இந்த சினிமா பின்புலத்தோடுதான் தொடர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.இன்றைய் தொழில்நுட்பம் ஊடக பிரம்மாண்டம் இதுபோக பெரும்வணிக நிறுவனங்களின் தலையீடு,சில கோடிகளை போட்டு பல நூறு கோடிகளை எடுக்கத் துடிக்கிற பேராசை எல்லாமுமாக சேர்ந்து, ரசிகர்களாக இருக்கிறோம் என்ற பெயரில் எந்த கூச்சநாச்சமுமில்லாமல் தன்னை தரம்தாழ்த்திக்கொள்கிற கூட்டத்தை குறிவைத்து இது போன்ற ஏமாற்று மோசடிகள் கேளிக்கை பொழுது போக்கு என்ற பெயரில் நடந்து கொண்டே இருக்கிறது.இனி இதற்க்கு அடுத்த நிலையில் இருக்கும் நடிகனும் அவன் ரசிகனும் இதை விடவும் மேலான “மக்களை மடையர்களாக்கும்’ முயற்ச்சிக்கு திட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள்.இதற்க்காக பரிதாபப்படுவதா, வருத்தப்படுவதா ஆத்திரப்படுவதா என்று புரியாமல் பலர் முழித்துக்கொண்டிருக்கிறோம்.

  • மதத்துக்கு ரசிகரா இருக்குறத விட சினிமா ரசிகனா இருக்குறதுல பெரிசா நேரடி ஆபத்து ஒன்னும் இல்லை

 6. கபாலி படத்தின் மீது, குறிப்பாக ரஞ்சித்தின் மீதான சாதி வெறியர்களின் பாய்ச்சலைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையே தோழர்.

 7. ஜாஸ் சினிமா வெளியீடு …, தாணு தயாரிப்பு…., கள்ளமார்கட் டிக்கெட் விலை 1000,2000 போன்ற வணிக விஷயங்களை பற்றி சமூக வலைய தளங்களில் நானும் ,வினவும், பலரும் பேசியாச்சு. விவாதித்தாயிற்று…. சாட்டை அடி கொடுத்தாச்சு. இப்ப இந்த கபாலி படத்தினை பற்றி வினவு விவாதிக்காத அரசியல், சமூகவியல் கூறுகளை பார்க்கலாம்.

  இந்த படம் கபாலி தலித்தியம் பேசுற படமா…, தமிழ் தேசியம் பேசுற படமா என்ற சர்சையில் இன்னும் சமூக ஆர்வளர்கள் இருக்காங்க…. முதலில் அந்த கேள்விக்கான விடையை பார்ப்போம்…. கபாலி என்னதான் மலாய் ரம்பர் தோட்ட தமிழ் தொழிலார்களுக்குமாக போராடினாலும் …, அவர் சமமான கூலியை கேட்டாலும் அது ஆணடானுக்கும் அடிமைக்குமான இயல்பான வர்க்க நேர் எதிர் நிலையில் இருந்து தான் அந்த பிரச்சனை எழுகின்றது…அந்த பிரச்சனையின் போக்கில் ஒரு தலித் கபாலி அந்த மலாய் தமிழ் மக்களுக்கு தலைவராக மாறும் நிலை ஏற்படுத்து கபாலிக்கு…. மேலும் கங்கஸ்டர் நிலைக்கு மாற்றுது….

  அடுத்தது அந்த படத்தில் வரும் வசனங்களுக்கு தமிழ் நாட்டு சாத்திவெறி ஆண்டைகளின் எதிர்வினைகளை பற்றி வினவு பேசாமல் தவிர்ப்பதன் காரணம் என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுது… ஒரு மலாய் முதலாளியை பார்த்து நான் கோர்ட் போடுவேண்டா… உனக்கு எதுக்கு எரியுதுடா… என்று கபாலி பேசும் போது அதற்ற்கு இங்கு உள்ள சாதிவெறி ஆண்டைகள் ஓ ஓ ஓ என்று கூவுவதன் நோக்கம் என்னவாக இருக்கமுடியும்? (வினவுக்கு அந்த வசனங்கள் திரையரங்கில் ரசிகர் எழுப்பிய சத்தத்தில் கேட்கவில்லையா…? அப்படி கேட்காவிட்டாலும் சமூக வலைய தளத்தில் வேட்டையாடும் வினவு புலிக்கு அந்த விஷயங்களை-வசங்களை-எதிர்ப்பினைகளை பற்றிய எந்த புரிதலும் இல்லையா?

  தொடரும்…

 8. ‘இந்த பாட்டி வடை சுட்ட கதையை மலேசியாவில் எடுத்தால் என்ன, மணிப்பூரில் எடுத்தால் என்ன?’ என்ற வினவின் கிண்டலுக்கு பதிலும் இருக்குங்க….எதுக்கு கேங்ஸ்டரா கபாலி சித்தரிக்கப்ட்டு இருக்கணும் என்ற அடுத்த கேள்வி எழுது… மலாயில் 7% தமிழ் மக்கள் மட்டுமே உள்ளநிலையில் மொத்த கேங்ஸ்டரில் 70% அளவுக்கு தமிழ் மக்க்கள் இருக்கும் சமூக பின்னணியை ஆராயவேண்டியுள்ளது…. ரம்பர்த்தோட்டங்கள் இழந்த கடந்த 30 ஆண்டுகளில் அங்கு வேலை பல தலைமுறைகள் செய்த தமிழ் மக்கள் என்ன ஆகியிருப்பாங்க என்ற சமூக ரீதியான கேள்வியை நாம எழுப்பினா வரும் விடைதான் இந்த 70% கேங்ஸ்டர்… பூமி புத்திரா என்ற பெயரில் அங்கு உள்ள பூர்வகுடி மலைமக்களுக்கு படிப்பில்,வேளையில் சலுகைகள்,முக்கியத்துவம் கிடைக்கும் நிலையில் , மலாய் சனீஸ் மக்கள் பொருளாதாரத்தை கையாக்கப்படுத்தியுள்ள நிலையில்…, ரப்பர் தோட்டங்களில் வேலையிழந்து தமிழ் மக்களும் அவர்களின் சந்ததிகளும் என்ன நிலைக்கு இன்று தள்ளப்பட்டு இருப்பாங்க என்ற் கேள்விக்கு தான் பதில்………. சட்ட விரோத கடத்தல் கும்பல்களும் அவற்றில் தமிழ் மக்கள் முதன்மையாக இருப்பதும்… ‘இந்த பாட்டி வடை சுட்ட கதையை மலேசியாவில் எடுத்தால் என்ன, மணிப்பூரில் எடுத்தால் என்ன?’ என்று கபாலியை கிண்டல் அடிப்பதன் மூலம் மலாய் தமிழ் மக்களின் அவலங்களை எளிமைப்படுத்தும் வினவுக்கு சமூக பொறுப்புணர்வு இருக்கா?

  என்னமோ தெரியல இந்த கபாலி விஷயத்தில் மட்டும் தினமணியும் ,வினவும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றது…. இன்றைய தினமணியில் வந்த கட்டுரையை வாசகர்கள் படிக்கலாம்…. அந்த எந்த புள்ளியில் இணைப்பு இவர்கள் இருவருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்….

  தொடரும்….. சரி வேண்டாங்க இப்ப தான் மீண்டும் வினாவுக்கு வந்து பின்னுட்டம் எழுதறேன் அதனாலே முற்றும்… போட்டுகிறேன்…. அதிகமா அதிகப்பிரசங்கி தனமா நிறைய எழுதினா வினவு புலி கடிச்சிடும்….

 9. கபாலி விமர்சனம்…..முகநூலில் இருந்து சில பதிவுகள்…..(பிரசுரிப்பதும் .., கிழித்து எறிவதும் வினவின் விருப்பம்)

  [1]
  எங்களுக்கு சினிமா’வில் நாட்டம் இல்லாவிடிலும்,,,
  அதில் வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான வசனங்களுக்காக,,,ஆதிக்க வெறிக்கு தரப்பட்டுள்ள செருப்படிக்காக,,,
  நீங்கள் ரஞ்சித்தை,,,ரஜினியை,,,கபாலியை,,, கலர் கலரா காரணங்கள் வைத்து எதிர்த்தால்,,,
  பெரியாரிஸ்டுகள் இந்தப் படத்தை கொண்டாடுவோம்,,
  https://www.facebook.com/profile.php?id=100012349819390&fref=nf

  [2]
  சமூக விடுதலைக்கான தளம்தான் எங்கள் களம். அதில் களமாடுவோம்,களையெடுப்போம்,முடிஞ்சா நெருங்குடா பார்ப்போம்.இனி எங்களின் மெட்ராஸ் ,கபாலி வரிசையில் அடுத்தடுத்த கருவிகள் களமாடும்.
  https://www.facebook.com/ezhil.maran.14418?fref=nf

  [3]திட்டமிட்டு விளம்பரம் செய்ததைப்போலவே, அதற்கிணையாக, திட்டமிட்டு எதிர் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
  https://www.facebook.com/ramasamymani48?fref=nf

  [4]
  Apocalypto படம் சூப்பருன்னு கைதட்டி ரசிச்ச ஆளுகதான்
  கபாலி படத்த குப்பைன்னு விமர்சிக்குதுக!
  தமிழன்னு வசனம் வரனும்னா
  அது கொம்பன் மாதிரி படத்துலதான் வரனும்ங்கற மனநிலை கொண்ட சைக்கோக்களால் மட்டுமே
  கபாலி குப்பைன்னு விமர்சிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல!
  https://www.facebook.com/veera.karthik1

  [5]
  #‎மகிழ்ச்சி‬!!
  சரிஞ்சி கிடந்த ரஜினியோட மார்கெட்டை தூக்கி பிடிச்சிருக்கார்
  மலேசிய தமிழர்களின் பிரச்சனையை சொல்லும் விதம் திரை வெளியிடுவதற்கு எந்த சிக்கலும் இல்லாமல் படத்தை தந்திருக்கிறார்.
  சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே செம்ம ஸ்டைலுதான். ஆனா ஸ்டைலுக்கே ஸ்டைல் பண்ணிருக்கார்
  வசனங்களை சிலருக்கு தேனாகவும் சிலருக்கு மருந்தாகவும் கொடுத்துள்ளார்.!
  படத்தில் காதலுக்கு வயசில்லை என்பதையும் காதலை விரும்பாதவர்களையும் காதலிக்க தூண்டியுள்ளார்..
  “உன்னோட கருப்ப எடுத்து என் உடம்பு முழுவதும் பூசிக்கனும்” இதில் ஆதிக்கத்தை அடிச்சி விரட்டிருக்கார்..
  தமிழர் இனத்துக்கு செம்மையான வாசனை பூசி இருக்கார். படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இது தமிழினம் என ஒரு முறை முகர்ந்து பார்த்து கொள்ளலாம்..
  அம்பேத்கரியத்தையும் தலீத்தியத்தையும் மூர்க்க தனமாக எதிர்ப்பவர்கள் கூட ஏற்று கொள்ளும் விதமாக நச்சுன்னு சொல்லியிருக்கார்….
  ஆதிக்கத்தை சும்மா போற போக்கில் அடிச்சி விரட்டியிருக்கார்..
  திறமையிருந்தால் வாய்ப்புகள் தானாக வரும் என்பதில் எந்த மாற்றும் இல்லை!
  இந்த வாய்ப்பை ஒரு கடுகளவேனும் நழுவ விடாது அனைத்தையும் சரியாக செய்து முடித்துள்ளார் இயக்குநர் ‪#‎ரஞ்சித்‬!!
  மொத்தத்தில் படத்தை பார்த்த மலேசிய நண்பர்கள்
  #மகிழ்ச்சி!!
  https://www.facebook.com/selvam.tamilmaran.7

  [6]நல்லாத்தானே இருக்கு.இதப்போய் மொக்கைங்கறீங்க….
  #‪#‎எனக்கு‬ பிடிச்சிருக்குப்பா
  நல்லால்லை..நல்லால்லைன்னு அவ்ளோ feedback.இததவிர டிக்கட் ரேட் கூட,,,தஞ்சாவூர்ல்ல மட்டும் மூணு த்யேட்டர்ல ரிலீஸ். .ஆனாலும்….கூட்டம் அள்ளுது…
  அப்படி என்னதான் இருக்கு இந்தாள்கிட்ட…?
  https://www.facebook.com/rsuraguru.renganathan?fref=nf

  [7]எங்கு பார்த்தாலும் கபாலி பற்றிய பதிவுகள் ,பேச்சுகள் தான், ஏன் இப்படி?

  கபாலி வெறும் திரைப்படம் அல்ல. சாதி,மத,மொழி,இனம் இவற்றை கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் குறீயீடு அது.

  நீங்கள் எவ்வளவு நன்றாக திறமையாக வேலை செய்தாலும் உங்க Manager Appraisal-ல் உங்களை மட்டம் தட்டுகிறாரா? ஆனால் உங்களை விட திறமையில்லாத பலரை Appraisal-ல் உயர்த்தி விடுகிறாரா? அப்படியென்றால்
  ஒடுக்கப்பட்ட உங்களுக்கான குறீயீடு கபாலியில் இருக்கிறது.

  மேட்டுக்குடியாக இருக்க வேண்டும்.மேட்டுக்குடியாக இல்லாவிட்டால் மேட்டுக்குடிக்கு சொம்பு தூக்குபவர்களாய் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் ஒடுக்கப்படுவீர்கள் என்ற உண்மை நிலைக்கான குறீயீடு இதில் உள்ளது.

  ‘இவன் தாத்தா வெறும் லுங்கியை மட்டுமே கட்டிக்கிட்டு தெரு தெருவா வெங்காயம் வித்த பய, ஆனா இவனைப் பாத்தியா இன்னைக்கு இன்ஜினியர்ன்னு சொல்லிட்டு பேண்ட் சர்ட் போட்டுகிட்டு அலையுது” – என்று உங்களை பாத்து உங்களை சுற்றி உள்ளவர்கள்
  வசை பாடுகிறார்களா? அப்படியென்றால் உங்களுக்கான குறீயீடு கபாலியில் இருக்கிறது.

  தன்னை விட வயது குறைந்தவர்களிடம் கைகட்டி “சார் சார்’ என்று வேலைப்பார்க்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கான குறீயீடு கபாலியில் இருக்கிறது.

  விடுதலைக்காக ஏங்கி விடுதலைக்காக போராடும் மக்களின் குறீயீடு கபாலியில் இருக்கிறது.

  அமெரிக்காவின் கட்டமைப்புக்கு பெரும் அளவில் உடல் உழைப்பை கொடுத்த கறுப்பினம் இன்று அமெரிக்காவில் இருக்கும் அவலமான நிலைக்கான
  குறீயீடும் கபாலியில் உள்ளது.

  மலேசியாவில் சில பல தலைமுறைகளுக்கு முன்பே போய் செட்டில் ஆகிவிட்ட இந்திய மக்களின் நிலைக்கான குறீயீடும் உள்ளது.

  ஆகவே கபாலி படம் பற்றி பேசுவதும் விவாதிப்பதும் ஒரு சமூக கடமையே! கபாலி படம் பற்றி அனைத்து இடங்களிலும் பேசுங்கள் விவாதியுங்கள்.

  சில பாசிசவாதிகளின் வயிறு கபாலி படம் பார்த்த பிறகு நெருப்பாகி எரிவதே ரஞ்சித்தின் கபாலிக்கு கிடைத்த வெற்றி.

  இதில் நடித்ததின் மூலம் ஒடுக்கப்பட்டவர்களை பற்றிய விவாதத்தை உலகம் முழுவதும் எடுத்து சென்றது ரஜினி தன்னை வாழ வைத்த இந்த சமூகத்திற்கு செய்த நன்றி கடன்.

  Well done ரஞ்சித்! Well done ரஜினி

  https://www.facebook.com/vijhai.shekar?fref=nf

 10. கபாலி

  புரட்ச்சியின் நெருப்பு

  இல்லை என்றாலும்……..

  உலகில்

  ஒடுக்கப்படுபவனின்

  கலக குரல்

  அடங்க மறுப்பவனின்

  எதிர்ப்பு முழக்கம்

  • RajiniVeriyan, veri pidichaa oosi podu! aprom muthi pochuna sethuruva… eluthunavan amma appava soldrappovey theriyuthu unnoda yokiyatha… oru koothaadi pinnaadi pora unakku epdi olukkam irukkum?

 11. உங்களை போன்ற தீய சக்திகள் என்ன தான் முயன்றாலும் ரஜினியை வீழ்த்த முடியாது… ரஜினி என்றும் எங்கள் அன்புக்கு உரியவர்

 12. மம்முட்டி நடித்த அம்பேட்கர் திரைபடத்திற்க்கு வினவு விமர்சனம் எழததாதற்கும்
  கபாலி படத்திற்கு வினவு விமர்சனம் எழதியதற்கும் பின்னால் ஒர் மோசமான அரசியல் இருக்க
  வாய்ப்பு இருந்தால் அம்பேத்கர் திரைப்பட வெளியிட பாட்ட சிரமம் குறித்த மதிமாறன் புத்தகம் படிக்கவும்

 13. வினவு போன்ற தீய சக்திகள் திட்டமிட்டு வேண்டும் என்றே பொய்யான ஒரு தகவலை சொல்லியிருக்கிறது. கபாலி படம் ரஜினி நடித்த படங்களில் சிறந்த படங்களில் ஒன்று என்று நிச்சயம் சொல்லலாம். படம் மிகவும் நன்றாக இருக்கிறது. ரஜினியின் நடிப்பு அற்புதம், இந்த படத்திற்கு ரஜினிக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும்.

 14. எல்லோரும் படம் வருவதற்கு முன்பே விமர்சனம் எழுதினார்கள். வினவு படம் வந்த அன்றே எழுதியிருக்கிறது.

 15. கபாலி விமர்சனம் படித்தேன்.
  வினவில் இப்படியொரு அபத்தமான விமர்சனம் வருமென்று நான் நினைக்கவில்லை.
  அவ்வளவு மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டால் பிறகு ஏன் அதற்கு விமர்சனமெழுத வேண்டும்? இதுவரை அப்படி எழுதியதேயில்லையே?
  கபாலியாயை வெறும் கபாலியாக மட்டுமே பார்ப்பதற்கு வினவெதற்கு? அதற்கு செஞ்கிஸ்கான்கள் போதும்.
  சில காட்சிகள் தவிர இப்படத்தின் பல காட்சிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற விசயத்தைக் காண்பதற்கு வினவு தவறிவிட்டது.
  தமிழ் சினிமாவில் முதன்முதலாக அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் முதன்மைக் கதாபாத்திரம் கபாலிதான். காபாலியை நான் வரவேற்கிறேன்.
  படத்தின் இறுதியில் கிஷோர் பேசும் வசனங்கள்தான் கதையின் வில்லன். அவன் சாதியை மட்டுமல்ல வர்க்கத்தையும்தான் குறிப்பிடுகிறான்.
  தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’?
  ரஜினியின் படத்தை ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்துப் பார்ப்பது ரஜினியின் ரசிகர்கள்தான். பொதுவான ரசிகர்களல்ல. ஆனால், பெரும்பான்மையான ரஜினி ரசிகர்களுக்கும் கபாலி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, படத்தின் மீது அவர்களுக்கு எரிச்சலும் உள்ளது.
  ஒரு எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகின்ற மாபெரும் பெருமையைப் பெற்ற முதல் தமிழ் சினிமா கபாலி. காபாலியை நான் வரவேற்கிறேன்.
  படம் வெளிவந்த நாள் அதிகாலை 8.00 மணிக்கெல்லாம் அலைபேசிக்குள் படம் வந்துவிட்டது. நெரிசல் இல்லாதபோதும் படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்களல்லாத சினிமா ரசிகர்களுக்கு கபாலி பிடித்துள்ளது என்பதுதான் இதற்குக் காரணம்.
  ‘வில்லேஜ் தீம்களில்’ அம்பேத்கர் படத்தை மாட்டிவைக்கும் நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் இருக்கிறதா என்ன?
  கபாலி சொல்லும் பதில் அல்லது பஞ்ச் வசனங்களுக்கான கேள்விகளைக் கேட்டவர்கள் காந்தியிலிருந்து மாம்பழம் ஊடாக மதயானைக்கூட்டம் வரையிலும் இருப்பவர்கள்தான் என்பது வினவிற்குப் புரியவில்லையா?

  • குருசாமி மயில்வாகனன்,

   கபாலி மோசமான படமென்று மதிப்பிட்டுவிட்டு ஏன் விமரிசனம் எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள்.அது மோசமான படமென்பது உங்களது கருத்தில்லை என்றால் அது ஏன் நல்ல படமென்றுதான் நீங்கள் விவாதிக்க வேண்டும். மாறாக ஏன் எழுதுகிறீர்கள் என்றால் அது மொக்கை படமென்பதை நீங்கள் மறைமுகமாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும். அடுத்து உங்களைப் பொறுத்த வரை கபாலி மிக நல்லபடம் என்பது அடுத்த வரிகளிலேயே வருகிறது. அதுதான் உங்களது உண்மையான கருத்தென்றால் முதல் வரிகள் தவறு.

   அடுத்து இந்த படம் மரண மொக்கை என்பதையோ, மட்டமான மொக்கை என்பதையோ நாங்கள் நிரூபிக்கத் தேவையில்லை. படமே அப்படித்தான் இருக்கிறது. அதைத்தான் விமரிசனமும் உணர்த்துகிறது.தமிழ் சினிமாவில் எல்லா போலீஸ் ஸ்டேசன் காட்சிகளிலும் அம்பேத்கர் படம் தவறாமல் இருக்கும். இது வரை உங்களது கண்ணுக்கு ஏன் அது தட்டுப்படவில்லை? கபாலியை விட பல போலிஸ் படங்களில் அதிக முறை அம்பேத்கர் படமாக வந்து போகிறார்.ஆகவே இப்படியெல்லாம் அபத்தமாக குறியீடு ஆய்வு செய்யாதீர்கள்.

   ரஜினி ரசிகர்கள் எனப்படும் உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இம்முறை கபாலி டிக்கெட்டே முதல் நாட்களில் கிடைக்கவில்லை. எல்லாம் ஐ.டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விற்கப்பட்டதால் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இது வினவின் கட்டுரையிலேயே வருகிறது. ஐ.டி நிறுவனங்களில் வசூல் செய்தவர்கள் சசிகலா கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

   எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகிறது என்று ரசிகர்களையெல்லாம் ஆதிக்கசாதியாக்கி விட்டீர்கள். உண்மையில் ரஜினி, விஜயகாந்த் போன்றவர்களுக்கு தலித் ரசிகர்கள் அதிகம். பா.ம.க ரஜினி படப்பெட்டியை எடுத்து படத்தை ரலீஸ் செய்ய தடை ஏற்படுத்தியது, பா.ம.க பகுதிகளில் விஜயகாந்த் வெற்றி பெற்றது எல்லாம் அப்படித்தான்.

   வில்லேஜ் தீமில் அம்பேத்கர் படமுண்டா என்று அப்பாவியாக கேட்டிருக்கீர்கள். பாராளுமன்றத்திலேயே அம்பேத்கர் உண்டு. அதற்கு மோடி மாலை போட்ட போட்டோவும் உண்டு. உடனே பா.ஜ.க வில் அம்பேத்கர் இருப்பதால் அது தலித் கட்சி என்று அழைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

   மற்றபடி உங்களைப் போன்றவர்கள் அர்த்தமற்ற இந்த குறியீடுகளை வைத்து கபாலி படம் எனும் தேவர் சாதி வெறி கும்பல் வழிப்பறி செய்த கொள்ளையை, ரஜனி எனும் பா.ஜ.கவின் பிராண்ட் அம்பாசிடரின் இமேஜை ஆதரிக்கிறீர்கள். இல்லையேல் அத்தகைய தலித் போராளி படமான கபாலியை எதற்காக்க தேவர் சாதி வெறி சசிகலா கும்பல் வெளியிட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்து கொள்ளும் அளவு தேவர் சாதி சசிகலா கும்பல் புத்திசாலி அல்ல என்றால், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்நாட்டில் அடிமைகளாக வாழ்வதும் புத்திசாலிகளாக இல்லை என்ற காரணத்திலாகி விடும். சாதி ஒடுக்குமுறை என்பது அறிவார்ந்து அல்ல, பொருளாதாரத்தை சார்ந்து சமூக ரீதியாக ஒடுக்குவது. நேரமிருப்பின் காபாலி அக்கப்போர்களை வெளுத்து வாங்கும் வண்ணம் எழுதும் எண்ணமுண்டு.

   இறுதியில் காபாலி எனும் முன்னாள் தொழிற்சங்க தலைவர் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவனாக உலா வந்து 1 கோடி ரூபாய் பென்ஸ் காரில் வந்து சோபாவில் தேய்ந்து போன வசனங்களைப் பேசினால் உங்களைப் போன்றவர்கள் ரஜினி ரசிகர்களா மாறுகிறீர்கள் என்றால் உண்மையான ரஜினி ரசிகர்கள் எவ்வளவோ மேல். அவர்களை திருத்த முடியும். மற்றவர்களை சிரமம்.

   உங்கள் நிலை குறித்து பரிதாபப்படுகிறோம். நன்றி

  • //தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’?//

   மயில் வாகனன், கபாலியில் மறைந்திருக்கும் பல்வேறு கம்ப சூத்திரங்களை கண்டிபிடித்து விட்டு மேற்க்ண்ட வரியின் சூட்சுமம் புரியாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. முடிந்தால் கட்டுரையை மீண்டும் படித்து விட்டு அந்த வரி நீங்கள் குறிப்பிட்டது போல அல்லாமல் வேறு மாதரி இருப்பதையும், அது தரும் பொருள் என்னவென்பதையும் கண்டுபிடியுங்கள். இல்லையேல் கபாலி காய்ச்சலிருந்து நீங்கள் இன்னமும் விடுபடவில்லை என்றாகிவிடும்.

  • @குருசாமி மயில்வாகனன்

   /// தமிழ் சினிமாவில் முதன்முதலாக அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் முதன்மைக் கதாபாத்திரம் கபாலிதான். காபாலியை நான் வரவேற்கிறேன். ///

   சமீப கால படங்களை அண்ணன் குருசாமி மயில்வாகணன் அவர்கள் பார்ப்பதில்லையோ, பல்வேறு படங்களில் அம்பேத்கர் புகைப்படங்கள், அம்பேத்கர் குறித்த வசனங்கள் ஆங்காங்கு வருகின்றன. அவ்வளவு ஏன்? இதே இரஞ்சித்தின் மெட்ராஸ் படம் தலித் மக்களின் வாழ்க்கையைச் சொன்ன அளவில் 100ல் ஒரு பங்காவது கபாலி பேசியிருக்குமா?. ஒரு வேளை ரஜினி என்ற பிம்பத்தின் மீதான பிரமிப்பும் ’மரியாதையும்’ உங்கள் மனதின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் தான், ரஜினி ’வாயிலிருந்தே’ அம்பேத்கரைப் பற்றி பேச வைத்த ரஞ்சித்தை வினவு பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்றே எண்ணத் தோன்றியிருக்கிறது.

   ///படத்தின் இறுதியில் கிஷோர் பேசும் வசனங்கள்தான் கதையின் வில்லன். அவன் சாதியை மட்டுமல்ல வர்க்கத்தையும்தான் குறிப்பிடுகிறான். தண்டால் எடுப்பதை இடுப்பிற்கு மேல் காட்டினால்தான் நம்பமுடியும் என்பது என்ன ‘லாஜிக்’? ///

   கத்தி திரைப்படம் கூடத்தான் வர்க்கத்தைப் பற்றி வசனம் பேசுகிறது.

   /// ஆனால், பெரும்பான்மையான ரஜினி ரசிகர்களுக்கும் கபாலி சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, படத்தின் மீது அவர்களுக்கு எரிச்சலும் உள்ளது. ஒரு எஸ்.சி படமென்று ரஜினி ரசிகர்களாலேயே தூற்றப்படுகின்ற மாபெரும் பெருமையைப் பெற்ற முதல் தமிழ் சினிமா கபாலி. காபாலியை நான் வரவேற்கிறேன் ///

   ரஜினி இரசிகர்களுக்கு இது எஸ்.சி படம் என்பதால் பிடிக்காமல் போனது எனில் பாபா ஏன் ரசிகர்களால் தூக்கி எறியப்பட்டது? இரசிகர்களில் ஐ.டி நிறுவன இரசிகர்கள், கீழ்தட்டு இரசிகர்கள் என இரு வகைப்பாடு உண்டு. எஸ்.சி படம் என்று வெறுப்பது ஐ.டி. நிறுவன விசிலடிச்சான் குஞ்சுகள் தான். விறுவிறுப்பு, ஆணாதிக்க வசனங்கள் ரஜினிக்கு உரிய பிரம்மாண்டம் போன்றவையே கீழ் தட்டு இரசிகர்களின் எதிர்பார்ப்பு. சாதாரண இரசிகர்களைப் பொறுத்த வரையில், பாபா படத்தைப் புறக்கணித்த அதே காரணம் தான் இப்படத்தின் மீதான் வெறுப்பிற்குக் காரணம்.
   தவிர, ரஜினி இரசிககிகாமணிகளால் தலித்துகள் குறித்த 2,3 வசனங்களையே பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்திற்காகவே, கபாலி தலித் பிரச்சினை குறித்து பேசும் படமாகி விடுமா ?. அப்படியெனில் மெட்ராஸ் படத்தோடு இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்களும் ஒரு முற்போக்கு ரஜினி ‘இரசிகராக’ மாறியிருப்பதையே உங்களது கபாலி வரவேற்பு காட்டுகிறது.

   /// ‘வில்லேஜ் தீம்களில்’ அம்பேத்கர் படத்தை மாட்டிவைக்கும் நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் இருக்கிறதா என்ன? ////

   வினவு கூற விழைவது நகரத்தின் நட்சத்திர ஓட்டல்களில் என்றாவது ஒரு நாள் வில்லேஜ் தீமை உருவாக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமத்து அடையாளங்களை செயற்கையாக ஏற்படுத்தி கிராமிய மணத்தை உருவாக்க முயற்சிப்பது போல், கபாலியிலும் அங்கின்றும் இங்கொன்றுமாக தலித் பிரச்சினை குறித்த வசனங்கள் சொறுகி வைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் படத்தின் கதை தலித் பிரச்சினை பற்றியதா ?. பின் எதற்காக ரஞ்சித்தையும் கபாலியையும் பாராட்ட வேண்டும் ?.

   வில்லேஜ் தீம் தான் அம்பேத்கர் படம். ரியாலிட்டி அதாவது அந்த நட்சத்திர ஓட்டல் தான் தாதாவின் மசாலா கதை.

 16. அம்பேத்கர் படத்தை போலீஸ் நிலையங்களில் காட்டும் போது எழாத எதிர்ப்பு கபாலியில் காட்டிய போது ஏன் எழுகிறது? ‘எனக்கு ஒரு கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம். டாங்கு டக்கர டொய்’; ‘கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு; காலத்தின் கையில் அது இருக்கு’ என்பவை தான் தனது திரைப்படங்களில் ரஜினிகாந்த் பேசி வந்த ‘அரசியல்’. அவற்றிலிருந்து நகர்ந்து கபாலியில் அவர் பேசிய அரசியல் வசனங்கள் ஒரு பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும்.

  கபாலியில் ரஜினி பேசிய வசனங்களும், ரஜினியின் ஸ்டைலும் ரஜினியினுடையவை அல்ல. அவை கபாலியினுடையவை. அதனால் தான் ஒரு புத்திசாலி ரசிகனால் கபாலியுடன் ஒன்றுபட முடியவில்லை. தலித் அதிகாரம் பெறுவது தொடர்பான ஒரு கனவின்பம், கபாலி. இதனை கற்பனாவாதம் என்று எளிதில் நிராகரிக்கலாம். ஆனால் இப்படம் பார்ப்பவருக்கு வழங்கும் தற்காலிக கர்வம் முக்கியமானது. இதனை தினமணி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் போன்ற நபர்களால் எக்காரணம் கொண்டும் புரிந்து கொள்ள இயலாது. நீங்களும் அந்த ஜீப்பில் ஏறிக் கொள்வது எதற்காக?

  இப்படத்தை மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்திருப்பது தெரியவில்லையா? தேவர்சாதி வெறி தயவில் தலித் விடுதலையா? என்று கேட்பது ஒரு மாய நியாயம். கபாலி அல்ல; ஜோக்கர் படத்தை கூட மன்னார்குடி கும்பல் வினியோகம் செய்ய முன்வரலாம். காரணம் மக்களுடைய கோபாக்கினையின் எல்லையை புரிந்து கொண்டுள்ளது ஆளும்வர்க்கம். கோவன் கைது செய்யப்பட்டதை பா.ஜ.க எதிர்த்தது. இதை எப்படி புரிந்து கொள்வது? ‘மோடிக்கு பூங்கொத்து கொடுக்கும் ஜெயா’ படம், பாடல் காட்சிகளில் இருந்ததால் பாடலை ஏற்க முடியவில்லை என்று தமிழிசை விளக்கினார். ஆனால், அதன் பிறகும், முரளிதரர் ராவ் ஒரு பேட்டியில், கோவன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பேட்டி கொடுத்தார்.

  பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்து சென்றிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய நினைக்கவில்லை. காரணம், எந்த பெரிய நெருக்கடியையும் அரசு உணரவில்லை. கபாலியை ஸ்பான்ஸர் செய்வதிலும் மன்னார்குடி மாபியாக்களுக்கு இந்த உத்தி தான் இருக்க முடியும். எனவே அதனை விமர்சிக்கின்ற அதே நேரம் இப்படத்தை தனியாக அலசுவதும் தேவையாகிறது. கபாலி விமர்சனத்தில் இந்த இரண்டாம் கடமையை செய்வதில் நேர்மைத் திறம் வெளிப்படவில்லை.

  • சுகதேவ், மெய்நிகர் உலகின் மாயைகள் மெய்யுலகில் இல்லை என்பதை புரிய வைப்பது சிரமம். கபாலி படத்திற்காக ஆதிக்க சாதி சங்கங்கள் எவையும் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமோ, மறியலோ, திரையரங்க முற்றுகையோ ஒன்று கூட நடத்தவில்லை. காரணம் இந்தபடம் தலித் படமோ, தமிழர் படமோ, மலேசியாவில் பிழைக்கச் சென்ற தமிழ் மக்கள் படமோ இல்லை. இல்லவே இல்லை. இது ஒரு அப்பட்டமான மசாலா. இதை இயக்குநர் ரஞ்சித்தே பல நேர்காணல்களில் கூறுகிறார். இணையத்தில் சில சாதிவெறியர்கள் எதிர்ப்பதை வைத்து படமே தலித் போராளி படம் என்று கருதுவது சகிக்க முடியாத பிழை. இணையத்தில் அப்படி சிலர் எதிரப்பு தெரிவிப்பது என்பது இதுதான் என்றில்லை, பல்வேறு விசயங்களில் நடக்கிறது. மெய்யுலகத்தில் ‘கலப்பு மணங்கள்’ குறித்து ராமதாஸ் முன்வைத்து பேசும் சாதி வெறி கருத்துக்களே தமிழகத்தின் ஆதிக்க சாதி அல்லது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களது கருத்து. நிலைமை இப்படி இருக்க கபாலி படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இது வரை ஓடியது என்றால் ராமதாஸ் மற்றும் தமிழக ‘பெரும்பான்மை’ மக்கள் திருந்தி விட்டார்கள் என்று முடிவு செய்ய வேண்டியிருக்கும். கபாலியில் ரஜினி பேசியது அரசியல் வசனங்கள் என்று ஏதாவது ஒன்றையாவது தாங்கள் சொன்னால் விவாதிப்பது பலனளிக்கும். ரிக்ஷாக்காரனாக, விவசாயியாக எம்.ஜி.ஆர் பேசாதா வசனமா, லியாகத் அலிகான் உதவியுடன் விஜயகாந்த் பேசாதா புரட்சியா?……அதனால்தான் கபாலி படம் துக்ளக் சோவிற்கும் பிடித்திருக்கிறது.

   கபாலி படத்தை வைத்துத்தான் தினமணியை இங்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாறாக தினமணியின் பார்ப்பனிய திமிரை கண்டித்து வினவில் மட்டுமே ஏராளமான கட்டுரைகள் உண்டு. இன்றைக்கும் கபாலியை வியந்தோதுவார் நாளைக்கே தினமணி வைத்தியுடன் நட்புறவு கொண்டு நடுபக்க கட்டுரை எழுதுகிறார்கள், எழுதியிருக்கிறார்கள், எழுதுவார்கள். மாறாக தலித் மக்கள் அசைவம் உண்பதால்தான் ரேப் செய்கிறார்கள் எனும் வைத்தியை கண்டித்து இணையத்தின் காபாலி ஆதரவு முற்போக்காளர்கள் எவர் எழுதியிருக்கிறார்கள? மேலும் ஒரு விசயத்தை சரியான முறையில் நாங்கள் விமரிசிப்பதையும், தவறான முறையில் மற்றவர் விமரிசிப்பதையும் இணை வைத்து பேசுவது கண்டனத்திற்குரியது. அழகிப் போட்டியை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கமும், இடது சாரிகளின் நோக்கமும் ஒன்றா? இல்லை அமெரிக்க ஏகாதிபத்தியைத்தை எதிர்க்கும் இடதுசாரிகளும், முசுலீம் மதவெறி அமைப்புக்களும் ஒன்றா? எங்கள் விமரசினத்திற்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் சாதி வெறியர்களின் முதுகில் அமர்ந்து கொண்டு சிலர் பேசும் கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இல்லை வினவு எப்படி தலித் விரோத ஆதிக்க சாதி வெறி பத்திரிகை என்று நிருபியுங்கள், விவாதிக்க காத்திருக்கிறோம்.

   கோவன் கைதை பா.ஜ.க எதிர்த்தது என்பது கலப்படமில்லாத முழுப்பொய். ஆரம்பத்தில் எதிர்ப்பதாக பேசிய தமிழிசைக்கு கண்டனங்கள் குவிந்த பிறகு அவர் தனது எதிர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க டி.வி நிலையை விவாத வித்வான்கள் வினவு மற்றும் ம.க.இ.கவை தடை செய்ய வேண்டும் என்று எழுதி பேசியிருக்கிறார்கள். அடுத்து பா.ஜ.க நினைத்திருந்தால் வழக்கை வேறு மாதிரி எடுத்துச் சென்றிருக்க முடியும் என்பது உங்களது தவறான பார்வை. இதற்கு பா.ஜ.க தயவு இருப்பதால்தான் நீங்கள் சுதந்திரமாக எழுதி பேசி உலாவுகிறீர்கள் என்றே நேரடியாக சொல்லலாம். உங்களது வாதப்படி சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடை நீக்கம் கூட பா.ஜ.கவின் கருணை என்று விளக்கமளிக்கலாம். ஆனால் அந்த தடை நீக்கம் என்பது தமிழகத்தில் எழுந்த மாபெரும் எதிர்ப்பின் விளைவு அல்லது வேறு வழியில்லாத நிலை என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை. எல்லா சமூக மாற்றங்களும், போராட்டங்களும் ஆளும் வர்க்கங்களின் கருணையால் நடப்பதில்லை. உங்களுக்கு புரியும் வகையில் ஒரு உதாரணம். ஊத்திக் கொடுத்த உத்தமி பாட்டை பாடிய கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் பிணையில் விடுதலையாகி அங்கேயே அதே பாட்டை வரிமாறாமல் பாடினாரே அது ஏன்? ஜெயாவின் கருணையா இல்லை அந்த பாசிஸ்டை அஞ்சாமல் எதிர்க்கும் புரட்சிகர அமைப்புக்களின் நெஞ்சுரமா? இல்லை உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு முற்போக்காளர், பத்திரிகையாளர், பத்திரிகை, மற்ற கட்சிகள் யாராவது ஜெயலலிதாவை ஒரு பாசிஸ்டு என்று எழுதவோ, ஒரு வாரம் தமிழகத்தில் இயக்கமோ நடத்தச் சொல்லுங்கள் பார்ப்போம்!

   இன்றைக்கும் தமிழகத்தில் ஜெயாவை எதிர்ப்பதில் அஞ்சாமல் செயல்படும் ஒரே இயக்கம் எமது அமைப்புக்கள் மட்டுமே. இதில் நாங்கள் மட்டுமே செய்கிறோம் என்பதை பெருமையாக சொல்லவில்லை. மற்றவர்கள் கோழைகளாக இருக்கிறார்களே என்று வருத்துத்துடனே பதிவு செய்கிறோம்.

   கபாலி ஏன் ஒரு தலித் படம், ஆதிக்க சாதி எதிர்ப்பு படம் என்பதற்கு காத்திரமான ஒரு விமரினத்தையோ, கருத்தையோ இது வரை யாரும் எழுதி நாங்கள் பார்க்கவில்லை. அனைத்துமே ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையே முன்வைக்கின்றன. இரண்டாவதாக இயக்குநர் ரஞ்சித் பேசும் சில அரை குறை முற்போக்கு கருத்துக்களை வைத்து கபாலியை முன்வைக்கிறார்கள். நாங்கள் கேட்பது கபாலி படத்தில் எங்கே தலித்துக்களின் வாழ்வோ, வசனமோ, குறியீடோ இருக்கிறது என்பது மட்டுமே!

   கபாலி எனும் கோட்டு சூட்டு போட்ட ரவுடி கும்பல் தலைவர் 1 கோடி ரூபாய் பென்ஸ் காரை அழகுணர்ச்சியோடு தடவி பயணிக்கிறான். எனில் தலித்துக்கள் பென்ஸ் காரில் போகக் கூடாதா என்று கேட்டால் நிச்சியம் கபாலி ஒரு ‘தலித்திய’ படம்தான். ஆனால் தலித் மக்கள் அந்த படத்தில் இல்லை. நன்றி

   • எனது பதிலை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால் இணைக்கவும்.நன்றி

 17. கேவலமாக இருக்கிறது உங்கள் விமர்சனம் இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை……..

 18. //சண்டைக் காட்சிகளில் அரை இஞ்சி கூட காலை தூக்காமல், ஒரு அடி கூட நடக்காமல், பத்து டிகிரி கூட உடலைத் திருப்பாமல் ரஜினி பின்னி எடுக்கிறார். அடிபட்டவர்களின் ரத்தமும், அந்த ரத்தத்தை வரவழைத்த இசையமைப்பாளரின் சப்தமும் மட்டுமே அதை சண்டைக் காட்சி என்று நம்மை நம்பச் சொல்கின்றன.//இந்த விஷயம் அப்படியே காலாவிற்கும் பொருந்தும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க