நூல் அறிமுகம் : அம்பேத்கரியர்கள் – நெருக்கடியும் சவால்களும்

நமக்குள்ள சவால் என்பது தலித் அம்பேத்கரியர்களைக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்து எதிர்காலத்தைப் பார்க்கும்படி அவர்களை உந்தித் தள்ளுவதுதான்.

ம்பேத்கரியர்களிடம் உள்ள முக்கிய குறைகளில் ஒன்று என அனுபவம் காட்டுவது என்னவென்றால், அவர்கள் கடந்தகாலத்தை நோக்கியவர்களாக உள்ளார்கள் என்பதுதான். அம்பேத்கரியர்களின் சொல்லாடல்களில் பெரும்பாலானவை கடந்தகாலத்தை நோக்கிய வையாகும். அவர்கள், சாதிகளின் மூலங்களையும் அவற்றின் கூறுகளையும் புரிந்து கொள்ள அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சிகளை தாங்களும் செய்ய விரும்புகிறார்கள்.  அதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், சூத்திரர்கள் யார்? தலித்துகள் யார்? சாதி அமைப்பு தோன்றியது எவ்வாறு?, தலித்துகள் பௌத்தர்களாக இருந்தது எவ்வாறு?, இந்து வழிபாட்டுத் தலங்கள், முன்பு பௌத்த விகாரைகளாக இருந்தனவா? திருப்பதி, சபரிமலை, வித்தல் கோவில்கள் முன்பு என்னவாக இருந்தன ? காந்தியோ நேருவோ செய்தது என்ன? என்பன போன்ற கேள்விகளை எழுப்புவதில் அவர்கள் மகிழ்ச்சியடைவதாகத் தோன்றுகிறது.

தலித்துகளின் நிலை சரிந்துவருவதும், அவர்களிடையே நிலமற்றோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதும், கடந்த பத்தாண்டுகளில் பொதுத்துறை, அரசாங்க வேலைகள் கிடைப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து நிகர இட ஒதுக்கீடு என்பது பூஜ்ஜியமாக ஆகிவிட்டதும் அவர்களது அக்கறைக்குள்ளாவதில்லை.

முதலாளியம் உலகத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது? உலகமயமாக்கலால் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் என்ன? அந்த மாற்றங்கள் மூலம் நமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்ன? புவிசார் அரசியல் மாற்றங்களிலிருந்து நாம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளோமா? அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ உள்ள கறுப்பின மக்கள் சாதித்துள்ளவற்றோடு ஒப்பிடுகையில் நாம் சாதித்துள்ளவற்றின் அளவு என்ன? உலக முதலாளியம் மக்களின் ஆதார வளங்களைக் கொள்ளையடித்து வருவதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் நமக்கு ஒரு பாத்திரம் இருக்க வேண்டாமா? இன்னும் ஏராளமான கேள்விகள் உள்ளன. எனவே நமக்குள்ள சவால் என்பது தலித் அம்பேத்கரியர்களைக் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு இழுத்து வந்து எதிர்காலத்தைப் பார்க்கும்படி அவர்களை உந்தித் தள்ளுவதுதான். அப்போதுதான் அவர்கள், சாதி – எதிர்ப்பு இயக்கம் தொடங்கி ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குப்பிறகு சாதி அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வார்கள். பாம்பு அவர்களைக் கடந்து ஓடிவிட்டபிறகு தாங்கள் பாம்புத் தடத்தை அடித்து கொண்டிருந்ததை உணர்வார்கள். அவர்கள் எதிர்கொள்ளவேண்டியது நடப்புக்கால யதார்த்தம்தானேயன்றி, அதன் மீதுள்ள கடந்தகால அடையாளங்கள் அல்ல என்பதை உணர்வார்கள்.

அம்பேத்கரியர்கள் நிகழ்காலத்துக்கு வந்தவுடன், தமக்கு எதிரே உள்ள சவால்களை அவர்களாகவே பார்ப்பார்கள். உறங்கிக்கொண்டிருக்கும் இராட்சசனைப் பற்றிப் பழங்கதைகளில் சொல்லப்படுகிறதே, அவனைப் போன்றவர்கள் தலித் அம்பேத்கரியர்கள். அந்த இராட்சதனை தூக்கத்திலிருந்து எழுப்பினால், அவன் உலகத்தை அசைத்துக் குலுக்குவான். அம்பேத்கரியர்கள் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளனர், தவறான கருத்து நிலை மருந்துகள் அவர்களைத் தூக்கத்தில் ஆழ்த்தியுள்ளன என்று கருதுபவர்களில் நானும் ஒருவன். அவர்கள் தங்களது யதார்த்த நிலை, தங்களது சுற்றுச்சூழலின் யதார்த்த நிலை ஆகியவற்றைக் காண்பதற்கு தூக்கத்திலிருந்து விழித்தெழுவார்களேயானால், இந்தியாவின் இன்றைய நிலை இனி அப்படியே தொடர்ந்து இருக்காது.
ஆனந்த் டெல்டும்டே
(நூலில் பக்கம் 48, 49)

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: அம்பேத்கரியர்கள்
(நெருக்கடியும் சவால்களும்)
ஆசிரியர்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
88, இந்திரா கார்டன் 4 – வது வீதி, உப்பிலி பாளையம் – அஞ்சல், கோயம்புத்தூர் – 641 015.
பேச: 0422 – 2576772 ; 9443468758.
மின்னஞ்சல்: vidiyalpathippagam2010@gmail.com

பக்கங்கள்: 56
விலை: ரூ.35.00,
என்சிபிஹெச் வெளியீட்டில் விலை ரூ. 50.00

இணையத்தில் வாங்க: மெரினா புக்ஸ்| (இங்கு என்.சி.பி.ஹெச் வெளியீடாக விலை ரூ. 50ல் கிடைக்கிறது)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க