ந்துத்துவ பாசிஸ்டுகளின் கையில் ஆட்சி அதிகாரம் கிடைக்கும்போது, சிறுபான்மையினருக்கு அது எத்தகைய கொடுங்கனவாக இருக்கும் என்பதற்கு மோடியின் குஜராத் மிகச் சிறந்த உதாரணம். மோடிக்கு போட்டியாக இப்போது களமிறங்கியிருக்கிறார் இந்துத்துவ சாமியார் ஆதித்யநாத். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதலமைச்சரான ஆதித்யநாத்தின் ஆட்சி முசுலீம்களுக்கு கொடுங்கனவாக மாறிக்கொண்டிருக்கிறது.  ஆதித்யநாத் பதவியேற்ற ஓராண்டுக்குள் 160 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த கைதுகள் குறித்த பின்னணியையும் கைதானவர்களின் சமூகச் சூழலையும் மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் நேஹா தீட்சித். த வயர் இணையதளத்தில் வெளியான அவருடைய அறிக்கையின் சுருக்கப்பட்ட பதிவு இங்கே.

ஓராண்டில் 160 கைதுகள்:
உ.பி. யில் முசுலீம்களுக்கு எதிரான புதிய ஆயுதம் ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’

த்தர பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம் எனக் கூறிக்கொண்டு ஆட்சியைப் பிடித்த ஆதித்யநாத், தான் பதவியேற்றதிலிருந்து ஒரே ஒரு மதக்கலவரம் கூட நிகழவில்லை என 2018 மார்ச் 4-ஆம் தேதி கூறினார். பத்து நாட்களுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மதக்கலவரங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் தொடர்வது தெரியவந்தது. 2017-ஆம் ஆண்டு மத வன்முறை தொடர்பான மோதல்களில் 44 பேர் இறந்துள்ளனர்; 450 பேர் காயமுற்றுள்ளனர் என அந்த அறிக்கை சொன்னது.  ஆதித்யநாத், சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொன்ன முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது மத வன்முறைகளால் 2016-ல் 29 மரணங்களும் 490 பேருக்கு காயமும் ஏற்பட்டதாக அறிக்கை சொல்கிறது. 2015-ஆம் ஆண்டு 22 மரணங்களும் 410 பேர் காயமுற்றதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரம் சொன்னது. உ.பி-யின் புலாந்த்சாஹர் மற்றும் சஹாரன்பூரில் நடந்த மதக்கலவரத்துக்கு ஆதித்யநாத் தலைமையில் ஹிந்து யுவ வாஹினி மற்றும் உள்ளூர் பாஜகவினரே காரணமாக இருந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஆங்காங்கே கண்டனங்கள் எழுந்தனவேயன்றி எந்தவித சட்ட நடவடிக்கையும் இவர்களின்மேல் எடுக்கப்படவில்லை.

ஜனவரி 16, 2018-ஆம் ஆண்டு ஆதித்யநாத்தின் அரசு, சட்டம் – ஒழுங்கை காப்பாற்றும் பொருட்டு 160 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பத்திரிகை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பத்து மாதங்களில்  போலீசாரை ஏவி 1,200 என்கவுண்டர்களை நடத்திய பாசிஸ்ட் சாமியாரின் சாதனைக்கு அடுத்த சாதனையை சொன்னது மேற்கண்ட அறிக்கை. தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவர்களில் பீம் ஆர்மியின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத்தும் ஒருவர். 2017 மே மாதம் முதல் இவர் சிறையில் இருந்தார்.

பீம் சேனை என்ற அமைப்பின் நிறுவனரான சந்திர சேகர ஆசாத் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சஹரன்பூரில் தலித் மக்கள் மற்றும் தாக்கூர்களுக்கு இடையில் நடந்த மோதல் வழக்கில் ஆதித்யநாத் அரசால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017, நவம்பரில அவருக்கு பிணை வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். உடனடியாக அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து சிறையிலடைத்தது போலீசு. தற்போது அவ்வழக்கில் எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில் கடந்த 13.09.2018 அன்று அவர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது உ.பி அரசு. 14.09.2018 அன்று அவர் சிறையிலிருந்து வெளிவந்தார்.

வழக்கறிஞர் இல்லை; மேல் முறையீடு இல்லை; வாதங்கள் இல்லை… இதுதான் தேசிய பாதுகாப்புச் சட்டம். 1980, செப்டம்பர் 23-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின் நோக்கம், “சில வழக்குகளில் அல்லது சில விஷயங்களில் தொடர்புள்ளவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கை” என சொல்லப்பட்டிருக்கிறது. ‘தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி’யை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த ஒரு நபரையும் இந்த சட்டத்தின் மூலம் கைது செய்ய முடியும். 12 மாதம் வரையிலும் இந்த சட்டத்தில் கைது செய்யப்படும் ஒரு நபரை தடுப்புக் காவலில் வைக்க முடியும். மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாலோ அல்லது போலீசு கமிஷ்னராலோ உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கைது நடந்தாலும் மாநில அரசிடமே கைது குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

இந்த சட்டத்தில் கைதாகிறவருக்கு, அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்கிற தகவலை சொல்லாமல் 10 நாட்கள் வரைக்கும் வைத்திருக்கலாம். பொதுநலன் கருதி இந்தத் தகவலை சொல்லாமல் வைத்திருக்க அதிகாரம் தருகிறது இந்த சட்டம்! அதோடு, கைது குறித்து கைதானவர் யாரையும் கேள்வி கேட்க முடியாது என்பது சட்டத்தின் மற்றொரு ‘சிறப்பம்சம்’. இந்த சட்டத்தில் கைதாகி மூன்று மாதத்துக்கு மேல் சிறையில் உள்ளவர்களின் காவலை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அல்லது அதற்கு இணையான உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு முடிவு செய்யும். அவர்களின் முடிவுபடி கைதானவர்களின் காவல் 12 மாதம் வரை நீட்டிக்கப்பட முடியும்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்.

இப்படியான ஆள் தூக்கி சட்டத்தில் கைதான 160 பேரில் 15 குடும்பங்களைச் சந்தித்திருக்கிறார் பத்திரிகையாளர் நேஹா தீட்சித். இந்த 15 பேரும் உத்தரபிரதேசத்தின் கிழக்குப் பகுதியான பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள். மதக்கலவரம் பின்னணியில் இந்தக் கைதுகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. ஹிந்து யுவ வாஹினி, ஹிந்து சமாஜ், அகில பாரதிய ஹிந்து மகாசபா போன்ற காவி பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கலவரங்களைத் தூண்டியவர்கள் என சொல்லப்பட்டபோதும், முசுலீம்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் முதலில் பிணை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், உடனடியாக அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2014 நடந்த மக்களவை தேர்தலை முன்வைத்து ஆங்காங்கே சிறிய அளவிலான மதக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. இப்போது நடக்கும் கைது சங்பரிவார், 2019 மக்களவை தேர்தலை எதிர்க்கொள்ள போட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதி என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

திட்டமிட்டு நடத்தப்படும் மதக்கலவரங்கள்

உ.பி. காவல் நிலையங்களில் மதம் தொடர்பான வழிபாடுகள் நடத்தப்படுவது குறித்த ஊடக கேள்வி ஒன்றுக்கு முதலமைச்சர் ஆதித்யநாத், “சாலையில் நமாஸ் செய்வது தடுத்து நிறுத்தப்படாதபோது, காவல் நிலையங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதை தடுத்து நிறுத்த எனக்கு உரிமை இல்லை” என்றார்.

சிவபக்தர்கள் என்கிற பெயரில் பெரும் ஒலியெழுப்பும் ஸ்பீக்கர்களை கட்டிக்கொண்டு வீதிவீதியாக ரவுடியிசம் செய்பவர்கள் குறித்து ஆதித்யநாத் இப்படி சொன்னார், “அவர்கள் சிவ யாத்திரை செய்கிறார்கள்; சவ யாத்திரை அல்ல”. அதாவது ஆதித்யநாத் என்ற இந்து சாமியாரின் ஆட்சியில் மத கொண்டாட்டங்கள் என்கிற ரவுடியிசம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது.

கான்பூரில் மன்சூரின் கூடார இருப்பிடம் கொழுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முகரம் பண்டிகை வந்தது. இந்துக்களின் பண்டிகையில் ஒரு பகுதியான துர்கா சிலையை நீரில் கரைக்கும் சடங்கும் அந்த நாளில் வந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாளில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அக்டோபர் 1-ஆம் தேதி துர்கா சிலையை கரைக்க வேண்டாம், 2-ஆம் தேதியிலிருந்து 4-ஆம் தேதிக்குள் சிலைகளை கரைக்கலாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார். பாஜகவினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தபோது, அங்கே பிரச்சினைகள் ஏதுவும் ஏற்படவில்லை. ஆனால், உ.பியின் முதலமைச்சர் பகிரங்கமாக விடுத்த அழைப்பின் காரணமாக வீதிகள் தோறும் கொண்டாட்டங்கள் நடந்தன. கான்பூர், பாலியா, பிலிபத், கோண்டா, அம்பேத்கர் நகர், சம்பால், அலகாபாத், கவுசாம்பி மற்றும் குஷிநகரில் அக்டோபர் 1-ஆம் தேதி இரண்டு மத பண்டிகைகளும் வந்த காரணத்தால் மதக்கலவரம் உருவாகும் சூழல் உண்டானது.

அக்டோபர் 1-ஆம் தேதி, கான்பூரில் இரண்டு பெரிய மத வன்முறைகள் நடந்தன. ராவத்புராவில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராம் லீலா கமிட்டி ராமரின் திருமண விழாவினை கொண்டாடியது. இதே நாளில் முகரம் விழாவின் பகுதியான தாஜியாவும் வந்தது. வன்முறை ஏற்படக்கூடும் என உளவுத்துறை எச்சரித்தபோதும், அரசு கண்டு கொள்ளவில்லை. கல்வீச்சு சம்பவம் நடக்குமளவுக்கு அங்கே பிரச்சினை உருவானது. துப்பாக்கிச் சூடு நடந்தது; இரண்டு காவலர் உள்பட பலர் காயமடைந்தனர். ராம் லீலா கமிட்டியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

அதே நாளில் ஜுகி பரம் பூர்வா பகுதியில் நடந்த முகரம் ஊர்வலத்தை, ஹிந்து சமாஜ் பார்டியை சேர்ந்தவர்கள் துர்கா சிலையை கரைக்கும் ஊரவலம் நடப்பதாகக் கூறி நிறுத்தினர். இங்கேயும் துப்பாக்கிச்சூடும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறின. இந்தச் சிறிய பகுதியில் முசுலீம்கள் ஒருபுறத்திலும் தலித்துகள் இன்னொருபுறத்திலும் வாழ்கிறார்கள். இந்த வன்முறையின்போது ஒரு போலீசு வாகனமும் தலித் பகுதியில் வசித்த ஒரே ஒரு முசுலீமின் வீடும் கடையும் கொளுத்தப்பட்டன. 57 பேரை போலீசு அப்போது கைது செய்தது. ஹக்கீம் கான், ஃபர்குன் சித்திக், முகமது சலிமை தவிர, மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் உள்ளூர் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிறைக் கம்பிகளுக்குள் கடந்த பத்து மாதங்களாக அடைபட்டிருக்கும் இவர்களில் ஹக்கீமுக்கு மகள் பிறந்திருக்கிறாள்; ஃப்ரகுன்னின் மகள், கிரிமினலின் மகள் என்ற கேலிப்பேச்சுக்கு ஆளாகி பள்ளிக்குப் போக முடியாமல் இருக்கிறாள். சலிமின் குழந்தைகள், வாழ வழியின்றி உறவினர்கள் வீடுகளுக்கு மாறி மாறி சென்றுகொண்டிருக்கின்றனர்.

லோதேஷ்வர் கோவில் அழைக்கிறது… (புகைப்படம் நேஹா தீக்-ஷித்)

35 வயதான் ஹக்கீம் கான், சஹாரா குழுமத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணிபுரிந்தவர். மத அமைதி ஏற்படுத்தும் பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராக இருந்திருக்கிறார் ஹக்கீம். அக்டோபர் 1-ஆம் தேதி கூட, இரண்டு தரப்புக்கும் அமைதி ஏற்படுத்தும் பொருட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

“அவர் கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்வார். அனுமனுக்கு செவ்வாய் கிழமைகளில் அன்னதானம் செய்வார். கோயில் படிக்கட்டுகளை சுத்தம் செய்வார்” என்கிறார் ஹக்கீமின் வீட்டருகே வசிக்கும் ராம் பிரகாஷ்.

அக்டோபர் 2-ஆம் தேதி போலீசு ஹக்கீமை கைது செய்திருக்கிறது. “அவரை பெல்டால் அடித்து இழுத்துச் சென்றார்கள். ‘நீ இஸ்லாம் வாழ்க என அடிக்கடி சொல்வாய் இல்லையா?’ என ஒரு காவலர் அவரைக் கேட்டார்” என்கிறார் ஹக்கீமின் மூத்த சகோதரர் முகமது காசிம்.

ஃபர்குன் சித்திக் கைது செய்யப்பட்டதற்காக அவருடைய 12 வயது மகள் தன்னுடைய பள்ளியில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறார். ‘கிரிமினலின் மகள்’ என அவளுடைய பள்ளி ஆசிரியர் அழைத்திருக்கிறார். அவளுடன் பயிலும் சக மாணவர்கள், ‘முசுலீம்கள் தீவிரவாதிகள்’ என எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தினசரி எதிர்கொள்ளும் இத்தகைய செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், கல்வியாண்டின் மத்தியில் பள்ளிக்கு போவதை நிறுத்தியிருக்கிறார். கடந்த மாதம், வேறு பள்ளியில் சேர்ந்தபோதும் இதே விஷயங்கள் அவளை அச்சுறுத்தியிருக்கின்றன.

“அவர் நகராட்சியில் ஒப்பந்தக்காரராக பணியாற்றினார். வருமான வரி செலுத்தும் ஒருவர் திடீரென தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கைதாகி பத்து மாதங்கள் ஆகின்றன. நீங்களே சொல்லும் மதத்தை வைத்து ஒடுக்குவதன்றி இதன் பெயர் வேறன்ன?” என்கிறார் ஃபர்குனின் மனைவி சோபியா. அவர்களுடைய சேமிப்பெல்லாம் இந்த வழக்குக்காக கரைந்து வருவதாக சொல்கிறார் இவர்.

தலித் பகுதியில் இருந்த ஒரே முசுலீம். ஓலை குடிசை கடை சலீமுக்கு சொந்தமானது. அந்தக் கடையை ஒட்டியே அவருடைய வீடும் இருந்தது.  “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த இடத்தில்தான் வசிக்கிறோம். ஒருபோதும் யாருக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை” என்கிறார் சலீமின் மனைவி ருகி.  வன்முறை அரங்கேறிய அந்த நாளில் முதலில் கடைக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது, பிறகு வீட்டுக்கு வைத்திருக்கிறார்கள்.

“துர்கா சிலையை கரைக்கும் நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்; அத்தனை பெரிய கூட்டத்தை இதுவரை கண்டதில்லை. அப்போது ஒருவர் கடையை அடித்து நொறுக்கினார். பிறகு கடைக்கும் வீட்டுக்கும் தீ வைத்தனர்” என்கிறார் ருகி. இவருடைய இரண்டு வயது மகள், வன்முறை வெறியாட்டத்தின்போது மயங்கி விழுந்திருக்கிறார். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின் இவர்கள் உறவினர்களால் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

“இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களில், அக்கம்பக்கத்தில் வசித்த இரண்டு மூன்று பேரும் உண்டு. போலிசுக்கு அழைத்து போனால் அவர்களை நான் அடையாளம் காட்டுவேன்” என்கிறார் சலீமின் 12 வயது மகன் பாப்பு.

பஹ்ரைச்சில் தனது மகள்களுடன் அகீலா. (படம்: நேகா தீக் ஷித்)

இந்துத்துவ கும்பலின் கும்பல் வன்முறையால் தன்னுடைய குடிசையையும் கடையையும் இழந்த முகமது சலீம், கைது செய்யப்பட்டிருக்கிறார்.  அவருடைய குடும்பம் வாழ வழியின்றி, உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளது. சொல்லப்போனால் தெருவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் கடை இருந்த இடத்திற்கு அருகே துர்கா தேவி கோயில் ஒன்று முளைத்திருக்கிறது.

மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றபோதும் பாஜகவுக்கு உள்ளாட்சித் துறை தேர்தல் இறங்குமுகமாகவே இருந்தது. டிசம்பர் 2017-ல் நடந்த உள்ளாட்சித் துறை தேர்தலில் 29% வாக்குகளையே பாஜக பெற்றது.

முகரம் பண்டிகை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த தேர்தல் நடைபெற்றது. ஹக்கீம் ஜுகி வார்டு பதவிக்கு போட்டியிட இருந்ததாகவும் அப்படி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார். அவருக்கு இந்து, முசுலீம்களிடையே நற்பெயர் இருந்தது என்கிறார் ராம் பிரகாஷ்.  போலீசின் பாரபட்ச அணுகுமுறை காரணமாக ஹக்கீம் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் முகமது காசிம், வன்முறையை தூண்டிய ஹிந்து சமாஜ் பார்ட்டினரை ஏன் கைது செய்யவில்லை என கேட்கிறார். இரு மதத்தினர் மீதும் அன்பும் மரியாதையையும் கொண்டிருந்த ஒரு மனிதருக்கு கிடைக்கும் நீதி இதுதானா என்கிறார் காசிம்.

அகில் பாரதிய ஹிந்து மகாசபை தொடர்புடைய ஹிந்து சமாஜ் பார்டி மத உணர்வுகளை தூண்டுவதில் பெயர் பெற்றது. “சலீமின் கொட்டகையை கொளுத்தியதன் மூலம் அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள். ‘முசுலீம்களை வேரோடு அழிக்க வேண்டும்’. அடுத்த நாளே துர்கா கோயிலை அங்கே உருவாக்கியிருப்பது அவர்களுடைய வருமானவே மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை காட்டுகிறது. இந்துக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முசுலீம்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பதைத்தான் அவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்” என்கிறார் செயல்பாட்டாளரான ராஜுவ் யாதவ்.

முகரம் ஊர்வலத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் கான்பூருக்கு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் போராட்டங்களும் பதட்டமும் இருந்துகொண்டே இருக்கிறது. முந்தைய நிகழ்வுகளுக்கும் இப்போது நடப்பவைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், முன்பு இந்து – முசுலீம் என்கிற பிரிவுகளுக்கிடையே பிரச்சினை இருந்தது. இப்போது தலித்துகளுக்கும் முசுலீம்களுக்குமான பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆச்சரியமளிக்காத வகையில் தலித் பாசி சாதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் ராகேஷ் குமார் பஸ்வான், ஜுகி வார்டு பதவியை வென்றார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2015 ஆகஸ்டு மாதம், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்  வெளியிடப்பட்டன. இந்த புள்ளிவிவரங்கள், இந்துத்துவ மதவெறி கும்பலால் தவறான பரப்புரைக்கு பயன்பட்டன. அதாவது இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் முசுலீம் ‘இஸ்லாம் ஜிகாதி’ என்ற பெயரில் எண்ணிக்கையை பெருக்குவதாகவும் பரப்புரை செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற காவி அமைப்புகள் முசுலீம்களை இந்துக்களாக மாற்றும் ‘கர்வாப்ஸி’ இயக்கங்களை நடத்தினார்கள்.  மதமாற்றம் தடை செய்யப்படும் வரை ‘கர்வாப்ஸி’ தொடரும் என சாமியார் ஆதித்யநாத் பேசினார்.

பஹ்ரைச்சில் உள்ள காசிமியான் மஷருக்கு பயணிக்கத் தயாராகும் பக்தர்கள். (படம்: விபின் படேல் / யூ-டியூப்)

உ.பி-யில் தலித்துகள் அதிகம் உள்ள தொகுதிகளில் பக்ரீச் – உம் ஒன்று.  இந்த மக்களவை தொகுதி தலித்துகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆர்.எஸ்.எஸ்.- பாஜக தலித் ஆளுமைகளை இந்துக்களாக்கும் முயற்சியில் இறங்கியது. சங்பரிவார் விநியோகித்த வெளியீடு ஒன்றின் தலைப்பு ‘பாட்சாவும் ராஜாவும்’. பக்ரீச் அருகே 11-ஆம் நூற்றாண்டில் சுல்க்தேவ் என்ற தலித் தலைவருக்கும் உபி-யை ஆக்கிரமிக்கும்பொருட்டு படையெடுத்த முசுலீம் அரசர் காசியா சயது சலமார் மசூத் என்பவருக்கும் போர் மூண்டதாகவும் அப்போது தன்னை பாதுகாக்கும் பொருட்டு பசுக்களை கவசமாக பயன்படுத்த முசுலீம் அரசன் முனைந்ததாகவும் போருக்கு முந்தைய இரவில் பசுக்களை சுல்க்தேவ் விடுவித்ததாகவும் அந்த வெளியீடு சொல்கிறது. பிறகு மசூத்தை கொல்ல சென்றதாகவும் தெரிவிக்கிறது. சில வரலாற்றாசிரியர்கள் மசூத்தை சுல்க்தேவ்வால் கொல்ல முடியவில்லை, மசூத் முன்னேறிச் செல்வதை தடுக்கவும் முடியவில்லை என்கிறார்கள்.

மசூத் இறந்த நாளில் நடக்கும் ஊர்ஸ் ஊர்வலத்துக்கு எதிராக போராடும்படியும் சுல்க்தேவை கொண்டாடும்படியும் அந்த வெளியீடு அறைகூவல் விடுத்திருந்தது. இந்த முயற்சிகள் தலித் – முசுலீம் ஒற்றுமையை குலைக்கவே செய்யப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்தப் பகுதியில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் ஆறில் வென்றது பாஜக. சாவித்ரி பாய் புலே என்ற தலித் பெண், பாஜக-வின் மக்களவை உறுப்பினராக இந்தத் தொகுதியிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரும் தன்னை சாமியார் என சொல்லிக்கொள்கிறார்.

இறைத்தூதுவர் முகமதுவின் பிறந்த நாளில் பாராவஃபட் என்ற விழா உபி-யில் முசுலீம்கள் மற்றும் இந்துக்களால் கொண்டாடப்படும் விழாவாக நடக்கும். சாமியார் உ.பி முதலமைச்சராக பதவியேற்றவுடன் இந்த பண்டிகை அரசு விடுமுறை நாள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. நன்பாராவில் உள்ள குர்குட்டா என்ற கிராமத்தில் கடந்த டிசம்பர் 2 தேதி நடந்த பாராவஃபட் ஊர்வலத்தில்  300 பேர்  நுழைந்து கலவரம் ஏற்படுத்தியுள்ளனர். ஹிந்து சமாஜ் பார்டி மற்றும் பஜ்ரங் தள் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் இருபுறமும் கற்களால் தாக்கியுள்ளனர். இருதரப்பிலிருந்தும் மத முழக்கங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இறுதியாக போலீசு வந்து 38 பேரை கைது செய்துள்ளது. சிம சுரக்‌ஷா பல் என்ற கலவரங்களை கட்டுப்படுத்தும் போலீசு குழு கிராமத்திலிருந்த ஆடு, கோழிகளை அள்ளிக்கொண்டு சென்றிருக்கிறது. அதில் சிலர் ஆடுகளை வெட்டி சமைத்து தரும்படி கேட்டிருக்கிறார்கள் என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த கன்னையா.

9 பேரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செங்கல் சூளையில் பணியாற்றிய முன்னா, மதராசாவில் ஆசிரியராக பணியாற்றிய மசூத் ரசா, ரிக்‌ஷா ஓட்டிக்கொண்டிருந்த நூர் ஹசன், ஹர்சாத் என்ற மாணவர் ஆகிய ஐவரும் கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை நம்பியிருந்த குடும்பம் இருந்த சேமிப்பை வழக்கு செலவுகளுக்காக தொலைத்துவிட்டு, நடுத்தெருவில் நிற்கிறது. ஹர்சாத் என்ற கல்லூரி மாணவர், தற்கொலை செய்துகொள்ளக்கூடிய மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தன் குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.  கேரளாவில் படித்துக்கொண்டிருந்த இவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தபோது தே.ப.சட்டத்தில் கைதாகியிருக்கிறார்.

கான்பூரில், ஹக்கிமின் மனைவி மகள் மற்றும் தாயார். (படம்: நேஹா தீக்‌ஷித்.)

ஒவ்வொரு ஹோலி பண்டிகையின் போதும் பராபங்கி மாவட்டத்தில் உள்ள சுஃபி துறவியான ஹாஜி வாரிஸ் அலி ஷாவின் தேவா ஷரிப் பல வண்ணங்களுடன் ஒளிரும். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான அலி ஷா, மதங்களைக் கடந்து அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டுமென வலியுறுத்தியவர். இந்து, முசுலீம், கிறித்துவ மற்றும் சீக்கியர்கள் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள். அனைவரிடத்திலும் ஒற்றுமை உணர்வை உருவாக்கும் வகையில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வழக்கத்தை துவக்கி வைத்திருக்கிறார். இப்போதும் அது கடைபிடிக்கப்படுகிறது. ஆதித்யநாத் பதவியேற்ற ஒரு மாதத்துக்குப் பின், அவருடைய அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், முந்தைய அரசு தேவா ஷரீப்புக்கு மின்சார வசதியை செய்துகொடுத்ததாகவும், ஆனால் இந்து கோயிலான லோதேஸ்வர் மகதேவ் கோயிலுக்கு அந்த வசதியை செய்யவில்லை எனவும் பேசினார்.

லோதேஸ்வர் மகதேவ் கோயில், இந்த சூஃபி கோயிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் கார்கா ஆற்றின் கரையோரம் ராம்நகர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பாண்டவர்கள் சிவனுக்காக இந்த இடத்தில் யாகம் வளர்த்ததாக புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது. இந்த கோயிலுக்கு வெளியே பூஜை சாமான்கள் விற்கும் கடைகளை இந்து, முசுலீம்கள் நடத்துகின்றனர். வருடந்தோறும் நடக்கும் சிவராத்திரியும் மாட்டு சந்தையும்  புகழ்பெற்றவை. இந்து-முசுலீம் மக்கள் ஆர்வத்துடன் இந்த விழாக்களில் பங்கேற்பர். முந்தைய காலங்களில் இந்த கோயில் பூசாரிகள் மத ஒற்றுமையை பேணிக்காப்பதில் அக்கறையுடன் இருந்தனர்.

ஒவ்வொரு நான்கு வருடத்துக்கு ஒருமுறை கோயில் தலைமை பூசாரி பதவிக்கு ஏலம் நடக்கும். யார் அதிகம் ஏலத்தொகை தருகிறாரோ அவரே தலைமை பூசாரி. இந்த முறையே பெரும்பாலான வடமாநில கோயில்களில் பின்பற்றப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் மஹந் ஆதித்யநாத் திவாரி என்பவர், சாமியார் ஆதித்யநாத்தின் வழியை பின்பற்றுவதாக சொல்லிகொள்பவர் ரூ. 5 லட்சம் கொடுத்து தலைமை பூசாரியாகியுள்ளார். சிவா டிரேடர்ஸ் என்ற பெயரில் கோயில் வளாகத்துக்குள்ளேயே தனது வியாபாரத்தை தொடங்கிய குட்டி சாமியார் கோயிலை சுற்றிலும் இந்து கடவுளர்களுக்கு சிறு கோயில்களை கட்ட ஆரம்பித்திருக்கிறார்.

உள்ளாட்சித் துறை தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆதித்யநாத் பயன்படுத்திய அதே ‘மின்சார’ பிரச்சினையை குட்டி சாமியாரும் கிராம சபை தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது பயன்படுத்துகிறார். கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் மசூதி ஒலியெழுப்பிகளை தூக்கி எறிவோம் என பிரச்சாரம் செய்த இவர், ஜான் முகமது என்ற வேட்பாளரிடம் தோற்றார்.

அஷம்கரில், ஆசிஃபின் தந்தை இஃப்தெகார் அகமது.

ஆதித்யநாத் தொடங்கிய ஹிந்து யுவ வாஹினி என்ற குண்டர் படை சிவ் பகவான் சுக்லா என்பரின் தலைமையில் லட்டூ கோபால் சிலையை தூக்கிக் கொண்டு லோதேஸ்வர் கோயிலுக்கு ஆசி வாங்க 2018-ஆம் ஆண்டு மார்ச் 24 தேதி நூறு பேருக்கும் மேல் கூட்டத்தைச் சேர்த்து வந்திருக்கிறது. வழி முழுக்க இந்த குண்டர் படை கூச்சலிட்டபடி, கலர் பொடிகளை தூவி, பெண்களை பாலியல் சீண்டல் செய்துகொண்டு வந்திருக்கிறது. 13 வயதான ஷா ஃபகத் என்ற சிறுமியை சீண்டும்போது, உடன் வந்த சகோதரர் அதை தட்டிக்கேட்டுள்ளார். உடனே அங்கே இது பெரும் பிரச்சினையாகி, வன்முறையில் முடிந்திருக்கிறது.

அதே நேரத்தில் லட்டூ கோபால் சிலையை முசுலீம்கள் சேதப்படுத்தி தூக்கி எறிந்ததாக ஒரு வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அருகாமை பகுதிகளில் இது பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில வினாடிகள், இந்த பிரச்சினைக்கு மதச்சாயம் பூசப்பட்டு, உள்ளூர் போலீசும் வந்துவிட்டது.

அன்று மாலையில் ராம்நகர் போலீசு சிவ் பகவான் சுக்லாவின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிகிறது. அதில் 40-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் சிலை ஊர்வலத்தில் புகுந்து அடித்ததாகவும், இந்து பெண்களின் நகைகளை கொள்ளையடித்ததாகவும் இந்த தாக்குதலில் 12 பேருக்கு காயம்பட்டதாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஷா ஃபகத் என்ற சிறுமி எதிர்கொண்ட பாலியல் சீண்டலை போலீசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, அடையாளம் தெரியாத 40 பேரின் புகார் கொடுத்ததன் அடிப்படையில் 12 பேரின் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது. சாட்சியங்கள் அனைவரும் ஹிந்து யுவ வாஹினி குண்டர் படையைச் சேர்ந்தவர்கள்! ஐந்து நாட்களில் 12 பேருக்கும் பிணை கிடைத்தது. அதில் ஐவர் மீது தே.ப. சட்டம் பாய்ந்தது.

இவர்கள் ஐவரில் இருவர் கோயில் வளாகத்தில் கடை வைத்திருந்தவர்கள். ஒருவர் டெய்லர். மற்ற இருவர் கூரை வேய்பவர்களாகள். இவர்கள் எப்படி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியும் என்கிற கேள்வியை இவர்களுடைய குடும்பங்கள் கேட்கின்றன. ஆதித்யநாத்தின் வழியில் குட்டி சாமியார், 200 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு அருகே உள்ள மசூதிகளை இடிக்க திட்டமிடுவதாக உள்ளூர்வாசிகள் சொல்கிறார்கள்.

“உள்ளூர் தேர்தலில் பிரிவினையை உண்டாக்கி வெல்ல முயன்றார்கள். அது முடியாமல் குட்டி சாமியார் தோற்றார். முசுலீம்கள் மீது வீண் பழி சுமத்தி கைது செய்தார்கள். 2019 தேர்தலுக்காக மசூதியை இடிக்க நினைக்கிறார்கள். போலீசுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்குமா? அல்லது நாங்கள்தான் அதிகமாக எதிர்பார்க்கிறோமா?” என வெறுமையுடன் பேசுகிறார் ஷகிலா.

இதேபோன்று உ.பி-யில் பல பகுதிகளிலும் ஆதித்யநாத் அரசின் ஆசிகளுடன் காவி கும்பல்கள் வன்முறையைத் தூண்டி அப்பாவி முசுலீம் இளைஞர்களை சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்திரா காந்தி அரசால் 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம் கருப்பு மார்கெட் நடத்துகிறவர்களையும் கடத்தல்காரர்களையும் கைது செய்வதற்காக பயன்படுத்தப்படும் என்று சொன்னது. ஆனாலும் இந்த சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் தொழிற்சங்கவாதிகள்தான்.  அவர்களுடைய செயல்பாடுகளுக்காக கைது செய்யப்படாமல் அரசை விமர்சித்தார்கள் என்பதற்காகவும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள் என்பதற்காகவும், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றவர்கள் மீதும், நிலுவைத் தொகையை கேட்டவர்கள் மீதும் தே.பா.ச. பாய்ந்தது.

குட்டி சாமியார் – மஹந் ஆதித்யநாத் திவாரி.

தெற்காசிய மனித உரிமை ஆவண மையத்தைச் சேர்ந்த ரவி நாயர், “முன்னெரிச்சரிக்கை கைது சட்டத்தில் மிக மோசமானது. இதுபோன்ற சட்டங்களை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது சர்வாதிகாரத்தால் பயன்படுத்தப்படும் சட்டம். ஜனநாயகத்தை பகுதி நேரமாக பாவிக்கும் நாடுகள்கூட ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய முன்னெச்சரிக்கை தடுப்பு சட்டங்கள் தேவையா என பரிசீலிக்கின்றன. ஆனால், இந்தியா அதை செய்வதில்லை” என்கிறார்.

“கைதானவர் மீது எந்தவித கிரிமினல் வழக்குகளும் இல்லாதபட்சத்தில் தே.பா.சட்டத்தில் கைதாகிறவருக்கு ஏன் கைது செய்தோம் என்கிற தகவல் அளிப்பதில்லை. இது ஒருவருக்குள்ள சுதந்திர வாழ்க்கைக்கான வாழும் உரிமையை தெளிவாக மறுப்பதாகும். இதுபோன்ற சட்டங்கள் முழுக்க முழுக்க அரசியல் ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்படும், நிச்சயம் சட்டமாக ஒரு பயனும் இல்லை” என்கிறார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

கிழக்கு உ.பி-யில் நடந்தேறிய தேசிய பாதுகாப்புச் சட்ட கைதுகள் அனைத்தும் போலீசின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. ஹிந்து சமாஜ் பார்டி, ஹிந்து யுவ வாஹினி மற்றும் உள்ளூர்வாசிகளை சாட்சிகளாக வைத்தே அனைத்து கைதுகளையும் நடத்தியிருக்கிறது போலீசு. சாமியார் ஆதித்யநாத், பெரும் எண்ணிக்கையிலான முசுலீம்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நிறுவ பார்ப்பதாக பல செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

“இது மனுவாத நடைமுறையின் ஒரு பகுதி. முசுலீம்களையும் தலித்துகளையும் இந்து ராஷ்டிர செயல்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து தேசிய கட்சிகள் எப்போதும் சேர்த்துக்கொள்வதில்லை. 2019-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன், தே.பா.சட்டம் குறிப்பிட்ட சிலரின் மேல் பாய்ந்து, அவர்கள்தான் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என காட்டுவார்கள். மதவாத அடிப்படையில் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்கு உதவும்” என்கிறார் செயல்பாட்டாளர் ராஜுவ் யாதவ்.

நன்றி: நேஹா தீட்சித், மற்றும் தி வயர்

தமிழாக்கம்: கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க