பெட்ரோல் அரசியல்:
கலங்கி நின்றுப் பயன் இல்லை!
கலகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை !

ன்பார்ந்த ஓட்டுனர்களே, பொதுமக்களே

வாகன உற்பத்தியில் இந்தியா உலகின் 7-வது இடத்திலும் இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளதாம்! உலகெங்கும் ஆண்டுக்கு 800 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து குவிக்கிறார்கள் முதலாளிகள். அதில் இந்தியாவின் உற்பத்தி 40 மில்லியன். அதாவது ஆண்டுக்கு 4 கோடி வாகனங்கள். சராசரியாக இந்திய மக்கள் தொகையில் இரண்டு நபர்களுக்கு ஒரு வண்டி வீதம் நம் தலையில் கட்டி விட்டனர். இன்னும் பத்தாண்டுகளில் நம் நாட்டில் மக்கள் தொகையை விட வாகன உற்பத்தி அதிகமாக இருக்கும். உடனடியாக வாகன உற்பத்திக்கு கருத்தடை செய்வதே நாம் வாழும் உரிமைக்கு அடிப்படையான தேவை!

ஆனால், இத்தகைய உற்பத்தியே நாட்டின் வளர்ச்சி என ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கின்றனர். அதே நேரத்தில் வாகனங்களில் வெளியாகும் புகையால் மாசு ஏற்பட்டு விட்டது; காற்று கெட்டுப்போச்சு; மனுசங்க மூச்சு விட முடியலை என்ற குரல் அவ்வப்போது அரசாலேயே எழுப்பப் படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் மூச்சுத்திணறி பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர், அம்மாநில அரசு வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை என முறை வைத்து இயக்கச் சொன்ன கேலிகூத்தும் நடந்தது. உலகில் மாசு படிந்த முதல் இருபது பெரும் நகரங்களில் நாம் பத்து இடங்களை பிடித்துள்ளோம் என்பதே நாம் கண்ட வளர்ச்சியாகும். இத்தகைய வாகன சந்தையால் பயனடைந்து வருபவர்கள் யார்? பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் யார்? உலகெங்கும் வாகன தொழிற்சாலைகள் இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுப்பது ஏன்? கார்ப்பரேட்டுகளின் லாபம். லாபவெறி மட்டுமே!

தொழில் செய்ய வரும் வாகன தொழிற்சாலைகளுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், தடையில்லா தண்ணீர், மானிய விலையில் மின்சாரம், ஒப்பந்தக் கூலி அடிமைகள், வங்கிக் கடன்கள் இவை தொழிற்சாலை துவங்கும் முன் அரசு கொடுக்கும் ஊக்கத் தொகையாகும். அதன்பின் வாகன விற்பனையில் வரும் லாபம், வாகனம் ஓடும் சாலையில் டோல் வரி மூலம் லாபம், வாகன காப்பீடு என்ற பெயரில் கல்லா கட்டுகின்றனர். இதுவும் போதாதென்று இப்போது “வாகன சட்டத் திருத்தம் 2018” என்கிற பெயரில் பம்பர் பரிசு பெற உள்ளன. வாகன புதுப்பித்தல் (FC), பெயிண்டிங், பழுது நீக்கும் பட்டறைகள், உதிரி பாக விற்பனை, ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட போக்குவரத்து துறை சார்ந்த அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து சிறு பட்டரைகள், பயிற்சிப்பள்ளிகள் வரை சிறு முதலாளிகள், தொழிலாளர்கள் பல லட்சம் பேரை தெருவில் நிறுத்த திட்டம் தீட்டுகிறது மோடி அரசு.

திருச்சி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் – கோப்புப்படம்.

இந்தக் கொடுமை போதாதென்று ஆன்லைன் கேப்ஸ் நிறுவனங்கள் ஓலா, உபேர், ஜியோ போன்றவர்களின் அட்டூழியம் வேறு! ஒருபுறம் சலுகை என மக்களை ஏய்ப்பது, மறுபுறம் ஆட்டோ கார் ஓட்டுனர்களை சவாரிக்காக நாள் முழுக்க காக்க வைப்பது, அபராதத் தொகை பிடித்தம் செய்வது என்று இந்த நிறுவனங்கள் பத்து சவாரி எடுப்பதற்குள் ஓட்டுனர்களை நாய் படாதபாடு படுத்தி வருவது பெருங்கொடுமை. இவை டாக்சி, ஆட்டோ வரிசையில் இருசக்கர வாகன சவாரியிலும் ஹோட்டல் உணவுகளை டோர் டெலிவரி செய்யும் சேவையிலும் இறங்கி விட்டன. ஆட்டோ, கார்களை தொடர்ந்து சரக்கு வாகனம், லாரி எனவிரிவுபடுத்த உள்ளன.

பெரும் முதலாளிகள் நம் ரத்தத்தை உறிஞ்சிய பிறகு நமது கார்ப்பரேட்டுகளின் அடிமை அரசு தம் பங்கிற்கு வசூல் வேட்டையை துவங்குகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் – டீசலில் கலால் வரி, சேவை வரி, வாட் வரி, கல்வி வரி, விற்பனை வரி எண்ணெய் நிறுவன லாபம், டீலர் லாபம் என 29 ரூபாய் பெட்ரோலை 85 ரூபாய் வரை உயர்த்தி நம்மை மூச்சு முட்ட வைக்கின்றன. சரி, இதோடு விட்டார்களா என்றால் அதுவும் இல்லை ஒவ்வொரு முச்சந்தியிலும், மூத்திர சந்திலும் நின்று லோக்கல் பிஸ்தாக்களான போலீசு, ஆர்டிஓ உள்ளிட்டோர் வாகனப் பரிசோதனை என்ற பெயரில் தமது கல்லாவை கட்டுவது, அவமானப்படுத்துவது, பொய் வழக்குப்போடுவது என்று கொடுமைப்படுத்துகின்றனர். நாட்டின் போக்குவரத்து மற்றும் மக்களின் சேவைத்துறையில் பெரும் பங்காற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களை நாயை விடக் கேவலமாக நடத்துவதை சகித்துக்கொண்டு வாழ்வது, பகுத்தறிவு கொண்ட மனித இனத்திற்கு இழிவானதாகும்.

ஒரு மாட்டை எத்தனை முறை தோலுரிப்பது? ஒரு நியாயம்- நீதி வேண்டாமா? கோடீஸ்வரன் பறக்குற விமானத்துக்கு தரும் முதல் தர பெட்ரோல் ரூ.65-க்கு தரப்படுகிறது. கும்பி கூழுக்கு அழும் போது கொண்டை பூ கேட்குது! என்பதைப் போல, நமக்கே எரிபொருள் இல்லாமல் சிக்கித் தவிக்கும் போது, அமெரிக்காவுக்கு லிட்டர் ரூ.34-க்கு மோடி அண்ணாச்சி ஏற்றுமதி செய்கிறார்.

இது பூனைகளுக்கான கோர்ட்; இங்கே எலிகளுக்கு நியாயம் கிடைக்காது என்பது போல, நடப்பது கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சி; இதில் உழைப்பாளி மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இது ஆட்டோ டிரைவர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. கார், வேன், லாரிகள், பிற சரக்கு வாகனங்கள், சிறு பட்டறைகள், மெக்கானிக், ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி, பெயிண்டர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்குமான பிரச்சனை என்பதை உணர வேண்டும். இந்த பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் அரசின் தவறான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். நம் கோரிக்கைகளை வென்றெடுக்க பணக்கார சங்கங்களை நம்பிப் பயனில்லை! அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் போன்றவை பரபரப்பாக போராட்டத்தை அறிவிப்பார்கள்; பிறகு பாதியிலேயே பின்வாங்கிவிடுவார்கள் இதுதான் இன்றைய சங்கங்களின் யோக்கியதை!

விவசாயிகளிடமிருந்து விளைநிலமும், மீனவனிடமிருந்து கடலும் பிடுங்கப்படுகின்றன. சிறு தொழில் முனைவோரிடமிருந்து தொழில்கள் பறிக்கப்படுகின்றன. தொழிலாளரிடமிருந்து தொழிற்சங்க உரிமை பறிக்கப்படுகிறது. வணிகம், மருத்துவம், கல்வி, உள்ளிட்ட அனைத்து துறைகளும் கார்ப்பரேட் வசமாகி வருகின்றன. எஞ்சியிருக்கும் மோட்டார் வாகன துறையிலும் மூக்கை நுழைத்து முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றனர். எதுவும் முடியாது, போராட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள், எல்லாம் அவன் செயல் என விதியை நொந்து விழபோகிறோமா? அல்லது பகல் கொள்ளைக் காரர்களெல்லாம் ஓரணியில் நிற்கும் போது பாதிக்கப்பட்டோரெல்லாம் ஒன்று சேர்ந்து உரிமையைப் பெற போராடப் போகிறோமா? விரைவில் முடிவு செய்வோம். 28 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரள்வோம். வாரீர்!

  • கண்டன ஆர்ப்பாட்டம்,
  • 28.09.2018, மாலை 5.30மணி,
  • சிந்தாமணி அண்ணாசிலை, திருச்சி.

இவண்:
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்
பதிவு எண் : 1219 / TRI-TN/ 2000
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
தொடர்புக்கு :97916 92512

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க