மெரிக்கவில் நடந்த செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நிகழும் சமூக ஒட்டுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இசுலாம் மையப்புள்ளியாக விளங்குகின்றது.

இசுலாமிய குடியேறிகளுக்கு கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றது. சமீபத்தில் தனது பாராளுமன்ற கன்னிப் பேச்சில் செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங் இது குறித்துப் பேசியுள்ளார். பலர் இசுலாத்தின் பெயரில் இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடும் என்று நம்புகின்றனர்.

செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங்

இந்த எதார்த்த சூழலில் இசுலாம் குறித்து நமக்கு செய்தியளிக்கவும் அந்த செய்திகளுக்கு நமது எதிர்வினைகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் ஊடகங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால் இசுலாத்தைக் குறித்த போதிய அறிவின்மையிலோ அல்லது இசுலாமியர்களை விரோதித்துக் கொள்வோம் என்கிற அச்சத்தின் விளைவாகவே மிக அடிப்படையான ஒன்றை ஊடகங்கள் தவற விடுகின்றன. அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தலின் வேர் இசுலாத்தில் இருந்து கிளைக்கவில்லை. மாறாக, அது இசுலாமிய மயமான அரசியலில் தான் உள்ளது.

இவ்விரண்டு பதங்களும் கேட்பதற்கு ஒன்று போலத் தெரிவியலாம்.  ஆனால், இசுலாமும் இசுலாமியமயமாதலும் ஒன்றல்ல. இசுலாம் என்பது சுமார் 1.6 பில்லியன் மக்களால் பின்பற்றப்படும் நம்பிக்கை. மாறாக, இசுலாமியமயம் என்பது சில குறுங்குழுக்களின் அரசியல் சித்தாந்தம். இவர்கள் இசுலாத்திடம் இருந்து ஷரியா, ஜிகாத் போன்ற கருத்துக்களை கடன் வாங்கி அவற்றைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மறுவிளக்கம் அளிக்கின்றனர்.

பயங்கரவாதிகளின் லட்சியங்களை ஊடகங்கள்  எவ்வாறு உத்திரவாதப்படுத்துகின்றன?

அல்கைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் முசுலீம் அல்லாதவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்புமுறையை (கலீபேட்) நிறுவ  முனைகின்றனர். இதற்கான அடிப்படை குரானிலோ அல்லது ஹதீஸிலோ கிடையாது.

கவனமாக தெரிவு செய்யப்பட்ட இசுலாமிய பாடங்களை மறுதொகுப்பு செய்து அவற்றையே மதச் சட்டங்களாக நிறுவும் தந்திரமே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை.

குறிப்பாக, இசுலாமியவாதிகள் ஜிஹாது என்கிற கருத்தாக்கத்திற்கு மறுவிளக்கம் ஒன்றை அளித்து அதையே முசுலீம் அல்லதவர்களின் மீது தாங்கள் கட்டவிழ்த்து விடும் ”புனிதப் போருக்கான” நியாயமாக முன் வைக்கின்றனர். ஆனால், போர் மற்றும் அமைதி குறித்த குரானின் அடிப்படைக் கோட்பாடுகளும்  இவர்களின் விளக்கங்களும் கடுமையாக முரண்படுவதாக ஏராளமான ஆய்வுகள் முன்வைக்கின்றன.

படிக்க :
♦ பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
♦இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

உதாரணமாக சிவிலியன்களின் மேல் தாக்குதல் நடத்துவதை இசுலாமியக் கல்வி தடை செய்கிறது. மேலும் உலகளவில் இசுலாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து ஃபத்வா (மதக் கட்டளை) பிறப்பித்துள்ளனர்.

ஜிஹாது குறித்த தவறான விளக்கங்களை விரிவாக பதிவு செய்து செய்தியாக்குவதும், அதைக் குறித்த இசுலாமிய தலைவர்களின் கண்டனங்களைப் போதிய முக்கியத்துவமின்றி வெளியிடுவதன் மூலம் இசுலாத்துக்கும் பயங்கரவாதத்திற்குமான தொடர்பு குறித்த பொதுபுத்திக்கு வலு சேர்க்கின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

சில சந்தர்பங்களில் ஊடக அறிவுஜீவிகள் பயங்கரவாதிகள் தங்களது செயல்களுக்கான அடிப்படையாக இசுலாத்தை முன்வைப்பதைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவே மதத்தையும் பயங்கரவாதத்தையும் தொடர்பு படுத்துகின்றனர்.

பயங்கரவாதிகளின்  கூற்றையும் அவர்கள் இசுலாத்திற்கு அளிக்கும் விளக்கத்தையும் விமர்சனமற்ற முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலம் இசுலாமியவாதிகளின் நோக்கங்களுக்கு இவர்கள் சேவை செய்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தங்களையே இசுலாத்திற்கும் இசுலாமியர்களுக்குமான பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளும் பயங்கரவாதிகளின் திட்டங்களுக்கு ஊடகங்கள் துணை போகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆள்சேர்ப்பு முறை

இசுலாத்திற்கும் மேற்கத்திய உலகத்திற்கும் இடையே ஒரு மனித நாகரீகப் போர் நடப்பதாக மேற்கொள்ளப்படும் நச்சுப் பரப்புரைகளில் இசுலாமியவாத பயங்கரவாதிகளின் போர்தந்திர ரீதியிலான நலன்கள் இருக்கின்றன.

“மேற்குலகில் வாழும் இசுலாமியர்கள் வெகு விரைவில் தங்களுக்கு இரண்டு தேர்வுகளே இருப்பதை உணர்வார்கள்”  என்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிப்ரவரி 2015ல் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று.

அதாவது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மேற்கத்திய முசுலீம்கள் தாம் சந்தேகத்தோடும் அவநம்பிக்கையோடும் நடத்தப்படுவதை உணர்வார்கள். இதன் மூலம் “சிலுவைப் போர் நாடுகளின் கடுமையான தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒன்று அவர்கள் தங்களை மதம் மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு குடியேறியாக வேண்டும்” என்கிறது அந்த செய்திக் குறிப்பு.

படிக்க :
♦ நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
♦ ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !

நடந்து கொண்டிருக்கும் போரில் ஏற்படும் மனித இழப்புகளை மேற்கத்திய இசுலாமியர்களைக் கொண்டு ஈடுகட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிரித்துக் கைப்பற்றும் (Divide and conquer) உத்தியைக் கையாள்கின்றது. விளிம்பு நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மேற்கத்திய இசுலாமியர்களைக் குறிவைத்து தங்கள் பிரதேசத்தில் சகோதரத்துவமும், பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும் எனப் பரப்புரை செய்கின்றது.

மறுபுறம், இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதத்தோடு வெளிப்படையாகவே தொடர்புபடுத்தி எழுதுவதன் மூலமும், இசுலாமிய நம்பிக்கையையும் இசுலாமியவாத அரசியலையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளாததன் மூலமும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களை மறைமுகமாக முன் தள்ளுகின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

உதாரணமாக இங்கிலாந்தில் சிரிய அகதிகளின் முதல் குடியேற்ற அலை நிகழ்ந்த 2015 -ல். உடனடியாக இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் பத்திரிக்கை “பிரிட்டனின் உள்விரோதிகளின் மோசமான அச்சுறுத்தல்” என்கிற கட்டுரையை வெளியிட்டு அகதிகளை ‘இசுலாமிய தீவிரவாதிகளாக’ சித்தரித்தது.

அதே போல் 2014 -ல் சிட்னியில் நடந்த தாக்குதலின் போது துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த இசுலாமியரை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது டெய்லி டெலிகிராப் பத்திரிகை. பின்னர் இது உண்மையல்ல என பயங்கரவாதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் தெளிவுபடுத்தினர்.

பொறுப்பற்ற ஊடகச் செய்திகளால் உண்டாகும் விளைவு

இம்மாதிரியான எளிமைப்படுத்தப்பட்டு, பரபரப்புக்கான ஊடகச் செயல்பாடுகள் இசுலாமியர்களுக்கு எதிராக முசுலீமல்லாதவர்களை தூண்டி விடுவதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களுக்கே சேவை செய்கின்றன.

இசுலாமியர்களுக்கும் இசுலாமியவாத பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடுவது இசுலாமிய மக்களுக்கு எதிராக பிற மக்களைத் தூண்டி விடும் என்கிறது வியன்னா பல்கலைக்கழகம் 2017 -ல் நடத்திய ஆய்வு ஒன்று.

இம்மாதிரியான செய்திகள் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்து வருவதால் சி.என்.என் போன்ற சில ஊடகங்கள் “மிதவாத இசுலாம்” “தீவிரவாத இசுலாம்” மற்றும் “இசுலாம்”, “இசுலாமிய தீவிரவாதம்” போன்றவைகளை வேறுபடுத்தி எழுதுகின்றன. எனினும், இவர்களும் கூட இசுலாமியவாத அரசியல் கண்ணோட்டம் குறித்த புரிதலின்றி மத நோக்கங்களை முன்தீர்மானமாக கொண்டே எழுதுகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுமார் 1200 வெளிநாட்டுப் போராளிகளிடம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி, அவர்களில் 85 சதவீதம் பேர் முறையான மதக் கல்வி பெற்றவர்கள் இல்லை என்பதோடு அவர்கள் இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களும் இல்லை என்பது தெரியவந்தது. “இவர்கள் தமது இயக்கம் முன்வைக்கும் ஜிஹாது குறித்த விளக்கங்களை கேள்விக்கு உட்படுத்த மாட்டார்கள்” என்பதாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விரும்பிச் சேர்த்துக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இசுலாமியவாதம் என்பது மதத்தை ஒரு முகமூடியாக கொண்டிருக்கிறது. ஆனால், முகமது நபியின் போதனைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் பின் காலனிய சூழலின் அரசியல் அதிருப்திகளின் வெளிப்பாடுகளே. ஷரியா சட்டங்களின் அடிப்படையிலான ஒரு கலீபாவை (இசுலாமிய தேசம்) உருவாக்குவதே லட்சியங்களாக இசுலாமிய பயங்கரவாதிகள் சொல்கின்றனர். எனினும், ஒரு முசுலீமாக இருப்பதற்கு இவை அவசியமே இல்லை. இப்படி ஒரு முசுலீம் அல்லாதவர் சொல்வது இசுலாத்தின் மீதான தாக்குதலும் இல்லை.

அரசியல்-சரியா அல்லது நுட்பமான விவாதமா?

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கான நியாயம் கற்பித்தலை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வியக்கத்தைக் குறிப்பிடும் போது “இஸ்லாமிக் ஸ்டேட்” என்பதற்கு பதில் “டேயிஷ்” என குறிப்பிட வேண்டும் என இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. எனினும், இது எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.

இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் போன்ற பல அரசியல்வாதிகள் “கடுங்கோட்பாட்டுவாத இசுலாமிய பயங்கரவாதம்” என குறிப்பிட்டு அந்த எல்லைக் கோட்டை தெளிவற்றதாக்குகின்றனர்.

சிலர் நமது அரசியல் சரி நிலைப்பாடுகளே பிரச்சினைக்கு முகம் கொடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கின்றது என்கிறார்கள்.

ஆனால், இசுலாமிய மதமே பிரச்சினைகளுக்கான வேர் எனச் சொல்பவர்கள் பெரும் தவறிழைக்கின்றனர். இசுலாத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்னவென்பதைக் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ஒரு கலீபேட்டை உருவாக்குவதும், முசுலீம் அல்லாதவர்களின் மேல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் இசுலாமிய மதக் கட்டளைகளா, அவ்வாறு செய்வதற்கு இசுலாமிய மதம் கோருகின்றதா என்பதை விவாதிக்க வேண்டும்.

மூலக்கட்டுரை : Why the media needs to be more responsible for how it links Islam and Islamist terrorism
தமிழாக்கம்: