த்திரிகையாளர் ஜமால் கசோகி  கொலையில் சவுதி இளவரசருக்கு உள்ள தொடர்பு குறித்து பகடி செய்த  நிகழ்ச்சியை தனது சேனலில் இருந்து நீக்கியுள்ளது நெட்ஃபிளிக்ஸ். சவுதி அரேபியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்நிகழ்ச்சி சவுதியில் மட்டும் நீக்கப்பட்டதாக நெட்ஃபிளிக்ஸ் விளக்கமளித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என உலகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர், ஜமால் கோச்சகி.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கரான நகைச்சுவையாளரும் அரசியல் விமர்சகருமான ஹசன் மின்ஹஜ், நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக ‘பேட்ரியாட் ஆக்ட்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்-தான், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலைக்கு காரணம் என்பதை விமர்சித்திருந்தார். சவுதி அரேபிய அரச குடும்பம் எப்படி மக்களை சுரண்டிக் கொழுக்கிறது, அவர்களின் அடிப்படைவாதம், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், சவுதியுடன் ‘நட்பாக’ இருப்பதன் ரகசியம், தீவிரவாத குழுக்களை ஊக்குவிப்பது, ஏமன் மீது படையெடுத்து லட்சக்கணக்கான மக்களை பட்டினியில் தள்ளியது, சவுதி இளவரசரின் போலி முற்போக்கு அறிவிப்புகள்… உள்ளிட்ட பல விசயங்களை அந்தப் பகுதியில் பேசியிருந்தார் ஹசன் மின்ஹஜ்.

யூ-டியூபில் வெளியிடப்பட்ட ஹசன் மின்ஹஜ் வீடியோ

அக்டோபர் மாத இறுதியில் வெளியான இந்தப் பகுதி, தற்போது நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இணைய குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும் என சவுதி அரசாங்கத்திடமிருந்து இந்த நிகழ்ச்சியை நீக்கக் கோரிக்கை வந்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நீக்கியதாகவும் அந்நிறுவனம் சொல்கிறது.  நெட்ஃபிளிக்ஸ் சுயலாபத்துக்காக தணிக்கையில் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

நகைச்சுவையாளரும் அரசியல் விமர்சகருமான ஹசன் மின்ஹஜ்

அம்னெஸ்டி அமைப்பு, ‘சவுதி அரேபியாவில் கருத்து சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை காட்டுவதாக உள்ளது’ என கூறியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம், ‘சவுதி அரேபியா தன்னுடைய மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஆர்வம் கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது’ என விமர்சித்துள்ளது. “கலைஞர்களுக்கு உள்ள கருத்துரிமையை ஆதரிப்பதாக நெட்ஃபிளிக்ஸ் சொல்வது அபத்தமாக உள்ளது. கலைஞர்கள், அரசியல்வாதிகள், நகைச்சுவையாளர்கள் என குடிமக்களின் சுதந்திரத்தை மதிக்காத அரசாங்க அதிகாரிகளிடம் தலை குனிந்திருக்கிறது அந்நிறுவனம்” என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஊடக தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.

படிக்க:
♦ சவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை
♦ வகாபிய அடிப்படைவாதத்தை உருவாக்கியது மேற்குலகமே ! சவுதி இளவரசர் ஒப்புதல் !

“சட்டரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும்” என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.  நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டிருந்தாலும் யூ – ட்யூப் தளத்தில் அந்த நிகழ்ச்சி சவுதியில் தடை செய்யப்படவில்லை.

கொல்லப்பட்ட கசோகி பணியாற்றிய வாஷிங்டன் போஸ்டின் ஆசிரியரான கரென் அடியா, “ஹசனின் நிகழ்ச்சியில், அவர் உறுதியாகவும் நேர்மையாக சவுதி அரேபியாவையும் முகமது பின் சல்மானையும் கசோகி கொலை பின்னணியில் விமர்சிக்கிறார். ஏமன் குறித்த உண்மையை மக்களுக்கு சொல்லியிருக்கிறார். நெட்ஃபிளிக்ஸ் அவருடைய நிகழ்ச்சியின் தொடர்புடைய பகுதியை நீக்கியது மிகவும் மூர்க்கத்தனமானது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தனது நிகழ்ச்சி நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹசன், “தெளிவாக தெரிவது என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியை மக்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டுமென்றால், அதை தடை செய்யவேண்டும். பின் அதை வைரலாக்க வேண்டும். பிறகு, யூ ட்யூப்பில் பதிவேற்றிவிட வேண்டும்” என பகடி செய்துள்ளார்.

மேலும் அவர், “அதோடு, ஏமனில் நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய மனித உரிமை மீறல் பிரச்சினையை எவரும் மறந்துவிடாதீர்கள்” எனவும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நம்மூர் கிழக்கு பதிப்பகத்தில் பத்ரி அவர்கள், மோடி எதிர்ப்பு புத்தகத்தையும் வெளியிடுவதைப் போல மேற்குலக முதலாளித்துவம் எந்தச் சரக்கு விற்பனையாகுமோ அதையே விற்கும். ஹசன் மின்ஹஜ் போன்ற மனித உரிமைகளில் நாட்டம் கொண்ட கலைஞர்களுக்கும் இடம் அளிக்கும். அதே வேளையில், ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பு வந்துவிட்டால் அதன் காலில் விழவும் தயங்காது.


கலைமதி
செய்தி ஆதாரங்கள் :
Comedian Hasan Minhaj pokes fun at Saudi Netflix ban

Netflix row: Hasan Minhaj pokes fun at removal of show criticising Saudi Arabia

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க