Saturday, October 19, 2019
முகப்பு உலகம் அமெரிக்கா ஐ.எஸ் - சவுதி கூட்டணி அமெரிக்காவுக்குத் தெரியும் !

ஐ.எஸ் – சவுதி கூட்டணி அமெரிக்காவுக்குத் தெரியும் !

-

சுலாமிய ஜிஹாதுக்கு இருபத்தோராம் நூற்றாண்டுக்கான புதிய விளக்கங்கள் படைத்தளித்த அமெரிக்கா, ஆப்கானிய முஜாஹிதீன்கள், தாலிபான்கள் உள்ளிட்ட ‘போராளிகளையும்’ உலகிற்கு படைத்தளித்த பெருமைக்கு உரியது. மத்திய கிழக்கின் எண்ணை வளத்தை தடையின்றி உறிஞ்சுவது, பெட்ரோல், டாலரின் மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வது உள்ளிட்ட நோக்கங்களுக்காக வளைகுடா நாடுகளைத் தனது அடிவருடிகளாக போற்றி வளர்த்து வருகின்றது அமெரிக்கா. அதோடு கூட, தனக்கு படியாத வளைகுடா நாடுகளில் ‘ஜனநாகத்தின் சுவிசேஷத்தை’ அறிவிக்கும் வஹாபிய காலாட்படைகளுக்கு தத்துவார்த்த போதகராகவும் சவுதி உள்ளிட்ட வளைகுடா அடிவருடிகளைப் பயன்படுத்தி வருகிறது.

isisflagஅந்த வகையில் ரசிய சார்பு சிரியாவுக்கு ’ஜனநாயக’ பாடம் எடுக்க அமெரிக்க ஏற்பாட்டிலும் சவுதி ஷேக்குகளின் மேற்பார்வையிலும் களமிறக்கப் பட்ட ஐ.எஸ் கும்பல், ஒருகட்டத்தில் கையை மீறிச் சென்றவுடன், அவர்களை பயங்கரவாதிகள் என்று ஒழிப்பதாக மாற்றிக் கொண்டது அமெரிக்கா. அல் – கைதா, ஐ.எஸ் போன்ற இசுலாமிய அடிப்படைவாத – பயங்கரவாத கும்பல்கள் அமெரிக்க மூளைகளின் குறைப்பிரசவங்கள் என்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்ட அடிப்படைவாத இசுலாத்திற்கென்றே சொந்த முறையிலான இயங்குமுறை இருக்கின்றது. அமெரிக்க நோக்கமும் அது பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகளின் நோக்கமும் தன்னியல்பாகவே ஒருகட்டத்தில் முரண்பட்டாக வேண்டும். அந்த முரண்பாடுகளை தனது நலனுக்காக அமெரிக்க பயன்படுத்தவும் செய்கிறது.

தற்போது ஐ.எஸ். இயக்கத்திற்கு எதிராக தீவிரமாக களமாடுவதாக காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, அதன் தத்துவ குருமார்களின் ஒத்துழைப்பு பூரணமாக தனக்குக் கிட்டவில்லையே என ஆத்திரப்படுகிறது. அந்த ஆத்திரத்தின் வெளிப்பாடு அமெரிக்க அதிகாரவர்க்கத்தினரிடையே எதிரொலிப்பதையே RT இணையத்தில் வெளியான இந்தக் கட்டுரை உணர்த்துகிறது. கொலை வழக்கில் ஒன்றில் சவுதி இளவரசர் ஒருவர் சமீபத்தில் மரணதண்டனை பெற்றது குறித்து இசுலாமிய மதவாதிகள் அந்த நாட்டின் நீதி வழுவாமையை போற்றுகின்றனர். ஆனால் உலகெங்கும் அப்பாவி முசுலீம்களைக் கொல்லும் அமெரிக்கா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கூட்டாளியாக சவுதி விளங்குவதை மறைக்கின்றனர். – வினவு

சவுதியும் கத்தார் நாடும் ஐ.எஸ்-சுக்கு ’இரகசிய’ உதவி அளிப்பதை ஹிலாரி கிளிண்டன் அறிவார் – விக்கி லீக்ஸ்

ஹிலாரியும் அவருடைய தேர்தல் பிரச்சாரக் குழு தலைவரான ஜான் பொடெஸ்டோவும் பரிமாறிக் கொண்ட  மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா ஐ.எஸ்-சுக்கு எதிராக தொடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் போரின் திரைமறைவு வேலைகள் அம்பலமாகியுள்ளன. வெளிடப்பட்ட மின்னஞ்சல் ஒன்றில், சவுதியும் கத்தாரும் ஐ.எஸ்-க்கு “நிதி மற்றும் பொருள்” உதவிகள் செய்ததை ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.

சவுதியும் கத்தாரும் ஐ.எஸ்-சுக்கு உதவப்போவதில்லை என்று ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தன. இந்நிலையில் அதை மீறி இவ்விரு நாடுகளும் ஐ.எஸ் மற்றும் பிற சன்னி பிரிவு இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்கு கள்ளத்தனமாக ஆயுதம் மற்றும் பொருளுதவிகளை செய்கின்றன எனத் தாம் கருதுவதாக ஹிலாரி, பொடெஸ்டோவுக்கு மறுமொழி எழுதியுள்ளார்.

மேலும் ஹிலாரி ” ஐ.எஸ்-க்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முன்னேற்றமடைந்திருந்தாலும், நாம் நம்முடைய தலைமைத்துவத்தையும், பழைய பாரம்பரிய வகைப்பட்ட இராஜதந்திரங்களையும் பயன்படுத்தி சவுதி மற்றும் கத்தார் நாடுகளுக்கு மேலதிக அழுத்தங்களைத் தரவேண்டும். ஏனென்றால் இவர்கள் ஐ.எஸ் மற்றும் சன்னி இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு ஏராளமான பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் இரகசியமாகச் செய்து கொண்டு வருகின்றனர்” என்று பொடெஸ்டோவிடம் குறிப்பிட்டுள்ளார்.

”இராஜதந்திர அழுத்தங்களோடு குர்து தேசிய அரசாங்கத்திற்கு கூடுதல் உதவிகளையும் செய்ய வேண்டும். சவுதியும், கத்தாரும் இதன்மூலம் தங்களுடைய சன்னி மார்க்க அடிப்படைவாதத்தை விரிவுபடுத்தும் திட்டத்தைக் கட்டுப்படுத்த வைப்பது மேலும் அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்கிறார் ஹிலாரி.

Arab wealthy princesசவுதி அரேபியா இதற்கு முன்னரும் அல் குவைதா, தலிபான்கள் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்து வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் வன்கொடுமை, பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றுவது போன்ற பல்வேறு அட்டூழியங்களையும் ஐ.எஸ்-சுக்கு நிகராகச் செய்து வருகின்றது.

சவுதி, கத்தார் நாடுகளுக்கெதிராக அமெரிக்கா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஐ.நா-வின் ”குழந்தைகளின் உரிமைக்கான கமிட்டி” சவுதியின் மனித உரிமை மீறல் குறித்து வெளிட்டுள்ள கடுமையான அறிக்கையின் மேல் அமெரிக்கா நடவடிக்கை எடுக்காவிட்டால் மற்ற நாடுகள் இதில் தலையிட வேண்டி வரும்.

2016-ம் ஆண்டுத் தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் கத்தார் நாடுகள் ஐ.எஸ்-சுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை என்ற பெயரில் பி-52 ரக குண்டு மழை பொழியும் போர் விமானங்களை அல் உதீத் ஏவு தளத்தில் நிறுத்தி வைத்திருந்தன.

சவுதி அரேபியாவும் தன் பங்குக்கு அமெரிக்காவுடன் இணைந்து ஐ.எஸ்-சுக்கு எதிராகப் போர் புரிவதாக அறிவித்தது. எனினும், இவையெல்லாம் வெற்று பம்மாத்துகளாக இருந்தனவே தவிர எதார்த்தத்தில் எதுவும் நடக்கவில்லை. செப்டம்பர் 2016 அன்று அல் நுஸ்ரா தளபதி அபு அல்-ஈஸ் “ அமெரிக்காவும் அதன் வளைகுடா கூட்டாளிகளும் தங்களுக்கு ஆயுதங்களை வழங்கினர்” என்று அம்பலப்படுத்தினார்.

இதை அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில், ”சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் குழுக்களை சிலர் ஆதரிக்கின்றனர், ஆயுதங்களும் கொடுக்கின்றனர். ஆனால் நிச்சயம் அமெரிக்கா அப்படிச் செய்யவில்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்த அந்நாட்டின் அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், இது நிலைமையை மேலும் சிக்கலாக்குவதாகவும் குறிப்பிட்டார்.

சவுதி, கத்தார் நாடுகள் தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்வது குறித்து  பொடெஸ்டோ மட்டுமல்ல, பிரிட்டனும் குற்றம் சாட்டியுள்ளது. பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணைக்குழு ஒன்று அரபு நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் நாடுகளுடைய அரச பரம்பரையினர் தீவிரவாதக்குழுக்களுக்கு உதவி செய்வதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் சட்டங்கள் இயற்றவேண்டும் என அழுத்தம் கொடுத்தது.

அரச குடும்பங்களுக்கும், அரசாங்கத்துக்குமான பணப்பட்டுவாடா குறித்து அறிந்து கொள்வது மிக மிகச் சிரமமானது என்கிறார் பிரிட்டனின் வெளி நாட்டு குடிமைப் பணி தலைவரான டான் சக்(Dan Chugg). மேலும் அவர் கூறுகையில்  முந்தய காலங்களில் சவுதி தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்துள்ளது என்பதைக் வலியுறுத்தினார். மேலும், பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை தனது வளைகுடா பங்காளி நாடுகளின் சட்டங்கள் ஐ.எஸ். அமைப்புக்கு சென்று சேரும் நிதியாதாரங்களைத் தடுக்கும் அளவுக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் எதிர்காலத்திலாவது ஐ.எஸ் நிதி பெறுவதைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ், அல் நுஸ்ரா போன்ற தீவிரவாத அமைப்புக்களுக்கு மட்டும் அரபு நாடுகள் நிதிப் புரவலர்களாக இருக்கவில்லை. அடிப்படைவாத மதகுருமார்களை களமிறக்கி தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கோசோவாவில் வகாபியத்தை அறிமுகம் செய்வதற்கும் சவுதி, கத்தார், குவைத் போன்ற நாடுகள் ஏராளமாக நிதியுதவி செய்து வருவதை கடந்த  மே மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

பால்கன் போரினால் பாதிக்கப்பட்ட கோசோவாவில் திடீரென இசுலாமிய தொண்டு நிறுவனங்கள் முளைக்கத் துவங்கின. இத்தொண்டு நிறுவனங்கள் போரினால் பாதிப்புள்ளான மசூதிகளை மீண்டும் நிர்மாணிக்க உதவி செய்ததற்கு கைமாறாக கொசோவோ இசுலாமியர்களுக்கு பர்தா உள்ளிட்ட பிற்போக்கான மதச்சட்டங்களை அறிமுகம் செய்து வைத்தன.

ஒருவேளை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குப் பணத்தை வாரி இறைத்ததைப் போல கோசோவாவிலும் வகாபிசத்தை விரிவடையச்செய்து, நிதியையும் கொட்டினால் அமெரிக்கா மேலும் சில பெரும் போர்களுக்குத் தயாராக வேண்டிய நிலை வரும். உதாரணமாக சவுதியால் நிதி உதவி செய்யப்படும் அல் வாக்ஃப்-அல் இஸ்லாமி நிறுவனம் 2000 முதல் 2012-ம் ஆண்டு வரை ஏறக்குறைய 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகத் திரட்டியுள்ளது.

தமிழாக்கம்: தரணி

மேலும் படிக்க :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க