“ஜே.என்.யு. முதல் சென்னைப் பல்கலைக் கழகம் வரை – அறிவுத் துறையினரைத் தாக்கும் இந்து மதவெறிக் கும்பல் ! தமிழ்ச் சமூகமே ஆர்த்தெழு !” என்னும் முழக்கத்தின் கீழ் சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ. அரசு கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையில், “பேராசிரியர் பத்மாவதி எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு என்பது இந்துத்துவக் கும்பலைப் பொறுத்தவரையில் ஒரு எடுகோள்தான். அவர்களது உண்மையான நோக்கம் பேராசிரியர் சரவணனுக்கு சிக்கல் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்குக் காரணம், அவர், “சைவ சமயத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆய்வுகளில் தெளிவுபடுத்தியிருப்பதைத் தான்.

ஸ்மார்த்த பார்ப்பனர்களான சங்கராச்சாரிகள், சதித்தனமாக சைவத்தையும், வைணவத்தையும் பார்ப்பனமயமாக்கி அதனை இந்துமதத்திற்குள் திணித்தார்கள். ஆனால் சைவமும் வைணவமும் இந்து மதத்திற்குள் சேர்த்தியானவை அல்ல. இவ்விரு சமயங்களுக்கும் இந்து மதத்துக்கு துளி சம்பந்தமும் இலை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட போது, அங்கு கிடைத்த ஏராளமான முத்திரைகளில் முக்கியமானது லிங்கம். லிங்க வழிபாடு என்பது இயற்கையான வழிபாட்டு முறைகளில் ஒன்று.

படிக்க:
கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

மக்கள் பொதுவாக இயற்கையை புரிந்து கொள்ள இயலாதவர்களாகவே இருந்தார்கள். இன்றும் பெரும்பான்மையினர் அந்நிலையிலேயே இருக்கிறார்கள். தங்களது அறியாமையை “நம்பிக்கை”யைக் கொண்டுதான் நிரப்புகிறார்கள். அந்த நம்பிக்கை எனும் நிழலில்தான் இன்று கடவுள், பக்தி ஆன்மீகமும் நீடிக்கின்றன.

உலகில் உயிர் உற்பத்தியை அடையாளப்படுத்தும் குறியீடுதான் லிங்கம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இவ்வகை வழிபாடுதான் இருந்தது. தமிழர் நாகரிகம் என்பது இயற்கை வழிபாடுதான் என்பதை நமது சங்க இலக்கியங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

நமது சங்க இலக்கியங்களைப் பாடிய காலம் ஒன்று, தொகுத்த காலம் இன்னொன்று. அதற்கு விளக்க உரை அதன் பின்னர் எழுதப்பட்டது. கிபி 8-ம் நூற்றாண்டில்தான் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. பரிபாடலையும், திருமுருகாற்றுப் படையையும், கலித்தொகையையும் பழைய சங்க இலக்கியங்களோடு சேர்த்துத் தொகுத்துவிட்டனர். சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளே காட்டப்படுகின்றன. பின்னர் இணைக்கப்பட்ட பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்றவை அனைத்தும் வைதீக வழிபாட்டு முறைகளைப் பற்றி பேசுகின்றன.

இயற்கை சார்ந்த வழிபாட்டு முறையான லிங்க வழிபாட்டு முறைதான், சைவ வழிபாட்டு முறை. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், அனைத்து சமயங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு மதச்சார்பற்றவராகவே அந்நூலை எழுதியுள்ளார். சைவம், வைணவம் எல்லாம் தனித்து செயல்படவல்ல சமயங்களாக இருந்தும், பிற்காலங்களில் பிராமணர்களின் வைதீக மதத்திற்குள் சதித்தனமாக இணைக்கப்பட்டன.

தீயை சார்ந்துதான் பிராமண மதத்தின் வேதங்கள், உபநிடதங்களும் எழுதப்பட்டன. அவர்கள் இயற்கையை வழிபடவில்லை. கிபி 4 – 5 ஆகிய நூற்றாண்டுகளில் மவுரிய சாம்ராஜியத்தின் வழியில் வந்த புத்தமதம், சமண மதம் உள்ளிட்டு அனைத்து சமயங்களும் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டு வைதீக, பார்ப்பனிய, ஆரிய மரபுகள் சமஸ்கிருத மொழியின் மூலமாக உள்நுழைகின்றனர். அவர்கள் மன்னர்களை தங்களது கைகளுக்குள் வைத்துக் கொண்டார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், பல்லவர்கள் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குகிறார்கள். திராவிட மொழிக் குடும்பங்கள் வாழ்ந்த இப்பகுதியில் பல்லவர் காலம் தொடங்கி, பிற்காலச் சோழர்கள் வரையில் வைதீக மரபுகள் உட்புகுத்தப்பட்டன. அக்கிரகாரங்கள், வைதீக பாடசாலைகள் கோவில்கள் பல கட்டப்பட்டன. இவர்கள் சமஸ்கிருந்தத்தை ஆட்சி மொழியாக்கினார்கள்.

வைதீக சமயத்தினர், சைவ மரபையும், வைணவ மரபையும் வைதீகமயப் படுத்தினர். இடைக்காலத்தில் மாணிக்கவாசகர், திருமூலர், இராமலிங்க அடிகள் உள்ளிட்டோர் இதனை அம்பலப்படுத்தினர். ஆனால் சைவ மரபைச் சேர்ந்த மடாதிபதிகளை வைதீகர்கள் வென்றெடுத்தனர்.

பின்னர் சைவ மடங்களில் சமஸ்கிருத வைதீக மரபுகளே அன்றாட மரபாக கட்டியமைக்கப்படுகிறது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்து மதம் என்ற சொல் இங்கு இல்லை. பிராமண மதம் என்பது மட்டும்தான் இருந்தது.

படிக்க:
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்
பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

தமிழக மரபை இவர்கள் படிப்படியாக மாற்றியது குறித்தும் நாம் பார்க்கவேண்டும். கிபி 7-ம் நூற்றாண்டில் தமிழுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விநாயகனை இங்கு கொண்டு வந்து கடவுளாக சொருகுகிறார்கள்.

சாதாரண மக்கள் தங்களை ஒத்த தலைவனாக கொண்டாடும் முருகனை கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஸ்கந்தனாக மாற்றுகிறார்கள். 13-ம் நூற்றாண்டில் சைவர்களைக் கொண்டே ஸ்கந்த புராணத்தை எழுத வைத்தார்கள். ஸ்கந்த புராணத்தின் ஆபாசம் ஊரறிந்த ஒன்றே.

பிற்காலத்தில் தமிழ் இசை மரபை மாற்றி கர்நாடக இசையை உருவாக்குகிறார்கள். பின்னர் 18-ம் நூற்றாண்டில் வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு ஆட்சி செய்ய வசதியாக, கிறுஸ்தவர்கள், முசுலீம்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்களை இந்து என்ற சொல்லைக் கொண்டு பெயரிடுகிறார்கள். இங்குதான் வைதீக மதத்தை இந்து மதமாக உருவாக்குகிறார்கள். இதில் திலகரின் பங்கு முக்கியம்.

சொல்லளவில் இருந்த ’இந்து’-க்கு ஒரு தேசியம் வேண்டும் என்பதற்காக வேலை பார்க்கிறார் திலகர். பிள்ளையார் வழிபாட்டு முறையை பொதுமைப் படுத்துகிறார். 19-ம் நூற்றாண்டில் மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் இதனை அம்பலப்படுத்துகின்றனர். இந்து மதத்திலிருந்து சைவ மரபை வேறுபடுத்திக் கட்டமைக்கிறார். நல்லசாமி, சுப்பிரமணியம், மறைமலை அடிகள், திருவிக, ஆகியோர் சைவத்திற்கும் இந்து மதத்திற்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற கருத்தாக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும்.

தமிழகத்தில் தமிழை ஒழித்துக்கட்ட எடுக்கப்படும் முயற்சிகளை முடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

முழு உரையைக் காணொளியில் காண …

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க