ஸ்டெர்லைட் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போஸ்டர் ஒட்டினாலும் கைது செய்வோம் !
– தூத்துக்குடி போலீசின் அடக்குமுறை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக “சிறப்பு சட்டம் இயற்று, ஸ்டெர்லைட்டை அகற்று” என்று தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்து 1000 சுவரொட்டிகள் 22.10.18, 23.08.18 ஆகிய நாட்களில் தூத்துக்குடியின் நகர்ப்பகுதி, கிராமப் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டது.

அரசிடம் கோரிக்கையை முன்வைத்து சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்தது தூத்துக்குடி போலீசு. குறிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சின்ன சலசலப்பைக் கூட  பொறுத்துக் கொள்ள தூத்துக்குடி போலீசால் முடிவதில்லை. நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஒட்டிய சிறிது நேரத்திற்குள் கிழிக்கும் வேலையை தனிப்படை போட்டு செய்தது.

23.08.2018 அன்று காலையில் W.G.C சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளை மிரட்டி சுவரொட்டி ஒட்டுவதை நிறுத்தப் பார்த்தது. நிர்வாகிகளை போலீசு வேனில் ஏற்றுவதற்கும் முயற்சித்தது. உடனே கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரிராகவன் தலையிட்டு  பேசினார்.

அப்போது, அங்கிருந்த வடபாகம் காவல்நிலைய ஆய்வாளர், “நீங்கள் தலையிட வேண்டாம், எங்களுக்கு மேலிட ப்ரெசர் இருப்பதால்தான் இவ்வாறு செய்கிறோம், மற்றபடி நானும் உங்களுக்கு ஆதரவுதான்” என்று பேசியுள்ளார்.

அதற்கு “ ஸ்டெர்லைட் நிறுவனம் அரசால் மூடப்பட்ட நிறுவனம். அவர்கள் மக்களிடம் பணம் கொடுத்து கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தோம். ஆனால், அதற்கு எந்த FIR யும் நீங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதை மட்டும் தடுக்கிறீர்கள் என்று அரிராகவன் கேட்டுள்ளார். தொடர்ந்த வாக்குவாதத்தால் வேறு வழியின்றி நிர்வாகிகளை அழைத்துச் செல்வதை கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அதன் பிறகு பழைய பேருந்து நிலையத்தில் நண்பகல் நேரத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்களை மத்திய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வழக்கறிஞர்களும், கூட்டமைப்பு நிர்வாகிகளும் சென்று பேசியும் அவர்களை வெளியில் விடவில்லை. இன்ஸ்பெக்டர் வெளியில் சென்று விட்டார், மாலைதான் வருவார் என்று கூறி நேரத்தை கடத்துவதில் குறியாக இருந்துள்ளது போலீசு. அங்கேயே அரிராகவன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலரும் மாலை வரை காத்திருந்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் இல்லை. பிறகு மாலையில் கூட்டமைப்பு நிர்வாகிகளும், ஊர் மக்களும் 50 பேருக்கு மேல் போலீசு ஸ்டேசனுக்கு முன்பு கூடியுள்ளனர்.

இவ்வாறு மக்கள் கூடிய பிறகுதான் காவல்துறை தனது போக்கை மாற்றிக் கொண்டது. அதுவரை மேலிருந்து சொன்னால்தான் செய்ய முடியும் என்று சொன்னவர்கள், “திறந்த வெளியில் அழகு குலைப்பதை தடுக்கும் சட்ட”த்தின் கீழ் எப்.ஐ.ஆர். மட்டும் போடுகிறோம், அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

கூட்டமைப்பு நிர்வாகிகளும், மக்களும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆட்கள் குலசேகரம் திருவிழாவிற்கு பேனர் வைத்ததற்கும், கிராமங்களில் பணம் கொடுத்ததற்கும் என்ன வழக்கு போட்டுள்ளீர்கள்? தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு என்ன அடிப்படையில் தாசில்தாரும், காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளீர்கள்? ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதை மட்டும் ஏன் குற்றமாக சித்தரிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் இல்லை.

மாணவர்கள் மீது வழக்கு போட்டால், கருப்புக் கொடி காட்டுவோம், சாலை மறியலில் இறங்குவோம், மக்களைத் திரட்டுவோம் என மக்கள் அடுத்த கட்டத்திற்கு பேசத் தொடங்கியவுடன், நிலைமையின் தீவிரத்தை போலீசு உணர்ந்து கொண்டது.

இறுதியாக, நாங்கள் முறைப்படிதான் விசாரித்தோம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் மட்டும் எழுதிக் கொடுத்து செல்லுங்கள் என்று பணிந்து வந்தது.

பார்க்க:
ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி
தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

அதன் பிறகு மக்கள், போஸ்டரை கிழித்ததற்கு, கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடுத்தனர். கிழித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். முதலில வாங்க மறுத்தனர். போஸ்டரைக் கிழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என ஏற்கனவே ஏப்ரல் 24 மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முற்றுகைப் போராட்டத்தின் போது அப்போதிருந்த எஸ்.பி. வாக்குறுதி அளித்திருந்தார் என்பதை நினைவூட்டியபின் நிர்ப்பந்தத்தின் காரணமாக வாங்கிக் கொண்டனர்.

இரவு 9.00 மணியளவில் எஸ்.பி.-யைச் சந்திக்க கூட்டமைப்பில் இருந்து 50 பேர் சென்றனர். SP யை சந்திப்பதற்கு 5 பேரை அனுமதித்தனர். உள்ளே சென்ற கூட்டமைப்பு நிர்வாகிகள், நடந்தவற்றை கூறியுள்ளனர். ஸ்டெர்லைட் கம்பெனி ஊருக்குள் பணம் கொடுப்பதைப் பற்றியோ, குலசேகரத்தில் திருவிழாவிற்கு உதவிகள் செய்தது பற்றியோ, குளங்கள் தூர்வாருவது பற்றியோ எதுவும் தெரியாது. பேப்பரிலும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதைப்பற்றி எதுவும் தெரியாதாம். மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட தெருவுக்குள் போஸ்டர் ஒட்டுவது மட்டும் தெரிந்து விடுகிறதாம். மொத்த மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது என்பதும், எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இது கண்டனத்துக்குரியதாகும்.

அரசால் மூடப்பட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அதிகாரிகளையும் மதிக்காமல், சட்ட விரோதமாக நடந்து கொண்டாலும் அதனை தட்டிக்கேட்பதற்கு இயலாமல், கை கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறது. அதன் மூலம் மக்கள் பயந்து ஒடுங்கி விடுவார்கள், போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே மனக்கணக்கு போடுகிறது.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

ஆனால் அப்படி ஒதுங்கிப் போய்விட மாட்டோம், அடுத்த தலைமுறையைப் பாதுகாப்பதற்கும், 14 உயிர்கள் பறிபோனதற்கும் இறுதிவரை போராடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து கொண்ட தூத்துக்குடி மக்களின், போராட்ட உணர்வே இச்சம்பவத்தில் மாணவர்களை மீட்டுக் கொண்டு வரக் காரணம்.

எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும்,  மக்களின் துணை கொண்டு தடைகளை முறியடித்து, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கான இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்வதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உறுதியோடு நிற்கும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு

*****

ஸ்டெர்லைட் : பொதுவாக்கெடுப்பு நடத்து !
மக்கள் அதிகாரம் அமைப்பின் கண்டன சுவரொட்டி!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க