அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிக்கிறார்கள் தூத்துக்குடி பெண்கள். இந்த அரசு யாருக்கானது என வினவுகிறார்கள் - காணொளி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை விவரிக்கிறார்கள் ஸ்டெர்லைட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சமீபத்தில் ஆய்வுக்குழு ஒன்றை அமர்த்தியது. அக்குழு தூத்துக்குடிக்குச் சென்று ஆய்வு நடத்தியது. அங்கு ஆய்வுக்குழுவினரிடம் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை  மூட வேண்டும் என மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினர் சென்னையில் 27.09.2018 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இது.

”ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மக்கள் பாதிப்பு குறித்து மாநில அரசு எவ்வித அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஆலையை மூடியிருக்கிறது மாநில அரசு” என்கின்றனர் இம்மக்கள்.

படிப்படியாக தண்ணீரின் தன்மை மாறியிருப்பதையும், தங்களது குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் விவரிக்கின்றனர். ஸ்டெர்லைட் நிர்வாகமோ அங்கு பணிபுரியும் நபர்களுக்குப் பணம் வழங்கி ஸ்டெர்லைட்டினால் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனக் கூற வைக்கிறது.

”கடந்த மே 22 அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட, படுகாயத்திற்குள்ளாக்கப்பட்ட, கைது செய்யப்பட்டவர்களின் தியாகத்திற்கு பதில் என்ன ?” எனக் கேட்கின்றனர் இம்மக்கள்.

சுற்றுவட்டாரப் பகுதி மக்களை பணம் கொடுத்து எப்படியாவது வாயை அடைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது ஸ்டெர்லைட். பெண்கள் சிலரை பணிக்கமர்த்தி சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் சென்று மகளிர் சுய உதவிக் குழுவினரைச் சந்தித்து ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆள் பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறது.

அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைத்துத் தருவதாகவும் வாக்களித்திருக்கிறது. இவனே தண்ணீரையும் மாசுபடுத்துவான், இவனே எங்களுக்கு மருத்துவக் குழுவையும் அமைத்து வைத்தியம் பார்ப்பானா ? எனக் கொதிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கைகளில் எங்களை ஏமாற்ற நினைக்கிறது இந்த அரசு. நாங்கள் இறுதி வரையில் – ஸ்டெர்லைட்டை மூடும் வரையில் போராடுவோம். இந்த அரசாங்கம் மக்களுக்காக இருக்கிறதா ? இல்லை, ஸ்டெர்லைட்டுக்காக இருக்கிறதா ? என வினவுகின்றனர் இம்மக்கள்.

தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள காணொளியைப் பாருங்கள் பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க