பாதிக்கப்பட்டவனையே குறை கூறும் சமுதாயம் | ஃபருக் அப்துல்லா

நீ ஏன் முகத்துக்கு பவுடர் போட்டுக்கிட்டு போற.. நீ வெரசா நடந்து வந்துக்கிட்டே இரு.. நீ எதுக்கு அதெல்லாம் காது கொடுத்து கேக்குற.. ஆம்பளைனா அப்டிதான் இருப்பான். நீ ஒழுங்கா நடந்து வா...

பாதிப்பை தந்தவனை விடுத்து பாதிக்கப்பட்டவனை குறை கூறும் சமுதாயமாக நாம் இருப்பதால் ஒரு குற்றம் நடக்கும் போது அதில் பாதிக்கப்பட்டவர் கூட இதில் நமக்கு நியாயம் கிடைக்காது மீறி இன்னும் நாம் தான் அதிக பாதிப்படைய நேரும் என்பதால் அந்த சூழ்நிலையை பொறுத்துக்கொண்டு கடந்து விடுகின்றனர்.

நாம் குழந்தை பருவத்தில் நடக்கத்தொடங்கும் காலத்தில் இருந்தே இந்த விக்டிம் ப்ளேமிங் நமக்கு எப்படி கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று பாருங்கள்..

ஒரு கதவு மோதி குழந்தை கீழே விழுந்தால்..

குழந்தையிடம் நாம்.. இது உன் தவறு.. நீ சரியாக பார்த்து நடக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதில்..

அப்பாவியான கதவை அடித்து..

ஏ.. குழந்தைய இடிச்சுட்டியே.. அடி..அடி.
என்று அந்த கதவை அடித்து குழந்தைக்கு மறைமுகமாக விக்டிம் ப்ளேமிங்கை விதைக்கிறோம்

அதே குழந்தை பள்ளிக்கு படிக்க செல்கிறது.. கூட படிக்கும் மாணவர்களில் ஒருவன்.. தன்னை அடித்து விட்டான் என்று வீட்டாரிடம் வந்து கூறுகின்றது. நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏன் அடித்தான் ? என்று கேட்க வேண்டும். அதை விடுத்து.. நீ அவன அடிச்சுருப்ப அதான் அவன் உன்ன அடிச்சுருக்கான் . இதையெல்லாம் பெருசா ஆக்காத.. என்று அவன் கூற வருவதைக் கூட கேட்காமல் நாமே ஒரு முடிவு செய்கிறோம்.

சாலையை கடக்கும் போது ஒரு இருசக்கர வாகன ஓட்டி , மது அருந்தி நம்மை ஏற்றினாலும் .அதை வீட்டில் வந்து கூறினால்..

திட்டு விழுவதோ அந்த அடிப்பட்டவனுக்கு தான்..
“நீ ஒழுங்கா ரோட்ட பாத்து போயிருக்க மாட்ட. அதான் ஏத்திருக்கான். நீ இனிமே ஒழுங்கா போடா”
என்று தான் அறிவுரை வருகிறது.

இதே பெண் பிள்ளைகள் விசயத்தில் நடப்பது என்ன?

பள்ளியிலிருந்து நடந்து வருகையில் ஆண்கள் சிலர் பெயர் சொல்லி கேலி செய்கிறார்கள் என்று வீட்டில் சொன்னால் “யார்டி அவன்.. நீ ஏன் முகத்துக்கு பவுடர் போட்டுக்கிட்டு போற.. நீ வெரசா நடந்து வந்துக்கிட்டே இரு.. நீ எதுக்கு அதெல்லாம் காது கொடுத்து கேக்குற.. ஆம்பளைனா அப்டிதான் இருப்பான். நீ ஒழுங்கா நடந்து வா” என்று கூறும் வீட்டார் உண்டு.

பேருந்துகளில் நடக்கும் சீண்டல்கள், அலுவலகங்களில் நடக்கும் அத்துமீறல்கள்
இன்னும் குடும்பங்களுக்குள்ளேயே நடக்கும் அத்துமீறல்களை கூட வெளியே கூறினால் தாம் தான் அறிவுரை வழங்கப்படுவோம் என்பது தெரிந்தே பலரும் வாய் மூடி வாழ்கின்றனர்.

இன்னும் சிலர் தங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரலோ புகாரோ கொடுத்தால்.. அந்த பெண்ணின் ஒழுக்கம் முதலில் கேள்விக்குட்படுத்தப்படும். “இவ.. ஒரு மாதிரி டைப்.. எப்பவுமே யாரையாவது சீண்டிக்கிட்டே இருப்பா” என்று கூறுவார்கள்..

உண்மையில் சீண்டியது யாரோ.. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணிற்கு தான் இந்த பட்டம் சூட்டப்படும் உடனே அவள் செய்யும் உடை சிகை முக அலங்காரங்கள் கேள்விக்குட்படுத்தப்படும். “இவ கவர் பண்ற மாதிரி மேக் அப் போட்டுட்டு வரால்ல . அப்ப அப்படி தான் நடக்கும்” என்று பெண்களே பேசுவதை நான் கேட்டதுண்டு.

படிக்க:
கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்து விடப்பட்ட வங்கிகள் | தோழர் விஜயகுமார் உரை
மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

அலுவலகத்துக்கு நல்ல முறையில் ஒப்பனை செய்து வருவது ஒரு குத்தமா?
மேலும் அந்த அத்துமீறல்காரர்களுக்கு பயந்து முடி கூட வாராமல்.. பவுடர் அடிக்காமல் கூட அலுவலகத்துக்கு வரும் பல பெண்களை நான் கடந்தே வந்துள்ளேன்.

தனக்கு கீழ் நிலையில் உள்ள பெண்களை சீண்டுவதில் இந்த அத்துமீறல்காரர்களுக்கு அலாதி ருசி. காரணம் தாங்கள் அத்துமீறும் அந்த பெண்கள் அல்லது ஆண்கள் தங்கள் தயவின்றி அந்த அலுவலகத்தில் வாழ இயலாது என்பதை அறிந்து கொண்டு இவ்வாறு செய்கின்றனர்.

உடலை தொட்டு செய்யும் சீண்டல்கள் ஒரு வகை என்றால்.. பேச்சினால் ஒருவரை சீண்டல் செய்து வலைவிரிக்கும் வேலையும் நடக்கும். இதற்கு அடிபணியாதவர்களை அடிமாடுகள் போல வேலை வாங்குவது.. அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளை கூட மறுப்பது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார்கள்

பெண்களும் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி தானும் உழைத்து குடும்பத்தின் வருவாயை பெருக்கவே தங்களின் படிப்புக்குட்பட்ட வேலையை செய்ய வெளியே வருகின்றனர். அவ்வாறு வெளியே வருவதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு விளக்கம் கூறி.. அனுமதி பெற்று வருகிறார்கள் என்றும் நான் அறிவேன்.

ஆனால் வந்த இடத்தில் இது போன்ற மிருகங்கள் இருப்பதையும் அவை தன்னிடம் அத்துமீறுகின்றன என்பதையும் வீட்டில் கூறினால்..

உடனே வரும் பதில்
“நீ வேலையை விட்டு நின்று விடு.. இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்.. இதெல்லாம் நமக்கு தேவையில்லை” என்று ஒரே அடியாக அவளது கனவுக்கு சமாதிகட்டப்படும்

ஆனால் அந்த அத்துமீறிய மிருகம் தொடர்ந்து அங்கேயே இருந்து சிக்கும் ஆடுகளை புசித்தே வாழும் இன்னும் இது பெண்களுக்கு மட்டும் நடக்கும் கதை அல்ல. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு..

ஒரு அலுவலகத்தில் தனது வேலையை சிறப்பாக செய்யும் லஞ்சம் வாங்காத கை சுத்தமான ஒரு ஆணுக்கு அவன் தனக்கு கீழ் வேலை செய்யும் அனைவரும் தன்னைப் போல நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரே காரணத்திற்காக மொட்டைக்கடிதாசிகள் மூலம் பலருக்கு அவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படும்

இன்னும் சில இடங்களில் பெண்ணே முன் வந்து தனக்கு அந்த ஆண் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று பொய் புகார் கொடுத்த விஷயங்களையும் நான் கடந்தே வந்துள்ளேன்.

இது போன்ற பொய் புகார்களால் பாதிக்கப்பட்ட பல நேர்மையான அரசு அதிகாரிகளையும் நான் அறிவேன். அதே நேரத்தில் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல பெண்களை வலைக்குள் இழுத்து அவர்களுக்கு இணங்க வைத்தவர்களையும் அறிவேன். ஆகவே இந்த மீ டூ விசயத்தில் பாதிக்கப்பட்டது ஆணோ பெண்ணோ அவர்கள் கூற வரும் விசயங்களை காது கொடுத்து முதலில் சமுதாயம் கேட்க வேண்டும்.

ஒருவர் புகார் கொடுத்து விட்டதாலேயே குற்றம் சாட்டப்பட்டவரை தண்டைக்குட்படுத்த இயலாது. முறையான நீதி விசாரணை வேண்டும். இது போன்று தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை கூறுபவர்களை இந்த சமூகம் அரவணைக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?

இனியும் இது போன்ற ப்ரிடேட்டர்களிடம் சிக்கினால் அவர்களை கன்னி வைத்து பிடிக்க வேண்டும். சாட்சியங்களோடு நிரூபித்து தண்டனை வாங்கித்தர வேண்டும்.
இதற்கு சிறிய கேமரா மற்றும் மைக் உடன் கூடிய பேனா போதுமானது என்று கருதுகிறேன். தன்னிடம் ஒருவர் அத்துமீறுகிறார் என்றால் அவரது அடுத்த நடவடிக்கைகளை நாம் அவரது அனுமதி இன்றி படம் பிடிப்பதில் தவறே இல்லை.

சாட்சியங்கள் மட்டுமே நீதிமன்றங்களில் பேசும். நீதியை பெற உதவும். அலுவலகங்கள் அனைத்திலும் சி.சி.டி.வி. கேமராவை கட்டாயமாக்கலாம்.

பெண்கள் ( சில இடங்களில் ஆண்களும்) தங்கள் கைகளில் இந்த மைக் / கேமராவுடன் கூடிய பேனாவை வைத்துக்கொள்ளலாம். அல்லது பல நேரங்களில் ஸ்மார்ட் போன் போதுமானது. தங்களுக்கு வரும் அத்துமீறல் கால்களை ரெகார்ட் செய்ய வேண்டும்.

இப்படி ஆதாரங்களை வலுவாக சேர்த்து அந்த மிருகங்களை ஓட ஓட விரட்டினால் மட்டுமே. நிம்மதியான வேலை செய்யும் அலுவலகம் பெண்களுக்கு கிடைக்கும்.

இனியும் விக்டிம் ப்ளேமிங் செய்யாத சமுதாயமாக நாம் மாறினால் பத்து வருடம் பதினைந்து வருடம் கழித்து தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை பெண்கள் கூறும் நிலை இருக்காது. பிரச்சனைகள் அவ்வப்போது தீர்க்கப்படும்..

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.