மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 27 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி

”உலக தொழிலாளிகள் நீடூழி வாழ்க!” என்று கோசமிட்டான் பாவெல்.

உவகையும் சக்தியும் நிறைந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கிளறும் ஜெயகோஷம் எதிரொலித்து விம்மியது.

தாய் நிகலாயின் கரத்தையும் வேறு யாரோ ஒருவனுடைய கரத்தையும் பற்றிப் பிடித்துக்கொண்டாள். கண்ணீர் முட்டித் ததும்பத் தொண்டை அடைத்துத் திணறினாள் அவள்; எனினும் அவள் கூச்சலிடவில்லை. அவளது முழங்கால்கள் நடுநடுங்கின. துடிதுடிக்கும் தன் உதடுகளை அசைத்து அவள் ஏதோ முணுமுணுத்தாள்.

“என் அருமைப் பிள்ளைகளே……”

நிகலாவின் அம்மை விழுந்த முகத்தில் ஒரு பரந்த புன்னகை பளிச்சிட்டுத் தோன்றியது. கொடியைப் பார்த்தவாறே அவன் எதோ முணுமுணுத்துக் கொண்டு அதை நோக்கிக் கையை நீட்டினான். திடீரென்று அதே கையால் தாயின் கழுத்தைச் சுற்றி வளைத்து அவளை முத்தமிட்டான். பிறகு கடகடவென்று சிரித்தான்.

“தோழர்களே!” என்று அந்தக் கூட்டத்தினரின் கர்ஜனைக்கிடையிலே குறுக்கிட்டு அமைதியாகச் சொன்னான் அந்திரேய்; “தோழர்களே! இன்று ஒரு புதிய கடவுளின் பேரால் அறிவும் ஒளியும் தரும் புதிய ஆண்டவனின் பேரால், சத்தியமும் நன்மையுமே உருவான சாமியின் பேரால் நாம் ஒரு அறப்போர் தொடங்கியிருக்கிறோம். நமது இறுதி லட்சியம் வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் நமக்குக் கிடைக்கவிருக்கும் முள் கிரீடமோ(1) கையெட்டுத் தூரத்தில் தான் இருக்கிறது. சத்தியத்தின் வெற்றியில், உண்மையின் வெற்றியில் எவருக்கேனும் நம்பிக்கை குறைவாயிருந்தால், இந்தச் சத்தியத்துக்காகத் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்ய எவருக்கேனும் தைரியம் அற்றிருந்தால், தன்னுடைய சுய பலத்திலேயே எவருக்கேனும் அவநம்பிக்கையிருந்தால், துன்பத்தைக் கண்டு எவரேனும் அஞ்சினால், தயை செய்து அவர்கள் ஒருபுறமாக ஒதுங்கி நிற்கட்டும். நமது வெற்றியிலே நம்பிக்கை கொள்பவர்களை மட்டுமே நாம் கேட்டுக் கொள்கிறோம். அறைகூவல் விடுக்கிறோம். எங்களது லட்சியத்தைக் காண முடியாதவர்களுக்கு எங்களோடு அணிவகுத்து முன்னேறுவதற்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்குப் பின்னால் துயரம்தான் காத்து நிற்கும். எங்களது அணிவகுப்பில் சேருங்கள். தோழர்களே! சுதந்திர மக்களின் விழா நாள் நீடூழி வாழ்க! மே தினம் நீடூழி வாழ்க!”

கூட்டம் மேலும் அதிகரித்துக் குழுமியது. பாவெல் கொடியைத் தூக்கிப் பிடித்தான்; அவன் அதை உயரத் தூக்கியவாறு முன்னேறிச் சென்ற போது அந்தக் கொடியில் சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்தது: அந்தக் கொடி உவகையும் ஒளியும் நிறைந்து புன்னகை செய்தது.

பியோதர் மாசின் பாட ஆரம்பித்தான்.

போதும். போதும்! நேற்றையுலகின்
பொய்மை தன்னைப் போக்கவே……

பல்வேறு குரல்கள் அவனோடு சேர்ந்து, அந்தப் பாட்டின் அடுத்த அடியைப் பாடின;

பாத மண்ணை உதறித் தள்ளிப்
படையில் சேர வருகுவீர்

தாய் மாசினுக்குப் பின்னால் நடந்து வந்தாள். அவளது உதடுகளில் உவகை நிறைந்த புன்னகை பளிச்சிட்டது; அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் தன் மகனின் தலையையும், கொடியையும் அவள் மிகவும் சிரமப்பட்டு ஏறிட்டுப் பார்த்தாள். அவளைச் சுற்றி எங்குப் பார்த்தாலும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களும் பிரகாசமான கண்களுமே தெரிந்தன; அந்த முகங்களுக்கும் கண்களுக்கும் முன்னால் அவளது மகன் பாவெலும் அந்திரேயும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் பாடிக்கொண்டே செல்வதை அவளால் கேட்க முடிந்தது. அந்திரேயின் இனிமையான குரல் பாவெலது கனத்த குரலோடு கலந்து கொண்டிருந்தது,

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்!
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

மக்கள் அந்தச் செங்கொடியை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். ஓடி வரும்போதே அவர்கள் உற்சாகத்தோடு சத்தமிட்டார்கள், பின்னர் அவர்களும் அந்தப் பாட்டை உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்கள். எந்தப் பாடலை அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குள் வெளிக்குத் தெரியாமல் பாடி வந்தார்களோ, அதே பாடல் இன்று தெருவில் எந்தவிதத் தங்குத் தடையுமற்று, பிரம்மாண்டமான அசுர வேகத்தோடு பொங்கிப் பிரவகித்து ஒலித்தது. கட்டுப்படுத்த முடியாத துணிவாற்றலோடு ஒலித்து விம்மியது. மேலும் அந்தப் பாடல் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் நெடிய பாதையில் வந்து கூடும்படி மக்களை அறைகூவி அழைத்தது. அந்தப் பாதை எவ்வளவு கரடு முரடான பாதையென்பதையும், அவர்களுக்கு வெளிப்படையாகச் சொல்லியது. அந்தப் பாடலின் நிதானமான செந்தழல் உளுத்து ஒடாகி உதவாக்கரையான சகலவற்றையும், அழுகி இறுகி அடைந்து போன சம்பிரதாய உணர்ச்சிகளின் குப்பை கூளங்களையும், மக்களின் மனத்திலே ஊடாடும் புதியதின் பயபீதியையும் பற்றிப் பிடித்து, அவற்றைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பொசுக்கித் தள்ளியது.

படிக்க:
ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஏதோ ஒரு முகம் திடீரென்று தாயின் அருகே வந்து எட்டிப் பார்த்தது. பிறகு நடுநடுங்கி உடைத்துப்போன குரலில் கேட்டது,

“மீத்யா! நீ எங்கே போகிறாய்?”

”அவன் போகட்டும்” என்று சொன்னாள் தாய். “நீ அவனைப்பற்றிக் கவலைப்படாதே. நானும் கூடத்தான் முதலில் பயந்து போனேன். அதோ முன்னால், கொடியைப் பிடித்துக் கொண்டு போகிறான் பார். அவன் தான் என் மகன்!”

“ஏ முட்டாள்களே! எங்கேயடா போகிறீர்கள்? அங்கே சிப்பாய்கள் நிற்கிறார்களடா!”.

நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த அந்தப் பெண் பிள்ளை தாயின் கரத்தைத் தனது எலும்புக் கரத்தால் திடீரெனப் பற்றிப் பிடித்துக்கொண்டு சத்தமிட்டாள்:
”ஆஹா! அவர்கள் பாடுவதைக் கேளம்மா. என் மகனும் கூடப் பாடுகிறான்!”

”நீ ஒன்றும் பயப்படாதே” என்று சொன்னாள் தாய்; ”இது ஒரு புனிதமான காரியம். நினைத்துப்பார். கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால், கிருஸ்துவே இருந்திருக்கமாட்டார்!”

இந்த எண்ணம் அவள் மனத்தில் திடீரென்று பளிச்சிட்டுத் தோன்றியது. அந்த எண்ணத்தில் பொதிந்திருந்த தெளிவான, எளிதான உண்மையை உணர்ந்து, அவள் ஒரே புளகாங்கிதம் எய்தினாள். தனது கையை அழுத்தமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள்.

“ஆமாம். கிறிஸ்துவுக்காக மக்கள் சென்று செத்திராவிட்டால் கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்!” என்று வியப்பு நிறைந்த புன்னகையோடு திரும்பவும் அதைக் கூறிக்கொண்டாள்.

சிஸோவ் அவள் பக்கமாக வந்தான்.

“இன்று பகிரங்கமாகவே புறப்பட்டுவிட்டீர்களா?’ என்று சொல்லிக்கொண்டே அவன் தன் தொப்பியை எடுத்து அந்தப் பாட்டின் சத்தத்திற்குத் தக்கவாறு ஆட்டிக்கொண்டான். ”பாட்டா பாடுகிறார்கள்! ஆஹா, இது எவ்வளவு அருமையான பாட்டு, அம்மா!”

பேரணியில் சேர வீரர்
ஜாரரசன் கேட்கிறான்;
ஜாரரசன் போர் நடத்தத்
தாரும் உங்கள் மக்களை!

“இவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பயமில்லையே!” என்றான் சிஸோவ்; “செத்துப்போன என் மகன் மட்டும் இருந்தால்…”

தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது; எனவே அவள் வேகமாகச் சொல்ல முடியாமல் பின் தங்கிவிட்டாள். ஜனக்கூட்டம் அவளை நெருக்கித்தள்ளி, ஒரு வேலிப்புறமாக நெட்டித் தள்ளியது. அவளைக் கடந்து ஒரு பெரிய ஜனத்திரள் அலைமோதிக்கொண்டு முன்னேறியது. அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அதைக் கண்டு அவள் ஆனந்தமுற்றாள்.

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஏதோ ஒரு பிரம்மாண்டமான பித்தளையாலான எக்காளம் தனது அகன்ற வாயின் வழியாக, அந்தப் பாடலைப் பொழிந்து தள்ளுவது போலவும், அந்த எக்காள நாதத்தைக் கேட்டு ஜனங்கள் விழித்தெழுவது போலவும் விழித்தெழுந்து போருக்குக் கிளம்புவது போலவும் தோன்றியது. மேலும் அந்த எக்காள் முழக்கம் மற்றவர்களின் உள்ளத்தில், ஏதோ ஒரு இனந்தெரியாத இன்ப உணர்ச்சியையும் புதுமையையும் ஆர்வம் மிகுந்த குறுகுறுப்பையும் உண்டாக்குவது போலவும் தோன்றியது. ஒரு பக்கத்தில் அந்த நாதம் சிலர் மனத்தில் தைரியமற்ற நம்பிக்கைகளுக்கு இடம் கொடுத்தது. சிலர் மனத்தில், அவர்களது உள்ளத்தினுள்ளே நெடுங்காலமாகப் புழுங்கித் தவித்த கோப உணர்ச்சியையெல்லாம் மடை திறந்த வெள்ளமாகத் திறந்து விட்டுக்கொண்டிருந்தது.

காற்றிலே அசைந்தாடும் அந்தச் செங்கொடியையே எல்லோரும் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“அதோ அவர்கள் போகிறார்கள்!” என்று யாரோ தன்னை மறந்த வெறிக்குரலில் கத்தினான். “தம்பிகளா! நீங்கள் அழகாயிருக்கிறீர்களாடா!”

அந்த மனிதனின் உள்ளத்தில் வார்த்தைகளின் சக்திக்கு மீறி வாய்விட்டுச் சொல்ல முடியாத எதோ ஒரு உணர்ச்சி மேலிட்டுப் பொங்கியது. எனவே அந்த உணர்ச்சியை வெளியிடுவதற்காக அவன் ஏதோ வஞ்சினமாகச் சபதம் சொல்லிக்கொண்டான். ஆனால் சூரிய உஷ்ணத்தால் கலைக்கப்பட்ட நாகப்பாம்பைப் போல் இருண்டு போன குருட்டுத்தனமான அடிமைத்தனம் நிறைந்த குரோத உணர்ச்சி புஸ்ஸென்று சீறி விஷ வார்த்தைகளைக் கக்கிற்று.

“மதத் துரோகிகள்!” என்று ஒரு வீட்டு ஜன்னலிலிருந்தவாறு தனது முஷ்டியை ஆட்டிக்கொண்டே ஒருவன் சத்தமிட்டடான்.

“சக்கரவர்த்திக்கு எதிராக, ஜார் மகாராஜனுக்கு எதிராகக் கிளம்புவதா? கலகம் செய்வதா?” என்று கூரிய குரல் தாயின் காதில் மாறி மாறி ஒலித்தது.

ஆணும் பெண்ணுமாக ஜனக்கூட்டம் தாயைக் கடந்து செல்லும்போது, அவள் கலவரமடைந்த பல முகங்களைக் கண்டாள். அந்த ஜனத்திரள் உருகி வழியும் எரிமலைக் குழம்பு போல் மேலும் மேலும் பொங்கி வந்தது. அந்தப் பாட்டினால் தனக்கு முன்னேயுள்ள சகல தடைகளையும் துடைத்துத் தூர்த்து, தனது மகத்தான சக்தியினால், நான் செல்லும் பாதையைத் தங்கு தடையற்றதாகச் செய்யும் அந்தப் பாட்டினால் – ஜனங்கள் கவர்ந்திழுக்கப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.

கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து, அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை.

தூரத்திலே தலைக்கு மேலாக நிமிர்ந்து தோன்றும் அந்தச் செங்கொடியை அவள் பார்த்தபோது, தன் மனக்கண் முன்னால் தன் மகனது முகத்தையும் – அவனது தாமிர நிறமான நெற்றியும், நம்பிக்கையும் ஒளியாகப் பிரகாசமுற்ற அவனது கண்களும் – அவளது மனக்கண்ணில் தோன்றின.

கூட்டம் முழுவதும் அவளைக் கடந்து முன்னேறிச் சென்ற பின், அவள் அந்தக் கூட்டத்தின் பின்னால் வந்த ஜனங்களைப் பார்த்தாள். அவர்கள் அவசரம் ஏதுமின்றி சாவதானமாக நடந்து வந்தார்கள். அந்த அணிவகுப்பினால் நேரவிருக்கும் அபாயத்தைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் மாதிரி அதை எதிர்நோக்கி, விருப்பற்றுத் திருக்கத் திருக அங்குமிங்கும் பார்த்தவாறு அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கும் ஏதேதோ விஷயங்கள் ஏற்கெனவே தெரிந்திருந்த பாவனையில் தீர்மானமாகப் பேசிக்கொண்டார்கள்.

”பள்ளிக்கூடத்திலே ஒரு பட்டாளம் தங்கியிருக்கிறது, இன்னொரு பட்டாளம் தொழிற்சாலையிலே தயாராய்க் காத்திருக்கிறது.”

”கவர்னர் வந்துவிட்டார்.”

அப்படியா?” “அவரை என் கண்ணாலேயே பார்த்தேன். இப்போதுதான் வந்தார்.”

”அவர்கள் நம்மைக் கண்டு பயப்படத்தான் செய்கிறார்கள். யோசித்துப் பார். இல்லையென்றால், கவர்னரும் சிப்பாய்களும் எதற்கு?” என்று ஒருவன் சொன்னான்.. சொல்லிவிட்டு உற்சாகத்தோடு ஏதோ வர்மம் கூறிக்கொண்டான்.

“அருமைப் பிள்ளைகளா!” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.

ஆனால் அவள் கேட்ட வார்த்தைகள் உயிரற்று உணர்வற்று ஒலிப்பவைபோல் இருந்தன. எனவே அந்தக் கூட்டத்தினரிடமிருந்து விலகிப் போவதற்காக நடையை எட்டிப்போட்டாள். அவர்கள் மிகவும் மெதுவாக ஆடியசைந்து நடந்து வந்ததால், அவள் அவர்களை முந்தி முன்னேறிச் செல்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை .

திடீரென்று அந்த ஊர்வலம் எதனோடோ அதி கேவமாக மோதிக் கொண்டது போலத் தோன்றியது. அந்த அணிவகுப்பு முழுவதுமே திடுக்கிட்டுப் பின்னடித்தது. பய பீதி நிறைந்த கசமுசப்புக் குரல் லேசாக எழுந்து பார்த்தது. அந்தப் பாட்டும் கூட நடுநடுங்கி ஒலித்தது. இருந்தாலும் அந்த நடுக்கத்தைப் போக்குவதற்காக, சிலர் மிகவும் உரத்த குரலிலும், துரித கதியான சப்தத்திலும் அதைப் பாடத் தொடங்கினார்கள். ஆனால், மீண்டும் அந்தப் பாட்டு உள்வாங்கி மங்கியது. ஒருவர் பின் ஒருவராக அந்த மக்கள் பாடுவதை நிறுத்தத் தொடங்கினார்கள். அந்தப் பாட்டைப் பழைய உச்ச நிலைக்கு கொண்டு வருவதற்காக, சிலர் மட்டும் உத்வேகம் நிறைந்தவாறு பாடும் குரல் மட்டும் கேட்டது.

பட்டினியும் பசியுமாகப்
பாடுபடும் தோழர்காள்…..
துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

ஆனால் இந்தப் பொது முழக்கத்தில் ஒத்துழைப்பும் இல்லை உறுதி பெற்ற நம்பிக்கையும் இல்லை. ஏற்கெனவே அவர்களது குரல்களில் பயபீதி புரையோடிவிட்டது.

முன்புறத்தை தாயினால் பார்க்க முடியாததாலும் என்ன நேர்ந்துவிட்டது என்பதை அறிய முடியாததாலும் அவள் அந்தக் கூட்டத்தினரை முட்டித் தள்ளிக்கொண்டு, கூட்டத்தினூடே, புகுந்து முன்னே செல்ல முனைந்தாள். அவள் முன்னேற முன்னேற ஜனக்கூட்டம் அவளைப் பின்னடித்துத் தள்ளியது; அவர்களில் சிலர் முகத்தைச் சுழித்தார்கள். சிலர் தங்கள் தலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். சிலர் அசட்டுத்தனமாய்ப் புன்னகை செய்தார்கள்; இன்னும் சிலர் கேலியாகச் சீட்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் அவர்களது முகங்களைப் பார்த்தாள். அவளது கண்கள். வினாத் தொடுத்தான். வேண்டுதல் செய்தன. அழைப்பு விடுத்தன.

”தோழர்களே!” பாவெலின் குரல் கேட்டது. “ராணுவ வீரர்களும் நம்மைப்போல் மனிதர்கள்தான் அவர்கள் தம்மைத் தொடமாட்டார்கள்! அவர்கள் எதற்காக நம்மைத் தொட வேண்டும்? எல்லோருக்கும் பயன்பெறக்கூடிய உண்மையை நாம் எடுத்துக் கூறுவதற்காகவா? அந்த உண்மை நமக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு அவர்களுக்கும் தேவை. அந்தத் தேவையை அவர்கள் இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கொள்ளையும் கொலையும் நடத்தும் கொடியின் நிழலிலே நின்று அவர்கள் நம்மை எதிர்ப்பதைக் கைவிட்டு, சுதந்திரக் கொடியான நமது கொடியின் கீழ் வந்து, நம்முடன் கையோடு கைகோத்து, அணிவகுத்து நிற்க, அவர்களும் வந்து சேருவதற்கு இன்னும் அதிக நாள் இல்லை. அவர்கள் இந்த உண்மையை உணரும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் நமது முன்னணியைவிடாது முன்னேறிச் செல்ல வேண்டும். முன்னேற வேண்டும். தோழர்களே! முன்னேற வேண்டும்!”

படிக்க:
எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

பாவெலின் குரல் உறுதி நிறைந்து ஒலித்தது. அவனது சொற்கள் தெளிவாகவும் கூர்மையாகவும் ஒலித்தன. எனினும், கூட்டம் கலைந்துவிட்டது. ஒருவர் பின் ஒருவராக அணி வகுப்பிலிருந்து வெளியே வந்து, வீடுகளை நோக்கி வேலிப்புறமாக ஒதுங்கி நழுவிச் செல்லத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊர்வலம் கூரிய மூக்குடனும் அகன்ற உடலுடனும் இருப்பது போலத் தோன்றியது. அதன் தலைப்புறத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான், அவனுக்கு மேலாக, தொழிலாளி மக்களின் செங்கொடி பிரகாசமாக ஒளிசிதறிப் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் நிலையைப் பற்றி வேறொரு உவமை கூடச் சொல்லலாம். ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) கிறிஸ்துவுக்கு முள் கீரிடம் சூட்டப்பட்டது. இங்கு உவமையாகக் கையாளப்படுகிறது. – (மொ -ர்.)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க