பரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் கேரளத்தில் காலூன்றலாம் என ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் பலமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தியது. பாஜக தாளம் போடும் ஊடகங்களின் மூலம் வெறுப்பைத் தூண்டும் போராட்டங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டன. சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத் தேர்தலில், சபரிமலை பகுதியில் உள்ள பந்தளம் பஞ்சாயத்தில் பாஜக வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12.  ஓட்டரசியலில் மண்ணைக் கவ்வினாலும் பாஜக தனது சபரிமலை அரசியலை விடுவதாகத் தெரியவில்லை. விடாமுயற்சியின் பலனாக சமூக ஊடகமான ட்விட்டரில் ‘பல்பு’ வாங்கியிருக்கிறது கேரள பாஜக!

படிக்க:
♦ சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்
♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

கடந்த ஞாயிறு (டிசம்பர் 2) அன்று கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு எதிராக பாஜகவின் செங்கனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள பாஜகவின் டிவிட்டர் தளத்திலிருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. இந்த வீடியோவில் எவரும் போராட்டம் செய்யவில்லை என்பதோடு, பிணராயி விஜயனின் கார் செல்லும்போது குறுக்கே இரண்டு பேர் ஓடுகிறார்கள். சாலையும் காலியாகவே உள்ளது. இது டிவிட்டரில் பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாகேரள பாஜகவின் ட்விட்டை ரீ-ட்விட் செய்து, “ கண்ணிமைக்கும் நேரத்தில் நான் எதையாவது பார்க்கத் தவறிவிட்டேனா?” என பதிவிட்டிருந்தார்.

சிலர், இந்த ட்விட்டர் பதிவு உண்மையில் கேரள பாஜகவினர் பதிவிட்டதுதானா? எனவும் வினவினர். பலர், கேரள பாஜக தன்னைத் தானே கேலி செய்துகொள்வதாகவும் எழுதினர்.

“கேலிக்குரிய கேரள பாஜகவின் வீடியோ, சங்கிகள் எத்தகைய கோழைகள் எனக் காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் பிரிட்டீசாரை எதிர்த்து போராடவில்லை. அமித் ஷாவின் வாகனத்தை வழிமறித்து கறுப்புக்கொடி காட்டிய நேஹா யாதவ்-விடம் சங்கிகள் தைரியத்தை கற்றுக்கொள்ளட்டும். தன்னுடைய தைரியமான அரசியல் செயல்பாட்டுக்காக நேஹா சிறைக்குச் சென்றார்” என்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஸ்ரீவத்சவா.

கேரளத்தில் ட்ரோல் செய்கிறவர்களுக்கு கேரள பாஜக தினமும் விசயங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறது
வாழ்க்கை கலையை பிரதிபலிக்கிறது
மேலும் ஒரு மலையாள கலைப்படம். அமைதியாக பார்க்கவும்.

பலருடைய கேலியின் காரணமாக கேரள பாஜக, தனது ட்விட்டை நீக்கிவிட்டது. 12 வாக்கு வாங்கியது, தன்னைத் தானே கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது கேரள பாஜக.

சபரிமலையில் போராடுகிறவர்கள் மீது பொய்யாக வழக்கு போடுவதாக வழக்கு தொடுத்த பாஜகவைச் சேர்ந்த சோபா சுரேந்திரனுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இப்படி செல்லுமிடமெல்லாம் ‘பலத்த அடி’ வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மிதப்பாகத் திரிகிறது காவி கும்பல்.

செய்தி ஆதாரம்:
♦ BJP in kerala trolled over goof video of protest against Pinarayi vijayan