மிழகத்தில் இயற்கை வளமான மழைநீரை அறுவடை செய்து, சிறந்த தொழில்நுட்பங்களின் அடிப்படையில் ஏரிகள் அமைத்துப் பாசனத்திற்கு வித்திட்ட வரலாற்றினை சங்ககாலம் தொட்டு இன்று வரை பதிவு செய்வதே இந்நூலின் முக்கிய நோக்கம். சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய ஏரிகள் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வருவதுடன் அவை எவ்விதச் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பது வியக்கத்தக்கது. ஏரிப்பாசனப் பழமையில் புதுமை உண்டென்பதனை எடுத்துக்காட்டுகளுடன் வலியுறுத்தி இன்றைய பொறியாளர்கள் மற்றும் திட்டக் குழுக்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்ப்பதும் அவசியமாகிறது.

தமிழகத்தில் சுமார் 38200 ஏரிகள் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மக்கள் பெருக்கத்தாலும் மற்றும் சமுதாய மாற்றங்களாலும் சுமார் 4000 ஏரிகள் செயல் இழந்துவிட்டன எனத் தெரிய வருகிறது. இவ்வாறு குறைந்து வரும் ஏரிப்பாசன வேளாண்மையை அதிகரிக்கவும், குறையாமல் தடுப்பதற்கும், திட்டமிடல் அவசியமாகிறது. அப்படி திட்டமிடும்பொழுது ஏரிகள் எந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதனை ஆய்வு செய்தும், சமுதாய மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் நீர் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், புதிய பாசன முறைகளை இணைத்தும், திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆகவே, சங்க காலத்திலிருந்து இன்று வரை செயல்பாட்டிலிருக்கும் ஏரிகளின் பாரம்பரியத்தை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து, அது எவ்வாறு தாழ்வு நிலையை அடைந்தது என்ற வரலாற்றை நன்குணர்ந்தபின், அவற்றை மீண்டும் உயர்நிலைக்கு கொண்டுவருவதற்குரிய வழிமுறைகளை வகுத்தல் என்பதனையும் இந்நூல் விளக்குகிறது.
(நூலின் முன்னுரையிலிருந்து)

மழைக்காலங்களில், மழையின் அளவையும், இடைவெளியையும் பொறுத்து ஆற்றின் வெள்ளப்பெருக்கு அமையும். மழை அதிகமாகி வெள்ளம் பெருக்கெடுக்கும்போது வெள்ளநீர் கரையினைக் கடந்து ஆற்றுப்படுகையில் தங்கும். மழை மாதங்களில், ஆற்று வெள்ளம் கரையினை அடங்கியும், கரையினை மாறிப் பாய்வதும், பரவலாக நிகழும். அன்றைய இயற்கை நிலை வெள்ளம் வடிந்த பின்னரும் கரையோரங்களில் நீர் தேங்கி நிற்கும். இவை பூமியில் உறிஞ்சப்பட்டும், சூரிய வெப்பத்தால் ஆவியாகி மறைவதற்கும் சில நாட்கள் பிடிக்கும். மேலும் மழை தொடர்வதால் ஈரப்பதம் தொடரும். வடியும் இந்த ஆற்று வெள்ளநீரினைக் கொண்டு ஆற்றின் கரையோரங்களில் விவசாயம் மேற்கொண்டனர். இதனை (வெள்ள விவசாயம்) Flood Irrigation / Iriundation Irrigatior என்று ஆங்கிலத்தில் கூறுவர். இது பாசன வளர்ச்சியின் அடுத்த நிலை எனக் கொள்ளலாம்.

அடுத்து, ஆற்றங்கரையினை ஒட்டி அமைந்துள்ள பள்ளங்களில், குட்டைகளில், மழைநீர் தேங்கி நிற்கின்றன. அவற்றை மழைநின்ற பின்னர், பனை ஓலைகள் கொண்ட இறைவட்டியால் இறைத்து மேல்பரப்பில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்களுக்கு நீர் பாய்ச்சுகிறான். இறவைப் பாசனம் / Lift Irrigation பிறக்கிறது. இயற்கைக் குட்டைகளிலிருந்து ஏற்றம் மூலம் நீர் இறைக்கும் போது, குட்டையில் நீர் குறைகிறது. அப்போது பக்கங்களிலிருந்து குட்டைக்குள் ஊற்று நீர் வருவதைப் பார்க்கிறான். குட்டைகளை ஆழப்படுத்துகிறான் கிணறுகள் பிறக்கின்றன. ஆழம் அதிகமானதால் ஏற்றம் போட முடியாது, மாடுகள் பூட்டி “கமலைப் பாசனம்” பிறக்கிறது. மின் சக்தி வந்தபின்னர் இவை “ஆழ்குழாய் கிணறுகளாக” மாறிவிட்டன. வெள்ளநீர் பாசனமும், இறவைப் பாசனமும், ஏககாலத்தில் உருவானதாகக் கருதப்படுகிறது.

பூமியில் பெய்யும் மழைநீர் சிற்றோடைகளாக ஓடி, ஆற்றில் கலந்து, கடலுக்குச் செல்வது மற்றுமொரு இயற்கை நிலை. குட்டைகளை, குளங்களாக மாற்றிய அனுபவம், சிற்றோடைகளில் ஓடி வரும் மழை நீரினைத் தடுத்து பூமி வாட்டத்தின் துணை கொண்டு நிலவாட்டம் தாழ்வான நிலப்பகுதிகளில் செயற்கைக் குட்டைகளை, நீர்த்தேக்கங்களை உருவாக்கினான். குளங்கள் தோன்றின. இவ்வாறு, மழைநீரை அறுவடை செய்து, செயற்கையாக உருவாக்கிய குளங்கள் / ஏரிகளில் சேகரித்துப் பாசனம் மேற்கொண்டது அடுத்த நிலை, “Tankfed Irrigation”.

படிக்க:
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !
சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் நீர்வளமும் – விவசாயத்தின் எதிர்காலமும் !

மழை அதிகமுள்ள பகுதிகளில் அதிக நீர் கொண்டு செல்லும் சிற்றாறுகள், பல உண்டு, இவை பேராறுகளில் கலந்து, பின்னர் கடலை அடைகின்றன. இச்சிற்றாறுகள், பேராறுகளின் உபநதி என அழைக்கப்பட்டன. இச்சிற்றாறுகளின் குறுக்கே, ஏரிகள் அமைப்பது கடினம். அவை நீரின் வேகத்தால் உடையும் அபாயம் அதிகம். எனவே இச்சிற்றாறுகளைத் தடுத்து, அதன் தண்ணீரைச் சிறு சிறு கால்வாய்கள் தோண்டி அவ்வாறுகளின் அருகாமையில் உள்ள பள்ளங்களில் தாழ்வான நிலப் பகுதிகளில், குளங்களை உருவாக்கிக் சேமித்து வைத்தனர். நில வோட்டத்திற்கும் நீர்வரத்துக்கும் ஏற்ப பல ஏரிகள், ஒன்றன்பின் ஒன்றாக உருவாக்கப்பட்ட பல இடங்களைப் பார்க்கிறோம். இவ்வாறு சிற்றாறுகளின் நீரினைத் தடுத்து, தொடர் குளங்கள் ஏற்படுத்தியமை, பாசன வளர்ச்சியின் அடுத்தபடி, இக்குளங்களைச் சங்கிலித் தொடர் குளங்கள் என்றழைத்தனர். ஆங்கிலத்தில் Small Scale Irrigation என்றழைத்தனர், சிற்றாற்று நீர் (போக்கினைத் தடுத்து, கால் மூலம் எடுத்துச் செல்ல “கொறம்பு” என்ற தொழில் நுட்பத்தைக் கைக்கொண்டனர்.

கொறம்பு:

சவுக்கு அல்லது மூங்கில் கம்புகளை ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக அடித்து, நாணல் அல்லது கோரைப்புற்கள் இல்லாவிடில் பனை ஓலை இவைகளைக் கொண்டு இடைவெளியினை அடைத்து தடுப்பணை செய்வார்கள். இப்போது ஏற்படுத்திய தடுப்பிற்குப் பின் மண்ணை அணைத்து ஓலைகளுக்கு பலம் கொடுத்தனர். இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட தடுப்பு “கொறம்பு” என அழைக்கப்பட்டது. எதிர்பாராமல் நீர்வரத்து அதிகமானால் நீரின் விசையால் தடுப்பணை அடித்துச் செல்லப்படும், சிற்றோடைக்கோ, அதனிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்க்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. முதலில் உருவான தடுப்பணை இதுதான். பின்னர் இவை கற்களால் கட்டப்பட்டன. அவை கற்சிறை என அழைக்கப்பட்டன. நீரின் போக்கைச் சிறைப்படுத்தி வேறு வழியில் செலுத்துவதால் இவை “கற்சிறை” என அழைக்கப்பட்டன. பின்னர் இவை அணைக்கட்டு என அழைக்கப்பட்டன. எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி நீரின் திசையினை மாற்றி வேறொரு திசைக்குத் திருப்ப, பண்டையத் தமிழன் கையாண்ட தொழில்நுட்பம் “கொறம்பு அமைத்தல்”.

சிற்றாறுகளின், பாசன முயற்சியின் அடுத்த கட்டமாகக் கருதப்படுவது, பெரிய ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி, கால்வாய்கள் வெட்டி அக்கால்வாய்களின் மூலம் நேரடியாகவும் குளங்கள் மூலமாகவும் பாசனம் மேற்கொள்ளப்பட்டது. பாலாறு, தென்பெண்ணை , காவிரி, வைகை, தாமிரபரணி, கோதையாறு போன்ற ஆற்றுப்படுகைகளில் மலர்ந்துள்ள பாசன ஆதாரங்கள் இதற்குச் சான்றாக அமையும் இவ்வாறுகளில் மழைகாலங்களில் பெருவாரியான வெள்ளநீர் வீணாக கடலுக்குச் செல்வதைத் தடுக்கும் முகத்தான் இவ்வாறுகளின் தலைப்பகுதிகளில் பெரிய நீர்தேக்கங்கள் அமைத்து ஒருபோகப் பாசனத்தை இருபோகமாக மாற்றியும், பாசனப் பரப்பை விரிவுபடுத்தியும், மற்றும் இந்த நீர் நிலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யவும். சுதந்திர இந்தியாவில், பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பலநீர்த் தேக்கங்கள் உருவாயின. இதனைப் பெரிய பாசனத்திட்டங்கள் (Large Scale Irrigation System through Dams and anaicuts) என்றழைத்தனர்.
(நூலிலிருந்து பக்.11-13)

நூல்: பாசன ஏரிகளின் பாரம்பரியத்தைத் தேடி…
ஆசிரியர்: ச.மா. இரத்னவேல், ஸ்ரீவை. நா. கள்ளபிரான்.

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
16 (142), ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.
பேச: 044 – 2848 2441, 4215 5309
மின்னஞ்சல்:pavai123@yahoo.com

பக்கங்கள்: 144
விலை: ரூ.100.00

இணையத்தில் வாங்க: Noolulagam | Discovery Book palace

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க