சலம்பல் 1        இயல்பாகவே இந்துத்துவாவை ஆதரிக்கும் ரஜினிகாந்த் !

நேற்று 11.12.2018 அன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பதிலளித்தார். அதில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது; மேலும் பாரதிய ஜனதா செல்வாக்கை இழந்திருப்பதைது இந்த முடிவுகள் காட்டுகின்றன என அவர் கூறினார்.

உடனே ஊடகங்கள் அனைத்தும் பாஜகவின் ஆதரவு நிலையிலிருந்து ரஜினி பின்வாங்கியதாக தொலைக்காட்சி விவாதங்களில் எடுத்துவிட்டனர். அது உண்மையா என்றால் நிச்சயம் இல்லை. ஏனெனில் இங்கே ரஜினி கூறியிருப்பது வெறுமனே தேர்தல் முடிவுகள் பற்றிய எதார்த்தமான நிலவரத்தை மட்டுமே. அதில் அவர் கருத்து எதையும் கூறவில்லை. பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணம் இந்தந்த பிரச்சனைகள் என்று அவர் எதையும் பட்டியலிட்டு சொல்லவில்லை. அந்த அளவு அவருக்கு அறிவில்லை என்பது வேறு விசயம்.

சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைகிறது என்று கூறுவதெல்லாம் ஒருவர் எடுக்கும் நிலைப்பாடு பற்றியதல்ல. அவை இயற்கை குறித்த உண்மை மட்டுமே. விமான நிலையத்தில் கேட்ட கேள்வியை சற்று நீட்டித்து பாரதிய ஜனதா ஏன் தோல்வி அடைந்தது என ரஜினியிடம் கேட்டால் அவர் என்ன கூறுவார்? இன்றைக்கு தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக ஆதரவாளர்கள் எப்படி புதிது புதிதாக காரணங்களை கண்டுபிடித்து கூறுகிறார்களோ அதைப் போன்று அவரும் கூற முயற்சிப்பார். அதுவும் கூட அவருக்கு யாராவது மண்டபத்தில் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் மண்டப டிப்ஸ் இல்லையென்றால் இதெற்கெல்லாம் கருத்துக் கூற முடியாது, நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்று எஸ்கேப் ஆவார்.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் அனைவரும் சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது அவர் என்ன கூறினார்? 10 பேர்கள் இணைந்து ஒருவரை அடிக்கிறார்கள் என்றால் பலசாலி யார்? அந்த 10 பேரா? அடிகளை துணிவாக எதிர்கொள்ளும் அந்த ஒருவரா? இதன்படி அவர் வெளிப்படையாகவே மோடியையும் பாஜகவையும் ஆதரிக்கிறார்.

இந்த தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கலாம் ஆனால் இயல்பாகவே இந்துத்துவாவை ஆதரிக்கும் ரஜினிகாந்த் ஒருபோதும் பாரதிய ஜனதாவை விட்டுக்கொடுக்க மாட்டார். மேலும் இது மாநில பிரச்சினைகள் சார்ந்து மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு என நடுநிலையாளர்கள் என்ற பெயரில் சில பாஜக ஆதரவாளர்கள் கூறுவது போல அவரும் கூறலாம்.

சலம்பல் 2     தேர்தல் முடிவு குறித்து வாய் திறக்காதாம் அதிமுக !

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்தனர் தமிழக அமைச்சர்கள். இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று பாரதியார் படத்திற்கு மலர் தூவினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார். தோல்வியை வைத்து பாஜகவிற்கு பின்னடைவா என்பதை கணிக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி, அதிமுக-விற்கு மாமனோ மச்சானோ கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தலைமை முடிவு செய்யும். எதிர்க்கட்சிகள் என்னதான் ஒரு வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக-தான் வெற்றி பெறும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்பதற்கு கூட பதிலளிக்க முடியாத அடிமை நிலையில் அதிமுக இருப்பது ஆச்சரியம் இல்லை. சில ஊடகங்கள் ஆனானப்பட்ட ரஜினிகாந்த் கூட பாரதிய ஜனதாவிற்கு பின்னடைவு எனக் கூறியிருக்கும்போது அதிமுக ஏன் வாய் திறக்க மறுக்கிறது என கேட்கின்றனர். ஜெயலலிதா இறந்த பிறகு முதலில் ஓபிஎஸ் பிறகு எடப்பாடி என்று அதிமுக ஆட்சி தொடர்ந்தாலும் இவர்களை பாரதிய ஜனதா இயக்குகிறது என்பது உலகறிந்த உண்மை.

அவ்வப்போது அதிமுக-அமைச்சர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்யும். இதையே வேறு வேறு வார்த்தைகளின் மூலம் பாஜக-வினர் அதிமுகவை செல்லமாக மிரட்டுவார்கள். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளே இல்லாத பாரதிய ஜனதா கட்சிக்கு அதிமுக-வை விட்டால் ஆள் இல்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கேட்காமலேயே தங்கள் வாக்குகளை அள்ளிக் கொடுத்த அதிமுக இங்கே பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு சொல்லைக்கூட கூறாது.

நேற்று தேர்தல் முடிவு தொடர்பாக நடந்த விவாதங்களில் அவ்வப்போது அதிமுகவினர் வந்தாலும் வரும் வாய் திறக்கவில்லை ஜெயக்குமார் போல நாங்கள் ஏன் கருத்துரைக்க வேண்டும் என தப்பிக்கப் பார்த்தார்கள். விடாமல் கேட்டீர்களென்றால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் தான் புரட்சித்தலைவி அம்மா செய்த சாதனைகள் இன்னும் தொடர்கின்றது எங்களை யாரும் வெல்ல முடியாது என்பதையே கிளிப்பாட்டு போல பாடுகிறார்கள்.

அடிமை என்பதால் ஒரே மாதிரிதான் இந்த இத்துப் போன பாட்டு வருகிறது. என்ன செய்வது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தாலும் அதை படிப்பதற்கு கூட அதிமுகவில் யாருக்கும் தைரியம் இல்லையே?

சலம்பல் 3   பாஜக-வின் இளைய பங்காளி சிவசேனா கேலி செய்கிறது.

பாரதிய ஜனதாவின் தோல்வியை அதன் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கொண்டாடுகிறது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் நாட்டுக்கு புதிய பாதையை காட்டிவிட்டனர். தங்களுக்கு வேண்டாதவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு மக்கள் துணிந்து விட்டனர். மக்களின் துணிச்சலான இந்த முடிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே.

மேலும் இந்த 5 மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சர்ச்சைகள், வாக்காளர்களுக்கான பண விநியோகம், குண்டர்கள் அச்சுறுத்தல் போன்ற எந்த ஒரு காரணத்தையும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் ஆளுங்கட்சியை நிராகரித்துள்ளனர். இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரேவும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், அடக்கு முறையை கையாளும் அரசின் முகத்தில் விழுந்த அடியாகும். தனி மனிதராக இருந்து போராடி பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். என்று ராஜ்தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

படிக்க:
ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !

சிவசேனாவை பொறுத்தவரை அக்கட்சி பாரதிய ஜனதாவின் இயல்பான இந்து மதவெறி கருத்துடைய இளைய பங்காளி ஆகும். காலஞ்சென்ற பால்தாக்கரே இந்து மதவெறியின் தளபதியாக பணியாற்றினார். அப்போது அரசியலில் செல்வாக்கை அதிகரித்து வந்த பாரதிய ஜனதா மெல்ல மெல்ல மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவின் இடத்தைக் காலி செய்தது. அப்போதைய தேர்தல்களில் அதிக இடங்களில் சிவசேனாவும் குறைவான இடங்களில் பாஜக-வும் போட்டியிடும். பின்னர் இது தலைகீழாக மாறியது.

பால் தாக்கரேர இறந்த பிறகு சிவசேனா இரண்டாக உடைந்தது. அதன்பிறகு சிவசேனாவிற்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்று ஆனது. இப்படித்தான் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைந்தது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவசேனா தலைவர்கள் இப்படி புலம்பியவாறு தங்களது அவல நிலையை சமாதானம் செய்து கொள்கின்றனர்.

– மதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க