செய்தி:   த்திரப் பிரதேசம் நொய்டா நகரில் உள்ள தொழிற்துறை மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள் தமது ஊழியர்கள் (முஸ்லீம்கள்) வெள்ளி தோறும் பொது இடங்களில் தொழுவதை அனுமதிக்கக் கூடாது என நொய்டா போலீசு உத்திரவிட்டிருக்கிறது. அனுமதித்தால் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறியிருக்கிறது.

நீதி:   முஸ்லீம்கள் பொது இடங்களில் தொழுவதை யாரும் எங்கேயும் இதுவரை எதிர்க்கவில்லை. அது பொறுக்கவில்லை பாஜக-விற்கு! இனி பொது இடங்களில் தாடி வைப்பது, லுங்கி கட்டுவது, பிரியாணி சாப்பிடுவதையும் தடை செய்யும் காலம் தூரமில்லை! காவி ஆண்டால் கலவரம்தான் நாட்டு நடப்பு !

⊕⊕⊕

படிக்க:
♦ தலாக் – ஷரியத் சட்டமும் இஸ்லாமியப் பெண்களின் அவலமும் !
கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

செய்தி: கைவிடப்பட்ட பசுக்களைக் காப்பாற்ற உடன் நடவடிக்கை எடுக்குமாறு உத்திரப் பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார். பசுக் காப்பகங்களுக்காக ஒவ்வொரு நகராட்சிக்கும் தலா 10 கோடி ரூபாயும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 1.2 கோடி ரூபாயும் ஒதுக்கி உ.பி அரசு உத்திரவிட்டுள்ளது.

நீதி: ஆக்சிஜன் கொடுக்காமல் குழந்தைகளைக் கொன்ற அரசன், சுற்றித் திரியும் மாடுகளுக்காக ஏன் கண்ணீர் வடிக்க மாட்டான்?

⊕⊕⊕

செய்தி:   முத்தலாக் குறித்த விவாதத்தை மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் வியாழனன்று கொண்டு வருகிறார்.

நீதி: முஸ்லீம் ஆண்களை மிரட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் விவாதித்து என்ன பயன்? செதுக்கியவனின் சதியை முறியடிக்காமல் சிலையை ஆராய்ந்து என்ன கிடைக்கும்?

⊕⊕⊕

Modi-bogibeel
ஊரான் காசில் வெட்டிப் பெருமை கொள்ளும் செல்ஃபி மோடி

செய்தி:   மேகாலயாவின் கிழக்கு ஜைன்தா மலை மாவட்டத்திலிருக்கும் கேசான் சுரங்கத்தில் கடந்த 15 நாட்களாக மாட்டிக் கொண்டுள்ளார்கள். தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் நிபுணர் குழுக் கருத்துப் படி அவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

நீதி: அஸ்ஸாம் பிரம்மபுத்ரா நதியில் கட்டப்பட்ட பாலத்தில் டாடா காண்பித்து செல்ஃபி எடுத்து நான்தான் பாலத்தை கட்டினேன் என்று வெட்கமே இல்லாமல் சொல்லும் ஒரு பிரதமர் இருக்கும் போது மேகாலாயாவில் சுரங்கத்தில் மாட்டிய தொழிலாளிகள் எப்படி பிழைக்க முடியும்?

⊕⊕⊕

செய்தி: சாத்துாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனைவியான 23 வயது கர்ப்பிணி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். உடலில் ரத்தம் குறைவாக இருந்தது. சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கியில் இருந்து வாங்கி வந்த ரத்தம் டிச 3-ல் செலுத்தப்பட்டது. அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோரை கொண்ட அமர்வு, ரத்தத்தை முறையாக பரிசோதனை செய்யாதது ஏன்? கர்ப்பிணிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், சிசுவுக்கு நோய் பாதிக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினர்.

நீதி: கனம் நீதிபதி அவர்களே சிகிச்சை அளித்தும் அந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற முடியாது. விசாரித்தும் இந்த அரசுக்கு தண்டனை கொடுக்க முடியாது! மக்களும் இந்த அநீதியை மறக்க முடியாது, மன்னிக்கவும் கூடாது!

⊕⊕⊕

செய்தி: சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ரமேஷ், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதி: அந்த இளைஞருக்கு கூட ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர்  குட்கா புகழ் விஜய பாஸ்கருக்கோ, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கோ, எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கோ என்ன இருக்கிறது?

⊕⊕⊕

செய்தி: பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றனர்.

நீதி: போராடும் ஆசிரியர்களைப் பார்க்க கூட எடப்பாடிக்கு கௌரவக் குறைச்சல் என்றால் போராடும் ஆசிரியர்கள் இனி கோட்டையை நோக்கி முற்றுகையிட வேண்டும்.

⊕⊕⊕

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

செய்தி:   பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைத்து போட்டியிட முயற்சித்து வரும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தார்.

நீதி: ஒருவேளை இது பாஜக-வின் பி டீம் செலுத்தும் மரியாதையோ?

⊕⊕⊕

செய்தி:   வங்கிகளை இணைக்கக் கூடாது, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் உள்ள 80 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். “15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்தே இந்த போராட்டத்தை நடத்தினோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.போராட்டம் காரணமாக சென்னையில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9 லட்சம் காசோலைகள் முடங்கின.” என்று வங்கி ஊழியர் சங்கத் தலைவர்கள் கூறினர்.

நீதி: வங்கி ஊழியர்களே அரசை முடக்குவது எப்படி என்று பாருங்கள்! முன்னறிவிப்பு கொடுத்தும் பேச முன்வராத அரசை அறிவிப்பு இல்லாமலே வழிக்கு கொண்டு வரும்படி போராடுங்கள்!

⊕⊕⊕

படிக்க:
♦ ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
♦ வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?

செய்தி:   நெய்வேலி மந்தாரக் குப்பத்தில் என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைக்க 26 கிராமங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் “என்.எல்.சி நிறுவனத்துக்கு ஒருபிடி மண்ணைக்கூட தர மாட்டோம்” – என அன்புமணி ஆவேசமாகப் பேசினார்!

நீதி: என்.எல்.சி நிறுவனத்தை கட்டியாளுகின்ற பாஜக-வை, மோடி அரசை எதிர்த்து இந்த ஆவேசத்தில் ஒரு கால் புள்ளியைக் கூட காணோம்!

⊕⊕⊕

செய்தி:   விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பிறப்பித்துள்ள உத்தரவில், நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மற்றும் பிராந்திய மொழிகளிலும் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் உத்தரவு கிடைக்கப்பெறாத விமான நிலையங்களும் உள்ளூர் மொழியில் அறிவிப்பை வெளியிட வேண்டுமென அறிவுறுத்துப்பட்டுள்ளது.

நீதி: வானத்தில் பறப்பதற்கு பிராந்திய மொழி உத்தரவு போடும் மேன்மக்களே நீதிமன்றம், அரசு அலுவலகங்கள், கல்வி ஆகிய மண்ணில் வாழும் மக்களுக்கு தாய் மொழியை ஏன் மறுக்கிறீர்கள்?

⊕⊕⊕

செய்தி:   14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, பலியானவர்களின் நினைவாக குமரி கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலம் நடந்தது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நீதி: சுனாமி, ஒக்கி என வருடம் முழுவதும் மீனவ மக்களுக்கு மவன ஊர்வலங்கள் காத்திருக்கின்றன. கடற்படை – கடலோரக் காவற்படைகளின அருமை பெருமை நிகழ்வுகளும் வருடந்தோறும் நடக்கின்றன.

⊕⊕⊕

செய்தி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள் முடங்கியிருப்பதால் டிரம்பின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நீதி: இல்லை ஈராக்கிற்கு போகிறேன் என்று அவர் அறிவித்துத்தான் பார்க்கட்டுமே! நிழலைக் கண்டு அஞ்சும் பாசிஸ்டுகள் நிர்வாகத்தின் பெயரால் சாகசம் செய்கிறார்களாம்!

⊕⊕⊕

செய்தி:   இணையதளம் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான், பிளிப்கார்ட் போன்றவை தங்கள் நிறுவனப் பொருட்களை விற்பது தடை செய்யப்படுகிறது. சில முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு அவர்களின் ஏதேனும் ஒரு பொருளை தங்கள் இணையதளம் மூலம் பிரத்யேகமாக விற்பதும் தடுக்கப்படுகிறது. அதேபோல் எந்த ஒரு நிறுவனமும் தங்களது பொருட்களை 25%-ற்கு மேல் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் விற்கக் கூடாது என்றும் கேஷ்பேக் எனப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையை பொருள் வாங்கும் வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்க வேண்டும்; அதற்கான நடைமுறையை பாகுபாடு இன்றி வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன என ஆண்டுதோறும் ஆடிட்டர் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்கவும் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நீதி: சிறு வணிகர்களை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொல்லப்படுவதற்குப் பதில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொல்லலாம் என கருணை காண்பித்துள்ளது அரசு!

⊕⊕⊕

தொகுப்பு : வாணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க