ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் குமரன் ஆற்றிய உரை.

”தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தைத்தான் மோடியும் எடுபிடி எடப்பாடியும் சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளனர். மன்னராட்சியில்தான் மக்களுக்கு ஜனநாயக மறுப்பு இருக்கும். ஆனால், ஜனநாயக நாடு என்று இவர்களே சொல்லிக்கொள்ளும் நாட்டில் இப்படி நடப்பது இது கார்ப்பரேட் ஆட்சி என்பதற்கு சாட்சி. இந்த பின்னணியில் இருந்துதான் பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த அனுமதியை நீங்கள் பார்க்க வேண்டும்.

மேலும், அதிகாரிகள் முதல் கட்சிகள் வரை ஸ்டெர்லைட்டின் நன்கொடை பாயாத இடமில்லை. பா.ஜ.க விற்கும் கூட பல கோடி ரூபாயை நன்கொடை கொடுத்துள்ளது ஸ்டெர்லைட். எனவே, இது ஸ்டெர்லைட் ராஜ்ஜியம் என்றால் மிகையல்ல. ஏற்கனவே ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஜாம்பியா, தென்னாப்பிரிக்கா, சட்டீஸ்கர் என்று சென்ற இடமெல்லாம் போராடும் மக்களை எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதக்க செய்துள்ளது.

இன்னொருபுறம் அரசின் கொள்கை வகுப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான தொழில் கட்டமைப்புகளை உருவாக்குவது, அதை மக்கள் நலனுக்காக உருவாக்குவது போல் நாடகமாடி அதற்கான செலவுகளை மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து செலவு செய்து பெரு நிறுவனங்களுக்கு படையல் வைப்பதுதான் உலகம் முழுவதும் அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இதில் காங்கிரஸ் செய்யத் தயங்கியதை ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்ட் மோடி செய்து கொடுப்பார் எனத்தெரிந்துதான் பெரு நிறுவனங்கள் அவரை பிரதமராக கொண்டு வந்துள்ளனர். ஏனெனில், மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே புதிய தொழில்களை துவங்குவதற்கு ஏதுவாக சுற்று சூழல் விதிகளை மாற்றுவோம் என பொது மேடையிலேயே தெரிவித்தார்.

அடுத்ததாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் அதற்குப் பிறகும் காவல்துறை இத்தகைய போராட்டங்களை எப்படி அணுகுகிறது என்பதை கவனிக்க வேண்டும். எம்.கே. நாராயணன் என்பவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சில நாள் பிறகு இந்து பத்திரிக்கையில் இப்படிப்பட்ட போராட்டத்தை எப்படி பார்க்க வேண்டும் என்றும், எப்படி ஒடுக்குவது என்றும் அரசிற்கு பாடம் நடத்துவதாக கட்டுரை எழுதியிருந்தார்.

படிக்க:
மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்
மோடி – பாஜகவின் சிறந்த ஜால்றா யார் ? சிறப்பு விருதுகள் – 2018 !

அதாவது தற்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாம் மக்கள் எந்த அரசியல் கட்சிகளின் தலைமையிலும் இல்லாமல் தன்னிச்சையாக சொந்த அனுபவத்தில் இருந்து போராடுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் அளவிற்கு ஏற்ப முகநூல், வாட்ஸ் அப் என்று பயன்படுத்தி அணிதிரட்டி போராடுகிறார்கள். ஆனால், நம்முடைய காவல்துறையோ லத்திக்கம்பை மட்டும் நம்பி இருக்கிறது என்று நீட்டி எழுதியிருந்தார். நாம் அனைவரும் ஒரு எச்சரிக்கையாக அதை படித்து புரிந்து மாற்று வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அரசின் கொள்கையையும், அதன் ஒடுக்குமுறை வடிவத்தையும் தோலுரித்துக்காட்டினார்.


தகவல்,
மக்கள் அதிகாரம்,
மதுரை.

(இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மற்ற பேச்சாளர்களின் உரைகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க