அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 7

இருபதாம் நூற்றாண்டில் நாம் பயன்படுத்தும் “பொருளாதாரம்” எனும் பதத்திற்கும், அரிஸ்டாட்டில் பயன்படுத்திய அதே பதத்துக்கும் என்ன வித்தியாசம். மேலும் பொருளாதாரத்திற்கும் – செல்வ இயல் என்பதற்கும் உள்ள வரையறை என்ன ? தெரிந்து கொள்வோம் படியுங்கள். கட்டுரையின் இறுதியில் கேள்விகள் இருக்கின்றன – விடையளிக்க முயலுங்கள்!
-வினவு

*****

பொருளாதாரமும் செல்வ இயலும்

ரிஸ்டாட்டில் நமது கவனத்தைத் தூண்டும் வகையில் கூறியிருக்கும் பல கருத்துக்களில் ஒன்று பொருளாதாரத்துக்கும் செல்வ இயலுக்கும் அவர் காட்டிய வேறுபாடு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இது விஞ்ஞான வரலாற்றில் மூலதனத்தை ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும்.

செல்வ இயல் (chrematistics) என்ற சொல்லை அவர் உருவாக்கினார்; ஆனால் அது ”பொருளாதாரம்” என்ற சொல்லைப் போல நவீன மொழிகளில் வேரூன்றவில்லை. அது சொத்து, பண்ணை ஆகியவற்றைக் குறிக்கின்ற chrema சொல்லிலிருந்து தோன்றியது. அரிஸ்டாட்டிலுக்குப் பொருளாதாரம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின், பயன் மதிப்புக்களின் உற்பத்தியோடு தொடர்பு கொண்ட இயல்பான வீட்டுக்குரிய நடவடிக்கை.

அரிஸ்டாட்டில்

அது பரிவர்த்தனையையும் உள்ளடக்கியதுதான்; ஆனால் அது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதும் இயற்கையாகவே ஏற்படும். ஒரு நபர் தனது சொந்த நுகர்வுக்குப் போதுமான அளவை அறிவோடு நிர்ணயித்துக் கொள்வார்.
அப்படியானால் செல்வ இயல் என்பது என்ன?

அது “செல்வத்தைத் திரட்டுகின்ற கலை”, அதாவது லாபம் அடைவதை, செல்வத்தை – குறிப்பாகப் பணத்தின் வடிவத்தில் – திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் செல்வ இயல் என்பது மூலதனத்தை முதலீடு செய்வது, திரட்டுவதைப் பற்றிய “கலை”.

பண்டைக்கால உலகத்தில் தொழில்துறை மூலதனம் என்பது இருக்கவில்லை. ஆனால் வர்த்தக மூலதனமும் பண (வட்டி) மூலதனமும் முன்பே கணிசமான பாத்திரத்தை வகித்து வந்தன. அரிஸ்டாட்டில் பின்வருமாறு எழுதுகிறார்.

”…செல்வத்தைக் குவிக்கும் கலையைப் பொறுத்தவரை – இது வர்த்தக நடவடிக்கையில் வெளிப்படுகின்ற அளவுக்குப் பார்க்கும் பொழுது – தமது நோக்கத்தை அடைவதற்கு எந்த எல்லையும் ஒருபோதும் இருந்ததில்லை. இங்கே நோக்கமென்பது முடிவில்லாத அளவுக்கு செல்வமும் பணமும் திரட்டுவதாகும்…… பணச் செலாவணியில் ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் தனது மூலதனத்தை எல்லையில்லாத அளவுக்குப் பெருக்குவதற்கு முயல்கின்றனர்.” (1)

அரிஸ்டாட்டில் இவற்றை இயற்கைக்கு மாறானதென்று கருதினார்; ஆனால் கலப்பற்ற “பொருளாதாரம்” என்பது இயலாதது என்று புரிந்து கொள்கின்ற அளவுக்கு யதார்த்த வாதியாக இருந்தார்; துரதிர்ஷ்டவசமாகப் பொருளாதாரம் தவறாமல் செல்வ இயலாக வளர்ச்சி அடைகிறது என்கிறார். இந்தக் கருத்து சரியானதே. எங்கே பொருள்கள் பண்டங்களாகப் பரிவர்த்தனைக்கென்று உற்பத்தி செய்யப்படுகின்றனவோ அந்தப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ உறவுகள் தவிர்க்க முடியாதபடி வளர்ச்சி அடையும்.

படிக்க:
♦ மூலதனத்தின் தத்துவஞானம் !
♦ அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5

அரிஸ்டாட்டில் பொருளாதாரத்தை இயற்கையானதாகவும் செல்வ இயலை இயற்கைக்கு மாறானதாகவும் கருதினார். பிற்காலத்தில் இந்தக் கருத்து ஒரு விசித்திரமான மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய காலத்தில் அறிஞர்கள் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றி வட்டித் தொழிலை முழுமையாகவும் வர்த்தகத்தை ஓரளவுக்கும் பணம் குவிப்பதில் அவை “இயற்கைக்கு மாறான” வழிகளைப் பின்பற்றுகின்றன என்று கண்டனம் செய்தார்கள். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, பணம் திரட்டுவதற்குரிய எல்லா வழிகளுமே இயற்கையானவை என்று தோன்றின; ‘‘இயற்கைச் சட்டத்தால்” அனுமதிக்கப்பட்டவையாகத் தோன்றின.

இந்த அடிப்படையில்தான் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சமூக – பொருளாதாரச் சிந்தனையில் ”பொருளாதார மனிதன்” என்ற உருவம் தோன்றியது; அந்த மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் உந்தித் தள்ளுவது பணத்தைக் குவிக்க வேண்டுமென்ற ஆசையே. பொருளாதார மனிதன் தன்னுடைய சொந்த லாபத்துக்காக உழைப்பதன் மூலம் சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதாக ஆடம்ஸ்மித் கூறினார். எனவே ஸ்மித்துக்குத் தெரிந்த உலகங்களில் மிகச் சிறந்ததான முதலாளித்துவ உலகம் வெளித் தோன்றியது.

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

பொருளாதார மனிதன் என்ற வார்த்தை அரிஸ்டாட்டிலுக்கு முற்றிலும் வேறான ஒரு அர்த்தத்தை, அதாவது தன்னுடைய நியாயமான தேவைகளை – அந்தத் தேவைகள் முடிவில்லாதவை அல்ல – பூர்த்தி செய்வதற்குப் பாடுபடுகின்ற மனிதனைக் குறித்திருக்கும். ஆனால் தசையும் இரத்தமும் இல்லாத இந்தக் கற்பனை உருவத்தை, ஸ்மித் காலத்தில் எழுதப்பட்ட பொருளாதாரப் புத்தகங்களின் கதாநாயகனை அவர் “செல்வ இயல் மனிதன்” என்று சொல்லியிருப்பார்.

இந்த மாபெரும் கிரேக்க அறிஞரை விட்டுவிட்டு நாம் இப்பொழுது இரண்டாயிரம் வருடங்களைத் தாவி பதினாறாம் நூற்றாண்டின் கடைசியிலும் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த மேற்கு ஐரோப்பாவுக்குப் போக வேண்டும். ஆனால் இந்த இருபது நூற்றாண்டுகளில் பொருளாதாரச் சிந்தனையில் எத்தகைய சிறு வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கருதிவிடக் கூடாது.

கிரேக்கத் தத்துவஞானிகள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களில் சிலவற்றை மேலும் வளர்த்துச் சென்றார்கள். இன்று நாம் விவசாயப் பொருளாதாரம் என்று கூறுகின்ற துறையைப் பற்றி ரோமானிய எழுத்தாளர்கள் நிறைய எழுதினார்கள். மத்திய காலத்தில் அறிவுமிக்கோர் மதப் போர்வையை அணிந்திருந்தார்கள். அந்த மதப் போர்வையின் மறைவில் எப்பொழுதாவது தற்சிந்தனையுள்ள பொருளாதாரக் கருத்துக்களைக் காண்கிறோம். அரிஸ்டாட்டிலின் எழுத்துக்களைப் பற்றி உரை எழுதிய மதப் பண்டிதர்கள் ”நியாய விலை” என்ற கருத்தை உருவாக்கினார்கள், பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றைக் கூறுகின்ற எந்தப் புத்தகத்திலும் இவை பற்றிய விவரங்களைப் படிக்கலாம்.

ஆனால் அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சமூகத்தின் வீழ்ச்சிக் காலம்; நிலப்பிரபுத்துவம் வளர்ந்து ஆதிக்கம் வகித்த காலம். அந்தக் காலம் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறை உற்பத்தி ஏற்பட்ட கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி, முதலாளித்துவ உறவுகளின் முக்கியமான கூறுகள் முன்பே உருவாக்கமடைந்து கொண்டிருந்த பொழுது அரசியல் பொருளாதாரம் ஒரு சுயேச்சையான விஞ்ஞானமாகத் தோன்றியது.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல்

அடிக்குறிப்பு:
(1) அரிஸ்டாட்டில், அரசியல், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், 1911, பக்கங்கள் 25- 26 (ருஷ்ய மொழிபெயர்ப்பு).

கேள்விகள்:

  1. அரிஸ்டாட்டில் உருவாக்கிய “செல்வ இயல்” என்றால் என்ன?
  2. உற்பத்தி செய்தவற்றை பரிவர்த்தனை செய்வதற்கும், பரிவர்த்தனைக்காகவே உற்பத்தி செய்வதற்கும் என்ன வேறுபாடு?
  3. “செல்வ இயலை” இயற்கைக்கு மாறானதாக அரிஸ்டாட்டில் கருதியது சரியா?
  4. அடிமைகளை உடமையாகக் கொண்டிருந்த சமூகத்தில் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சி நடைபெறவில்லை என்று நூலாசிரியர் கூறுவது ஏன்?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க