“புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக கருத்தரங்கம் 25/01/2019 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது.

மொழிப்போர் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் கூட்ட பங்கேற்பாளர்கள்.

இக்கருத்தரங்கிற்கு CCCE-ன் ஒருங்கிணைப்பாளர் பேரா வீ. அரசு தலைமை தாங்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போலீசின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான தியாகிகளுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து UAPA-வின் பிரிவில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்ய முயற்சிக்கும் மோடி அரசை கண்டித்தும் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும்  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் வீ. அரசு

தலைமை உரையாற்றிய பேராசிரியர் வீ. அரசு ஐரோப்பாவில் கத்தோலிக்க மத நிறுவனம் எப்படி அறிவியல் வளர்ச்சியை ஆரம்ப காலத்தில் இருந்தே தடுத்து வந்தது என்பதையும் அறிவியல் வளர்ச்சி மத கருத்துகளுக்கு எதிரான சமூக போராட்டங்களாக மாறியதையும்  உதாரணங்களோடு விளக்கி பேசினார்.

தமிழகத்தில் 1870-களில் சென்னை லௌகீக சங்கம் என்ற அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பத்திரிகைகள் வாயிலாக பரப்பியுள்ளனர். இந்தியாவில் பகவத் கீதையில் சொல்லப்பட்ட “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ……” என்ற முட்டாள் தனமான வசனங்களே வழிகாட்டியாகயுள்ளது என்று தனது வேதனையை தெரிவித்துப் பேசினார்.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் உயர் சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜாதியின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாய்  மக்கள் அடிமையாக்கபட்டு உரிமைகள் மறுக்கபட்டு வந்துள்ளது. பாதிக்கபட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்றால் அது ஜாதி அடிப்படையில் தான் வழங்க முடியும். அரசியல் சாசனத்தில் கூட socially and educationally backward என்றுதான் உள்ளது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என திருத்தம் முன் மொழியபட்டபோது கூட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தத்தை நிராகரித்ததை விளக்கி பேசினார்.

பேராசிரியர் கதிரவன்

இந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 14,18,000 பேராசிரியர்களில் 4 லட்சம் பேராசிரியர்கள்தான் SC/ST பிரிவினர் இருக்கின்றனர்.  மேலும் 3% உள்ள பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகளிலும் ஐ.ஐ.டி.-களிலும் சுமார் 70 சதவிகிதம் ஆக்கிரமித்திருக்கின்றனர். தற்போது வழங்கப்பட்டுள்ள உயர்சாதி இடஒதுக்கீடு, பார்பனர்களின் ஆதிக்கத்தை  அதிகரிக்கவே செய்யும் என்று விளக்கினார்.

மேலும் தனி நபர் வருமான வரிக்கு அரசு வைத்திருக்கும் குறைந்தபட்ச வருமான இலக்கு 2.5 லட்சம். ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருள்கள் பெற அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு வருமானம் ரூ.72,000. SC/ST மானவர்கள் metric scholarship பெறுவதற்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம். ஆனால் உயர்சாதியில் ஏழைகள் என்று தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம். மோடி அரசின் உயர்சாதி பத்து சதவிகித இடஒதுக்கீடு உயர்சாதிக்கு சார்பான திட்டம் என்பதையும் விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார்.

தற்போது  நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய  தீர்ப்பு,  பிற்பட்ட/தாழ்த்தபட்ட சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை  எப்படி மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது என்பதையும் விளக்கினார். இத்தீர்ப்பின் படி  மொத்தமாக கணக்கிடப்படும் பல்கலைக்கழகத்திற்கான இட ஒதுக்கீடு என்பது  துறை சார்ந்த இட ஒதுக்கீடாக மாற்றப்பட்டுள்ளது. பொதுப் போட்டியின் மூலம் உயர்கல்வி, வேலைகளுக்கு பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து   வருபவர்களின் எண்ணிக்கையை  உயர் சாதி இட ஒதுக்கீடு குறைக்கச் செய்யும் என்று பேசினார்.

மருத்துவர் எழிலன்

இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள்  நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது என்பதை விளக்கி பேசினார். இந்நிலையில் RSS-BJP கூட்டத்திலிருந்து பலரும் வேத – புராண – இதிகாச குப்பைகளை அறிவியல் என பேசிவருவதையும் உதாரணங்களோடு கூறினார்.

அதன் பின் இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல்  என்ற தலைப்பில் பேராசிரியர் முருகன் உரையாற்றினார்.

பேராசிரியர் முருகன்

இந்தியாவில் உள்ள சாதி படிநிலையை நியாயப்படுத்தவே புராணக் குப்பைகளை உண்மை போல சித்தரிக்கிறார்கள் என்பதை விளக்கினார். போலி அறிவியலை பேசுபவர்கள் உண்மையான அறிவியல் கோட்பாட்டை பேசுவதோடு  தங்கள் கருத்துக்களையும் சேர்த்து பேசுவார்கள். விஞ்ஞானிகளின் கோட்பாடுகளை ஒரே அடியாக நிராகரிப்பார்கள். இப்போக்கு இந்திய அறிவியல் பேராயத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது என்று விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து அறிவியக்கத்தின் தேவை பற்றி முனைவர் ரமேஷ் பேசினார்.

RSS-BJP ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் என இந்நாட்டின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் தொடர்ந்து வேத-புராணக் குப்பைகளை அறிவியல் தொழில்நுட்பம் என பொது வெளியில் தொடர்ந்து பேசிவருகின்றனர். பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில்  திணிக்கின்றனர்.

உதாரணமாக  அடுத்த கல்வியாண்டிலிருந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், யோகா மற்றும் வேத-புராணங்களை கட்டாய பாடமாக்கியுள்ளனர். இக்கருத்துக்கள் அனைத்தும் RSS முகாமிலிருந்து தயாரிக்கப்பட்டவை.

முனைவர் ரமேஷ்

இவைகளனைத்தும் அறிவியலுக்கு முரணானவை என்று RSS-BJP கும்பலுக்கு தெளிவாக தெரியும். இருந்தும் இவைகளை முன்தள்ளுவதற்கு காரணம் மாணவர்களுடைய சமூக கண்ணோட்டத்தை பார்பனியமாக்குவதன் மூலம் அவர்களை அடிமைகளாகவும் அவர்களிடமிருந்து எதிர்ப்பற்ற சுரண்டலையும் உறுதிப்படுத்த முடியும். பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காகவும், பெருமுதலாளிகளின் லாப பெருக்கத்திற்காகவே இதனை செய்கின்றனர்.

ஆகவே போலி அறிவியலுக்கு எதிரான போராட்ட மற்றும் பகுத்தறிவு பற்றிய விவாதங்கள் வெறும் கல்லூரிகளுக்குள் மட்டும் நடந்தால் போதாது. சமுதாயத்தோடு இணைக்கப்பட வேண்டும். அதற்கு பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவரமைப்புகள், பெற்றோர்கள் என அனைவரும் சேர்ந்த ஒரு இயக்கத்தின் வாயிலாகவே சாத்தியமாகும். அதற்கான ஒரு சிறு முயற்சியே பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழுவின் இக்கூட்டம் என்று பேசினார்.

இறுதியாக கூட்டம் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு
(Co-ordination Committee for Common Education)
சென்னை
பேச : 72993 61319, 94443 80211


இதையும் பாருங்க ..

போலி அறிவியல் பேசும் இந்திய அறிவியல் மாநாடு | Prof. Murugan

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க