கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! என்ற அரசியல் முழக்கத்தின்கீழ் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் பத்தாயிரக்கானோர் கலந்த கொண்ட மிக பெரிய மாநாடு பொதுமக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது. அதன் தொடர்ச்சியாக அந்த மாநாட்டின் அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள முத்துரங்கன் சாலையில் நடைபெற்றது. இந்த விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தை, மக்கள் அதிகாரம் அமைப்பின் சேத்துப்பட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். “பல தடைகள்மீறி இந்த பொதுக்கூட்டத்தை இன்று நடத்திக் கொண்டிருக்கிறோம். கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் என்கின்ற மாநாட்டின் முழக்கத்தை தொடர் இயக்கமாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

தோழர் புவனேஸ்வரன்.

ஜனநாயக சக்திகள், முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரின் குரல்வளையை நசுக்குகிறது கார்ப்பரேட் – காவி பாசிசம். இதனை எதிர்க்கவில்லை என்றால் பாசிசம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிடும். தற்போதுள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த கட்டமைப்பினுள் தீர்வு இல்லை. ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடுவதே தீர்வு” என தலைமை உரையில் பேசினார்.

தோழர் சி. ராஜூ.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், சி. ராஜூ அவர்கள், “கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்” என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு செல்கிறோம். நாம் எப்படிப்பட்ட எதிரியோடு மோதவிருக்கிறோம், எப்படிப்பட்ட எதிரியை எதிர்த்துப் போராடப் போகிறோம் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிறகு இப்பொழுதுதான் சென்னையில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. மக்கள் அதிகாரம் தேர்தலில் நிற்கலாம் என்கின்றனர். தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்தால் பள்ளிக்கூட கட்டணம் குறையுமா, மருத்துவ செலவு, மின்சார கட்டணம், வீட்டு வாடகை, விலைவாசி குறையுமா? விவசாயி, தொழிலாளி, சிறுகுறு வியாபாரிகளின் பிரச்சினை தீருமா? எந்த மாற்றம் நம் வாழ்க்கையில் வரும்? மக்களின் அன்றாட பிரச்சினைக்கு இந்த அரசு கட்டமைப்பில் எந்தத் தீர்வுமில்லை; ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் தோற்று திவாலாகிவிட்டது. இப்படியிருக்கையில் மக்கள் அதிகாரம் மட்டும் எப்படி தேர்தலில் நின்று பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் எஜமானர்கள், அப்படிப்பட்ட மக்களிடம்தான் அதிகாரம் இருக்க வேண்டும்” என்றும்; “பேருந்து ஒன்று பழுதடைந்துவிட்டது என்றால் அந்த பேருந்தைதான் மாற்றவேண்டுமேயன்றி ஓட்டுநரை மாற்றுவதால் எந்தப் பயனுமில்லை” என்று தன் சிறப்புரையை முடித்தார்.

தோழர் திலகவதி.

அடுத்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் திலகவதி அவர்கள், கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டு பிரச்சாரத்தின்போது மக்கள் அதிகாரம் அமைப்பு சந்தித்த இன்னல்களையும், பிரச்சாரத்திற்கு தடையாக இருந்த காவல்துறையை, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை, மக்களுடனும் இதர ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து எப்படி எதிர்த்து நின்று வென்றனர் என்று விளக்கினார்.

தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்கள், “பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்த ஐந்தாண்டுகளில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துள்ளது. மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த கார்ப்பரேட் – காவியை எதிர்த்தால் ஆண்டி இந்தியன், தேசத்துரோகி என முத்திரைக் குத்துகிறது. இந்த மண்ணை மதவெறி மண்ணாக மாற்றத் துடிக்கும் மதவெறி கும்பலையும், சாதிவெறி கும்பலையும் நாம் அனைவரும் கரம் கோர்த்து எதிர்த்து நிற்கவேண்டிய தருணம் இது” என்றார்.

தோழர் சி.மகேந்திரன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன் அவர்கள், “மக்கள் அதிகாரம் அமைப்பு காவி பாசிசத்தின் அபாயத்தை தமிழகம் முழுவதிலும் கொண்டு சென்று, வீரம் செரிந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. வெறிப்பிடித்த இந்த காவி பாசிசத்தை விரட்ட தேர்தலை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றிணைய வேண்டும். கொள்கை மாறுபாடு, சித்தார்ந்த வேறுபாடு இருந்தாலும் பாசிசத்தை எதிர்க்கும் போராட்டக்களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்புடன் ஒன்றுப்பட்டு நிற்கும்” என்றார்.

தோழர் தியாகு.

உரிமைத் தமிழ் தேசத்தின் ஆசிரியர் தியாகு அவர்கள், “இந்த அரசு பெரும் குழுமங்களின் நலன்களை காக்கும் அரசு. 10% பணக்காரர்களின் சொத்து மதிப்பு 75%  மக்களின் சொத்து மதிப்பிற்கு சமம். இந்த தேர்தலில் தேனீர் கடைக்காரரோ அல்லது ஒரு தொழிலாளியோ போட்டியிட்டு வெல்ல முடியுமா? ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறிவிட்ட போது இதிலே எப்படி எங்களை போட்டியிட சொல்கிறீர்கள். இந்திய பாசிசத்தின் இரட்டை முகங்கள் ஒன்று நரேந்திர மோடி, மற்றொன்று ராகுல் காந்தி, அதாவது பி.ஜே.பி.யும் காங்கிரசும். திருச்சி மாநாட்டில் அருந்ததிராய் அவர்கள் மிக அழகாக சொன்னார், 80-களில் இரண்டு பூட்டுகள் திறக்கப்பட்டது ஒன்று பாபர் மசூதியின் பூட்டு மற்றொன்று இந்திய சந்தைக்கான பூட்டு. வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுக்கும் கொள்கையோ, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை கொடுக்கும் கொள்கையோ இந்த அரசு வைத்திருக்கவில்லை. மாறாக, பெரும் குழுமங்கள் வளர்ப்பதற்காகதான் கொள்கை வைத்திருக்கிறது. அதே கொள்கையை வைத்திருக்கும் மற்ற கட்சிகளுக்கு எப்படி ஓட்டுப் போட்டு நம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

தோழர் மருதையன்.

இறுதியாக, சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர் மருதையன் அவர்கள், “கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்” என்ற மக்கள் அதிகாரத்தின் மாநாட்டை பல தடைகளையும், அடக்குமுறைகளையும் கடந்து திருச்சி நகரில் பெருந்திரளான மக்களும் தோழர்களும் கூடியிருக்க வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. எதிர்த்து நில் என்ற இந்த முழக்கம் யாருக்கு போய் சேர்ந்ததோ இல்லையோ நிச்சயமாக எதிரிகளுக்குப் போய் சேர்ந்திருக்கிறது. பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் அவர்கள் ஏற்படுத்திய தடைகள், பிரச்சாரம் செய்த தோழர்களுக்கு எதிராக அவர்கள் தொடுத்த தாக்குதல்கள் இவை மக்கள் அதிகாரம் அமைப்பிற்கும் தோழர்களுக்கும் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், என்றும், பெரிய கட்சிகள், ஆளும் கட்சிகள், இலட்சக்கணக்கான உறுப்பினர்களை வைத்திருப்பதாகச் சொல்லக்கூடிய கட்சிகள் இவர்களை கண்டு பார்ப்பன பாசிஸ்டுகள் அஞ்சவில்லை. சிறிய இயக்கம், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் Fringe Element என்று சொல்லக் கூடியவர்களைக் கண்டு பாசிஸ்டுகள் அஞ்சுகிறார்கள். இந்த முழக்கம் தமிழக மக்களிடையே செல்வாக்கு பெற்றுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதன் விளைவாகத் தான் இந்தத் தாக்குதல். என்றார். எதிர்த்து நில் என்ற இந்த முழக்கத்தை இந்த அரசு கட்டமைப்பிற்குள் மாற்ற முடியாது. மக்களை போராடுபவர்களாக, போராடும் சிந்தனையுடையவர்களாக மாற்றியமைப்பதன் மூலமே சாத்தியம். வெறுமனே வாக்குச் சீட்டு மாற்றிவிடாது, என்றார்.

விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு இடையிடையே நடந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல்கள் பாடப்பட்டது.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை – மண்டலம்.


இதையும் பாருங்க …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க