மருத்துவர் கண்ணன்முதல் கேள்வி புரோட்டா சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள், இதனால் வரக்கூடிய தீங்குகள் என்னவென்று விளக்கவும்?.

விடை : புரோட்டா எதில் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் கோதுமையில் இருந்து தயாரிக்கிறார்கள். கோதுமை மேல்தோலை நீக்கி ப்ளீச் செய்து மைதா தயாரிக்கிறார்கள். இவ்வாறு தயாரிக்கும் போது அதில் பல கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாகவும், இந்த கெமிக்கல்கள் கணையத்தை தாக்கி டயாபட்டிக் நோயை உண்டு பண்ணும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி அறிவியல் தேடுதல்களிலும் சரியான விடை கிட்டவில்லை. ஆனால், மைதா முழுக்க முழுக்க சர்க்கரை நிரம்பிய ஒரு பொருள் அதில் சர்க்கரையை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதனால், புரோட்டா மட்டும் மைதாவில் தயாரிக்கப்படுவதில்லை, அதைத் தவிர ரொட்டி, கேக் முதலிய பேக்கரி ஐட்டங்கள் அனைத்தும் மைதாவால் தான் தயாரிக்கப்படுகின்றன. புரோட்டா மேல் உள்ள பயத்தினால், அதை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், ரொட்டி முதலிய பண்டங்களை காலை உணவாக உட்கொள்ளும் பழக்கம் அதிக பேரிடம் உள்ளது. ரொட்டியும் மைதாவில் தயாரிக்கப்படும் உணவுதான்.  இந்தக் கேள்விக்கு ஏற்றவாறு பரோட்டா உண்டால் சர்க்கரை வருமா, இல்லையா? என்பதற்கான விடை எனக்கு தெரியாது. அதை பற்றி நான் ஒன்றும் கூறவிரும்பவில்லை.

ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், பரோட்டா உண்டால் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும். அதேபோல் சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் மைதா உண்டால் சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதேபோல் புரோட்டா தயாரிக்கும்போது அதில் அதிகம் எண்ணெய் ஊற்றுகிறார்கள். நான் பல பேரிடம் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணெய் கூறினார்கள். இதனால் அதில் அதிகம் “Transfats” கலந்திருக்க வாய்ப்புள்ளது. புரோட்டாவை பொறுத்தவரை இரண்டு விடைகள் ஒன்று மைதா முழுக்க முழுக்க சர்க்கரையால் ஆனது. இரண்டாவது சுகாதாரமற்ற எண்ணெய். இந்த இரண்டு காரணங்களால் புரோட்டாவை நாம்  எப்போதாவது உணவாக எடுத்துக் கொள்ளலாமே அன்றி அடிக்கடி உண்பது நல்லதல்ல.

பொதுவாக மூன்று பாய்சன் என்று கூறுவார்கள் முதலாவது சீனி அல்லது சர்க்கரை இரண்டாவது உப்பு மூன்றாவது white rice இதை எந்த அளவு உட்கொள்ளலாம், பாஸ்சன் என்று கூறுவது சரியா?

விடை:  எந்த ஒரு உணவையும் அளவாக உட்கொண்டால் கெடுதல் இல்லை. உதாரணத்திற்கு முன்னர் மைதாவை பற்றி பேசினோம். அதேபோல் வெள்ளை சர்க்கரை என்று கூறுகிறார்கள். இது கெடுதல் எனவே, நாட்டு சக்கரை விரும்புகிறார்கள். நம் உடலுக்கு சக்கரை என்றுதான் தெரியுமே, தவிர அது நாட்டுச்சக்கரை என்பது தெரியாது. இன்னும் சில பேர் வெள்ளை சர்க்கரையை தயாரிக்கும் போது, அதில் அதிக கெமிக்கல்கள் கலப்பதாக கூறுகிறார்கள். இவை உடலுக்கு தீங்கு என்றும் சொல்கிறார்கள். இதுவும் இன்னும் ஆய்வுப்பூர்வமாக  நிரூபிக்கப்படாத ஒன்று.

எந்த ஒரு அரசாங்க ஆய்வகமும் அல்லது சுகாதார நிறுவனமும் வெள்ளை சர்க்கரை தீங்கு என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கவில்லை. மேலும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடவும் இல்லை. இவ்வாறு இருக்கையில் வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கானது என்று நான் கூற முடியாது. ஆனால், அதேவேளையில் வெள்ளை சர்க்கரை கெடுதல், நாட்டு சக்கரை உடலுக்கு தீங்கானது இல்லை என்ற கூற்றையும் ஏற்க முடியாது.

எந்த சர்க்கரையானாலும், அது உடலில் சர்க்கரை அளவை கூட்டத்தான் செய்யும். உதாரணம் 100 கிராம் வெள்ளை சர்க்கரையும், 100 கிராம் நாட்டு சர்க்கரையும் உடலில் ஒரே அளவு சர்க்கரையைதான் சேர்க்கும். எதுவுமே அளவுக்கு அதிகமானால் தீங்குதான். அடுத்து அரிசி, சில பேர் இட்லி பற்றி கூறுகையில் என்னிடம் கேட்பார்கள் “ஏன் சார் இட்லி சாப்பிட வேண்டாமெனக் கூறுகிறீர்கள் ?” என்று.

நான் அவ்வாறு கூறவில்லை.  இட்லியை ஒருவேளை உண்ணலாம். இரண்டுவேளையும் உணவாக இட்லியை உட்கொள்ள முடியுமா?. 1960-களில் இட்லி என்பது ஒரு பலகாரம். பசுமைப் புரட்சிக்கு பின்புதான் அரிசியின் விலை குறைந்து, அரிசி  எல்லோருக்கும் சென்று சேரும் ஒரு பொருளாக மாறியது. இதற்கு பிறகுதான் இட்லி பெருவாரியாக உண்ணப்படுகிறது.

காலை உணவாகவும் இரவு உணவாகவும் இட்லி அல்லது தோசை உணவில் சேர்ப்பது சர்க்கரை அளவை அதிகப்படுத்தத்தான் செய்யும். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள்தான் அதிகம் உண்ண வேண்டாம் என்று கூறுகிறோம். மற்றவர்கள் இதை உண்ணலாம். ஆனால், அதிகம் உண்டால் விளைவுகளை நாம் ஏற்கத்தான் வேண்டும். இதன் மூலம் இட்லி நம் பாரம்பரிய உணவு என்று கூறுபவர்களின் கூற்றை நான் நிராகரிக்கிறேன்.

கடந்த 40,50 ஆண்டு காலமாகத்தான் நாம் இட்லியை உண்கிறோம். அதற்கு முன்பு அது ஒரு பலகார வகைதான் இவைகளில் ஒயிட் ரைஸ்க்கு பதிலாக ரெட் ரைஸ்  சாப்பிடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின்கள் உள்ளது. ஆனால், சர்க்கரையானது  ஒரே அளவுதான்.  சிலர் கூறுவதுபோல், இந்த வகை அரிசியைக் கொண்டு வந்ததால், பழைய வகை அரிசி இல்லாமல் போய்விட்டது. இதுதான் சர்க்கரை நோய்க்கான காரணம் என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தானியங்களில் இவ்வாறு உள்ளதென்றால், சிறுதானியங்கள் உண்ணலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாக உண்ணலாம் ஆனால், சர்க்கரை அளவு சிறுதானியங்களிலும் அதே அளவுதான் உள்ளது.

அடுத்து வெள்ளையாக இருப்பது உப்பு, உப்பை பொருத்தவரை உப்பில்லாமல் சாப்பிட்டால் நல்லது என்று சிலர் கூறுவார்கள். அது தவறு, தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக மிஞ்சினால் உடலுக்கு தீங்கு. .

அடுத்த கேள்வி, அடுத்து வெள்ளையாக பால் உள்ளது, பாலானது அதிக கொழுப்புச் சத்து நிறைந்தது, செரிமானக் கோளாறை உண்டாக்கும், மனிதனுக்கு ஏற்ற உணவல்ல என்று சமூக வலைதளங்களில் சிலர் கூறுகிறார்கள் இதைப்பற்றி தங்களது கருத்து.

விடை:  பால்  மிகச் சிறந்த உணவு அதில் சந்தேகமே வேண்டாம். கொழுப்பு பற்றிய பயம் உண்டான பின்பு இந்தக் கேள்வி அதிக அளவு கேட்கப்படுகிறது. எப்போது  அமெரிக்க  நார்த்  அசோசியேஷன், கொழுப்பு இல்லாத பாலை பருகச் சொன்னார்களோ, அன்று முதல் சிலர் கொழுப்பில்லாத பாலை பருகிறார்கள். ஆனால், கொழுப்பு நிறைந்த பாலை உண்பவர்களுக்கும் கொழுப்பில்லாத பாலை உண்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியது, இதில் கொழுப்பு இல்லாத பாலை உண்பவர்களிடம் டயாபடீஸ்  மற்றும் இறப்பு விகிதம் கூடியுள்ளது எனவே பாலை அப்படியே உட்கொள்வது சிறந்தது.

பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும், ஜூஸாகவோ அல்லது பழச்சாற்றை மட்டும் குடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு முழுமையான சத்தை கொண்டு சேர்க்காது என்று கூறினீர்களே அதைப்பற்றி விளக்குங்கள்.

விடை: பழங்களை உணவாக உட்கொள்ளும்போது  முழுவதுமாக உண்கிறீர்கள். அப்போது பழங்களில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் அத்தனையும் நம் உடலுக்கு சென்று சேர்கிறது. அதுவே ஜூஸாக பருகும்போது ஆவியாகி விடும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல், பழங்களை ஜூஸ் ஆக்கிய பின் வடிகட்டி விடுகிறோம் இதன்மூலம் பழங்களில் உள்ள சர்க்கரை மற்றும் சிறிது வைட்டமின் மட்டுமே நம் உடலில் சென்று சேருகிறது மீதி சத்துக்களை நாம் இழக்கின்றோம். ஜூஸாக பருகும்போது  நாம் இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் பருகி விடுகிறோம்.

மெதுவாக உண்பதுபோல் உண்ண முடியாது, மேலும் பழங்கள் ஜூஸாக பருகும்போது இனிப்புச் சுவையை இழந்துவிடுகிறது. எனவே நாம் கூடுதலாக அதில் சர்க்கரையைச் சேர்க்கிறோம், இவை நம் உடலில் கலோரிகளையும் சர்க்கரையையும் அதிகம் சேர்க்கின்றன. இதுவே பழங்கள் அளவில் சிறியதாக  இருந்தாலும் மென்று சாப்பிடும்போது, அந்த சத்துக்களை முழுமையாக நாம் பெறுகிறோம் எனவே பழங்களை அப்படியே உண்பது நல்லது.

இப்போது நிலவுகின்ற பொருளாதார கட்டமைப்பு காலை உணவையோ அல்லது வேறு உணவையோ வேகமாக உண்ணும் பழக்கம் பரவலாக உள்ளது.  மேலும் விரல்விட்டு மற்றும் எத்தனை ஸ்பூன்கள் என எண்ணிக்கையிலும் குறிப்பிடுகிறார்கள் இதைப் பற்றி விளக்குங்கள். அதேபோல் ஒயிட் ரைஸ் சாப்பிடுவது கெடுதல் எனில் சப்பாத்தி உண்கிறார்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அதையே உண்கிறார்கள் இது சரியா?

விடை: வேகமாக உண்பது என்பது தவறான அணுகுமுறை, காரணங்கள் நாம் வாயில் உணவை மென்று உண்ணும்போது நம் உமிழ்நீரானது உணவில் கலக்கிறது அப்போதே செரிமானம் ஆரம்பமாகிறது. மேலும், நாம் வாயில் உணவை முதலில் அசை போடும்போது இரைப்பை அதற்குத் தயாராகிறது. நாம் உணவை உண்கிறோம் என்ற உணர்வை தூண்டிவிடும் செயலும் நடக்கிறது. எனவே, உணவை சிறிய அளவில் உண்டாலும் அதை நன்கு மென்று உண்ணும்போது அதற்கான நியூட்ரிஷன்கள் முழுவதையும் நாம் அடைகிறோம், அதேபோல் செரிமானமும் நன்றாக இருக்கும் போதுமென்ற மனப்பாங்கும் நமக்கு உண்டாகும்.

படிக்க :
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ உங்கள் குழந்தைகள் பாதுகாப்பானதா? நீங்களும் பாதுகாப்பானவர்களா?

அடுத்ததாக வெள்ளை அரிசிக்கு பதிலாக கோதுமை சப்பாத்தியை உண்டால் நல்லது என எண்ணுகிறார்கள். இதுவும் தவறு இந்த எண்ணம் எவ்வாறு உண்டானது என்று தெரியவில்லை. வடமாநிலங்களில் முழுவதுமாக சப்பாத்தி, ரொட்டிதான் உண்கிறார்கள். வட மாநிலங்களில்தான் சர்க்கரையும் உடல் பருமனும் அதிகம். இந்த சின்ன விஷயம் கூட தென்படாமல் போனது வேடிக்கையாக உள்ளது. சப்பாத்தி உண்டால் அதிகம் பலன் இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்திருக்கிறோம். அரிசியோடு ஒப்பிடுகையில் சப்பாத்தியில் கொஞ்சம் புரதம் அதிகம் அதேபோல் சர்க்கரையும் கொஞ்சம் குறைவு. ஆனால், கோதுமையும் முழுக்க முழுக்க சர்க்கரையால் ஆன ஒன்றுதான்.

எடுத்துக்காட்டிற்கு சர்க்கரை நோயாளியாக சர்க்கரையின் அளவை சப்பாத்தி உண்பதற்கு முன்பும் பின்பும் பரிசோதித்து பார்த்தால் தெரியும். எனவே, அரிசி உண்ண வேண்டாம் என்றால் சப்பாத்தியை உண்ணலாம் என்ற கூற்று தவறானது. இரண்டையுமே குறைத்துக்கொள்ளவேண்டும்.  நான் முன்னமே கூறியதுபோல் அரிசி, கோதுமை, கேழ்வரகு, கேப்பை, குதிரைவாலி, வரகு, தினை முதலிய அனைத்தும் நிறங்களும் சுவையும் மட்டுமே வேறு வேறு அன்றி சர்க்கரையானது அனைத்திற்கும் பொதுவானதுதான். எனவே இதற்கு பதில் அது ! அதற்கு பதில் இது ! என்று நாம் எடுக்க முடியாது. இவற்றிற்குப் பதிலாக மாற்று உணவை நாம் தேட வேண்டும். இதுதான் உண்மை.

பயிர் வகைகள் அதிகம் உட்கொண்டால் வாயு பிரச்சினை வரும் என்கிறார்கள் அதை பற்றி விளக்கவும்?

விடை: வாயு என்ற சொல்லே மிகவும் தவறாக உபயோகிக்கப்படுகிறது. வாயு என்றால் என்னவென்று கேட்டால், ‘கேஸ்’ என்பார்கள். அதேபோல் ‘கேஸ்’ என்றால் என்னவென்று கேட்டால் வாயு என்பார்கள். அதைப்பற்றி இதற்கு மேல் எதுவும் கூற மாட்டார்கள். நம் உடலில் மூன்று இடங்களில் மட்டுமே வாயு இருக்கும். ஒன்று நுரையீரல், நாம் சுவாசிக்கின்றோம். அதேபோல் வாய்வழியாக காற்றை எடுக்கும்போது குடல் காற்றை வாய் வெளியே தள்ளுகிறது அல்லது ஆசனவாய் வழிகாயக வெளியே தள்ளுகிறது. அடுத்ததாக சைனஸ்.. நமது கண்களைச் சுற்றி காற்று உள்ளது. இவைகளைத் தவிர வேறு எங்கும் நம் உடலில் வாயு என்பது கிடையாது.

சில பேர் கூறுவதுபோல், “உருளைக்கிழங்கு சாப்பிட்டேன், அதனால் தசைகளில் வாயு பிடித்துக் கொண்டது” என்பதெல்லாம் நடைமுறையில் இல்லாத ஒன்று. அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும், தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும், முட்டைக்கோஸ் சாப்பிட்டால் ‘கேஸ்’ பிடிக்கும், உருளைக்கிழங்கு சாப்பிட்டால் ‘கேஸ்’ பிடிக்கும். இவற்றை எல்லாம் வழக்கமாக சொல்லி.. சொல்லி.. அவற்றை உண்மை என்றே மக்கள் நம்புகிறார்கள்.

இது பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்ட ஒன்று. உதாரணம் நாம் மூன்று வேளையும் அரிசிச் சோறு சாப்பிட்டுக் கொண்டு ஒரு வேளை மட்டும் திடீரென்று வேறு உணவை உட்கொள்கிறோம் என்றால் உடலில் ஏற்படும் மாற்றத்துக்கு அந்த உணவுதான் காரணம் என்று நாம் நம்புகிறோம். இது அந்த உணவால் ஏற்பட்டதாயினும் இதை மறுபடியும் உட்கொள்ளும்போது நம் உடலானது அதற்கு பழகிக்கொள்ளும். நம் மனம்தான் அதை ஏற்க மறுக்கும்.

உதாரணத்திற்கு நான் உங்களை ஜப்பான் நாட்டில் கொண்டு சென்று விடுகிறேன். ஒருவாரத்திற்குள் திரும்பிவர பயணச்சீட்டு உங்கள் கையில் ஒப்படைக்கிறேன் என்றால், நீங்கள் பெரும்பாலும் ரொட்டி மட்டும் உண்டுவிட்டு திரும்பி வந்து நமது ஊர் உணவை உண்பீர்கள். அப்போது நமது  ஊர் உணவு அமிர்தம் போல் உங்களுக்குத் தென்படும்.

இதுவே உங்களை ஜப்பானிலேயே விட்டுவிடுகிறேன் என்றால், நீங்கள் என்னைப் பல முறை திட்டுவீர்கள், உணவுமுறை சரியில்லை என்று. ஒரு கட்டத்தில் அந்த உணவை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உங்கள் உடல் வந்ததும் மனதும் பழகிவிடும். சிலபேருக்கு சில உணவினால் ஒவ்வாமை ஏற்படலாம் அன்றி பெருவாரியான மக்களுக்கு அது பொதுவானது கிடையாது.

உதாரணத்திற்கு கத்திரிக்காய் உண்டால் சில பேருக்கு அரிப்பு ஏற்படலாம். இதெல்லாம் பெருவாரியான மக்களுக்கு பொருந்தும் என்று நாம் கூற இயலாது.

ஜப்பானை பற்றி இடையில் கூறினீர்கள் இப்போது கொலஸ்ட்ராலானது  சிறு குழந்தையில் இருந்தே தத்துக் குழாயில் படிய ஆரம்பிக்கிறது சில குழந்தைகள் நூடுல்ஸை விரும்பி உண்கிறார்கள் அதன் பக்கவிளைவுகளை  சிறிது விளக்குங்கள்.

விடை : முழுக்க முழுக்க மைதா-தான் நூடுல்சில் கலக்கப்படும் மசாலாவை நாக்கில் வைத்துப் பார்த்தால் சுருக்கென்று இருக்கும். அது முழுக்க முழுக்க ருசிக்காக மட்டுமே தயாரிக்கப்படும் ஒன்று. அதை தொடர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக ஆபத்துதான். அவ்வாறு உண்டால் குழந்தையின் உடல் பருமனுக்கு நாம் வழி அமைத்துக் கொடுக்கிறோம். மேலும் அந்த மசாலாக்களில் நிறைய கெமிக்கல்கள் சேர்க்கப்படுவதாக கூறுகிறார்கள். அவை பற்றி எனக்கு தெரியாது எனினும் அது உடலுக்கு நல்லது இல்லை என்பதை நாம் உணர்ந்துதான் ஆக வேண்டும்.

ஜப்பானைப் பொறுத்தவரை அவர்கள் உண்பது மைதா நூடுல்ஸ் கிடையாது. அரிசியால் ஆன நூடுல்ஸ்தான் அவர்கள் உண்கிறார்கள். ஜப்பானியர்களும் நம்மைப் போல் அரிசியைத்தான் உண்கிறார் ஆனால் அவர்கள் ஒல்லியாகவே உள்ளார்கள் எப்படி ஏனென்றால் அவர்கள் இரண்டு ஸ்பூன்கள் வைத்திருப்பார்கள். ஒரு சிறிய கோப்பையில் அரிசியையும், மற்றொன்றில் மட்டனையும் மற்றொன்றில் நீர் போன்ற ஒன்றையும் வைத்திருப்பார்கள். நாம் உண்பது போல் அதிக அளவு அரிசியை அவர்கள் உண்பதில்லை நாம் குறைவாக உண்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, அதிகமாக உண்டு வருகிறோம். முதலில் நாம் அரிசியை அதிகமாக உண்கிறோம்  என்று  உணர வேண்டும். அப்போதுதான் குறைப்பதற்கான வழி தேடுவோம்.

நம் தேவையானது மிகவும் குறைந்து விட்டது சில பேர் கூறுவதுபோல் நம் தாத்தா பாட்டி எல்லோரும் கேப்பை களி என உண்டார்கள் அவர்கள் ஒல்லியாகத் தானே இருந்தார்கள்.? உண்மைதான் ஆனால் அவர்கள் அந்த அளவுக்கு உழைத்தார்கள்.

low sodium salt என்பதை அறிமுகம் செய்கிறார்கள். அதை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இது சரியானதுதானா இதைப் பற்றிய தங்களது கருத்து?

விடை: இதற்கான விடை எளிமையானது. Low Sodium Salt ஆயினும் அல்லது நார்மலான உப்பு ஆயினும் நமக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவுதான் போடப் போகிறோம். நீங்கள் கூறும் சோடியம் குறைவான உப்பில் உப்புச்சுவை குறைவு எனில் நாம் அதற்கேற்ற அளவு அந்த உப்பை நம் உணவில் அதிகமாக சேர்ப்போம். எனவே, அளவு மாறுபடுமேயன்றி உள்ளே சென்று சேரும் உப்பானது, ஒரே அளவுதான். இதேபோல் வேறு சில உப்பு வகைகளை சிலர் கொண்டு வருகிறார்கள்.

படிக்க :
♦ சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?
♦ சர்க்கரையின் அறிவியல்

இதில் சோடியம் குறைவு எனினும் பொட்டாசியம் அதிகம். சோடியம் கூட சிறுநீர் வழியாக வெளியேறி விடும். ஆனால், பொட்டாசியம் வெளியேறாவிட்டால் சுகர் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு இது பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். நாம் முன்னமே கூறுவதுபோல் எதையும் அளவாக உட்கொண்டால் பிரச்சினை கிடையாது. நாம் சரியானவற்றைதான் உண்டு வருகிறோம். அளவுக்கு மீறி உண்ணும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. அது மைதாவாகினும் முட்டை, கீரை என எதுவாகினும் அளவாக உட்கொண்டால் எந்த தீமையும் கிடையாது. அளவுக்கு மீறும்போதுதான் பிரச்சினை உண்டாகிறது. நாம் வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் உணவு பற்றிய பல வீடியோக்கள் நம்மை அச்சுறுத்துவதாக உள்ளன.

“இந்தப் பழம் சாப்பிட்டால் இந்த நோய் வரும். இதைச் சாப்பிட்டால் இந்த நோய் வரும்.” என பெரும்பாலானவை நம்மை அச்சப்படுத்துகின்றன. இவை தவறான செயல். எதற்காக இந்த வீடியோக்கள் என்று தெரியவில்லை.

ஒரு வீடியோவில் ஒருவர் ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகள் உண்டு என்று கூறுகிறார். அந்தப் பழத்தில் அவ்வளவு நன்மை உள்ளதால் நாம் அதை தினந்தோறும் உண்ண முடியுமா? அப்படி உண்டால், நம் உடலுக்கு தீங்குதான். எனவே “இந்தப் பழம் நல்லது. அந்தப் பழம் நல்லது” எனக் கூறுவது தவறு. காரணம், கெட்ட பழம் என்று ஒன்று கிடையாது. கெட்ட காய்கறி என்று ஒன்று கிடையாது. இவ்வாறு பரப்புவதால், இந்த கெமிக்கல்களுக்கு பயந்து  ஆர்கானிக் உணவு  என ஒருபுறம்  சந்தைப்படுத்துகிறார்கள். இதுவும் தவறு எதையும் நாம் அதிகமாக உட்கொள்ள போவதில்லை. சுழற்சி முறையில் தான் சாப்பிடப் போகிறோம்.

ஒருநாள் வெண்டைக்காய், ஒருநாள் கீரை, ஒருநாள் கொத்தவரங்காய், என இப்படி சுழற்சி முறையில்தான் சாப்பிட வேண்டும். ஒரு பழம் நல்லது என்பதற்காக தினமும் அதை அதிகமாக உட்கொண்டால் அது கெடுதல்தான். ஒருநாள் கொய்யாப்பழம் இன்னொரு நாள் கொடிமுந்திரி. இன்னொரு நாள் மாதுளை இப்படி மாற்றி மாற்றி தொடர்ந்து உண்டு வந்தால் நம் உடம்புக்கு தேவையான மினரல்கள் அனைத்தும், நம் உடலில் சேரத்தான் போகின்றன. எனவே நான் முதலில் இருந்து கூறிவருவது போல் நாம் அதிகமாக உட்கொள்வது, அரிசி மற்றும் கோதுமைதான். எனவே அவற்றை குறைத்து அதற்கு பதிலாக மற்ற உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும்.

மருத்துவர் கண்ணன்

நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.


வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க