பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 11

வ்வாறு அவன் இன்னும் ஒரு நாளோ, இரண்டு அல்லது மூன்று நாட்களோ தவழ்ந்து சென்றான். நேரக் கணக்கு அவனுக்குத் தப்பிவிட்டது. தன்னுணர்வற்ற பிரையாசைகளின் கோவையில் எல்லாம் ஒன்று கலந்துவிட்டன. சிற்சில வேளைகளில் உறக்க மயக்கமோ மறதியோ எதுவோ ஒன்று அவனை ஆட்கொண்டுவிடும். சென்ற வண்ணமாகவே உறக்கத்தில் ஆழ்ந்து விடுவான். ஆனால், அந்த மறதி நிலையிலும் அவன் தொடர்ந்து மெதுவாகத் தவழ்ந்து சென்று கொண்டே இருந்தான். ஏதேனும் மரத்திலோ புதரிலோ மோதிக் கொண்டோலோ, உருகிய பனி நீரில் முகங்குப்புற விழுந்தாலோ தான் அவன் இயக்கம் நிற்கும். அவனைக் கிழக்கு நோக்கி ஈர்த்த சக்தி அத்துணை வலியதாக இருந்தது. அவனுடைய சித்தவுறுதி அனைத்தும், தெளிவற்ற அவனது எண்ணங்கள் யாவும் ஒரேயொரு சிறு புள்ளியில் குவிமனைப்படுத்தப் பட்டிருந்தன. தவழ வேண்டும், இயங்க வேண்டும், என்ன நேர்ந்தாலும் சரியே, முன்னே செல்ல வேண்டும் என்பதே அது.

வெண்பனிக்கு அடியில் வளர்ந்திருந்த பெர்ரிப் பழங்களை அவன் உணவாகக் கொண்டான். பாசியை வாயிலிட்டுக் குதப்பினான். ஒரு முறை பெரிய எறும்பு புற்று அவனுக்கு எதிர்ப்பட்டது. மழை நீரால் வாரி விடப்பட்டுக் கழுவப்பட்ட ஒரு சீரான தீனிப் புல், அது காட்டில் உயர்ந்து நின்றது. எறும்புகள் இன்னும் பனிக்கால உறக்கத்திலிருந்து எழவில்லை. எனவே அவற்றின் புற்று உயிரற்றது போலக் காணப்பட்டது. அலெக்ஸேய் அந்த பொருபொருத்த படப்பைக்குள் கையை விட்டான். அவன் அதை வெளியில் எடுத்த போது அவனுடைய கையில் எறும்புகள் அப்பியிருந்தன. அவற்றை உலர்ந்த வறண்ட வாயில், போதையூட்டும் கடும் புளிப்புள்ள எறும்புச் சாற்றின் சுவையை இன்பத்துடன் அனுபவித்தவாறு தின்னலானான் அலெக்ஸேய். மறுபடி மறுபடி எறும்புப் புற்றுக்குள் அவன் கையை விட்டான். எதிர்பாராத இந்த தாக்குதலால் விழிப்பூட்டப் பெற்றுப் புற்று முழுவதும் கடைசியில் உயிர்த்தெழுந்தது.

அலெக்ஸேயின் கையையும் உதட்டையும் நாக்கையும் அவை கடித்தன. விமானி உடைக்குள் புகுந்து அவனுடைய உடலைக் கடித்துப் பிடுங்கின. ஆனால், அவனுக்கோ, அந்தக் கடிகள் உவப்பாகக் கூட இருந்தன.

சிற்றுயிர்கள் கடும் சீற்றத்துடன் தற்காத்துப் போராடின. அலெக்ஸேயின் கையையும் உதட்டையும் நாக்கையும் அவை கடித்தன. விமானி உடைக்குள் புகுந்து அவனுடைய உடலைக் கடித்துப் பிடுங்கின. ஆனால், அவனுக்கோ, அந்தக் கடிகள் உவப்பாகக் கூட இருந்தன. எறும்புச் சாற்றின் காரமான சுவை அவனுக்கு உற்சாகம் ஊட்டிற்று. தாகம் எடுத்தது. மேடுகளுக்கு நடுவே பழுப்புக் காட்டு நீர் தேங்கிய குட்டை ஒன்றைக் கண்டு அதன் புறம் குனிந்தான் அலெக்ஸேய். குனிந்தவன், சடாலென்று பின்னே சாய்ந்தான். கரிய நீர்க் கண்ணாடியிலிருந்து நீல வானின் பின்புலத்தில் அவனை நோக்கியது பயங்கரமான, பழக்கமற்ற முகம். கருந்தோலால் இழுத்துப் போர்த்த மண்டையோடு போன்றிருந்தது அது. ஏற்கனவே சுருளத் தொடங்கிவிட்ட அலங்கோலமான கட்டை மயிர்கள் அதில் மண்டியிருந்தன. கருங் குழிகளிலிருந்து உறுத்துப் பார்த்தன பெரிய, உருண்டையான, வெறியுடன் பளிச்சிடும் விழிகள். சிடுக்கிட்ட தலைமுடிகள் சடைசடையாக நெற்றி மீது விழுந்தன.

“இது நானாக இருக்க முடியுமா?” என்று எண்ணினான் அலெக்ஸேய். மறுபடி நீருக்கு மேலாகக் குனிய அஞ்சி, தண்ணீர் பருகாமல் வெண்பனியைத் தின்றுவிட்டுக் கிழக்கு நோக்கித் தவழ்ந்து சென்றான். கிழக்கோ, முன்போன்ற சக்தி மிக்க காந்தத்தால் அவனைக் கவர்ந்து இழுத்தது.

வெடிகுண்டால் ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளம் வெடிப்பினால் வெளியேற்றப்பட்ட மஞ்சள் மணலால் அரண் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பள்ளத்தில் இரவைக் கழிக்க ஊர்ந்து சென்றான் அலெக்ஸேய். பள்ளத்தின் அடித்தளத்தில் நிசப்தமாகவும் வசதியாகவும் இருந்தது. காற்று அதற்குள் வீசியடிக்கவில்லை. கீழ்நோக்கிச் சரிந்த மணலின் சரசரப்பு மட்டுமே காற்று வீச்சுக்கு அடையாளமாக இருந்தது. விண்மீன்களோ, கீழிருந்து பார்ப்பதற்கு அசாதாரண ஒளியுள்ளவையாகக் காணப்பட்டன. அவைத் தலைக்கு மேலே சிறிதே உயரத்தில் தொங்குவது போலவும் பைன் மரத்தின் ஊசியிலை அடர்ந்த கிளை, பளிச்சிடும் இந்தத் தீப்பொறிகளைத் துணியால் ஓயாமல் துடைத்துக் கொண்டிருக்கும் கை போலவும் பிரமை ஏற்பட்டது. காலையாகும் முன் குளிர் அதிகரித்தது. ஈர உறை பனி மரங்கள் மீது தொங்கிக் கொண்டிருந்தது. காற்று திசை மாறி வடக்கேயிருந்து வீசத் தொடங்கவே, இந்த உறைபனிக் கட்டியாகி இறுகி விட்டது.

இந்த இரவில் அலெக்ஸேய் என்ன காரணத்தினாலோ ஒரு போதும் இல்லாத அளவு பலவீனம் அடைந்துவிட்டான். பைன் மரப்பட்டைச் சேமிப்பு அவன் சட்டைக்கிடையில் இருந்தது. எனினும் அதைச் சுவைக்கக்கூட அவன் முற்படவில்லை. இரவில் உடல் தரையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது போல மிக்க சிரமப்பட்டு அதை நகர்த்தினான். விமான உடையிலும் தாடை மீசைகளிலும் உறைந்து கெட்டியாயிருந்தப் பனிக்கட்டித் துணுக்குகளைத் தட்டிப் போக்காமலே பள்ளத்தின் சுவற்றைப் பற்றி ஏறத் தொடங்கினான். ஆனால், இரவில் பனிக்கட்டிப் படிந்து இருந்த மணல் மீது அவன் கைகள் சக்தியின்றி வழுகின. தொற்றி ஏறி வெளிச் செல்ல அவன் மீண்டும் மீண்டும் வழுகிப் பள்ளத்தின் அடித்தளத்தில் சரிந்தான். தடவைக்குத் தடவை அவனுடைய முயற்சிகள் பலவீனம் அடைந்து கொண்டு போயின. வேறொருவர் உதவி இன்றித் தன்னால் வெளியேற முடியாது என்று முடிவில் அவனுக்கு நிச்சயப்பட்டுவிட்டது. அவன் துணுக்குற்றான். இந்த எண்ணம் அவனை வழுக்குச் சுவர் மேல் மீண்டும் தொற்றியேறத் தூண்டியது. கைகளை சில தடவைகள் மட்டுமே எடுத்து வைத்தவன், திராணியற்று, சோர்ந்து வழுக்கி விழுந்துவிட்டான்.

“அவ்வளவுதான்! இனி எல்லாம் ஒன்றுதான்!”

பள்ளத்தின் அடித்தளத்தில் சுருண்டு முடங்கினான் அவன். சித்தவுறுதியைக் குறைத்து அதைச் செயலற்று ஆக்கும் பயங்கர அமைதியை உடல் முழுவதிலும் உணர்ந்தான். சோர்ந்த கையசைப் பால் சட்டைப் பையிலிருந்து கசங்கிய கடிதங்களை எடுத்தான். ஆனால், அவற்றைப் படிக்க அவனுக்கு வலுவில்லை. பல்நிற உடை அணிந்துப் பூத்துக்குலுங்கும் புல் தரையில் உட்கார்ந்திருந்த இளம் பெண்ணின் நிழற்படத்தை செல்லோபேன் காகிதச் சுற்றிலிருந்து வெளியே எடுத்தான். ஆழ்ந்த ஏக்கத்துடன் முறுவலித்து அவளிடம் வினவினான்:

“கடைசிப் பிரிவு சொல்லிக் கொள்ள வேண்டியதுதானா?” திடீரென அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. போட்டோவும் கையுமாக அப்படியே கல்லாய் சமைந்து விட்டான். காட்டுக்கு மேலே வெகு உயரே, குளிர்மையான, ஈரிப்புள்ள காற்றில் எங்கோயோ தனக்குப் பழக்கமான ஒலி கேட்பதுப் போல அவனுக்குத் தோன்றியது.

மயங்கி ஈர்த்த உறக்க நிலையிலிருந்து அக்கணமே அவன் விழிப்படைந்தான். அந்த ஓசையில் சிறப்பானது எதுவும் இல்லை. கட்டிப்பனிப் படிந்த மர முடிகளின் ஒரு சீரான சலசலப்பிலிருந்து விலங்கின் நுண்ணுணர்வு உள்ள செவிகள் கூட அதை வேறு பிரித்து அறிய முடிந்திராது – அவ்வளவு மந்தமாக இருந்தது அவ்வொலி. ஆனால், அலெக்ஸேயா, அதிகத் துலக்கமாக அதைச் செவிமடுத்தான். தனிப்பட்ட சீழ்க்கை ஒலிகளைக் கொண்டு தான் ஒரு காலத்தில் ஓட்டியது போன்ற சோவியத் சண்டை விமானம் பறக்கிறது என்று அவன் சரியாக ஊகித் துணர்ந்தான்.

விமான எஞ்சினின் கடகடப்பு அருகே விமானம் காற்றில் திரும்பு கையில் அவ்வொலி சில வேளைகளில் சீழ்க்கையாகவும் சில வேளைகளில் முனகலாகவும் மாறியது. முடிவில் சாம்பல் நிற வானில் வெகு உயரே புலப்பட்டது மெதுவாக இயங்கும் மிகச் சிறிய சிலுவை வடிவம். மேகங்களின் சாம்பல் புகைப்படலத்தில் ஒன்றி மறைவதும் பின்பு அதிலிருந்து வெளியே நீந்துவதுப் போலப் பறப்பதுமாக இருந்தது அது. அதனுடைய இறக்கையில் செந்நட்சத்திரங்கள் தென்பட்டன. அதோ அலெக்ஸேயின் தலைக்கு நேர் மேலே, தனது தட்டைப் பகுதிகளில் வெயிலொளியில் பளிச்சிட அது ஒரு கரண வளைவு வந்தது, பின்னர் திரும்பி, வந்த திசையில் மீண்டும் செல்லலாயிற்று. விரைவில் அதன் கடகடப்பு கட்டிப்பனி படிந்துக் காற்றில் மெல்லென முழங்கிய காட்டு மரக்கிளைகளின் ஓசையில் மூழ்கி அடங்கிப் போயிற்று. எனினும் அதன் மெல்லிய சீழ்கையொலி தனக்குக் கேட்பது போல அலெக்ஸேய்க்கு நெடுநேரம் வரை தோன்றிக் கொண்டிருந்தது.

உறைந்த மணலை நகங்களால் பறண்டி, படிகள் அமைப்பதில் முனைந்தான். அவன் நகங்கள் பிய்ந்து போயின. விரல்களில் இரத்தம் கசிந்தது. எனினும் அவன் கட்டாரியாலும் நகங்களாலும் முன்னிலும் விடாப்பிடியாக வேலையைத் தொடர்ந்தான்.

தான் விமானி அறையில் இருப்பதாக எண்ணிக் கொண்டான். ஒருவன் சிகரெட் புகையை இழுத்துவிடக்கூடப் போதாத ஒரு கண நேரத்தில் அவன் தனது காட்டு விமான நிலையத்தை அடைந்திருப்பான். பறந்தவன் யாராயிருக்கும்? ஒருவேளை அந்திரெய் தெக்தியாரென்கோ காலை வேவு பார்த்திருப்பதற்கு வந்திருப்பானோ? பகை விமானம் எதிர்படலாம் என்ற மறைமுக நம்பிக்கைக் காரணமாக வேவுப் பறப்பின் போது வெகு உயரே செல்வது அந்திரெய்க்கு விருப்பமானது… அந்திரெய் தெக்தியாரென்கோ… விமானம்… தோழமை மிக்க இளைஞர்கள்…

புது ஆற்றல் தனக்குள் ஊறிப் பெருகுவதை உணர்ந்தான் அலெக்ஸேய். உறையிலிருந்து கட்டாரியை எடுத்து நொய்ந்த, வலுவற்ற அடிகளால் பனிக்கட்டிப் புறணியை வெட்டி அகற்றினான். உறைந்த மணலை நகங்களால் பறண்டி, படிகள் அமைப்பதில் முனைந்தான். அவன் நகங்கள் பிய்ந்து போயின. விரல்களில் இரத்தம் கசிந்தது. எனினும் அவன் கட்டாரியாலும் நகங்களாலும் முன்னிலும் விடாப்பிடியாக வேலையைத் தொடர்ந்தான். அப்புறம் இந்தக் குழிப் படிகள் மேல் முழங்கால்களையும் கைகளையும் ஆதரவாக வைத்துக் கொண்டு அவன் மெதுவாக ஏறத் தொடங்கினான். அரண்சுவர் வரை எட்ட அவனுக்கு வாய்த்துவிட்டது. இன்னும் ஒரு மூச்சு முயன்றால் அரண்சுவர் மேல் படுத்து வெளியே உருண்டுவிடலாம். ஆனால், கால்கள் வழுக்கவே, வலியுண்டாகும்படி முகத்தால் கட்டிப் பனி மீது இடித்தவாறு அவன் கீழே சரிந்துவிட்டான். அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், விமான எஞ்சினின் கடகடப்பு இன்னும் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னொரு தடவை தொற்றியேற முயன்று மீண்டும் வழுக்கி விழுந்தான். அப்போது தன் வேலையை விமர்சன நோக்குடன் கவனித்துப் பார்த்து, படிகளை இன்னும் ஆழமாக்கினான். மேல் படிகளின் விளிம்புகளை முன்னிலும் கூர்படுத்தினான். பிறகு, வலுக்குறைந்து கொண்டு போன உடலின் சக்தியை எல்லாம் ஜாக்கிரதையாக ஒரு முனைப்படுத்தி மீண்டும் தவழ்ந்து ஏறினான்.

மிக்க சிரமத்துடன் அவன் மணல் அரண் சுவரின் குறுக்காக மறுபுறம் விழுந்து, தன் செயலின்றியே உருண்டான். பின்பு விமானம் பறந்து சென்ற திக்கில் தவழ்ந்து முன்னேறினான். மூடுபனியை விரட்டி, கட்டிப் பனிப் படிகத் துண்டுகளில் மின்னியவாறு அந்தத் திசையிலிருந்து காட்டின் மேலே எழுந்தது ஞாயிறு.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க