ரூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த 2018- 2019 –ம் கல்வியாண்டில் B.A வரலாறு பிரிவில் தனது படிப்பை முடித்தார் மாணவர் சுரேந்திரன்.

படிப்பை முடித்த பின்னர் இந்த ஆண்டில், M.A வரலாறு பிரிவில் மேற்படிப்பை அதே கல்லூரியில் தொடர்வதற்கு சுரேந்திரன் விண்ணப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 12. 07. 2019 அன்று நடந்த கலந்தாய்வில் கலந்து கொண்டார் சுரேந்திரன். கலந்தாய்வில் மாணவர் சுரேந்திரனுக்கு சீட் கொடுக்க முடியாது என மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம்.

படிக்க:
பாலியல் குற்றவாளி பேராசிரியருக்கு பிணை வழங்காதே – கரூர் மாணவர்கள் போராட்டம் !
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

“சீட் வழங்க மறுத்ததற்கு என்ன காரணம்?” என சுரேந்திரன் கேட்டதற்கு, “உன் மீது வழக்குகள் உள்ளன. அதனால் உனக்கு சீட் வழங்கக் கூடாது என S.P அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தைக் கல்லூரி நிர்வாகக் கவுன்சில் கமிட்டியில் கூடி பரிசீலித்தோம். அப்படிப் பரிசீலித்ததில் உனக்கு சீட் வழங்கக் கூடாது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது” எனத் திமிராக பதில் கூறியிருக்கிறார், கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன்.

கல்லூரி விதிப்படி ஒரு  கவுன்சில் கமிட்டி கூறுவது என்றால் கல்லூரியின் வளர்ச்சிக்காக  யோசிக்க  மட்டும்தான்  கமிட்டி கூட வேண்டும். ஆனால் தனி நபருக்காக அந்த கமிட்டி கூடக் கூடாது. ஆனால் போலீசு காலால் இட்ட ஆணையை தலையால் ஏற்று நடைமுறைப்படுத்துவதற்காக கமிட்டிக் கூட்டம் நடந்திருக்கிறது.

கமிட்டிக் கூட்டத்திலும் கூட பல பேராசிரியர்கள், “மாணவர் சுரேந்திரன் பெயரில் கல்லூரியில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, எந்த ஒழுங்கு நடவடிக்கையிலும் அவர் தண்டிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கின்றனர். அவர் படிக்கும் வரலாற்றுத் துறையில் இருக்கும் பேராசிரியர்கள், சுரேந்திரனை மீண்டும் கல்லூரியில் சேர்ப்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் மற்றும் விலங்கியல் துறைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் திட்டமிட்டு சுரேந்திரனை மீண்டும் கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்ற தங்களது முடிவை கமிட்டி முடிவாக மாற்றி மாணவர் சுரேந்திரனின் M.A விண்ணப்பத்தை நிராகரித்துள்ளனர்.

சுரேந்திரனை கல்லூரியில் இருந்து நீக்க இவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டவேண்டும் ?

ஏனெனில் மாணவர் சுரேந்திரன், கல்லூரி மாணவர்களுக்கு,

  1. பஸ் பாஸ் கேட்டு மாணவர்களைத் திரட்டி போராடியிருக்கிறார்.
  2. அனிதா மரணம், நீட் தேர்வுக்கு எதிராக போராடியிருக்கிறார்.
  3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாணவர்களைத் போராடியிருக்கிறார் .
  4. கரூர் அரசு கலை கல்லூரியில் ஏழு வருடங்களாக பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவனின் அக்கிரமத்தை மாணவர்களை ஒன்றுதிரட்டி கல்லூரிக்கு வெளியே போராடி அந்தக் கிரிமினலை சிறைக்கு  அனுப்பவும் செய்தார்.

இது மட்டுமின்றி, கல்லூரியில் மாணவ மாணவியருக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றிற்காகவும் போராடி பெற்றுத் தந்திருக்கிறார்.

இது போன்ற காரணங்களினால் மாணவன் சுரேந்திரனின் மேற்படி விண்ணப்பத்தை திட்டமிட்டு தடுத்து அவர் மீண்டும் கல்லூரியில் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரனும், விலங்கியல்துறைத் தலைவர் ராதாகிருஷ்ணனும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் செய்த சதிதான் மாணவர் சுரேந்திரனின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம்.

படிக்க:
18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !
அடுத்த மல்லையா – ரூ. 47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால் !

மாணவர்கள் தங்களது உரிமைக்காகவும், சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடக் கூடாது. அப்படி யாராவது போராடினால், அவர்களை திட்டமிட்டு கல்லூரியை விட்டு நீக்குவது, மீண்டும் அனுமதிக்க மறுப்பது என்ற நிலைப்பாட்டையே கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ளது.

இது ஒரு மாணவரின் கல்வி உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மாணவர்களின் அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. மாணவர்களின் போராடும் உரிமைக்கும், கருத்துரிமைக்கும் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை.

மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் !


தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு: 9629886351

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க