அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 14

நான்கு வருணங்கள், மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது. சமுதாய நடவடிக்கைகளிலும் அது கையாளப்படுகிறது. நான்கு வருணங்கள் இந்த நாட்டில் என்றுமிருந்ததில்லையென்பதை நம்மவர்கள் மறந்து விடுகின்றனர். தமிழ் ஆசிரியர்களில் சிலர், ஸ்மிருதியை, அதாவது நான்கு வருண பேதத்தைப் புகுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களுடைய பாகுபாட்டைத் தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை.

சமஸ்கிருத அறிஞர்கள் (ஆரியர்கள்) சுதேச மன்னர்களின் மந்திரிகளாக வந்த பிறகோ அல்லது ஆதிக்கம் கைப்பற்றிய பிறகோதான் பூணூல் அணிந்து கொண்டு தங்களைப் பிராமணர்கள் என்றும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்றும் கூறிக்கொள்ள ஆரம்பித்தனர்.

இதனால் சமுதாயக் கட்டுப்பாடு அதிகரிக்கலாயிற்று. சமஸ்கிருதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற விரும்புகிறவர்களைச் சமூகம் ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தது.

சென்ற நூற்றாண்டில் இடதுசாரிகளுக்குள்ளும் வலதுசாரிகளுக்குள்ளும் சண்டை ஏற்பட்டது.

பழைய கோட்பாட்டில் பற்றுடையவர்கள் எல்லாரும் பள்ளர் – பறையர் என்ற 18 ஜாதியினர்களாக வகுத்துக் கொண்டு ஒரு பகுதியினர்களாக விளங்கினார்கள்.

தங்களைப் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லாம் இடதுசாரிகளாக வகுத்துக் கொண்டனர்.

இடதுசாரிகள் வெறுக்கப்பட்டு வந்தார்கள். மேற்படி வருணத்தில் போய்ச் சேர்ந்த தமிழர்கள் கூட வெறுக்கப்பட்டு வந்தார்கள். கோயில்களில் கூட அவர்களுக்கு இடமில்லை.

ஆனால் இன்று பார்ப்பதென்ன? நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே சட்டமாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதனால் தமிழ் ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக்கொண்டால், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.

நாட்டுக்கோட்டை நகரத்தில் சிலர் பூவைசியர்கள் என்றும் சொல்லிக் கொள்கின்றனர்.

ஆகவே இந்நாட்டில் மக்களிடையே சரியான ஒற்றுமையும் ஐக்கிய மனோபாவமும் ஏற்பட வேண்டுமானால், தென்னிந்தியக் கலையைச் சரியானபடி உணர்ந்து கொள்வதினால்தான் முடியும்.

”ஆரியராவது! திராவிடராவது! எப்பொழுதோ எழுதி வைத்த பழைய சரித்திரத்தைப் பேசுவதற்கு இது காலமா? இப்பொழுது ஆரியர் இன்னார் என்று யாரால் குறிப்பிட முடியும்? இரு சமூகமும் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகக் கலந்துவிட்டனர். மறந்து போன இனப்பிரிவை உயிர்ப்பிக்க முனைவது நாட்டுக்கு நலமன்று; அரசியல் முன்னேற்றத்திற்கும் அடுக்காது” என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

”இந் நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் திராவிடர்கள் தாம்; ஆரியர்கள் என்பவர்கள் இந்நாட்டில் குடியேறினார்கள் என்று சொல்லுவதே தவறு; இது உண்மையான சரித்திரமல்ல; இந்திய மக்களைப் பிரித்து வைக்க வெள்ளைக்காரரால் செய்யப்பட்ட பொய்ச்சரிதங்கள்” என்று கூறுவர் நமது காங்கிரஸ் சரித்திர ஞானிகள்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு நம்மவர்களிலும் சிலர் ‘ஆமாம்’ போடுவர். தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிதும் வேலை கொடுக்காமல், ஆரியர்கள் – பார்ப்பனர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டு, ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும், இக்கட்சிகளின் தலைவராகிய பெரியாரும், அவருடைய தோழர்களும், ஆரியர் – திராவிடர் என்ற வகுப்புப் பிரிவினைப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள். இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் – திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை. ஆயினும் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதைக் கருதி, நாமும் இது சம்பந்தமான உண்மைகளை எடுத்துக் காட்டி வருகிறோம்.

சென்ற 5-2-41 இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செய்த ஒரு முக்கியமான தீர்ப்பை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறோம்.

நெல்லூரில் வக்கீலாக இருந்த ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர் 16-9-26-ல் நீலா வெங்கட சுப்பம்மா என்ற திராவிடப் பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபாத்தியாயினி. இவருக்கும் மேற்படி இராமமூர்த்திக்கும் இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது. ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன் அவருடைய திராவிட மனைவி தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, திராவிட மனைவிக்கும் அக்குழந்தைகளுக்கும் மாதா மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்புச் செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தத் திராவிடர் – ஆரியர் கலப்பு மணஞ் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டனர். இது போன்ற ஒரு கலப்புமண வழக்கில் பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறிப்பிட்டு விட்டனர்.

இந்நாட்டில் ஆரியர் – திராவிடர் வேற்றுமை இல்லையென்று கூறும் சாதுக்களுக்கு, இப்பொழுதாவது புத்தி வருமா என்பது நமக்குச் சந்தேகந்தான். இந்தத் தீர்ப்பு காலநிலையை ஆதாரமாகக் கொண்டு கூறியதும் அல்ல; சட்ட ஆதரவைக் கொண்டு கூறப்பட்ட தீர்ப்பாக இருக்குமானால், ஜில்லா முன்சீப்பின் தீர்ப்புக்கும், மற்றொரு வழக்கில் நீதிபதி வெங்கடசுப்பராவ் கூறியுள்ள தீர்ப்பிற்கும் முரண்பாடு ஏற்பட்டிருக்காது. சட்டமென்றால் எல்லோருக்கும் ஒன்றாகத்தான் அமைந்திருக்க வேண்டும்.

படிக்க:
என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு இத்தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. ஆரிய வேத ஸ்மிருதிகளோ பெரும்பாலும் திராவிடர் கொள்கைக்கு மாறுபட்டவை, திராவிடரை அடிமைப்படுத்த வேண்டுமென்னும் நோக்கத்துடன் எழுதப்பட்டவை. அவை திராவிட அறிஞர்களால் ஒப்புக்கொள்ள முடியாதவை. இந்த ஆரிய தேவ ஸ்மிருதி முக்கிய வழக்குகளை முடிவு செய்வதில் இன்னும் ஆதரவாக இருக்குமானால் ஆரியர் – திராவிடர் பேதம் ஒழிந்து விட்டதாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க