அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 15

ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும்.

“பிராமணனால் சூத்திரப் பெண்ணிற்குப் பிள்ளை பிறந்தால் அவனுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையில்லை.” (மனு அத். 9 க 155) என்பது மனுதர்ம சாஸ்திரம். இதனை அடுத்து, மற்றொன்று கூறப்பட்டுள்ளதையும் உற்று நோக்க வேண்டும்.

“பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடத்தில் பிறந்துள்ள புத்திரன் செய்யும் சிரார்த்தமானது பரலோக உபயோகமாகாததால், அத்தகைய பிள்ளை உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பாவான்” (மனு அத் 9. க. 178) என்று மனுதர்மம் கூறுகிறது.

இந்த மனுதர்ம நீதியே, இன்று ஆரியர் – திராவிடர் கலப்பு மணத்தைச் செல்லாமலடித்ததற்கு காரணம் ஆகும். இக்கருத்துக்களை வெளியிடும் ஆரிய சாஸ்திரங்களே, இன்று ஒரு பார்ப்பனரை மணம் புரிந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்ற ஒரு திராவிட மாதைச் சோற்றுக்கின்றித் தவிக்க விட்டு விட்டன!

தந்தையின் கருமத்திற்கு உடையவனே புத்திரனாவான். இத்தகைய உரிமையுள்ள புத்திரனுக்குத்தான் தந்தையின் செல்வத்தில் உரிமையுண்டு. இம்மாதிரி கருமஞ் செய்யும் உரிமை பெண்களுக்கில்லாததினால்தான், அவர்களுக்குத் தந்தை சொத்தில் உரிமையில்லை. இக்கருத்துக்களை இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனாலேயே, இன்றும் நம் பெண் மக்கள் சமூகம், சொத்துரிமையின்றி அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இதுவும் ஆரியக் கொடுமையே.

மேலே நாம் எடுத்துக்காட்டிய மனுதர்மத்தில் சூத்திர மனைவியின் மகன் கருமஞ் செய்வதற்கு உரிமை படைத்தவன் அல்லன் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இக்கருத்தின் மீதுதான், சூத்திரமனைவியின் பிள்ளைக்கும் சொத்துரிமையில்லையென்பது மனுதர்மத்தில் எழுதப்பட்டுள்ளது.

இன்று அமைந்துள்ள இந்து சட்டமும் பெரும்பாலும் ஆரிய ஸ்மிருதிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டவையே. ஆதலால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று, இப்பொழுது பெருங்கிளர்ச்சியும் முயற்சியும் நடைபெற்று வருகின்றன.

ஒரு பார்ப்பனரல்லாதான், ஓர் ஆரியப் பெண்ணையோ அல்லது ஒரு திராவிடப் பெண்ணையோ மணந்து கொண்டாலும் சரி, மணக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டாலும் சரி, அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தந்தை சொத்தில் உரிமையுண்டு என்பது சட்டம். இச்சட்டப்படி பல தீர்ப்புகள் ஆகியிருக்கின்றன. ஆனால் பார்ப்பனன் மாத்திரம், மற்ற இனத்துப் பெண்ணிடம் பெற்ற பிள்ளைக்குச் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டியதில்லையாம். என்ன அநீதி! இதுவா, திராவிடர் – ஆரியர் வேற்றுமை இல்லை என்பதற்கு அடையாளம்?

ஆரிய அநீதி என்றும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு, 1939-ம் ஆண்டு நடைபெற்ற வேறொரு வழக்கையும் இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். ஒரு திராவிடர், ஒரு திராவிடப் பெண்ணை மூன்று மாதம் கருவுற்றிருக்கும்போதே தெரியாமல் மணந்து கொண்டார். பிறகு உண்மை வெளிப்பட்டதும் விவாக விடுதலைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால் நீதிபதி, சூத்திரர் விபச்சாரக் குற்றம் கற்பித்து மனைவியை விலக்க உரிமையில்லை என்று தீர்ப்பளித்துவிட்டார். இது ஆரியர் – திராவிடர் பேதமின்மையைக் காட்டுகிறதா?

இத்தகைய அநீதிகளை ஒழிப்பதற்காகத்தான் இன்று ஆரியர் – திராவிடர் கிளர்ச்சி நடைபெறுகிறது; ஆரியர்களின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்; ஆரியர்களின் அக்கிரமமான ஸ்மிருதிகள் அழிய வேண்டும்; அப்பொழுதுதான் இந்த நாட்டில் நாம் சம நீதியைக் காண முடியும்; உத்தியோகங்களில் திராவிடர்க்குக் கிடைக்க வேண்டிய சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பது சமநீதி பெறுவதற்குத்தான்.

ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?

உண்மையில் மேற்படி நீலா வெங்கட சுப்பம்மாள் என்னும் மாதின் வழக்கு, திராவிட சட்டதிட்டப்படி நீதிபதிகளால் விசாரணை செய்யப்பட்டிருக்குமானால், முடிவு வேறாக இருக்குமென்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்மிருதிகளையும் வேதங்களையும் நம்பிக் கொண்டிருக்கிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் இத்தகைய தீர்ப்பைத்தான் கூறக்கூடும்.

இனியேனும் திராவிடர்கள் உண்மையை உணருவார்களா? ஆரியர் – திராவிடர் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களில் இருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும்? இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பி விடப்படுகிறது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா?

‘பிராம்மணா போஜனப்பிரிய’ என்ற மொழியின் உண்மையை ஊரார் அறிவர். ஆரிய மதக்காரர் தம் இனத்தவர் பாடுபடாது பிழைக்க வழிவகுத்துக் கொண்டு வரதட்சணை காணிக்கை, சமாராதனை முதலியவற்றைச் செய்வது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு உதவும் என்று கற்பித்து விட்டனர். கள்ளமற்ற உள்ளத்தினரான திராவிட மக்கள், இந்த ஆரியப் பித்தலாட்டத்துக்கு இரையாகிப் பணத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர். நம் இனத்தவர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றி வாடுவது பற்றிக் கண்ணெடுத்தும் பாராதவர்கள், எச்சில் இலைமீது பசியுடன் நாய் பாய, அதன் மீது அதிகப் பசியுடன் பாய்ந்து பருக்கையைத் தின்னும் பஞ்சைப் பராரிகளைப் பற்றிய பரிதாப உணர்ச்சி கொள்ளவில்லை. ‘பிராமணப் பிரீதி’ ‘தேவதா பிரீதி’ என்ற கற்பனையில் சொக்கிப் பிராமணர்களுக்கு வயிறு புடைக்கச் சந்தர்ப்பணை நடத்துவர். இன அன்போ , பகுத்தறிவோ இருந்தால் இது நடக்குமா? ஓர் இனம் பாடுபட்டு வதைகிறது; மற்றோர் இனம் நோகாமல் வாழ்கிறது; ஏய்த்துப் பிழைக்கிறது. இது இந்தக் காலத்திலே கிடையாது என்று இளித்தவாயர் கூறுவர்.

திருவல்லிக்கேணி உத்திராதிமடத்தில் பிருந்தாவனமாயிருக்கும் ஸ்ரீ சத்திய ஞானதீர்த்த ஸ்வாமிகளுக்கு விசேஷ அபிஷேக அலங்காராதிகள் செய்து தூப தீப நைவேத்தியம் செய்து, பிறகு 2000 பேருக்குப் பிராமண சந்தர்ப்பணை நடந்தது என்ற சேதி, “சுதேசமித்திரன்’’ 1941 பிப்ரவரி 11-ம் தேதி இதழில் இருக்கிறது. இது போல் செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு.

அன்னமிடுவது மக்களின் கருணையைக் காட்டும் செயல் எனில், ஏன் பிராமணருக்கு மட்டும் இடுகின்றனர்? ஏழை எளியவர் எல்லோருக்கும் அன்னமிடுவோம் என்று ஏன் நடத்தவில்லை? ஏட்டிலே எழுதிவிட்டான் ஆரியன், பிராமணனுக்குத்தான் சமாராதனை நடத்த வேண்டும். அதுதான் பகவத் கடாட்சத்தைத் தரும் என்று, ஏமாந்த சோணகிரிகள், இன்னும் அதை நம்பி அழிகின்றனர்.

திராவிட நாடு திராவிடருக்கானால், பாடுபடாத பேர்வழிகளுக்குப் பருப்பும் பாயசமும், பாடுபடும் மக்களுக்குக் கம்புங் கூழும் கிடைக்கும் நிலையா இருக்கும்? ”உழைத்து வாழ, ஊரானை ஏய்க்காதே” என்பதன்றோ நீதியாக இருக்கும்? அந்தக் காலம் வந்தால் ஆரியன் வாழ்வு கெடுமே என்ற அச்சத்தினாலேயே திராவிட நாட்டுப் பிரிவினையை ஆரியர் எதிர்க்கின்றனர். ஊரை ஏய்த்து உண்டு கொழுக்கலாம் என்று எண்ணுகின்றனர்.

”பசியோ பசி” எனக் கதறும் மக்கள், பாடுபடாது வாழுபவர் இருக்கும் திக்கு நோக்கித் திரும்பினால், என்ன ஆகும்? அந்நாள் வருவது என்றோ ?

படிக்க:
குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் ?

அன்னியரான ஆரியன் ஆசாரங்களையும், மதக் கொள்கைகளையும் பண்டிகைகளையும் பின்பற்றுவதாலும், ஆரியரை உயர்ந்த வகுப்பினராகவும் குருக்களாகவும் ஒப்புக்கொள்வதாலும், ஆரியர்கள் மேனி தீமைகளுக்கெல்லாம் பொருள் கொடுத்து ஆரியர் பாதம் பணிவதாலும், ஆரிய ஆதிக்கத்திற்குட்பட்ட கோயில்களுக்குப் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பகுத்தறிவில்லாமல் அள்ளிக் கொடுப்பதாலுமே, ஆரிய ஆதிக்கம் வலுக்கவும் திராவிட மக்கள் சிறுமை நிலை எய்தவும் நேரிட்டு விட்டது.

இதைப்பற்றிப் பேசியும் எழுதியும், வாயும், கையும் அலுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அப்படி இருந்தும், தங்களின் சிறுமை நிலைக்காகத் திராவிட மக்களுக்குப் பேருணர்வு தோன்றாதது பற்றி வருந்த வேண்டியிருக்கிறது.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க