நூல் அறிமுகம் : மீத்தேன் அகதிகள்

வெடிகுண்டுகளால் ஈழமக்களை சிங்களர் விரட்டியடித்தது போல, சற்று மாறுதலாக ... வேளாண்மையை அழித்து, இனி அங்கே வாழ முடியா சூழலை உருவாக்கி, பிழைப்புத் தேடி அலைபவர்களாக மாற்றி, தமிழர்களை இந்திய அரசு விரட்டியடிக்கிறது.

நூலாசிரியர் பேராசிரியர் த.செயராமன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர். பேரழிவைத் தரும் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துப்பரவலும், களப் போராட்டங்களும் நடத்திவரும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் இன்னுமொரு கருவியாக மீத்தேன் அகதிகள் என்ற இந்நூல் வெளிவருகிறது.

தமிழகத்தில் மீத்தேன், ஷேல் மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், மக்கள் அகதிகளாக வெளியேறித்தான் ஆக வேண்டும். அப்படி வெளியேறும் தமிழர்கள் தங்கள் தாயகத்துக்குத் திரும்பவே முடியாது என்ற உண்மையை உணர்த்துவதே இந்நூலின் முதன்மை நோக்கம்.

இந்திய அரசு விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுகிறது. சில்லறை வர்த்தகத்திலிருந்து சிறுவணிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மொத்த வணிகம் முழுமையாகப் பறிபோய்விட்டது. பெருந்தொழில்கள் தமிழர்களிடம் இல்லை. குறுந்தொழில்கள் முடக்கப்பட்டு வருகின்றன. கடலிலிருந்தும், கடற்கரையிலிருந்தும் மீனவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

திணிக்கப்படும் பேரழிவுத் திட்டங்களால் தமிழக மக்கள் வாழ்வுரிமையையும், வாழ்வாதாரங்களையும் இழந்து, தங்கள் வாழ்விடத்தைவிட்டுத் துரத்தியடிக்கப்படும் நிலையை, தமிழக அரசியல் தலைவர்கள் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.

தமிழர்களின் தாயகப் பகுதியைச் சூறையாட இந்திய, பன்னாட்டுப் பெரு முதலாளிகள் போட்டியிடுகிறார்கள். தமிழர் தாயகத்தை இந்திய அரசு ஏலம்விடுகிறது. தமிழ் மக்களின் தன்தீர்மானிப்பு (Self-Determination) உரிமையையும், இயற்கை வளங்கள் மீதான இறையாண்மையையும் (Soveriengnty over Natural Resources) தமிழர்கள் அறிவிக்க வேண்டியக் காலக்கட்டம் இது. அதற்கான புரிதலை உருவாக்குவதற்கான முயற்சிகளுள் இந்நூல் வெளியீடும் ஒன்று. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)

காவிரிப்படுகையில் பல அழிவுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் எல்லாம் மிகக் கொடுமையானது எண்ணெய் – எரிவாயு எடுப்பு. கண்ணுக்குத் தெரியாத வண்ணம் கருவையே அழிக்கும் வேலையை எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன. எண்ணெய் – எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலுமாக வாழும் மக்களிடமிருந்தும், தாவர, உயிர் வர்க்கங்களிடமிருந்தும் பறிமுதல் செய்யும் வேலையை எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அவற்றை அரசுகள் விசாரித்து பல குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறிந்தன. அந்த எண்ணெய் – எரிவாயு நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அபராதங்கள் வசூலிக்கப்பட்டன. நிலத்தடி நீர் எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களால் பாழாக்கப்படுவது என்பது பல்வேறு நாடுகளில் நடத்திருக்கிறது. அது உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அது தடுத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில், நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்பதாலேயே எரிவாயுத் திட்டங்கள் மக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. எண்ணெய் – எரிவாயு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்படையும் என்ற உண்மையைப் பல நாடுகள் அரசுகள், அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன. இந்தியாவில் அரசு இதை ஏற்கிறதா? எந்த எண்ணெய் – எரிவாயு நிறுவனமாவது தங்களால் நிலத்தடி நீர் மாசுபடும் என்பதையும், அப்படி மாசுபடுத்தியிருக்கிறோம் என்றும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா? எங்கள் பகுதி நிலத்தடி நீர் தன் தன்மையை இழந்துவிட்டது என்று கூறி ஓ.என்.ஜி.சி., போன்ற எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களை மக்கள் எதிர்த்துப் போராடும்போது, எந்த மாவட்ட ஆட்சியராவது மக்கள் பக்கம் நின்று, அந்த நீர் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுத்ததுண்டா ?

நிலத்தடி நீர் பாதித்துவிட்டது என்று மக்கள் போராடும்போது, அதை அப்போதைக்கு அடக்கும் விதத்தில், நீரை பரிசோதனைக்கு அனுப்பப்போவதாகக் கூறுவதும், பின்னர் நீர் எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று ரிப்போர்ட் வந்து விட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறுவதும் வாடிக்கை. நீர் கெட்டுப் போகவில்லை என்றால் ஒரு குவளை நீரைக் குடித்துக் காட்டுங்கள் என்று மக்கள் கேட்கும்போது அதிகாரிகளின் முகம் பேயறைந்தது போல மாறிப்போவதும் நாம் கண்ட ஒன்றுதான்.

இதில் கவலைப்படக் கூடிய ஒன்று, நீராய்வு செய்து அறிக்கை தரும் வாட்டர் போர்டு, அந்த நீர் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று அதிகாரபூர்வமாகப் பச்சையாகப் பொய் கூறுவதைத் தண்டிக்கப்போவது யார்? அப்படி அறிக்கை தரும் அதிகாரிகளாவது குறிப்பிடப்படும் இடங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒரு குவளை குடித்துக் காட்டுவார்களா? எண்ணெய் – எரிவாயு நிறுவனங்களுக்குச் சார்பாக அரசு அதிகாரிகள் நடந்துகொள்வதும் பாதிப்புகளை மறைப்பதும் சமூக விரோதச் செயல்பாடுகள் அல்லவா? (நூலிலிருந்து பக்.145-146)

பிரச்சினையின் தன்மையை உணர வேண்டும்

காவிரி டெல்டா பகுதிகளை அழிக்க வரும் மீத்தேன் திட்டம்

தமிழக மக்கள் பிரச்சினையின் முழு வடிவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் சூழலியல் பிரச்சினை அல்ல; அல்லது மீத்தேன் எடுப்பு என்பதால், வாழ்வாதாரங்கள் அழிப்பு என்ற பொருளியல் பிரச்சினை மட்டும் அல்ல; மீத்தேன் எடுப்பில் பயன்படுத்தப்படும் நீரியில் விரிசல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் 634 இரசாயனங்களால் உருவாகும் நோய்கள் – கோளாறுகள் பற்றிய உடலியல் – உயிரியல் பிரச்சினைகள் மட்டுமல்ல; குறுவிவசாயிகள், விவசாயிகள் நிலமிழந்து உதிரித் தொழிலாளர்களாக மாறிப் போவார்கள்; விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் உழைப்புத் தளத்தை இழந்து போவார்கள்; ஊதியம் அற்றுப் போவார்கள் என்ற பொருளியல் பிரச்சினை மட்டுமல்ல.

ஒரு தேசிய இனம், தன் வரலாற்றுத் தாயகத்தை இழந்துவிட்டு, நெருக்கடிகளுக்கு உள்ளாகி, வாழ வழிதேடி, அகதிகளாகப் பயணிக்க இருக்கிறது. அவர்கள் வாழும் பிரதேசம் இரசாயனக் கலவைகளால் நச்சுக்காடாகி, அந்த மக்கள் சமூகமே நோய்கொண்ட சமூகமாக மாற இருக்கிறது. நோய் கொண்ட சமூகமாக மாறும் நிலையைத் தவிர்க்க, தமிழர்கள் தங்கள் பூர்வீகத் தாயகத்தை விட்டுக் கட்டாயமாக வெளியேற வேண்டியச் சூழலை எதிர் நோக்கி இருக்கிறது. (நூலிலிருந்து பக்.171)

மீத்தேன் அகதிகள்:

மீத்தேன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால், தாயகப்பகுதியை விட்டு வெளியேறும் மக்களை, “மீத்தேன் அகதிகள்” என்று குறிப்பிடுகிறோம். ஏனைய அகதிகளுக்கும், மீத்தேன் அகதிகளுக்கும் வேறுபாடு உண்டு.

ஈழத்திலிருந்து பெருவாரியாகத் தமிழ் மக்கள் 1983 முதல் வெளியேறினார்கள். அவர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி, படுகொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் நிகழ்த்தி, உயிர் அச்சத்தை உருவாக்கி, சிங்களக் காடையர்களும், சிங்களப் படையினரும் தமிழர் தாயகத்தை விட்டு விரட்டியடித்தார்கள். ஆயுதம் தாங்கிய தாக்குதலால் ஈழ மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். அவர்களுடைய தமிழீழத் தாயகப் பகுதியை சிங்களர்கள் கைப்பற்றிக் குடியேறினார்கள்.

படிக்க:
ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !

வெடிகுண்டுகளால் ஈழமக்களை சிங்களர் விரட்டியடித்தது போல, சற்று மாறுதலாக தமிழக நிலப்பரப்பில் நீரை வெளியேற்றி நீரற்றுப் போகச்செய்து, வாழ்நிலத்தை நச்சுக்காடாகவும், பாலை நிலமாகவும் மாற்றி, வேளாண்மையை அழித்து, இனி அங்கே வாழ முடியா சூழலை உருவாக்கி, பிழைப்புத் தேடி அலைபவர்களாக மாற்றி, தமிழர்களை இந்திய அரசு விரட்டியடிக்கிறது. (நூலிலிருந்து பக்.165-166)

நூல் : மீத்தேன் அகதிகள்
ஆசிரியர்  : பேராசிரியர் த. செயராமன்

வெளியீடு : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு,
19/2, சேந்தங்குடி வடக்குத்தெரு, ஆனதாண்டவபுரம் சாலை,
மயிலாடுதுறை – 609 001.
தொலைபேசி எண் : 04364 – 227484.
மின்னஞ்சல் : jeyaramanvaralaru@gmail.com

நூல்கள் பெற: புத்தகச் சோலை,
பெரியார் மாளிகை, 44-மகாதானத் தெரு, மயிலாடுதுறை – 609 001.

தொலைபேசி எண் : 04364 – 228634.
மின்னஞ்சல் : pcpd.periyar@gmail.com

பக்கங்கள்: 208
விலை: ரூ 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : common folks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க