உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 14

போர்முனையில் புயலுக்கு முந்திய அமைதி மேலும் நீடித்தது. செய்தி அறிக்கைகளில் வட்டார முக்கியத்துவம் உள்ள சண்டைகளையும் வேவுக்காரர்களின் தேட்டங்களையும் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மருத்துவமனை நிர்வாகிகள் நாற்பத்து இரண்டாம் வார்டில் நோயாளிகளின் நெருக்கத்தைக் குறைத்து விட்டார்கள். இரண்டு கட்டில்கள் மட்டுமே அதில் எஞ்சியிருந்தன. வலப்புறம் மெரேஸ்யெவின் கட்டில். இடப்புறம், ஆற்றங்கரையை நோக்கிய ஜன்னல் அருகே, மேஜர் ஸ்த்ருச்கோவின் கட்டில்.

வேவுக்காரர்களின் தேட்டங்கள்! மெரேஸ்யெவும் ஸ்த்ருச்கோவும் அனுபவம் வாய்ந்த படைவீரர்கள். எனவே, இந்த இடைநிறுத்தம் எவ்வளவு பெரிதாயிருக்குமோ, இறுக்கம் நிறைந்த இந்த அமைதி எவ்வளவு நீடிக்குமோ, புயல் அவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் சீறும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

குறிதவறாது சுடும் ஸ்னைப்பர், “சோவியத் யூனியனின் வீரர்” ஸ்தெபான் இவானவிச், இவுஷ்கின் போர்முனையின் தென் பகுதியில் ஓரிடத்தில் இருபத்தைந்து பாசிஸ்டுகளைச் சுட்டு வீழ்த்தியதாகவும், இத்துடன் அவரால் கொல்லப்பட்ட பகைவர்களின் மொத்த எண்ணிக்கை இருநூற்றை எட்டிவிட்டது என்றும் ஒரு தகவல் செய்தி அறிக்கையில் ஒரு முறை கூறப்பட்டது. க்யோஸ்தியேவிடமிருந்து கடிதம் வந்தது. அவன் எங்கிருக்கிறான், அவனது நிலைமை என்ன என்பது பற்றி எதையும் அவன் தெரிவிக்கவில்லை. தனது முந்தைய கமாண்டர் ரோத்மிஸ்த்ரோவின் படையணியை மீண்டும் சேர்ந்து விட்டதாகவும் வாழ்க்கை மனநிறைவு அளிப்பதாகவும் எழுதியிருந்தான். இந்தக் கடிதம் கிடைத்தால் அன்யூத்தாவுக்கு இரண்டு வரி எழுதிப் போடும்படி அலெக்ஸேயைக் கேட்டுக் கொண்டிருந்தான். தானும் அவளுக்கு எழுதுவதாகவும் ஆனால் தான் ஒயாமல் இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாகவும் எனவே தன் கடிதம் அவளுக்குப் போய்ச் சேருமோ சேராதோ தெரியவில்லை என்றும் குறித்திருந்தான்.

நண்பர்களைப் பற்றிய இந்த இரண்டு தகவல்களைக் கொண்டே புயல் தெற்கே எங்கோ வீசப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்வது படைவீரனான அலெக்ஸேய்க்கு முடிந்தது. அவன் அன்யூத்தாவுக்கும் எழுதினான், தாடி வளர்ப்பது பற்றித் தலைமை மருத்துவர் சொன்ன யோசனையை க்யோஸ்தியோவுக்கும் எழுதினான். எனினும் க்யோஸ்தியேவ் இப்போது போருக்கு முந்தைய இராணுவக் கெடுபிடி மனநிலையில், மிகக் கடினமும் அதே சமயம் ஒவ்வொரு படைவீரனுக்கும் மிக உவப்புள்ளதுமான கெடுபிடி மன நிலையில் இருப்பதனால் தாடியைப் பற்றியோ அன்யூத்தாவைப் பற்றியோ கூட நினைப்பதற்கு ஓடாது என்பதை அலெக்ஸேய் அறிந்திருந்தான்.

நாற்பத்து இரண்டாம் வார்டில் இன்னும் ஒரு களிப்பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மேஜர் பாவெல் இவானவிச் ஸ்த்ருச்கொவுக்கு “சோவியத் யூனியனின் வீரர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டிருப்பதாக அரசாங்க அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் இந்தப் பெருமகிழ்ச்சி கூட ஸ்த்ருச்கொவுக்கு நெடுநேரம் உற்சாகமூட்டவில்லை. அவர் தொடர்ந்து முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தார். இந்தப் “பாழாய்ப் போகிற முழங்காற் சில்லுகள்” காரணமாகத் தாம் இவ்வளவு கெடுபிடி நிறைந்த வேளையில் படுத்துக்கிடக்க வேண்டியிருப்பது அவருக்குச் சள்ளையாக இருந்தது.

ஒரு நாள் மாலை அலுவலகப் பணிபுரிந்த மெலிந்த முதிய நர்ஸ் வார்டுக்கு வந்தாள்.

“’அலெக்ஸேய் மெரேஸ்யெவ் – நடமாடுபவரா?” என்று வினவினாள்.

“ஓடுபவர்” என்று வெடுக்கெனச் சொன்னார் ஸ்த்ருச்கொவ்.

“நான் இங்கே வேடிக்கை பேச வரவில்லை!” என்று கோபத்துடன் கூறினாள் நர்ஸ். “சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவை போனில் கூப்பிடுகிறார்கள்” என்றாள்.

“யார் கன்னிப் பெண்ணா?” என்று நர்ஸின் பக்கம் கண்சிமிட்டியவாறு உற்சாகமாகக் கோட்டார் ஸ்த்ருச்கொவ்.

“நான் அவளுடைய பாஸ்போர்ட்டைப் பார்க்கவில்லை” என்று மிடுக்காக வார்டிலிருந்து வெளியே சென்றவாறு குத்தலாக மொழிந்தாள் நர்ஸ்.

படிக்க:
மூடப்படும் அரசுப் பள்ளிகள் – யார் காரணம் ?
மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !

மெரேஸ்யெவ் கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்தான். கைத்தடியை உற்சாகமாக டொக் டொக் கென்று ஊன்றி ஒலித்துக் கொண்டே நர்ஸை முந்தி ஆளோடியில் உண்மையாகவே ஓடினான். சுமார் ஒரு மாதமாகவே அவன் ஓல்காவின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். “ஒரு வேளை இது அவள் தானோ?” என்ற அசட்டு எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று. உண்மையிலே, இவ்வாறு நடப்பது சாத்தியமே இல்லை. இம்மாதிரி வேளையில் ஸ்தாலின்கிராத் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு வருவது நடக்கக் கூடியதா! தவிர, தான் பின்புல நிறுவனம் ஒன்றில், மாஸ்கோவில் அல்ல, நகர்புறத்தில் வேலை செய்வதாக அவள் எழுதியிருக்கையில் இங்கே, மருத்துவமனையில் அவள் அவனை எப்படிக் கண்டுபிடித்திருக்க முடியும்?

ஆனால் அந்தக் கணத்தில் மெரேஸ்யெவ் அற்புதம் நிகழும் என நம்பினான். அவன் ஓடினான், எப்போதாவது கைத்தடியை ஆதாரமாக ஊன்றியவாறு, இடமும் வலமுமாகச் சாய்ந்தாடியபடி, பொய்க்கால்களால் முதல் முறை மெய்யாகவே ஓடினான். பொய்க்கால்கள் சரக்சரக்கென்று கறுமுறுத்தன…

ஆழ்ந்த, காதுக்கு இனிய குரல் டெலிபோன் குழாயில் ஒலித்தது. அது அலெக்ஸேய்க்கு முற்றிலும் புதியது. நாற்பத்து இரண்டாம் வார்டைச் சேர்ந்த சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அவன் தானா என்று கேட்டது அந்தக் குரல்.

இந்தக் கேள்விகளில் தனது மனத்தைப் புண்படுத்தும் ஏதோ விஷயம் இருப்பது போலக் கோபத்துடன் குழாயில் “ஆமாம்!” என்று வெடுக்கெனக் கத்தினான் மெரேஸ்யெவ்.

குழாயில் வந்த குரல் கணப்பொழுது அடங்கிவிட்டது. பிறகு தொல்லை கொடுப்பதற்கு மன்னிக்க வேண்டும் என்று உணர்ச்சியற்ற இறுக்கத்துடன் கூறியது.

“நான்தான் அன்யூத்தா க்ரிபொவா பேசுகிறேன். உங்கள் நண்பர் லெப்டினன்ட் க்யோஸ்தியேவுக்கு என்னைத் தெரியும். உங்களுக்கு என்னைத் தெரியாது” என்று சற்று சிரமத்துடன் சொன்னாள் ஒரு பெண். அன்பற்ற பதிலால் அவள் மனத்தாங்கல் கொண்டிருப்பது வெளிப்படையாகப் புலப்பட்டது.

ஆனால் மெரேஸ்யெவ் குழாயை இரு கைகளாலும் இறுகப் பிடித்துக் கொண்டு குரல் கொண்ட மட்டும் உரக்கக் கத்தினான்: “நீங்கள் தாம் அன்யூத்தாவா? அதே பெண்தானா? இல்லை, நான் உங்களை மிக நன்றாக அறிவேன், மிக நன்றாக! க்யோஸ்தியேவ் என்னிடம்…”

“எங்கே அவர்? என்ன நேர்ந்தது அவருக்கு? அப்படித் திடீரென அவர் போய்விட்டாரே! அபாய அறிவிப்பைக் கேட்டதும் நான் அறைக்கு வெளியே போனேன், ஏனெனில் நான் மருத்துவப் பணியினள். திரும்பி வந்தபோது அவரைக் காணோம். கடிதமோ, முகவரியோ, எதுவுமே இல்லை. எங்கே அவர்? ஏன் அப்படி மறைந்துவிட்டார்? அவருக்கு என்ன நேர்ந்தது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை….. அருமை அலெக்ஸேய், நான் உங்களை இப்படி அழைப்பதற்கு மன்னியுங்கள். எனக்கும் உங்களைத் தெரியும். அவர் எங்கே, ஏன் இப்படித் திடீரென மறைந்து விட்டார் என்று விளங்காமல் மிகவும் சஞ்சலப்படுகிறேன்…”

அலெக்ஸேயின் உள்ளத்துக்கு இது இதமாயிருந்தது. நண்பனுக்காக அவன் மகிழ்ந்தான். நல்ல பெண்கள் போரில் ஏற்படும் அங்கவீனங்களைக் கண்டு அஞ்சுவதில்லை என்றும் இதனால் அர்த்தமாகிறது. ஆகவே தானும், ஆம், அலெக்ஸேயும் நம்பலாம் தன்னையும் ஓல்கா இவ்வாறே கலவரத்துடன் தேடுவாள் என்று! இந்த எண்ணங்கள் எல்லாம் மின்வெட்டுப் போல அவன் மனத்தில் பளிச்சிட்டன.

“அன்யூத்தா! எல்லாம் நல்லபடியாகவே இருக்கிறது, அன்யூத்தா! நீங்கள் அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் செளக்கியமாக இருக்கிறான், போரிடுகிறான். அடே, சொல்ல மறந்து விட்டேனே! அவன் முகவரி போர்க்களத் தபால் நிலையம் 42531-B. அவன் தாடி வளர்க்கிறான், அன்யூத்தா, மெய்யாகவே செழித்து அடர்ந்த தாடி. ஊம்… ம்ம்.. ம்ம்… கொரில்லா வீரனது போன்ற தாடி. அவனுக்கு அது ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது” என்று மூச்சு திணறக் கத்தினான்.

தாடி வளர்ப்பதை அன்யூத்தா அங்கீகரிக்கவில்லை. அது அனாவசியம் என அவள் கருதினாள். இதனால் இன்னும் களிப்படைந்த அலெக்ஸேய், அவள் கருத்து அதுவானால் க்யோஸ்தியேவ் ஒரே வீச்சில் அதைச் சிரைத்துத் தள்ளிவிடுவான் என்றும், ஆயினும் தாடி அவனுக்குத் தனிச் சோபை அளிப்பதாக எல்லோரும் எண்ணுவதாகவும் கூறினான்.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்

மொத்தத்தில், பேச்சு முடிவதற்குள் அவர்கள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். சமயம் கிடைத்தபோது அலெக்ஸேய் அவளுக்குக் கட்டாயம் போன் செய்வது என்று தீர்மானமாயிற்று.

வார்டுக்குத் திரும்பும்போது டெலிபோனுக்குத் தான் ஓடியதை அலெக்ஸேய் நினைவுப்படுத்திக் கொண்டான். மறுபடி ஓட முயன்றான், பலிக்கவில்லை. பொய்க்கால்கள் தரை மீது திடும் திடுமென மோதியதால் அவன் உடல் முழுவதிலும் கொடிய வலி உண்டாயிற்று. கிடக்கிறது, பரவாயில்லை. இன்றில்லாவிட்டால் நாளை, நாளையில்லாவிட்டால் நாளை மறுநாள், அவன் வெற்றி பெற்றே தீருவான், பார்க்கலாம் ஒரு கை! எல்லாம் நலமே முடியும்! மறுபடி ஓடவும் விமானம் ஓட்டவும் போரிடவும் தொடங்குவோம் என்பதில் அவனுக்குச் சந்தேகமே ஏற்படவில்லை. சபதம் ஏற்பதை விரும்புவன் ஆதலால், முதலாவது விமானச் சண்டைக்குப் பின், முதலாவது ஜெர்மன் விமானத்தை அடித்து வீழ்த்திய பிறகு ஒல்காவுக்கு எல்லாவற்றையும் எழுதி விடுவது என்று சபதம் செய்து கொண்டான். அப்புறம் என்ன ஆகிறதோ, ஆகட்டும்!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க