வெள்ளை அமெரிக்க அரசின் ஆதிக்கத்தின் கீழ் தங்களுடைய மண்ணை, மொழியை, பண்பாட்டை இழந்து, இன்றுவரை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வறுமையில் வாழ்ந்தபடி தொடர்ந்து போராடி வரும் அமெரிக்கக் கண்டங்களைச் சார்ந்த பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் வாழ்வையும் வரலாற்றையும் முன்வைக்கும் விதத்தில் விடியல் வெளியிடும் மூன்றாவது நூல் இது. … பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. (நூலின் பதிப்புரையிலிருந்து…)

மாபெரும் சூ யுத்தம் என்பது அமெரிக்க இராணுவத்தின் படையணிகளால் 1876 மார்ச் மாதத்திலிருந்து 1877 மே மாதம் வரை பதினைந்து மாதங்களாக டெட்டோன்கள் அல்லது மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடிகள், சூ பழங்குடிகள் மற்றும் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய பல்வேறு பழங்குடி இந்தியர்களின் { இந்நூல் முழுவதிலும் இந்தியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் அமெரிக்காவில் வாழும், செவ்விந்தியர்கள் என்று அறியப்பட்டிருக்கும் பழங்குடி இந்திய மக்களே. ஆசியாவின் துணைக்கண்டமாகிய இந்தியாவில் வாழும் மக்கள் அல்ல – (தமிழ் மொ-ர்) } மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான யுத்தங்களையும் மோதல்களையும் உள்ளடக்கியதாகும்.

தற்காலத்திய மான்டானா, வியோமிங், நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டா ஆகியவற்றின் பகுதிகள் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்பில் நிகழ்ந்த பல்வேறு நிலைகளிலான பதினைந்து மோதல்களை இந்தப் போர் உள்ளடக்கியிருந்தது. சூ பழங்குடிகளாலும் சேயென் பழங்குடிகளாலும் (அது போலவே பிற பழங்குடிகளாலும்) உரிமை கொண்டாடப்பட்ட மாபெரும் வடக்குச் சமவெளியில் வெள்ளையர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவியதுதான் இந்தப் போருக்குக் காரணமாக இருந்தது. இந்தப் போரின் முடிவில் பழங்குடிகளுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைந்தது. பழங்குடி மக்கள் டகோட்டா பிரதேசம், நெப்ராஸ்கா, மற்றும் இந்தியப் பிரதேசம் (தற்போதைய ஓக்லஹோமா) ஆகியவற்றில் அவர்களுக்கென ஒதுக்கித்தரப்பட்ட (ரிசர்வேசன்) {அமெரிக்காவின் வெள்ளை அரசாங்கத்தால் இந்தியர்களுக்கென ஒதுக்கித் தரப்பட்ட நிலப்பரப்புகள் ஏஜென்சிகள் என்றும், இந்த நிலப்பரப்புகளில் குடியேறும் இந்தியர்கள் எஜென்சி இந்தியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள் (மொ-ர்)} பகுதிகளில் சிதறிப் போனார்கள் அல்லது கனடாவுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.

மாபெரும் சூ போரில் ஈடுபட்ட டெட்டோன் சூ பழங்குடிகள் அல்லது லகோட்டா பழங்குடிகள் மற்றும் வடக்கே பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய இரு பழங்குடிகளும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தபோதிலும் 1870-களின் மத்தியில் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவையாக அமைந்திருந்த, ஒத்த தன்மைகளைக் கொண்ட இணையான பண்பாட்டுப் போக்குகளைக் கொண்டிருந்தார்கள். மேற்குப் பகுதியிலிருந்த மாபெரும் ஏரிகளை ஒட்டிய நிலப் பகுதியில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களான அல்கோங்கிய மொழி பேசும் சேயென் பழங்குடிகள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எருமைக் கூட்டங்களை வேட்டையாடுவதற்கென மிஸ்ஸோரி நதியின் கிழக்குப் பகுதியிலுள்ள புல்வெளிகளில் குடியேறினார்கள். குதிரைகளின் வரவு அதிகரித்ததன் காரணமாக அவர்கள் மேற்கு நோக்கி இடம் பெயர்வதும் தொடர்ந்து நீடித்தது. (நூலிலிருந்து பக்.7-8)

படிக்க:
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை
அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்

அன்றிரவு அவர்கள் புறப்பட்டார்கள்; பகல் நேரத்தில் இந்தியர்களின் முகாமை அடைவதற்காக மெதுவாகப் பயணம் செய்தார்கள். உயரமான அந்தக் குன்றை அடைந்ததும், இந்தியர்களின் முகாம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ஜெனரல் மைல்லை அந்தக் குன்றின் மேல் அவர்கள் கூட்டிச் சென்றார்கள், அவர் அதைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவந்தார். கீழே ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த இராணுவப் படைகளிடம் அவர் திரும்பிச் சென்றார். இந்தியர் ஒருவர் அந்தக் குன்றின் மேல் ஏறி வருவதை அவர்கள் கண்டார்கள். அவர் முகாமிற்குத் திரும்பிப் போனார்.

ஆனால் முகாமில் எதையும் தெரியப்படுத்தாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். உளவு பார்ப்பவர்கள் இருவரை மேலே முகாமிற்குப் பக்கத்தில் ஜெனரல் மைல்ஸ் அனுப்பி வைத்தார். முகாம் அவர்களது பார்வையில் பட்டதும் அவர்களில் ஒருவர் திரும்பி வந்தார்; முகாம் அமைதியாக இருப்பதாகவும், ஆள் நடமாட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஓடையில் குதிரைகளைத் தளர்நடையில் ஓட்டிக் கொண்டு அவர்கள் மேலே வந்தார்கள். மேலே வந்து சேர்ந்ததும் குறிப்பிட்ட இடத்தின் வழியாகப் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தினார்கள்.

சில குதிரைகள் சிப்பாய்களுடன் கீழே விழுந்தன. (1900-இல்) நடன இல்லம் இருந்த இடத்தில்தான் முதல் தோட்டா வெடித்தது. இந்தியர்களின் குதிரைகள் நாலா திசைகளிலும் மிரண்டோடுவதையும், பெண்களும் குழந்தைகளும் பைன் மரங்களிடையே மறைந்து கொள்வதற்காக குன்றுகளை நோக்கி ஓடுவதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். அப்போது வெளிச்சம் முழுமையாக வந்திருக்கவில்லை.

சண்டை நடந்து கொண்டிருந்தபோது, இந்தியர்கள் ஓடைப் படுகையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். உளவுப் பணி செய்து வந்த ‘கூனன்’ என்ற பெயர் கொண்ட இந்தியரொருவர் மைல்ஸுடன் இருந்தார். அவர் உரக்கக் கூவியபடியே அந்த இந்தியர்களை நோக்கி இறங்கி வரத் தொடங்கினார். இந்தியர்கள் உடனே சுடுவதை நிறுத்தினார்கள். சுடுவதை நிறுத்தும்படி மைல்ஸும் ஆணையிட்டார். பிறகு ‘நொண்டி மானும் ‘ வேறு சிலரும் ஓடையை விட்டு மேலே வந்தார்கள். ‘நொண்டி மான் அவரைப் பார்க்க விரும்புவதாகவும், அவருடன் சமாதானம் செய்து கொள்ள விரும்புவதாகவும் மைல்ஸிடம் ‘கூனன்’ வந்து சொன்னார்.

ஓர் அதிகாரியை அழைத்துக்கொண்டு ‘நொண்டி மான் இருந்த இடத்திற்கு மைல்ஸ் சென்றார். அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போடுமாறு மைல்ஸ் அவர்களிடம் சொன்னார். ‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே போட்டார். தங்கள் துப்பாக்கிகளையும் குதிரைகளையும் அவர்கள் ஒப்படைத்து விட வேண்டும் என்றும், அவை கியோக்கிற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர்களிடம் அவர் சொன்னார். ‘நொண்டி மானின்’ மகன் ஒரு போர்க் கவசத்தை அணிந்திருந்தார்.

‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே வைத்த போது, அது வெடிப்பதற்குத் தயாரான நிலையில் இருந்தது. அப்போது ‘ நொண்டி மானின் ‘ மகன் சொன்னார், “ நான் ஒரு போராளி. என்னுடைய துப்பாக்கியை யாரிடத்திலும் நான் தரமாட்டேன். ஏற்கனவே அவர்கள் என் பாட்டியைக் கொன்று விட்டார்கள்.” வயது முதிர்ந்த பெண்ணொருத்தியை அவர்கள் கொன்றிருந்தார்கள். ‘நொண்டி மானின்’ மகனிடம் ‘ வெள்ளை எருது ‘ தன் குதிரையைச் செலுத்தினார்.

அவருடைய துப்பாக்கியைப் பறிப்பதற்காக அதை இறுகப் பற்றினார். அந்த அதிகாரி ‘நொண்டி மானின்’ கையைப் பிடித்துக்கொண்டார். ஆனால் தனது துப்பாக்கியை அவர் கைவிட மறுத்தார். அதைத் தந்து விடும்படி அவரை இணங்கச் செய்வதற்கு “ நொண்டி மான் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்போது ”சரி மகனே,” என்று சொல்லிவிட்டு ‘ நொண்டி மான்’ ஓடிப் போய்த் தனது துப்பாக்கியை எடுத்து மைல்ஸை நோக்கிச் சுட்டார். ‘நொண்டி மானின்’ மகன், ‘வெள்ளை எருதுவைச் சுட முயற்சி செய்தார். ஆனால் துப்பாக்கிக் குழலை ‘ வெள்ளை எருது’ விலக்கித் தள்ளினார். ஒரு சிப்பாய் ஓடிப்போய் ‘நொண்டி மானின்’ மகனைச் சுட்டார். ஆனால் குறி தவறிவிட்டதால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார். தங்கள் துப்பாக்கிகளால் சுட்ட பிறகு “ நொண்டி மானும்’, அவருடைய மகனும் ஓடைக்கு ஓடினார்கள்.

படிக்க:
“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்
முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

 

ஆனால் அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது “ நொண்டி மானின்’ மகன் பலவீன மடைந்தவரைப்போல் தனது துப்பாக்கியைக் குழல் பகுதியைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்தார். உடனே அவருடைய தந்தை அவருக்கு உதவியாக அவருடைய தோளைப் பற்றித் தூக்கிக் கொண்டார். பிறகு யாரோ சிலர் சுடத் தொடங்கினார்கள். எல்லோரும் வீழ்த்தப்பட்டார்கள். சிப்பாய்கள் ஓடிப் போய்ப் பார்த்தபோது, ‘நொண்டி மானின்’ மகன் எழ முயற்சித்தார். ஆனால் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். (உளவுப் பணி செய்து வந்த) பாப் ஜாக்சன் அவரைத் தலையில் சுட்டார். (நூலிலிருந்து பக்.162-163)

நூல் : போர் நினைவுகள் : 1876 – 1877
(பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் மனப்பதிவுகள்)
தொகுப்பு : ஜெரோம் ஏ. கிரீன்
தமிழில் :  வி. நடராஜ்

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576 772 ; 94434 68758
மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org

பக்கங்கள்: 184
விலை: ரூ 80.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : tamilbooksonline | newbooklands

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க