கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியது அதன் சாதுரியமான செயல்பாடுகளாலோ அல்லது அதிநவீன ராணுவ வல்லமையாலோ மட்டுமல்ல; கடல் போல் விரிந்த இந்திய கடன் வாய்ப்பை கைதேர்ந்த வகையில் தன்னோடு இணைத்துக் கொண்டதே அதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

– வில்லியம் டாரிம்பிள்

***

ந்தியாவை பிரிட்டன் வெற்றி கொண்டது பற்றி இன்னமும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது ஒரு கொடூரமான எதார்த்த உண்மையை மறைக்கும் பேச்சே ஆகும். 18-ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் பெரும்பகுதியை கைப்பற்றியது பிரிட்டிஷ் அரசாங்கம் அல்ல; மாறாக அது ஒரு அபாயகரமான கட்டுப்படுத்தப்படாத தனியார் நிறுவனமாகும்.

இலண்டனில் 5 ஜன்னல் வைத்த ஒரு சின்னஞ்சிறு அறையை தலைமையகமாகக் கொண்டு இயங்கியதுதான் அந்த கிழக்கிந்தியக் கம்பெனி. ஈவிரக்கமற்ற முரடனும் அவ்வப்போது புத்தி சுவாதீனம் இழப்பவருமாகிய ராபர்ட் கிளைவ் என்னும் ஒரு கார்பரேட் பிணந்தின்னியே அதன் இந்திய நிர்வாகி. லாப வெறி பிடித்த இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ்தான் இந்தியா காலனி நாடானது.

தி அனார்கி நூலின் ஆசிரியர் வில்லியம் டாரிம்பிள்.

இந்த நிகழ்வின் சாத்தியக்கூறு குறித்து 2013-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டு காலம் செய்த ஆய்வில் விளைவு தான் ப்ளூம்ஸ்பர்ரி நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள தி அனார்கி (அராஜகம் / கும்பினி ஆட்சி: கிழக்கிந்தியக் கம்பெனி, கார்ப்பரேட் வன்முறை மற்றும் ஒரு சாம்ராஜ்யம் சூறையாடப்படுதல்) என்ற என்னுடைய நூல்.

இந்த நூலின் குறிக்கோள் கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு மற்றும் வர்த்தக செயல்பாடுகளை ஆய்வதல்ல. மாறாக, லண்டனில் ஓர் அலுவலக வளாகத்தின் சிற்றறையில் இயங்கிய சின்னஞ்சிறு தொழில் நிறுவனம், 1756 – 1803-ம் ஆண்டுகளில் இந்தியத் துணைக்கடத்தின் வல்லமைமிக்க இருபெரும் பேரரசுகளான மொகலாய மற்றும் மராட்டியப் பேரரசுகளை அகற்றிவிட்டு தனது ஆட்சியை நிறுவியது எப்படிச் சாத்தியமானது என்ற மையமான கேள்விக்கு விடை காணும் முயற்சியே இது.

1740-களின் கர்நாடக போர் தொடங்கி, 1803-ம் ஆண்டின் ஆங்கில – மராத்தா போர் ஈராக 60 ஆண்டு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி தன்னை எதிர்த்த இந்தியப் பேரரசுகள் அனைத்தையும் வீழ்த்தி தில்லியைக் கைப்பற்றியது. இந்த அசாதாரணமான வெற்றிக்கு வழமையான பல காரணங்களை வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்: பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் மொகலாயப் பேரரசு சிதறுண்டு போய் போட்டியும் பொறாமையும் மிக்க நவாபுகளின் ஆட்சி நடைபெற்றதும், இந்திய அரசுகளிடையே ஒற்றுமை இன்மையும் இதற்கு முக்கியப் பங்காற்றின.

மேலும் மிக முக்கியமாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் முழு ஒத்துழைப்பையும் கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. 18-ம் நூற்றாண்டு முழுவதும் பரஸ்பர நலன் கருதி கம்பெனிக்கும் பாராளுமன்றத்துக்குமான உறவு சீராக வளர்ச்சியுற்று இன்று சொல்லப்படும் அரசு தனியார் கூட்டு நிறுவனம் (PPP) என்ற நிலையை அன்றே அடைந்தது. பெரும் கனவான்களாக ஏராளமான செல்வத்துடன் திரும்பிய ராபர்ட் கிளைவ் போன்றோர் பாராளுமன்ற இரு அவைகளிலும் இருக்கைகளை விலைபேசி வாங்க முடிந்தது. பதிலுக்கு பாராளுமன்றம் கம்பெனிக்கு தன்னுடைய கப்பல்களையும், ராணுவ வீரர்களையும் கொடுத்து வெற்றிக்கு வழி கோலியது.

Robert Clive
ராபர்ட் கிளைவ்

புதிய இராணுவ தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட வளர்ச்சி ராணுவ மேன்மையை உறுதிசெய்தது. உதாரணமாக, அக்டோபர் 24, 1746 அன்று அடையாறு கழிமுகப் பகுதியில் நடைபெற்ற சண்டை இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. முதல் முதலாக நவீன போர்க்கலையில் பயிற்சிபெற்ற 700 பிரெஞ்சு – இந்திய சிப்பாய்களை கர்நாடக நவாப்பின் மூத்த மகன் மஹ்ஃபுஸ்கான் 10,000 குதிரைப்படை வீரர்களுடன் சென்று இடைமறித்தார். இதுநாள் வரை இந்தியாவில் எங்கும் பார்த்திராத புதிய துப்பாக்கிப் பிரயோக முறை சில நிமிட நேரங்களில் எதிர்ப்பை முறியடித்து போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இறுதியில் இரண்டு பிரெஞ்சு சிப்பாய்களும் 300 முகலாய படைவீரர்களும் பலியாகி இருந்தனர். இந்த இராணுவ வல்லமையை ஈடுசெய்யும்படியான எந்த ஒரு ராணுவமும் இந்தியாவில் இல்லை என்ற நிலை தெளிவானது. 1765-ம் ஆண்டுவரை இந்த நிலை தொடர்ந்தது. இருபது ஆண்டுகால இடைவெளிக்குள் இந்திய அரசுகள் இராணுவத் தொழில்நுட்பத்தில் கும்பினி படைகளோடு ஒப்பிடத்தக்க வகையில் தமது போர்த்திறனை முன்னேற்றிக் கொண்டன.

“வங்காளம் மற்றும் கோரமண்டலக் கடற்கரை பகுதிகளில் இந்தியர்கள் போர்க்கலையில் அடைந்திருக்கும் முன்னேற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று 1765-ல் லண்டனில் இருந்த கும்பினி இயக்குனர்கள் கருதினர். “ஐரோப்பிய அதிகாரிகளோ சிப்பாய்களோ பிரதேச அரசுகளின் படையில் பணியாற்றுவதை தடை செய்ய வேண்டும்” என்றும், “அவர்களிடையே ராணுவ ரீதியான முன்னேற்றங்கள் தொடர்வதை சாத்தியமான அளவு தொய்வடையச் செய்யும்படியும்” கும்பினி இயக்குனர்கள் தங்களது வங்காள கவுன்சிலை வலியுறுத்தினர்.

படிக்க:
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !

கும்பினி இயக்குனர்களின் மேற்படி அச்சத்தை நியாயப்படுத்துவது போல ஜனவரி 1779-ல் மும்பையில் இருந்து வந்த கும்பினிப் படையை, புனே நகருக்கு வெளியே தலைக்கானத்தில் நடைபெற்ற போரில் மகாத்ஜி சிந்தியாவின் படை சுற்றி வளைத்து தோற்கடித்தது.

அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் 26, 1780-ல் நடைபெற்ற புலியூர் சண்டையில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் படை வில்லியம் பைலீ தலைமையில் வந்த 3,800 சிப்பாய்களைக் கொண்ட கும்பினிப் படைப்பிரிவை சுற்றிவளைத்து ஒட்டு மொத்தமாக அழித்தொழித்து மாபெரும் வெற்றியீட்டியது.

Battel of Pulliour
1780-ல் நடைபெற்ற புலியூர் சண்டையில் கும்பினி படைகள் பெரிய சேதத்தை சந்தித்தன. அதனை விளக்கும் ஓவியம்.

இந்தப் பேரழிவு செய்தி கல்கத்தாவின் வில்லியம் கோட்டையை எட்டியது. இப் படுதோல்வி உணர்த்தும் செய்தியை உடனடியாக உணர்ந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் “இதுநாள் வரை வெற்றிக் களிப்பில் மிதப்பதை தவிர வேறு ஒன்றும் அறியாத நமது படைகள் பயங்கரமான இந்தத் தலைகீழ் முடிவு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து எளிதில் மீள முடியாது; மேலும் தோற்றுப்போன கமாண்டர்கள் தலைமையின் கீழ் முன்போல் அவர்கள் நம்பிக்கையுடன் போர்க்களம் செல்வதும் சாத்தியமில்லை” என்று லண்டனுக்கு எழுதினார்.

மதராஸில் இருந்து மெக்கார்ட்னி பிரபுவும் அதே புரிதலுடன், “இந்தியர்களுக்கு நமது ராணுவத்தின் மேல் இருந்த அச்சம் போய் விட்டது; அவர்களது எதிர்ப்பை பற்றிய நமது அலட்சியமும் போய்விட்டது. எனவே கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நமது எதிர்கால நலன்களை கணக்கிட முடியாது” என்று லண்டனுக்கு எழுதினார்.

இதன் பின்னர் ஐரோப்பிய ராணுவ செயல் தந்திரங்களின் முக்கியத்துவம் குறைந்து மூலவளங்கள், ஆட்சியதிகாரம், வரிவசூல் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டது. இது நொடிப்பொழுதில் பெருந்தொகையை திரட்டுவதற்கான வாய்ப்பை கும்பினிக்கு வழங்கியது. செந்தூர சிவப்பில் சீருடைகள், பல்லாடியன் அரண்மனைகள், புலி வேட்டைகள், போல்கா நடனங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் கும்பினியின் கணக்கர்கள் விரித்த லாப நட்ட பேரேடும், லண்டன் பங்குச் சந்தையில் ஏறி இறங்கும் அதன் பங்கு விலைகளும் இருக்கத்தானே செய்கின்றன.

இந்தியர்கள் பலரது ஆதரவை, குறிப்பாக 18-ம் நூற்றாண்டின் இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெயின் மற்றும் மார்வாடி வட்டிக் கடைக்காரர்கள், வங்கியாளர்களின் ஆதரவைப் கும்பினி பெற்றிருந்தது. இதுவே கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான இரகசியம் ஆகும். எனினும் இது பெரிதும் பேசப்படாத இரகசியமாகவே நீடிக்கிறது.

உண்மையில் கிழக்கிந்திய கம்பெனியினர் இந்திய நிதி மூலதன உடைமையாளர்களுக்கு இணக்கமான மொழியில் பேசினர். இந்திய மூலதனத்திற்கு தங்களுடைய போட்டியாளர்களை விட கூடுதலான பாதுகாப்பு வழங்கினர். இறுதியாகப் பார்த்தால் எல்லாம் பணத்துக்கான ஏற்பாடுதான். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் வங்காளம் வருவாய் உபரியாக ஆண்டொன்றுக்கு 25 மில்லியன் ரூபாய்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தவறாமல் வழங்கி வந்தது. அதேசமயம் மகாத்ஜி சிந்தியா 1.2 மில்லியன் ரூபாய்களை தனது மால்வா பிரதேசத்தில் இருந்து பெறுவதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தார். “பணமில்லாமல் பட்டாளத்தை திரட்டுவது எப்படி; போர் நடத்துவதுதான் எப்படி” என்று இந்நிலையை அவர் வேதனையோடு வெளிப்படுத்தினார்.

Mahadaji Scindia
மகாத்ஜி சிந்தியா

ஜெயின், மார்வாரி போன்ற இந்தியாவெங்கிலும் உள்ள வங்கியாளர்கள், வட்டி லேவாதேவிக்காரர்கள் மைசூர் சுல்தான்களையோ மராட்டியர்களையோ ஆதரிக்கவில்லை; மாறாக கிழக்கிந்திய கம்பெனியயையே ஆதரிப்பதென்று தீர்மானித்தார்கள். இறுதியாகப் பார்க்கையில், இதுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியதிகாரத்துக்கு வழிகோலியது.

பேரரசர் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு முகலாயப் பேரரசு எங்கும் அராஜகம் தலைவிரித்தாடியது. அந்த காலகட்டத்தில் வங்காள நவாப் முர்ஷித்அலி கான் தில்லிக்கு செலுத்தவேண்டிய ஆண்டு திறைத் தொகையை தங்கம், வெள்ளி காசுகளாக வண்டிகளில் ஏற்றி பட்டாளம் புடைசூழ மோசமான சாலை வழியே அனுப்புவதை முற்றிலுமாக தவிர்த்தார். அதற்கு பதிலாக ஜோத்பூர் ராஜ்ஜியத்தின் நாகர் பகுதியை பூர்வீகமாக கொண்ட மார்வாரி ஒஸ்வால் ஜெயின் குடும்ப வங்கியாளர்களின் பணப்பரிவர்த்தனை வலைப்பின்னலை பயன்படுத்தி திறைத் தொகையை அனுப்பி வைத்தார். 1722-ல் மொகலாயப் பேரரசர் இந்த மார்வாரி ஜெயின்களைத்தான் ஜெகத் சேத்கள் (உலக வங்கியாளர்கள்) என்ற பாரம்பரியத்துக்கும் நிலைக்கும்படியான பட்டத்தை அளித்து கவுரவித்தார்.

மொகலாயப் பேரரசின் செழுமையான வங்காள மாகாணத்தின் நாணய தயாரிப்பை கட்டுப்படுத்துதல், வரி வசூலித்தல், வருவாய் பரிமாற்றங்கள் செய்தல் போன்ற அனைத்தையும் தங்களது முர்ஷிதாபாத் அரண்மனையில் இருந்து கொண்டு செயல்படுத்திய ஜெகத்சேத்துகள் வங்காள நவாபுக்கு அடுத்தபடியான அதிகாரத்தைச் செலுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வச் செழிப்பு மிக்க யூத வங்கியாளர் குடும்பமாக ரோத்ஸ்சைல்டுகளுக்கு இணையானவர்கள் என்று கூறுமளவுக்கு இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். “கங்கை தனது 100 கிளைகள் வழியாக நீரை கடலுக்குள் சொரிவது போன்று செல்வம் சேத்துகளின் கஜானாவை சென்று சேருகிறது” என்று ஒரு வங்காளக் கவிஞர் விவரிக்கிறார்.

கும்பினி விரிவுரையாளர்களும் ஜகத் சேத்துகளின் செல்வச் செழிப்பு கண்டு ஒரு கணம் கண் கூசி நின்றனர். வங்காளத்தை நெருக்கமாய் அறிந்த ராபர்ட் ஓர்ம் “இவர்கள் நாம் அறிந்த உலகின் மாபெரும் நாணய வல்லுனர்களும் வங்கியாளர்களும் ஆவர்” என்று அப்போதைய ஜெகத் சேத்துகளைப் புகழ்ந்து விவரிக்கிறார். கேப்டன் ஃபென்விக், “வங்காள விவகாரங்கள் 1747-48” என்ற தலைப்பின் கீழ் எழுதும்போது மஹ்தாப் ராய் ஜெகத் சேத் பற்றி “வங்காள நவாப்புக்கு மிகவும் பிரியமானவர்” என்றும். “லண்டன் நகரத்தில் வங்கிகளின் வீதியான லாம்பர்ட் வீதியின் ஒட்டுமொத்த வங்கியாளர்களையும் விட மிகப்பெரிய வங்கியாளர்” என்றும் குறிப்பிடுகிறார். வங்காளத்தின் ஆட்சியாளர்கள் உட்பட யாரையும் உருவாக்கவோ அழிக்கவோ வல்லவர்களாக ஜெகத் சேத்துகள் விளங்கினர். அவர்கள் தங்களது பொருளாதார உள்ளுணர்வுக்கு இணையான அரசியல் உள்ளுணர்வை கொண்டிருந்தனர்.

துண்டு துக்காணி அரசுகளாக சிதறிக்கிடக்கும் ஒழுங்கற்ற இந்திய அரசியல் சூழலில் இயங்குவதற்கு ஜெகத் சேத்துகள் தங்களுக்கு வாய்த்த இயல்பான கூட்டாளிகள் என்பதையும் பெரும்பாலான விஷயங்களில் இருவரது நலன்களும் ஒத்துப்போகின்றன என்பதையும் ஆரம்ப காலம் முதற்கொண்டே கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர்கள் ஜெகத் சேத்துகளின் கடன் வசதிகளை வாடிக்கையாகவும், தாராளமாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.

1718-க்கும் 1730-க்கும் இடைப்பட்ட காலத்தில் கும்பினி இவர்களிடமிருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ 4 லட்சம் கடனாக பெற்றது. “கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பரஸ்பர நலன்களின்” அடிப்படையில் பொருத்தமான காலத்தில் அமையப்பெற்ற இவர்களது கூட்டணி மற்றும் மார்வாரி வங்கியாளர்கள், இந்திய நிதிச் சந்தையில் நுழைய கும்பினியினருக்கு வழிவகை செய்து கொடுத்தது ஆகியவை இந்திய வரலாற்றின் போக்கையே புரட்டிப்போடும் மாற்றத்தைக் கொண்டு வந்தன.

படிக்க:
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
♦ ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

மார்ச், 1757-ல் சந்தர்நகரில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்த பின்னர் ராபர்ட் கிளைவ் தனது துருப்புக்களை மெட்ராசுக்குத் திருப்பி அனுப்ப ஆயத்தமானார். அப்போது ஜெகத் சேத்துகளின் தூதுவர்கள் கிளைவைச் சந்தித்து, வங்காளத்தின் புதிய நவாப் சிராஜ் உத்தவுலாவை ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அகற்றிவிட்டு அவரது பாட்டனார் அலிவர்தி கானை அதிகாரத்துக்குக் கொண்டுவர ஜெகத் சேத்துகள் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நடவடிக்கையில் கிளைவ் பங்கேற்க வேண்டும் என்றும் கோரி ஆசை காட்டினர்.

மஹதாப் ராய் ஜெகத் சேத் மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரரும் மஹாராஜா என்று அல்வர்திகானால் பட்டம் சூட்டப்பட்டவருமான ஸ்வரூப் சந்த் ஆகிய இருவரும் அப்போது வங்கி நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர். இவர்களிடம் புதிதாக பட்டத்துக்கு வந்த சிராஜ் தனது போர் நடவடிக்கைக்காக 30 மில்லியன் ரூபாய்களைக் கொடுக்கும்படி ஆணையிட்டார். அதை மஹதாப் மறுத்து விடவே சிராஜ் ஆத்திரத்தில் அவரை அறைந்து விட்டார். அதன் பின்னரும் தலைநகரின் முதல் குடிமகனான ஜெகத் சேத்திடம் சிராஜ் மோசமாகவே நடந்து கொள்ளத் தொடங்கினார்.

இதற்கு பழிவாங்கவே ஜெகத் சேத்துகள் நிதி திரட்டி ராபர்ட் கிளைவுக்கு லஞ்சம் கொடுத்து அவரை வடக்கே வரவழைத்து சிராஜ் உத்தவுலாவுடன் பிளாசிப் போரில் இறக்கினர். “பிளாசிப் போருக்கான காரண கர்த்தாக்கள் ஜெகத் சேரத்துகள்தான் என்று நான் உறுதிபடக் கூற முடியும்”, “அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் மட்டும் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஆங்கிலேயர்களின் குறிக்கோள் சேத்துகளுடைய குறிக்கோளாக ஆனது” என வங்காளத்தின் பிரெஞ்சுப் படை கமாண்டர் ஜீன் லா எழுதினார்.

கும்பினி ஆட்சியின் ஆரம்ப காலமான 1757-ல் பிளாசி யுத்தத்தில் தொடங்கிய இந்த உறவு அடுத்த அரை நூற்றாண்டுக்குப் பின்னர் 1803-ல் நடந்த இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போரில் கிழக்கிந்திய கம்பெனி மராட்டியர்களை வெற்றி கொண்ட போதும் தொடர்ந்தது. அடிப்படையில் இந்த உறவுதான் கும்பினியாருக்கு தில்லியிலும் மத்திய இந்தியாவின் சமதள பகுதிகளிலும் ஆட்சியதிகாரத்தை வழங்கியது.

ஏராளமாகத் திரண்டிருக்கும் நிதி இருப்பை நிலையான நிலவரி வருவாய் என்ற வகையிலும், வட்டி லேவாதேவிக் காரர்கள், வங்கியாளர்கள் கூட்டணி மூலமும் பெறுவதற்கான வாய்ப்புதான் இந்திய எதிரிகளை விட கும்பினிப் படைகளின் கை ஓங்கியிருக்கச் செய்தது. கீழ்த்திசை நாடுகளிலேயே மிகப்பிரம்மாண்டமான, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவத்தைக் களமிறக்கும் அளவுக்கு மாபெரும் நிதி ஆதாரத்தைத் திரட்டவும், முறையாக வினியோகிக்கவுமான வழிவகைகளை கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. எதிரிகளுக்கு அமையாத இந்த வாய்ப்புதான் கும்பினிப்படைகளை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய அம்சமாகும்.

திப்பு சுல்தான்
திப்பு சுல்தானின் மகன்களை பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லும் கார்ன்வாலிஸ் பிரபு.

லாலா கஷ்மிரி மால் ஹவுஸ், ராம் சந்த் – கோபால் சந்த் ஷாஹு, கோபால் தாஸ் – மனோகர் தாஸ் போன்ற அன்றைய மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை கையாண்டன; மும்பை, சூரத் அல்லது மைசூர் ஆகிய இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யத் தக்க மாற்று முறிகளை [bills of exchange] தயார் செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டன; கூடவே, ஏராளமான கடன்களைப் பணமாக வழங்கின. இச்சேவைகள் அனைத்தும் கும்பினி சிப்பாய்களுக்கு முறையாக சம்பளம் கொடுப்பது, படைப் பராமரிப்பு, ஆயுத தளவாடங்களையும் சிப்பாய்களின் பிற வழங்கீடுகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பித்தல் ஆகிய பணிகளை சாத்தியமாக்கின.

இந்த அளப்பரிய உதவிகளுக்குக் கைமாறாக கிழக்கிந்திய கம்பெனி ஜெகத் சேத்துகளுக்கு பதிலாக இனி ஹவுஸ் ஆஃப் கோபால்தாஸ் அரசாங்க வங்கியாளர்களாக இருப்பார்கள் என்று அறிவித்தது. கம்பெனியின் ஆதரவைப் பெற்ற இந்த நிதி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மேற்கு இந்தியாவிலும் விரிவாக்கின.

படிக்க:
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்

இந்திய வர்த்தகர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி இயற்கையான கூட்டாளியாக அமைந்தது. “தங்களது பிராந்தியத்தில் வசிக்கும் வங்கியாளர்கள், வியாபாரிகள் மற்றும் பிற பணக்காரர்களின் செல்வத்தில் கும்பினி எந்த ஒரு குறுக்கீடும் செய்யவில்லை; மாறாக அந்த செல்வந்தர்களிடம் நேசமாக நடந்து கொண்டது” என்று ஹரிச்சரண் தாஸ் எழுதுகிறார்.

1798 -ல் வெல்லஸ்லி பிரபுவின் வருகைக்குப்பின் கும்பினியின் இராணுவம் வெகுவேகமாக பெருகியது. சில ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 1,15,000 -த்தில் இருந்து 1,55,000 ஆகவும் அடுத்த பத்தாண்டில் 1,95,000 ஆகவும் அதிகரித்தது. இது பிரிட்டிஷ் ராணுவத்தை போன்று ஏறத்தாழ இரு மடங்காகும். அதுபோலவே உலகின் மிகப்பெரிய ஐரோப்பிய பாணி நிலை ராணுவங்களில் ஒன்றாகவும் கும்பினிப்படை உயர்ந்தது. த(லை)க்கானத்துப் போர் மற்றும் புலியூர் சண்டையின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டு ஐரோப்பிய மற்றும் தென் ஆப்பிரிக்க குதிரைகளை வரவழைத்து ஒரு குதிரைப்படையும் நிறுவப்பட்டது. இவ்வாறான மாபெரும் ராணுவ ஏற்பாட்டிற்கு செலவு செய்ய வெல்லஸ்லி சிரமப்படவில்லை.

Tipu
திப்பு சுல்தான்

காரன்வாலிஸ் பிரபு செய்த நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக எழுந்த கிராமப்புறக் கிளர்ச்சிகள் ஓய்ந்த பிறகு வங்காளம் கும்பினிக்கு ஆண்டு உபரி வருவாயாக ரூபாய் 25 மில்லியன்களை சீராக வழங்கியது. மாறாக தனது பாசன வசதி குறைவான மால்வா பிரதேசத்திலிருந்து 1.2 மில்லியன் ரூபாய்களை திரட்டுவதே சிந்தியாவுக்கு பெரும் பாடாக இருந்தது. ஆங்கிலேயர்கள் பெற்ற இந்த உத்தரவாதமான உபரி வருவாய் வங்காளத்தின் நிதி சந்தையிலிருந்து தேவைக்கேற்ப ஏராளமான தொகையை கடனாக பெறுவதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. 1798 -க்கும் 1806 -க்கும் இடைப்பட்ட வெல்லஸ்லியின் காலத்தில் கம்பெனியின் கடன் சுமை மூன்று மடங்காக உயர்ந்தது.

கம்பெனி தனது நிதி ஆதாரத்தை நாடு முழுவதும் திறம்பட மறு விநியோகம் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தது. பனாரஸ் வங்கியாளர்கள் மற்றும் வெஸ்ட் கோஸ்ட ஆஃப் கோபால் தாஸ் – மனோகர் தாஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் கம்பெனியின் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் படைகளுடன் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று ராணுவத் துருப்புகளுக்கும் அவர்களது எஜமானர்களுக்கும் தேவையான தொகையை பட்டுவாடா செய்தனர். உண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வங்கியாளர்கள் கம்பெனிப் படைகளுக்கு கடன் கொடுப்பதற்கு தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். இவ்வாறு தனது சக்திவாய்ந்த கூலிப்படைகளுக்குத் தேவையான நிதியை உத்தரவாதப் படுத்தியது தான் கிழக்கிந்தியக் கம்பெனி போர்களில் பெற்ற வெற்றிக்கான பிரதான காரணமாகும்.

இதற்கு நேர் எதிரான வகையில் “இந்த நாடு முழுவதிலும் பேஷ்வா முதல் கடைநிலை குதிரைவீரன் வரை எந்த ஒரு மராட்டியனிடத்திலும் ஒரு சல்லி காசு கூட கிடையாது” என்று இளம் ஆர்தர் வெல்லெஸ்லி குறிப்பிட்டார்.

இந்தியாவின் மீதான காலனியாதிக்க வெற்றி எந்த அளவுக்கு போராடிப் பெறப்பட்டதோ அதே அளவுக்கு விலை கொடுத்தும் வாங்கப் பட்டிருக்கிறது என்று பர்டோன் ஸ்டீன் குறிப்பிட்டார். மேலும், இந்த நிகழ்வு நடந்தேறுவதற்கான நிதியும் கூட இந்தியாவின் ஜெயின் மற்றும் மார்வாரி வங்கியாளர்களிடம் இருந்துதான் வந்தது.

கம்பெனியின் வர்த்தகர்களும் அவர்களது இந்திய கூட்டாளிகளான வங்கியாளர்களும் எப்பொழுதுமே ஆதாயம் என்ற ஒரே மொழியில் பேசிக் கொண்டனர். 1750 முதல் அவர்கள் நெருங்கி செயல்படத் தொடங்கியதன் தொடர் விளைவாகத்தான் கும்பினி அரசு இந்தியாவில் வெற்றி வாகை சூடியது.

சர்வதேச அரசியலில் நிதியாதிக்கக் கும்பலின் கை, ஏதோ இன்று  மட்டும் ஓங்கியிருக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வட்டி, லேவாதேவிக்காரர்களின் ஆதிக்கம், அரசை உருவாக்குவதிலும் வீழ்த்துவதிலும் இருந்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை அன்னியர்களுக்கு நாட்டை காட்டிக் கொடுத்து வந்தது இந்த பார்ப்பன பனியா, மார்வாடிக் கும்பல்கள்தான்.


கட்டுரையாளர் : William Dalrymple
தமிழாக்கம் :  ரவி வர்மன்
நன்றி
: அவுட்லுக் இந்தியா.

1 மறுமொழி

  1. இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் உதவிகளை தொடர்ந்து இன்று வரையில் செய்து கொண்டு இருக்கும் கம்யூனிஸ்ட்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க