எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
ந்தக் கட்டிடத்தை அணுகியதும் நான் பார்த்த காட்சி எதிர்பாராதது. அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. பனி தூவி முடிந்து, மழை தூற ஆரம்பித்த ஒரு ஜனவரி வியாழன் காலை நேரம். பொஸ்டன் நகரத்து 20 பார்க் பிளாஸா உயர் கட்டிடத்தின் வரவேற்பறை. நான் உள்ளே கால் வைக்கமுடியாதபடி வரவேற்பறையை மறித்து குறுக்காகப் படுத்தபடி கிடந்தன மனித உடல்கள். நான் என்ன செய்வதென்று அறியாது திகைத்துப்போய் நின்றேன்.

எனக்கு முன் நின்ற குளிராடை அணிந்த உயரமான பெண் தயங்காமல் தன் குதி உயர் காலணியை எட்டி எட்டி வைத்து ஒரு கையையோ, காலையோ, பிருட்டத்தையோ மிதித்துவிடாமல் எச்சரிக்கையாக நடந்தார். நானும் அவர் பின்னால் தொடர்ந்துபோய் வரவேற்பறை மின்தூக்கியினுள் நுழைந்துகொண்டேன். அவர் தனக்கு வேண்டிய தள பட்டனை அமுக்கினார். நான் என்னுடையதை அமுக்க மின்தூக்கி மேலெழும்பியது.

பாஸ்டன் நகரத்தின் பார்க் பிளாசா வளாகத்தின் வாயிலில் இசுரேலின் தாக்குதலைக் கண்டித்து போராட்டக்காரர்கள்.

அந்தக் கட்டிடத்தின் பத்தாவது மாடியில் இருந்துதான் இஸ்ரேல் நாட்டு துணை தூதரகம் இயங்கியது எனக்கு தெரியாது. இஸ்ரேல் காஸாவை தாக்கியதை தொடர்ந்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை வரவேற்பறையை ஆக்கிரமித்து வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அமைதி முறையில் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று அந்த உயரமான பெண்மணி சொன்னார்.

எட்டாவது தளத்தில் நான் என் நண்பரைச் சொன்ன நேரத்துக்கு சந்தித்தேன். அவர் எப்படியோ எனக்கு முன்னால் வந்து காத்திருந்தார். அவருக்கு இந்த போராட்டம் பிடிக்கவில்லை என்பதால் கோபத்திலிருந்தார். காஸாவில் நடக்கும் போருக்காக இங்கே இவர்கள் ஏன் வீணாக வரவேற்பறையை தடுத்து படுத்திருக்கிறார்கள், இவர்களால் என்ன ஆகப் போகிறது என்பதுதான் அவர் வாதம். அவர்கள் அமைதி முறையில் தங்கள் சகோதரர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். இந்த நாட்டில் மனச்சாட்சி என்று ஒன்று உள்ளவர்கள் அதைச் செய்யாவிட்டால் மனிதப் பிறப்பு என்பது எதற்கு என்றேன். மூன்று அடிதூரம் பொஸ்டன் காற்று எங்களைப் பிரித்தது, ஆனால் எங்கள் மனங்களோ பல மைல்கள் தூரத்தில் நின்றன.

பாஸ்டன் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் காட்சி. (கோப்புப் படம்)

நான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு கீழே இறங்கியபோது இன்னொரு காட்சி கிடைத்தது. பொலீஸ் வண்டிகள் வெளியே நிற்க, நிறைய பொலீஸ்காரர்கள் கட்டிடத்தை சூழ்ந்துவிட்டார்கள். ஓர் உடலை நாலு பேர் சேர்ந்து காவினார்கள். இடது காலை ஒருவர் வலது காலை ஒருவர் இடது கையை ஒருவர் வலது கையை ஒருவர் என்று பிடித்து தூக்கிப்போய் வாகனத்தை நிறைத்தார்கள். சிலர் பதாகைகளை ஏந்தினார்கள். சிலர் இஸ்ரேல் ஒழிக என்று குரல் எழுப்பினார்கள். பெட்ரோல் கலந்த தண்ணீர் குட்டை பல வண்ணங்கள் எழுப்ப அதிலே நின்றபடி ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் சேர்த்து தன்னையும் பொலீஸ் வானில் ஏற்றும்படி கத்தியதை அன்று முழுவதும் என்னால் மறக்க முடியவில்லை.

படிக்க:
ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!
♦ காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !

எனக்கு பாலஸ்தீனிய கவிஞர் முகமட் டார்விஷ் ஞாபகத்துக்கு வந்தார். அவருக்கு காவல் அரண்கள் பிடிக்காது, அடையாள அட்டையையும் வெறுத்தார். அவை அடக்குமுறைகளின் சின்னம். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் நாடுகளில்தான் காவல் அரண்கள் இருக்கும், அடையாள அட்டைகளும் புழங்கும். ஒரு காவல் அரண் காவலாளியிடம் சொல்வது போன்ற அவருடைய கவிதை பிரபலம்.

எழுதிக்கொள்
நான் ஒரு அரேபியன்
அட்டை எண் 50000
எனக்கு எட்டு பிள்ளைகள்
ஒன்பதாவது கோடை முடிவில் பிறக்கும்
எனவே, உனக்கு கோபமா?

எழுதிக்கொள்
நான் ஒரு அரேபியன்
நான் தோழர்களுடன் கல்லுடைக்கிறேன்
எனக்கு எட்டு பிள்ளைகள்
அவர்களுடைய ரொட்டியையும்
உடைகளையும் நோட்டுப் புத்தகங்களையும்
கல்லிலேயிருந்து
உடைத்து எடுத்துக்கொள்கிறேன்.

பொஸ்டன் நண்பரிடம் மேலே கூறிய கவிதையை சொல்லிக்காட்டியபோது அவர் கோவலனுக்கு ஓர் அடையாள அட்டை இருந்திருந்தால் அன்று ஒரு கொலையை தடுத்திருக்கலாம் என்றார். அடையாள அட்டையை தகவலுக்காக பயன்படுத்துவது வேறு, ஆனால் குறிப்பிட்ட மக்களை அடையாளப்படுத்தவும், அடிமைப்படுத்தவும், சிறுமைப்படுத்தவும் பயன்படுத்தினால் அது அரச பயங்கரவாதம்.

முகமட் டார்விஷ் அதைத்தான் எதிர்த்து குரல் எழுப்பினார். அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிரான குரல் அது. அதை மனிதன் செய்யாவிட்டால் அவன் பிறந்து பூமியில் ஓர் இடத்தை நிரப்பியதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். மாவீரன் நெப்போலியன் சொன்னான் 10,000 பேருடைய மௌனத்திலும் பார்க்க ஒருவருடைய குரல் சத்தமாக ஒலிக்கும் என்று. நண்பர் அப்பொழுதும் சமாதானமாகவில்லை. ஐயாயிரம் மைல்களுக்கப்பால் நடக்கும் ஒரு போருக்கு இங்கே பொஸ்டனில் பனிச்சேற்றில் புரள்வதால் ஒன்றுமே நடக்காது என்பதுதான் அவர் நிலைப்பாடு. உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கும் ஆயிரமாயிரம் குரல்கள் அடக்குபவர்களின் ஆன்மாவைத் தொடும் என்றேன். அது போலவே நடந்தது. பத்து நாட்களில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

Mahmoud-darwish
முகமட் டார்விஷ்

நான் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலங்களில் அடிக்கடி காவல் அரண்களைக் கடக்க நேரிடும். துப்பாக்கியை நெஞ்சோடு அணைத்த காவலர்கள் அடையாள அட்டையை மேலும் கீழும் ஆராய்வார்கள். தலைகீழாக வெளிச்சத்தில் படித்துப் பார்த்து அப்படியும் திருப்தி வராமல் சுரண்டிப் பார்த்து உறுதிசெய்வார்கள். ஒரு எதிர் வார்த்தை பேசினால் அதுவே கடைசி வார்த்தையாக அமைந்துவிடக்கூடும். அந்தச் சமயங்களில் நான் என்னை மிகவும் கேவலமாக உணர்வேன். அப்படியெனில் அந்த நாட்டு மக்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள். ஓர் உண்மையான அரசு செயல்படும்போது அது இருப்பது தெரியக்கூடாது என்பார்கள். ஆனால் ஓர் அடக்குமுறை நாட்டில் ஒவ்வொரு கணமும் அரசுதான் அரசோச்சுவதை ஞாபகமூட்டியபடியே இருக்கும்.

மார்ட்டின் நியமொல்லர் என்பவரை எட்டு வருட காலம் ஹிட்லர் சிறையில் போட்டு அடைத்துவைத்தான். ஆனால் அவர் குரலை அடைத்துவைக்க முடியவில்லை. ஹிட்லரின் இன அழிப்புக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மார்ட்டினுடைய குரல், அவர் 84-ல் இறந்துபோனாலும், ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவருடைய கவிதை இன்றைக்கும் கேட்கிறது.

முதலில் அவர்கள் யூதரைத் தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் யூதனில்லை.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளை தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் கம்யூனிஸ்டு இல்லை
பின்னர் அவர்கள் தொழில் சங்கத்தினரை தேடி வந்தார்கள்
நான் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை
ஏனென்றால் நான் தொழில் சங்கத்தவன் இல்லை
அடுத்து அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
அப்போது குரல் கொடுப்பதற்கு எனக்கு
ஒருவருமே இல்லாமல் போய்விட்டார்கள்.

எனக்கு ஓர் இளம் நண்பர் இருக்கிறார், பெயர் எம்.ரிஷான் ஷெரீப். நல்ல கவிஞர் அத்தோடு எழுத்தாளர். அவர் ஒருமுறை கொழும்பில் ஒரு பழைய புத்தகக் கடைக்கு போனார். மூன்று மணிநேரம் செலவழித்து பல அருமையான தமிழ்ப் புத்தகங்களை வாங்கி அவற்றை பையிலே நிரப்பிக்கொண்டு, அந்தப் பாரத்தில் பை தரையில் இழுபட, பஸ்சில் ஏறினார். புறக்கோட்டையை சமீபித்தபோது காவல் அரணில் பஸ்சை நிறுத்தி ஒவ்வொருவராக சோதனைபோட ஆரம்பித்தார்கள்.

படிக்க:
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து லண்டனில் கூட்டம் நடத்தும் டிஐஜி வீ. பாலகிருஷ்ணன்
♦ உனக்கே தெரியாது … நீ எப்பேர்ப்பட்ட மனிதன் என்று !

சிங்களம் தெரியாதவர்கள், அட்டை இல்லாதவர்கள், தமிழர்கள் எல்லோரும் ஓரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அவரை சோதித்த காவலனின் கையில் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ஏதோ கடத்தல்காரனை பிடித்ததுபோல அவன் பரபரப்பானான். நீண்ட விசாரணை நடந்தது. படையதிகாரியை கூப்பிட்டு அவரைக் கலந்தாலோசித்தான். பஸ்சிலே எல்லோரும் திரும்பவும் ஏறி உட்கார்ந்துகொண்டு இவருக்காக காத்து நின்றார்கள். இறுதியில் மூன்றுமணிநேரம் பரிசோதித்து வாங்கிய அத்தனை புத்தகங்களையும் பறித்துக்கொண்டு ‘ஓடடா’ என்று துரத்திவிட்டான். இந்த விவரங்களை அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தமிழ் புத்தகம் வைத்திருந்த குற்றத்தை தவிர அவர் வேறு ஒன்றையும் செய்திருக்கவில்லை. அவருக்கு இனிமேல் காவல் அரணையும், அடையாள அட்டையையும் நினைக்கும்போது நடுக்கம் வராமல் வேறு என்ன செய்யும்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது பொஸ்டன் குளோப் நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. வின்செஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பிரியா சுந்தரலிங்கம் என்ற 17 வயது மாணவி கடந்த பதினொரு நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை. இலங்கை போரில் சிக்கி தினம் செத்துக்கொண்டிருக்கும் 300,000 தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய தாயார் தன் மகள் பொஸ்டனில் இருந்தாலும் அவருடைய இதயம் முழுக்க ஈழத்து போரில் அல்லலுறும் மக்களிடம் இருப்பதாகக் கூறுகிறார். பிரியா கடைசி வேளை உணவை பிப்ரவரி இரண்டாம் தேதி இரவு உண்டார். ஒரு மாதகாலம் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே அருந்தப்போவதாக கூறுகிறார். ‘இனம் அழிகிறது. நிலம் அழிகிறது. ஒரு கலாச்சாரம் அழிகிறது. போரை நிறுத்த உலகம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் எல்லாத்தையும் இழந்துவிடுவோம்’ என்று சொல்கிறார். அவருடன் சேர்ந்து 1100 அமெரிக்கர்கள் ஒருவேளை உணவைத் துறந்திருக்கிறார்கள். பத்தாயிரம் வேளை உணவைத் துறப்பது தங்கள் இலக்கு என்று கூறுபவரிடம் உண்ணாவிரதத்தால் என்ன பயன் என்று கேட்டால் உணவு துறப்பதும் உலகை நோக்கிய ஒருவித குரல்தான் என்று பதில் கூறுகிறார்.

படிக்க:
குரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்
♦ சட்டவிரோதமான காரியம் | அ. முத்துலிங்கம்

கடந்த மாதங்களில் கனடாவில், இலங்கை தமிழின ஒழிப்பை எதிர்த்து பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், மனிதச் சங்கிலித் தொடர்களும், மெழுகுவர்த்தி ஊர்வலங்களும், கனடிய அரசு தலையிட்டு போரை நிறுத்தவேண்டுமென்று கோரி நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் கனடாவில் மரண அஞ்சலிக் கூட்டங்களும் அதிகமாகி வருகின்றன. ஒவ்வொரு நாளும் கனடாவில் இருக்கும் உறவினர்களுக்கு இலங்கையிலிருந்து மரணச் செய்திகள் வருகின்றன. போர் நிலத்தை விட்டு புலம்பெயர்ந்தபோது வீதிகளில் குண்டுகள் விழுந்து இறந்தவர்கள் அதிகம். குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்தன. கணவனே கதியென்று அவர் பின்னால் வந்த ஒரு பெண் கணவனை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். ‘இரு என்றால் இருந்து, நில் என்றால் நின்று, வா என்று சொன்னபோது அவருடன் புறப்பட்டேன். இப்ப என்னைவிட்டுவிட்டு போய்விட்டார். நானும் செத்துப் போறேன்’ என்று தலையிலடித்து அழுகிறார் அந்தப் பெண். எனக்கு புறநானூறுப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

கலம் செய் கோவே, கலம் செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண்பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே.

‘குயவனே, வண்டிச் சில்லில் ஒட்டியிருக்கும் பல்லி, வண்டி போகும் இடம் எல்லாம் போவதுபோல நானும் கணவர் பின்னால் அவர் சென்ற இடமெல்லாம் சென்றேன். இன்று என்னை விட்டுவிட்டு போய்விட்டார். அவரை புதைப்பதற்கு செய்யும் தாழியை பெரிதாகச் செய். எனக்கும் இடம் வேண்டும்.’

இரண்டாயிரம் வருடங்கள் முந்தைய புறநானூற்றுப் பெண்ணுக்கும் இன்றைய ஈழத்துப் பெண்ணுக்குமிடையில் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.

Chettikulam-internment-campApril2009இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. போரில் சிக்கி சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் மக்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க தீர்மானித்திருக்கிறது. அது ‘நல்வாழ்வு கிராமங்கள்’ அமைக்கும் திட்டம். யாருக்கு நல்வாழ்வு என்பதை அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. யுத்த நிலத்திலிருந்து தப்பி வந்த மக்கள் வன்னிக்கு வெளியே தங்கள் புதுவாழ்வை தொடங்கலாம். வவுனியாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நாலு கிராமங்களும், 100 ஏக்கர் நிலப்பரப்பில் மன்னாரில் ஒரு கிராமமும் அமைக்கப்படும். இந்தக் கிராமங்கள் முழுக்க முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்குவதால் உச்சமான பாதுகாப்புக்கு உத்திரவாதம் உள்ளது என்று அரசாங்கம் சொல்கிறது.

உண்மையில் இவை கிராமங்கள் அல்ல, ஹிட்லரின் இன அழிப்பு வதை முகாம்கள் போல concentration camps தான் என்பதை அதிகாரிகள் மறுத்திருக்கிறார்கள். உயரமான முள்ளுக் கம்பி வேலிகள் இராதென்றும், அகதிகளின் புஜங்களில் அடையாள எண்கள் பச்சை குத்தப்படமாட்டாது என்றும் அவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள். இதிலே கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தக் கிராமங்களில் 39000 தற்காலிக வீடுகள், 7800 கழிப்பிடங்கள், தபால் நிலையங்கள், வங்கிகள், கடைகள் என்று கட்டுவதற்கு திட்டம் போடப்பட்டிருக்கிறது. வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அகதிகள் வாழப்போவதால் தவறுதலாக விமானங்கள் அவர்கள் தலை மீது குண்டுகள் போடும் அபாயம் இல்லை.

அகதிகளின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்படும் என்றும், அகதிப் பெண்களின் கர்ப்பம் அழிக்கப்படும் என்றும், பள்ளிக்கூடங்களில் சிங்களம் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்றும் வதந்திகள் கிளம்பியிருக்கின்றன. அவை எல்லாம் பொய். அத்துடன் இன்னொரு முக்கியமான விடயம். இந்த திட்டத்தை நுட்பமாக ஆராய்பவர்கள் நச்சு வாயுக் கிடங்குகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை அவதானிக்கலாம். அரசாங்கம் எவ்வளவு விவேகத்துடனும், தீர்க்க தரிசனத்துடனும், கரிசனத்துடனும் இப்படியான தீர்வு வேலையை முன்வைத்தாலும் கத்துபவர்கள் கத்திக்கொண்டே இருப்பார்கள்; குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள்.

இன்று காலை நான் கம்புயூட்டரில் இருந்தபோது என்னை ஒருவர் சாட்டில் (chat) அழைத்தார். சில நிமிடங்கள் பேசிய பிறகு எங்கள் உரையாடல் இப்படி முடிவுக்கு வந்தது.

உங்கள் நாட்டில் காவல் அரண்கள் உள்ளனவா?

இல்லை

அடையாள அட்டையை காட்டச் சொல்லி கேட்பார்களா?

இல்லை

அங்கே நீங்கள் சுதந்திரமாக எதற்காகவும் குரல்கொடுக்கலாமா?

கொடுக்கலாமே.

அப்ப அது நல்ல நாடாகத்தான் இருக்கவேண்டும்.

யோசித்துப் பார்த்தபோது இந்த முகம் தெரியாத நண்பர் சொன்னதில் அர்த்தம் இருந்தது. அதிகாரத்தை கையிலெடுத்தவர்கள்தான் அடுத்தவர் எப்படி வாழவேண்டும் என்பதை முடிவுசெய்வார்கள். அடக்குமுறை இல்லாத, அநீதிக்காக குரல் கொடுப்பதை தடை செய்யாத நாடு ஒருவருக்கு வாய்ப்பது அரிது. அதுதான் பொஸ்டன் மாணவியின் குரலும், வண்டிச்சக்கரத்து பல்லிபோல புருசனுடன் சென்று அவனைப் பலிகொடுத்த பெண்ணின் குரலும் ஒலிக்கின்றன.

மனிதன் எல்லாம் இழந்த நிலையில் அவனிடம் எஞ்சியிருப்பது அவனுடைய குரல் மட்டுமே. மார்ட்டின் நியூமொல்லரின் குரல் இன்னும் ஒலிக்கிறது. முகமட் டார்விஷின் குரல் அவர் இறந்தபின்னும் தொடர்கிறது. சு. வில்வரத்தினத்தின் தோப்பிழந்த குயிலின் குரல் இன்றைக்கும் கேட்கிறது. குரல் ஒலிக்குமட்டும் மனிதன் நம்பிக்கை இழப்பதில்லை.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க