உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 10

ஞ்சிய குளிர்காலத்தையும் வசந்த காலத் தொடக்கத்தையும் மெரேஸ்யெவ் சிறப்புப் பயிற்சிப் பள்ளியில் கழித்தான்.

விமானிகளின் பெரிய குழு ஒன்று அந்தச் சமயத்தில் புதிதாக விமானப்படையில் சேர்க்கப்பட்டு இருந்த “லா-5″ ரக சோவியத் சண்டை விமானத்தைச் செலுத்துவதற்குச் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தது. அலெக்ஸேய் மெரேஸ்யெவும் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டான். பயிற்சி ஆழ்ந்த முறையில் நடந்தது. எஞ்சின், சாமான் பகுதி ஆகியவற்றை விமானிகள் நுணுகி ஆராய்ந்து தேர்ந்தார்கள், இயந்திர நுட்பத்தைப் பயின்றார்கள். தான் இராணுவத்துக்கு வெளியே இருந்த ஒப்பு நோக்கில் குறுகிய காலத்துக்குள் சோவியத் விமானத் தொழில் எவ்வளவு தூரம் முன்னேறிவிட்டது என்று விரிவுரைகளைக் கேட்கையில் அலெக்ஸேய் வியந்தான்.

யுத்த ஆரம்பத்தில் துணிகரப் புதுப்புனையாகத் தோன்றியது இப்போது மீள வகையின்றிப் பழையதாகிவிட்டது. துடியான “லாஸ்தச்கா” விமானங்களும் லேசான “மிக்” விமானங்களும் உயர்வெளிச் சண்டைக்கு ஏற்ப அமைக்கப்பட்டு, யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் தலைசிறந்த படைப்புக்களாகக் கருதப்பட்டன. அவை இப்போது நீக்கப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில் சோவியத் தொழிற்சாலைகளில் யுத்த நாட்களில் உருவமைக்கப்பட்டு நம்பமுடியாத அளவு குறுகிய காலத்தில் பழகிக் கொள்ளப்பட்ட அற்புதமான நவீன ரக “யாக்” விமானங்களையும் “லா-5” விமானங்களையும் இரட்டை இருக்கைகள் கொண்ட “இல்” விமானங்களையும் உற்பத்தி செய்தன. இந்த “இல்” விமானங்கள் பறக்கும் டாங்கிகள். இவை தரையோடு தரையாகத் தாழ்வாகப் பறந்து வெடிகுண்டுகளையும் மெஷின்கன் குண்டுகளையும் பீரங்கிக் குண்டுகளையும் நேரே பகைவரின் தலைகளில் பொழிந்தன. ஜெர்மன் படை இவற்றுக்கு “ஷ்வார்த்ஸேர் தோத்”, அதாவது “கருஞ்சாவு” என்ற திகில் நிறைந்த பெயரிட்டிருந்தது. போரிடும் மக்களின் பேரறிவிலிருந்து உதித்த புது இயந்திரங்கள் விமானப் போரை எல்லையின்றிச் சிக்கல்கள் நிறைந்ததாக ஆக்கியிருந்தன. தனது விமானம் பற்றிய அறிவும் துணிவு நிறைந்த மனோதிடமும் மட்டுமின்றி, போர்க் களத்துக்கு மேலே விரைவாகத் திசையறியவும், விமானப் போரைத் தனித்தனி உறுப்புப் பகுதிகளாகப் பிரித்து அறியவும் தனது சொந்தப் பொறுப்பில் பெரும்பாலும் உத்தரவுக்குக் காத்திராமலே போர்முறைத் தீர்மானங்களை மேற்கொள்ளவும் நிறைவேற்றவும் வல்லமையும் பெற்றிருப்பது இப்போது விமானிக்கு இன்றியமையாததாக இருந்தது.

இவை எல்லாம் அசாதாரண அக்கறைக்கு உரியவைகளாக இருந்தன. ஆனாலும் போர்முனையில் பயங்கரமான தாக்குப் போர்கள் தணியாத உக்கிரத்துடன் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அத்தகைய சமயத்தில், உயரமான, ஒளி நிறைந்த வகுப்பறையில் வசதியான கறுப்புப் பயிற்சி மேஜையருகே உட்கார்ந்து விரிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அலெக்ஸேய் போர்க்களம் செல்வதற்கு, சண்டைச் சூழ்நிலைமைக்கு ஆவல் கொண்டு ஏங்கலானான்.

அலெக்ஸேயின் நல்லகாலம், மேஜர் ஸ்த்ருகோவும் அதே பள்ளியில் சிறப்புப் பயிற்சி பெற்று வந்தார். இருவரும் நெடுங்கால நண்பர்கள் என்ற முறையில் சந்தித்து அளவளாவினார்கள். ஸ்த்ருகோவ், அலெக்ஸேய்க்கு இரண்டொரு வாரங்கள் பின்பே பள்ளிக்கு வந்தார். ஆனால் உடனேயே அதன் தனி வகை வாழ்க்கை முறைக்குப் பழகிவிட்டார், போர்காலத்தில் வழக்கமாக எதிர்ப்படாத அதன் கண்டிப்பான சட்ட திட்டங்களுக்குத் தம்மை இசைவித்துக் கொண்டார். எல்லோரும் அவரைத் தம்மவராக மதிக்கலானார்கள். மெரேஸ்யெவின் மனநிலையை அவர் உடனே கண்டுகொண்டார். இரவுக் குளியலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் தங்கள் உறங்குமிடங்களுக்குச் செல்லுகையில் அவர் அலெக்ஸேயை விலாவில் இடித்து, “ஆத்திரப்படாதே, தம்பீ!. நாம் சேர்ந்து கொள்ளும் முன்பு யுத்தம் முடிந்து விடாது! பெர்லின் வரை முன்னேற இன்னும் எவ்வளவோ பாடுபட்டாக வேண்டுமே. அடி மேல் அடி வைத்து முன் செல்ல வேண்டும்! நாமும் சண்டை செய்வோம். தெவிட்டத் தெவிட்டச் சண்டை செய்வோம்” என்றார்.

மெரேஸ்யெவும் ஸ்த்ருகோவும் இருந்த வகுப்பு விமானிகள் பனிக்கால இறுதியில் பறப்புப் பயிற்சி தொடங்கலானார்கள். குட்டை இறக்கைகளும் சிறு உடலுமாக, வடிவமைப்பில் பறக்கும் மீனை ஒத்திருந்த “லா-5′ விமானத்தை அதற்குமுன்னரே அலெக்ஸேய் நன்கு அறிந்திருந்தான். இடைவேளைகளில் அடிக்கடி விமான நிலையத்துக்குப் போய், இந்த விமானங்கள் குறுகிய ஒட்டத்துக்குப் பின்னே வானில் கிளம்பி செங்குத்தாக உயரே செல்வதையும் இளநீல வயிறுகள் வெயிலில் மினுமினுக்கக் காற்றில் சுழல்வதையும் அவன் பார்ப்பதுண்டு. அவன் விமானத்தின் அருகே சென்று அதை நோட்டமிட்டான், அதன் இறக்கைகளைத் தடவினான், விலாவில் தட்டிக் கொடுத்தான் – ஏதோ அது விமானம் அல்ல போலவும், நன்கு பேணப்பட்ட அழகிய உயர் சாதிப் புரவி போலவும். இதற்குள் பறப்பு தொடங்கும் நேரம் வந்துவிட்டது. ஒவ்வொருவனும் விரைவில் தன் திறைமையைச் சோதித்துப் பார்க்க ஆசைப்பட்டான். இதற்காக வெளித் தெரியாத சச்சரவு தொடங்கிற்று. பயிற்சி ஆசிரியர் முதலில் ஸ்த்ருகோவை அழைத்தார். மேஜர் ஸ்த்ருகோவின் கண்கள் ஒளி வீசின. அவர் குறும்புப் புன்னகை புரிந்தார், இன்பக் கிளர்ச்சியுடன் சீழ்கையடித்தவாறே பாராஷூட் வார்களை இறுக்கிக் கொண்டு விமானி அறைக் கதவைச் சாத்தினார்.

படிக்க:
இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்
“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை !

பின்பு எஞ்சின் பயங்கரமாக இரைந்தது, விமானம் இடம் பெயர்ந்தது. இதோ அது வானவில் நிறங்களில் வெயிலில் பெருகிய வெண்பனித் துகள் படலத்தை வால்போலப் பின்னேவிட்டவாறு விமானத் திடலில் ஓடியது. அப்புறம் மேலே எழும்பி, இறக்கைகள் சூரிய கிரணங்கள் பட்டு மினுமினுக்க ஆகாயத்தில் தொங்கியது. ஸ்த்ருகோவ் விமான நிலையத்துக்கு மேலே நேர்க்குத்தான வில் வடிவக் கோடு வரைந்தார், சில அழகிய வளையங்கள் செய்தார், இறக்கைகள் கீழ்மேலாகும்படிப் புரண்டார், திட்டமிட்ட பயிற்சிக் கோவையின் எல்லா அம்சங்களையும் சிறந்த தேர்ச்சியுடன், உண்மையான கலையழகு திகழச் செய்துமுடித்தார், பார்வையிலிருந்து மறைந்தார், பின்பு திடீரெனப் பள்ளிக் கட்டிட முகட்டின் பின்னேயிருந்து வெளிப்பட்டு, எஞ்சின் இரைந்தொலிக்க, தொடங்கிடத்தில் காத்திருந்தவர்களின் தொப்பிகளை நசுக்கிவிடுபவர் போல அவ்வளவு தாழ்வாக முழுவேகத்துடன் விமானத் திடல் மேலே பாய்ந்து சென்றார். மறுபடி பார்வையிலிருந்து மறைந்தவர் மீண்டும் தென்பட்டுத் திண்ணமாகக் கீழிறங்கி உயரிய திறமையுடன் முப்புள்ளியிடத்தில் விமானத்தை இறக்கி நிறுத்தினார். குறும்பு செய்ய வாய்த்த சிறுவன் போன்று கிளர்ச்சி பொங்க, களி துள்ளியவாறு, இன்ப வெறியுடன் விமானி அறையிலிருந்து குதித்தார் ஸ்த்ருகோவ்.

“இது விமானமல்ல, பிடில் வாத்தியம்! கடவுளாணை, பிடில் வாத்தியம்! ச்சைக்கோவ்ஸ்கியின் கிருதிகளை அதில் வாசிக்கலாம்!…” என்று, முரட்டுத் துணிச்சலுக்காகத் தம்மைக் கடிந்து கொண்ட ஆசிரியரின் பேச்சை இடைமறித்தவாறு ஆரவாரித்தார் அவர். “மெய்யாகவே சொல்லுகிறேன். இதல்லவா வாழ்க்கை, அலெக்ஸேய்!” என்று மெரேஸ்யெவை இறுகக் கட்டித் தழுவினார்.

விமானம் உண்மையிலேயே அருமையானது என்பதில் எல்லோரும் ஒருமனதாயிருந்தார்கள். அப்புறம் மெரேஸ்யெவின் முறை வந்தது. இயக்கு நெம்படிகளுடன் பொய்க்கால்களை வார்களால் இறுக்கிக் கொண்டு வானில் கிளம்பியதுமே இந்தக் குதிரையை கால்கள் அற்றவனான தன்னால் சமாளிக்க முடியும். ஆனால் அது அளவுக்கு மேல் துடியானது என்றும் இதனிடம் விசேஷ எச்சரிக்கை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவன் உணர்ந்தான்.

தரையிலிருந்து மேலே எழும்புகையில், வழக்கம் போல விமானத்துடன் அற்புதமான, முழுமையான தொடர்பை அவன் உணரவில்லை. பறப்பின் இன்பத்தைத் தருவதோ, இந்தத் தொடர்பு தான். இந்த விமானம் சிறந்த அமைப்பு. ஒவ்வொரு அசைவையும் மட்டுமே அல்ல, சுக்கான்கள் மீதிருந்த கைகளின் நடுக்கத்தையும் கூட விமானம் உணர்ந்து வானில் அதற்கேற்ற இயக்கத்தை வெளிப்படுத்தியது. விமானியின் செயல்பாட்டுக்கு ஏற்பச் செயல்படும் பாங்கில் அது உண்மையிலேயே பிடில் வாத்தியத்தை ஒத்திருந்தது. ஆனால் தனது கால்களின் இழப்பின் ஈடுசெய்ய முடியாமை, தனது பொய்க்கால்களின் பாங்கின்மை, அலெக்ஸேய்க்கு இப்பொழுது தான் சுள்ளென உறைத்தது. இந்த விமானத்தை இயக்குவதில் பொய்க்கால் – அது எல்லாவற்றிலும் சிறந்ததாயிருப்பினும், எவ்வளவு நிறையப் பயிற்சி செய்த போதிலும் – உயிரும் உணர்வும் மீள் விசையும் உள்ள நிஜக்காலுக்கு மாற்று ஆக முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான்.

விமானம் இலேசாகவும் பிகுவுடனும் காற்றைத் துளைத்துச் சென்றது. இயக்கு நெம்படிகளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ப நன்கு செயல்பட்டது. ஆயினும் அலெக்ஸேய் அதை இயக்குவதற்கு அஞ்சினான். நேர்க்குத்தான வளையங்களில் கால்கள் தாமதித்து விடுவதையும் விமானிக்கு ஒரு வகை மறிவினை போலப் பழக்கமாகிவிடுகிற முரணற்ற ஒத்திசையை தாம் பெற முடியவில்லை என்பதையும் அவன் கண்டான். இந்தத் தாமதத்தின் விளைவாக நுண்செயலுள்ள விமானம் பம்பரம் போலச் சுழலத் தொடங்கக் கூடும், ஆபத்து நேரக்கூடும். தளை பூட்டப்பட்ட குதிரைப் போல உணர்ந்தான் அலெக்ஸேய். அவன் பயங்கொள்ளி அல்ல. தன் உயிருக்காக அவன் நடுங்கவில்லை. பாராஷூட்டைக் கூடச் சரிபார்த்துக் கொள்ளாமல் அவன் விமானத்தில் கிளம்பியிருந்தான். ஆனால் தனது அற்ப அஜாக்கிரதை கூடத் தனக்குச் சண்டை விமானப் படையிலிருந்து சீட்டைக் கிழித்து விடும், தனது பற்றுக்குரிய வேலையை அடையும் வழியை மூடிவிடும் என்பதனாலேயே அவன் பயந்தான். இரு மடங்கு ஜாக்கிரதையுடன் மனஞ்சோர்ந்த நிலையில் விமானத்தைத் தரையில் இறக்கினான். கால்களின் வளையாமை காரணமாக அவன் பிரேக்கைச் சட்டெனப் போட்டு விடவே விமானம் வெண்பனி மீது சில தடவைகள் பாங்கின்றி எகிறிக் குதித்தது.

பேசா வாயனாய், முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு விமானத்திலிருந்து இறங்கினான் அலெக்ஸேய். தோழர்களும் ஆசிரியருமே கூட, மெய்ப்புக்கு நடித்தவாறு போட்டி போட்டுக் கொண்டு அவனைப் புகழவும் வாழ்த்தவும் தலைப்பட்டார்கள். இந்தத் தயவு அலெக்ஸேயின் மனத்தைப் புண்படுத்த மட்டுமே செய்தது. இப்போது, சண்டை விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகு, தான் லாயக்கற்றவன் என்று காட்டிக் கொண்டது, அவனது அடிபட்ட விமானம் பைன் மரமுடிகளில் மோதி நொறுக்கிய அந்த மார்ச் மாதக் காலைக்குப் பிறகு யாவற்றிலும் கொடிய விபத்தாக இருந்தது. அலெக்ஸேய் பகலுணவு கொள்ளவில்லை. இரவுச் சாப்பாட்டுக்கும் வரவில்லை. பகல் வேளைகளில் தூங்கும் அறைகளில் இருப்பது பயிற்சிப் பள்ளி விதிகளின் படிக் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் அவன் கைகளைத் தலைக்குகீழே வைத்தவாறு, பூட்சுகளைக் கழற்றாமலே கட்டிலில் படுத்துக் கிடந்தான். அவனது துயரத்தை அறிந்திருந்த பள்ளி முறையதிகாரிக்கோ, வழியே சென்ற கமாண்டர்களுக்கோ அவனைக் கடிந்து கொள்ள மனம் வரவில்லை. ஸ்த்ருகோவ் வந்து பேச்சுக் கொடுக்க முயன்றார். பதிலொன்றும் கிடைக்காமல் அனுதாபத்துடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விட்டார்.

ஸ்த்ருகோவ் போனதுமே, அனேகமாக அவரைத் தொடர்ந்தாற்போல, மெரேஸ்யெவ் படுத்திருந்த அறைக்குள் வந்தார் லெப்டினன்ட் கர்னல் கப்பூஸ்தின். இவர் பயிற்சிப் பள்ளியின் அரசியல் துணைத் தலைவர். குட்டையான, பாங்கற்ற உடலைமைப்புள்ளவர் இவர். பருத்த மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார். நன்கு பொருந்தும் படி சரிப்படுத்ததப்படாத, சாக்கு மூட்டைப் போன்ற இராணுவச் சீருடை அணிந்திருப்பார். வெளித் தோற்றத்தில் பாங்கற்ற இதே மனிதர் சர்வதேச பிரச்சனைகள் பற்றி விரிவுரைகள் ஆற்றும்போது, ஒரு மாபெரும் யுத்தத்தில் பங்கெடுத்துக் கொள்வது குறித்துக் கேட்போரின் உள்ளங்கள் பெருமையால் பூரிக்கும்படி செய்துவிடுவார். எனவே இவருடைய விரிவுரைகளை மாணவர்கள் விருப்புடன் கேட்பார்கள். ஆனால் தலைமையதிகாரி என்ற வகையில் இவரை அவர்கள் அவ்வளவாக மதிப்பதில்லை. இவர் இராணுவச் சார்பற்றவர், விமானப்படைக்கு தற்செயலாக வந்திருப்பவர், விமானப் பறப்பு பற்றி எதுவும் புரியாதவர் என்ற எண்ணமே இதற்குக் காரணம். மெரேஸ்யெவைக் கவனிக்காமலே கப்பூஸ்தின் அந்த அறையைச் சுற்றிக் கண்ணோட்டினார், காற்றை முகர்ந்து பார்த்தார். திடீரெனக் கோபங்கொண்டார்.

“யார் அவன் இங்கே சிகரெட்டுக் குடித்தவன்? அதற்காகத்தான் புகைக்கும் அறைகள் இருக்கின்றனவே. தோழர் சீனியர் லெப்டினன்ட், இதற்கு என்ன அர்த்தம்?” என்றார்.

படிக்க:
பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்
காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !

“நான் புகை பிடிப்பதில்லை” என்று கிடையை மாற்றாமலே ஏனோ தானோவென்று பதில் சொன்னான் அலெக்ஸேய்.

“ஆமாம் கட்டிலில் நீங்கள் எதற்காகப் படுத்திருக்கிறீர்கள்? விதிகள் உங்களுக்குத் தெரியாதா? பெரிய அதிகாரி வந்த போது நீங்கள் ஏன் எழுந்திருக்கவில்லை?… எழுந்து நில்லுங்கள்.”

இது கட்டளை அல்ல. மாறாக, இது நயப்பாங்குடன், அமைதியாகக் கூறப்பட்டது. எனினும் அலெக்ஸேய் சோர்வுடன் அதற்குக் கீழ்படிந்து கட்டிலின் பக்கத்தில் எழுந்து நின்றான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க