ந்தியத் துணைக் கண்டத்து நதிகளை இணைப்பதில் நரேந்திரமோடி தீவிரமாக இருக்கிறார். பல்வேறு தரப்பினரும் நதிகளை இணைக்க வலியுறுத்தி வருகின்றனர். (தி இந்து, 2 செப். 2017). ஆறுகள் கழிவுநீர் சாக்கடைகளாக மாறுவதைப் பற்றிப் பேசாத, மணற்கொள்ளையை எதிர்க்காத, சாயப்பட்டறை இரசாயனங்கள் ஆறுகளில் கலப்பதைப் பற்றிக் கவலைப்படாத, காவிரி ஆற்று நீரைக் கர்நாடகமும், பாலாற்று நீரை ஆந்திரமும் மறுப்பதைப் பற்றிக் கவலைப்படாத கார்ப்பரேட் சாமியார்கள் திடீரென்று ஆறுகளை மீட்கப் போவதாகக் களம் இறங்கி ஆறுகளை இணைப்பதற்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.

சாமியார்கள் அழைப்பை ஏற்று, ஆறுகளை இணைப்பதற்கு ஆதரவாக இளைஞர்கள் ‘மிஸ்டு கால்’ கொடுக்கிறார்கள். மயிலாடுதுறையில் புஷ்கரம்’ குட்டைக் குளியலுக்குக் கூடிய சாமியார்கள் கூட்டம் மாநாடு போட்டு ஆறுகள் இணைப்புக்குத் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். ஊர் பெரிய மனிதர்களும், முக்கியஸ்தர்களும், பச்சைத் துண்டுகளும் தொழிலதிபர்களும் நதிநீர் இணைப்புப் பற்றிய கூட்டங்களில் பெருமை பொங்க உட்கார்ந்திருக்கிறார்கள். மேடையில் இடம் கிடைத்தது பற்றி மகிழ்ந்து போகிறார்கள்.

பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினாலும், வலியுறுத்தா விட்டாலும் ஆறுகளை இணைப்பதில் மோடியும், இந்துத்துவவாதிகளும் குறியாக இருக்கிறார்கள். இத்திட்டத்தின் பின்னே வெளியிடப்படாத நோக்கங்கள், திட்டங்கள் இருக்கின்றன.

முதல் கட்டப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் (தி.இந்து, 2 செப்.2017) தொடங்கும் என்று செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. முதலில் வடமாநிலங்களில் கங்கை உட்பட 60 நதிகளை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. “முதல் கட்டப் பணிகளுக்கான ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், முழு பணிகளுக்கான ஒப்புதலும் இந்த ஆண்டுக்குள் கிடைத்துவிடும்” என்றும் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பால்யன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நதிகள் இணைப்புத் திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சமீப காலத்தில் இந்திய (தேசிய மற்றும் ) தென்னிந்திய ஆறுகளை இணைப்பது என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வடக்கே ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கும், மேற்கிலும் தெற்கிலும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கும், தீர்வு என்ற கருத்து பரப்பப்பட்டு வருகிறது. மூளை நோகாமல் பிரச்சினைக்குத் தீர்வு தேடுகிறவர்களுக்கு இத்திட்டத்தில் தீர்வு இருப்பதாகப்படுகிறது.

பிரச்சினைகளைப் புரிந்துகொண்டுதான் ஆதரிக்கிறார்களா?

காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில், தமிழகத்துக்கு உரிமையுள்ள நீரை கர்நாடகம் வழங்க வேண்டுமென்று 2007 – லேயே காவிரித் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வற்புறுத்தியும், அதை அமைக்க இந்திய அரசு மறுக்கிறது. காவிரி நீரை மறுப்பதில் கர்நாடகமும் இந்திய அரசும் இணைந்து செயல்படுகின்றன. இந்நிலையில், இந்திய ஆறுகளை இணைத்துவிட்டால், தமிழகத்துக்குத் தண்ணீர் தடையில்லாமல் வரும் என்றும், இந்திய அரசு வேண்டிய அளவு ஆற்றுநீரைத் தரும் என்றும் தமிழகத்தில் பலரும் கருதிக் கொண்டு நதிகளை இணைக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

படிக்க:
ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !
தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !

இதில் தேசியக்கட்சிகள், திராவிடக்கட்சிகள், உதிரிக்கட்சிகள், விவசாய அமைப்புகள், இலக்குத் தெரியா இயக்கங்கள் எனப் பலவும் அடங்கும். கங்கை -காவிரி இணைப்பு என்ற திட்டம் பற்றியோ அல்லது தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு என்பது பற்றியோ இவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் ஆதரிக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. ஆறுகள் இணைப்பு என்பதன் பின்னே எவ்வளவு அழிவு இருக்கின்றன என்பதையோ, இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் பல்லாயிரம் மக்களின் கதி என்ன என்பது பற்றியோ அறிந்து கொண்டு திட்டத்தை ஆதரிக்கிறார்களா என்றால் இல்லை.

திட்டம் சாத்தியமா?

தொழில்நுட்பமும், பொறியியலும் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமா என்ற கேள்வி தேவையில்லை. பூமியைக் குடைவது, மலைகளைப் பிளப்பது, காடுகளைச் சாய்ப்பது, கான்கிரீட்டில் பாலம் கட்டி அந்தரத்தில் நீரை நிறுத்துவது என்று எல்லாமே இன்று சாத்தியம்தான்.

ஆனால், இதை யார் செய்யப் போகிறார்கள்? எந்தப் பணத்திலிருந்து செய்யப் போகிறார்கள்? இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதும் ஆறுகள் யாருக்குச் சொந்தமானதாக இருக்கும்? விவசாயிகள் தண்ணீரை யாரிடம் கேட்டுப் பெற வேண்டும்? விவசாயத்திற்குத் தண்ணீர் தரப்படுமா? – போன்ற கேள்விகள் இன்னமும் எழுப்பப்படவில்லை. (நூலிலிருந்து பக்.1-3)

திட்டம் என்ன?

இந்தியத் துணைக்கண்டத்தில், 37 ஆறுகளை 30 கால்வாய்களும் 3000 நீர்த்தேக்கங்களும் அமைத்து இணைப்பதன் மூலம் மிகப்பெரும் நீரிணைப்பை ஏற்படுத்துவது.

இத்திட்டத்தில் இமயமலை ஆறுகள் இணைப்பு என்பது 14 இணைப்புகளால் ஆனது. கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்த்தேக்கங்கள் அமைத்து, மழைக்கால நீரைத் தேக்குவது, கோகி, கண்டக், காக்ரா ஆறுகளின் நீர்ப்பெருக்கைக் கொண்டு சென்று ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் பகுதிகளை வளப்படுத்துவது.

தீபகற்பப் பகுதியில் ஆறுகள் இணைப்பு என்பது 16 இணைப்புகளைக் கொண்டது. மகாந்தியையும், கோதாவரியையும் இணைத்து, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை ஆகிய ஆறுகளுக்குத் தண்ணீர் அளிப்பது. இதற்குப் பல பெரிய அணைகளும், பெரிய கால்வாய்களும் அமைக்கப்பட வேண்டும். மேலும் கென் ஆறு, பெட்வா, பர்பாதி, கலிசிந்து, சம்மல் ஆகிய ஆறுகளுடன் இணைக்கப்படும். (நூலிலிருந்து பக்.7)

Inuds River
பரந்து விரிந்துள்ள சிந்து நதி

… ஆறுகள் இணைக்கப்பட்டு விடும்; தமிழ்நாட்டு ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்; நம் விருப்பம் போல நீரைப் பயன்படுத்தலாம் என்று நம்புவது ஏமாளித்தனம்; அப்படி நம்பச் சொல்லுகிறவன் ஏமாற்றுக்காரன்.

தங்கள் மாநிலங்களின் ஆற்று நீரை அண்டை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள அப்படியே அனுமதித்து விடுவார்கள் என்று இன்னொரு மாநிலத்துக்காரன் நம்புவதே அறிவுப் பற்றாக்குறையின் அடையாளம். காசு கொடுக்காவிட்டால் நீர் இல்லை என்பது இப்போதே நிலவும் சூழல். நாளை, இந்த ஆறுகளை இணைக்கும் போது நாம் கட்டணம் செலுத்தப்போவது நீரை விற்கப்போகிற இந்த மாநிலங்களுக்கா அல்லது காசைக் கொட்டி ஆறுகளை இணைக்க இருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கா – என்பது இனிமேல்தான் தெளிவாகும்.

ஆறுகளை இணைத்துவிட்டாலும் கூட நீரைப் பெறுவதில் உள்ள இடர்பாடு தமிழ்நாட்டுக்கு முன்னமே தெரியும். சென்னை நகருக்குத் தேவையான குடிநீரை கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெறுவதற்கு தமிழ்நாடு இன்றுவரை படாதபாடு படுகிறது. அதுவும், ஒவ்வொரு சொட்டு நீருக்கும் தமிழ்நாடு அரசு காசு கொடுத்தாலும் நீரைத்தர அந்த மாநிலங்கள் தயாரில்லை. இணைப்புக் கால்வாய் இருக்கிறது. ஆனால் நீர்தான் பெற முடியவில்லை. இது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். (நூலிலிருந்து பக்.23)

நூல் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா ?
ஆசிரியர் : பேராசிரியர் த.செயராமன்

வெளியீடு : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு,
19/2, சேந்தங்குடி வடக்குத் தெரு,
ஆனதாண்டவபுரம் சாலை, மயிலாடுதுறை – 609001.
தொலைபேசி : 04364 – 227484
அலைபேசி : 98420 07371, 94433 95550.
மின்னஞ்சல் : pcpd.periyar@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 30.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | commonfolks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க