அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 43

புதிய விஞ்ஞானம்

அ. அனிக்கின்
அ.அனிக்கின்

ரு விவசாயி உரம் போட்டுப் பயிர் செய்கிறான்; பிறகு விளைந்த தானியத்தை அறுவடை செய்கிறான். தானியத்தில் ஒரு பகுதியை விதைக்காகவும் இன்னொரு பகுதியைத் தன்னுடைய குடும்பத் தேவைகளுக்காகவும் சேமித்து வைக்கிறான்; ஒரு பகுதியை விற்பனை செய்து நகரத்தில் கிடைக்கும் அவசியமான பொருள்களை வாங்குகிறான்; இத்தனைக்குப் பிறகும் அவனிடம் உபரி தானியம் இருப்பதைக் கண்டு அவன் மகிழ்ச்சியடைகிறான். இந்தக் கதை எவ்வளவு எளிமையானதாக இருக்கிறது. இதைப் போன்ற ஒரு கற்பனை தான் கெனேயின் பல்வேறு கருத்துக்களையும் தூண்டியது.

இந்த உபரியை விவசாயி என்ன செய்வான் என்பது கெனேக்கு நன்றாகத் தெரியும். விவசாயி உபரியை தானியமாகவோ பணமாகவோ தன்னுடைய நிலப்பிரபு, அரசர், திருச்சபை மதகுரு ஆகியோரிடம் கொடுப்பான். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்த விகிதாச்சார அளவின்படி கொடுப்பான் என்பதைக் கூட அவர் கணக்கிட்டார்: நிலப்பிரபுவுக்கு ஏழில் நான்கு பாகம், அரசருக்கு ஏழில் இரண்டு பாகம், திருச்சபை மதகுருவுக்கு ஏழில் ஒரு பாகம் என்ற விகிதாச்சாரத்தின்படி கொடுப்பான். இங்கே இரண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்த விவசாயியின் அறுவடையில் அல்லது வருமானத்தில் கணிசமான பகுதியைப் பிடுங்கிக் கொள்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இரண்டாவதாக, இந்த உபரி எங்கேயிருந்து வருகிறது?

முதல் கேள்விக்கு கெனே தருகின்ற பதிலை சுருக்கமாக இப்படிக் கூறலாம். அரசருக்கும் திருச்சபை மதகுருவுக்கும் கொடுப்பதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியாது – அதாவது அது கடவுள் செயல். நிலப்பிரபுவைப் பொறுத்த வரையிலும் அவர் ஒரு சுவாரசியமான பொருளியல் விளக்கத்தைக் கண்டுபிடித்தார். அந்த நிலத்தை விவசாயத்துக்குத் தகுதியுடையதாகச் செய்வதற்காக அவர்கள் நெடுங்காலத்துக்கு முன்பு அதில் மூலதனத்தை முதலீடு செய்திருப்பதாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர்களுடைய ”நில முன்பணம்” என்று சொல்லப்படுகின்ற செலவுக்குத் தரப்படுகின்ற நியாயமான வட்டியே நில வாரம் என்று கருத வேண்டும். இதைக் கெனே உண்மையிலே நம்பினாரா என்பதைச் சொல்வது கடினம். எப்படி இருந்தாலும் நிலப்பிரபுக்கள் இல்லாத விவசாயத்தை அவரால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

இரண்டாவது கேள்விக்குப் பதில் இதைக் காட்டிலும் சுலபமாக அவருக்குத் தோன்றியது. இந்த உபரியைக் கொடுத்தது பூமி, இயற்கை. எனவே அதே இயற்கையான வழியில் அது நிலத்தின் உடைமையாளரைச் சேருகிறது.

மாதிரிப் படம்

உற்பத்திப் பொருளிலிருந்து உற்பத்தியின் எல்லாச் செலவுகளையும் கழித்த பிறகு கிடைக்கும் உபரியை கெனே நிகரப் பொருள் என்று குறிப்பிட்டார்; அதன் உற்பத்தி, வினியோகம், செலாவணி ஆகியவற்றை அவர் ஆராய்ந்தார். பிஸியோகிராட்டுகளின் நிகரப் பொருள் என்பது உபரிப் பொருளுக்கும் உபரி மதிப்புக்கும் அதிக நெருக்கமான மாதிரிப் படிவமாகும்; ஆனால் அவர்கள் அதை நிலக் குத்தகையோடு நிறுத்திக் கொண்டார்கள், அது பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான பலன் என்றும் கருதினார்கள். எனினும் அவர்கள் ”உபரி மதிப்பின் தோற்றுவாய் பற்றிய ஆராய்ச்சியை செலாவணியின் வட்டத்திலிருந்து நேரடியான உற்பத்தியின் வட்டத்துக்கு மாற்றினார்கள், அதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அடிப்படையைப் போட்டார்கள்”.(1) அவர்கள் செய்த மாபெரும் சேவை இது.

கெனேயும் பிஸியோகிராட்டுகளும் உபரி மதிப்பை விவசாயத்தில் மட்டுமே கண்டுபிடித்தது ஏன்?

அங்கே அதன் உற்பத்தி, ஒதுக்கீட்டின் நிகழ்வுப் போக்கு மிகவும் வெளிப்படையானதாகும். தொழில் துறையில் இதைக் கண்டுபிடிப்பது ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகக் கடினமாகும். ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட கால அளவில் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு அவசியமானவற்றின் விலையைக் காட்டிலும் அதிகமான மதிப்பைப் படைக்கிறான் என்பது இங்கேயுள்ள முக்கியமான உண்மையாகும். ஆனால் ஒரு தொழிலாளி தன்னுடைய நுகர்வுக்குத் தேவையான பண்டங்களிலிருந்து அதிகமாக வேறுபட்ட பண்டங்களை உற்பத்தி செய்கிறான்.

அவன் வாழ்க்கை முழுவதிலும் திருகாணிகளையும் பூட்டுகளையும் செய்யலாம்; ஆனால் அவன் பெரும்பாலும் ரொட்டியும் எப்பொழுதாவது இறைச்சியும் சாப்பிடுகிறான், ஒயின் அல்லது பீர் குடிப்பதும் உண்டு. இதிலடங்கியிருக்கின்ற உபரி மதிப்பைக் கண்டுபிடிப்பதற்குத் திருகாணிகளையும் பூட்டுகளையும் ரொட்டியையும் ஒயினையும் ஒரு பொதுவான தொகுதியில் வகைப்படுத்துவதற்குத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது பண்டங்களின் மதிப்பு பற்றிய கருதுகோளைப் பெற்றிருக்க வேண்டும். கெனேயிடம் இந்தக் கருதுகோள் இருக்கவில்லை. மேலும் அவருக்கு அதைப் பற்றி அக்கறையும் இல்லை.

படிக்க :
♦ அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !

விவசாயத்தில் உபரி மதிப்பு என்பது இயற்கை கொடுக்கும் அன்புப் பரிசாகத் தோன்றுகிறதே தவிர கூலி கொடுக்கப்படாத மனித உழைப்பின் பலனாகத் தோன்றவில்லை. அந்த உபரிப் பொருள் இயற்கை வடிவத்திலேயே நேரடியாக இருக்கிறது. குறிப்பாக தானியத்தில் இதை நன்றாகப் பார்க்கலாம். கெனே தன்னுடைய பொருளாதார மாதிரிக்கு ஏழைக் கூலி விவசாயியை எடுத்துக் கொள்ளவில்லை. உழவு மாடுகள், மிகச் சாதாரணமான உழவுக் கருவிகள் ஆகியவற்றைச் சொந்தமாக வைத்துக் கொண்டிருப்பதோடு கூலி உழைப்பையும் உபயோகிக்கின்ற அவருக்குப் பிரியமான குத்தகை விவசாயியை எடுத்துக் கொண்டார்.

இந்த வகையைச் சேர்ந்த விவசாயியின் பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனைகள் கெனேயை மூலதனத்தைப் பற்றி ஒரு விதத்தில் ஆராய்வதற்கு இட்டுச் சென்றன; எனினும் அந்த வார்த்தையை அவருடைய எழுத்துக்களில் நாம் பார்க்க முடியாது. உதாரணமாக, வாய்க்கால், கட்டிடம், குதிரைகள், ஏர்க்கருவிகள், பரம்புக் கட்டை ஆகியவற்றுக்காகச் செய்யப்படும் செலவு ஒரு வகையான முன்பணம் என்றும் விதைகள், பண்ணையாளுக்குச் செய்யப்படும் செலவு வேறு வகையான முன்பணம் என்பதையும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

முதல் வகையில் சில வருடங்களுக்கு ஒரு முறை மொத்தமாகச் செலவழிக்கப்படுகிறது, பிறகு படிப்படியாக அந்தச் செலவு ஈடு செய்யப்படுகிறது. இரண்டாம் வகையில் வருடத்துக்கு ஒரு தடவை அல்லது வருடமுழுவதும் செலவு செய்யப்படுகிறது, அந்தச் செலவு ஒவ்வொரு அறுவடையின் போதும் ஈடு செய்யப்பட வேண்டும். ஆகவே கெனே முதல் மூலதனம் (இன்று நிலையான மூலதனம் என்று நாம் சொல்கிறோம்), வருடாந்தர மூலதனம் (இன்று செலாவணி மூலதனம்) என்பவற்றைப் பற்றிப் பேசுகிறார். ஆடம் ஸ்மித் இந்தக் கருத்துக்களை வளர்த்துச் சென்றார். இன்று இவை பொருளாதாரத்தின் மூலக் கருத்துக்களாகும்; ஆனால் அந்தக் காலத்தில் இந்த ஆராய்ச்சி மாபெரும் சாதனையாகும். மார்க்ஸ் தம்முடைய உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் பிஸியோகிராட்டு களைப் பற்றிய ஆராய்ச்சியைப் பின்வரும் வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறார். ”முதலாளித்துவ வான எல்லைக்குள் மூலதனத்தைப் பற்றிய ஆராய்ச்சி முழுவதுமே பிஸியோகிராட்டுகள் செய்த பணியாகும். இந்த சேவையினால் தான் அவர்கள் நவீன அரசியல் பொருளாதாரத்தின் உண்மையான தந்தையர் என்று கருதப்படுகிறார்கள்.”(2)

இந்தக் கருதுகோள்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கெனே மூலதனத்தின் செலாவணி மற்றும் புனருற்பத்தியைப் பற்றிய, அதாவது பகுத்தறிவுக்கு ஏற்ற வகையில் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்வதில் மிகவும் அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்ட உற்பத்தி, விற்பனை ஆகிய நிகழ்வுப் போக்குகள் தொடர்ச்சியாகப் புத்துருவம் பெறுவதையும் திரும்பத் திரும்ப நடைபெறுவதையும் பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படைகளை உருவாக்கினார். மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்ற புனருற்பத்தி என்ற சொல்லை முதன் முதலில் உபயோகித்ததே கெனே தான்.

கெனே தன் காலத்திய சமூகத்தின் வர்க்க அமைப்பைப் பின்வருமாறு வர்ணித்தார் : “நாட்டில் மூன்று வகைகளைச் சேர்ந்த குடிமக்கள் தான் இருக்கிறார்கள்: உற்பத்தி செய்கின்ற வர்க்கம், உடைமையாளர்களின் வர்க்கம் மற்றும் மலட்டு வர்க்கம்”.(3)

முதல் பார்வையில் இது விசித்திரமான பிரிவினையைப் போலத் தோன்றுகிறது. ஆனால் இது கெனேயின் போதனையிலிருந்து தர்க்கரீதியாகவே ஏற்படுகிறது; அந்தப் போதனையின் சிறப்பான அம்சங்கள், அதிலிருக்கும் குறைகள் ஆகிய இரண்டையுமே பிரதிபலிக்கிறது. உற்பத்தி செய்கின்ற வர்க்கம் என்பது நிலத்தில் பாடுபடுகின்ற விவசாயிகளே; அவர்கள் தங்களுக்கு உணவைத் தேடிக் கொண்டு மூலதனச் செலவை ஈடு செய்வதோடு மட்டுமல்லாமல், நிகரப் பொருளையும் படைக்கிறார்கள். உடைமையாளர்களின் வர்க்கம் என்பது நிகரப் பொருளை அடைகின்ற வர்க்கமாகிய நில உடைமையாளர்கள், அரசவை, திருச்சபை ஆகியோர்; அவர்களுடைய பணியாட்களும் இதில் அடங்கு கிறார்கள். கடைசியாக மலட்டுத்தனமான வர்க்கம் என்பது மற்ற எல்லோருமே, அதாவது கெனேயின் வார்த்தைகளில் ”விவசாயத்தைத் தவிர மற்ற காரியங்களிலும் மற்ற சேவைகளிலும் ஈடுபட்டிருக்கின்ற” எல்லோருமேதான்.

படிக்க :
♦ இந்தியாவில் அமேசான் நம்பர் 1 ஆனது எப்படி ? ஐரோப்பிய தொழிலாளியைக் கேளுங்கள் !
♦ கம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் ? கேள்வி – பதில்

மலட்டுத்தனம் என்ற வார்த்தையைக் கெனே எத்தகைய பொருளில் உபயோகித்தார்? அவர் கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களை – நில உடைமையாளர்களுக்கு மாறான அர்த்தத்தில் மலட்டுத்தனமானவர்களென்று கருதினார். இவர்களும் உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உழைப்பு நிலத்தோடு சம்பந்தமில்லாததாகும். அதன் மூலம் அவர்கள் எவ்வளவு நுகர்வு செய்கின்றார்களோ அவ்வளவு உற்பத்தி செய்கின்றார்கள்; அவர்களுடைய உற்பத்தி என்பது விவசாயத்தின் மூலம் படைக்கப்படுகின்ற பொருளின் இயற்கையான வடிவத்தை மாற்றிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கிறது. மற்ற இரண்டு வர்க்கங்களும் எப்படியோ ஒரு வழியில் இவர்களுக்குக் கூலி கொடுப்பதாக கெனே கருதினார். நில உடைமையாளர்கள் உழைப்பதில்லை; ஆனால் சமூகத்தின் செல்வத்தை அதிகரிக்கச் செய்யும் சக்தியுள்ளதாக கெனே கருதிய ஒரே உற்பத்திக் காரணியாகிய நிலத்தின் உடைமையாளர்களாக இருக்கிறார்கள். நிகரப் பொருளை ஒதுக்கிக் கொள்வதுதான் அவர்கள் செய்யும் சமூகக் கடமை.

கெனேயின் பகுப்பு முறையில் அதிகமான குறைகள் உள்ளன; அவர் தொழிற்சாலைகளிலும் விவசாயத்திலுமுள்ள தொழிலாளர்களையும் முதலாளிகளையும் ஒரே பிரிவிலே வைக்கிறார் என்பதை மட்டும் இங்கே குறிப்பிடுவதே போதும். இது மோசமான தவறாகும், டியுர்கோ ஓரளவுக்கு இதைத் திருத்தினார்; ஸ்மித் இதை முழுமையாகவே நிராகரித்தார்.

அல்லது முக்கியத்துவத்தில் சிறிதும் குறையாத ஒரு சிறு விவரத்தை எடுத்துக் கொள்வோம். முதலாளி என்பவர் ஏதோ ஒரு வகையில் கூலியை மட்டுமே பெறுகிறார் என்றால் அவரிடம் மூலதனத் திரட்சி எப்படிக் கிடைக்கிறது? எதிலிருந்து கிடைக்கிறது?

ஜோசப் ஷம்பீட்டர்

கெனே இந்தப் பிரச்சினையை இப்படிச் சமாளிக்கிறார். நிகரப் பொருளிலிருந்து, அதாவது நில உடைமையாளரின் வருமானத்திலிருந்து கிடைக்கப் பெறுவது மட்டும் தான் முறையான, பொருளாதார ரீதியில் “நியாயமான” திரட்சி எனக் கூறுகிறார். தொழிலதிபரும் வணிகரும் தங்களுடைய ”கூலியிலிருந்து” எதையாவது பிரித்துக் கொள்வதன் மூலமே திரட்சியைச் செய்ய முடியும், இது முழுவதும் ”நியாயமான” வழி என்று சொல்ல முடியாது என்கிறார். முதலாளித்துவத் தவிர்ப்பின் காரணமாகவே மூலதனத் திரட்சி ஏற்படுகிறது என்ற முதலாளித்துவத்துக்கு ஆதரவான வாதம் இங்கேயிருந்து தான் தோன்றுகிறது. பொதுவாகச் சொல்வதென்றால் முதலாவதாகவும் முதன்மையாகவும் கெனே சமுதாயத்தில் வர்க்க ஒத்துழைப்பையே பார்த்தார். அவர் ”வர்க்க நலன்களின் பரந்துபட்ட இணக்கத்தை வலியுறுத்தியது அவரை 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இணக்கவாதத்தின் (ஸேய், கேரி, பஸ்தியா) முன்னோடியாக்குகிறது”(4) என்று ஷம்பீட்டர் அவரைப் பற்றி எழுதியிருப்பது தற்செயலானதல்ல.

ஆனால் கெனேயின் போதனையை இப்படி வகைப்படுத்தி விட முடியாது. அதிலிருந்து எத்தகைய செய்முறை முடிவுகள் ஏற்படுகின்றன என்பதைக் காண்போம். பெரிய அளவுத் தொகுதிகளில் விவசாயத்தை நடத்துவதை சாத்தியமான எல்லா வழிகளிலும் ஊக்குவிக்க வேண்டும் என்பது அவருடைய முதல் சிபாரிசாக இருந்தது இயற்கையே.

எனினும் இதற்கு அடுத்தபடியாக அவர் தெரிவித்த இரண்டு சிபாரிசுகள் அந்தக் காலத்தில் அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை. நிகரப் பொருள் மீது மட்டுமே வரி விதிக்க வேண்டும், ஏனென்றால் அது ஒன்று மட்டும் தான் உண்மையான பொருளாதார ”உபரி” என்று கெனே கூறினார். மற்ற எல்லா வரிகளுமே பொருளாதாரத்தில் சுமைகளை ஏற்படுத்துகின்றன என்றார். நடைமுறையில் இதன் அர்த்தம் என்ன?

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அவர் எந்தப் பிரபுக்களின் மீது சமூகத்தின் முக்கியமான, கௌரவமான கடமைகளைச் சுமத்தினாரோ, அவர்களே எல்லா வரிகளையும் கட்ட வேண்டுமென்பதே இதன் அர்த்தமாகும். அன்றைய பிரான்சில் நிலைமை இதிலிருந்து முற்றிலும் மாறான விதத்தில் இருந்தது: அவர்கள் எந்த விதமான வரியையும் கட்டவில்லை. மேலும், தொழில் துறையும் வர்த்தகமும் ”விவசாயத்தினால்” காப்பாற்றப்படுவதனால், இவற்றை சாத்தியமான அளவுக்குச் சிக்கனமாகச் செய்யவேண்டும் என்றார். உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறைக்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். பிஸியோகிராட்டுகள் சுதந்திர உற்பத்திக்கு ஆதரவாகப் பேசினார்கள்.

படிக்க :
♦ பொருளாதார நெருக்கடி : அபிஜித் பானர்ஜியிடம் நிரந்தரத் தீர்வு உண்டா ?
♦ புதிய தொடர் : பொருளாதாரம் கற்போம்

கெனேயின் போதனையின் முக்கியமான அம்சங்கள் இவை. பிஸியோகிராட்டிய மரபின் முக்கிய அம்சங்களும் இவையே. இவற்றில் பலவீனங்களும் குறைகளும் எவ்வளவு இருந்தாலும் அது உலகத்தைப் பற்றி ஒன்றிணைக்கப்பட்ட பொருளாதார, சமூகப் பார்வையைக் கொண்டிருந்தது, தத்துவத்திலும் நடைமுறையிலும் அதன் காலத்துக்கு முற்போக்கானதாக இருந்தது.

கெனேயின் கருத்துக்கள் பல சிறிய பிரசுரங்களிலும் அவருடைய மாணவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் எழுதிய புத்தகங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. அவருடைய புத்தகங்கள், 1756-க்கும் 1768-க்கும் இடையில் பலவிதமான வடிவங்களில் பெரும்பாலும் ஆசிரியருடைய பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டன. சில புத்தகங்கள் வெளியிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்துவிட்டன; 20-ம் நூற்றாண்டில் தான் இவற்றைக் கண்டுபிடித்து வெளியிட்டார்கள், கெனேயின் எழுத்துக்களை நவீன வாசகர் படித்துப் புரிந்து கொள்வது சுலபமல்ல; அவருடைய முக்கியமான கருத்துக்கள் சுமாரான அளவுள்ள ஒரு புத்தகத்தில் அடங்கியிருந்த போதிலும், அவை திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமான அழுத்தங்களோடும் மாற்றங்களோடும் எடுத்துச் சொல்லப்படுகின்ற காரணத்தால் அவற்றைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கின்றது.

1768-ம் வருடத்தில் கெனேயின் மாணவரான டுபோன் டெ நெமூர் ஒரு புதிய விஞ்ஞானத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் பிஸியோகிராட்டிய மரபினரது வளர்ச்சியைத் தொகுத்துக் கூறியது. இன்று அதன் தலைப்புக்கு நாம் தருகின்ற பொருள் விளக்கத்தை அவர் ஒருவேளை உத்தேசித்திருக்க முடியாது; ஆனால் அவர் சரியான தலைப்பையே உபயோகித்தார் என்பதை வரலாறு காட்டிவிட்டது. கெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன.

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 45.

(2) K. Marx, Theories of Surplus-Value, Part 1, p. 44.

(3) Francois Quesnay et la Physiocratie, Paris, 1958, t. II, p. 793.

(4) J. Schumpeter, History of Economic Analysis, p. 234. 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க