காஷ்மீர் போர் குறித்த பா.ஜ.க.-வின் வரலாற்று மோசடி !

“1947- காலக் கட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஜம்மு காஷ்மீர் களத்தில் நடந்த போரில் ஜவஹர்லால் நேரு சமரசக் கொள்கையைக் கடைப்பிடித்தார். அன்று மட்டும் இந்திய இராணுவத்தை அவர் சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்” என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருகின்றன. இந்த வாதம் ஒரு வரலாற்று மோசடி என்பதை இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலப்படுத்துகின்றன.

வழக்குரைஞரும் அரசமைப்புச் சட்ட வல்லுநருமான ஏ.ஜி.நூரானி, தி வயர் இணையதளத்தில் எழுதிய “காஷ்மீர், சட்டப்பிரிவு 370 முதல் பிரிவினை வரை: நேருவுக்கு எதிரான பா.ஜ.க. பரப்பும் வெறுப்புக்கு அடித்தளமாக அமைந்திருப்பவை பொய்களே” எனும் கட்டுரையில் இந்திய இராணுவம் வெளியிட்டிருக்கும் “ஜம்மு காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு” என்ற ஆவணத்திலிருந்து அப்பொழுது சமாதான உடன்படிக்கை அவசியமாக இருந்ததை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அப்பகுதியை புதிய ஜனநாயகம் வாசகர்களுக்குச் சுருக்கமாக மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறோம்.

  • ஆசிரியர் குழு.

♦ ♦ ♦

பிரதமர் நேருதான் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன் விளைவு, காஷ்மீரின் அந்தப் பகுதி இப்பொழுது பாகிஸ்தான் வசமாகிவிட்டது. இத்தேசத்தின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தவரைப் பொருட்படுத்தாமல் நேரு தன்னிச்சையாக எடுத்த முடிவால் ஏற்பட்ட நிலை இது. பிறரது கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டு இருக்குமானால் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீர் இந்தியாவின் வசம் இருந்திருக்கும் என்று அமித்ஷா உள்ளிட்டு சங்கப் பரிவாரத்தினர் கூறிவருகின்றனர்.

இது அப்பட்டமான பொய். பட்டேல் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்ற அமித்ஷாவின் கூற்று பொய் என்பதை பட்டேலின் கடிதப் போக்குவரத்துகள் தொகுதி தெளிவாக்குகிறது.

Kashmir-History
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கும் இந்திய இராணுவச் சிப்பாய்கள். (கோப்புப் படம்)

இராணுவ வரலாற்று நிபுணர் S.N. பிரசாத் அவர்களால் பேட்டிகள் மற்றும் அதிகாரபூர்வ ஆவணங்களின் அடிப்படையில் இது தொடர்பான இராணுவ விஷயங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. இவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் வரலாற்றியல் பிரிவு இயக்குனராக பணியாற்றியவர். ஜம்மு காஷ்மீரில் இராணுவ நடவடிக்கைகளின் வரலாறு (1947-48) என்ற தொகுப்பு பாதுகாப்பு அமைச்சகத்தின் வரலாற்றுப் பிரிவால் 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  அதில் விவரிக்கப்பட்ட அன்றைய களநிலை பற்றிய வரலாற்றுப் பகுப்பாய்வு இங்கு விரிவாகத் தரப்படுகிறது.

முறையான பாகிஸ்தான் இராணுவத்தின் காலாட்படை டிவிசன்கள் இரண்டும், ஆசாத் காஷ்மீர் இராணுவம் என்றழைக்கப்பட்ட ஒரு காலாட்படை டிவிசனும் டிசம்பர், 1948-ல் எதிரியின் தரப்பில் போர்க்களத்தில் இருந்தன. இவை பாகிஸ்தான் இராணுவத்தின் 14 காலாட்படை பிரிகேடுகள் அல்லது 23 காலாட்படை பட்டாலியன்கள் மற்றும் ஆசாத் காஷ்மீர் இராணுவத்தின் 40 காலாட்படை பட்டாலியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. கூடுதலாக 19,000 சாரணர்கள் மற்றும் முறைசாராப் போர் வீரர்களும் இருந்தனர்.

இதற்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் 12 பிரிகேடுகள் கொண்ட 2 காலாட்படை டிவிசன்கள், மொத்தத்தில் முறையான இராணுவத்தின் சுமார் 50 காலாட்படை பட்டாலியன்கள் மற்றும் இந்திய மாநிலங்களின் படைகள், கூடுதலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் படை மற்றும் கிழக்கு பஞ்சாப் மக்கள் படையின் 2 பட்டாலியன்கள் நம்மிடம் இருந்தன.

இராணுவ பலம் தொடர்பான மேற்சொன்ன ஒப்பீட்டு விபரங்களை உத்தேச மதிப்பீடுகள் எனக் கொண்டாலும், ஜம்மு காஷ்மீரில் எதிரிப் படை இந்திய இராணுவத்தைவிட எண்ணிக்கையில் விஞ்சி நின்றிருக்கிறது என்பது தெளிவு.  இத்தகைய சூழலில், எதிரியைக் காட்டிலும் தீரமும், திறமையும் ஒருகால் கூடுதல் சுடுதிறனும் அதனுடன்கூடச் சின்னஞ்சிறு விமானப்படையின் விலைமதிப்பற்ற உதவியும் சேர்ந்து போர்க்களத்தில் இந்திய இராணுவத்தின் கை ஓங்கியிருப்பதைச் சாத்தியமாக்கின.

படிக்க:
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
♦ நீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது !

1948-ம் ஆண்டின் இறுதியில் இந்திய இராணுவத்திடம் 127 காலாட்படை பட்டாலியன்கள் இருந்தன. இவற்றில் சுமார் 50 பட்டாலியன்கள் ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் இருந்தன. 29 பட்டாலியன்கள் அதிமுக்கியமான இந்திய – பாகிஸ்தான் எல்லையைக் காக்கும் பணியில், கிழக்கு பஞ்சாபில் இருந்தன. சட்டம் –  ஒழுங்கு பராமரிப்புக்கு இன்னமும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ரசாக்கர்கள் இருந்த ஹைதராபாத்தில் 19 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு வலுவான இராணுவ பலம் தேவை என்று ஹைதராபாத் இராணுவ கவர்னர் கோரியிருந்தார். இவ்வாறாக உள்நாட்டுப் பாதுகாப்பையும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் விரிந்த எல்லைப் பாதுகாப்பு பணியையும் செய்வதற்கு வெறும் 29 பட்டாலியன்களே பாக்கி இருந்தன.  இதுவே பிற பகுதிகளின் அவசரத் தேவைக்கான ரிசர்வ் பட்டாளமாகவும் இருக்க வேண்டியிருந்தது.

ஜம்மு காஷ்மீரின் மொத்த இராணுவத்துக்கும் தேவையான பொருட்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கு ஒரேயொரு இருப்புப்பாதை மற்றும் ஒற்றைத்தடத் தார்சாலைதான் இருந்தது. இந்தச் சாலையோ மிக நீண்டது, பலவீனமானதும் கூட.  இதன் குறுக்கே ஏராளமான குறுகலான பாலங்கள் வேறு.

Kashmir-History
போர்க்களத்தில் இந்தியச் இராணுவச் சிப்பாய்கள். (கோப்புப் படம்)

பின்தளத்திலிருந்து போர்முனைக்கு பொருட்களையும் தளவாடங்களையும் கொண்டு செல்வதில் இத்தகைய இடர்ப்பாடுகள் இருந்த காரணத்தினால், ஜம்மு காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் துருப்புகளை பராமரிக்க முடியாது என்ற நிலைமையே இந்தியாவுக்கு இருந்தது.

பாகிஸ்தானுக்கு அத்தகைய எந்த ஒரு வரம்பும் இல்லை. பாகிஸ்தானின் பின்தளப் பிரதேசத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு எண்ணற்ற சாலைத் தொடர்புகள் இருந்தன. அதிலிருந்து குறுந்தடங்கள் மற்றும் சாலைகள் மூலமாக போர்க்களத்தின் முன்னணிப் பகுதியை அவர்கள் எளிதில் அடைய முடியும்.

இவற்றால் ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் கடுமையான இடர்ப்பாடுகளுக்கு மத்தியில்தான் செயல்பட வேண்டியிருந்தது. ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் மட்டும் நடத்தப்படும் போர் நடவடிக்கைகளின் மூலமாக எதிரியை முறியடிப்பது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. ஒரு தீர்மானகரமான வெற்றியைச் சாதிக்க வேண்டுமானால் பஞ்சாப்பின் விரிந்த சமவெளியில் போரை நடத்துவதற்கு பாகிஸ்தானை இழுத்து வரவேண்டியது தேவையாய் இருந்தது. எனவே, ஜம்மு காஷ்மீர் முழுவதையும் எதிரியிடம் இருந்து விடுவிக்க வேண்டுமானால் பாகிஸ்தானுடன் ஒரு முழுமையான போரில் இறங்கவேண்டியது அவசியமாக இருந்தது. (பக்கம்: 373-375)

காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை இந்தியா கைப்பற்றிக் கொண்டது.  1948 – 49 -ல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு முழு வீச்சான போரை நடத்தும் நிலையில் இந்தியா இல்லை.

படிக்க:
தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

பிரச்சினையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பார்வைக்குக் கொண்டுசெல்லுதல்

ன்றைய போர்க்கள நிலைமைகளில்  உடனடிப்  போர் நிறுத்தம் அத்தியாவசியமானதாக இருந்தது.  இந்தியா அதற்கான செயல்முனைப்பு காட்டாது இருந்திருந்தால், பாகிஸ்தான் முதலில் ஐ.நா. சென்று இந்தியாவை எதிர்மனுதாரர் ஆக்கியிருக்கும். டிசம்பர் 8, 1947-ல் லியாகத் அலி கானைச் சந்திப்பதற்கு மவுண்ட்பேட்டனும் நேருவும் லாகூர் சென்றிருந்தபோதுதான் முதன் முதலின் இந்தப் பிரச்சினை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் ஒரு வரைவு ஒப்பந்தம் தொடர்பாக விவாதித்தனர். இப் பிரச்சினையை ஐ.நா.வின் முன் வைப்பதற்கு லியாகத் அலி கான் சம்மதம் தெரிவித்தார். நேருவை இதற்குச் சம்மதிக்கச் செய்யும் முயற்சியில் இறங்கினார் மவுண்ட்பேட்டன்.

1947, டிசம்பர் 21-22 தேதிகளில் மீண்டும் டெல்லியில் அவ்விவாதம் தொடர்ந்தது.  கடைசி வரையிலும் இப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லும் கோரிக்கையை நேரு கடுமையாக எதிர்த்துவந்தார் எனினும், டிசம்பர் அன்று அவர் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். இதற்கான வரைவில் இடம்பெற்றிருந்த சுதந்திர காஷ்மீர் என்ற தெரிவை நீக்கிவிட்டு, காந்தியும் இதற்கு ஒப்புதல் அளித்தார். (எஸ். கோபால்; நேரு; தொகுதி-2; பக்கம்-22)

மொழியாக்கம் : கதிர்

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க