அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 44

பிஸியோகிராட்டுகள்

அ. அனிக்கின்
அ.அனிக்கின்

பிஸியோகிராட்டுகள் தமது கொள்கையின் முதலாளித்துவ உள்ளடக்கத்தை நிலப்பிரபுத்துவ உடைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டது அந்தக் கொள்கையின் ஒரு கூறாகும். நிகரப் பொருளின் மீது மட்டுமே வரி விதிக்கப்பட வேண்டுமென்று கெனே விரும்பினார்; எனினும் அவர் பிரதானமாக ஆட்சியிலிருப்பவர்களின் நல்லெண்ணத்துக்கு வேண்டுகோள் விடுத்தார், நிலவரியின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கும், அதிக வலுவான நிலப்பிரபுக்கள் ஏற்படுவார்கள் என்று அவர்களிடம் உறுதியாகக் கூறினார்.

அவருடைய ”தந்திரம்” பெருமளவுக்கு வெற்றியடைந்தது. அன்று ஆட்சியை வகித்தவர்களுடைய குருட்டுத்தனம் மட்டும் அதற்குக் காரணமல்ல; முதலாளித்துவச் சீர்திருத்தங்களின் மூலமாகத்தான் நிலப்பிரபுக்களை உண்மையிலேயே காப்பாற்ற முடியும் என்பதே அதற்குக் காரணம். இத்தகைய சீர்திருத்தங்கள் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன; ஆனால் அந்தச் சூழ்நிலைகள் வேறு விதமானவை என்பது உண்மையே. ஆனால் டாக்டர் கெனே இந்தக் கசப்பான மருந்தில் இனிப்பைச் சேர்த்து அழகான காகிதத்தைச் சுற்றி அதை மறைத்துக் கொடுத்தார்!

ஆரம்ப வருடங்களில் பிஸியோகிராட்டிய மரபு மிக அதிகமான வெற்றியைப் பெற்றது. கோமகன்களும் மார்கீஸ்களும் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள், அந்நிய நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் அதைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அதே சமயத்தில் டிட்ரோ உட்பட அறிவியக்கத்தைச் சேர்ந்த தத்துவஞானிகளும் அதை உயர்வானதாகக் கருதினார்கள். மேல் வர்க்கத்தைச் சேர்ந்த சிந்திக்கக் கூடியவர்கள், வளர்ச்சியடைந்து வருகின்ற முதலாளி வர்க்கம் ஆகிய இருவரது ஆதரவும் தங்களுக்குக் கிடைக்குமாறு செய்வதில் பிஸியோகிராட்டுகள் முதலில் வெற்றியடைந்தார்கள்.

அறுபதுக்களிலிருந்து பொறுக்கியெடுக்கப் பட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட வெர்சேய் ”மாடியறை மன்றம்” தவிர பாரிஸ் நகரத்தில் மார்கீஸ் மிரா போவின் மாளிகையில் பொதுமக்கள் கலந்து கொள்ளக் கூடிய பிஸியோகிராட்டிய நிலையமும் ஆரம்பிக்கப்பட்டது. இங்கே கெனேயின் சீடர்கள் (அவர் எப்பொழுதாவது அபூர்வமாகவே வருவார்) தங்களுடைய ஆசானின் கருத்துக்களை விளக்கிக் கூறுவதிலும் பரப்புவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்; புதிய ஆதரவாளர்களைத் திரட்டினார்கள், பிஸியோகிராட்டுகள் குழுவில் மிக முக்கியமான சிலரில் டுபோன் டெ நெமூர் என்ற இளைஞர் இருந்தார்; (1) இவரோடு லெமெர்ஸியே டெ லா ரிவியேர் மற்றும் கெனேயின் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் உண்டு. இந்த சிலரைச் சுற்றி கெனேயுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாதிருக்கின்ற குழு உறுப்பினர்களும் பலவிதமான அனுதாபிகளும் ஆதரவாளர்களும் இருந்தனர்.

இவர்கள் மத்தியில் டியுர்கோ சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார். அவர் பகுதியளவுக்கு பிஸியோகிராட்டுகளைச் சேர்ந்தவர்; ஆனால் ஆசானுடைய சார்பில் பேசுபவராக மட்டுமே அவரைக் கருத முடியாத அளவுக்கு சிறப்பும் சுதந்திரமும் கொண்ட சிந்தனையாளராக இருந்தார். கெனேயின் அமைப்பு கட்டிறுக்கமாக இருந்தபடியால் டியுர்கோவால் கூட அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது பிஸியோகிராட்டிய மரபையும் அதன் தலைவரையும் வேறு விதமாகப் பார்க்குமாறு நம்மை நிர்ப்பந்திக்கிறது.

கெனேயின் மாணவர்களின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும், தங்களது ஆசானிடம் அவர்கள் கொண்டிருந்த வரம்பற்ற பக்தியும் நமது மதிப்பைத் தூண்டுவது இயற்கையானதே. ஆனால் காலப்போக்கில் இதுவே இந்த மரபின் பலவீனமாக மாறியது. கெனேயின் கருத்துக்களை – அவருடைய வாக்கியங்களைக் கூட அப்படியே – திருப்பிச் சொல்லுவதும் விளக்கி எழுதுவதுமே அவர்களுடைய நடவடிக்கையாக இருந்தது. அவருடைய கருத்துக்கள் வறட்டுத்தனமான சூத்திரங்களாக மென்மேலும் இறுகிப் போய்விட்டன. மிராபோவின் மாளிகையில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை மாலையில் நடைபெற்ற கூட்டங்களில் புதிய சிந்தனையும் விவாதமும் நடைபெறுவதற்குப் பதிலாக ஆராதனைச் சடங்குகள் மென்மேலும் அதிகரித்தன. பிஸியோகிரஸி ஒரு வகையான மதமாக மாறிக் கொண்டிருந்தது, மிரா போவின் மாளிகை அதை வழிபடும் ஆலயமாக, செவ்வாய்க் கிழமை மாலைகள் பிரார்த்தனை நேரமாக மாறின.

படிக்க :
♦ கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !
♦ புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !

ஒத்த கருத்துடையவர்களின் குழுவாக முன்பு இருந்த அமைப்பு இப்பொழுது கண்டிப்பான வறட்டுச் சூத்திரத்தில் வெறித்தனமான நம்பிக்கை கொண்டவர்களின் கோஷ்டியாக மாறியது; தங்களிடமிருந்து மாறுபட்ட கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் நிராகரித்தார்கள். பிஸியோகிராட்டுகளின் புத்தகங்களை வெளியிடுகின்ற பொறுப்பு டுபோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் தன்னிடம் வந்த ஒவ்வொரு பிரசுரத்திலும் பிஸியோக்ரஸிக்கு அழுத்தம் கொடுத்துத் “திருத்தி வெளியிட்டார்”. அவர் கெனேயைக் காட்டிலும் உயர்ந்த பிஸியோகிராட்டாகத் தன்னைக் கருதிக் கொண்டதும் கெனேயின் ஆரம்ப நூல்களை வெளியிடுவதற்கு மறுத்ததும் வேடிக்கையானதே (அவற்றை எழுதிய காலத்தில் கெனே இன்னும் சரியான பிஸியோகிராட்டாக இருக்கவில்லை என்று டுபோன் கருதினார்).

கெனேயின் குணாம்சத்தில் இருந்த சில கூறுகள் இத்தகைய நிலைமைகள் ஏற்படுவதற்கு உதவி செய்தன. டி. ரோஸென்பெர்க் தம்முடைய அரசியல் பொருளாதாரத்தின் வரலாறு என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்:

“அரசியல் பொருளாதாரத்தைப் படைத்தவர் என்ற பெருமையை கெனே வில்லியம் பெட்டியோடு பகிர்ந்து கொள்கிறார்; ஆனால் அவர் பெட்டியைப் போன்றிருக்கவில்லை. கெனே அசைக்க முடியாத கோட்பாடுகளைக் கொண்டவர்; அவர் வறட்டுச் சூத்திரவாதத்திலும் வறட்டுக் கோட்பாட்டுவாதத்திலும் அதிகமான நம்பிக்கை வைக்கத் தயாராக இருந்தார்” (2) கால வளர்ச்சியில் இந்தப் போக்கு இன்னும் அதிகரித்தது; தம் குழுவினரின் பக்தியும் இதை ஊக்குவித்தது. புதிய விஞ்ஞானத்தின் கருத்துக்கள் “சுயமாகவே தெளிவானவை” என்று அவர் நம்பியதனால், மற்ற கருத்துக்களை அவர் சகித்துக் கொள்ளவில்லை; அவருடைய குழுவினரும் அவரிடமிருந்த இந்தப் போக்கை அதிகமான அளவுக்கு பலப்படுத்தினார்கள். தன்னுடைய போதனை – காலம், இடம், நிலைமைகள் என்ற கட்டுப்பாடுகளை மீறி – எக்காலத்துக்கும் உரியவை என்று கெனே உறுதியாக நம்பினார்.

Doctor-Quesnay_Political-economy
பிரான்சுவா கெனே

அவரிடமிருந்த அடக்கம் சிறிதும் குறைந்து விடவில்லை, அவர் புகழைத் தேடவில்லை; ஆனால் புகழ் அவரைத் தேடி வந்தது. அவர் தன்னுடைய சீடர்களைக் குறைவாக மதிக்கவில்லை; ஆனால் அவர்களே தங்களைக் குறைவாக மதித்துக் கொண்டார்கள். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வருடங்களில் கெனே சகித்துக் கொள்ள முடியாத அளவுக்குப் பிடிவாதம் உடையவரானார். அவர் தன்னுடைய எழுபத்தாறாம் வயதில் கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்; வடிவியல் கணிதத்தில் தான் மாபெரும் கண்டுபிடிப்புகளைச் செய்திருப்பதாக அவர் நம்பினார். இந்தக் கண்டு பிடிப்புகள் அத்தனையும் குப்பையென்று அலம்பேர் கருதினார்.

இந்தக் கருத்துக்களை அவர் எடுத்துக் கூறிய புத்தகத்தை வெளியிட வேண்டாம், அவ்வாறு வெளியிட்டால் நகைப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவருடைய நண்பர்கள் வயோதிகரான கெனேயிடம் ஏகமனதாக எடுத்துச் சொன்னார்கள்; அதை வெளியிடுவதைத் தடுப்பதற்கு எல்லா முயற்சி களையும் செய்தார்கள். ஆனால் பலனில்லை. 1773-ம் வருடத்தில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட பொழுது டியுர்கோ அதிகமாக வேதனைப்பட்டார். ”எல்லாவிதமான அதிர்ச்சிகளையும் ஒழிக்கின்ற அதிர்ச்சி இது. சூரியன் தன் ஒளியை இழந்துவிட்டது” என்று அவர் கூறினார். இதற்குப் பதில் கூறுவதற்கு ஒரு ருஷ்யப் பழமொழியை உபயோகிக்கலாம்: சூரியனிடமும் கரும்புள்ளிகள் உண்டு.

1774-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் கெனே வெர்சேயில் மரணமடைந்தார். அவர் காலி செய்த இடத்தை நிரப்புவதற்கு ஒருவரைக் கண்டு பிடிக்க பிஸியோகிராட்டுகளால் முடியவில்லை. மேலும் அதற்கு முன்பாகவே அவர்களுக்கு அதிகமான வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. 1774-1776-ம் வருடங்களில் டியுர்கோ பதவி வகித்த காலத்தில் அவர்களுடைய நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் புத்துயிர் பெற்றன; ஆனால் அவர் பதவியிலிருந்து ஓய்வு கொடுக்கப் பட்ட பொழுது அவர்கள் பலமாக அடிவாங்கியது போல உணர்ந்தனர். உண்மையைச் சொல்வதென்றால் இது பிஸியோகிராட்டுகளின் முடிவாக இருந்தது.

படிக்க :
♦ அறிவியக்க சகாப்தம் | பொருளாதாரம் கற்போம் – 41
♦ கேள்வி பதில் : அறிவியல் வளர்ச்சி மனித வாழ்விற்கு பலனளிப்பதா ? அழிப்பதா ?

மேலும் 1776-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் வெளிவந்தது. இவர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிரெஞ்சுப் பொருளியலாளர்கள் – ஸிஸ்மான்டி, ஸேய், முதலியோர் – பிஸியோகிராட்டுகளுக்குப் பதிலாக ஸ்மித்தை நோக்கித் திரும்பினார்கள். 1815ம் வருடத்தில் வயோதிகரான டுபோன் ஸேய்க்கு எழுதிய கடிதத்தில், கெனேயின் பாலைக் குடித்து வளர்ந்துவிட்டு இப்பொழுது “பாலூட்டிய செவிலியை” ஒதுக்குவதாகக் குறை கூறினார். கெனேயின் பாலைக் குடித்த பிறகு நான் அதிகமான ரொட்டியும் இறைச்சியும் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறேன், அதாவது ஸ்மித்தையும் மற்ற புதிய பொருளாதார நிபுணர்களையும் படித்து வளர்ந்திருக்கிறேன் என்று ஸேய் அவருக்குப் பதிலளித்தார்.

18-ம் நூற்றாண்டின் எழுபதுக்களில் பிஸியோகிராட்டுகளின் வீழ்ச்சிக்கு அவர்களுடைய குறைபாடுகள் மட்டும் காரணமென்று சொல்ல முடியாது. அவர்கள் மிகவும் கூர்மையாக விமர்சிக்கப்பட்டார்கள், எல்லாத் திசைகளிலிருந்தும் இப்படி விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசவையில் அவர்களுக்கிருந்த ஆதரவு போனதும் பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவ சக்திகள் அவர்களைக் குறிவைத்துத் தாக்கின. அதே சமயத்தில் அறிவியக்கத்தின் இடதுசாரி அணியைச் சேர்ந்த எழுத்தாளர்களும் அவர்களைக் குறை கூறினார்கள்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) பிரான்சில் புரட்சிக்குப் பிறகு டுபோன் நாட்டை விட்டு அமெரிக்காவுக்குப் போனார். அங்கே அவருடைய மகன் ஆரம்பித்த தொழில் காலப் போக்கில் ‘டுபோன் டெ நெமூர் அன்ட் கம்பெனி” என்ற பிரம்மாண்டமான இரசாயன ஏகபோகக் கம்பெனியாக வளர்ச்சியடைந்தது.

(2) டி. ரோஸென்பெர்க், அரசியல் பொருளாதாரத்தின் வரலாறு, முதல் புத்தகம், மாஸ்கோ , 1940, பக்கம் 88 (ருஷ்ய மொழியில் எழுதப்பட்டது).

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க