சென்னை ராமகிருஷ்ண மடம், பாதராயணரின் பிரம்ம சூத்திரம் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்நூலை மொழிபெயர்த்து விளக்கவுரையும் எழுதியவர் சுவாமி ஆசுதோஷானந்தர் எனப் பதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரத்திற்குத் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் உள்ளனவெனினும், புதிதாக வந்த தமிழ் மொழிபெயர்ப்பு என்பதனால் விருப்புடன் அதனைப் படித்தேன். இந்நூலைப் படிக்கும் போது, குறிப்பிட்ட சில பிரச்சினைகள் உறுத்தலாகத் தென்பட்டதால், அதனை இக்கட்டுரையில் பதிவு செய்யலாம் என விழைகிறேன்.

பிரஸ்தான திரயம்

பண்டைய இந்தியாவில் வேதாந்தத் தத்துவம் உருவானதற்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. வேதாந்தத் தத்துவத்திற்கு மூவகை நூல்கள் அடிப்படை நூல்களாக விளங்குகின்றன. இம்மூவகை நூல்களை ப்ரஸ்தான த்ரயம் என்று வைதீகர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவற்றில் வேதங்கள், உபநிடதங்கள் முதல் வகைப்பட்டவை இவற்றை சுருதி பிரஸ்தானம் என்பர். சுருதிகள் என்பவை யாராலோ இயற்றப்பட்டவை என்றோ, எழுதப்பட்டவை என்றோ வைதீகர்கள் ஒப்புக்கொள்வது கிடையாது. பிரபஞ்ச வெளியில் ஒலி வடிவில் நிலவிய பாடல்களை வேத ரிஷிகள் காதுகளால் கேட்டுப்பதிவு செய்தார்கள் என்பது சுருதிகளுக்கு அவர்கள் வழங்கும் விளக்கம். இப்படிப்பட்ட ஒரு விளக்கம் நிச்சயமாகப் பிற்காலத்தியது என்று யூகிக்க முடியும். வைதீக மரபு உருவெடுத்த பின், அதற்குப் பல வகை நூல்களும் பல வித விளக்கங்களும் உருவான பின்னர், ஏதோ ஒரு வகையில் அதன் தொன்மையையும் புனிதத்தையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே சுருதி பிரஸ்தானம் என்ற, அதாவது ரிஷிகளால் கேட்பட்ட பூர்வீகத்தை, வைதீகர்கள் உருவாக்கியிருக்க வேண்டும் என்று யூகிக்கலாம். அதாவது, இது மற்ற நூல்களைப் போல மானுடப் பிறவிகளால் எழுதப்பட்ட நூல் அல்ல (அபௌருஷ்ய) என்ற ஒரு புனித அந்தஸ்தை ஏற்றியுள்ளார்கள்.

வேதாந்தத்தின் இரண்டாவது முக்கியமான நூலாக பகவத் கீதை சொல்லப்படுகிறது. இதனை ஸ்மிருதி பிரஸ்தானம் என்பர். வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் மிகப்பிந்திய காலத்தைச் சேர்ந்தது பகவத் கீதை. பிராமண இலக்கியங்களான வேத உபநிடதங்கள், அவற்றிற்கு இணையாக சிராமணத் தத்துவங்கள் எனப்படும். ஆசீவகம், சமணம், பௌத்தம், இவற்றுக்குப்பின் தோன்றிய ராமாயண மகாபாரதம் என்ற வரிசையில் கடைசியாகத் தோன்றியது பகவத் கீதை. இத்தனை காலங்கள் பின்னால் தோன்றியது என்பதைக் குறிப்பதற்கும், அது பல விசயங்களில் வேத உபநிடதங்களிலிருந்து விலகிச் சென்றது என்பதைக் குறிப்பதற்குமே, அது ஸ்மிருதி பிரஸ்தானம் என்ற இரண்டாம் நிலை அந்தஸ்தில் வைத்துச் சொல்லப்படுகிறது.

படிக்க :
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

மேற்குறித்த இருவகை நூல்களைக் கடந்து, மூன்றாவது நிலையில் தோற்றம் பெற்ற நூலே பாதராயணரின் பிரம்ம சூத்திரம் ஆகும். உண்மையில் வேதாந்தம் என்ற தத்துவம் உருவானதில் இந்நூலே முடிவான பாத்திரம் வகித்தது. வேதங்களின் முடிவு, வேதங்களின் சாரம் என்ற அர்த்தங்களைக் கொண்டதாக இத்தத்துவம் பெயரிடப்பட்டுள்ளது. சிராமணத் தத்துவங்கள் மட்டுமின்றி, சார்வாகம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் போன்ற தத்துவங்களும் இக்காலத்தில் நிலைபெற்றுவிட்டதால், வைதீக மரபுக்கென ஒரு தத்துவத்தை உருவாக்கிக் காட்டவேண்டிய அவசியம் இக்காலத்தில் ஏற்பட்டுவிட்டதென்று இங்கு நாம் கணக்கிட முடியும்.  (நூலிலிருந்து பக்.3-4)

ஆளும் வர்க்கம் நேரடியான அதிகாரத்தின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது, ஆளும் வர்க்கம் மக்களுடைய ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறது (Force and content). இந்த இரு வடிவங்களையும் ஆளும் வர்க்கம் எந்த அளவு வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறதோ அந்த அளவுக்கு அதனால் நீண்டகால ஆதிக்கத்தை நிறுவ முடிகிறது என்பது கிராம்சியின் அணுகுமுறை. அதுபோன்ற ஒரு பார்வை இந்த நூலிலும் (இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ்) இருக்கிறது. கிராம்சியின் கருத்து இதில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால் எப்படி இந்தியாவின் ஆளும் வர்க்கம் குறிப்பாக பகவத்கீதையில் நேரடி அதிகாரத்தின் வழியும் உளவியல் ரீதியான அதிகாரத்தை வழியாகவும் மக்களை அதிகாரம் செய்ய நினைத்தது என்ற செய்தியைச் சொல்லுகிறார்.

கிராம்சி சொல்லாத, வஞ்சகம், சதி என்ற ஒன்றையும் கூடுதலாக அடிக்கடி அவர் இந்த நூலில் சொல்லுகிறார். வஞ்சகம், சதி வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. இது பிராமணர் சதி. இது கிருஷ்ணனின் வஞ்சகம். இது இந்துத்துவத்தின் வஞ்சகம் என்று சொல்லக்கூடிய விவாதம் இந்த நூலில் வலுவாக இருக்கிறது. நமக்கொரு பிரச்சினை எழுகிறது. வஞ்சகம் சதி என்ற விஷயத்திற்கு வரலாற்றில் எந்த அளவுக்குப் பாத்திரம் இருக்கிறது? இந்திய வரலாற்றில் இதற்கு பாத்திரம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன. வஞ்சகம், சதி என்பது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து வந்த கருத்து. வரலாற்றை விளக்க பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் அதுவும் ஒரு கருவியாகப் பயன்பட்டது. இந்தியாவில் பெரியார் முதலான பலர் இந்த வஞ்சகம், சதி என்ற கருத்தை எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்து மதத்தின் சில நூல்கள் மக்களைக் கைவசம் வைத்துக் கொள்வதற்கு மேலாதிக்க நிலையிலிருந்து சாம, பேத, தான, தண்டம் என்ற சொற்களைச் சொல்லுகின்றன. மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது, மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் என்று சொல்வது என்பன இதுபோன்ற அரசியல் விஷயங்களில் மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன. நேரடி அதிகாரம், மறைமுகமான கருத்தியல் செல்வாக்கு இவற்றுடன் வஞ்சகம் சதி போன்ற விஷயங்களும் இந்திய வரலாற்றில் பணிபுரிந்திருக்கின்றன என்பதையும் கணக்கிலெடுத்துத்தான் சிந்திக்க வேண்டி இருக்கிறது. (நூலிருந்து பக்.24)

நூல் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 24
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க