கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 02

முதல் பாகம்

3. பொதுவுடைமைவாத நடவடிக்கையின் கடமைகள் பற்றி

கட்சி உறுப்பினரின் கடமை

8. புரட்சிகர மார்க்சிய பயிற்சிப் பள்ளியாக பொதுவுடைமைக் கட்சி விளங்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் அன்றாட பொது வேலைகள் வாயிலாக கட்சி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் உயிரோட்டமுள்ள உறவுகள் நிறுவப்படுகின்றன.

கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்பது சட்டபூர்வ பொதுவுடைமைக் கட்சிகளில் இன்றும் கூட குறைவாக உள்ளது. இது இந்தக் கட்சிகளின் தலையாயக் குறைபாடாகும். அவற்றின் முன்னேற்றத்தில் தொடர்ச்சியான உத்திரவாதமின்மைக்கு அடித்தளமாக இக்குறைபாடு விளங்குகிறது.

9. பொதுவுடைமைவாதத்துக்கு மாறும் ஆரம்பக் கட்டங்களில் ஒவ்வொரு தொழிலாளர் கட்சியும் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது, தனது பிரச்சாரத்தில் பழைய கோட்பாட்டுக்குப் பதில் பொதுவுடைமைவாத போதனைகளைக் கடைபிடிப்பது, எதிர் முகாமைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து பொதுவுடைமைவாத நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது ஆகியவற்றுடன் மனநிறைவு அடையக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவுடைமைவாதியாவதற்கான விருப்பதைக் குறிப்பது மட்டுமேயாகும். பொதுவுடைமைவாத நடவடிக்கை இல்லாமலிருந்தால், பரந்துபட்ட கட்சி உறுப்பினர்கள் இன்னமும் செயலின்றி இருந்தால், பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் கட்சியானது ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்றே ஆகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது. மேலும், பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

10. பொதுவுடைமைக் கட்சியானது, உண்மையிலேயே செயல் திறனுள்ளவர்களை மட்டுமே கொண்டிருக்க முயல வேண்டும். கட்சியின் தேவைக்கு உட்பட்டு தனது அணிவரிசையிலுள்ள கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது முழு பலத்தையும் காலத்தையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் முடிந்தவரை கட்சி வேலைகளுக்காக ஒதுக்கி தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். தனது மிகச் சிறந்த சக்திகளை கட்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோர வேண்டும்.

உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும்..

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது இயல்பாகவே பொதுவுடைமைவாத நம்பிக்கைகளுடன் சேர்ந்து முதலில் தேர்வுநிலை உறுப்பினராகவும், பின்னர் உறுப்பினராகவும் அதிகார பூர்வமாகப் பதிவு செய்வது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாகச் செலுத்துவது, கட்சிப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துவது போன்றவற்றையும் கொண்டதாகும். ஆனால் மிகமிக முக்கியமானது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதாகும்.

ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் ஒரு குழுவில் இருப்பது

11. கட்சி வேலைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக ஒரு விதி என்ற முறையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குழு, கமிட்டி, கமிஷன், பெரிய குழு, பிராக்சன் அல்லது கருக்குழு போன்று செயல்படும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே கட்சி வேலைகளைச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும். வழிகாட்ட முடியும். நிறைவேற்ற முடியும்.

உள்ளூர் அமைப்பின் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே வேண்டியதில்லை. சட்டபூர்வ சூழ்நிலைகள் நிலவும்போது, குறிப்பிட்ட காலக்கிரமத்தில் நடைபெறும் இக் கூட்டங்களுக்கு பதிலாக, உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவது உசிதமானதல்ல. அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டங்களில் முறையாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. இந்தக் கூட்டங்களுக்கான தயாரிப்பு என்பதே சிறு குழுக்களாக வேலையைப் பிரித்து செய்வது அல்லது குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சில தோழர்கள் ஒதுக்கப்படுவது என்பதை முன் அனுமானமாகக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தியே தொழிலாளர்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள்திரள் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலதரப்பட்ட கடமைகளை சிறு குழுக்கள் மட்டுமே எச்சரிக்கையாக ஆய்வதும், ஆழமாக நடைமுறைப் படுத்துவதும் இயலும். உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும். இவ்வாறே ஒன்றுபட்ட திறன்மிக்க பொதுவுடைமைக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள புரட்சி சக்திகள் அனைத்தையும் கொண்டுவந்து கெட்டிப்படுத்துவது இயலாது.

ஆலை செல்களின் (Factory Cells) முக்கியத்துவம்

12. கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அன்றாட வேலைகளைச் செய்ய பொதுவுடைமைக் கருக்குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கிளர்ச்சிகளை நடத்துதல், கட்சி ஆய்வு, செய்திப் பத்திரிகை வேலை, கட்சி வெளியீடுகளை விநியோகித்தல், தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான பணிகள் – இன்னும் இதுபோன்றவற்றைக் கருக்குழுக்கள் செய்யும்.

பொதுவுடைமைக் கட்சிக்கு ஒருசில உறுப்பினர்கள் அல்லது தேர்வுநிலை உறுப்பினர்கள் உள்ள இடங்களில் எல்லாம் தொழிற்சாலை மற்றும் பணிமனைகளில் உள்ள தொழிற்சங்கங்களில், பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இராணுவப் பிரிவுகளில், அன்றாட கட்சி வேலைகளைச் செய்வதற்கான சிறு குழுக்களே பொதுவுடைமைவாதக் கருக்குழுக்களாகும். ஒரே தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்கள் இருந்தால், கருக்குழுவானது பிராக்சனாக மாற்றப்பட்டு, அது சிறு குழுக்களின் வேலைகளை வழிநடத்தும்.

படிக்க:
காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை
♦ நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !

பரந்த தன்மையுடைய எதிர்த்தரப்பு பிராக்சனை அமைப்பதோ, அல்லது ஏற்கெனவே உள்ளதில் பங்கேற்பதோ அவசியமாகும்போது சிறப்புக் கருக்குழுவின் வாயிலாக தொழிற்சங்கத் தலைமையைக் கைப்பற்ற அல்லது தலைமை ஏற்க பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும். தனது சொந்த சுற்றுச்சூழலைப் பொருத்து கருக்குழு வெளிப்படையாக வருவதா, அல்லது பொதுமக்கள் மத்தியில் கூட வெளிப்படையாக வருவதா என்பது விசேட சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து அவ்வாறு வருவதன் அபாயங்கள் மற்றும் சாதகங்களை ஆழமாகப் பரிசீலிப்பதைச் சார்ந்திருக்கும்.

13. பொதுக் கடமையான வேலைகளைக் கட்சியில் அறிமுகப்படுத்துவதும், சிறு வேலைக் குழுக்களைக் கட்டியமைப்பதும் மக்கள்திரள் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு (மிகக் குறிப்பாக) கடினமான பணியாகும். இதை எடுத்த எடுப்பிலேயே சாதித்துவிட முடியாது. இதற்கு சலிப்பற்ற விடாமுயற்சி, முதிர்ச்சி பெற்ற அறிவு, மகத்தான ஆற்றல் ஆகியவை வேண்டும்.

இந்தப் புதிய வடிவிலான நிறுவனத்தைத் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கையுடனும் முதிர்ச்சியான அறிவுடனும் கட்டியமைப்பது குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் பெயரளவிலான திட்டத்தின்படி கருக்குழுக்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து உடனடியாகக் கட்சியின் அன்றாட பொது வேலைகளைச் செய்யுமாறு அவற்றை அறைகூவி அழைப்பது என்பது மிகச் சுலபமான வேலையாகும். ஆனால், இத்தகைய தொடக்கம் என்பது தொடங்காமல் இருப்பதைவிட மோசமானது. இந்த மகத்தான கண்டுபிடிப்புகளின்பால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மன நிறைவின்மையும் வெறுப்பையுமே இது தூண்டிவிடும்.

(தொடரும்)

முந்தைய பாகம்*****************************************அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க