ந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அன்னிய சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்பாளர்களாக இருக்க முடியாது. இந்தியர்கள் இந்தியாவை அறிவார்கள். அவர்கள்தான் இந்தியாவின் முடிவை எடுப்பார்கள். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்திருப்போம்” என்று கிரிக்கெட் ‘கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டரில் ஒரு டிவிட்டை கடந்த 3-ம் தேதி வெளியிட்டார்.

சச்சின் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள், இன்னாள் ‘வீரர்கள்’ அனைவரும் – ஒரு சிலரைத் தவிர – சச்சினின் மேற்கண்ட வாசகத்தை வெவ்வேறு வார்த்தைகளில் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதாவது இந்தியாவின் பிரச்சினையை இந்தியர்களே தீர்த்துக் கொள்வார்களாம். வெளிநாட்டினர் தலையிடக் கூடாதாம்.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ‘கடவுளின்’ ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் தோண்டித் துருவி கழுவி ஊற்றிவிட்டனர், இந்திய கிரிக்கெட் “பக்தர்கள்”.

படிக்க :
♦ சச்சினின் ‘சீக்ரெட் ஆஃப் எனர்ஜி’ !
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

அமைதியான புன்னகை நிறைந்த முகம் கொண்ட ‘நல்லவரான’ சச்சின் டெண்டுல்கருக்கே இவ்வளவு அர்ச்சனை கிடைத்திருக்கிறது என்றால் மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும். இந்திய இறையாண்மை குறித்து கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, பல்வேறு பாலிவுட் திரை நட்சத்திரங்களும் – ஒரு சிலரைத் தவிர – ஒரே சாயலில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை, சி.என்.என் இணையதளத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி வெளியான ஒரு கட்டுரையிலிருந்து துவங்கியிருக்கிறது.

இந்திய விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருவதையும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், போராட்டக் களங்களின் அடிப்படை வசதிகளை பறித்ததோடு, இணையத்தை நிறுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை முறியடிக்க மோடி அரசு முயற்சிப்பதையும் மனித உரிமைகள் மீறலையும் பற்றி அந்தக் கட்டுரை பேசியிருக்கிறது.

இந்தக் கட்டுரையை தனது டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்கப் பாடகர் ரிஹானா, குறிப்பிட்டு, நாம் இதைப் பற்றி ஏன் பேசக்கூடாது? எனக் கேட்டுள்ளார். ரிஹானா அமெரிக்காவின் பிரபலமான பாடகராவார். கடந்த 2019-ம் ஆண்டுக் கணக்குப்படியே அவரது சொத்து மதிப்பு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

டிவிட்டரில் அவரை சுமார் 10 கோடியே 14 இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த அளவை ஒப்பீட்டளவில் பார்த்தால் அவரது பிரபலம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை வெறும் ஆறரை கோடிதான். ஒரு நாட்டின் பிரதமரை விட அதிகமானோரால் பின் தொடரப்படும் ஒரு சர்வதேசப் பிரபலம் தான் ரிஹானா. ரிஹானா ஒரு கறுப்பினப் பெண்ணும் ஆவார்.

அத்தகைய செல்வாக்குள்ள ரிஹானாவின் டிவிட்டைத் தொடர்ந்து பல்வேறு அமெரிக்கப் பிரபலங்களும் இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பதிவிடத் துவங்கினர். சூழலியல் செயல்பாட்டாளரான க்ரெட்டாவும் விவசாயிகளின் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என பதிவிட்டார்.

சமூக வலைத்தளங்களின் தாக்கம் சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தையையே ‘படுத்தி’ எடுத்துவிட்ட நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தைக்குச் சேவகம் செய்யும் இந்திய அரசை மட்டும் விட்டுவைக்குமா என்ன?

ஏதேனும் தனிப்பட்ட நிறுவனங்கள் (டைட்டன், நெட்பிளிக்ஸ்) இந்திய அரசின் ஒடுக்குமுறைப் பொறியமைவை அம்பலப்படுத்தும் விதமாக ஏதேனும் விளம்பரம் வெளியிட்டால், அதற்கு வழக்கமாக சங்கிகளின் ட்ரால் படைதான் களத்தில் இறங்கி ட்ரால் செய்யத் துவங்குவார்கள். இந்தமுறை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகமே களத்தில் இறங்கிவிட்டது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறையான விவாதங்களுக்கும், கலந்தாலோசனைகளுக்கும் பிறகுதான் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்தப் போராட்டத்தில் அரசாங்கம் விவசாயிகளிடம் மிகவும் இறங்கி பேசிவருவதாகவும் முதல் பத்தியில் தெரிவித்து விட்டு இரண்டாவது பத்தியில் விவசாயிகள் போராட்டம் பற்றிய தமது அவதூறுகளை அடுத்த இரண்டு பத்திகளில் விசமாகக் கொட்டியுள்ளது.

மேலும் இந்தச் சட்டம் குறித்து முழு விவரம் தெரியாமல் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் கருத்துத் தெரிவிப்பது துல்லியமானதாக இருக்காது என்றும் பொறுப்பற்ற செயல் என்றும் குறிப்பிட்டுச் சாடியுள்ளது.

இந்த அறிக்கையை #IndiaTogether #IndiaAgainstPropaganda ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளையும் போட்டு அறிக்கையாக வெளியிட்டது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

வெளிநாட்டு பிரபலங்கள் போட்ட டிவிட்டுகளுக்கு அஞ்சி மோடி அரசு தனது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் அறிக்கை வெளியிட்டிருப்பதே அதன் இலட்சணத்தை காட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக அது செய்த காரியம்தான் இந்தியப் பிரபலங்களின் யோக்கியதையை உலகுக்கே பறைசாற்றியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் நட்சத்திரங்களையே தனது ட்ரோல் படையாக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், பாலிவுட் நடிகர்களும் ட்ரோல்களாக களத்தில் இறங்கி ‘மேலிருந்து’ சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை டிவிட்டுகளில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தனர்.

குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல, இந்த ட்ரோல் பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதைச் சரிபார்க்கும் வேலையை பாலிவுட் நடிகர் கங்கனா ரணாவத் வசம் ஒப்படைக்கப்பட்டது போலும்.

அம்மையார் டிவிட்டரில் பாஜகவின் எதிரிகளைப் பந்தாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், விவசாயிகளுக்கு எதிரான டிவிட்டை ‘காட்டமாகப்’ போடாத கிரிக்கெட் ஆட்டக்காரர்களை உரிமையோடு கேவலமாகப் பேசியுள்ளார். கிரிக்கெட் ‘கடவுள்’ சச்சின் முதல் நேற்றுவந்த அல்லரை-சில்லரை வரை அனைத்தும் ஒரே குரலில், ஒரே வாசகத்தை வாந்திஎடுத்து வைத்த நிலையில், டிவிட் வாசகங்களில்  ‘வெரைட்டியில்லாத’ விரக்தியில் கொஞ்சம் காட்டமாகவே காட்டிவிட்டார் கங்கனா.

கிரிக்கெட் ‘வீரர்’ ரோஹித் சர்மாவின் ”காப்பி பேஸ்ட்” டிவிட்டுக்கு பதிலளித்திருக்கும் கங்கனா, “விவசாயிகளை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட என்ன தயக்கம், மிகவும் மென்மையாக அணுகுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் ‘டர்ராக’ இருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டுவிட்டார். கிரிக்கெட் ரசிகக் கண்மணிகள் தங்களது ‘தலைவர்களை’ திட்டுவதை நிறுத்திவிட்டு, கங்கனாவை காறி உமிழத் துவங்கிவிட்டனர். இவையெல்லாம் சங்கபரிவாரத்தின் ட்ரோல்படைகளுக்குள் நடந்த ஊடல்கள்தான் என்றாலும் அன்றைய பொழுதை டிவிட்டர்வாசிகளுக்கு சுவாரசியமானதாக மாற்றியமைத்தன.

சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இப்படி தங்களது யோக்கியதையை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், இத்துறைகளில் முதுகெலும்புள்ளவர்களும் இருக்கிறோம் என்பதையும் ஒரு சில பிரபலங்கள் பதிவு செய்தனர்.

கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட போது இந்தியா தனது கருத்தைத் தெரிவித்ததை சுட்டிக் காட்டினார். அதன் மூலமாக, வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையை விடாதீர்கள் என்ற சங்கிகளின் ஓலத்தினிடையே ஒரு முட்டுக்கட்டையிட்டார்.

அதே போல இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, “நான் பொம்மலாட்டத்தைப் (puppet Show) பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதனைப் பார்ப்பதற்கு 35 ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று தனது டிவிட்டில் குறிப்பிட்டிருந்தார். சங்க பரிவாரக் கும்பலின் ஆட்டுவித்தலில் தனது சகபாடிகள் இழிவான ஒரு செயலைச் செய்வதை குறிப்பின் மூலமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ், ஒரே பாணியிலான, அதிலும் ஒரே வாசகத்தைக் கொண்ட டிவிட்டுகளை அப்படியே வாந்தியெடுத்து வைத்திருக்கும் பிரபலங்களை கிண்டல் செய்யும் விதமாக, “குறைந்தபட்சம் சொந்தமாகவாவது போடலாமே” என்று டிவிட் செய்திருந்தார்.

அதே போல பாலிவுட் சினிமாவில் நடிகர் டாப்ஸி பன்னுவும் பிரபலங்களின் இந்த இழிசெயலைச் சாடி டிவிட்டரில் எழுதியிருந்தார்.

“ஒரு டிவிட் உங்களது ஒற்றுமையை நடுநடுங்கச் செய்கிறதென்றால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை உலுக்குகிறது என்றால், அல்லது ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை உலுக்குகிறது என்றால், நீங்கள்தான் உங்களது மதிப்பு விழுமியங்களை உறுதிசெய்யப் பணியாற்ற வேண்டுமே தவிர மற்றவர்களுக்கான “பிரச்சார ஆசிரியராக” மாறக் கூடாது” என்று சூடு கொடுத்தார்.

அதே போல நடிகர் சித்தார்த், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் வெளிநாட்டினர் தலையிடக் கூடாது என்ற கருத்தைச் சாடியும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும்  எழுதியிருந்தனர்.

இவை ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கையில், அமெரிக்க பிரபலங்களின் சமூக வலைத்தளங்களின் ‘உள் டப்பிக்குள்’ (InBox) சென்று கொலை மிரட்டல், ஆபாசப் பதிவு என இந்திய சங்கிகள் தங்களது ‘வழக்கமான’ அருவெறுக்கத்தக்க இழிசெயல்களைச் செய்யத் துவங்கியிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசிய ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் சியோபன் ஹியானு தனது இன் பாக்சில் கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மரியா அபி ஹபீப் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர், இந்திய ட்ரால்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். களை விட மோசமாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்தியாவின் மானத்தை சர்வதேச அளவில் கப்பலேற்றிவிட்டு வந்திருக்கின்றனர் சங்கிகள்.

இந்தக் கூத்துக்களின் தொடர்ச்சியாக, உலகின் பழைமையான ‘ஜனநாயக’ நாடான அமெரிக்கா, தனது நாட்டு பிரபலங்களுக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கும் இடையில் நடக்கும் தகராறில் தலையை விடவேண்டிய கட்டாயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“எந்த ஒரு ஊக்கமான ஜனநாயகத்திற்கும் அமைதியான போராட்டங்கள் ஒரு அடையாளங்கள் என்பதை நாங்கள் அங்கிகரிக்கிறோம். இதையே இந்திய உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ளதை நாங்கள் அறிவோம். இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்பு தடையின்றி கிடைக்கச் செய்வது கருத்துச் சுதந்திரத்திற்கும், முனைப்பான ஜனநாயகத்துக்கும் அடிப்படையானது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.” என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

ஜனநாயகம் குறித்து சங்கிகளுக்கு அதாவது இந்திய அரசாங்கத்திற்கு வகுப்பெடுத்ததோடு மட்டும் அது நின்று விடவில்லை. தனது காரியத்திலும் கண்ணாக, தனது முத்தான கருத்தையும் உதிர்த்துவிட்டுச் சென்றது.

பிரச்சினையை அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள தாம் ஊக்குவிப்பதாகக் கூறிக் கொண்டே, “பொதுவில், இந்திய சந்தைகளின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பெருமளவிலான தனியார்துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது” என்று கூறியிருக்கிறது.

அமெரிக்காவின் இந்த அறிக்கை அதன் நோக்கத்தை மிகத் தெளிவாகக் காட்டியிருப்பதோடு, இந்திய அரசு வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதன் பின்னணியையும் பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. வெறுமனே அதானி அம்பானியின் கைகளுக்குக் கிடைப்பதற்காக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை என்பதையும் சர்வதேச நிதி மூலதனத்திற்கான ஒரு முக்கிய தளமாக இந்திய வேளாண் துறையை மாற்றுவதற்காகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், ஹாலிவுட் நடிகர்களும் கண்ணை மூடிக் கொண்டு, தலையாட்டி பொம்மைகளாக மோடி கும்பலின் கோரிக்கைக்கு அடிபணிந்து இந்த டிவிட்டுகளை போடுவதன் பின்னணியில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம் சாதாரணமானதும் அனைவரும் அறிந்ததும்தான். சங்க பரிவார பாசிச கும்பலை எதிர்த்து ஏதேனும் பேசினால் தொழிலை நிம்மதியாகச் செய்ய முடியாது என்பதோடு, கடந்த கால வரி ஏய்ப்பு குட்டைகளை எல்லாம் கிளறி எடுக்க மறுநாள் காலையில் வருமான வரித்துறை வாசலில் வந்து நிற்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பது முதல் காரணம்.

இரண்டாவது காரணம் தான் முக்கியமானது. தனியார்மயத்தின் பங்குதாரர்களாகவே இந்தப் பிரபலங்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதுதான் அது. ஒவ்வொரு சினிமா நடிகரும், கிரிக்கெட் ஆட்டக்காரரும் நடிக்கும் விளம்பரத்தின் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற்று வருகிறார்கள்.

இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சவுண்டு விட்டிருக்கிறார், சச்சின். இந்த வேளாண் சட்டங்களே இந்திய இறையாண்மையை ஒழித்துக்கட்டும் விதமாக உலக வர்த்தகக் கழகத்தால் திணிக்கப்பட்டவைதானே. எனில் இவர்கள் உலக வர்த்தகக் கழகத்தை எதிர்த்துக் கலகம் செய்வாரா சச்சின் ?

போடும் ஜட்டியில் இருந்து, குடிக்கும் குளிர்பானம் வரை அனைத்து பன்னாட்டு பொருட்களுக்கும் இதே கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சினிமா நாயகர்களும்தான் விளம்பர மாடல்களாகவும் பிராண்ட் அம்பாசிடர்களாகவும் இருந்து வருகின்றனர். தங்களது நலனும் கார்ப்பரேட் நலனும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கவொன்னாதவை என இவர்கள் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

படிக்க :
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
♦ சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

அதனால்தான், “#IndiaStandsTogether” (இந்தியா ஒன்றிணைந்து நிற்கிறது) என இப்போது ஹேஷ்டேகில் டிவிட் போடும் இந்த ‘தேச பக்தர்கள்’, 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் கடும் குளிரிலும் மழையிலும் நடுங்கிக் கொண்டு டெல்லியைச் சுற்றி அமர்ந்து போராடிக் கொண்டிருந்த போது, அவர்களோடு ஒன்றிணைந்து நிற்காமல், மவுனிகளாக அனைத்தையும் ‘பொத்திக்’ கொண்டு இருந்தனர்.

அமெரிக்கப் பாடகர் ரிஹானா தனது சமுக வலைத்தளப் பதிவின் மூலம் அளித்த ஆதரவும் உலகம் முழுவதுமான ஜனநாயக சக்திகளின் ஆதரவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு மேலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருப்பதோடு, மக்களின் தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்திய விவசாயிகளின் போராட்டங்கள் அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, வருங்காலத்தில் நமக்கு உணவு கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதற்குமான போராட்டமும் ஆகும் என்பதை பெருவாரியான மக்கள் உணரும் போது, தற்போது டிவிட்டரில் உருட்டப்படும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சினிமா ஹீரோக்களும் வீதியில் உருட்டப்படுவார்கள்.


சரண்
செய்தி ஆதாரம் : The Wire, The Wire2