ஒருவேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தயாராகிறோமா ? – பாகம் 1

ந்தியாவின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் கார்ப்ரேட்களின் கைகளில் தூக்கிக் கொடுக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பாஜக அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இதை எதிர்த்து 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று ஆணவமாக இருக்கிறது பாஜக அரசாங்கம்.

இப்படி விடாபிடியாக இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதை பாஜக ஏன் முன்னெடுக்க வேண்டும்? என்ற கேள்வி இயல்பாகவே எழும். காரணம் மிக எளிமையானது. தங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் எஜமானர்களின் நீண்டகால ஆசையான இந்திய விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் கைபற்றிக் கொள்வதற்கு சாதகமான சட்டங்களை பாஜக நிறைவேற்றிக் கொடுக்கிறது.

படிக்க :
♦ வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

சர்வதேச நிதியாதிக்க கும்பல், மூன்றாம் உலகநாடுகளின் உணவு உற்பத்தியை கைபற்றிக் கொண்டு, நீண்ட கால இலாபம் ஈட்டுவதற்கு இந்த சட்டங்களை வழிவகை செய்து கொடுக்கிறது. இந்த சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் நிதியாதிக்க கும்பல்களின் நலன்களையும், இவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியையும் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. ஏனெனில், இந்திய விவசாயத்திற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வந்துள்ள இந்த நெருக்கடி ஒரு தனி நிகழ்வல்ல. இது அனைத்து வளரும் நாடுகளும் சந்தித்து வரும் சர்வதேச அளவிலான நிகழ்வுப்போக்கு.

“விவசாயிகள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்” என்று ஆளும் கும்பல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், விவசாயிகள், தங்கள் நிலம் பறிக்கப்படும் அபாயத்தில் இருப்பதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள், “எங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்பானி, அதானி போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளும், பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும் தங்கள் நிலங்களை, வாழ்வாதாரத்தை கைபற்றிக் கொள்ள நினைக்கிறார்கள் என்ற புரிதல், போராடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உள்ளது.

கடந்த மே மாதம் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பற்றி, மோடி பேசும் போது, “தன்னிறைவு பெற்ற இந்தியாவின் உறுதியை நிரூபிக்க, நிலம், தொழிலாளர்கள், பணம், சட்டம் என்ற அனைத்து மட்டத்திலும் திருத்தங்கள் வலியுறுத்தப்படும்” என்றார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, “நிலமும் தொழிலாளர்களும் தான் சந்தை சீர்திருத்தங்களின் முக்கிய கூறுகள். ஏனெனில், நிலமும் தொழிலாளர்கள் நலனும் தான் தொழில் சார்ந்த செலவுகளைப் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது. சமீபத்தில், சில மாநிலங்களில் நிலம், தொழிலாளர் நலச்சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் அடிப்படை தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றும்.  கர்நாடகா ஒருபடி மேலே போய், தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்தி இருக்கிறது. இந்த மாநிலத்தில் விவசாயிகளிடமிருந்து முதலாளிகளால் நேரடியாக நிலங்களை வாங்க முடியும். மற்ற மாநிலங்களும் இந்த முறைக்குள் சிறிது சிறிதாக உள்ளிழுக்கப்படும்” என்றார்.

கர்நாடகாவில் விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாகவும், ஏமாற்றியும் நிலத்தை தனியார் முதலாளிகள் பறிக்காமல் தடுக்கும் பொருட்டு நிலத்தை தனியார் நிறுவனங்கள் நேரடியாக கையகப்படுத்துக் கூடாது என்று சட்டமிருக்கிறது. அதை கடந்த டிசம்பர் 2020-ல் திருத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு மிகவும் சாதகமான இந்த சட்டத்தை பெருமுதலாளிகள் வரவேற்கிறார்கள்.

கொரோனா பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, மோடி அரசாங்கம் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒன்று, கிராமப்புறங்களில் இருக்கும் குடியிருப்பு நிலங்களை ட்ரோன்(Drone) மூலம் விவரணையாக்கம் (Mapping) செய்தது; இரண்டு, நிலங்களின் மீதான இறுதி சொத்துரிமை பத்திரத்தை (Conclusive Land Titling) தீர்மானிப்பது பற்றிய மாதிரி சட்டத்தை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச முகமைகளும், இந்திய அரசாங்கமும் ஏழை விவசாயிகளின் நிலங்களை முதலாளிகளுக்கு மாற்றிக் கொடுப்பதற்கான வேலைகளை வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், “தங்களின் வாழ்வாதாரத்தை சிறு துண்டுநிலத்தின் மூலமாக காப்பாற்றிக் கொள்ள சிரமப்படும்” விவசாயிகளின் நிலங்களை முன்வைத்து ”நல்லவொரு நில விற்பனை சந்தையை” உருவாக்க நினைத்தார்கள்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, நிலத்தின் மீதான தனிச்சொத்துடமையை (எவ்வித தடங்கலுமின்றி விற்பனை செய்வதை) உறுதிசெய்வதை அரசாங்கம் விரைவுபடுத்தியது. இதன் பொருட்டு, நிதி அயோக், நிலத்தில் தனிச்சொத்துரிமையை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்றும்படி மாநில அரசுகளை நிர்பந்தித்து வருகிறது. நிலத்தின் மீதான தனிச்சொத்துரிமை நிலைநாட்டப்பட்டால்தான், நிலம் ஒரு விவகாரமில்லாத பண்டமாக மாறும். அப்போதுதான் நிலச் சந்தையில் நிறைய லாபம் பார்க்க முடியுமென்பது முதலாளிகளின் கணக்கு.

இந்தியாவில் நிலம்தான் பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால், நிலத்தின் மீதான உரிமைகள் சமூக ரீதியாகதான் பார்க்கப்பட வேண்டும். வெறுமனே நிர்வாக ரீதியாக நிலத்தின் சொத்துரிமைகள் தீர்மானிக்கப்படும் போது, இந்த நிலத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பெரும்பகுதி மக்களை நிலமற்றவர்களாக மாற்றப்படும் அபாயமிருக்கிறது. இந்த நிலம் சபந்தமான எந்த நடவடிக்கைகளும், சட்டங்களும் ஏழை விவசாயிகளின் தேவைகளுக்கானது அல்ல. கார்ப்ரேட் முதலாளிகளுக்கானது தான்.

உற்பத்தித் துறை, இயற்கை வளம், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் கபளீகரம் செய்த நிதியாதிக்கக் கும்பலின் அடுத்த இலக்காக விவசாயம் இருக்கிறது.  மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் கைபற்றுவதன் மூலம் தங்கள் லாபங்களை உறுதிபடுத்திக்கொள்ள கார்ப்பரேட்டுகள் முனைகிறார்கள்.

மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் பன்னாட்டு மூலதனத்திற்கு எந்த தடையுமில்லாமல் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு மூலதனத்திற்கு கட்டுப்படத்தக்க வகையிலான ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை வியாபாரம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. இப்படி ஒரு நாட்டின் சில்லறை விற்பனை வெகுசில கார்ப்பரேட்களின் கைகளில் குவிக்கப்படுவது  உலகளாவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவசாயமும் சில்லறை வர்த்தகமும் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிக்கப்படுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கார்ப்பரேட்களின் வியாபார நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத கொள்கையால், இந்தியாவின் விவசாயம் சீரழிந்து போயிருக்கிறது. 1990-களில் இருந்து தற்போதுவரை ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருகிறார்கள்.

மூன்றாம் உலகநாடுகளின் விவசாயம் என்பது அந்தந்த நாடுகளின் உள்நாட்டு தேவைக்கான தானிய உற்பத்தி என்ற நிலை மாறி, ஏகபோகங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உயர்தர காய்கறிகள், பழங்கள், பணப் பயிர்கள் ஆகியவற்றின் உற்பத்தியை நோக்கியதாக மாற்றப்பட்டு இருக்கிறது. இப்படி, மூன்றாம் உலக நாடுகளின் விவசாயமும் உணவு உற்பத்தியும் சிதைக்கப்பட்டு, அந்நாட்டு விவசாயிகளின் வாழ்வு ஏகபோகங்களின் நலன்களுக்குக் கீழானதாகக் கொண்டுவரப்பட்டது. அதற்கேற்றாற் போல சட்ட சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதோடு, விவசாயிகளுக்கான மானியங்கள் அனைத்தும் படிப்படியாக வெட்டப்பட்டன.

விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை நுகர்வுத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. ஆனாலும், தங்கள் நிலங்களை விட்டுப்போக விவசாயிகள் தயாராக இல்லை. ஏனெனில், மாற்று வாழ்வாதாரம் என்று எதுவுமே அவர்கள் முன்பு இல்லை. விவசாயத்தில் நசிந்துபோன விவசாய தொழிலாளர்களை, உள்ளிழுத்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை அளிக்கும் அளவுக்கு இந்தியாவில் தொழிற்துறையின் வளர்ச்சியும் இல்லை. அதனால், தாம் உயிருடன் இருப்பதற்காவது, குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை அளிக்கும் நிலங்களை விட்டு வெளியேற விவசாயிகள் முன்வருவதில்லை.

புதிய தாராளவாத பொருளாதாரத்தில் நிலம் கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான அம்சமாக இருக்கிறது. இதை செய்து கொடுக்க மோடி அரசாங்கம்  முதலிலே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் (2013) சரத்துகளை நீர்த்துப்போக அல்லது அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முயற்சி செய்தது. ஆனால், விவசாயிகள் மற்றும் நாடாளுமன்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த சட்டத்திருத்தத்தை கைவிட்டது.

ஆனால், இப்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ”நவம்பர் 2020 ஆளும் கட்சிக்கு சாதகமான நிலையில் இருக்கும் என்பதால், இப்போது மீண்டும் நிலம் சம்பந்தமான மசோதாவை அறிமுகப்படுத்தலாம்” என்கிறார்.

இதுபோன்ற சட்டங்களின் வாயிலாக விவசாயிகளை நிலங்களை விட்டு விரட்டப்படுவதற்கான காரணம், தொழிற்சாலைகள், உள்கட்டுமானம், சுரங்கம் போன்றவைகள் மட்டுமல்ல; நிலங்களைக் கையகப்படுத்தி இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் ஏகபோகத்திற்கு ஏற்றாப்போல மறுகட்டமைப்பு செய்வதற்கும்தான்.

இதை செய்வதற்காக, நிலத்தின் மீதான உரிமை பற்றிய சமூகமயமான கேள்வியை, வெறும் நிலத்தை முறையாக நிர்வாகம் செய்வது பற்றிய கேள்வியாக சுருக்கியிருக்கிறார்கள். விவசாயத்தின் அவசியத்தை மனதிற் கொண்டு விவசாய நிலங்களை கொள்முதல் செய்வதற்கு அரசு ஏற்கெனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதுதான் இந்தச் சட்டத் திருத்தங்களின் அடிப்படை. அதுமட்டுமின்றி, சிறு குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை பெரும் கார்ப்பரேட்களுக்கு குத்தகைக்கு விடுவது பற்றிய சட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த 2001-ம் ஆண்டு McKinsey என்னும் சர்வதேச நிறுவனம் கொடுத்த அறிக்கையின் படி, “இந்தியாவில் 90% நிலச் சொத்துரிமை பற்றிய பத்திரங்கள் தெளிவற்றதாக இருக்கிறது”, என்று தெரிவிக்கிறது. இந்தியாவில் வரலாற்று ரீதியாக, நிலத்தில் உழைப்பவர்கள் ஒரு வர்க்கமாகவும், அதன் பலனை அனுபவிப்பவர்கள் மற்றொரு வர்க்கமாகவும் இருக்கிறார்கள். இதனால், “உழுபவர்களுக்கே நிலத்தின் மீதான உரிமை” என்ற சமூக உரிமையை ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மிகக்கடுமையான போராட்டத்தின் மூலமாகவே வென்றெடுத்தார்கள். இப்படி வரலாற்று ரீதியாக நிலத்தின் மீது நிலவும் சமூக உரிமையைதான் McKinsey நிறுவனம் “தெளிவற்ற சொத்துரிமை” என்று சொல்கிறது.

“நில உச்சவரம்பு போன்ற சீர்திருத்தங்கள் எல்லாம் தோற்றுவிட்டது என்றும், அதற்கு பதிலாக, நிலங்களை அளவீடு செய்து அதை ஒழுங்குபடுத்தி, கனிணிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் நிலப் பத்திரங்களை கொண்டுவருவது, இதை செய்ய தனியார் நிறுவனங்களையும் அனுமதிப்பது” என்ற பரிந்துரைகளை உலக வங்கி கொடுத்துள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தி, நிலத்தை ஒரு சந்தை சரக்காக மாற்றி, நிலச் சந்தையில் (Land Market) இருக்கும் குறுக்கீடுகளை நீக்கி விவசாயமல்லாத காரணங்களுக்காக நிலத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

இதுதான் மூன்றாம் உலக நாடுகளுக்கு உலக வங்கி “பரிந்துரை” என்னும் பெயரில் விடுத்துள்ள கட்டளை. இதற்காக, 2008-ம் ஆண்டு நிலத்தின் மீதான சொத்துரிமையை அரசால் உறுதிபடுத்தப்பட்ட பத்திரமாக கொண்டுவருதற்கு, “தேசிய நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பெரும் பகுதி மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தபோது, “இந்த நெருக்கடியை வீணாக்க வேண்டாம்; இந்த நெருக்கடி அரசாங்கத்திற்கு நிலம், தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை திருத்த ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறது”, என்றார் 2014-ம் ஆண்டு நிதி அயோக்கின் தலைவராக நியமிக்கப்பட்ட பனகாரியா. இதே கொரோனா ஊரடங்கு காலத்தில், SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) என்னும் திட்டத்தையும் கொண்டு வந்தது அரசாங்கம்.

இதன்படி, கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தொழில்நுட்பத்தை கொண்டு விவரணையாக்கம் (Mapping) செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது முடிவடைந்த உடன் குடும்பங்களுக்கு சொத்துரிமை அட்டைகள் வழங்கப்படும். வீடுகள் மட்டுமின்றி பஞ்சாயத்து மற்றும் சமூக சொத்துகளான சாலைகள், குளங்கள்,ஓடைகள், பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவற்றையும் விவரணையாக்கம் செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் நிலத்தை சந்தை சரக்காக மாற்றுவதற்கான செயல்பாடுகள்தான் என்று அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. இப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு செய்யப்பட்டது, விரைவில் விவசாய நிலங்களுக்கும் செய்யப்படும்.

படிக்க :
♦ மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

இந்திய சமூக வரலாற்றில், நிலம் என்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. அரசாங்கம் தற்போது செய்துவரும் சொத்துரிமையை இறுதிசெய்யும் திட்டத்தில் இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்களா? என்பதே கேள்வி. ஒடுக்கப்பட்ட மக்கள் நிலத்தில் உழைத்தாலும் நிலம் அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை.

1970-களில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தம், அதாவது தனிநபர்கள், பண்ணையார்களிடம் ஏகபோகமாக இருந்த நிலங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல், நிலத்தில் இல்லாத நபர்களின் சொத்துரிமையை பறித்தல் (Abolition of Absentee Land Lordism) போன்ற நடவடிக்கைகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சொல்லப் போனால், பிரித்தளிக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் வெறும் கண் துடைப்பாகத் தான் இருக்கிறது.

ஆனால், இன்றைய தேதியில் “சீர்திருத்தங்கள்” என்ற பெயரில் கொண்டுவரப்படுவது எதுவும், நிலங்களை பகிர்தளித்தல் என்னும் அர்த்தத்தில் கொண்டு வரப்படுவதில்லை. மாறாக, சர்வதேச அளவிலான நிதி ஆதிக்கத்தின் கீழ் விவசாய நிலங்களை கொண்டு சேர்ப்பது என்ற நோக்கத்தோடுதான் செய்யப்படுகிறது. இப்படி பிற நாடுகளின் வளங்களை சூறையாடுவது ஏகாதிபத்தியத்தின் உள்ளியல்புதான் என்றாலும், அது சமீபத்தில் புதிய நிலையை அடைந்திருக்கிறது.

சமூக அமைதியின்மை, எதிர்ப்புகள் இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிற நாடுகளின் காடு, நிலம், தண்ணீர் போன்ற வளங்களை ஏகபோக நிதியாதிக்கக் கும்பல்களின் கையில் ஒப்படைக்கும் வேலையை செய்ய அந்தந்த நாடுகளின் அரசுகளை நிர்பந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலைமைகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன ? அடுத்த பகுதியில் (இறுதி) பார்க்கலாம்.

(தொடரும்)

பாகம் 2 : உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

ராஜேஷ்