‘பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற பெயரிலான, சுமார் 33,000 உறுப்பினர்களைக் கொண்ட பிஜேபி எதிர்ப்பு முகநூல் குழுவை ஃபேஸ்புக் நிர்வாகம் முடக்கியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுந்த பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு மீண்டும் தடை நீக்கியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாரதீய ஜனதாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்த ‘பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற முகநூல் குழுவை ஆகஸ்ட் 18 இரவு பேஸ்புக் நிறுவனம் முடக்கியது. அந்தக் குழு 33,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்ததக்கது.
இந்தக் குழு, ‘பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான வங்காளம்’ என்ற அமைப்பின் உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. கடும் போட்டி நிலவிய அந்த மாநிலத் தேர்தலை முன்னிட்டு  பிஜேபி-க்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்கியதில் அந்த முகநூல் குழு முக்கியப் பங்கு வகித்தது என்று பல அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
படிக்க :
டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
மேற்கு வங்கத் தேர்தலின் முடிவில், பாஜக தோற்றது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
இந்த குழு உறுப்பினர்களின் அந்த முன்முயற்சியில், குறிப்பாக திரிணாமுல் காங்கிரசிற்கோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சிக்கோ ஆதரவு தருவதாக அவர்கள் சொல்லவில்லை. அவர்களின் பிரச்சார வடிவங்கள் பெரும்பாலும் ஆன்லைன் மற்றும் தெருமுனைப் பிரச்சாரத்தை உள்ளடக்கியது. அதில் அவர்கள் பாஜக அல்லாத வேறு எந்த கட்சிக்காவது வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டனர்.
ஆகஸ்ட் 18 (புதன்கிழமை) அன்று அந்த முகநூல் குழு முடக்கப்பட்ட பிறகு, அதன் நிர்வாகிகள் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று பேஸ்புக்கிலிருந்து பதில் பெற முயன்றனர். அவர்கள் மீண்டும் ஃபேஸ்புக்கில் ஒரு புதிய ஹேஷ்டேக் பிரச்சாரத்தைத் தொடங்கினர், முடக்கப்பட்ட அந்தக் குழுவை மீண்டும் இயக்குமாறு கோரினர். ஆகஸ்ட் 20 மதியம், இறுதியாக மீண்டும் குழு செயல்பட ஃபேஸ்புக் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டது.
பாஜக மற்றும் அதன் அரசியலுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் முகநூல் குழு ஃபேஸ்புக் நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, கணிசமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட இதேபோன்ற ஒரு குழு  நான்கு முறை இத்தகைய தடை நடவடிக்கையை எதிர்கொண்டது.
“எங்களுக்கு எந்த முன் எச்சரிக்கையும் அல்லது அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. குழு வெறுமனே முடக்கப்பட்டது. அவர்களின் சமூக தர வரையறைகளை  மீறியதற்காக குழு முடக்கப்பட்டது என்ற பொதுவான பதிலை நாங்கள் பெற்றோம். ஆனால், எந்த சமூகத் தர வரையறைகளை மீறியது அல்லது குழுவில் எந்த பதிவுகள் அதை மீறியது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை” என்கிறார் ‘பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்ற குழுவின் நிர்வாகிகளில் ஒருவரும், ஆராய்ச்சியாளரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான கஸ்தூரி பாசு.
அந்த பிரச்சார இயக்கத்தின் முகநூல் பக்கத்தை (Facebook Page) 17,000-க்கும்  அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அந்தப் பக்கம் முழுமையாக செயலிழக்கச் செய்யப்படவில்லையெனினும், அந்த முகநூல் பக்கம், ”ஒரு வழி” தகவல்தொடர்புகளை மட்டுமே அனுமதிக்கிறது. ‘நிர்வாகிகள்’ மட்டுமே இதில் இடுகையிட முடியும் – ஆனால், ஒரு முகநூல் குழுவில் ஒவ்வொரு உறுப்பினரும் இடுகையிடலாம். பெரும்பாலும், விவாதங்களுக்கு முகநூல் ‘பக்கத்தை’ விட முகநூல் ‘குழுவானது’ (Facebook Group) மிகவும் பயனுள்ள வழிமுறையாக உள்ளது.
இந்தியாவில் பேஸ்புக் நிர்வாகம் மக்களின் எதிர்ப்புக் குரல்களை தீவிரமாகவும் முறையாகவும் முடக்குகிறது என்பது இப்போது வெளிப்படையாகிவிட்டது. முகநூல் இந்தியாவின் கொள்கைப் பிரிவு தலைவர் அன்கி தாஸின் பாஜக ஆதரவு நிலைப்பாடு அம்பலப்படுத்தப்பட்டது, இதற்குப் சிறந்த நடைமுறை உதாரணத்தை அளித்துள்ளது” என்கிறார் பாசு.
பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பைச் சேர்ந்தவர்களின் மதவாத வெறுப்பை ஊக்குவிக்கும் இடுகைகள் பேஸ்புக் நிறுவனத்தால் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. அதேசமயம் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பாசு கருதுகிறார்.
மேலும், “பேஸ்புக் சமூகத் தர வரையறைகள் சரியாக என்ன சொல்கின்றன? அவர்கள் கூறும் தரம் என்பது என்ன ? அவை பிஜேபி கூறும் தரங்களா? ஏனெனில் “பேஸ்புக் சமூகத் தர வரையறைகளை” மீறிச் செல்லும் வெறுக்கத்தக்க, கீழ்த்தரமான, வன்முறையான, வகுப்புவாத வலதுசாரி உள்ளடக்கங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டால் மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிறுவனத்திற்கு அது ஒரு இழிவான விளம்பரமாகவே இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
மற்றொரு முகநூல் குழு, அதே கதை
பேஸ்புக் நிறுவனம் முன்பு ‘NRC வேண்டாம் – இயக்கம்’ என்ற மற்றொரு பெரிய ‘குழுவை’ நான்கு முறை முடக்கியிருக்கிறது, என்று வங்காளத்தில் உள்ள பிஜேபி – எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். தற்போது அந்த குழுவில் 1.71 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் – நான்காவது சந்தர்ப்பத்தில், அது ஒரு மாதத்திற்கு முடக்கப்பட்டது. பிஜேபி-யின் உத்தரவின் பேரில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் செயல்படுவதாக, அந்த குழுவில் உள்ளவர்கள், கருதுகின்றனர்.
மகத்தான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் கருத்துக்களை உருவாக்கி மக்களை விழிப்படையச் செய்யும், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு ஒரு மாதத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. முகநூல் அதிகாரிகள் யாரை மகிழ்விக்க முயற்சி செய்கிறார்கள்? அவர்கள் பிஜேபி-யுடன் கைகோர்க்கவில்லையா? என்று வினவுகிறார், வங்கத்தின் மிகப்பெரிய மனித உரிமை அமைப்பான ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் (ஏ.பி.டி.ஆர்) துணைத் தலைவர் ரஞ்சித் சுர்.
மேற்கத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பேச்சு சுதந்திரத்தின் மேற்கத்திய ஜனநாயக மாதிரிகளின் தரத்தை கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற கார்ப்பரேட் தளங்கள், லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன என்றார்.
மேற்கத்திய உலகத்திற்கு வெளியே, இந்த கார்ப்பரேட்டுகள் நேரடியாக நாட்டின் ஆளும் கட்சியுடன் இணைகிறார்கள். ஆட்சியாளர்கள் பாசிஸ்டுகள் அல்லது மத அடிப்படைவாத சக்திகள் என்பதை பற்றியெல்லாம் இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருத்துக் குரல்களைக் கட்டுப்படுத்த அவர்கள் கடுமையாக வேலை செய்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி அமைப்புகளின் பெயர்களை அல்லது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை மற்றும் அரசாங்கக் கொள்கைகளை நேரடியாக எதிர்ப்பவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்” என்று சுர் கூறுகிறார்.
படிக்க :
காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு !
பாசிசத்தை ஆதரித்து நிற்கும் ஃபேஸ்புக் !
‘பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டாம்’ பிரச்சார இயக்கத்தின் ஒரு உறுப்பினராக இருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் அனிகேத் சட்டோபாத்யாய், பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ம் தங்களின் பிரச்சாரத்திற்கு பயப்படுவதை பார்த்து பெருமைப்படுவதாகக் கூறுகிறார்.
 “பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தல்கள் இல்லாமல் பேஸ்புக் அதிகாரிகள் முகநூல் பக்கத்தை முடக்கியதாக நினைக்கிறீர்களா? பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் எங்கள் பிரச்சாரத்தை பார்த்து இந்த அளவிற்கு பயப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் சட்டோபாத்யாய்.
தடை விலக்கிகொள்ளப்பட்டு குழு மீண்டும் செயல்படுத்தப்பட்ட பிறகு, பிரச்சாரத்தின் உறுப்பினரான தொழிற்சங்கவாதி குஷால் தேப்நாத் முகநூலில் பெங்காளி மொழியில் ஒரு பதிவை எழுதினார். ஆங்கிலத்தில் அதன் பொருள் ‘இது எங்கள் போராட்டத்தின் விளைவு !’. இந்த முகநூல் பக்க தடைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவலான எதிர்ப்பு வலுத்தது. பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் கதிகலங்கி தடையை திரும்ப பெற்றுக் கொண்டனர். நாங்கள் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

கட்டுரையாளர் : ஸ்னிக்தெண்டு பட்டாச்சார்யா
தமிழாக்கம் : முத்துகுமார்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க