1947- என்பது ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்த ஆண்டு மட்டுமல்ல, இந்தியா என்கிற ஒரு நாடு, இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாக பிரிக்கப்பட்ட ஆண்டும் கூட. நாட்டுப் பிரிவினை என்ற எல்லைக் கோட்டினால் பல கோடி மக்களின் இதயத்தில் மாறாத வலியையும், வடுவையும் கொடுத்த ஆண்டு.
ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா ‘சுதந்திரம்’ பெற்றதால் நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கொண்டாட்டத்திலிருந்த போது மேற்கிலும், கிழக்கிலும் மற்றும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.
இந்தப் பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம் லீக் தான் என்று ஒரு சாரரும் , முகம்மது அலி ஜின்னா தான் என்று சிலரும் , காங்கிரஸ் தான் என்று ஒரு சாராரும், காலங்காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியது தான் காரணம் என்று பலரும், ஆங்கிலேயர்கள் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியர்கள் தங்களுக்குள் வெட்டிக் கொண்டு சாகட்டும் என்று எடுத்த முடிவு தான் காரணம் என்று ஒரு வாதமும் அப்போது எழுந்தது.
பிரிவினையால் கோடிக்கணக்கான மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அடுத்து, பிரிவினையால் நவகாளியிலும் ராவல்பிண்டியிலும் நடைபெற்ற கலவரங்கள் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து விட்டன. நம்மில் பலரும் அறியாத அந்த வலிகள் நிறைந்த வரலாற்றை கீழ்காணும் ஆறு கட்டுரைகள் மூலம் கொடுத்துள்ளார் ச. தமிழ்ச்செல்வன்.
அவையாவன,
1- 1947
2- தோஆ கல்சாவின் துயரம்
3- பாக்கிஸ்த்தானிலிருந்து ஒரு குரல்
4- மௌனங்களும் சிரிப்புகளும்
5- வங்கதேசத்திலிருந்து ஒரு குரல்
6- பிரிவினையில் இரயில்வே தொழிலாளி
படிக்க :
ஒரு வரிச் செய்திகளில் ‘சுதந்திர தினம்’ !
நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?
முதல் கட்டுரையான 1947 இல் உள்ள சாராம்சத்தை பார்க்கலாம்.
• “ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்” என்பது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத் துவங்கின. ஆகஸ்ட் 15-க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன. எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம் பெயர்ந்தனர்.
• பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சாலைப் பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை “கஃபிலா’ (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது. இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள்… ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி ‘கஃபிலா’வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.
• குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.
• கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949-ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. “கடத்தப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 1949” கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது. 1957 வரை தேடும் பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.
• 01.03.1947 க்குப் பிறகும் 01.01.1949 க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்பட்டனர். இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும் பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
• பிரிவினையின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளுக்கும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் தாய்க்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்? நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர்.
• 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள், சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத் தான் ரேஷன் கிடைக்கும்.
• தேசப்பிரிவினையின் போது பெண்ணின் உடம்பின் மீது எழுதப்பட்ட வரலாறு:
i. “எதிர்”மதத்தின் பெண்களை இழிவுபடுத்துவது என்பது அவர்களுடைய மதத்தை, நம்பிக்கைகளை, அவர்களுடைய தன்மானத்தை, ஆழமாக கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.
ii. மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததன் மூலம் அப்பெண்களின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியாக கருதப்பட்டது.
iii. “அவர்களது” பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.
iv. பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).
v. பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் / திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என,  என்றுமே அழியாத இழிவாக பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னத்தை இருக்கச் செய்வது.
vi. “அவர்கள்” தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது நிர்ப்பந்திப்பது வழிகாட்டுவது.
vii. தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம் வீட்டுப் பெண்களை குல தெய்வமாக்கி இன்றும் வணங்கி வருவது, தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம் வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.
படிக்க :
நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்
நூல் அறிமுகம் : இந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு
இப்படி முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பிரிவினை நமக்குப் பரிசாகத் தந்துவிட்டது என்று கூறும் ச. தமிழ்ச்செல்வன், 1947 பற்றி சில கேள்விகளையும் நம் முன் வைக்கிறார்.
1. லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக, இணக்கமாக, இயல்பாக வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் மாறியது எப்படி?
2. சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள் தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?
3. கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் நமக்குத் தேவை அல்லவா?
4. பெண்ணின் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்? குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம், தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்கும் நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப் போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?
5. தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?
6. கலவரங்களின் போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்ய காலம் அதிர்ச்சியில் கன்றிப் போவதை நாம் எப்படி சரி செய்யப் போகிறோம்?
7. 1947-ல் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு மார்புகள் அறுத்தெறியப்பட்ட இளம் பெண்கள் இன்று 80 வயது , 90 வயது தாண்டிய மூதாட்டிகளாக நம் தேசத்தின் மூலை முடுக்குகளில் நடமாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். மாற்று மதக் குறியீடுகளுடன் சூடுபட்ட தம் உறுப்புகளைத் தேசத்துக்குத் திறந்து காட்டுகிறார்கள். அவர்கள் திறந்து காட்டும் சட்டைக்குள்ளே மார்பகங்கள் இல்லை. அறுத்த அடையாளமாக இரண்டு குழிகள் மட்டுமே இந்தியாவை வெறித்துப் பார்க்கின்றன. இது தான் தங்களுக்கு “1947” தந்த பரிசு என்று பேசாமல் பேசும் அந்த தாய்மார்களுக்கு நம் தேசத்தின் பதில் என்ன?
மொத்தத்தில் , 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல; மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள், அவலங்கள் மற்றும் மனிதக் கேவலங்கள் ஆகியவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடாகவும் நிற்கிறது.
இரண்டாவது கட்டுரை : பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மாவட்டத்தில், கஹூதா தாலுகா, தோ ஆ கல்சா என்ற கிராமத்தில் நடந்த மனதை உருக்கும் நிகழ்வை பீர் பகதூர் சிங் என்பவர் கூறியதை அவரின் வாய் மொழியாகப் பதிவு செய்துள்ளார்.
பீர் பகதூர் சிங் கூறுகிறார்; “அப்போது நான் சிறு பையன், கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பெரும்படையாக வந்து எங்கள் கிராமத்தை தாக்கிய போது நாங்கள் சண்டையிட்டுத் தோற்றோம். சரணடைந்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தோம். அவர்கள் எங்கள் இனத்துப் பெண் ஒருத்தியை தரச் சொல்லிக் கேட்டார்கள். பேச்சுவார்த்தைக்கு தலைமையேற்ற என் தந்தை சந்த் ராஜ சிங், பெண்களைத் தருவது என்ற பேச்சே எடுக்கக்கூடாது என்று கறாராக சொல்லிவிட்டார். அதற்காக 30,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு முஸ்லீம்கள் அன்றைக்கு திரும்பி விட்டார்கள்.
ஆனால், மறுதினம் அவர்கள் மீண்டும் தாக்க வந்து விட்டார்கள். சண்டை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க சர்தார் குலாப் சிங்கின் பெரிய வீட்டில் ஊர்ப் பெண்களை எல்லாம் மாடியின் முற்றத்தில் என் தந்தையார் திரட்டினார். இளம் பெண்கள் 25 -26 பேர் இருப்பார்கள். முதலில் என் தந்தையார் தன் மகளை முன்னுக்கு வருமாறு அழைத்தார். கிரந்தத்திலிருந்து சில வார்த்தைகள் சொல்லித் தொழுதார். “உனது சீக்கியம் கறை படியாது இருக்கவே எங்கள் புத்திரிகளை இன்று பலியாகக் கொடுக்கிறோம்” என்று அவர் கைகளை உயரே தூக்கிச் சொன்ன போது அவரது கைகளும் உதடுகளும் நடுங்கின.
என் சகோதரியை கொல்லும் முன்பு தன்னைக் கொல்லுமாறு எங்கள் வீட்டின் பணியாள் ராம்சிங் கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில், ராம் சிங், ஜஸ்டிஸ் ஹர்னாம் சிங், என் சகோதரி ஆகியோர்களின் தலை துண்டானது. எனது பெரியம்மாவின் மருமகள் ஹர்னாம் கௌர் அப்போது கர்ப்பிணியாக இருந்தாள். என் தந்தையால் அவளைக் கொல்ல முடியவில்லை. அவளுடைய கணவனே அவளை துப்பாக்கியால் சுட்டான். பிறகு தன்னையும் சுட்டுக் கொண்டு உடனே இறந்து விட்டான். பின்பு 26 வாள் வீச்சுகள்; அங்கிருந்த இளம் பெண்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் முஸ்லீம்கள் ஊரைக் கைப்பற்றிவிட்டார்கள். இன்னும் நூறு பெண்கள் வரை அந்த இடத்தில கூடி இருந்தார்கள். என் தாய் லஜவந்தியின் தலைமையில் அவர்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டார்கள். அடுத்த இரண்டு நிமிடங்களில் அருகில் இருந்த கிணற்றில் 88 பெண்களும் கிணற்றில் குதித்து விட்டனர். பசந்த் கௌர் என்றொரு பெண்மணி தன் ஆறு குழந்தைகளும் கிணற்றில் விழுந்து சாக, மேலே விழுந்த அவள் சாக முடியவில்லை . கிணறு நிரம்பி விட்டது . அவளைக் கொல்ல போதுமான ஆழமில்லை. அவள் உள்ளே கிடக்கும் தன் பிள்ளைகளைப் பார்ப்பாள் . மீண்டும் ஏறிவந்து மறுபடியும் உள்ளே குதிப்பாள். திரும்பத் திரும்ப அவள் குதித்துக் கொண்டே இருந்தாள்- பைத்தியம் பிடித்தது போல். ஆனால் அவள் சாகவில்லை. இன்னும் இதே டெல்லியில் வாழ்கிறாள். (இப்பகுதியை வாசித்த ஒவ்வொரு முறையும் நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன்; இதை எழுதும் போதும் கூட)
அதன் பிறகு இராணுவம் வந்தது. எஞ்சிய நாங்கள் உயிர் தப்பி டெல்லி வந்து சேர்ந்தோம். நாங்கள் தப்பி வந்த சில தினங்கள் கழித்து, ஜவஹர்லால் நேரு எங்கள் தோ ஆ கல்சா கிராமத்திற்குச் சென்றார். அந்தக் கிணற்றைப் பார்த்து அப்படியே நின்று அடக்க முடியாமல் அழுதிருக்கிறார்.
இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் இதுபோல கூட்டமாக முஸ்லீம் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது. பொற்கோவில் வளாகத்தில் ஓர் இரவு முழுக்க 200 முஸ்லீம் பெண்கள் நிர்வாணமாக நடனமாட நிர்ப்பந்திக்கப்பட்ட செய்தியறிந்து அவமானப்பட்டேன்” என்று கூறுகிறார் பீர் பகதூர் சிங் . பிரிவினையின் துயரத்தைக் கூறும் அடையாளச் சின்னமாக தோ ஆ கல்சாவும் , அந்தக் கிணறும் இருக்கிறது !
மூன்றாவது கட்டுரையில் : உலகப்புகழ் பெற்ற (பாகிஸ்தானி) வரலாற்று அறிஞர் இக்பால் முகம்மது கூறியுள்ளதை பதிவு செய்து இருக்கிறார், ” இந்தியாவிலுள்ள உங்களுக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. மிகத் தொன்மை வாய்ந்த கலாச்சார பின்னணி கொண்ட தேசம் இந்தியா. ஆனால் யார் செய்த சதியாலோ பாகிஸ்தான் என்ற புதிய நாடு உருவானது. எங்கள் பாகிஸ்தான் மக்களுக்கு எந்தப் பாரம்பரியத்தின் மீதும் உரிமை கொண்டாடி பெருமை கொள்ள எந்த அடையாமுமில்லை என்ற உணர்வு இருக்கிறது. எங்கள் மன அழுத்தத்தின் வலியை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” என்ற கேள்வியை வைத்துள்ளார். ஒரு வரலாற்று ஆய்வாளரான அவருக்கு பதில் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் இல்லை,
மௌனங்களும் சிரிப்புகளும் என்ற நான்காவது கட்டுரையில் : பாகிஸ்தானில் வாழும் ராணா என்பவரைப் பற்றியும் , திரிலோக சிங் என்பவரைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
தேசம் பிரிக்கப்பட்ட போது உடன் பிறந்தவர்களெல்லாம் இந்தியாவிற்கு ஓடி வந்து விட ராணா* மட்டும் சொத்துக்காக தன் தாயாருடன் லாகூரிலேயே இருந்துவிடுகிறார். பின்னர் அவர் முஸ்லீமாக (அப்துல்லா) மதம் மாறி விடுகிறார். தன் தாயாரையும் மதம் மாற்றி விடுகிறார். பிளவுபட்ட மனநிலையுடன் சரியான தூக்கமின்றி, எவருடனும் பேச மொழியற்று இன்னும் பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்.
தேசப்பிரிவினையின் போது திரிலோக் சிங்கின் வயது 9. இந்தியாவுக்குத் தப்பி வருமுன்னர் தங்கள் வீட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று விடுவது என வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்தனர். வழியில் பிடிபட்டு கட்டாய மதமாற்றத்திற்கும், பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளாகாமல் தடுக்க பலவீனமானவர்களை (பெண்கள், குழந்தைகள்) அவர்களைத் தாங்களே கொன்று விடுவதுதான் அன்று வழக்கத்தில் இருந்தது. திரிலோக் சிங் தன்னை கொல்லவேண்டாம் என்று கெஞ்சி கேட்கிறான். அவனைத் தவிர அவனது குடும்பத்தினர் 17 பேர்களும் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். தப்பி வந்த ஆண்களில் இடையில் கொல்லப்பட்டது போக எஞ்சியது அவனது மாமா மங்கள் சிங்கும் , திரிலோக் சிங்கும் மட்டுமே.
இருவரும் இன்று அமிர்தசரஸில் வாழ்ந்து வருகின்றனர். திருமணம் செய்து கொண்டு , புதிதாக குடும்பம் அமைத்து , குழந்தை குட்டிகளுடன் வாழ்கின்றனர். ஆனால் , அவர்கள் இருவரும் தனியாக இருக்க நேரிடும் சந்தர்ப்பங்களில் நிழல் படிந்த மௌனம் ஒன்று கவிந்து விடுகிறது. தனிமையில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை. கடந்த 50 ஆண்டுகளாக அந்த நாளின் குற்ற உணர்வுடன், எல்லோரையும் இழந்த பின்பு தங்கள் மட்டுமே வாழ்வதற்க்காகவும் குற்ற உணர்வு கொண்டு சுமக்க முடியாத மௌனத்துடன் – தங்கள் இருவருக்கும் இடையில் மரணம் ஒரு மௌனக் கத்தியாக, நிரந்தர நிகழ்காலமாகத் தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தபடி வாழ்கிறார்கள்.
வங்கதேசத்திலிருந்து ஒரு குரல் என்ற ஐந்தாவது கட்டுரையில் : பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் பற்றி பேசுகிறது. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் பங்களாதேஷில் இருந்த இந்துக்கள் முஸ்லிம்களால் வேட்டையாடப்பட்டதைப் பற்றிய விபரங்களுடன் அவர் “லஜ்ஜா” என்ற நாவல் எழுதியுள்ளார். அதற்காக முஸ்லீம் அடிப்படைவாத அமைப்பு அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. தான் எந்த மிரட்டலுக்கும் பயப்படப் போவதில்லை, தொடர்ந்து மத அடிப்படைவாதத்திற்கு எதிராக எழுதுவேன் என்ற கூறியுள்ள அந்த வீரப்பெண்மணி பாராட்டிற்கு உரியவர்தான்.
படிக்க :
நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா
நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா
இறுதிக் கட்டுரையில் : பிரிவினையின் போது இந்திய இரயில்வே துறை சரியான முறையில் இயங்கவில்லை என்ற குற்றசாட்டைப் பதிவு செய்திருக்கிறார்**. துரதிருஷ்டவசமாக இரயில்வேத் துறையைச் சேர்ந்த இந்து மற்றும் முஸ்லீம் ஊழியர்கள் உயிருக்கு அஞ்சி ரயிலை ஓட்ட மறுத்துவிட்டனர். இவ்விரு பகுதிக்குமிடையே ரயில் போக்குவரத்தை துரிதப்படுத்தியிருந்தால் பெருமளவு படுகொலைகளைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறார்.
ஆனாலும், தென்னிந்திய இரயில்வே தொழிலாளர் சங்கத் தோழர்கள் நெஞ்சுரத்துடன் முன்வந்தனர். சங்கத் தலைவர்கள் ஜே.பி. புருஷோத்தமன், என், கிருஷ்ணசாமி தலைமையில் தோழர்கள் திரண்டனர். இரத்தத் சிதறல்களுக்கும், பிணக் குவியல்களுக்கும் நடுவில் 150 ஊழியர்கள் ஐந்து மாத காலம் இரவு பகலாக லூதியானாவை மையமாகக் கொண்டு துணிவோடு தங்கள் பணியைச் செய்தனர். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷியும் , சங்கத் தலைவர் எம். கல்யாணசுந்தரமும் லூதியானவிற்கே சென்று பாராட்டியதையும் பதிவு செய்துள்ளார் ச. தமிழ்ச்செல்வன்.
அந்தப் பணியின் போது என். கிருஷ்ணசாமி, ஒரு இஸ்லாமிய தாயையும், அவரது மகளையும் உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றி பாகிஸ்தானிற்கு அனுப்பி உள்ளார். அந்த தாய், “ஐயா! உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை” என்றபோது “ஒன்றும் வேண்டாம். இந்தப் பெண்ணின் திருமணத்தின் போது அவளது திருமணப் பத்திரிக்கையை அனுப்பி வையுங்கள்” என்று கூறியிருக்கிறார் என். கிருஷ்ணசாமி .
பல ஆண்டுகளுக்கு பிறகு , உருது மொழியில் அச்சிடப்பட்ட அந்த கல்யாணப்பத்திரிக்கை அவர் கையில் கிடைத்த பொழுது மனம் நெகிழ்ந்திருக்கிறார், என். கிருஷ்ணசாமி . சமூகத்தில் ஒரு நல்ல மனிதனாக தான் வாழ்ந்ததற்கான திருப்தியை அந்த கல்யாணப் பத்திரிக்கை அவருக்குத் தந்திருக்கும்!
இந்திய வரலாற்றில், 1947-ம் ஆண்டு என்பது மக்களுக்கு துயரத்தைக் கொடுத்த ஒரு களங்கம் நிறைந்த ஆண்டாகவே இருக்கிறது.
இந்த நூலை வாசித்து முடித்ததும் எனக்கு இரண்டு விஷயங்கள் மிகத் தெளிவாக புரிந்தது. ஒன்று, இந்திய மக்கள் , அது இந்துவாகட்டும் அல்லது முஸ்லிமாகட்டும் உயிரைவிட மத நம்பிக்கைகளை பெரிதாக நம்புகிறார்கள். மற்றொன்று, இரண்டு மதத்தவர்களும் பெண்களை தங்களது உடைமைப் பொருளாகவே கருதி வாழ்கிறார்கள்.
இந்த எண்ணங்களே இந்தியாவில் அகமணத்தையும் , சாதீயத்தையும் இன்னும் தூக்கிப் பிடித்து வருகின்றன. ஆனாலும், மதத்தின் பிடியில் சிக்கிச் சுழலும் ஒரு சிலரையாவது இந்த நூல் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
பிரிவினையின் அவலத்தையும் மக்களின் துயரத்தையும் நம் உள்ளே கடத்தியிருப்பதோடு, மதவாதத்திற்கு எதிராக நம் சிந்தனையையும் வழிநடத்திக் கொண்டு செல்கிறார் தமிழ்ச்செல்வன். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
பின்குறிப்பு:
* இந்த ராணாவை பற்றிய உண்மையான வரலாற்றை அவரது சகோதரியின் மகள் ஊர்வசி புடடாலியா என்பவர் ” THE OTHER SIDE OF SILENCE ” என்ற நூலில் எழுதியுள்ளார். இந்நூல் கிழக்குப் பதிப்பக்கத்தின் மூலமாக “மௌனத்தின் அலறல்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
** மேற்கண்ட நூலில் (மௌனத்தின் அலறல்) இரயில்வேதுறை சிறப்பாக இயங்கியதாக ஊர்வசி புட்டாலியா குறிப்பிட்டுள்ளார்.
நூல் விமர்சனம் : சு. கருப்பையா, மதுரை.
நூல் : 1947
ஆசிரியர்: ச. தமிழ்ச்செல்வன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம், 7 ஆம் பதிப்பு2015
பக்கங்கள்: 32
விலை: 20
disclaimer