னியார் பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து கட்டணம் செலுத்த முடியாமல், கட்டண பாக்கியோடு வெளியேறும் ஏழை மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் “கட்டணம் பாக்கி” என்று முத்திரை பதித்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பேரிடர் பெரும்பாலான நடுத்தர, ஏழை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக அதிகரித்த வேலையிழப்பு, இம்மக்களின் வாழ்வில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
குறைவான சம்பளம் பெற்று வந்த பெரும்பாலான நடுத்தவர்க்கத்தினர், தனியார் பள்ளிகள் குறித்து ஏற்படுத்தப்பட்டுள்ள மாயைக்கு பலியாகி தங்களது பிள்ளைகளை அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் பாடம் பயிலச் செய்தனர். கொரோனா பெருந்தொற்று ஓராண்டுக்கும் மேலாக நிரந்தர வருவாயை இழக்கச் செய்ததையடுத்து, தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு ஈடுகொடுக்க முடியாமல், வேறு வழியின்றி தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கினர்.
படிக்க :
இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ !
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அண்ணா பல்கலை || CCCE
பெற்றோர்கள், கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமையில் தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையர்களுக்கான பாக்கிக் கட்டணத்தைக் கட்டமுடியாத சூழலில்தான் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றுகின்றனர். கல்விக் கட்டண பாக்கியைக் காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர், இக் கல்விக் கொள்ளையர்கள்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், இதை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றபிறகு, தனியார் பள்ளிகள் கட்டணம் கட்ட இயலாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து ஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு செல்லுபடியாகும் என்றும், கட்டணம் கட்டாததற்காக மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது. மீறி தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை ஒட்டி, அகில இந்திய மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கைத் தொடர்ந்தன. தாங்கள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நம்பியே பள்ளிக்கூடங்கள் இயங்குவதாலும், கல்விக் கட்டணம் கொடுக்காமல் பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்துவிட்டால், அவர்களிடமிருந்து அந்தத் தொகையை மீட்டுவதற்கு வேறெந்த வழியும் இல்லாமல் போய்விடும் என்று வாதிட்டன.
அதாவது அடிக்கும் கட்டணக் கொள்ளையை மிச்ச மீதியில்லாமல் வசூலிப்பதற்கான துருப்புச் சீட்டாக மாற்றுச் சான்றிதழை பயன்படுத்தி வந்ததாகவும், அதையும் மாணவர்களிடம் கொடுத்துவிட்டால், மிரட்டுவதற்கு தமது கையில் எதுவும் இல்லை என்பதை கிட்டத்தட்ட பச்சையாகவே நீதிமன்றத்தில் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறது.
இந்த வழக்கு இதற்கு முந்தைய வழக்கை ஆகஸ்ட் மாதம் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிடமே விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கல்விக் கட்டணம் செலுத்தாதவர்களின் மாற்றுச் சான்றிதழ்களில் கட்டணம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் பாக்கிக் கட்டணத்தை மாணவர்களின் பெற்றோர் செலுத்திய பிறகு வழக்கமான மாற்றுச் சான்றிதழை தனியார் பள்ளிகள் மீண்டும் வழங்கவேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத நிலையில்தான் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசுக் கட்டமைப்பு சீர்குலைந்து இருக்கிறது. இதனை பல்வேறு கமிட்டிகளின் ஆய்வுகளும் அவை அரசுக்கு வழங்கிய பரிந்துரைகளும் சுட்டிக் காட்டியுள்ளன.
அதிகபட்ச பள்ளிக் கட்டணத்தை அரசு நிர்ணயித்ததைத் தாண்டி எந்தெந்த வகையில் நூதனமாக மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பணத்தைக் கறக்கமுடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் கறந்துகொண்டிருக்கின்றன தனியார் கல்வி நிறுவனங்கள். இதனை அரசோ, நீதிமன்றங்களோ இதுவரை கண்டித்ததும் இல்லை. நடவடிக்கை எடுத்ததும் இல்லை.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், இத்தனை சதவீதத்திற்கு மேல் கேட்கக் கூடாது, பள்ளிக் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக மாணவர்களுக்குக் கல்வி மறுக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டாலும், அனைத்து இடங்களிலும் பெற்றோர்களை ஒட்டச் சுரண்டும் வேலையை பள்ளி நிறுவனங்கள் செய்தன என்பதை கடந்த காலங்களில் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
படிக்க :
அமெரிக்கா ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்த போது … || கேலிச் சித்திரங்கள்
மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்
பெற்றோர்கள் எப்பாடுபட்டாவது தனது குழந்தைகள் நல்ல கல்வியைக் கற்கவேண்டும், நல்ல நிலைக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் கடன் வாங்கி, நகைகளை அடகுவைத்து, வீட்டை விற்று என கடுமையாகச் செலவு செய்து பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றார்கள். அவ்வளவு முயற்சித்தும் கட்டணம் கட்டமுடியாத சூழலில்தான் தமது பிள்ளைகளை அரசுப் பள்ளிக் கூடங்களில் சேர்க்கிறார்கள். சரியான பதத்தில் சொல்வதெனில் ஒரு கையறுநிலையில் தான் இந்த முடிவுக்கு பெற்றோர்கள் வருகின்றனர்.
பெற்றோர்களின் இந்த அவலநிலையிலும் அவர்களைச் சுரண்டுவதற்காகத்தான் மாற்றுச் சான்றிதழில் கைவைக்கின்றன தனியார் பள்ளி நிறுவனங்கள். தற்போது உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு பெற்றோர்களின் இரத்தத்தை உறிஞ்சும் தனியார் பள்ளி நிறுவனங்களின் விருப்பத்தை மறைமுகமாக நிறைவேற்றிக் கொடுக்கிறது. கொள்ளைக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்களுக்கு, “இவர்கள் கட்டணம் செலுத்தாதவர்கள்” என நெற்றியில் பொறிப்பதற்கு இணையாக அவர்கள் மாற்றுச் சான்றிதழில் “கட்டணம் செலுத்தவில்லை” என முத்திரையிடச் செய்கிறது.
ஆதிக்கச்சாதி தெருக்களில் நுழையும்போது செருப்பு அணியாமல், கக்கத்தில் துண்டை வைத்துக் கொண்டு நடப்பதை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான அடையாளமாக ஆண்டைகள் நடைமுறைப்படுத்திய மனுநீதியை விஞ்சியிருக்கிறது, ஏழை மாணவர்களின் மாற்றுச்சான்றிதழுக்கு அடையாளமிடும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு.
அதோடு அந்த மாணவர்கள் பிற அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சேரும் வாய்ப்பையும் மாற்றுச் சான்றிதழில் “கட்டணம் கட்டவில்லை” என்று முத்திரையிடுவது தட்டிப் பறித்துவிடுகிறது. காசு இருப்பவனுக்கு மட்டுமே கல்வி என்ற நவீனத் தீண்டாமையை சட்டப்பூர்வமாக அனுமதித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு!
சரண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க