புத்தகச் சந்தை என்பதால் மீண்டும் ஒரு புத்தகத் தொடர் : வாசிப்பில் முதல் புத்தகம், ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள். ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு.
பிரபஞ்ச உருவாக்கம், உலகம் தோன்றியது, மனித இனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும், ஏலியன்கள் உண்மையா முதலிய அறிவியல் விஷயங்களை உங்களுக்கு நெருக்கமான ஒருவர் சிக்கலற்ற வார்த்தைகளில் சொன்னால் எப்படி இருக்கும்? அறிவியலே அலாதி என்றால் அதை எளிமையாகச் சொல்வது பேரலாதிதான். ஸ்டீபன் ஹாக்கிங் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்.
‘என்னை ஒரு சிறு பழக்கொட்டையின் ஓட்டுக்குள் அடைத்து வைத்தாலும், பிரபஞ்ச வெளியின் சக்கரவர்த்தியாகவே என்னை நான் கருதிக் கொள்ளுவேன்’ என்ற ஷேக்ஸ்பியரின் சொல்லாடலைக் கொண்டு மனிதனின் பண்பை விளக்கத் தொடங்குகிறார்.
படிக்க :
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM || இ.பா. சிந்தன்
‘ஒளிக்கற்றையின் மேலமர்ந்து பயணிக்கும் கனவை’க் கொண்ட ஐன்ஸ்டீனைக் கொண்டு காலத்தை விளக்குகிறார். ஹாக்கிங்தான் ஜாலி பேர்வழி என்றால் ஐன்ஸ்டீன் எப்படியானவர் தெரியுமா?
‘ஒளியைவிட வேகமாகப் பயணித்த
ஒய்யாரப் பெண்ணொருத்தி இருந்தாள்
ஓரிடத்திற்குப் புறப்பட்டாள் இன்று
ஒயிலாய் அங்குச் சென்றடைந்தாள் நேற்று’
எனக் காலப்பயணத்தை விளக்கக் கவிதை சொல்லி இருக்கிறார் ஐன்ஸ்டீன்.
மனித குலத்துக்கு பெரும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் இருக்கும் என்கிறார் ஹாக்கிங். செயற்கை நுண்ணறிவு (AI) பெரும் சவாலாக மனித குல எதிர்காலத்துக்கு இருக்கும் எனவும் கணிக்கிறார். செயற்கை நுண்ணறிவு என்றதும் டெர்மினேட்டர் பட அளவுக்கு யோசிக்க வேண்டாம். இப்போதே மனித உழைப்புக்கு பதிலாக automation-க்கு நிறுவனங்கள் நகர்ந்து நம் பொருளாதாரம் கேள்விக்குறி ஆவது ஒரு வகை செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம்தான்.
ஹைலைட்டாக கடவுளையும் காலத்தையும் (Time) வைத்து ஒரு விஷயம் சொல்கிறார். ‘பெருவெடிப்பிலிருந்துதான் (Big Bang) காலம் (Time) உருவானது. எனவே பெருவெடிப்புக்கு முன் எதுவும் இருந்திருக்காது’ என சொல்லிவிட்டு கடவுள் பற்றிய கேள்விக்கு நம்மூர் சுஜாதா பாணியில் ஒரு கூட்டு வைக்கிறார் மனுஷன்:
“பெருவெடிப்புக்கு முன் கடவுளுக்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில் அப்போது பிரபஞ்சத்தை உருவாக்கக் கடவுளுக்கு நேரம் (Time) இருந்திருக்காது!”
சரி, இன்றைய தலைமுறை பற்றி என்ன சொல்கிறார் ஹாக்கிங்?
மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு தகவல்தான் அடிப்படை. குகை ஓவியம் தொடங்கி, மொழி உருவாகி, எழுத்து ஆகி, ஏடாகி, இலக்கியமாகி, வரலாறாகிதான் இன்று வரை மொத்த மனித குலத்தையும் கட்டி கட்டுக்கோப்பாக சமூகம் ஆக்கி வைத்திருக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தகவல், அதன் முக்கியத்துவத்தை இழந்தால் மனிதப் பரிணாமத்துக்கு என்ன ஆகும்?
படிக்க :
மனித குல சேவையில் கியூப மருத்துவ அறிவியல் !
கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
அதுதான் தற்போதைய தலைமுறையில் நேர்வதாக சொல்கிறார் ஹாக்கிங். தொழில்நுட்ப வளர்ச்சியாலும் சமூக தளங்கள் மற்றும் லாபவெறியாலும் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு இன்று தகவல் நிறைந்து கிடக்கிறது. சொல்லப் போனால் மொத்த மனித இனமும் இதுவரை எழுதியவற்றைத் தாண்டி இந்த ஒரு தலைமுறை தகவல்களை எழுதியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் அவசியம் பாராமல் நுகரும் இன்றையத் தலைமுறையினனுக்கு தகவலின் முக்கியத்துவம் குறைந்து படைப்பாற்றல் தக்கையாகி மனிதப் பரிணாம உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தப் போக்கு தலைகீழாய்த் திரும்பிவிடுமோ என்ற ஐயத்தை உருவாக்குகிறார் ஹாக்கிங். நமக்கும் இருக்கும் அதே ஐயம்.
என்னவொரு சிக்கல் என்றால், நாம் ரசிக்கும் விஞ்ஞானி என்றாலும் சோவியத்தை காரணமின்றி விமர்சிக்கும்போதுதான் கொண்டை படாரென தெரிந்து விடுகிறது. மேலும் interstellar-ல் நாசூக்காக சொல்லப்பட்ட ‘பூமியை கைவிட்டு வேறுலகுக்கு சென்று தப்பிக்க வேண்டும்’ என்கிற விஷயத்தை, பட்டவர்த்தனமாக விண்வெளியை colonize செய்ய வேண்டுமென காலனியாதிக்கத்துக்கு நியாயம் வேறு கற்பிக்கிறார்.
மேற்குறிப்பிட்ட conditions applyகளுடன் படிக்க வேண்டிய புத்தகம் இது. கருந்துளைகளும் குவாண்டம்களும் ஏலியன்களும் காலமும் ஆடும் விஞ்ஞானக் களியாட்டத்தை எளிமையாக விளக்கும் நூல். படித்து விடுங்கள்.
வெளியீடு : மஞ்சுள் பதிப்பகம்
விலை : ரூ. 325
முகநூலில் : ராஜசங்கீதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க