தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய் ! – சென்னை ஆர்ப்பாட்டம் !

மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் மார்ச் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“தில்லை இருப்பது தமிழ்நாடா? அல்லது அதற்குள் ஒரு தனிநாடா?
தில்லை  நடராஜர்  கோயிலை  இந்து  அறநிலையத் துறையின்  கட்டுபாட்டில் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்று!
இலட்சுமி  என்ற  பெண்  சிவபக்தையை  ஜாதி  சொல்லி இழிபடுத்திய தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்! சிறையில் அடை!”
என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 11.03.2022 அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின்  தோழர்கள்  கலந்து  கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
படிக்க :
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தோழர் அமிர்தா தனது தலைமை உரையில், “தில்லை சிதம்பரம் கோயில் மக்கள் சொத்து, ஆனால் தீட்சத கும்பல் ஆக்கிரமித்து கொண்டு அட்டூழியம் செய்து வருகிறது. சிதம்பரத்தில் உள்ள போலீசு நிலையத்தில் பல வழக்குகள் தீட்சத கும்பல் மீது இருக்கிறது. சைக்கிள் திருடிய தீட்சதர், கொலை வழக்கில் தீட்சதர், தட்டில் விழும் காசுக்கு சண்டை போட்டு கொண்டு அடித்தடி என ரவுடி கும்பலாக இவர்கள் இருக்கின்றனர். பக்தர்களை அடிப்பது, சமீபத்தில் இலட்சுமி என்ற சிவபக்தை சிற்றம்பல மேடையில் ஏறி வழிப்பட சென்றபோது ‘பரச்சி’ என்று சொல்லி இழுவுப்படுத்தி அடிக்க முற்பட்டனர். இதை இணையத்தில் வீடியோவாக அனைவரும் பார்த்தோம். ஆனால், இலட்சுமி மீது சொம்பை திருடினார் என பொய் வழக்கு பதிந்துள்ளனர் திட்சதர்கள். இவர்களின் யோக்கியதை இது தான்.
3000 பேர் கைலாயத்திலிருந்து வந்தோம் அதில் ஒருவரை காணவில்லை, தேடினால் அவர்தான் சிவன் அதனால் சிவன் வகையறா நாங்கள் என ஒரு புருடா கதையை சொல்லிதான் இவர்கள் இந்த கோயிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். நந்தன் நுழைந்த வாயிலை இடித்துதள்ள வேண்டிய கடமை முற்போக்காளர்களாகிய நம் தோள்களின்மேல் உள்ளது. தமிழக அரசு, சிதம்பரம் கோயிலை இந்துஅறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தனது உரையில், “இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று ஹிஜாப் பிரச்சினை ; மற்றொன்று சிதம்பரம் தில்லை கோயில் பிரச்சினை.
தமிழ்நாட்டில் மட்டும்தான் தேர்தலில் ஈடுபடாத இயக்கங்கள் ஒரு முற்போக்கு செயல்திட்டத்தை முன்வைத்து மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இப்படி பார்க்க முடியாது. முற்போக்கு சிந்தனையுள்ள கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய இயக்கங்கள் இணைந்து இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது என்பதே தீட்சதர்களின் வாதம். இதை உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது என்பதே அவர்களின் வலிமை. தமிழில் வழிபடும் உரிமையை தடுக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தீர்ப்பு கொடுத்தார். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு சென்று சு.சாமி போன்றோர் தீட்சத கும்பலுக்கு ஆதரவான தீர்ப்பை வாங்கியுள்ளனர். இது தொடர்ச்சியான நீண்ட நெடிய போராட்டம். இன்றும் தொடர்கிறது.
இன்று தில்லையிலே பல அமைப்புகள் இதற்காக போராடுகிறார்கள். ஆனால் ஊடகங்கள் எதுவும் வெளியிடுவதில்லை. சமூக வலைதலங்களில்தான் செய்திகள் வருகிறது. மேலும் தில்லையில் தீண்டாமையை கடைப்பிடித்து சிவபக்தை இலட்சுமியை அடித்துள்ளனர். அதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தீட்சதர்கள்மீது வழக்கு போடப்பட்டுள்ளது. ஏன் அவர்களை கைது செய்யவில்லை? காரணம் என்ன? உடனடியாக அவர்களை கைதுசெய்ய வேண்டும்” என்று பேசினார். மேலும், தில்லை கோயில் வரலாற்றை அம்பலப்படுத்தி பேசினார். தீட்சதர்களின் வரலாற்று புளுகுகளை அம்பலப்படுத்தி நீண்ட உரையாற்றினார்.
தமிழ்த் தேச மக்கள் முன்னணியை சேர்ந்த தோழர் செந்தில் அவர்கள் தனது உரையில், “எந்த ஆடை அணிய வேண்டும்? ஆடை அணிவது அவரவர் சொந்த உரிமை என்ற கருத்தைக்  கொண்டவர்கள் நாங்கள் அதனால்தான்  நாங்கள்  ஹிஜாப்  அணிவதற்கு ஆதரவாக நிற்கின்றோம். தில்லையிலே கனகசபையில் யார் ஏறி பாட வேண்டும் என்பதில்தான் தில்லை பிரச்சினை எழுகிறது. இந்திய அரசியலைப்பின் சட்டப்பிரிவு 25, 26 என்பது சாதியைப் பாதுகாக்கிறது. அதனால்தான் அதை நாங்கள் எறிக்கிறோம் என்று பெரியார் சிறை செல்லும் போராட்டத்தை நடத்தினார். கருவறை முதல் கல்லறை வரை எங்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராடுவதை கொள்கையாகக் கொண்டவர்கள் நாங்கள். சாதியை சொல்லி இலட்சுமி பாட அனுமதிக்காததால்  தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வோம்.” என்று பேசினார்.
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் அவர்கள் தனது உறையில், “ஹிஜாப் அணியலாமா என்பது அந்தப் பெண்ணின் உரிமை. முஸ்லீம் பெண்களின் கல்வியை தடை செய்யவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் ஹிஜாப் அணிய கூடாது என்று தடை விதிக்கிறது. பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். இந்த ஆட்சியில் தீட்சிதர்களுக்கு முடிவு கட்டவில்லையென்றால் எந்த ஆட்சியில் முடிவு கட்ட முடியும்” என்று பேசினார்.
இ.க.கட்சி (மா-லெ) ரெட் ஸ்டார், அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர், தோழர் கார்க்கி வேலன் தனது உரையில், “தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதும் வணிக சிலிண்டரின் விலை ரூ.109 விலை உயர்த்தி உள்ளது ஒன்றிய அரசு. வாக்களித்த மக்களுக்கு கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பரிசாக வழங்கப்படும் சூழலில்தான் உள்ளோம். நாம் ஓட்டுபோட்டுதான் கட்சிகள் ஜெயிக்கிறது என நினைத்துக் கொள்கிறோம்.
முதலாளிகளுக்கு  அடிவருடிகளாக யார் வேலை செய்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். முதலாளிகளின் அனைத்து திட்டங்களையும் பாஜக தங்குதடையின்றி அமல்படுத்தும் என்பதற்காகவே அவர்களுக்கு ஆட்சி வழங்கப்படுகிறது. தஞ்சாவூரில் லாவண்யா மரணத்தை மதக் கலவரமாக்க துடிக்கிறது பாஜக அரசு. தில்லை கோயில் 2008-ல் தீட்சிதர்களுக்கு சொந்தம் இல்லை என்று தீர்ப்பு வந்தது. அப்போது அங்கு உண்டியல் வைக்கப்பட்டபோது வருடத்திற்கு ஒன்றரை கோடி வருமானம் வந்தது.
பாஜகவிற்கும் பார்ப்பனியத்துக்கும் எதிராக தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் எதிர்ப்பு வரும். நீண்ட நெடிய மக்கள் சொத்து தனி நபர்களால் சூரையாடப்படுவதை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் வெற்றி காண்போம்” என்று பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் சீராளன் அவர்கள் தனது உரையில், “பாபர் மசூதியை இடித்து பார்ப்பன கும்பல் தனது சொந்தம் மாற்றிக் கொண்டது. ஒரு காலத்தில் காளிக்கு சொந்தமானது நடராஜர் கோயில். நடனப் போட்டியில் காளியை தோற்கடித்து நடராஜன் வலதுகாலைத் தூக்கி காட்டியதால் காளி தலை குனிந்து தனது இடத்தை மாற்றிக் கொண்டு போய்விட்டார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் விஷ்ணுவின் சிலையை அகற்றி நடராஜனை மட்டும் நிறுவினர்.
சட்டப்பிரிவு 26-ஐ வைத்துக்கொண்டு நாங்கள் தனித்த பிரிவினர் என்று கூறி தில்லையை தங்கள் சொத்தாக வைத்துக் கொண்டுள்ளனர் தீட்சதர்கள். சுப்ரமணியசுவாமி தில்லைக்கு யாரும் சொந்தம் கொண்டாடவரவில்லை இது தீட்சதர்கள் சொத்து என்கிறார். 8 கோடி மக்கள் கேட்கிறோம் இது எங்கள் சொத்து. நாங்கள் உரிமை கோருகிறோம். தில்லை தமிழகத்தின் 8 கோடி மக்களுக்கான சொத்து எனவே தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்று பேசினார்.
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தோழர் மகிழன் தில்லை கோயில் தமிழர்களின் சொத்து என்பதை வலியுறுத்தி பேசினார். மக்கள் ஜனநாயக  இளைஞர் கழகத்தின் தோழர் சேல் முருகன் அவர்கள் தனது உரையில், “ஹிஜாப் அணியத் தடை தில்லையில் தமிழுக்கு தடை. ஒரு இடத்தில் மதத்தைப் பாதுகாக்கிறான்; மற்றொரு இடத்தில் மதத்தின் உரிமையை மறுக்கிறான். ஹிஜாப் வந்த பிறகுதான் முஸ்லீம் பெண்கள் கல்வி கற்க வருவதாக முதலாளித்துவ பத்திரிகைகளே கூறுகின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி இருக்கும்போது மக்களை தூண்டி மோதிக்கொள்ள செய்வதற்காகதான் ஹிஜாப் தடை என்ற பிரச்சினையை கிளப்புகிறார்கள்.
தீட்சதர்களுடைய சொத்து அவருடைய பயன்பாட்டிற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம்போட்டு பாதுகாக்கப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி, கல்லூரிகள் வைத்து கார்ப்பரேட் இணையாக சம்பாதிக்கிறார்கள்.  அவர்கள் ஒன்றும் சேவைத்துறை நடத்தவில்லை. அரசமைப்புச் சட்டம் 25, 26 சிறுபான்மை மக்கள் உரிமைகளை முடக்குகிறது. ஹிஜாப்பில் இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சொன்ன நீதிமன்றம்தான் தில்லையில் தீட்சிதர்களை பாதுகாக்கிறது. ஆன்மீகத்தில் மொழி உரிமைக் காலங்காலமாக மறுக்கப்பட்டு வருகிறது. தமிழ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம்தான் ஆதிக்கத்தில் உள்ளது. இதனை எதிர்த்துப் போராடி தமிழை அதிகாரத்திற்கு கொண்டுவர வேண்டும்” என்று பேசினார்.
படிக்க :
கர்நாடகாவில் ஹிஜாப் தடை – தில்லை கோவிலில் தமிழுக்கு தடை || தர்மபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமியருக்கு ஹிஜாப் தடை! தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை! – தருமபுரி, கோவை, மதுரையில் ஆர்ப்பட்டம்!
மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் தனது உரையில், “தில்லை தீட்சிதர்களின் சொத்து என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று 2008-ல் உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. மன்னராட்சி காலத்தில் மக்களுடைய சொத்திலிருந்து கட்டப்பட்டதே தில்லைக் கோயில். இது அரசிற்கு சொந்தம்.  ஆர்.எஸ்.எஸ் – பாஜக கேட்கலாம் இந்து கோயில்கள் மட்டுமே ஏன் அரசுடமையாக்க வேண்டும் என்று? சர்ச், மசூதி போன்றவைகள் அவர்களே சொந்த செலவில் கட்டியது.
மன்னர் ஆட்சி முடிந்துவிட்டது. அந்த அடிப்படையில் அரசாங்கம்தான் இதனை நிர்வகிக்க வேண்டும். சிற்றம்பல மேடையில் பாடலாம் என சட்டம் போட்ட பின்பும் சிவனடியார் ஆறுமுகசாமி அங்கு பாடுவதற்கு தீட்சிதர்கள் தடையாக இருந்தனர். சட்டத்தை அமல்படுத்த முடியாத நிலையே பார்ப்பனர்களுக்கு உள்ளது. வக்கீல், வழக்கு தொடுத்தவர்கள், உழைக்கும் மக்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும்; ஆனால், பார்ப்பனர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு கட்டுப்படமாட்டார்கள். அரசு கையில் எடுத்து நடத்த சட்டமியற்ற வேண்டும். அதனை மக்கள் நடைமுறைப்படுத்த நாம் துணை நிற்போம்” என்று பேசினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
9176801656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க