வேலையில்லாத் திண்டாட்டம், தாளாத கடன்சுமைகளால் பெருகிவரும் தற்கொலைகள் :
பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !
ந்தியாவிலுள்ள இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்காமல், சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோராக வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழக பிரிவு தலைவர் கே.குமாரசாமி. இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படுவதெல்லாம் முதன்முறை” என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. இந்துமதம் ஆபத்திலிருப்பதாக பெரும்பான்மை மக்களை மதவெறியூட்டுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வது, கலவரங்களை நடத்துவது, அரசு நிறுவனங்களில் சங்கிகளை நுழைப்பது – சுருக்கமாக, நாட்டை இந்துராஷ்டிரமாக கட்டமைப்பதைத் தவிர வெறெதையும் அறிய விரும்பாதது ஆர்.எஸ்.எஸ். இப்படிப்பட்ட ஒரு பாசிச அமைப்பு வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து கவலைப்படுது ஏன்?
ஏனென்றால், வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இன்று நம் நாட்டில் ஒரு கடுமையான பிரச்சினையாக முற்றி நிற்கிறது. வறுமை, உத்தரவாதமற்ற வாழ்நிலை, தாளாத கடன்சுமை ஆகியவற்றால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது. எனவே ஆர்.எஸ்.எஸ்.கூட இதுகுறித்து கருத்துசொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
000
“வறுமை காரணமாக அண்ணன் தங்கை தற்கொலை, பணியைவிட்டு நீக்கியதால் புகைப்படக் கலைஞர் தற்கொலை, கடன் தொல்லை அவதியால் விவசாயி பலி, வேலையின்மையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு” என தற்கொலைகளெல்லாம் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.
படிக்க :
♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !
♦ பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு !
உத்தரப் பிரதேசத்தில் ஷூ கடை வைத்திருந்தவர் 40 வயதான ராஜீவ் தோமர். மோடி அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி. வரிவசூலுக்கு பிறகு தனது தொழிலில் கடும் நெருக்கடியைச் சந்தித்தவர். 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, தொழில்நசிவை மேலும் தீவிரப்படுத்தி அவரை கடனாளியாக்கிவிட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், தனது தொழில் நட்டம் பற்றி முகநூல் நேரலையில் பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த அவரது மனைவி தடுக்க முயன்றும் முடியாததால், அவரும் விஷம் குடித்துவிடுகிறார். இத்தற்கொலை முயற்சியில் அவரது மனைவி இறந்துவிட்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்குமுன் முகநூல் நேரலையில் அழுதுகொண்டே, அவர் இவ்வாறு பேசினார்: “நான் பேசுவதற்கு சுதந்திரம் இருக்கிறது என நினைக்கிறேன். நான் எனது கடனை நிச்சயம் அடைப்பேன். நான் செத்தாலும் அடைப்பேன். ஆனால் என்னுடைய இந்த காணொலியை முடிந்த அளவு எல்லோரும் பகிரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நான் தேசவிரோதி அல்ல. மோடி ஜியிடம் நானொன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சிறுவணிகர்கள், விவசாயிகளின் நலன்விரும்பி அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள்.”
“ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்” என்பதுபோல, இதுவொரு தனித்த நிகழ்வல்ல. 2018 முதல் 2020-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் வேலையின்மை, கடன் மற்றும் வியாபார நெருக்கடி ஆகிய காரணங்களால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 25,000 ஆகும். பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சரே தெரிவித்த புள்ளிவிவரம் இது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2018 – 2020 ஆண்டுகளுக்கு இடையில், வேலையின்மை காரணமாக 9,140 பேர், கடன் அல்லது வியாபார நஷ்டம் காரணமாக 16,091 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2020-ஆம் ஆண்டில் மட்டும் அதிக அளவிலான தற்கொலைகள் நடந்துள்ளது. அந்த ஆண்டில்தான் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்காலத்தில் வேலையின்மை அல்லது வேலையிழந்த காரணத்தால் 3,548 பேரும் கடன் தொல்லையால் 5,213 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
000
மோடி அரசு 2016-ஆம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, அதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரிவசூல் முறை ஆகியவை பலரை சிறு வியாபாரத்தை விட்டே துரத்தியது. இனி வாழ்க்கையை எப்படி ஓட்டுவது, கடனை எப்படி கட்டுவது என்ற பயத்தால் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இக்காலக்கட்டத்தில் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் 2000 – 2010க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில், 2018-ஆம் ஆண்டில் (ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால்) வேலையிழப்பு 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இப்பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் கொரோனா ஊரடங்கால்தான் வேலையின்மை அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டது; அனைத்தும் ‘சுபிட்சமாகிவிட்டது’ என கதைக்கிறார்கள் பா.ஜ.க. ஆதரவாளர்கள்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் உண்மையை போட்டுடைத்த அதேநேரத்தில், “நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்பதே கிடையாது; வேலையில்லாமல் இருப்பதெல்லாம் காங்கிரஸ் தலைமைதான்” என்று நக்கலடிக்கிறார் கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா.
2020-ஆம் ஆண்டுக்கு முன்பே ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடைந்துவருகிறது. அசோக் லேலாண்ட், டி.வி.எஸ். உள்ளிட்டு பல ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்தது. நான்கு சக்கர வாகனங்கள் விற்காமல் தேங்கியிருந்த நிலையில், கார் கம்பெனிகளுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துவந்த பல சிறு நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன; தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள், கட்டாய விடுப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை அமலாகின. ஐ.டி. துறை தொழிலாளர்களுக்கும் இதேநிலைதான். பார்லே ஜி பிஸ்கட் கம்பெனி தன்னுடைய ஊழியர்களில் 10,000 பேரை வேலையைவிட்டு நீக்கியது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பது 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக 2017-18 ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office) அறிக்கை கூறுகிறது. ஆக, ஏற்கெனவே இருந்த இந்த நெருக்கடிகளை கொரோனா ஊரடங்கு தீவிரப்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
000
வேலைக்காக காத்திருக்காமல் சுயதொழில் தொடங்கி பிழைத்துக் கொள்ளச் சொல்கிறது ஆர்.எஸ்.எஸ். இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாய்ச்சவடாலடித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதிகாரத்திற்கு வந்தபின்பு “பகோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அதைத்தான் ஆர்.எஸ்.எஸ். வேறு வார்த்தையில் சொல்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் விலை திடீரென கடுமையாக உயரத்தொடங்கியது. அப்போது இதுபற்றி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ “நாங்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை” என நடாளுமன்றத்திலேயே பார்ப்பனத் திமிரோடு பேசினார். பகோடா விற்பதற்குகூட வெங்காயம் வாங்க வேண்டுமே!
இதேபோலத்தான் சமீபத்தில், பெட்ரோல்-டீசல் விலையுயர்வு விவாதப் பொருளானபோது “இதையெல்லாம் பார்த்துக் கொள்ளவா மோடி பிரதமரானர்?” என்று கேட்கிறார் ஒரு பா.ஜ.க. எம்.பி. அப்போது யாருக்காகத்தான் மோடி பிரதமனார்? இதற்கான பதிலை “ஹுருன் இந்தியா” என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியல் கொடுக்கிறது.
படிக்க :
♦ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
♦ வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
அந்த அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு மட்டும் 1830 சதவிகிதம் அதிகரித்துள்ளது; அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது; கடந்த ஆண்டில் (2021) மட்டும் கௌதம் அதானி 4,900 கோடி அமெரிக்க டாலர் சொத்து சேர்த்துள்ளார்; அந்த ஆண்டில், உலகின் முதல் மூன்று பணக்காரர்கள் சேர்த்த சொத்துக்களைவிட இது அதிகமாகும் என்று அந்த அறிக்கையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்காகத்தான் மோடி இரவும் பகலும் உழைத்தார்/உழைக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் மறுவாழ்வுக்காக எந்த திட்டங்களையும் அறிவிக்காத மோடி அரசு, ‘ஆத்மநிர்பர்’ என்ற பெயரில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது பணமயமாக்கல், உள்கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் பொதுத்துறைகளை தாரைவார்த்து வருகிறது. இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் தொப்பை பருத்துக் கொண்டே செல்வதற்கான காரணம்.
வேலைவாய்ப்பின்மை, வறுமை, கடன்சுமை ஆகியவற்றால் கோடிக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகிறார்களே அதற்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் அசுர வளர்சிக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.
நமது வரிப்பணம்தான் முதலாளிகளுக்கு மூலதனக் கடன்களாகவும் வரிச்சலுகைகளாகவும் கொட்டப்படுகிறது. நமது வியர்வையில் செழித்த பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கித்தான் அவர்களது மூலதனக் கட்டமைப்பு விரிகிறது. அரசு என்ற பெயரில் இதற்கெல்லாம் ‘ஏற்பாடு’ செய்துகொடுப்பது மோடி ஆட்சிதான். இந்த பாசிசப் பேயாட்சியை தூக்கியெறியாமல் இந்த துயரத்திற்கெல்லாம் விடிவில்லை.
புதிய ஜனநாயகம்
வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க