5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!

பிஎஸ்என்எல் புறக்கணிக்கப்பட்டால் 5ஜி போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் மொபைல் சேவைகள் என்பது மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.

ந்தியா முழுவதும் பெரும் பேசு பொருளான 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை ஏழு நாட்களாக இணைய வழியில் நடந்து முடிந்து விட்டது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மட்டும் இந்த ஏலத்தில் பங்கெடுத்துக் கொண்டன.

இந்த 5 ஜி அலைக்கற்றை ரூ.4.30 லட்சம் கோடி வரை ஏலம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 40 சுற்றுகள் நடந்தும் இந்த 5ஜி அலைக்கற்றை வெறும் ரூ.1,50,173 கோடி என்ற அடிமாட்டு விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 5ஜி ஏலம் எதிர்பார்க்கப்பட்ட விலையை விட தாண்டி விட்டது என்றும், 3 ஜி ஏலத்தை விட மூன்று மடங்கு அதிகம் 4ஜி ஏலத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்று மழுப்பிக் கொண்டிருக்கிறார் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைசவ். 5 ஜி அலைக்கற்றை என்பது 4ஜியை விட பத்து மடங்கு வேகமானது என்று அத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த அதிவேக தொழில்நுட்பத்தைத் தான் தனது எஜமான்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றிருக்கிறார் மோடி.

மேலும், அதானி நிறுவனம் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த ஏலத்தில் பங்கெடுத்ததாகவும், வாடிக்கையாளர் சேவைக்காக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. பிஎஸ்என்எல் நிறுவனம் ஒதுக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்னர் பிஎஸ்என்எல் நசுக்கப்பட்ட வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டியுள்ளது.

1991களில் ‘புதிய தாராளமயமாக்கல்’ என்ற கொள்கை இந்தியாவில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1995இல் ‘தேசிய தொலைத்தொடர்பு கொள்கை (NTP)’ உருவாக்கப்பட்டது. அரசு வழங்கிக் கொண்டிருந்த தொலைதொடர்பு சேவையை பிடுங்கி தனியாரிடம் கொடுப்பதே இதன் உன்னதமான நோக்கம். ஆனால், ‘தொலைபேசி இணைப்பை மலிவு விலையில், உலகத் தரத்தில் கொடுப்பதே’ இதன் நோக்கம் என்று கதையளக்கப்பட்டது.


படிக்க: கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!


இந்தியாவில் மொபைல் சேவைகளின் தொடக்க காலம் அது. மொபைல் சேவைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அரசு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மொபைல் சேவை வழங்க அனுமதிக்கப்படவில்லை. தனியார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் வரை பிஎஸ்என்எல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. கிட்டத்தட்ட கடுமையான போராட்டத்திற்கு பின்னரே 2002-ல் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவைக்குள் அடியெடுத்து வைத்தது. இவ்வளவு நெருக்கடிக்குப் பிறகும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் தொடர் உழைப்பினால் பத்து பதினைந்து ஆண்டுகளிலே அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியது. ஆனால், 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பிஎஸ்என்எல்-லின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டது.

2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 3ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடுவதற்கு முன்பாகவே 3ஜி அலைக்கற்றையை ஒதுக்கியது காங்கிரஸ் அரசு. பின்பு, யார் அதிக விலைக்கு ஏலம் எடுக்கிறார்களோ அத்தொகையை கணக்கு செய்து பிஎஸ்என்எல் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. மேலும் WiMax தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான வயர்லேன் மற்றும் அதிவேக இன்டர்நெட் வசதிக்கான அலைகற்றைக்கும் மிக அதிக தொகை செலுத்த வேண்டியிருந்தது. இதனால் ரூ.17,000 – ரூ.18,000 கோடி வரை அந்நிறுவனத்தின் கையிருப்பு காலியானது.

இதனையடுத்து, 4ஜி அலைக்கற்றையை 2010ம் ஆண்டு ஏலம் எடுத்து இரண்டே ஆண்டுகளில் வாடிக்கையாளருக்கு சேவையை வழங்கிவிட்டது ஏர்டெல் நிறுவனம். 2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மோடியின் விளம்பரத்துடன் 4 ஜி சேவையை வழங்கியது. ஆனால் 12 வருடங்களாகியும் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்க அரசால் தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பிஎஸ்என்எல்-ஐ புத்தாக்கம் செய்யப் போவதாக மோடி அரசு 2019 ஆம் ஆண்டில் அறிவித்தது. இதற்காக 70,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தில் விருப்பு ஓய்வு, 4ஜி சேவை உள்ளிட்டவை இதில் அடங்கியிருந்தது‌. ஆனால் இத்திட்டம் அமல்படுத்துவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே சரியான தேதியில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்காமலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 3-4 மாதங்களாக ஊதியம் வழங்காமலும் மோடி அரசு இழுத்தடித்தது. இது போன்ற நெருக்கடியால் 50% பேர் அதாவது 78,569 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தை நாடினார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் கிடைத்தாலும் அதற்கான உபகரணங்களை வாங்குவதற்கு மோடி அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதற்கு அரசு வைத்த வாதம், “ஒரு பொதுத்துறை நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து உபகரணங்களை வாங்குவதென்பது தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகும்” என்றும் “நம் நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றும் அத்திட்டத்தை ரத்து செய்தது. ஆனால் இந்த வாதம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது; அவர்கள் மட்டும் 4ஜி உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். மேலும் இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இதுபோன்ற உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவிலேயே இல்லை. பிஎஸ்என்எல்-க்கு தயாரித்துக் கொடுப்பதற்காக தற்போது டிசிஎஸ் (TCS) நிறுவனம் இதற்கான சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி முடிந்து 4G உபகரணங்கள் பிஎஸ்என்எல்-ன் கைக்குக் கிடைப்பதற்குள் மற்ற நிறுவனங்கள் 5G சேவையை தொடங்கி விடுவார்கள்.


படிக்க: பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !


பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காகவே மோடி அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் BSNL மற்றும் MTNL-க்கு சொந்தமான 14,917 மொபைல் டவர்கள் ஆப்டிக் பைபர்கள் ஆகியவற்றை வெறும் ரூ.40,000 கோடிக்கு விற்கப்பட்டது. விற்கப்பட்ட டவர்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளால் குறித்துக் கொடுக்கப்பட்டவை. இனி இவற்றைப் பயன்படுத்துவதற்கு பிஸ்என்எல் வாடகை செலுத்த வேண்டும். இதுவே தேசிய பணமாக்கல் திட்டத்தின் மகத்துவம்!

கார்ப்பரேட்டுகள் லாபம் கொழிப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களை முடக்குவதில் காங்கிரஸ் பாஜக இடையே எந்தவித பாகுபாடுமில்லை‌. ஆனால், தன் அதானி-அம்பானி எஜமானர்களுக்காக இதை அதிதீவிரமாக செய்து வருகிறார் மோடி. 5ஜி அலைக்கற்றையை வழங்குவதன் மூலம் நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்று மோடி அரசு பீற்றீக் கொண்டிருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையிலிருந்து வெளியேற்றப்பட்டால் உழைக்கும் மக்களுக்கு பெருமளவு பாதிப்பு உண்டாகும். முதலில் தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். கார்ப்பரேட்களின் லாப வெறிக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் கடிவாளம் போட்டு வைத்திருக்கிறது. ஏனென்றால், 2021 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்,வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் 20-25% டேட்டா பேக்கின் விலையை உயர்த்தியது. ஆனால் பிஎஸ்என்எல் உயர்த்தவில்லை. மேலும் பிஎஸ்என்எல் புறக்கணிக்கப்பட்டால் 5ஜி போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் மொபைல் சேவைகள் என்பது மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மலை கிராமங்களிலும், குக் கிராமங்களிலும், தனியார் முதலாளிகள் லாபம் ஈட்ட முடியாத இடங்களிலும் இன்றுவரை மொபைல் சேவையை வழங்கி வருவது பிஎஸ்என்எல் மட்டுமே.


ஹைதர்