சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!

சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் எம்.மேட்டுப்பட்டியிலிருந்து, திருச்சி மாவட்டம் முசிறி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று தமிழக நகர்ப்புற வளார்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார். இச்சாலையானது, குறுகலானதும், வளைவுகளையும், வாய்க்கால்களையும் கொண்டது என்பதால், இச்சாலையில் அதிக விபத்துகள் நடக்கிறது. எனவே இச்சாலையை நான்கு வழிச்சாலை மாற்றுவது அவசியமாக இருக்கிறது என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாமக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, இவ்விரிவாக்கப்பணி நடைபெறுகிற மேட்டுப்பட்டி முதல் முசிறி வரையில் சாலையின் இருபுறங்களிலும், குறுக்கும் நெடுக்குமாக வாய்க்கால்கள், ஏரிகள் இருக்கின்றன. தற்பொழுது நடைபெறுகிற இந்த விரிவாக்கப்பணியில், சாலையின் ஒரங்களில் உள்ள பழமையான மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன, போடப்படுகிற சாலையும், இருபுறங்களிலும் உள்ள வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்துதான் போடப்படுகின்றன. இதனால் இந்த வாய்க்கால்களும், ஏரிகளும் நீர்வழிப்பாதைகளும் நிரந்தரமாக அழிக்கப்படும்.

படிக்க : NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ஏற்கனவே, இப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களும் பத்தாண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து உவர்நீராக மாறியிருக்கிறது. இந்த அபாயகரமான சூழலில்,  வாய்க்கால்கள், ஏரிகளை அழித்து நான்கு வழிச்சாலையாக்குவதன் மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். குடிநீருக்காகவும் அலைய நேரிடும். விவசாயத்திலிருந்து விவசாயிகள் வெளியேறக் கூடிய சூழலில் குற்றுயிரும், குலையுருமாக நடக்கிற விவசாயத்திற்கும் பேராபத்தாகவே இருக்கும்.

2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி,  தமிழகத்தில் உள்ள பாசனக் கட்டமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் 12 சதவீத தமிழக விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறுகின்றனர். எனவே, நீர்வழிப்பாதைகளை அழிப்பதானது விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதை தீவிரப்படுத்தும்.

இந்த சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது. எதேச்சதிகார முடியாட்சிக் காலத்தில், விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனக் கட்டமைப்பை உருவாக்கித்தராமல் விவசாயிகளை வரி மூலம் கசக்கிப் பிழிய முடியாது என்று உணர்ந்திருந்தார்கள் அரசர்கள்.

அதனால்தான் பொதுமராமத்து செய்வது நிலவுடைமை சமூகத்தில் அரசின்/அரசனின் கடமையாக  இருந்தது. ஆனால், இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பும், அதன் ஆட்சியாளர்களும் விவசாயத்திற்கு அத்தியாவசியமான மராமத்து பணிகளை செய்வதில்லை.

கோப்புப்படம்

ஒருபுறம், ஏராளமான வரிகளை விதித்து மக்களை ஒட்டச் சுரண்டுவதை செவ்வனே செய்துவருகிறார்கள். மற்றொருபுறம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம் தங்கள் எஜமானர்களாகிய கார்ப்பரேட் கும்பலின்  லாபவெறிக்கு சேவை  செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக பரந்தூரில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி அத்திட்டத்தை செயல்படுத்த உறுதியாக நிற்கிற தமிழக அரசுதான், சாமானிய மக்களின் நலனுக்காக வாய்க்கால்களை மீட்டெடுப்பதுகூட செய்வதில்லை. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு மரம் வளர்க்க நிதி உதவி செய்வதாக அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், சாலையின் இருபுறங்களிலும் உள்ள மரங்களை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் வைப்பதற்கு எந்த முயற்சி மேற்கொள்ளவில்லை. மாறாக சாலையோரங்களில் உள்ள அத்தனை மரங்களையும் துண்டுதுண்டாக வெட்ட அனுமதித்திருக்கிறது.

மேலும், இந்த சாலை விரிவாக்கத்தினால் மட்டும் விபத்துகளைத் தடுத்துவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருக்கின்ற சாலையின் தரத்தை உயர்த்தினாலே பெருமளவில் விபத்துக்களைக் குறைக்க முடியும். திருச்சியை மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைப்பதற்கு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை,  கோவை – கரூர்- திருச்சி நெடுஞ்சாலை இருக்கிறது. எனவே இந்த குறுகிய, வளைவுகள் நிறைந்த, வாய்க்கால்களைக் கொண்ட இந்த சாலையில் போக்குவரத்தைக் குறைப்பதுதான் முதன்மையாகும். இந்த சாலையில் அதிக அளவு போக்குவரத்து நடைபெறுவதற்கு அன்றாட வேலைகளுக்காக செல்லும் மக்களின் இடப்பெயர்வுதான் முக்கிய காரணமாகும். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இச்சாலையானது, குறுகலானதும், வளைவுகளையும், வாய்க்கால்களையும் கொண்டதுமாகும் விவசாயம்தான் பிரதானமாக நடைபெறுகிறது.

படிக்க : ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !

அந்த வகையில், விவசாயத்தையும், அதன் துணைத்தொழில்களையும் லாபகரமானதாக மாற்றுவதன் மூலம், உள்ளூர் தேவைகளுக்கான அரசு தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதன் மூலமாக மட்டுமே இத்தகைய இடப்பெயர்வுகளைக் குறைக்க முடியும். அத்தகையத் திட்டங்களை உருவாக்கினால், ஒரு இடத்தில் மக்களைக் குவிப்பதையும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், தேவையின்றி மேம்பாலங்கள் – சாலை விரிவாக்கப்பணிகளில் மக்கள் வரிப்பணம் வீணாவதைத் தடுக்கவும் முடியும்.  ஆகையால், விபத்துகளுக்கான ஊற்றுமூலத்தை சரிசெய்வதற்கான திட்டங்களை உருவாக்காமல், வெறும் சாலைகளை விரிவுபடுத்துவதனால் மட்டும் விபத்துக்களைத் தடுக்க முடியாது.

ஆனால், கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக சேவை செய்வதையே கடமையாகக் கொண்டிருக்கிற இந்த அரசுக் கட்டமைப்பில் மக்கள் நலனுக்கான திட்டங்களை எதிர்ப்பார்க்க முடியாது. இந்த அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை வகுக்கவில்லையென்றாலும், இருக்கின்ற குறைந்தபட்ச வாழ்வாதாரக் கூறுகளை அழித்தொழிக்காமல் இருந்தால்கூட போதும், மக்கள் பிழைத்துக் கொள்வார்கள்.  ஆகவே, உங்க சாலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்; இருப்பதைக் கொண்டு எங்களை வாழவிடுங்கள் அதுவே போதும்! என்பதே மக்களின் உள்ளக் குமுறலாக இருக்கிறது. எட்டுவழிச்சாலை, பரந்தூர், காட்டுப்பள்ளி துறைமுகம், விழிஞ்ஞம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என நாடு முழுவதும் பற்றி எரியும் போராட்டங்களின் அடிநாதமும் இதுதான்.

வாகைச்சூடி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க