காவிக்கும்பலுக்கு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் தேவைப்படாது என்பது தான் வரலாறு. சான்றாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சில் நீங்கள் பாகிஸ்தானுக்கு கைதட்டினால் தேசத்துரோகி ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம். இதே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆதரித்தால் நீங்கள் துரோகி அல்ல! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிற்கு அடிமைத்தனத்தை காட்டும் காவிக் கும்பல், பாக்கிடம் மட்டும் ஆண்டைத்தனம் காட்டும். காரணம், பாக்கை வைத்து இந்தியாவில் முசுலீம்களை அடிமைகளாக்குவது அவர்களின் இலட்சியம். முசுலீம் அல்லாதவர்கள் யாரெல்லாம் இந்த இலட்சியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களே ஆர்.எஸ்.எஸ்-ன் ஜன்ம பகைவர்கள்.
ஏ.பி.வி.பி காலிகள்
கிரிக்கெட் மேட்ச் மட்டுமல்ல, நீங்கள் மாட்டுக்கறி தின்றாலோ, முசபார்நகர் குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தி பேசினாலோ, பார்ப்பனிய வேதக் கலாச்சாரத்தை எதிர்த்தாலோ, சமஸ்கிருத எதிர்ப்பு பேசினாலோ, கலப்பு மணம் புரிந்தாலோ, சாதி வர்ண ஒழிப்பு பேசினாலோ, காதலித்தாலோ, நாத்திகராக கம்யுனிஸ்டாக இருந்தாலோ, பெரியார் கொள்கையைப் பரப்பினாலோ, அம்பேத்கரை பார்ப்பனியத்தை எதிர்க்கும் ஆயுதமாக காட்டினாலோ, சிறுபான்மை மதத்தவரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, இந்துத்துவத்தை எதிர்க்கும் தலித்தாக இருந்தாலோ, அல்லது பஸ்தார் சட்டிஸ்கர் பழங்குடியினராக இருந்தாலோ, அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பேசினாலோ, இந்துப் பார்ப்பனியத்தில் பெண்களுக்கு வழிபடும் உரிமை குறித்து பெண்களே போராடினாலோ, ஏன் அறிவாளியாக பத்திரிக்கையாளனாக விருதைத் திருப்பி அளிப்பவனாக இருந்தாலோ அவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் வரையறைப்படி தேசத்துரோகிகள்.
காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி பற்றிய போஸ்டர்
ஆக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காவி வானரங்களைத் தவிர தேசபக்தனாக திகழ்வதற்குண்டான வாய்ப்புகள் யாருக்குமே கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.
ஆகையால் தான் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது; புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்; ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா தொங்கவிடப்பட்டார்; இப்பொழுது ஒட்டுமொத்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் பாசிச பயங்கரவாதத்திற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது.
12-02-2015 அன்று (இந்தியாவின் கூட்டு மனசாட்சியை நிறைவேற்றுவதற்காக) தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றுமாண்டு நினைவுக் கூட்டத்தை ஜே.என்.யு பல்கலைக் கழகத்தின் சில மாணவர் அமைப்புகள் நடத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க! இந்தியா ஒழிக!’ என்று மாணவர்கள் கோசமிட்டதாக ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் வழக்கம் போல பா.ஜ.க எம்.பி.க்கு தெரிவிக்க, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி போன்றோரின் நேரடி தலையீட்டின் கீழ், டில்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகளை குற்றம் சாட்டப்படுவர் யார் என்று பெயரைச் சொல்லாமலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக தொடுத்திருக்கின்றனர்.
டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.
இப்படிச் செய்வதன் மூலம் யார் மீது வேண்டுமானாலும் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தலாம் என்பதற்கு நிருபணமாக டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.
மேலும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஏ.பி.வி.பி காலிகளின் துணையோடு, டெல்லி காவல் துறை பல்கலைக் கழக மாணவர்களை சூறையாட வெறிகொண்டு அலைந்து வருகிறது. நள்ளிரவில் பெண்கள் விடுதியைச் சோதனையிடுவது, அடையாள அட்டை வைத்திருக்காத மாணவர்களை சித்ரவதை செய்து பொய் கேசு போட முயல்வது, காஷ்மீரிலிருந்து வரும் ஒட்டு மொத்த மாணவர்களையும் கைது செய்ய முனைவது, இதுவரை மோடி அரசின் பாசிசக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவ கும்பலின் அரசியலையும் அம்பலப்படுத்திய மாணவர்களையும் குறி வைத்து வேட்டையாடுவது என ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் பல்வேறு மாணவர் பிரச்சனையில் அம்பலப்பட்ட பிறகும் கூட அடிபட்ட நரியாக ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.
காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.
கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் நடைபெற்று வரும் பிரச்சாரம் என்ன? ஏதோ பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களுக்கத்தான் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்துத்துவ பாசிச கும்பல் சமூகத்தின் பொதுப்புத்தியில் தன்னை இருத்த தவியாய் தவிக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.
சான்றாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அப்சல் குரு நினைவுக் கூட்டம் நடத்திய உமர் எனும் மாணவர் லஷ்கர்-ஈ-தொய்பாவுடன் நேரடித் தொடர்புடையவர் என்று ஒரே போடாக போட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த புரளி, அரசின் புலனாய்வுத்துறையாலேயே நிராகரிக்கப்பட்டு இருப்பது ராஜ்நாத்சிங்கின் களவாணித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
இரண்டாவதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் செய்யது நேரடியாக ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக கட்டியமைக்கப்பட்ட செய்தியும் ஹபீஸின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் கணக்கும் போலியானது என்பதையும் வெளிச்சத்திற்கு வந்தபிறகு ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கமும் அம்பலப்பட்டுவிட்டது. அதே போல பல்கலையில் “பாக் வாழ்க” கோஷம் போட்டவர்கள் ஏ.பி.வி.பியினரே என்று ஆம் ஆத்மி வீடியோ மூலம் அம்பலப்பட்ட பிறகும் அவாள் கூட்டம் ஊளையிடுவதை நிறுத்தவில்லை.
இந்துத்துவ கும்பல் இச்சந்தர்ப்பத்தை கணிசமாக தன்பக்கம் அறுவடை செய்யவும் தவறவில்லை. டில்லியில் தற்பொழுதைய நிலையில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு வெளியே இரயில் நிலையங்கள் உட்பட சங்கர்பரிவாரங்கள் ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி தாக்கி வருகின்றனர்.
பாட்டியாலா உயர்நீதி மன்றவளாகத்தில் வக்கீல்கள் என்ற போர்வையில் நுழைந்த இந்துத்துவ வானரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டி.என்.ஏ நாளிதழ், எகனாமிக்ஸ் டைம்ஸ், கைரலி தொலைக்காட்சி, ஐ.பி.என் குழும நிருபர்களைத் தாக்கியிருக்கின்றனர். ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு ஆதரவாக கோர்ட் வளாகத்திற்கு வந்த மாணவர்களையும் தேசத்துரோகிகள் என்று இந்துத்துவக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதையும் காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அலோக் சிங் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.
வெள்ளைக் காரனின் காலை நக்கிப் பிழைக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிச அரசியல்
பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான வன்முறைத்தாக்குதல் தனி வழக்காக பதியப்பட்டிருக்கும் நிலையில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் இந்துத்துவ வானரங்கள், மாணவர் தலைவர் கண்ணையா குமாரைத் தாக்கியிருக்கிறது. உச்சநீதி மன்ற கெடுபிடி உத்தரவுகள்! எல்லாம் மோடியின் பாசிச பயங்கரவாதத்திற்கு முன்னால் கழிவறைக்காகிதமாக நிற்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் இன்றைக்கு மிகவும் ஆபாசமாக தேசபக்தி கூச்சல் போட்டுவருகிறது என்பதை எவர் ஒருவரும் அறிவர். கடந்த வாரத்திற்கு முன்புதான் அமெரிக்க இந்தியாவிற்கு டேவிட் ஹெட்லி வாக்குமூலத்தை பரிசாக வழங்கிவிட்டு பாகிஸ்தானிற்கு எப்-1 ரக ஹெலிகாப்டர்களை வழங்கியது.
ஹெட்லியின் வாக்குமூலத்திற்கு பின் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவின் சதி வெளியில் வந்துவிட்டதாக பிரச்சாரம் செய்த மோடி கும்பல், அமெரிக்கா அதே ஐ.எஸ்.ஐ பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர் வழங்கும் என்று தெரிந்தவுடன் தேசபக்தி கூச்சலை நவதுவராங்களிலும் இருந்தும் கசியவிடாமல் அடக்கி வாசித்தது.
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.
இந்துத்துவக்கும்பலின் இந்தக் கூச்சலுக்கு இசுலாமிய மதஅடிப்படைவாதமும் ஓரளவு தீனிபோட்டு வளர்த்திருக்கிறது. இந்துமதவெறியர்களை எதிர்க்கும் இடதுசாரி, ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்தும் வேலையினை இசுலாமிய அடிப்படைவாதிகள் செய்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் நுகத்தடியை சாதி இந்துக்களும் சூத்திர தலித்துகளும் ஒவ்வொரு நாளும் சுமந்துகொண்டிருக்கும் பொழுது மதச்சிறுபான்மையினர்கள் இரட்டை நுகத்தடியை சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் இந்திய வாழ்நிலை.
அறிவிக்கப்படாத அவசரநிலை
சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற ஓட்டுப்பொறுக்கி போலி கம்யுனிஸ்டுகளின் ஓட்டாண்டித்தனம் ஜே.என்.யு விசயத்தில் இந்து-இந்தி-இந்தியா எனும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதக் கனவையே உயர்த்திப்பிடிக்கிறது. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதை மறைக்கும் இந்த ஓட்டாண்டிகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக காட்டிக்கொள்வது கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதமாகும். மேலும் இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு இந்துமதவெறியர்களை எதிர்ப்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பலத்தையே கொண்டு சேர்க்கிறது.
மறுகாலனியாதிக்க கொள்கைகளை விரைந்து தீவிரப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பார்ப்பனிய இந்துத்துவத்தையும் இசுலாமிய மதவெறி அமைப்புகளின் அடிப்படைவாதத்தையும் முறியடிப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? பாராளுமன்றத்தில் ஜே.என்.யு விவகாரத்தைக் கிளப்பி “மோடியே பதில் சொல்! மவுனத்தைக் கலை!” “அமித் ஷா பதில் சொல்! ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேள்” என்று கேள்வி எழுப்புவார்களாம்.
பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.பி சர்மா சி.பி.எம் கட்சித் தொண்டரை பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் நேரடியாக தாக்கி இதுதாண்டா பாசிசம் என்று எடுத்துக்காட்டுகிற பொழுது பாராளுமன்றத்தில் பாசிஸ்டுகளிடமே சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் நியாயம் கேட்பார்கள் என்ற நிலைப்பாடு புழுத்து நாறும் புண்ணுக்கு புணுகு போடுவதைப்போன்றது.
சங்கப் பரிவாரங்களின் தேசபக்தி கூச்சல் பாராளுமன்றத்தில் தீர்க்கப்படவேண்டியதல்ல. ஏனெனில் தேசபக்தி, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா”கத்தான் இருக்கிறது. பாசிஸ்டுகளின் செயல் எந்திரம் இது. இது தான் இன்றைக்கு ஜே.என்.யு விவகாரத்தில் துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.
ஜே.என்.யு ஆசிரியர்கள், மாணவர்களின் கண்டன போராட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆக இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.
“மூடு டாஸ்மாக்கை” – திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், இளம் தோழர் ஒருவர் பாடிய பாடல்! ‘அம்மா’ என்றழைக்கப்படும் ஸ்டிக்கர் மாஃபியாவின் தலைவி குடியால் தமிழகத்தை கெடுத்ததை ஒரு சிறுமியின் பார்வையில் விவரிக்கும் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!
”நான் சீனாவை வைத்து அந்த ஆளை ஏதோ ஒரு வகையில் சீக்கிரத்தில் ஒழித்து விடுவேன்”
”அப்படியென்றால் அது அரசியல் படுகொலையாக இருக்குமா?”
”அதை விட மோசமான முறைகள் கூட இருக்கிறது. இவன் ரொம்ப மோசமான ஆள் தெரியுமில்லையா?”
–இது அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. நெறியாளர் பேட்டியெடுப்பது யாராவது மாபியா கும்பலின் தலைவனாக இருக்குமோ என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? குழப்பமே வேண்டாம், பேசியது மிக பயங்கரமான கார்ப்பரேட் மாஃபியா தான் . ஆனால், கெடுவாய்ப்பாக மேற்படி கார்ப்பரேட் மாஃபியா தான் எதிர்வரும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக இருக்கும் வாய்ப்பு பெற்றவர். படுகொலையை விட மோசமாக ஏதோ செய்யப் போவதாக முழங்கியுள்ளார், டொனால்ட் ட்ரம்ப். இந்த ’நல்லவரின்’ வாயால் கெட்டவர் என்ற பட்டத்தைப் பெற்றிருப்பவர் கிம் ஜோங் உன், வட கொரிய அதிபர்.
உலக வரலாற்றிலேயே ஆக முட்டாள்தனமான தலைவர் என்கிற இழிபுகழ் பெற்ற ஜார்ஜ் புஷ்க்கு போட்டியாக அதே குடியரசுக் கட்சியில் இருந்து உதித்திருப்பவர் தான் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்கர்கள் எதிர் கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிமையான தீர்வுகளை கைவசம் தயாராக வைத்துள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப்பின் தேர்தல் முழக்கம் அமெரிக்காவை ‘மீண்டும் உயர்ந்த தேசமாக்குவது’! அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வுகள் என்ன?
அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? அதற்கு மெக்சிகன் குடியேறிகளும், இசுலாமியர்களுமே காரணம். அதற்கு என்ன தீர்வு? மெக்சிகன்கள் எல்லை தாண்டி வருவதை தடுக்க அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே பெரிய மதில் சுவர் ஒன்றைக் கட்டினால் போயிற்று. சரி, அதற்கு அதிகமாக செலவாகுமே? அந்த செலவை மெக்சிக்கன் அரசாங்கத்திடம் இருந்து வசூலித்தால் முடிந்தது வேலை. சரி முசுலீம்களை என்ன செய்யலாம்? அவர்கள் மொத்தமாக நாட்டுக்குள் நுழைவதையே தடுத்து விட வேண்டியது தான். அப்போது போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கேட்டு வருபவர்களை என்ன தான் செய்வது? வெளியே போடா என்று கழுத்தைப் பிடித்து தள்ளி விட வேண்டியது தான்.
அமெரிக்காவின் மிகப் பெரிய பிரச்சினையே முசுலீம்கள் தான். அதற்கு என்ன ஆதாரம்? இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்ட போது ஆயிரக்கணக்கான முசுலீம்கள் நியூ ஜெர்சி மாநிலத்தில் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அதற்கு என்ன ஆதாரம்? அதை நானே பார்த்தேன். அதற்கு என்ன ஆதாரம்? நான் பார்த்தது தான் ஆதாரம். வெளிநாட்டு முசுலீம்கள் உள்ளே வராமல் தடுப்பீர்கள், உள்நாட்டு முசுலீம்களை என்ன செய்வது? அவர்களின் மசூதிகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சந்தேகம் வருபவர்களைப் பிடித்து அவர்களின் முகத்தை தண்ணீரில் முக்கியெடுத்து கடுமையான முறையி விசாரிக்க வேண்டும். கேட்கவே கொடுமையாக இருக்கிறதே? இது ஐ.எஸ்.ஐ.எஸ் பின்பற்றும் வழிமுறையை விட நாகரீகமானது தானே.
ஒபாமா அறிவித்துள்ள மருத்துவ காப்பீடு திட்டம் சரியில்லை. சரி என்ன செய்யலாம்? அதை மொத்தமாக தூக்கி கடாசி விட வேண்டும். அதற்கு பதில் வேறு என்ன திட்டம் உள்ளது? ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுக்கு பதில் அட்டகாசமாக ஏதாவது செய்து விட வேண்டியது தான் ( Something Terrific ). வெளியுறவுக் கொள்கை? எனக்கு ரசியாவின் புடினை டீலிங் செய்வது ரொம்ப சுலபம்.. வெளியுறவுகளையெல்லாம் ஒரு கை பார்த்துடலாம்.
மேலே இருக்கும் உளறல் வன்முறைகள் எல்லாம் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மூன்று மாதங்களாக வாய் வழியே கழிந்து வைத்தவைகளில் ஒரு சிறு துளி. இவை தவிர எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டனை பாலியல் ரீதியில் விமர்சித்தது, தனது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் சக போட்டியாளரை “பீப்” வார்த்தையில் விளித்தது என்று டொனால்ட் ட்ரம்பின் வாய்க் கொழுப்பிற்கு நீண்ட பட்டியலே உண்டு.
இவை தவர பொருளாதாரம் குறித்தும், வரி விதிப்பு முறைகள் குறித்தும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்தும், அமெரிக்காவின் தேங்கிய பொருளாதாரம் குறித்தும் டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த முத்துக்களைக் கோர்த்தால் அந்த மாலையை வைத்து இமயமலையை நாலைந்து சுற்று சுற்றிக் கட்டியே விடலாம்.
சுருக்கமாகச் சொன்னால் நரேந்திர மோடியின் பாசிச மூர்க்கத்தனமும் ஜார்ஜ் புஷ்சின் ஏகாதிபத்திய எகத்தாளமும் சேர்ந்து செய்த கலவை தான் டொனால்ட் ட்ரம்ப். மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பதிவர்கள் தற்போது டொனால்ட் ட்ரம்பின் முட்டாள்தனமான உளறல்களுக்கு அதிக முக்கியத்துவம் செய்து கேலியும் கிண்டலுமாக எழுதி வருகின்றனர்.
எனினும், ஊடகங்களின் கேலி கிண்டல்களைத் தாண்டி ட்ரம்ப் தொடர்ந்து வேட்பாளருக்கான போட்டியில் முன்னணி பெற்று வருகிறார். குடியரசுக் கட்சியினரிடையே எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து முதலிடமும் பெற்று வருகிறார். படிப்பறிவில்லாத அமெரிக்கர்களிடமும் குறிப்பாக வெள்ளை நிறவெறியர்களிடமும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. வெளிப்படையாக செயல்பட முடியாத கூ க்ளஸ் க்ளான் என்கிற நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் நோக்கங்களை குடியரசுக் கட்சி முக்காடுடன் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அந்தக் கட்சியில் சேர்வது வழக்கமான ஒரு போக்கு – தற்போது குடியரசுக் கட்சியிலேயே இருக்கும் ஆகப் பிற்போக்கான வலதுசாரிகளும், நிறவெறியர்களும் டொனால்ட் ட்ரம்பின் வருகையைத் தொடர்ந்து சுறுசுறுப்படைந்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கும் ஜனநாயக கட்சி சார்புடைய ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் அவரது பேச்சுக்களும் செயல்பாடுகளும் அமெரிக்கத்தனையுடையது அல்ல (Un American) என்று எழுதுகின்றனர். எனினும், அதிகரித்து வரும் டொனால்ட் ட்ரம்ப்பின் செல்வாக்கு வேறொன்றை உணர்த்துகின்றது – அவர் இந்தக் காலகட்டத்தின் தேவை. யாருடைய தேவை? கார்ப்பரேட் முதலாளிகள் தேசங்கடந்த தொழிற்கழகங்கள் மற்றும் நிதி மூலதன சூதாடிகளின் இன்றைய தேவையாக டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கும் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. வால்வீதி சூதாடிகளின் சூதாட்ட வெறியில் புதைகுழிக்குள் வீழ்ந்த பொருளாதாரத்தை நிமிர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அந்தப் புதைகுழியை மேலும் ஆழமாக்கியே உள்ளன. அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அனைத்தையும் குறைந்த உழைப்பில் நிறைந்த லாபத்தையும் அதிக சுரண்டல் வாய்ப்புகளையும் வழங்கும் கிழக்கத்திய நாடுகளுக்கு பெயர்த்தெடுத்துச் சென்று விட்டனர், முதலாளிகள்.
இந்தச் சூழலில் அமெரிக்க நடுத்தர வர்க்கம் மேலும் மேலும் கடனில் வீழ்ந்துள்ளது. கல்லூரிப் படிப்பை முடிக்கும் போதே மிகப் பெரிய கடன் சுமையோடு வெளியேறும் மாணவர்களை வேலையின்மை வரவேற்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே நேரம் வாங்க ஆளில்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வறுமையும் பசி பட்டினியும் அதிகரித்து வரும் அதே நிலையில் அமெரிக்க சமூகத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளிகளோ தங்கள் செல்வங்களை பன்மடங்கு உயர்த்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏழை அமரிக்கர்களிடையே வன்முறைப் போக்கு ஒரு புறம் அதிகரித்து வருகிறதென்றால் இன்னொரு புறம் போதைப் பழக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ஃபின் என்ற வழக்கமான போதைப் பொருளை விட 100 மடங்கு வீரியம் கொண்ட – ஹெரோய்னை விட 40 மடங்கு வீரியம் கொண்ட – ஃபெண்டனில் (Fentenyl) என்கிற சிந்தடிக் ஓபியத்தின் பயன்பாடு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இந்தப் போதை மருந்தால் இறப்பவர்களின் சதவீதமும் திடீரென உயர்ந்துள்ளது. இது தவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாராத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் பெருமுதலாளிகளும் நிதி மூலதன சூதாடிகளும், பங்குச் சந்தை ஓநாய்களும் தான் என்பதை வால் வீதி முற்றுகை இயக்கம் மிகச் சரியாக முன்வைத்தாலும் ஒரு அரசியல் இயக்கமாக அது உருப்பெறவில்லை. என்.ஜி.ஓக்கள் மற்றும் அடையாள அரசியல் குழுக்களின் சங்கமமாக மாறி கடைசியில் பிசுபிசுத்துப் போனது. மக்களிடையே அரசியல் ரீதியில் நம்பிக்கையான மாற்று ஏதும் தோன்றாத நிலையில் “மீட்பரின்” வருகைக்கான களம் தயாராக இருக்கிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எதிர்கொண்ட அதே நிலை தான். பொதுவாக “மீட்பர்கள்” எனப்படுபவர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் சவடால் பேச்சுக்கள் போதும்.
”எங்காளு ஆட்சிக்கு வந்தால் சீனாவின் தொடையில் நறுக்கென்று கிள்ளுவார், பாகிஸ்தானின் பொடனியில் பொட்டென்று போடுவார், ஒரு லிட்டர் பெட்ரோல் பத்து பைசாவுக்கு தருவோம், வெளிநாடுகளில் உள்ள பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு பத்து லட்சமாக பிரித்துக் கொடுப்போம், மொத்த நாட்டையும் சிங்கப்பூராக மாற்றுவோம்….”
”மீட்பர்களின்” உளறல்களுக்கெல்லாம் எந்த அறிவியல், தத்துவ, சித்தாந்த அடிப்படைகளும் தேவையில்லை. நோக்கம் ஒன்றே ஒன்று தான் – மக்களின் இன்பக் கிளுகிளுப்பைத் தூண்டுவது போல் பேச வேண்டும். தேர்ந்த எத்தனைப் போல் பேசி மக்களின் ஓட்டுக்களை கவர்வது முதல் கட்டம் – அதற்கு அடுத்தது, இந்த வெற்றியின் பலன்களை அறுவடை செய்யப் போகும் அதானிகளின், அம்பானிகளின் கட்டம்.
தற்ப்போது டொனால்ட் ட்ரம்ப் முதல் கட்டத்தில் இருக்கிறார். அனேகமாக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப் படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அமெரிக்கர்களின் வெள்ளை இன தேசிய வெறியை எவ்வளவு திறமையாக தூண்டுகிறார், மீண்டும் சிறந்த தேசமாக அமெரிக்கா உருவாவதற்கு யாரையெல்லாம் பயங்கரமான எதிரிகளாக அமெரிக்கர்களிடம் கட்டமைக்கப் போகிறார், அதற்கு அமெரிக்கர்கள் எந்தளவுக்குப் பலியாகப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து தேர்தலில் வெல்வும் கூடும்.
அதன் பின் மீட்பர் கிடைத்த நிம்மதியில் அமெரிக்கர்கள் இன்பக் கனவில் மூழ்கியிருக்கும் நேரம் பார்த்து நிதிமூலதனச் சூதாடிகளும், ரியல் எஸ்டேட் முதலைகளும் களமிறங்குவார்கள். டொனால்ட் ட்ரம்ப் தன்னளவிலேயே ஒரு ரியல் எஸ்டேட் முதலை என்பதோடு பல்வேறு நிதிமூலதனச் சூதாடிகளின் நெருக்கமான கூட்டாளியுமாவார். அவரது தேர்தல் பிரச்சார செலவுகளை நிதிமூலதனக் கும்பலே பின்னின்று கவனித்துக் கொள்ளும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருகின்றன.
ஜார்ஜ் புஷ்சுக்கு சற்றும் குறையாத போர் வெறியனாக தன்னை காட்டிக் கொள்வதில் ட்ரம்ப் எந்தக் கூச்சமும் அடைவதில்லை. ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் இந்த நிலையிலேயே தனது எதிர்காலப் போர் இலக்குகளாக வட கொரியாவையும், ஈரானையும், சிரியாவையும் அடையாளம் காட்டியுள்ள நிலையில், ஒருவேளை தேர்தலில் வென்று அதிபரானால் போர்த்தளவாட கார்ப்பரேட்டுகளின் காட்டில் டாலர் மழை தான் என்பதில் சந்தேகமில்லை.
உலகின் பொருளாதார இயக்கம் மொத்தமும் அமெரிக்க பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் விளைவுகள் ஒவ்வொன்றும் நம்மையும் பாதிக்கப் போவது உறுதி.
டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் முழக்கம் ”மீண்டும் அமெரிக்காவை சிறந்த தேசமாக்குவோம்” என்பதாகும். ஒரு ஆச்சரியமான ஒற்றுமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தினசரி பஜனையின் கடைசிவரி – பரம் வைபன்யே துமே தத் ஸ்வராஷ்ட்ரம் (உலகில் சிறந்த தேசமாக்குவேன்) – பாசிஸ்டுகளின் மிக முக்கியமான ஆயுதம் தேசிய வெறியும், தேசம் குறித்த பழைய பெருமிதங்களுமே.
பாரசீக வளைகுடாவில் தோன்றி உலகை அச்சுறுத்துவதாக குறிப்பிடப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே வெட்கப்படுமளவு இந்த டொனால்ட் பேசுகிறாரே என்று சில அப்பாவி அமெரிக்கர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம். எதற்கய்யா வருத்தம்? ஐ.எஸ்-க்கு குர் ஆனிலிருந்து, கில்லட்டின் வரை பயிற்சி கொடுத்தவர்களே அமெரிக்க ஆண்டவன்தான் எனும் போது இது பெருமைக்குரியதல்லவா!
“ஏதென்று தெரியாத இடத்தில்..
ஏதென்று தெரியாத நேரத்தில்..
என் தந்தை பெயரென்னவென்பதே அறியாமல்..
என் தாயின் பெயரென்னவென்பதையும் அறியாமல்..
மதுவருந்தி மயங்கிக் கிடந்தேன்… ”
– கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழுவின் பாடல் வரிகளில் இருந்து..
போராடும் மக்கள் திரளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மொழியும், கலாச்சாரமும், பூகோள இடைவெளியும் தடைகளே அல்லவென்பதை, கேரளத்தின் ஆலப்புழாவில் இருந்து வந்த அந்தக் கலைக்குழு பாடிய பாடல்கள் உணர்த்தின. பார்வையாளர்களின் மொழி பாடகனுக்குத் தெரியாது; பாடகனின் மொழி பார்வையாளர்களுக்குத் தெரியாது. எனினும் எவரும் எழுந்து செல்லவில்லை; கூட்டம் சலசலக்கவில்லை… ஆழ்ந்த அமைதியில் ஏறி இறங்கும் பாடலின் தாள லயத்தில் மக்கள் கட்டுண்டு கிடந்தனர். அங்கே உணர்வுகளின் பரிமாற்றம் ஒரு உயர்ந்த தளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
திருச்சியில் 2016 பிப்ரவரி 14-ம் தேதியன்று நடந்த “ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்! – மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு” இதைப் போன்ற எண்ணிறந்த தருணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கட்சிகளின் அலங்கார அலப்பறைகளோ, குவாட்டர்-கோழி பிரியாணி கும்பலையோ இங்கு நீங்கள் காண மாட்டீர்கள் என்ற எல்லோரும் அறிந்த உண்மைக்குள் மீண்டும் ஒருமுறை புகுந்து புறப்பட விரும்பவில்லை. மாநாட்டின் சில உணர்வார்ந்த தருணங்களை பரிமாறிக் கொள்வதே எமது விருப்பம்.
தஞ்சை ரெட்டிபாளையத்திலிருந்து வந்திருந்த ஜான் பீட்டர் – கலா தப்பாட்டக் குழுவினரின் நிகழ்ச்சியோடு 14ம் தேதி மாலை மாநாடு துவங்கியது. அவர்களின் ஆக்ரோஷமான அடவுகளும் நரம்புகளைப் பிடித்து மீட்டும் பறையோசையும் மாநாட்டுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை சுமார் அரை மணி நேரம் கட்டிப் போட்டது. மாநாட்டில் தொடர்ந்து வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கும், உரைகளுக்கும் மக்களின் மனங்களை அந்தப் பறையோசை தயார்ப்படுத்தியது.
ரெட்டிப்பாளையம் தப்பாட்டக் குழுவினர்
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் மாநாட்டைத் தலைமை வகித்து நடத்தினார். சென்னையைச் சேர்ந்த உதவும் கைகள் என்கிற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்தி அம்மாள் முதல் உரையை நிகழ்த்தினார். அவர் தெருவோரங்களில் கிடக்கும் அடையாளம் தெரியாத அநாதைப் பிணங்களை அடக்கம் செய்வதற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் அடக்கம் செய்தவர்களில் சுமார் 70 சதவீதம் மதுவால் இறந்தவர்கள். அவற்றில் பல பிணங்களை பல இடங்களில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளின் வாசலில் வைத்தே கைப்பற்றியுள்ளார்.
தோழர் காளியப்பன் – தலைமை உரைஆனந்தி அம்மாள்
அநாதைப் பிணங்களை உற்பத்தி செய்யும் நதிமூலங்களில் பிரதானமானது என்பதை உணர்ந்த பின் தனது சேவையை மாற்றிக் கொண்டு மது ஒழிப்பிற்காக போராடி வருகிறார். சமீபத்தில் மது விலக்கை வலியுறுத்தி நீண்ட நடைபயணம் ஒன்றை நடத்தி முடித்த அவர், அதன் அனுபவங்களைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மதுக் கொடுமையால் இளம் வயதிலேயே கணவனை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மதுவின் தாக்கத்தால் இழக்கப்படும் குற்றங்கள் குறித்து விவரித்தவர், இந்த மாநாடு வரை தமது அணுகுமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக இருந்தது என்றும் இதற்கு மேலும் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றால் இந்த மாநாட்டிற்குப் பிறகு தமது அணுகுமுறையே மாறும் என்றும் அரசுக்கு எச்சரிகை விடுத்தார்.
மாநாட்டின் அடுத்த உரை மொத்தக் கூட்டத்தையும் உறைய வைத்தது.. திருப்பூர் நாகராஜின் வாழ்க்கையின் வலி மிகுந்த பக்கங்களை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறோம்.
நாகராஜ் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, முன்னாள் குடி அடிமை, பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் உண்டு. “குடி அடிமை” என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? தான் சம்பாதித்த கூலி அத்தனையையும் குடித்தே தீர்ப்பது நாகராஜின் வழக்கம். இதன் காரணமாக மனைவியோடு தொடர்ந்து சண்டை.
நாகராஜின் குடிப்பழக்கத்தை எத்தனை போராடியும் மனைவியால் நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் வழக்கம் போல கையிலிருந்த கூலிக் காசு மொத்தத்திற்கும் குடித்து விட்டு வந்து வீட்டுக்குள் நினைவிழந்து விழுந்துள்ளார். வெறுத்துப் போன மனைவி மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தன்னையே கொளுத்திக் கொள்கிறார். நெருப்பின் ஆங்காரம் அலறலாக பீறிட்ட போது தட்டுத் தடுமாறி விழித்துப் பார்த்த நாகராஜுக்கு என்ன செய்வதென்று தெரியாத அளவுக்குப் போதை தலையிக்கேறியிருந்தது.
மனைவி நெருப்பில் உருகிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அருகே சென்று நெருப்பை அணைக்க முற்பட்டுள்ளார்… தீச் சூவாலைகளின் தீவிரத்தில் தன்னைத் தொட்ட ஏதோவொன்றை இறுக்கியணைத்துள்ளார் அந்தப் பெண். அது நாகராஜின் உடல் தான். அடுத்து என்ன நடந்ததென்று நாகராஜுக்குத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது அவர் அரசு மருத்துவமனையின் படுக்கையில். நெருப்பு அவரையும் உருக்குலைத்துப் போட்டிருந்தது; அவரது விரல்கள் மெழுகைப் போல் உருகிப் போயிருந்தன. ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் இரண்டு விரல்கள்.. கூட்டத்தைப் பார்த்து அந்தக் கையை உயர்த்திக் காட்டினார். அத்தனை பேர்களின் கண்களிலும் கண்ணீர்.. மூன்று மாதங்கள் கழித்தே அவரது மனைவி இறந்து விட்டதை அறிகிறார். இந்த செய்தியைக் கேட்பதற்காகவே அந்த மூன்று மாதங்களாக அவர் மனப்பிறழ்வுக்கு ஆளாகிய நிலையில் நெருப்பால் வெந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.
திருப்பூர் நாகராஜ்
“ஒரு காலத்திலே கையில இருந்த காசு தீர்ற வரைக்கும் குடிச்சவனுங்க. எம்பட கிட்ட வாங்கிக் குடிச்சவன் எத்தனையோ பேரு.. இன்னிக்கு என்னோட கை இப்படியாகிப் போச்சு.. என்னால வேலை செஞ்சி சம்பாரிக்க முடியாது.. என்ற புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..”
நிறுத்தி விட்டுத் தேம்பினார். சரியாக அந்த நேரத்தில்.. கூட்டத்திலிருந்த மக்கள் பொன்மனச் செல்வியாம் புரட்சித் தலைவின் பொற்கால ஆட்சியைக் குறித்து ஆவேசக் குரலில் சொன்ன சங்கதிகளுக்கு ஏழெட்டு தேச துரோக வழக்குகள் உறுதி. நாகராஜ் தொடர்ந்தார்.
“என்னோட புள்ளைக்கு ஒடம்பு சரியில்லெ.. ஆசுபத்திரிக்கி கூட்டிட்டுப் போக வர அஞ்சு ரூபா ஆகும்… அதுக்கு காசில்லாதனா போயிட்டேன்” மீண்டும் உடைந்தார் நாகராஜ்.. ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் டாஸ்மாக்கை எப்படியாவது மூடி விடுங்களென்று மக்களிடம் கேட்டு விட்டு அமர்ந்தார்.
இனி எவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை.. இது எங்கள் ஊர்; எங்கள் வாழ்க்கை; எங்கள் தீர்மானம்; டாஸ்மாக்கை மூடியே தீர்வதென்கிற உறுதியை மக்கள் அடைந்திருந்தனர். எனினும் அது போராட்டமின்றிச் சாத்தியமில்லை.. ஆனால் போராட்டங்களோ மாலை நேரத் தேனீர் போல அத்தனை ரசமான அனுபவங்களாய் இருக்கப் போவதில்லை. தோழர்களுக்கு இது பழகியது தானென்றாலும் மக்களுக்கு இது புதிது. நரகத்தின் மத்தியில் நிற்பவர்களுக்கு கடினமான பாதை ஒன்றைக் கடந்தால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது தெரிந்து விட்டது.. அந்தப் பாதையைக் கடப்பதெப்படி? தனது அனுபவத்தின் மூலம் அதை விளக்கினார் மது ஒழிப்புப் போராளி டேவிட் ராஜ்.
டேவிட் ராஜ்
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் ராஜ் ஒரு முன்னாள் இராணுவ வீரர் மட்டுமின்றி வாள் வீச்சில் தேசிய சேம்பியன். இந்த தேசத்திற்காக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது லட்சியம். இராணுவத்தில் இருந்து கொண்டே அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அவரது தந்தை குடிக்கு அடிமையான தகவல் அவரை அடைகிறது. உடனடியாக ஊருக்கு வந்தவர் தந்தையின் நிலை கண்டு மனம் பதைக்கிறார். இது அவரது பிரச்சினை மட்டுமில்லை என்பதையும் இங்கே ஒரு சமூகமே குடி நோயின் பிடியில் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட ரீதியில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்கிறார்.
குடி உடல் நலனை மட்டுமில்லாமல் மன நலனையும் அழித்து ஒரு மனிதனை சிந்திக்க முடியாத வாழும் பிணங்களாக்குகிறது என்ற உண்மையை டேவிட் ராஜ் உணர்ந்து கொண்டு தனது இராணுவ வேலையை இராஜினாமா செய்து விட்டு ஊரிலேயே ஒரு விளையாட்டு மையம் ஒன்றைத் துவங்குகிறார் – அதோடு மது ஒழிப்புப் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார். சசி பெருமாளைப் பின்பற்றி மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு வருகிறார்.
அபினியால் தங்களை அடிமைப்படுத்தியுள்ளனர் என்பதை உணர்ந்த சீன மக்கள் தமது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை அபினி யுத்தத்திலிருந்து துவங்கினர். வெள்ளை ஏகாதிபத்தியும் அதன் அடிவருடிகளான சீன ஆளும் வர்க்கமும் அதை வெறும் போதைப் பழக்கத்திற்கு எதிரான சமூக சீர்திருத்த நடவடிக்கையாகப் பார்க்கவில்லை. மக்கள் போதையிலிருந்து விடுதலை அடைவதை தங்கள் அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே எடுத்துக் கொண்டு, கொடூரமான முறைகளில் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்டது சீன ஆளும் வர்க்கம். ஆளும் வர்க்கங்களின் சிந்தனைப் போக்கு மக்களைக் கிள்ளுக் கீரைகளாகப் பார்ப்பது எனபது உலகம் தழுவிய அளவிலும் நூற்றாண்டைக் கடந்த பின்னும் ஒன்றே போல் தான் உள்ளது என்பதைத் தமிழக போலீசு உணர்த்தியது.
மது ஒழிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட டேவிட் ராஜை சட்டவிரோதமாக கைது செய்த போலீசு, அவரை வேனில் வைத்தே கொலை வெறியோடு தாக்கியுள்ளது. கைது செய்யப் பட்டு ஆறு மணிநேரம் கழித்து நீதிமன்றத்தில் டேவிட் ராஜை ஆஜர் படுத்திய போலீசு, இந்த இடைவெளிக்குள் அவரது இடுப்பு எலும்பை அடித்தே உடைத்திருந்தது. சில மாதங்கள் எந்த அசைவுமின்றி படுக்கையிலேயே கிடப்பது என்பது எவ்வளவு நரக வேதனையை அளிக்கும் என்பதை வேறு எவரையும் விட விளையாட்டு வீரர்களே உணர முடியும். உடலின் ஆற்றல் அத்தனையும் வடிந்து போய் சொந்த பராமரிப்புக்குக் கூட இன்னொருவரின் தயவை நாடி நிற்கும் அவல நிலை அது.
டேவிட் ராஜ் அதைக் கடந்து வந்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்த டேவிட் ராஜ், தன்னை இயக்கிய உணர்ச்சி ஒன்றே ஒன்று தானென்றார். அது தமிழக இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியிலிருந்து விடுவித்தே தீர்வது என்கிற வெறி. போலீசு மிருகங்களின் அடியும் உதையும் லட்சிய உறுதி கொண்ட ஒருவருக்கு வலியைக் கொடுப்பதில்லை – மாறாக போராளியின் எஃகு போன்ற உறுதியைக் கொடுக்கிறது.
டேவிட் ராஜ் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டு விட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போடு இவன் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.
டேவிட்ராஜ்
டேவிட் ராஜ் கிழித்தெறிந்த சான்றிதழ்கள் காற்றில் அலைந்து தரையைத் தொட்ட போது மேடைக்குப் பக்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் சிலரின் கண்களின் கண்ணீர் வழிந்ததைக் காண முடிந்தது. ஒருவேளை அவர்களும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சீருடைப் பணியாளர்களாக வேலைக்குச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. அங்கீகாரம் பெற்ற மாநில, தேசிய சான்றிதழ் ஒன்றைப் பெறுவதன் வலி என்னவென்பதை உணர்ந்த அவர்களுக்கு டேவிட் ராஜின் லட்சிய உறுதியின் அடர்த்தி உறைத்திருக்கும்.
பாதையில்லாத பாதையில் முதலில் நடப்பவரே அத்தனை முட்களையும் தாங்கிக் கொள்கிறார். அவரைப் பின் தொடர்பவர்களும் அந்த வலியில் கொஞ்சம் பங்கு பெற்றுக் கொள்கிறார்கள்.. காலங்கள் கழித்து அங்கே பாதை உருவான பின் வருபவர்களின் கால்கள் முதலில் நடந்தவர்களின் வலியைப் புரிந்து கொள்ளுமா? நமது எதிர்கால சந்ததியினருக்கான முள்ளில்லாத பாதை சமைக்க நம்மில் எத்தனை பேர் தயாராக உள்ளோம்?
இதோ நமக்கு முன்னோடிகளாக டேவிட் ராஜ் மட்டுமில்லை.. குமரிக்கு வடக்கே இருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வக் கண்ணும் இருக்கிறார். மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பொய்வழக்கை சந்தித்து முப்பது நாட்கள் சிறையில் கழித்த பதினைந்து பேரில் ஒருவரான் அவருக்குஅதற்கு முன் அவ்வமைப்போடு எந்த தொடர்பும் கிடையாது.
இப்படியான உறுதியான போராளிகள் பலரை எமது அமைப்புக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொன்மனச் செம்மல், குடி வியாபாரி புரட்சித்தலைவிக்கு இந்த இடத்தில் ஒரு நன்றி.
தெய்வக்கண்ணுவோடு சேர்ந்து மொத்தம் நான்கு சகோதரர்கள். அரசாங்கத்தின் ஆலோசனையை நம்பி ஒவ்வொருவரும் ஒற்றைப் பிள்ளைகளாக பெற்று வைத்துள்ளனர். அந்தச் சகோதரர்களில் ஒருவருக்குப் பிள்ளையில்லை. தெயவக் கண்ணுவின் தம்பி மகன் டாஸ்மாக் அடிமை. குடிவெறியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் அந்த இளைஞனை பறிகொடுத்த அந்தக் குடும்பம் வாரிசின்றி நிற்கதியாய் நிற்கிறது. தனது குடும்பத்திற்கு இந்த அரசு வழங்கிய அநீதிக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த தெய்வக்கண்ணு மக்கள் அதிகாரம் நடத்தும் போராட்டம் குறித்து கேள்விப்பட்டு பங்கெடுத்துக் கொள்கிறார்.
மேலப்பாளையூர் டாஸ்மாக் மக்களின் கோபக் கனலில் இழுத்து மூடப்படுகிறது. ஆத்திரம் கொண்ட அதிகாரிகள், பொய்வழக்கில் போராட்டத்தில் முன்நின்றவர்களைக் சிறையில் தள்ளுகிறார்கள். தனது சிறை அனுபவம் நிறைய புதிய விசயங்களைக் கற்றுக் கொடுத்தது என்று தெரிவித்த தெய்வக்கண்ணு, குடியால் தனது கிராமத்தினர் அடைந்த துன்பங்களைப் பட்டியலிட்டார். பெண்களுக்கு குடிப்பழக்கமில்லாத மாப்பிள்ளைகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களைச் சொன்னவர்.. பல பெண்களுக்கு ஆண்களுக்கும் இதன் காரணமாகவே திருமணம் நடப்பது தடைபட்டுள்ளதை விவரித்தார்.
தெய்வக்கண்ணு
தானே 23 மாப்பிள்ளைகளைப் பார்த்துக் கொடுத்துள்ளதாகவும், அதில் 17 பேர் குடிகாரர்கள் என்றும் மீதியுள்ள 5 பேரும் எப்போது குடிக்கத் துவங்குவார்களென்று தெரியாது என்றும் வேதனைப்பட்டார். இது எங்கள் ஊர்.. .இங்கே சாராயக் கடை வேண்டாம் என்றும் நாங்கள் சொல்கிறோம் – திறப்பேன் என்று சொல்ல கலெக்டர் யார்? மக்களின் தாலியறுக்கும் இந்தப் பொம்பளை சொந்தக் கட்சிக்காரனுக்கு தாலியெடுத்துக் கொடுக்கிறதே.. அந்தக் குடும்பங்கள் விளங்குமா என்று ஒரு விவசாயிக்கே உரிய எளிய தர்க்கத்தை முன்வைத்த போது காவலுக்கு நின்று கொண்டிருந்த ஆய்வாளர் தனது தொப்பியைக் கழட்டி தலையைக் கவிழ்த்தார்.
ஐம்பதுகளில் இருக்கும் அந்த போலீசுக்கு குடிக்கும் ஒரு பொறுக்கி மகனோ அல்லது குடிகாரக் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்ணோ இருந்திருக்கலாம்.. அந்த வேதனையை ஒரு தகப்பனாக அவர் அந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்திருக்கலாம்.. அவரிடம் மட்டுமின்றி காவல் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற கீழ்நிலைக் காவலர்கள் முகங்களிலும் ஒரு வித குற்ற உணர்ச்சியைக் காண முடிந்தது.. அது ஒருவேளை டாஸ்மாக் வாசலில் குடிகாரர்களுக்கும் சரக்குக்கும் சால்னாவிற்கும் காவலாக நின்றதன் காரணமாக ஏற்பட்ட உறுத்தலாக இருக்கலாம் – அல்லது சமூகம் சமூகம் என்று சொல்லப்படுவதில் தாங்களும் ஒரு அங்கம் என்று துளியாக உணர்ந்த தருணமாகவும் இருக்கலாம்.
சரக்குப் பார்ட்டிகளின் முன் கவிழ்ந்த அந்த விரைத்த தொப்பிகளின் உணர்ச்சிகள் எப்படி இருந்திருக்கும்? அதை மையம் கலைக்குழு நடத்திய நாடகம் காட்சி வடிவிலேயே நம் கண்முன் நிறுத்திக் காட்டியது. போலீசின் தொப்பி மட்டுமா, நமது அமைச்சர்களின் முதுகுத் தண்டுவடங்கள் அனுபவிக்கும் துன்பத்தையும் விவரித்த அந்த நாடகத்தைக் காணாதவர்கள் வரப்போகும் மாநாட்டு சி.டியை வாங்கிப் பார்த்து இரசிக்கலாம்.
மையம் கலைக்குழவின் நாடகம்
சிறப்புரை நிகழ்த்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையனும் தனது உரையில் ”போலீசே உணர்ந்து விட்டதால் இனி மற்றவர்களுக்கு உணர்த்துவது அத்தனை சிரமமில்லை” என்று குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மக்கள் அதிகாரத்தின் அரசியலையும் அதன் தேவையையும் ஏற்கனவே பேசி விட்டதையும் அதன் காரணமாக நேரம் குறைவு என்பதையும் பத்து மணிக்கு மேல் பேசுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதையும் குறிப்பிட்டு தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார் தோழர் மருதையன்.
தோழர் மருதையன்
மாநாட்டின் மற்றொரு சிறப்புரையாளரான மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, இது இன்னுமொரு வழமையான மாநாடு இல்லை என்பதால் இங்கே மாநாட்டுத் தீர்மானங்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார். மதுவிலக்குக் கொள்கையில் ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டங்களை குறிப்பிட்டவர், தமிழக மக்கள் தேர்தலுக்காக காத்திருக்காமல் உடனடியாக களத்தில் இறங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே இம்மாநாடு விடுக்கும் அறைகூவல் என்றார்.
எங்கெல்லாம் மக்கள் தங்கள் பகுதியிலிருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடர்பு கொண்டால் தலைமையேற்று வழிநடத்த தயாராக இருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டார். மேலும், ஒரு அமைப்பு என்கிற முறையில் தோற்றுப் போன இந்த அரசு நிர்வாகம் நமது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து டாஸ்மாக்கை மூடும் என்று நம்பத் தேவையில்லை என்றார் ராஜு. மேலும், ஜெயலலிதா காட்டும் இரட்டை இலை சின்னத்தில் ஒரு இலை போலீசு என்றால் இன்னொரு இலை போதை என்பதைக் குறிப்பிட்டவர், போதைக்கு அடிமையாக்கி மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்து மறுப்பவர்களைப் போலீசைக் கொண்டு வீழ்த்து என்பதே இந்த அரசின் கொள்கை என்பதை குறிப்பிட்டார்.
தோழர் ராஜு
நமது ஊரில் நமது விருப்பத்திற்கு மாறான ஒன்றை ஏன் அனுமதிக்க வேண்டும்? குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மக்கள் திரளாக நின்று எதிர்த்தால் அரசின் குண்டாந்தடியான போலீசால் என்ன செய்து விட முடியும் என்று கேள்வி எழுப்பியவர், ஐந்து மாவட்ட போலீசை இறக்கினால் மக்கள் பீதியடைவார்கள் என்பது அரசின் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால், ஐந்து மாவட்ட மக்களும் களத்தில் நின்றால் சில ஆயிரம் போலிசால் என்ன செய்து விட முடியும் என்கிற எதார்த்தத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றார். மக்கள் திரள் போராட்டங்களின் வெற்றியை ஏற்கனவே சந்தித்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடியது, பாலாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்தது போன்ற போராட்ட அனுபவங்களையும் விளக்கினார்.
கடலூர் கச்சிராயநத்தம் கிராமத்திலிருந்து வந்த மந்திரகுமாரி தனது ஊரை டாஸ்மாக் எப்படி விதவைகளின் கிராமமாக மாற்றியது என்பதை விளக்கினார்.”அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படத்தின் கதையை அவரது உரை நிகழ்த்தியது. டாஸ்மாக்கை மட்டுமல்ல பல்வேறு அநீதிகளுக்கும் காவலாய் நிற்கும் நீதித்துறையை அம்பலப்படுத்திப் பேசிய தோழர் வாஞ்சி நாதன்,மழலை மொழியில் குடியின் கேடுகளை விளக்கிய சிறுமிகள், கேரளாவிலிருந்து வந்து கலை நிகழ்ச்சி நடத்திச் சென்ற கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு என்று மாநாட்டின் நிகழ்ச்சிகள் உணர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தன. மேடையில் டாஸ்மாக்கின் வேதனை சோகமான பாடலாக மலையாளத்தில் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது தமிழர் கண்ணோட்டம் இதழை விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒருவர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவோம், அதிகாரத்தைக் கையிலெடுப்போம் என்று தெய்வக் கண்ணு பேசிக் கொண்டிருந்த போது, மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட நடைமுறை சாத்தியமான வழி குர் ஆனில் இருப்பதாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒரு அப்பாவி!
தோழர் வாஞ்சிநாதன்
கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு
மந்திரகுமாரி
சிறுமிகள்
இறுதி நிகழ்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடந்தது. டாஸ்மாக் தொடர்பான புதிய பாடல்களோடு நடந்த அந்தக் கலைநிகழ்ச்சியின் விரிவான பதிவு பின்னர் வெளியிடப்படும் என்றாலும், பள்ளி மாணவி பாடிய பாடல் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்..
என்கிற பல்லவியோடு துவங்கிய அந்தப் பாடலின் வரிகள் ஒரு பெண் குழந்தையின் பார்வையில் குடிகாரத் தந்தையால் விளையும் துன்பங்களை பட்டியலிட்டது. ஆசையோடு தின் பண்டங்கள் வாங்கிக் கொண்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்த தன் தந்தையை ஏன் டாஸ்மாக்கைத் திறந்து கெடுத்தீர்கள் என்ற தேம்பும் குரலின் அந்தக் கேள்வி இதயம் கொண்டோரை உலுக்கும். மற்ற பிள்ளைகளின் தாய் தந்தையரெல்லாம் பள்ளிக்கு வருகிறார்களே.. நான் பாடல் போட்டியில் வென்று பரிசு பெறப் போகும் நிகழ்வுக்கு நீ வருவாயா அப்பா? இருட்டி விட்டதே… எனக்கு அச்சமாக இருக்கிறது.. நீ எங்கே விழுந்து கிடக்கிறாயோ அப்பா..?
நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியெல்லாம் அந்தப் பெண் தோழரின் ஏக்கமான குரல் மனதின் ஆழத்தில் குடைந்து கொண்டே இருந்தது…
ஆனால்.. இந்த பரிதவிப்பெல்லாம் மிடாஸ் முதலாளிகள் உணரமாட்டார்கள்..
உணர்ந்தவர்கள் முன் வாருங்கள்.. நாம் உணர்த்துவோம் என்பதே இந்த மாநாட்டின் செய்தி!
“யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பலியாக்கப்படலாம் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். இதை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் இந்தப் படம், மக்களின் கவனத்தை மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரின் கவனத்தையும் கோரி நிற்கிறது. இந்தியச் சட்டங்கள் அவற்றின் உயரிய நோக்கங்களுக்கேற்பப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அதைச் செய்யக்கூடியவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான். தங்கள் மனசாட்சியை நோக்கி ஒரு கலைஞன் விடுக்கும் செய்திக்கு அவர்கள் காதுகளும் மனங்களும் திறக்குமா?”
– விசாரணை திரைப்படம் குறித்து, தி இந்து தமிழ் நாளிதழில் அதன் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் எழுதிய கட்டுரையின் இறுதி வரிகள்.
ஒரு அமைப்பு முறையின் குறைகளை தீர்க்கும் சூட்சுமம் அந்த அமைப்பின் தளகர்த்தகர்களான அதிகார வர்க்கத்தின் மனசாட்சியில் மறைந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன?
ஒரு அமைப்பு முறையின் நோய் அந்த அமைப்பு முறையின் சட்ட திட்டங்களால் அல்ல, அமல்படுத்தும் நபர்களாலேயே தீவிரமடைகிறது என்ற வாதம் இரு உண்மைகளை பகிரங்கப்படுத்துகிறது. அமைப்பில் எந்த பிரச்சினையுமில்லை, நபர்களை சீர்திருத்தினால் போதும் – எதிர்த்து வரும் புதிய முறையை ஆதரிக்கத் தேவையில்லை. இறுதியில் இப்போது இருக்கும் அமைப்பு முறையை கை விடக் கூடாது, தேவையானல் கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம்! மாற்றச் சொல்லி இரத்தம் சிந்த வேண்டாம்!
படிப்பவர்க்கேற்ப பிரதியின் பொருள் மாறுபடும் எனும் பின் நவீனத்துவ ‘பொன்மொழி’க்கேற்ப விசாரணை திரைப்படத்தை விளக்குதல் ஆளாளுக்கு மாறுபடுமோ? இல்லை பிரதி எடுத்துக் கொண்டிருக்கும் பொருளின் அல்லது துறையின் பொது இயக்கத்தை எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்கு வேறுபடுமா?
ஆட்டோக்காரர், லாரி ஓட்டுநர், உதிரி இளைஞர்கள், ஏழைகள், பாதையோர வியாபாரிகளின் பிழைப்புத் தருணங்களில், தமது பத்திருபது ரூபாய் கூலியை – வருமானத்தை பறிக்க வரும் வழிப்பறிக்காரராகவே ஒரு போலிஸ்காரரைச் சந்திக்கிறார்கள். போராடும் தொழிலாளிகள், மாணவர்கள் இன்னபிற ஊழியர்களுக்கு அரசின் அடியாட்களாய் தோன்றும் காவல் துறையினர் புரட்சிகர அமைப்புகளைப் பொறுத்த வரை ஆளும் வர்க்கத்தின் வேட்டை நாயாக தென்படுவர். எனினும் இதில் சேர விரும்பாத படித்த நடுத்தர வர்க்கத்திற்கு மேற்கண்ட படிதான் தோன்ற வேண்டும் என்பதில்லை. அதிக பட்சம் ஏதாவது சொத்து தகராறு, குடும்பப் பிரச்சினைகள், கடவுச்சீட்டு விசாரணை போன்றவற்றுக்கு வேறு வழியின்றி காவல் நிலையம் போவது தவிர இவர்கள் உலகில் போலிசுக்காரர்கள் காத்திரமான பாத்திரத்தில் இல்லை. அதே நேரம் போலிசு குறித்த பயம் இவர்களிடத்தில் இல்லை என்பதல்ல.
விசாரணை திரைப்படம் குறித்து கருத்துரைக்கும் பலரும் இந்த வர்க்க்கத்தின் அளவு கோலின்படி, எளியோரை வதைக்கும் போலிசை கலைநயத்தோடும், பதட்டத்தோடும் சித்தரிக்கும் திரைப்படம் என்கிறார்கள்.
லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமார்
தள்ளிப் போன தனுஷ் படத்தினால் தற்செயலாக அமைந்த இந்தத் திரைப்பட உருவாக்கம், பின்பு இத்தகைய கவனம் பெறுமென்பதை வெற்றி மாறன் ஊகித்திருக்க மாட்டார். அதே நேரம் ஒரு கலை அதன் உருவாக்கத்தில் படைத்தவனையும் உள்ளிழுத்துக் கொண்டு புதிய தரிசனங்களை உணர்த்தும் என்பதால் இந்த “தற்செயல்” பிரச்சினையல்ல. சந்திரகுமார் எனும் ஆட்டோ தொழிலாளியின் சுய அனுபவத்தை தழுவிய இந்தத் திரைப்படம் எந்த அவசியத்தினால் பலரையும் ஈர்த்திருக்கிறது? போலீசின் மீதான பயமா? போலிசுத் துறையை இயக்கும் இந்த ‘அமைப்பு’ குறித்த விமரிசனமா?
நாவலின் நேரடி கதையாக்கம் என்றாலும் முதல் பாதியில் சந்திரகுமாரின் அனுபவங்களையும், பின்பகுதியில் தான் உருவாக்கிய கதையையும் சேர்த்தே இப்படத்தை ஆக்கியிருப்பதாக இயக்குநர் கூறியிருக்கிறார். நாவல் படித்தோருக்கு இந்த படம் வேறு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்று அவர் கூறுவதும் இதன் பொருட்டே. சொல்லப் போனால் இது இயக்குநரின் படம் – சந்திரகுமாருக்கு பணிவாக நன்றி தெரிவிக்கப்பட்ட போதிலும்.
ஆந்திராவிற்கு பிழைக்கச் சென்ற தமிழகத் தொழிலாளிகளின் காவல் நிலையக் கொட்டடி வதைகளோடு படம் முடிந்திருந்தால் அதை ஆவணப்படம், பிரச்சாரப் படம் என்று குறைத்திருப்பார்களோ தெரியவில்லை. எளியோருக்கு இழைக்கப்படும் வன்முறையும், கொலையும், கைதுகளும், சிறையும், தண்டனையும் வலியோரின் உலகிலிருப்பது போல ஒரு காவியத் துயரமாக இருப்பதில்லை. மூப்பனார் சைக்கிள் ஓட்டினால்தான அது எளிமை. மூப்பனார் நிலத்தில் பாடுபடும் விவசாயக் கூலிக்கு சைக்கிளே இல்லாமல் இருப்பது பிரச்சினையல்ல. ஆட்டோவில் விட்ட பணத்தை அப்படியே கொடுத்தால் ஒரு ஆட்டோக்காரர் நல் குடிமகனாக செய்தியில் இருப்பார். வரி ஏய்ப்பில் காலம் தள்ளும் ஒரு முதலாளி, தகவல் என்ற முறையில் கூட ஒரு செய்தியில் இடம் பெறமாட்டார்.
ஆந்திர போலீசு, தமிழக போலீசு என்ற பேதங்களுக்கு அப்பால் அடிப்பதில் ஒரே போலிசு என்று உணரவைத்த விசாரணை திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!
ஆந்திரத்து குண்டூரின் ஒரு வைகைறைப் பொழுதில் மர்மங்களுக்கு பொருத்தமான மஞ்சள் வெளிச்சத்தின் கீழ் துயிலெழுந்து நீராடி பணிக்குச் செல்லும் பாண்டியோடு நாமும் பயணிக்கிறோம். பிறகு உள்ளூர் நீதிமன்றத்தால் பாண்டியும் நண்பர்களும் விடுவிக்கப்படும் வரை அவர்களின் கையறு காவல் நிலைய கொடுமைகளை பதட்டத்துடனே பின்தொடர்கிறோம். ஆடியோ பாடியோ அடித்தோ ஆசைகாட்டியோ சதி செய்தோ அந்த இளைஞர்களை பணிய வைக்கும் போலிசின் தந்திரங்கள், அடாவடிகள் உண்மையிலேயே பார்ப்போருக்கு ஆத்திரத்தையும் அச்சத்தையும் வரவழைக்கின்றன. போலிசு எனும் வேட்டை நாய்களின் வெறியை இயல்பாக காட்டியதற்காக இயக்குநருக்கும், படப்படிப்பு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!
அந்தப் பகுதியில் கீழமை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பும், தமிழக போலிசு தனியாக சுற்றுவது மட்டும் யதார்த்தத்தின் படியே பொருத்தமாக இல்லை. சந்திரகுமாரின் நாவலில் அது எப்படி இருப்பினும் போலிசின் அத்து மீறல்களுக்கு முதன்மையான பாதுகாவலர்களே நீதிமன்றங்கள்தான். இரத்தம் சொட்டச் சொட்ட அடிபட்ட நிலையிலும் அதை ஏன் என்னவென்று பார்க்காமல் சிறைக்கனுப்பும் நீதிபதிகள்தான் போலிசு எனப்படும் உருட்டுக் கட்டையின் சட்டபூர்வ அங்கீகாரம்.
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பச்சையப்பா மாணவர்கள் பின்னர் சிறையிலும் வதைக்கப்பட்டார்கள். அவர்களை சிறை வைத்ததோடு பின்னர் சில இலட்ச ரூபாய் பிணையில் விடுவதாகச் சொன்னார் கீழமை நீதிமன்ற நீதிபதி. சொல்லப் போனால் நேரடியாக அடிக்கும் போலிசை விட சட்டத்தால் கடிக்கும் இவர்களே வில்லத்தனத்தில் முதன்மையானவர்கள்.
அடுத்து எந்த மாநிலப் போலிசும் இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் போது அந்த மாநில போலிசின் ஆதரவோடுதான் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – மேற்கொள்ள முடியும். அவர்களுக்கிடையே வேறு முரண்பாடுகள் எது இருந்தாலும் போலிசு எனும் துறையின் கட்டுக்கோப்பை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இருந்திருந்தால் ஆந்திர போலிசின் செம்மரக்கட்டை கொலைகளுக்குப் பிறகு அவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து பலரையும் கைது விசாரணை என்று பணியாற்ற முடியுமா? இல்லை அட்டாக் பாண்டியைத்தான் மும்பை சென்று தமிழக போலிசு கைது செய்ய முடியுமா?
நீதிமன்றத்தில் ஆந்திர போலிசிடம் முரண்பட்டு தமிழக இளைஞர்களை காப்பாற்றும் தமிழக போலிசான சமுத்திரக் கனியை நிஜத்தில் பார்க்கவே முடியாது அல்லது அரிதினும் அரிது. அதே சமுத்திரக் கனி பிறகு அதே ஆந்திரத்து போலிசின் உதவியோடு ஆடிட்டரை கடத்துகிறார். இந்தக் கடத்தல் சாத்தியம் எனும் பட்சத்தில் அந்த விடுதலை சரியல்ல. இவையெல்லாம் வழக்கமான லாஜிக் மீறல்களாக சுட்டவில்லை. இந்த படம் அமைப்பு முறையை விமரிசிப்பதாக இருந்தால் இவை முக்கியம் என்கிறோம். எனில் “விசாரணை” எதை விமரிசிக்கிறது?
இந்தக் கேள்விக்கு இரண்டாம் பகுதி விடையளிக்கிறது. எதிர்க்கட்சி பிரமுகர்களின் சார்பான தணிக்கையாளரை பேச வைத்தால் ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறலாம் என்று சில போலிசு அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். பிறகு அவரை காப்பாற்ற வேண்டியவர்களே இவன் பேசினால் கதை கந்தல் என்று போலீசு மூலம் கொல்வதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். ஆடிட்டருக்கு ஆதரவாக எதிராக என்று போலிசின் சதுரங்க நடவடிக்கைகளில் இன்ஸ்பெக்டர் முத்துவேலின் ஊசலாட்டமும், பாண்டி மற்றும் நண்பர்கள் சிக்கிக் கொள்வதும் காட்டப்படுகிறது. இறுதியில் இவர்கள் அனைவரும் கொல்லப்படுவதோடு போலிசின் மற்றொமொரு நாள் முடிகிறது.
பாண்டி குழுவினர் மேல் நிகழ்த்தப்படும் போலிஸ் வன்முறையை விட தணிக்கையாளர் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை, பார்க்கும் நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காரணம் என்ன இருந்தாலும் அவர் மேல்மட்டத்தோடு தொடர்புடையவர், படித்தவர், இங்கிதமானவர், தவறான முறையில் சொத்து சேர்த்திருந்தாலும் பெட்டி கிரிமினல் அல்ல. ஜட்டியோடு கிஷோர் அடிக்கப்படுவதிலிருந்து அவர் கொடூரமாக கட்டித் தொங்க விடப்பட்டு தொள்பட்டை, முதுகெலும்பு முறிந்து மரணமடையும் காட்சிகள் வரை பார்ப்போரின் அனுபவத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கின்றன. அது இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அச்சம். தான் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் போலிசு எனும் இரக்கமற்ற எந்திரத்தின் உண்மை முகத்தை பார்ப்பதால் வரும் பயம்.
ஆனால் முழுப்படம் முடிவடையும் போது இக்கதையினை படைத்தோரும், பார்த்தோரும் வந்தடையும் உணர்விற்கும் தி இந்து அரவிந்தன் வந்தடைந்த ‘அறத்திற்கும்’ பெரிய வேறுபாடு இருக்காது. அதாவது இத்தனை கொடூரமாக இருக்கும் போலிசை கொஞ்சமல்ல நிறையவே சுத்திகரிக்க வேண்டும். இதுதான் ‘அமைப்பு’ முறை மீதான விமரிசனமா?
உலகநாடுகளில் போலிஸ் வன்முறை
தந்தி டி.வி விவாதத்தின் போது சந்திரகுமாருக்கு ஏற்பட்ட லாக்கப் அனுபவம் தனியான ஒன்றல்ல, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அனுபவமும் கூட என்று சொன்னார் இயக்குநர். இது உண்மையென்றால் வெனிசில் இப்படம் பார்த்தோருக்கு அது பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காதே?
மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரை கொட்டடிக் கொலை, சித்திரவதை என்பது நம் நாடுகளைப் போல இருக்க வேண்டியதில்லை. அமெரிக்காவில் ஒரு கருப்பின இளைஞன், காவல் நிலையத்தில் அல்ல களத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அவன் ஆயுதம் வைத்திருந்தான், போலீசு அதிகாரியை தாக்க முயன்றான் என்ற சித்தரிப்பே கொல்வதற்கு போதுமானது.
முசுலீம் மதம் சார்ந்து தண்டிக்கும் அரபு நாடுகளில் ஒரு பொறுக்கி ஷேக் காப்பாற்றப்படுவதும், ஒரு அப்பாவி இலங்கைப் பெண் தலையறுக்கப்படுவதும் வெறும் போலிசு குறித்த வன்முறையா?
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் “மக்களின் நூற்றாண்டு” என்றொரு தொடர் ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியது. அதில் இருபதாம் நூற்றாண்டின் சாதனைகள் மக்களை முன் வைத்து விவரிக்கப்பட்டன. முதிய வயதில் உள்ள ஒரு சீனத்து பெண், அவளது இளமை நாட்களில் (1949- சீனப் புரட்சிக்கு முந்தைய காலம்) கம்யூனிஸ்டுகளின் இராணுவமான சீன செஞ்சேனை வந்து தங்கியதை பகிர்ந்து கொள்கிறார். வந்தவர்கள் அனுமதி பெற்று கிராமத்து வீடுகளில் தங்கியது, பொருட்களை காசு கொடுத்து வாங்கியது, பெண்களை கண்ணியமாக நடத்தியது அனைத்தையும் வெள்ளேந்தியாக அதாவது மேற்குலகின் கம்யூனிச எதிர்ப்பு கற்பனை புரூடாக்களை அறியாமல் உண்மையாகச் சொல்கிறார்.
ஒரு நாட்டின் ஜனநாயகப் போராட்ட வரலாற்றுக்கேற்பவும், அம்மக்களின் ஜனநாயக விழிப்புணர்வுக்கேற்பவும் போலீசின் வன்முறைகள், சட்டத்தின் அமலாக்கம் மாறுபடுகின்றன. இன்றும் பிரான்சில் தொழிலாளிகளோ, விவசாயிகளோ போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்த முடியும். அரசோ, போலிசோ ஒன்றும் செய்ய இயலாது. இங்கோ மாருதி தொழிற்சாலையில் போராடிய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் இன்றும் (சில வருடங்களாக) சிறையில் இருக்கின்றனர்.
ஆகவே உலகமெங்கும் எல்லா ‘அமைப்பு’க்களிலும் போலிசு வன்முறை ஒரே மாதிரியானது என்ற புரிதல் மேற்குல என்.ஜி.ஓக்களால் பிரச்சாரம் செய்ப்படும் ஒரு கருத்து. அதன் நோக்கம் மேற்குலகின் ஆசி பெற்ற அரசுகளின் பாவத்தை மறைப்பதற்கு, போலிசை சீர்திருத்த வேண்டும் என்று முன் வைப்பதே. சட்டென்று சுட்டுக் கொல்லும் மேற்குலகில் இத்தகைய அணு அணுவாக வதைக்கும் பழையை முறை தற்போது காணக் கிடைக்காது என்பதாலும் வெனிசில் “விசாரணைக்கு” வரவேற்பு கிடைத்திருக்கலாம்.
விசாரணை திரைப்படம் குறிப்பிடும் “SYSTEM – அமைப்பு” எது?
விசாரணை திரைப்படத்தில் ஒரு காட்சி! சாப்பாடு போட்டு பேரம் பேசும் போலிசு!
விசாரணை திரைப்படம் போலிசு எனும் துறையினை அரசு அல்லது State-ன் அங்கமாக வைத்து பார்க்கவில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையே பந்தாடப்படும் ஆடிட்டர் பாத்திரம் அரசின் பாத்திரத்தை குறிக்கவில்லையா என்று கேட்கலாம். இல்லை. இது அரசாங்கம் அல்லது Government எனப்படும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகளின் ஆட்சி எந்திரத்தை சுட்டும் சொல். படத்தில் ஒருவேளை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதாக இருந்தால் போலிசு வன்முறையற்று இருந்திருக்குமா என்ன? ஒருவேளை ஆடிட்டர் மட்டும் பிழைத்திருப்பார்.
அரசுக்கு அரசாங்கம், போலிசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என்ற உறுப்புகள் உண்டு. எளிமையான புரிதலுக்காக ஊடகங்கள் (வினவு உட்பட) அரசு என்றாலே அரசாங்கம் என்று எழுதுவது, தி.மு.க – அ.தி.மு.க அரசு, மோடி-மன்மோகன் அரசு என்றே நிலைபெற்றிருக்கிறது. இவர்கள் இல்லை என்றாலும் ஆட்சி கலைக்கப்பட்டாலும் இங்கே அரசு தனது ஆட்சியைத் தொடரும். தெரிவு செய்யப்படும் ஐந்தாண்டு பிரதிநிதிகளை விட நியமிக்கப்படும் அதிகார வர்க்கமே இதன் அடிப்படை. அந்த அடிப்படையை முதலாளிகள், பணக்காரர்கள், பெரும் நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியம் அடங்கிய ஆளும் வர்க்கம் அளிக்கிறது – அரசியல சாசனத்தின் பேரில்.
விசாரணை திரைப்படம் அரசியல் திரைப்படமல்ல என்பதற்கு ஆடிட்டர் கதை ஒரு சான்று. அரசின் கொள்கைகளை, சட்டங்களை அமல்படுத்தும் போது பாதுகாக்கும் பொறுப்பை அதாவது ஒடுக்கும் வன்முறையை ஏற்றிருக்கும் போலிசாரை வரம்பிற்குட்பட்டு அரசாங்கங்களும் அதாவது ஆட்சியில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளும் தமது நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஜாபர் சேட்டை கருணாநிதியும், மோகன்தாசை எம்.ஜி.ஆரும் தமது கட்சிகளின் உளவாளிகளாக பயன்படுத்தலாம். அலெக்சாண்டர் தரும் உளவுத் துறை தகவலை வைத்து ஜெயலலிதா வேட்பாளர்களை தெரிவு செய்யலாம். சசிகலா சொத்து வாங்கலாம். பதிலுக்கு ஆர். நட்ராஜோ, அலெக்சாண்டரோ அ.தி.மு.கவில் சேர்ந்து அமைச்சராகலாம்.
படத்தில் காண்பிக்கப்படுவது போல ஒரு கட்சியின் மேல் மட்ட தணிக்கையாளரை கொல்வது வரம்பை மீறியது, சாத்தியமற்றது. ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இருக்கும் ஓட்டுக் கட்சிகள் எந்த அளவுக்கு போலிசுத் துறையை பயன்படுத்தலாம்?
சசிகலா கும்பலை அடக்குவதற்கு செரினா மீது கஞ்சா வழக்கு, சுதாகரன் மீது வழக்கு, நடராஜன் மீது ஏதோ ஒரு போண்டா வழக்கு போடலாம். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்யலாம். ஜெயா மீது சொத்து குவிப்பு வழக்கு போடலாம். அதைத் தாண்டி ஜெயாவைத் தண்டிப்பது சாத்தியமில்லை.
ஆனால் செம்மரக் கட்டைகளின் பெயரில் தமிழக தொழிலாளிகளை சுட்டுக்கொன்ற ஆந்திரப் போலிசாரையோ, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்களை நரபலி வேட்டையாடிய தமிழக போலிசரையோ தண்டிக்க முடியாது. இவை இந்த அரசு தீர்மானித்திருக்கும் பணிகளில் வருபவை. மாஞ்சோலை போராட்டமோ, மாருதி தொழிலாளர் வேலை நிறுத்தமோ இங்கெல்லாம் போலிசு சுடலாம், கொல்லலாம், பிரச்சினையில்லை. அப்பாவி இர்ஷத் ஜஹானை சுட்டுக் கொன்று விட்டு ஹெட்லியை வைத்து தீவிரவாதி என்று கதையளக்கலாம். இவையெல்லாம் ‘அமைப்பு’ ஏற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகள். ஆக அரசு வன்முறைகளை ஓட்டுக்கட்சி வன்முறைகளாக சித்தரிப்பதும் புரிந்து கொள்வதும் பாரிய பிழை.
எது அரசு பயங்கரவாதம்?
இந்த அமைப்பு முறையில் போலிசு சீர்திருத்தப்படவேண்டும் என்பதே இப்படத்தை பார்த்தோர் அதிகபட்சம் கோர முடியும். சான்றாக இயக்குநர் ராம் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கும் கருத்தைப் பார்ப்போம்.
“நீங்களும் நானும் வாழும் இந்த நாடு,இதன் விதிகள், இதன் சட்டம் என எல்லாவற்றையும் விசாரணை செய்ய வருகிறது…
திரைக்கலையின் முழுமையோடு
சுவாரசிய நேர்த்தியோடு
அரச பயங்கரவாதத்திற்கு எதிராய்
முதல் தமிழ்ப் படம்…”
இந்திய இராணுவத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் மணிப்பூர் பெண் போராளிகள்!
ராம் சொல்வது போல இந்தப் படம் அரச பயங்கரவாதத்தைப் பற்றியதல்ல. போலிசு வன்முறை அல்லது போலீசின் பயங்கரவாதம் என்று கூடச் சொல்லலாம். படத்தின் முதல் கதையில் மேலதிகாரியின் வீட்டில் திருட்டுப் போன வழக்கை முடிக்க, அப்பாவிகளை குற்றவாளிகளாக்க முயல்கிறார்கள். இரண்டாவது கதையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சிக்கு ஆதரவாக ஒரு ஆடிட்டரை கொல்கிறார்கள். இரண்டுமே சட்டத்திற்குட்படாமல் செய்யப்படும் குற்றங்கள்.
அரச பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் அரசு அதாவது இராணுவம், போலீசு, நீதித்துறை, அதிகார வர்க்கம், அரசாங்கம் அனைத்தும் வெளிப்படையாக தன் சொந்த நாட்டு மக்கள் மீதோ அல்லது வேறு நாட்டு மக்களின் மீதோ நிகழ்த்தும் சட்டப்பூர்வமான படுகொலை அல்லது வன்முறையைக் குறிக்கும். சொந்த நாட்டில் செய்வது உள்நாட்டு பயங்கரவாதம், வெளிநாடுகளில் செய்வது ஆக்கிரமிப்பு பயங்கரவாதம்.
அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிலும், அபுகிரைப்பிலும் செய்யும் படுகொலைகள் ஆக்கிரமிப்பு பயங்கரவாத்தில் வரும். இந்தியாவில் குஜராத் இனப் படுகொலை, காஷ்மீரில் இந்திய அரசின் அடக்குமுறை, வட கிழக்கில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள், மத்திய இந்தியாவின் காட்டு வேட்டையில் துணை இராணுவங்களின் படுகொலைகள அனைத்தும் இந்திய அரசின் பயங்கரவாதம் எனப்படும். ஈழப் படுகொலைகள் கூட இலங்கை அரசு பயங்கரவாதம் நடத்திய இனப்படுகொலைதான்.
ஒருவேளை விசாரணை திரைப்படம் பினாயக் சென், காட்டு வேட்டை, காஷ்மீர், தீஸ்தா சேதல்வாத் போன்ற கதைகளில் தோய்ந்திருந்தால் சென்சாரிலேயே கொலை செய்யப்பட்டிருக்கும். இதெல்லாம் அறியாதவர்கள் அல்ல நமது படைப்பாளிகள்.
போலிசின் அன்றாட வன்முறைகளை ஏதாவது மேலோட்டமாக வேணும் நாம் சட்ட பூர்வமாக எதிர்க்கலாம், வழக்காடலாம் – அதனால் பயனில்லை என்றாலும். ஆனால் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சுட்டு விரலைக் கூட நீட்ட முடியாது. அது அங்கீகரிக்கப்பட்ட வன்முறை.
அதனால் விசராணை திரைப்படத்தை – போலிசின் வன்முறையை தத்ரூபமாக காட்டியிருந்தாலும் – அரசியலற்ற திரைப்படம் என்று அழைப்பதில் பிழையில்லை. திரைக்கதையில் சில அப்பாவிகளின் மீது சில போலிஸ்காரர்களின் நலன் காரணமாக சட்டத்தை ‘ஏமாற்றி’ நிகழ்த்தப்படும் வன்முறையையும் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தின் மூலம் பகிரங்கமாக நிகழ்த்தப்படும் சட்டப்பூர்வ பயங்கரவாதத்தையும் ஒன்று என்று புரிந்து கொள்வது அபாயகரமானது.
ஐ.பி.எஸ்-ஐ அரசோ ஐ.ஏ.எஸ்-ஸோ திருத்த முடியுமா?
இந்த திரைப்படம் போலிசு எனும் அடியாட்படையை இந்த அரசமைப்பு எப்படி கையாள்கிறது என்பதைப் பேசவில்லை. மாறாக இந்த அரசமைப்பு அளித்த அதிகாரத்தை காவல் துறை எவ்வளவு கேடாக பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மட்டும் காட்டுகிறது.
போலீசை திருத்த வேண்டுமென்று சொல்லும் சகாயம் அவர்களின் ஐ.ஏ.எஸ் துறையை யார் திருத்துவது?
அதனால்தான் அதிகாரி சகாயம், போலிசின் அதிகாரத்தை குறைத்து சீர்திருத்தும் சட்டம் வேண்டும் என்கிறார். பத்திரிகையாளர் அரவிந்தனோ சரியான சட்டத்தை நேர்மையாக அமல்படுத்தும் மனசாட்சி வேண்டும் என்கிறார்.
இந்தக் காவல் துறையே மக்களை சட்டபூர்வமாகவும் சில நேரங்களில் சட்ட விரோதமாகவும் ஒடுக்குவதற்காகவே, எலும்புத் துண்டு போட்டு வளர்க்கப்படும் வெறி பிடித்த மிருகம் என்கிறோம். இந்த அமைப்பின் சட்ட திட்டங்களே அதுதான் என்பதை மறந்து விட்டு வெறுமனே மனசாட்சி போன்ற ‘ஒழுக்க’ உணர்ச்சிகளில் மிதந்து கொண்டு பேசுவது, மிருகத்தை கட்டி வைத்து வளர்க்கும் பெரு மிருகமான அரசு அமைப்பை தாலாட்டுவதாகும்.
தந்தி டி.வி விவாதத்தில் தனக்கு சட்டதிட்டமெல்லாம் தெரியாது, ஆனால் சகாயம் அவர்கள் தார்மீக ரீதியாக இந்த அமைப்பில் இருந்து கொண்டே அதை விமரிசிப்பது தவறல்ல என்று வெற்றி மாறன் கூறியிருந்தார். இந்தக் கூற்றே தார்மீக ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் தவறு. முதலில் சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ்-களின் வேலை என்ன? போலிசு எனும் தடியை கையில் வைத்துக் கொண்டு மாவட்டம் தோறும் அல்லது துறை தோறும் கேட்பார் கேள்வியின்றி ஆட்சி நடத்தும் குறுநில மன்னர்களே கலெக்டர்கள் அல்லது துறைச் செயலாளர்கள்.
போலிசு அடித்தால், கொலை செய்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்து நீதி கேட்கலாம் என்பது திருப்பதிக்கு மொட்டை அடிப்பதை விட கேலிக்கூத்தானது. இந்திய அரசு, மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்களின் சட்டங்கள், கொள்கைகளை அமல்படுத்தும் நிர்வாக குவி மையங்களே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை கொண்டு வருவதோ, திருவண்ணாமலையில் ஜின்டாலை நிர்மாணிப்பதோ, கோவை வட்டாரத்தில் கெயில் குழாய் பதிக்க பாதுகாப்பு கொடுப்பதோ இவர்கள்தான். இவை மட்டுமே இவர்களின் கடமைகள்.
ஒருக்கால் சகாயம் இவற்றை எதிர்த்து தனது மாவட்டத்தில் மக்களது கோரிக்கையை ஏற்று இந்திய அரசை மறுக்க முடியுமா? அப்படி நிகழ்ந்தால் உடனே அவர் பதவிப் பிரமாணத்திற்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக சதி என்று கைது செய்யப்பட்டு மீள வழியின்றி சிறையில் அடைக்கப்படுவார். ஆனால் அதே சகாயம் விசாரணை திரைப்படத்தைப் பார்த்து போலிசை சீர்திருத்தம் செய்யக் கோருவது அரசால் அனுமதிக்கப்பட்ட கருத்துதான். தான் வளர்த்த மிருகம் வெறியேறி அலையும் போது அது வெறியை தணிக்கிறோம் என்று நரித்தனமாக காட்டுவதற்கான ஏற்பாடே போலிசை சீர்திருத்துகிறோம் என்பது.
காவல் நிலையங்களில் சி.சி.டி.விக்கள், கைது செய்யும் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், பெண்களை கைது செய்யும் போது நிபந்தனைகள், பதவி ஏற்றம் பெற்று வரும் காட்டுமிராண்டி ஐ.பி.எஸ்-ஐ விட மேட்டுக்குடியிலிருந்து நேரடியாக பயிற்சி பெற்று வரும் நாகரீக ஐ.பி.எஸ் எல்லாம் மேற்படி நாடகத்தின் காட்சிகள்தான். அதைத்தான் சகாயம் கோருகிறார். இது கூட தெரியாமல் தந்தி.டி.வியில் பாண்டேக்களும் மாலன்களும் ஆத்திரப்படுகிறார்கள்.
முத்துவேல் நல்ல போலீசு என்றால் கெட்ட போலீசு யார்?
“எந்த அமைப்பும் ஒரு தனிநபரை விட சக்தி வாய்ந்தவை, தனிநபரை அழுத்துபவை, திரைப்படத்தில் அப்படி முத்துவேல் எனும் இன்ஸ்பெக்டரின் நெருக்கடியை அனைவரும் உணர முடியும், இந்த கதையிலும் நல்ல போலிசுக்காரர்களை காட்டியிருக்கிறேன்” என்று விவாதத்தில் இயக்குநர் கூறியதை பார்க்கலாம்.
முத்துவேலாக வரும் சமுத்திரக் கனி ஒரு நல்ல அதிகாரி என்று பார்வையாளர்கள் இரண்டு முறை உணர்கிறார்கள். முதல் கதையில் தமிழ் இளைஞர்களை நீதிமன்றத்தில் காப்பாற்றுகிறார். இரண்டாம் கதையில் அவர்களை கொல்லாமல் எச்சரித்து விரட்டி விடலாம் என்று மேலதிகாரிகளிடம் பேசுகிறார். இறுதிக் காட்சியில் அவர் சக போலிசுக்காரர்களால் கொல்லப்படுவது காட்டப்படவில்லை என்றாலும் தியாகியாகவே மறைகிறார்.
இதைத் தவிர முதல் கதையில் அடிபட்ட இளைஞர்களுக்கு செல்பேசி கொடுத்து பேசச் சொல்லும் இளம் பெண் போலிசு வருகிறார். இவைதான் வெற்றிமாறன் சொன்ன நல்ல போலிசுக்காரர்கள் அல்லது அமைப்பு அழுத்தம் கொடுத்த நல்ல உள்ளங்கள்.
முதலில் சமுத்திரக்கனி ஆந்திரத்துக்கு அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை. தனது போலீசு படையோடு சட்ட விரோதமாக ஆடிட்டரை கடத்த வருகிறார். ஒரு வாய்ப்பில் அது நடக்கவில்லை என்றாலும் தனது எஸ்.பியோடு பேசி குண்டூர் மாவட்ட எஸ்.பி அவரது ஐ.பி.எஸ் பயிற்சி தோழன் என்பதால் இன்னமும் கடத்த வாய்ப்பிருக்கிறது என்கிறார். பிறகு தமிழ் இளைஞர்களை கேடாக பயன்படுத்தி கடத்துகிறார். கடத்தலுக்கு உதவியவர்களை விடுவிக்காமல் காவல் நிலையத்தை சுத்தம் செய்யச் சொல்லி ‘ஜனநாயக’ முறையில் கேட்கிறார். ஆடிட்டரை அடித்து விசாரிக்குமாறு எஸ்.பி கேட்கும் போது தட்டாமல் தட்டவும் செய்கிறார். இத்தனைக்குப் பிறகும் இவர் நல்லவர் என்றால் யார்தான் கெட்டவர்?
ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தியின் இலக்கணப்படி பல்வேறு துறைகளில் நல்லவர்கள் எனப்படுபவர்கள் இப்படித்தான் அறியப்படுகிறார்கள். அண்ணன் கொலை, கொள்ளைன்னு போனாலும் தண்ணி – பொண்ணுங்களை தொடமாட்டார், அய்யா காசு வாங்குனாலும் கண்டிப்பாக செய்வாரு – ஏமாத்த மாட்டாரு, இந்த தலைவரு நிறைய சம்பாதிச்சாலும் கேட்டு வந்தா மனசு நிறைய அள்ளிக் கொடுப்பாரு, ராமாவரம் தோட்டத்துக்கு போனா யாரும் சாப்பிடாம திரும்ப முடியாது என்று இந்த இலக்கணங்கள் தோற்றுவித்திருக்கும் விதிப்படி சமுத்திரக்கனியையாவது நல்லவராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
முத்துவேல் எனும் காரியவாதி போலிசை நல்லவராக ஏற்பதற்கு காரணம் பார்வையாளர்களிடத்திலும் இத்தகைய காரியவாதமே இலட்சியவாதமாக நிலைபெற்றிருக்கிறது.
ஆகவேதான் மீண்டும் சொல்கிறோம். ஒரு அமைப்பு முறையை அடிப்படையில் ஏற்றுக் கொண்டு மீறாமல் சிந்திக்கும் போது மட்டுமே இத்தகைய கொஞ்சமாவது நல்லவர்களல்லாம் முழு நல்லவர்களாக திரிக்க முடியும். உண்மையில் ஒரு அமைப்பு முறையின் கேடுகளை அறிபவன் முடிந்தால் அதை பகிரங்கமாக எதிர்த்து வெளியேறுவான். எதிர்க்க முடியவில்லை என்றால் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்வான். மோடிதான் இனப்படுகொலையின் சூத்திரதாரி என்று குற்றம் சாட்டிய குஜராத்தின் சஞ்சீவ் பட் காவல் துறையில் இருந்து வெளியேறினார். வியட்நாமிலும், ஈராக்கிலும் பணியாற்றிய அமெரிக்க வீரர்கள் பலர் தற்கொலை செய்திருக்கின்றனர்.
பத்திரிகையாளர் அரவிந்தன் மட்டுமல்ல,ஆனந்த விகடனும் “காவல் துறையின் மனசாட்சியை குறுக்கு ‘விசாரணை’ செய்யும் தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பு” என்கிறது. எனில் நமது காவல் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு தற்கொலை செய்ய வேண்டும் இல்லையேல் ராஜினாமா செய்து விட்டு போராட வேண்டும். அப்படி போராடியவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்காக மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், நக்சல்பாரிகளை ஒடுக்கிய போலிசைக் கூட ‘பொன்மனச் செம்மல்’ விட்டு வைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் சங்கம் உருவானதைத் தொடர்ந்து தமிழக போலிசாரும் (கீழ்நிலை போலிசு) நைனார்தாஸ், ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். அதை தடை செய்து, மத்திய ரிசர்வ் படையை வைத்து வேட்டையாடி இறுதியில் சங்கத் தலைவர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு மனநோயாளிகளாக மாற்றப்பட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்ற பதிவு கூட இங்கே கிடையாது. அரசு எந்திரத்தின் போலீசு, அதில் தமிழக போலீசு, கீழ் நிலை போலிசு என்று ஒரு பிரிவினர் சங்கம் அமைத்து போராடினாலும் மத்திய போலீசு ஒடுக்குவதற்கு வரும். இராணுவத்தில் கலகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். அதிகபட்சம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தாண்டி வேறு எதிர்ப்புகள் இங்கே சாத்தியமில்லை.
அவர்களது சுயமரியாதைக் கூட கோர முடியாத நிலையில் வைத்திருப்பதனால்தான் போலிசுத் துறையை மிருகங்களைப் போல பராமரிக்க முடிகிறது. அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.
கோட்டா போலிசு கொல்ல மாட்டாரா?
பு.மா.இ.மு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்காக பச்சையப்பா மாணவர்களை அடித்து நொறுக்கும் போலிசு!
ஒரு திரைப்படத்தில் வரும் சில குறியீடுகள், வசனங்களை வைத்து மட்டும் சினிமாக்களில் காண வாய்ப்பில்லாத அரசியல் முற்போக்கு கருத்துக்களை தேடுவதை என்ன சொல்ல? “படத்துக்கு எந்த விதத்திலும் பொருந்தாமல் விட்டெறியப்படும் இதுபோன்ற முற்போக்கு மிட்டாய்களைத்தான் பலரும் சப்பிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று விசாரணை குறித்த விமரிசனத்தில் அழகாக எழுதுகிறார் பாபு ஜான்ராஜ். அப்படி ஒரு மிட்டாய்தான் “அட..சும்மா இருங்க சார், கோட்டாவுல உள்ள வந்துட்டு… சிஸ்டம் தெரியாம பேசிட்டு…”
பார்ப்பன மேல் நிலை ஆதிக்க சாதிகளிடமிருந்து வரும் நேரடி ஐ.பி.எஸ்-கள் மற்ற இடைநிலைச் சாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரை அறிவற்றவர்கள் என்று திட்டுவது, கேலி செய்வது இந்தியா முழுவுதும் உள்ள நிலை. இங்கு அவர்களின் வில்லத்தனத்தை சுட்டும் வகையில் நேர்மறையாக பேசப்படுகிறது. வருணாசிரம அமைப்பின் விதிகளை அறிந்தவர்கள் சமூகத்தில் நிகழ்த்தும் அநீதிகளை கடமை என்று புரிந்து கொள்வது போல இங்கும் போலீசு அமைப்பின் விதிகளை புரிந்து கொள்பவர்களுக்கு தயக்கமோ தாமதமோ இருக்காதாம். எதார்த்தத்திலோ நாங்களும் அறிவானவர்கள்தான் என்றே ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து வருபவர்கள் தங்களை பார்ப்பனமயமாக்கி கொள்கிறார்கள். மறுபுறம் இதுவே போலிசு துறை எனும் போது இடை நிலை ஆதிக்கசாதிகளைச் சேர்ந்தோரே கயர்லாஞ்சியிலோ இல்லை பரமக்குடியிலோ தாழ்த்தப்பட்டோரை கொல்வதற்கும் சுடுவதற்கும் காரணமாகிறார்கள். இளவரசன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு இடைநிலை ஆதிக்க சாதி வெறி அதிகார, போலிஸ் மட்டத்திலும் இருப்பது முக்கியமான காரணமில்லையா? யுவராஜின தெனாவெட்டிற்கும் அது அடிப்படையில்லையா?
ஒடுக்கப்படும் சாதியிலிருந்து வரும் ஒரு போலிசுக்காரர் ஒடுக்கப்படும் மக்களுக்காக பணியாற்றுவார் என்பது வடிகட்டிய பொய்! மக்களை ஒடுக்குவதற்காக பராமரிக்கப்படும் போலிஸ் துறையில் தலித்துக்களோ, இடைநிலைச்சாதிகளோ போதிய பிரதிநிதித்தவும் பெற்று விட்டால் அந்த துறை சமூகநீதியுடன் செயல்படும் என்பது தோற்றுப்போன சமூகநீதி அரசியல் மற்றும் தலித் அரசியல் வைத்திருக்கும் காரியவாதமே! இதன் மூலம் இந்த அமைப்பு முறையின் வன்முறையை மறைப்பதற்கே இந்த அடையாள அரசியல் பயன்படுகிறது.
நவீனமயமாகும் போலிசு வன்முறை!
அடிதடி பஞ்சாயத்து ரவுடிகளெல்லாம இன்று கோட் சூட்டு போட்ட கல்வி வள்ளல்களாகவும், ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் கோடிகளை சுருட்டும் காலத்தில், போலிசும் பழைய பாணியிலான அடிதடிகளை நம்பி தனது வன்முறைகளை செய்வதில்லை. ஆம் அவர்களது வன்முறைகள் முன்னிலும் அதிகமானாலும் நவீனமயமாகி வருகின்றன.
மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்தோழர் கிஷன்ஜி போலீஸ் மிருகங்களால் கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி!
இன்றைய தெலுங்கானா பிராந்தியத்தில் அன்று செல்வாக்குடன் இருந்த மாவோயிஸ்ட் கட்சியினரை ஆந்திர போலிசு எப்படி முடக்கியது? முதலில் மாவோயிஸ்ட்டுகளுக்கு உணவு கொடுத்தோர், இடம் கொடுத்தோர் என்று மக்களை வகை தொகையில்லாமல் அடித்து நொறுக்கியதோடு கொன்று குவித்தது. பிறகு மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி அவர்களுக்கு நலத்திட்டங்கள் என்ற பெயரில் சில பம்மாத்துக்களை செய்து, கிராமம் தோறும் ஆள்காட்டிகளை உருவாக்கி மாவோயிஸ்ட்டுகளின் கொரில்லாக் குழுக்களை அவர்கள் இருக்குமிடத்திலேயே தேடிச் சென்று அழித்தது. இப்படித்தான் போலிசு வன்முறை நவீனமயமாகி வருகிறது. அதே நேரம் அதிகரித்து வரும் உலகளாவிய பொருளாதார மற்றும் ஆளும் வர்க்க நெருக்கடிகள் போலிசுக்கு மேலும் மேலும் அதிக அதிகாரத்தையும், அடக்குமுறைக் கருவிகளையும் கோருகின்றன.
‘விசாரணை’யின் தாக்கம் என்ன?
போலிசின் உருவாக்கம், பயிற்சி, வன்முறை, நடத்தை அனைத்தும் இந்த அமைப்பே திட்டமிட்டு உருவாக்குகிறது. அதனாலேயே அவர்களது வன்முறையை சட்டத்திலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது. அதனால்தான் போலிசார் லஞ்சம் வாங்குவதிலிருந்து, தலைகளை கொய்வது வரை அச்சமின்றி செய்கின்றனர்.
அந்த அச்சத்தைத்தான் தி இந்து அரவிந்தன் இப்படிக் குறிப்பிடுகிறார்:
“அமைப்பின் இந்தக் குரூரமான விளையாட்டில் யார் வேண்டுமானாலும் பலியாகலாம் என்பதையும் காட்டுகிறார் (இயக்குநர்). உதிரிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இருக்கிறது என்பதுதான். ஆனால், முழுமையான பாதுகாப்பு யாருக்குமே இல்லை என்பதைப் பார்வையாளர்களின் முதுகுத் தண்டு சில்லிடும் விதத்தில் காட்டிவிடுகிறார்.”
விசாரணை திரைப்படம் உருவாக்கும் மிகத் தவறான கருத்து இதுவே. இந்த அமைப்பில் ஏழைகள், தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு இல்லை, பணக்காரர்கள், முதலாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை என்று போலிசு வன்முறையை சமப்படுத்தும் இந்த சிந்தனைதான் அபாயகரமானது. கீதையில் கண்ணன் படிமங்களாக கூறும் காலையும் நானே, மாலையும் நானே, கடமையும் நானே, குற்றமும் நானே, தண்டனையும் நானே, தீர்ப்பும் நானே, எல்லாம் நானே என்று பேசுவது வெறும் பம்மாத்து மட்டும அல்ல.
டி.வி.எஸ் ஆலை பேருந்து நிறுத்தத்தில் “கடமையைச் செய், பலனை எதிர்பாரதே” என்று கீதைக்கு விளம்பரம் கொடுக்கும் நோக்கில் தொழிலாளிகளின் போனஸ் உரிமையை ஆன்மீகத்தின் பெயரில் ஆசை என்பதாக விட்டொழிக்குமாறு அடக்குகிறாரே ஐயங்கார் அதுதான் கீதை இந்த நாட்டில் இன்றும் நீடித்திருப்பதற்கான காரணம். இலாபம் சரியானதாகவும், போனஸ் தவறானதாகவும் கருதுகிற முதலாளி, கீதையை எல்லோருக்குமான நீதியாக பரிந்துரைக்கலாம். ஆனால் ஒரு தொழிலாளிக்கு அது எல்லா விதத்திலும் அநிதீயாகவே இருக்கும்.
போலிசு ராஜ்ஜியத்தில் ஜனநாயகம் இருக்குமா?
அரசு என்பது எப்படி பொதுவானது அல்லவோ அது போலவே அது ஊட்டி வளர்க்கும் போலிசும் பொதுவானது அல்ல. இன்றைய அரசு முதலாளிகளுக்கானது என்றால் போலிசும் அவர்களுக்கானதே. தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை இருப்பதை வைத்து இது எல்லாருக்குமான ஜனநாயகம்தானே என்று கேட்கலாம். இந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துகின்ற வேறு ஒரு முக்கியமான உரிமை ஒன்று உண்டு. அதுதான் சொத்துக்களை சேர்க்கும், அதிகரிக்கும், சம்பாதிக்கும் உரிமை. இந்த உரிமை இருக்கும் போது மற்ற உரிமைகள் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனெனில் மனிதர்களுக்கிடையில் சொத்துரிமை வைத்து உருவாகும் ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக சமத்துவ உரிமைக்கு எதிராகவே இருக்க முடியும்.
இப்படி இல்லாதவர்களும், இருப்பவர்களும் வர்க்கங்களாக பிரிந்திருப்பதாலேயே வரலாற்றில் அவர்களுக்கென்று ஒரு நடுநிலை நாட்டாமையாக காட்டிக் கொள்ள அரசு தோற்றுவிக்கப்படுகிறது. அதற்கான அதிகாரத்தையும் ஆயுதப் படைகளையும் கொண்டிருப்பதை விதிமுறைப்படி நியாயப்படுத்துகிறது. இப்படித்தான் இந்த நாட்டின் ஆயுதப் படைகளும் அதன் அங்கமான போலிசும் அம்பானி, அதானி, டாடாக்களின் 24 X 7 செக்யூரிட்டி சர்வீஸ் என்கிறோம்.
பு.மா.இ.மு தோழர்கள் போலீசால் தாக்கப்படுகின்றனர்.
நேர்மாறாக போலிசை ஏதோ அனைவருக்குமான வில்லன்களாக சித்தரிப்பதோ, உள்வாங்குவதோ படத்தில் வரும் பாண்டி நண்பர் குழாமிற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. ஒருக்கால் போலிஸ் அவர்களை நையப்புடைப்பதற்கான பலமே போலிஸ் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று என்ற அங்கீகாரமே. அந்த அங்கீகாரத்தை இந்த அமைப்பும் அரசியல் சட்டமும் கொடுக்கலாம், நாம் கொடுக்கலாமா?
கொல்லப்படும் தணிக்கையளார் தன்னை அடிக்கும் போலிசிடம் கூறுவதாக ஒரு வசனம் வரும். “என்ன தூக்க உன்ன அனுப்புன மாறி நாளைக்கு உன்ன தூக்க வேறு ஒருத்தன் வருவான்”. இது போலிசின் வன்முறையை கொஞ்சம் ‘தத்துவ’ நிலைக்கு கொண்டு செல்லும் அபத்தம். அதாவது கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் போல.
இந்தப் பழுதுப் பார்வையே இந்தப் படத்தை போலீசு மீதான அர்த்தமற்ற காரணமே இல்லாத பயமாக பார்ப்போரிடம் இறங்குகிறது. அதற்காக போலிசை வெட்டி வீழ்த்தும் நாயகத்தனம் படத்தில் இல்லை என்பதல்ல நமது விமரிசனம்.
சில வருடங்களுக்கு முன்னர் போராட்டம் ஒன்றிற்காக சுவரொட்டி ஒட்டிய மூன்று தோழர்களை கைது செய்து காவல் நிலையத்தில் ஓரிரவு தங்க வைத்தது சென்னை வடபழனி போலிசு. சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட சுதந்திரம் கிடையாதா என்று ஒரு தோழர் கேட்டதால் போலிசிடம் அடிபட்டார். அடிபட்டாலும் மீண்டும் முழங்கியதால் அடி கூடியது. அடுத்த நாள் காலையில் காலஞ் சென்ற தோழர் சீனிவாசன் அவர்களை மீட்டு வந்தார். அடி பட்ட புதிய தோழர் அடித்த போலிசை எதாவது பழிவாங்க வேண்டும் – சட்டப்படியே வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் – என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்.
புரட்சிகர அமைப்புகளில் சேருவோருக்கு கைது நடவடிக்கைகள் புதிதல்ல. ஆனால் அடிக்கும் ஒரு போலிசை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்ற அந்த உணர்ச்சி, பிறகு இது ஒரு போலிசால் நடப்பதல்ல, போலிஜனநாயகத்தின் விளைவு என்று ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக முதிர்ந்து தனது பழிவாங்கலை அரசியல் ரீதியில் மக்களை திரட்டுவதாக கனிகிறது.
ஆகவே எங்கள் அரசியல் செயல்பாடுகளில் நாங்களும் போலிசை வீழ்த்தும் நாயகர்கள் அல்ல. அது சாத்தியமும் அல்ல. ஆனால் இந்த போலீசும் போலி ஜனநாயகமும் ஏன் வீழ்த்தப்பட வேண்டும், அதற்காக எப்படி மக்கள் திரட்டப்பட வேண்டும் என்பதறிவோம்.
விசாரணைத் திரைப்படமோ போலிசு எனப்படுவர்கள் இந்த உலகில் எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்கள், கொடூரமானவர்கள் என்று சித்தரித்து விட்டு இந்த காக்கி கிரிமினல்களை வைத்து இயக்கும் போலி ஜனநாயக அமைப்பின் கொடூரத்தை மறைக்கிறது. அல்லது பேச மறுக்கிறது.
இரட்சணிய சேனையை ஆரம்பித்த வில்லியம் பூத்!
அமைப்பின் நெருக்கடிக்கு தீர்வு புரட்சியா, சீர்திருத்தமா?
ஆகவேதான் தி இந்து அரவிந்தன், காவல் துறை அதிகாரிகளின் மனசாட்சியை, இந்தத் திரைப்படம் தொட்டு எழுப்புமா என்று ஏங்குகிறார். இந்த ஏங்குதலும் பிரார்த்தனையும் வரலாறு நெடுகிலும் ஏராளமாய் தினுசு தினுசாய் இறைந்து கிடக்கின்றன.
Salvation Army எனப்படும் இரட்சனிய சேனை(கிறித்தவ மதத்தின் தொண்டு நிறுவனம்)-யின் நிறுவனர் வில்லியம் பூத்தும், கம்யூனிசத்தின் பேராசானாகிய காரல் மார்க்ஸும் 1849-ம் ஆண்டு வாக்கில்தான் இலண்டனுக்கு வந்தனர். ஒரு வட்டிக் கடையில் உதவியாளராக பணிபுரிந்த பூத், கடைக்கு வரும் ஏழைகளின் துயரக் கதைகளை தினசரி பார்க்கிறார். காரல் மார்க்ஸோ தனது குழந்தைகளின் துணிகளைக் கூட அடகு வைத்து ரொட்டியும், உருளைக் கிழங்குகளை வாங்கி குடும்பத்தின் பசி போக்கியவர். அந்த வகையில் ஏழ்மையை வாழ்ந்து அனுபவித்தவர்.
இந்த ஏழ்மைக்கு காரணம் மனிதனின் சித்தமல்ல, மதமும் அல்ல, அவன் கூட்டமாய் வாழும் சமூகத்தின் அமைப்பு முறையே, அந்த முதலாளித்துவ முறைதான் ஏழ்மையை சுரண்டல் மூலம் தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கிறது என்று மார்க்சியத்தின் தேவையை கண்டு சொன்னார் மார்க்ஸ். பிறகு மார்க்ஸ் மற்றும்
காரல் மார்க்ஸ்
ஏங்கெல்ஸ்சின் தத்துவம் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றிக் கொண்டு இந்த உலகில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. ஏழ்மைக்கு காரணம் மனிதனின் சித்தமே, தயாள குணம் குன்றிப் போனதே, அதை மதத்தின் மூலம் மீட்டெடுக்க ஏழைகளுக்கு நேரடியாக உதவேண்டும் என்று இரட்சணிய சேனையை ஆரம்பித்தார் பூத்.
ஒருவர் போராடக் கூறினார். மற்றொருவர் இரக்கத்தைக் கோரினார். ஒருவர் பகத் சிங், மற்றொருவர் காந்தி. அவர் நக்சலைட், இவர் வினோபாவே.
இன்று இலண்டன் கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு மத்தியில் அல்ட்ரா மாடர்னாக இருக்கும் இரட்சணிய சேனை அலுவலகமும், தொழிலாளிகளின் குடியிருப்பில் மார்க்சிய லெனினியக் குழுக்களின் அலுவலகங்களும் அந்தந்த பாரம்பரியங்களை பின் தொடர்கின்றன.
அமைப்பு முறையை சீர்திருத்தும் முயற்சிகளும், தூக்கி எறியும் முயற்சிகளும் இன்றும் தொடர்கின்றன. நாம் காவல் துறையின் மனசாட்சியை நோக்கி இரக்கத்தை கேட்க போகிறோமா, அதை இன்னமும் தூக்கி எறியாமல் சகித்துக் கொண்டிருக்கம் மக்களின் மனசாட்சியை உலுக்கப் போகிறோமா?
பாண்டேவின் தம்பி ஹரிகரன் போலிசு இமேஜுக்காக போராட்டம்
அது ஒரு விவாதம். மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறை’-யை வளர்ச்சியின் பெயரால் கிண்டிய பாண்டேயின் வழக்கமான விவாதம். தலைப்புக்கு பொழிப்புரையால் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருந்தார் அந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. முதல் சுற்றிலேயே மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதிகள் இல்லை, கொள்கை, அரசியல் சார்ந்து செயல்படுபவர்கள், அவர்களது செயலில் வன்முறைகள் இருந்தாலும் பயங்கரவாதிகள் இல்லை என்று அவர் சொன்னதும் பாண்டேவுக்கு தாங்கவொண்ணா ஆத்திரம்!
இதற்காகவா இவரை அழைத்தோம் என மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறைகளை’ பட்டியலிட்டு இவை பயங்கரவாதமில்லையா, அவர்களை ஆதரிக்கிறீர்களா என்றதோடு, விட்டால் உடன் போலிஸ் கமிஷ்னருக்கு போன் போட்டு கைது செய்யட்டுமா என்ற ரேஞ்சில் பிபி எகிற காட்டுரைத்தார் திருவாளர் பாண்டே அவர்கள்.
அந்த போலிஸ் அதிகாரியோ மாவோவியஸ்ட்டுகளின் வன்முறையை பயங்கரவாதமாக பார்க்க கூடாது, மக்களின் ஏற்றத் தாழ்வு சம்பந்தமான பொருளாதார பிரச்சினையாக பார்க்க வேண்டும், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு ஃபோர்ஸ் மட்டும் போதாது, ஃபாலிசியும் வேண்டும் என இறுதியில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பது குறித்தே பேசுகிறார். எனினும் நேரடி பயங்கரவாதிகளாக அழைக்காமல் சுற்றிவளைத்து கொல்லும் இந்த முறை பாண்டேவுக்கு உண்மையில் தெரியாது. அதனால் அரசுக்கு ஆதரவாக கூட்டி வந்தவரையே மாவோயிஸ்ட்டுகளின் ‘ஆதரவாளராக’ மாற்றி இதயம் படபடத்தார். அன்று இரவு அவர் கூடுதலாக ஒன்றிரண்டு சப்பாத்திகளையும், பச்சை மிளகாயையும் கடித்திருக்க வேண்டும்.
எதிராளியை சுற்றி வளைத்து விசாரிக்காமல் சட்டென்று சுட்டுக் கொல்ல வேண்டும் எனும் ஒரு உண்மையான என்கவுண்டர் போலிசுதான் திருவாளர் பாண்டே அவர்கள். அவர் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியதால்தான் மற்றவர்களுக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பெயர் கிடைத்திருக்கிறது.
பிப்ரவரி 2015, நான்காம் தேதி “விசாரணை” படம் வெளியான போது பாண்டே கொதி நிலையிலேயே இருந்திருப்பார். மொத்த காவல்துறையும் ஒரு திரைப்படத்தால் வில்லனாக மாற்றப்படுவது மட்டுமல்ல, சகாயம் போன்ற நடப்பு அதிகாரிகளே இந்த படத்தைப் பார்த்து போலிசின் அத்துமீறலை விமரிசித்திருக்கும் போது அவர் குறுமிளகாய் கடித்த வெறி பைரவராக அவஸ்தைபட்டிருப்பதில் அதிசயமில்லை.
உடனே அன்று மாலையே சுடச்சுட “விசாரணை (திரைப்படம்) பற்றி சகாயாத்தின் கருத்து நிதர்சனமா? மிகைப்படுத்தலா?” என்று தந்தி டி.வி விவாதத்தை தலைமை செய்தியாசிரியராக முடிவு செய்து விட்டார். இருப்பினும் நெறியாளராக தானே இல்லாமல் தம்பி ஹரிகரனை நடத்தச் சொல்லி விட்டார். ஒருவேளை அவர் கலை ஆர்வம் இல்லாத ஔரங்கசீப்பா, கற்பூரத்தின் மணமறியாத காளவாயோ தெரியாது. ஆனாலும் இந்த உலகில் தன் மனதின் துடுக்கறிந்த மிடுக்கன் மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களை அந்த விவாதத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்கிறாரே அங்கு நிற்கிறார் பாண்டே. இந்த விவாதத்தை பார்த்த பிறகு முதலுக்கே மோசமோ என்று அவர் ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்திருக்க வேண்டும்.
அந்நிகழ்ச்சியில் பாண்டேவால் ஆதிர்வதிக்கப்பட்ட ஹரிகரன் உரையை ஆரம்பிக்கிறார். அண்ணன் ஆத்திரம் கொண்ட அக்ரஹாரத்து லா பாயிண்ட் பாரிஸ்டரென்றால், தம்பி அதே லா பாயிண்டை கொஞ்சம் பெந்தகோஸ்தே பாஸ்டராக சற்று அன்னிய பாஷையுடன் முன்வைப்பவர்.
விசாரணை படத்திற்கு வெனிஸ் விருது, ரஜினி, கமல் பாராட்டு கிடைத்திருப்பதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சுளி போடும் ஹரிகரன், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள், “காவல்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. காவல் விசாரணையில் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் சீர்திருத்த சட்டங்கள் தேவை” என்று படத்தைப் பற்றி கூறியதை முன்வைக்கிறார்.
அரசாங்கத்தின் அங்கமாக இருக்க கூடிய சகாயம் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவியதாம். ஆகவே வரம்பற்ற அதிகாரத்தை காவல்துறை பெற்றிருக்கிறதா, மனித உரிமை மீறல் காவல்துறையால் அதிகரித்து வருகின்றனவா, காலத்தால் தேவையா சகாயம் கூறும் சீர்திருத்தம் என்று மூன்று கேள்விகளை முன்வைத்து உரையாடலை துவக்குகிறார். இருப்பினும் இவற்றை விட முக்கியமான கேள்வி அரசின் அங்கமாய் இருக்கும் ஒரு அதிகாரி இப்படி கருத்து கூறலாமா? அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் காவல் துறை அத்துமீறல்கள் மிகைப்படுத்தப்படுகின்றனவா, என்பதை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறார். இதுதானே அண்ணன் தீர்மானித்திருக்கும் கேள்வி என்பதால் நமக்கு வியப்பில்லை.
மனு நீதியை கரைத்து குடித்த சாணக்கியருக்கு படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை!
குற்றவாளிகள் மட்டுமல்ல காவல்துறைக்கு ஆதரவாக ஏவல் வேலை செய்யும் கனவான்களும் தமது தடயத்தை விட்டுவிட்டே செல்கிறார்கள். ஓய்வுபெற்ற மூத்த காவல் துறை அதிகாரி – சித்தண்ணன், மூத்த பத்திரிகையாளர் மாலன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் என மூன்று விருந்தினர்களை அறிமுகம் செய்த ஹரிகரன், கடைசியாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வந்த சிவ இளங்கோவை சொல்லிவிட்டு அவர் மட்டும் சகாயத்தின் கருத்தோடு ஒத்து போவதாக தெரிவிக்கிறார். இளங்கோவை தவிர மற்றவர் அனைவரும் ஹரிகரனையும் உள்ளிட்டு சகாயம் கருத்தை எதிர்ப்போர் என்பதோடு, முன்கூட்டியே இளங்கோவை பதம் பார்க்க இதமாக போட்டும் கொடுக்கிறாராம். இந்த பட்டியலில் வெற்றிமாறன் வரமாட்டார், எனெனில் அவர் வெனிஸ் வென்ற வீரன் என்பதால் மரியாதையுடனே நடத்த வேண்டியிருக்கிறது.
மற்றவர் கருத்து என்ன என்று தெரிவிக்காத போது சிவ இளங்கோவை மட்டும் அப்படி முன்கூட்டி ஏன் கூண்டில் நிறுத்துவது போல தெரிவிக்க வேண்டும்? ஆக விருந்தினர்களில் நெறியாளரையும் சேர்த்து மூவர் ஒரு கருத்திற்கும், ஒருவர் மறு கருத்திற்கும், வெற்றி மாறன் இயக்குநர் என்ற முறையிலும் என்றால் இது என்ன ஜனநாயகம்? அதிலும் மாலன், சித்தண்ணன், பாண்டே, ஹரிகரன் போன்ற அறிஞர்களை ஈடுகொடுக்க ஒரு அப்பாவியை திட்டமிட்டே தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு ‘விசாரணை’ என்கவுண்டர் பரவாயில்லையோ? ஏனெனில் செத்தவர்களுக்காக குரல் கொடுக்க கூட இங்கே இத்தனை தடை என்றால் போலிஸ் துறை ஏன் சுடாது?
பாண்டே இல்லாத குறையை போக்க வந்த மாலனிடமே முதலில் கேட்கிறார் நெறியாளர். சகாயத்தின் கருத்தை பொதுவாக பலரும் சொல்லுகிறார்கள், நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது, மக்களின் கருத்தும் கூட, இதை சகாயம் என்ற மூத்த அதிகாரி சொல்லியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
தான் படத்தை பார்க்க வில்லை என்று பணிவாக மாலன் ஆரம்பிக்கும் போதே, போலிஸ் அத்துமீறல் குறித்த விவாதத்தின் நாயகனான படத்தைப் பார்க்காமலேயே கருத்து சொல்ல அவர் ஏன் அழைத்து வரப்பட்டார் என்று கேள்வி எழுகிறது. மனு நீதியை விளக்கியோ வெறுத்தோ கொலையோ இல்லை கலையோ எது நடந்தாலும் சாணக்கியருக்கு தீர்ப்பு சொல்ல படம் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. மனுநீதியின் விதிகள் சுலோகமாய் ஒப்பிப்பதே தகுதி.
படம் குறித்து தெரிவித்த சகாயத்தின் கருத்திலும் படத்தை பற்றி இல்லை என்று பணிவை நியாயப்படுத்தும் மாலன் அடுத்த அடியிலேயே துணிந்து அந்தக் கருத்தில் Factual தவறு இருக்கிறது என்று எச்சரிக்கிறார். சொல் குற்றமல்ல, பொருள் குற்றமாம்.
மட்டற்ற அதிகாரம் போலிசிடம் இருப்பது உண்மையல்ல. தான் வழக்கறிஞர் இல்லையென்றாலும் பத்திரிகையாளன் என்ற முறையில் சட்டம் ஓரளவு தெரியும் என்று உரைக்கும் போதே வெற்றிமாறன் கொஞ்சம் கவலைப் பட்டிருக்க வேண்டும். போலிசின் அதிகாரங்கள் சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கின்றன ஐ.பி.சி 330, 331-லிருந்து அவர்களுக்கு விலக்கு கிடையாது. இந்தியன் போலிஸ் சட்டப்படி அவர்கள் என்ன செய்யலாம் – செய்யக்கூடாது என்று வரையறுக்கபட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. டி.கே பாசு எதிர் மேற்கு வங்க அரசு வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்பது போல வரையறைகள் இருக்கின்றன. சட்டத்தில் குறைபாடு இல்லை. நடைமுறையில் நமது அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே சட்டம் எப்படி செயல்படுகிறது…. எனும் போது லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்த ஹரிகரன் –
“இவ்வளவு ஃசேப்கார்டு இருந்தாலும், உச்சநீதிமன்றம், மனித உரிமை கமிஷன், மகளிர் கமிஷன், மைனாரிட்டி கமிஷன் அனைத்தும் சகாயம் கூறியதைத்தானே சொல்கிறார்கள் இன்னும் இது மேம்பட வேண்டுமென கூறியதில் என்ன தவறு என்கிறார்.
போலிசுக்கு போகவேண்டாம், சேலம் கலெக்டர் இறுதிச் சுற்று படம் பார்த்து விட்டு ஃபோட்டோ எடுத்த நிருபரை அடித்ததாக புகார் வந்திருக்கிறது. இந்நிலையில் இன்னொரு சட்டம் தேவையில்லை, சீர்திருத்தப்படவேண்டியது போலிசுதான். சட்டமல்ல. என்கிறார் மாலன்.
சட்டம் சரி, அதிகாரிகள் தவறு, மதம் சரி, பின்பற்றுபவர்கள் தவறு என்ற அரதப் பழசான வாதத்தையே மாலனும் முன் வைக்கக் காரணம் இன்னும் மதத்திலோ சட்டத்திலோ யாரும் இதுவரை காணாத புனிதம் இருப்பதாக பல அப்பாவிகள் நம்புகிறார்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் மாநில ஆளுநர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, அரசியல் சட்ட புனிதத்தை ஆளுநர்கள் காப்பாற்ற வேண்டும் எனும் போது அந்த புனிதம் அருணாச்சல் பிரதேசத்தில் பல்லிளித்துக் கொண்டிருப்பதும், அந்த இளிப்புக்கு காரணமான கவர்னர் அங்கே புன்னகைத்துக் கொண்டிருப்பதுமான நிலையில் புனிதத்திற்கு என்ன பொருள்?
அதிகாரம் அளிக்கும் மமதை என்பதே ஏன் உருவாகிறது? அந்த மமதையை சட்டம் ஏன் கறாரான முறையில் கட்டுப்படுத்தவில்லை, தண்டிக்கவில்லை? நல்லதொரு சட்டத்தை கெட்டதொரு அதிகாரி கேடாக பயன்படுத்த முடியுமென்றால் அதன் காரணம் அந்த கெட்டதொரு அதிகாரி அதே நல்லதொரு சட்டத்தை வைத்து தனது கெட்டதை நியாயப்படுத்த முடியும். எனில் அந்த நல்லொதொரு சட்டத்தை கீறிப்பார்த்து அதில் என்ன நல்லது, புனிதம், புண் என்று பார்க்க வேண்டியதில்லையா? எல்லோருக்கும் பொதுவான சட்டத்தை ஒரு அதிகாரி தனது அல்லது தனது வர்க்கத்திற்கு ஆதரவாக பயன்படுத்துகிறார் எனில், அவரது பணி குறித்த சட்டங்கள் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதே உண்மை. சுருங்கச் சொன்னால் மக்களைப் பார்த்து பயமோ பொறுப்போ வராத வரைக்கும், அதை குறைந்த பட்சம் சட்டபூர்வமாகக் கூட நிலைநிறுத்தாத வரைக்கும், எந்த ஒரு அதிகாரியும் மக்களை வதைப்பதற்கு சட்டத்தினையே ஆயுதமாக ஏந்துவார்.
சகாயம் சொன்னதில் வேறு சில கேள்விகள் என்று மாலன் ஆரம்பிக்கும் போது – வாட் ஆர் தே? என்று அன்னிய பாஷையில் ஹரிகரன் ஊக்குவிக்கிறார்.
என்கவுண்டர் கொலைகளை நிரூபிக்க முடியாத படியால் போலிசுக்கார்கள் நியாயவான்களே – சித்தண்ணன்
சகாயத்துக்கு சட்டம், அமைப்பு, அரசு, நடைமுறை தெரிந்தாலும் அவர் ஏன் இப்படி பேசினார் என்று ஆச்சரியமாக கேட்கிறார் மாலன். அதில் என்ன தவறு என்று ஹரிகரன் குறுக்கீடும் போது, அரசின் அங்கமாக இருந்து கொண்டு, அரசை விமரிசிப்பது தவறு என்கிறார். அரசு பதவி பிராமணத்தின் படி ஜெயா அரசு, மோடி அரசு கொள்கைகளைத்தான் விமரிசிக்க கூடாது. போலிசை பொதுவாக திருத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன பிரச்சினை? ஹரிகரன் கேட்கும் போது,
“ நீங்கள் ஒரு அமைப்பின் அங்கத்தினராக இருக்கும் போது அந்த அமைப்பே விமரிசக்க கூடாது, விமரிசிப்பதாக இருந்தால்அந்த சிஸ்டத்திலிருந்து வெளிவரவேண்டும்.” என்கிறார் மாலன். சகாயம் கூறியது விமரிசனமே இல்லை பொதுவான சீர்திருத்தம் என ஹரிகரன் மாலனுக்கு ஆதரவாகவே கேட்டாலும் அவர் மறுத்துரைப்பது போலவாம் இது.
போலிசுத் துறையின் அத்து மீறல்களை ஊகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடாது என மாலன் சொல்லும் போது, இந்தியா முழுவதும் சித்திரவதைகள், கொட்ட்டிக் கொலைகள் என்று ஹரிகரன் மெல்ல மறுக்கும் போது, WWE திரைக்கதையின் படி மாலன் இறுதியாக ஒரு அஸ்திரத்தை ஏவுகிறார்.
“சிலப்பதிகார காலத்தில் இருந்தே கொட்டடிக் கொலை – கஸ்டோடியல் டெத் நடக்கிறது” என்று அவர் எகத்தாளமாக போட்ட போது போலீசு சித்தண்ணன் வெற்றிச் சிரிப்பு சிரிக்க, ஹரிகரன் பின்னீட்டிங்க என்று தொடுப்பு சிரிப்பு சிரிக்க, கோவலன்தான் கொட்டடிக் கொலையின் முதல் பலி என்று மாலன் முடித்து வைக்க ஹரிகரன் அமைதியாகிறார்.
அமைதிக்கு பிறகு மாலன் வகுப்பு எடுக்கிறார்.
சட்டம் சரி அதிகாரி சரியில்லை என்றால் அதிகாரியை மாற்று, கார் ஓட்டுநர் சரியில்லை என்று காரை மாற்றச் சொன்னால் எப்படி? மாலன் முடிக்கும் போது, காரை மேம்படுத்தணுமுன்னு நீதிமன்றமே சொல்லவில்லையா என ஹரிகரன் பணிவான தொனியில் கேட்கிறார். ஏனெனில் நீதிமன்றம் சொல்லும் போது சகாயமும் சொல்லலாமே என்று பாயிண்ட் இன்னும் விளக்கப்படவில்லையல்லவா?
நீதிமன்றம் சொல்வதற்கு சூபர்வைசிங் அத்தாரிட்டி இருக்கிறது. நீதிமன்றம் அரசின் அங்கமல்ல, தனி துறை என்று மாலன் சொன்னதும் ஹரிகரனும் ஐ அன்டர்சேண்ட் – உங்களை எனக்கு தெரியாதா இதெல்லாம் ஒரு பாலன்சுக்காக கேட்பது – என்று ஒப்புதல் கொடுத்து விட்டு இளங்கோவிடம் வருகிறார்.
அப்பாவிகளும், அரசியல் இயக்கத்தினரும் காவல் நிலைய கொலைக்கூடங்களில் அன்றாடம் கொல்லப்படும் நிலையை இதெல்லாம் ஒரு பிரச்சினையா? கோவலன் காலத்திலிருந்தே இருக்கும் சாதா மேட்டர்தானே என்று பேசுவதற்கு நாக்கு மட்டுமல்ல, இதயமும் வெடிகளால் தடித்திருக்க வேண்டும். காஷ்மீரிலோ, வடகிழக்கிலோ இந்திய இராணுவம் கொலையாட்டம் போடும் ஒவ்வொரு தருணத்திலும் இதற்காக இராணுவத்தை குறை சொல்வது தவறு என்று துக்ளக்கில் சோ எழுதுவதை, ஆர்.எஸ்.எஸ் சமூக சேவகர்கள் சானல்களில் பேசுவதை மாலன் இன்னும் கொஞ்சம் இழுத்துச் சென்று ஆதி காலம் முதலே அப்படித்தான் என்று நியாயப்படுத்துகிறார்.
கோவலன் கொலையை மாலன், சோ, பாண்டே போன்ற அரசனை அண்டிப் பிழைக்கும் அறிவடியாட்களை வைத்து நாம் அறியவில்லை. அரசனையும் அவனது அரசாட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் தலைநகரத்தையும் எரிக்க வேண்டும் என்ற கலை கோபத்துடன் எழுதிய இளங்கோ அடிகள் மூலமே அறிகிறோம். அதே நேரம் இளங்கோவடிகளைப் போலல்லாமல் அரசனை அண்டிப் பிழைக்கும் புலவர் மரபும் தமிழ் மரபுதான். அதனால்தான் சுயநிதிக் கொள்ளை புகழ் பாரிவேந்தருக்கு புலவர் பணி செய்து பிழைப்பை ஓட்டும் புதிய தலைமுறை அறிஞர்களும் இங்கே நீதிமான்களாக அறியப்படுகிறார்கள்.
சிலப்பதிகார இளங்கோவிடமிருந்து சட்ட பஞ்சாயத்து இளங்கோவிற்கு வருவோம். “மாலன் எழுப்பியிருப்பது ஒரு வேலிடான பாயிண்ட், நியாமான கருத்தில்லையா? ரஜினி, கமல் போன்றோர் விசாரணை படத்தை சிலாகித்திருப்பது பிர்ச்சினையல்ல, ஆனால் சகாயம் அரசின் அங்கமாக இருந்து கொண்டே போலிசை குறை கூறியிருப்பது நியாயமா? என்று இளங்கோவிடம் கேட்கிறார் ஹரிகரன்.
விசாரணை படத்தை கமல், ரஜினி, மணிரத்தினம் போன்று மொக்கைத்தனமாக ஆதரிப்பது பிரச்சினையல்ல என்பது உண்மையே. ஏனெனில் அவர்கள் எவரும் சந்திரகுமார் எனும் தொழிலாளியின் காவல் நிலைய சித்திரவதைகளாக விசாரணையை பார்க்க வில்லை. பார்க்காததால்தான் வெற்றிமாறனின் திரை மொழியை சிலாகிக்கிறார்கள். சந்திரகுமாரை பார்த்தவர்கள் போலிசை திட்டுவார்கள். அதையே கொஞ்சம் நாசுக்காக சொன்னதற்காக சகாயத்தை ரவுண்டு கட்டுகிறார்கள். ஆக ஒரு படத்தை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி கருத்துரைக்க வேண்டும் என்பதை சட்ட விதிகளாக இங்கே விளக்குகிறார்கள்.
படம் பற்றி ஒவ்வருத்தரும் ஒரு மாதிரி பேசலாம். ஒரே மாதிரி பேசணுமுன்னு எதிர்பார்க்கூடாது. அரசின் கொள்கையை பேசுவதுதான் தவறு, ஆனா அது கூட பேசலாம். சான்றாக ஊழல் குறித்து பேசலாமே என்று இளங்கோ மெல்ல ஆரம்பிக்க, ஹரிகரன் குறுக்கிடுகிறார்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். விவாதத்தில் மற்றவரிடம் நாசுக்காய், ஜென்டில்மேன் கனவானாக பேசும் ஹரிகரன் இளங்கோவிடம் மட்டும் முரட்டுத்தனமாய் குறுக்கிடுகிறார்.
ஊழலைப் பற்றி நீங்க பேசலாம், நான் பேசலாம், அரசின் அங்கம் பேசலாமா என்று முழு அதட்டலுடன் கேடகிறார். அப்போது அவர் ஒலியும் மைக்கைத் தாண்டி அலறுகிறது. தே ஆர் பவுண்ட் பை சர்வீஸ் ரூல் சார்…என்று அன்னிய பாஷை மிரட்டல் வேறு.
கொள்கையை அமல்படுத்தும் இடத்தில் இருக்கும் சகாயம், வெளியே வந்து பேசாமல் உள்ளே இருந்து பேசுவது தவறு, கொட்டடிக் கொலை, சித்திரவதை செய்யும் அதிகாரத்தை சட்டம் தரவில்லை, ஆனால் அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் அத்துமீறல்களை வைத்து சட்டத்தை மாற்றச் சொல்வது தவறு என்று கிடுக்கிப் பிடி போடுகிறார் ஹரிகரன். பரவாயில்லையே பாண்டே தம்பிக்கு சீண்ட சொல்லிக் கொடுக்கணுமா என்று பாண்டே சிலாகித்திருப்பார்.
இந்த குறுக்கிடலில் மாலனும் சேர்ந்து கொள்ள சோர்ந்து போன இளங்கோவும், சகாயம் புது சட்டத்தை போட சொல்லவில்லை, சீர்திருத்தம்தான் கோருகிறார் என்று சொல்ல அத்தகைய தெளிவான நடையில் சகாயம் சொல்லவில்லை என்று ஹரிகரன் செல்லமாய் கோவித்துக் கொள்கிறார்.
சிவ இளங்கோவை உரையாடலில் ‘என்கவுண்டர்’ செய்த பிறகு வெற்றி மாறனுக்கு வருகிறார்கள். உலக அளவில் பாராட்டு பெற்றிருக்கிறார் என்பதால் நிறைய கனவான்-தனத்துடனயே வெற்றிமாறனுடன் பேசுகிறார்கள்.
உங்களைப் போன்று படைப்பாளிகளால் மதிக்கப்படும் இயக்குநர் காவல் துறை குறித்து பொதுப்புத்தியில் தவறான கருத்து ஏற்படுத்துவது சரியா? என்று நெறியாளர் கெட்கிறார். இந்தபடம்தான் அந்த கருத்த ஏற்படுத்துகிறது என்பது தவறு. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கும் போது இந்த படம் ஒரு பக்கத்தை பற்றி மட்டும் பேசுகிறது. இது என் கற்பனையல்ல, சந்திரகுமார் எழுதிய வாழ்க்கை கதை. இந்த அனுபவம் பலருக்கும் நடக்கிறது, அதன்படி இது விதிவிலக்கானதும் அல்ல என்கிறார் வெற்றி மாறன்.
படத்தில் ஒரு பக்கத்தை மட்டும் காட்டுவதாலும், வெற்றிமாறன், தனுஷ் போன்றோர் சம்பந்தப்பட்டிருப்பதாலும் காவல் துறையே அத்து மீறல் என்று பொதுமைப்படுத்துவதாலும், வெனிசில் பார்க்கும் வெளிநாட்டவர் தமிழ்நாட்டு காவல்துறையை பற்றி என்ன நினைப்பார் என்று ஒரு ‘தேசபக்தராக’ கேட்கிறார் ஹரிகரன்.
ஏற்கனவே ஜெயாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில் பந்தக் கால் போட்டு, பந்தி பரிமாறி, கோலாட்டம், புலியாட்டம் ஆடிய இந்த போலிசை பற்றி புதிதாக என்ன நினைக்க முடியும்? சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடி பெண்கள், விழுப்புரம் ரீட்டா மேரி, அதிரடிப்படை அட்டூழியங்கள் என்று ரேப்பிலும், கொலையிலும் போட்டி போடும் இந்த காவல் துறையின் பெயர் குறித்து இவர்களுக்குத்தான் எவ்வளவு கவலை? என்ன இருந்தாலும் இவர்களையும் அதே காவல்துறைதானே பாதுகாக்கிறது அந்த நன்றி விசுவாசம்.
“நம்ம அக்கறை வெளிநாட்டுக்காரங்க என்ன நினைக்கிறாங்க என்பதா? இல்லை இந்த குறைகளை மாற்ற வேண்டும் என்று முயல்வதா என்னுடைய கருத்து இரண்டாவது” என்கிறார் வெற்றி மாறன்
“பல இலட்சம் கேஸ் காவல் துறைக்கு வருகிறது. உங்களுக்கும் தெரியும். எதெல்லாம் செய்யப்பட்டதா நீங்க்ள காட்டியிருக்கிறீர்களோ அவையெல்லாம் சட்டப்படியே தவறு. அத மீறி நடந்ததாக காட்றீங்க, காவல் துறையின் எல்லா அங்கத்தினரையும் அப்படி வில்லனாக காட்டினால் போலிசே இப்படித்தான் என்று சாமாயனியனுக்கு எழாதா சாமானியனை விடுங்கள், சகாயத்துக்கே எழுந்திருக்கிறதே?” கொஞ்சம் பாத்து அடிக்கப்பிடாதோ பாணியில் ஹரிகரன் மன்றாடுகிறார்.
அந்த மன்றாடுதலை கணக்கில் கொண்ட வெற்றி மாறனும் தனது படத்தில் நல்ல போலிசையும் காட்டியிருப்பதாகவும், எந்த கலையும் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறது, சினிமாவின் தாக்கத்தை விட சமூகத்தின் தாக்கமே மக்களிடம் இருக்கிறது என்கிறார். இங்கு கூட அவர் தனது படத்தின் கலை விதிகளை முன்வைத்து பேசுகிறார்.
போலிசு யார் என்பதை இந்த படம்தான் புரிய வைக்க முடியும் என்று பாண்டேவின் பத்திரிகைத்துறை தம்பி ஹரிகரன் சொல்வதால் பாண்டே ஸ்கூலின் பொது அறிவு தரம் என்னவென்பதை அறியலாம். மற்றும் சாமானியனை விடுங்கள், சகாயத்துக்கே தோன்றிவிட்டதே என்று அலறும் ஹரிகரன், அதே சகாயம் போலிசுக்கு பயந்து சுடுகாட்டில் படுத்துறங்கிய போதே என்ன நினைத்திருப்பார் என்று பார்க்க முடியாத அளவுக்கு பாண்டே பைத்தியத்தில் முற்றியிருப்பது உறுதி.
நீங்க முக்கியமான படைப்பாளி, சினிமா என்பது பாதிப்பு ஏற்படுத்தும் பாத்திரத்தையும் ஆற்றுகிறது, வ.வு.சி, கர்ணன்னா யார் நினைவுக்கு வராங்க, சிவாஜிதானே என்று மீண்டும் மன்றாடுகிறார். வெற்றி மாறனோ சிரிக்கிறார்.
இந்த இடத்தில் பாண்டே பள்ளியின் பெருமையினை நிலைநாட்ட மாலன் உதவுகிறார்.
“உங்க கருத்தில் சிலவற்றோடு மாறுபடுகிறேன். பதேர் பாஞ்சாலி திரைப்படம் வந்த போது வறுமையை வெளிநாட்டில் விற்று பணம் சம்பாதிப்பதாக சத்ய ஜித்ரேவை விமரிசித்தார்கள், இது குறித்து படைப்பாளி கவலைப்பட தேவையில்லை. ஒரு படம் எதார்த்தத்தை பிரதிபலிப்பது தவறில்லை, ஒரே பக்கத்தை காட்டினாலும் தவறில்லை” என்று போலிசின் காட்டுமிராண்டித்தனத்தை காப்பாற்ற வேண்டி கலைஞனின் சுதந்திரத்தை கையிலெடுக்கிறார்.
“ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவை வெளிநாட்டில் தவறாக சித்தரிப்பதாக கூறினார்கள். அதை எழுதியவர்தான் இன்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்” என்று அவருக்கு கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தகவலை சொல்லுகிறார் ஹரிகரன். வெளிநாட்டிலேயே குடி கொண்டு விமானத்திலேயே பறந்து கொண்டு இந்தியாவையே வெளிநாடுகளில் விற்பவரே இங்கு பிரதமர் என்பது இன்னும் விக்கிபீடியாவில் ஏறவில்லை போலும்.
“உள்நாடு, வெளிநாடு ஆடியன்சை வைத்து ஒரு படைப்பாளி படம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. படைப்பு உந்துதலை வைத்துத்தான் பண்ண வேண்டும். நான் 50 வருடமா சினிமா பார்க்கிறேன். அதில் வரும் போலிஸ் ஆபிசர் போல நேரில் பார்த்தது இல்லை. சினிமாவுக்கு மிகைப்படுத்தல்கள் இருக்கிறது, அது சினிமாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையும் கூட. தங்கப்பதக்கம், சிங்கம் சூரியா போன்றோரின் வீர தீர பராக்கிரமங்கள், அதே போன்று போலிசு வில்லன்கள், எவரையும் தான் நேரில் பார்த்ததில்லை என்று ‘விசாரணை’ திரைப்படத்தை ஓரே அடியாக தூக்கி எறிகிறார் மாலன். படைப்பு உந்துதல் என்று பில்டப் கொடுத்து விட்டு, சினிமான்னா மிகைப்படுத்தல் என்று ஏறிமிதிப்பது இதெல்லாம் சாதாரண அறிஞர்களுக்கு சாத்தியமே இல்லை.
மாலன் கூறிய கருத்துக்களையே முன்னாள் போலிசு அதிகாரி சித்தண்ணன் கொஞ்சம் அதிகார தோரணையோடு கூறினார். அதிலும் சகாயம் கூறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும் மாலனைப் போல ஒரு நளினமான நரித்தனம் இவரின் உறுமலில் இல்லை. ஒருவேளை மீசை, கிராப் தோரணைக்காக கூட்டி வந்திருப்பார்களோ தெரியவில்லை. இருப்பினும் சகாயம் கூறியதை கமர்சியலாக படக்குழுவினர் விளம்பரத்திற்கு பயன்படுத்தியது தவறு என்று சித்தண்ணன் ஆணித்தரமாக கூறுகிறார்.
அதை வைத்து வெற்றிமாறனிடம் வருகிறார் ஹரிகரன்.
ஒரு திரைப்படம் பார்த்து பிரபலங்கள் சொல்வதை விளம்பரமாக பயன்படுத்துகிறார்கள். அப்படி சகாயம் கூறியது விசாரணை விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதெல்லாம் ஒப்புதல் பெற்று வெளியிட்டீர்களா என்றெல்லாம் படுத்தி எடுக்கிறார்.
அப்படிப் பார்த்தால் ரஜனி மொட்டை அடித்த தருணங்களையெல்லாம் நியூசாக போட்டு பக்கத்தில் விளம்பரத்தையும் காட்டுவதற்கு தந்தி பேப்பர் மட்டும் அனுமதி பெற்றிருக்கிறதா என்ன? எனினும் ஒரு அரசு அதிகாரியின் கருத்தைப் போட்டு மற்றுமொரு அரசு துறையை விமரிசிப்பது தவறில்லையா என்று சித்தண்ணன் மடக்குவதாக ஹரி கட்டியமைப்பதுதான் அயோக்கியத்தனம். சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஜெயா ராஜினாமா செய்த பிறகும் குடியரசு நாளில் அவர் படந்தாங்கியே அணிவகுப்புகளெல்லாம் வந்தன. ஒரு ஊழல் குற்றவாளியை அரசு ஊர்வலத்தில் படம் காட்டுவது என்ன விதிகளின் கீழ் வருகிறது?
தனக்கு சட்டமெல்லாம் தெரியாது, ஒரு அமைப்பிற்குள் இருந்து கொண்டு அதன் தவறுகளை சொல்வதில் மாறலா என்ன தவறு என்று வெற்றிமாறன் சொன்னதும்,
சித்தண்ணன், ஹரிகரன் இருவரும் ரூல்ஸ் படி அது தவறு என்று மீண்டும் விளக்க இளங்கோ குறுக்கிடுகிறார், சொன்னால் என்ன தவறு என்று. திருமங்கலம் முறைகடுகளைப் பற்றி சகாயம் பேசும் போது போலிஸ் அத்துமீறல்களை ஏன் பேசக்கூடாது என்கிறார் அவர். உடனே சித்தண்ணன், ஊழலைக்கு கூட உரிய மேலதிகாரிகளிடத்தில்தான் பேச வேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அதட்டுகிறார்.
நல்ல போலிசுக்காரர்களையும் படத்தில் காட்டியிருக்கீங்க, நானும் மறுக்கலை, அந்த அதிகாரிகளும் கையறு நிலையில் இருப்பதாக காட்டுவது, மொத்த போலிசு துறையும், கெட்டுப் போனதாக காட்டுவது அதீத மிகைப்படுத்தலல்லவா? என்று ஏதோ ஒரு செட்டில்மென்டுக்கு வர நெறியாளர் முயல்கிறார். நடப்பது டிபேட்டா, கட்டப் பஞ்சாயத்தா என்று நமக்கு குழப்பம்.
இந்த படத்தோட உள்ளடக்கத்துக்கு நாங்க சரியாகத்தான் செய்திருக்கிறம், முத்துவேல் இன்ஸ்பெக்டரோட நெருக்கடி எல்லாத்துக்கும் தெரியும், எல்லா சிஸ்டத்துலயும் உள்ளவங்களுக்கும் தெரியும். சிஸ்டம் என்பது தனிநபரை விட பெரிதானது என்று எங்களையும் புரிஞ்சுக்கோங்கோ என்று வெற்றிமாறன் பதிலளிக்கிறார். இது குறித்து வேறு ஒரு தருணத்தில் பார்க்கலாம்.
விளம்பரத்தை பத்தி பேசுற போது, ஒரு விசயத்தை நேரடியாக கொடுக்காமல் ஆழ்மனதில் கொடுக்கும் போது வேறு விதமா அதை பதிய வைக்க முடியும். (இது ஹரிகரனுக்கும், வெற்றிமாறனுக்கும் தெரியுமாம்) விசாரணை என்ற சொல் சகாயத்தோட பிணைக்கப்பட்டிருக்கு, கூகிளில் போய் விசாரணை என்று போட்டால் சகாயம் விசாரணைகள் நிறைய வரும் இதை பயன்படுத்தவே அந்த விளம்பரம் போடப்பட்டதா என்றொரு கேள்வி இருப்பதாக மாலன் பயங்கரமான ஒரு ஆய்வு கண்டுபிடிப்பை போடுகிறார்.
இந்த இடத்துல மாலன் எங்களுக்கு அதிகமா கிரெடிட் கொடுக்கிறார், அந்த அளவு எங்களுக்கு அறிவில்லை என்று வெற்றி மாறன் சொன்னதும் மாலன் சொன்னது ஆய்தான் ஆய்வல்ல என்பது எத்தனை பேருக்குத் புரியும்?
இதுவரை நடந்த என்கவுண்டர் வழக்குகளில் எத்தனை போலிசு தண்டிக்கப்பட்டார்கள் என்பதை போலிசுக்காரர்களின் நியாயமாக சித்தண்ணன் எடுத்துப் போடுகிறார். இன்னொரு இடத்தில் செம்மர என்கவுண்டரை தான் கண்டித்திருப்பதாகவும் கூறினார். அவரது கருத்துப்படி பார்த்தால் செம்மரக் கடத்தல் போலி மோதல் வழக்கில் எந்த போலிசும் தண்டிக்கப்படப் போவதில்லை. அதனால் போலிசுக்காரர்கள் நியாயமானவர்கள் என்றாகும். எனில் சித்தண்ணன் பேசும் விசயம் நிச்சயம் ஒரு சேம் சைடு கோலே அன்றி வேறல்ல.
இறுதியாக மாலன் தினமணியில் தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு விளம்பரத்தை போட்டுவிட்டு சகாயம் செய்வது விதிப்படியும் மரபுப்படியும் தவறு என்கிறார். அப்படிப்பட்ட சகாயம் மேல் அரசு ஏன் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனபதற்கு பல காரணங்கள் – இவரை ஹீரோவாக்க வேண்டாம், பெருந்தன்மை – இருக்கும் என்கிறார்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் சகாயம் சொன்ன பொத்தாம் பொதுவான ஒரு கருத்தைக் கூட இவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. அதை கச்சிதமாக தயாரித்துக் கொண்டு விதித்தவறு, மரபுத்தவறு, நடவடிக்கை, பெருந்தன்மை என்று சட்டபூர்வமாக பேசுவதாக காட்டிக் கொண்டே போலிசுத் துறையை நியாயப்படுத்துகிறார்கள். போலிசு பொறுக்கிதான் என்று சொன்னால் போலிசுக்கு வரும் கோபத்தை விட போலிசை அடியாட்களாக தீனி போட்டு வளர்க்கும் ஆளும் வர்க்கத்திற்குத்தான் கோபம் வரும். அதுதான் மாலன். அதை காட்டத்தான் தந்தி டி.வி விவாதம்.
பரவாயில்லை பாண்டேவுக்கு ஒரு நல்ல ஜோடி கிடைத்திருக்கிறது.
விளம்பரக் காயங்கள்…
தேர்தல் தேமல்கள்…
வெட்டி அலம்பல்கள்…
பட்டப் பெயர்கள் பட்டுப் பட்டு
பட்டுப் போன தமிழகச் சுவர்கள்
ஒற்றைச் சொல்லில்
உயிர்த்தெழுந்தன
“மூடு டாஸ்மாக்கை!”
மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது (கோப்புப் படம் : அழிவிடை தாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்)
கிடந்த கோலத்தில் கிடப்பது
திருவரங்கப் பெருமான் மட்டுமா?
கூடவே,
ஆடை அவிழ்ந்த கோலத்திலும்
அங்கங்கே தெருவரங்க
டாஸ்மாக் குடிமகன்களும்தான்.
ஆல்கஹால் ஊற்றி
அழிக்கப்படும் தமிழகம் மீட்க
அழைகிறது திருச்சிக்கு
மக்கள் அதிகாரம்
உண்மையின் உரைகல்லாக
சுவரில் தெரிபவை
வெறும் சொற்களா?
இல்லை!
மது அடிமைத்தனத்திலிருந்து
மீளத்துடிக்கும்
மானமுள்ள தமிழகத்தின்
உணர்ச்சிகள்!
தேர்தல் வேட்கையைத் தாண்டி
மக்களின்
வாழ்க்கை இலக்கை
எதிரொலிப்பதால் மக்கள் அதிகாரம்
மக்களின் குரலாய் ஒலிக்கிறது!
வள்ளுவர் படைத்தார்
குறள் அதிகாரம்
இளங்கோ வடித்தார்
சிலப்பதிகாரம்
வாழ்வை மீட்க
இயற்கையை காக்க
எண்திசை எங்கும்
இனி மக்கள் அதிகாரம்
என,
உவகை பொங்க
ஒளியின் குரல்கள்
இருளைக் கிழிக்கிறது!
அனைத்து அதிகாரமும்
மக்களுக்கு வேண்டும்
என்ற எளிய நியாயத்தின் முன்
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால்”
என்ற
எல்லா பாவனைகளும்
கலைந்து போகின்றன
நாடும் மக்களும்
நலம் பெற
வீடும் சுற்றமும்
மறந்து வேலை செய்யும்
தோழர்களைப் பார்த்து
காடும், மலையும்
கவின்மிகு அருவியும்
ஆனந்தக் கண்ணீரில்
நனைகின்றன,
காண்பவர் நெஞ்சம்
புதிய உறவில் மகிழ்கின்றன
மக்களின் துயரம்
துடைக்கப் புகுந்தால்
தனக்கென தனியே
துயரம் கிடையாது
மக்களின் மகிழ்ச்சிக்கு
வேலை செய்தால்
தனக்கென மகிழ்ச்சிக்கு அளவேது!
அதனால்தான்
உங்களையும் அழைக்கிறது
மக்கள் அதிகாரம்!
வளரும் தலைமுறை
வாழ்வின் இலக்கை
டாஸ்மாக் இலக்கு
அழிக்கிறது.
கணவனை இழந்து
அலறும் கைம்பெண் ஓலம்
ஒவ்வொரு ஊரிலும் ஒலிக்கிறது
தெருவெங்கும் சாராயம்
ஆறாக ஓடினால் – இனி
கருவிலேயே குழந்தை தள்ளாடும்
அயந்திணை அர்த்தங்கள் இழந்து
“குடியும் குடி சார்ந்ந நிலமுமாய்”
அருமைத் தமிழகம் அடையாளமாகும்
செம்பரம்பாக்கத்தில்
திறந்து விடப்பட்ட கன அடி
எத்தனை என்பது தெரியும்
அன்றாடம்
டாஸ்மாக்கில் திறந்து விடப்படும்
கன அடி எத்தனை?
அபாயம் அறிவீரா?
மயிலே மயிலே என்றால்
கடைகள் மூடாது
மக்கள் திரண்டால்
டாஸ்மாக் கிடையாது
சிக்கலை எப்படி தீர்ப்பது?
சிந்திக்க அழைக்கிறது
மக்கள் அதிகாரம்!
தங்கள் வரவு
தாரணிக்கே அரசியலின் நல்வரவாகுக!
வாழ்க்கைத் தரம், வளர்ச்சியின் வேகம் நகரத்தை போல கிராமத்தில் கிடையாதுன்னாலும் மோசம் என்று சொல்ல முடியாது. ஒரளவு செழிப்பா விவசாயம் நடக்கும் இடங்களில் விவசாய உற்பத்திக்கான அனைத்து வகை இயந்திரங்களும் இல்லாத கிராமமே கிடையாது. அதை வாடகைக்கு பயன்படுத்தாத நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் கிடையாது. வீட்டு உபயோகப் பொருட்களில் நகரத்தைப் போல பயன்பாடு இல்லையென்றாலும் ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. பேசுவதற்கு காசு இல்லை என்றாலும் செல்போன் இல்லாத குடும்பமும் கிடையாது. அதையும் தாண்டி தெரியாதையும் தெரியவைக்க டிவியின் விளம்பரம் இருக்கிறது. டி.வி மட்டும் இல்லாத வீடுகள் கிராமங்களில் அறவே இல்லை என்று சொல்லலாம்.
இவற்றிலெல்லாம் மாற்றத்தை ஏற்றுக்கொண்ட மக்கள், பெண்களின் பருவ மாற்றத்தை தீட்டாக ஒதுக்கி வைத்து அவமதிப்பது இன்னும் தொடர்கதையாய் உள்ளது.
கிராமப்புற பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் மாதவிலக்குன்னா என்ன? முதல்ல இதுக்கு என்ன பொருள் என்றே தெரியாது. “தீட்டு, தலைக்கு ஊத்திகிட்டா, வெளிய, வீட்டுக்கு தூரம்”…இப்படி சொன்னால் போதும்…பருவ மங்கை முதல் பல்லு போன பாட்டி வரை வெட்கமும் அறுவெருப்பும் கலந்த முகத்துடன் குனிந்து கொள்வார்கள். அவர்களே இது தீட்டு, கெட்டது, அசுத்தம் என்றே பார்க்கிறார்கள். நகரத்தில் இருக்கும் ஓரளவு விழிப்புணர்வு கூட அங்கு இப்போதும் இல்லை.
காலையில தூங்கி எழுந்ததும் வயசுக்கு வந்த எனக்கு சாயங்காலம் (மாலை) சடங்கு செய்ய எல்லா ஏற்பாடும் தடபுடலா நடக்குதே தவிர ஒரு முழம் பழய துணிய குடுத்து ‘தீட்டு’க்கு வச்சுக்கன்னு சொல்ல யாருக்கும் தோணல. கட்டியிருந்த பாவாடை, தொடையெல்லாம் பிசுபிசுத்து போச்சு. விசேசம் எல்லாம் முடிஞ்சதும் கட்டியிருந்த பழய பாவாடையை எடுக்க வந்த சலவக்காரம்மா அதுல இருந்த ரத்தக்கரைய பாத்துட்டு ஒரு பழய துணிய கொடுத்து வச்சுக்கன்னு சொன்னாங்க. அந்த துணிய மாத்தி வச்சுக்கனுன்னு தெரியாம மூனு நாளா அதையே வச்சு நாத்தம் எடுத்து போச்சு. என்ன செய்றதுன்னு தெரியல. யார்கிட்ட கேக்கறதுன்னு கூச்சம். நாத்தம் வெளிய வந்ததுந்தான் மாத்து துணிக்கு விமோசனம் கெடச்சுச்சு.
இது நடந்தது பல ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அதிலிருந்து துளி கூட மாறாத மனநிலையை சமீபத்தில் பாத்தேன்.
படம் : இணையம்
ஏழாவது படிக்கிற பொண்ணு வயசுக்கு வந்துருச்சுன்னு அன்னைக்கே ஊர கூட்டி வெளியூரு சொந்தக்காரங்களுக்கு போன போட்டு வரவச்சு தடபுடலா தண்ணி ஊத்துர சடங்கு செஞ்சு முடிச்சாங்க. அது புரட்டாசி மாசம். ரெங்கநாதருக்கு விரதம் இருக்கும் போது தீட்டு பட்டா வீட்ட சுத்தமா தொடச்சுரமுனுன்னு பகலெல்லாம் வேப்ப இலை, கருக்கருவான்னு பேயி வெரட்ற ஆயுதத்த கையில கொடுத்து மரத்தடியில ஒக்கார வச்சாங்க. சடங்கு சம்பரதாயத்தை தீவிரமா கடைபிடிக்காத பக்கத்து வீட்டுல அந்த குழந்தையெ ராத்திரிக்கு படுக்க வச்சாங்க.
படுத்திருந்த வீட்டுல படிச்சுகிட்டு இருந்த அந்த பொண்ணு திடிர்னு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சது. துணைக்கி கூட இருந்த பொண்ணோட பாட்டி “ஏண்டி அழுவுறே”ன்னு கேட்டாங்க.
“இது எனக்கு பிடிக்கவே இல்ல” பெரிய நகைச்சுவைய கேட்டது போல கூட இருந்த பெண்களும் சேந்துகிட்டு ஒரே சிரிப்பு.
“பொம்பளையா பொறந்துட்டு பிடிக்கலன்னு சொல்ல முடியுமா. அதுக்கு ஒங்காத்தா உன்ன ஆம்பளையா பெத்துருக்கனும்.”
“இன்னும் எத்தன நாளைக்கி தனியா படுத்துருக்கனும்?”
“பதினாரு நாளைக்கி படுத்து கெடக்கனும். தீட்டு கழிச்சு அதுக்கு அப்பறந்தான் உள்ள சேத்துக்க முடியும். பொங்கிப் போடறத தின்னுட்டு சும்மா படுத்திருக்க ஒனக்கு வலிக்குதா?”
“பதினாரு நாளைக்கி மட்டும்தான் அது வருமா?
“அட இவகிட்ட என்னடி, ஒரே கூத்தாப் போச்சு. இனிமே மாசா மாசம் தீட்டு வரும். அப்பையெல்லாம் இப்படிதான் ஒக்காந்துட்டு ஒப்பாரி வப்பியா?”
“என்னாது மாசா மாசம் வருமா?” என உடைந்த குரலில் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.
“அய்யய்யோ இந்த பிள்ள என்னடி மானத்த வாங்கும் போலருக்கு. இதெல்லாம் கடவுள் படைப்புடி. எங்க காலத்துல இதெல்லாம் பேசவே மாட்டோம். இப்ப உள்ளதுங்க என்னன்னே கேள்வியெல்லாம் கேக்குது பாரு.”
புதுசா உடம்பில் நடந்து விட்ட மாற்றம். அதுவும் வலி, எரிச்சல், கசகசப்பு என்று பிடிக்காத மனநிலை. மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் அச்சம். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அனுசரனையாய் இருப்பது பெரியவர்களின் கடமை. இங்கோ அதுவும் எதிர்மறையில் இருக்கிறது.
அறியாத வயதில் முதன் முதலில் நடக்கும் உடல் மாற்றம் ஏன் என்று சொல்லித் தருவதற்கு கூட பெரியவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. சிறுமிகளின் அச்சத்தையும், மாற்றத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாத அந்த பெரியவர்கள் சும்மா படுத்துக் கிடக்கும் பெருமாளுக்கு தீட்டு என்று வீட்டை சுத்தம் கொள்வதில் அவ்வளவு கவனமாயிருந்தார்கள். வீட்டில் உள்ள வயது வந்த பெண் தலைக்குளிக்கும் நாளை அம்மா சரியாக கணக்கு வைத்திருப்பாள். ஆனால் அந்த நாள் சம்மந்தமான எந்த பேச்சும் மகளிடம் பேச மாட்டார். அம்மா மகளுக்கே இதுதான் கதி என்றால் ஒரு சிறுமி என்னதான் செய்வாள்?
பெண்கள் பூப்படைவதை உடல் வளர்ச்சியின் ஒரு மாற்றம் என்று உணராமல் ஒரு விழாவாக கொண்டாடுவதும், பூப்படையும் குழந்தைக்கு அது குறித்த எந்த விழிப்புணர்வை சொல்லித்தருவதும் கிடையாது. மாறாக தீட்டு என்றும், இது ஒழிவு மறைவாக நடந்து கொள்ள வேண்டிய விசயம் என்றும், அது ஒரு பாவச்செயல் போலவும் குழந்தைகளுக்கு வழி காட்டுகிறார்கள்.
பூப்பெய்திய பெண்ணை ஓலை குடிசையில தனியா படுக்க வைப்பது, குளிக்கவோ அல்லது ஒன்னுக்கு ரெண்டுக்கு போகனுன்னா காத்து கருப்பு அண்டிருமுன்னு இரும்பை கையில கொடுத்து வேப்பலைய தலையில சொறுகி அனுப்புறது. படுக்குற எடத்துல பாய் தலையணை இல்லாம போர்வையும் மனைக்கட்டை (மரப்பலகை) கொடுத்தும், படுக்கைய சுத்தி தொடப்பம், செருப்ப பாதுகாப்பு அறனா போட்டு வைக்கிறது மேலும் எரிச்சலடைய செய்கிறது. மனிதர்களை விட பேய்கள் அந்த சிறுமியை என்ன செய்து விடமுடியும்?
மாதவிடாய் காலத்தில் தொட்டால் தீட்டு. மூனு நாளைக்கி வீட்டுக்குள்ள வரக்கூடாது. பகலில் தூங்க கூடாது. தனி தட்டுல சோறு. சாப்பிட்ட மிச்சத்த நாயிக்கி வைக்க கூடாது. ஊறுகாய தொட்டா கெட்டு போயிரும். விதைகளை தொட்டா முளைக்காது. பூவை தொட்டா கருகிரும். இதுமட்டுமல்ல இன்னும் ஆயிரத்தெட்டு மூட நம்பிக்கைங்களை, பொண்ணுங்களுக்கு வயசாகி உதிரப்போக்கு நிக்கற வரைக்கும் கடைபிடிக்கனும். கொஞ்சம் பிசகினாலும் மக்கள் பார்த்தே எரித்து விடுவார்கள். பேசினால் ஆயுசுக்கும் மறக்காது.
பெண்கள், குழந்தை பிறக்கும் தருணத்தில் பெண் பிள்ளையை விட ஆண் பிள்ளையை அதிகம் விரும்பவதற்கு இதுவும் ஒரு காரணம். மாதவிலக்கு காலங்களில் அனுபவிக்கும் வலியோடு தீட்டுன்னு சொல்லி அனுசரிக்கப்படும் மூட பழக்கங்களும் சேந்து ஆண் குழந்தைகளை கூடுதலாக விரும்ப வைக்கின்றன. கிட்டதட்ட நாப்பது நாப்பத்தைஞ்சு வருசத்துக்கு மாசா மாசம் வலியும் வேதனையுமா பெண்களுக்குள் இருக்கும் இந்த விசயத்தை உடம்போட இயக்கத்துல ஒன்னுன்னு நினைக்காம பாவமாகவும், தொந்தரவாகவும நினைப்பது துயரமானது.
சடங்கு, பூப்பெய்தல், பெரிய மனுசியாயிட்டா, குச்சிக்குள்ள குந்திட்டா, தீட்டுன்னு இதுக்கு தினுசு தினுசாபேரு வைக்கிறாங்க. மூனு கிலோவுல பொறக்குற குழந்தை கடந்து வரும் நாட்கள்ல கை கால் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடைவதை போலத்தான், பெண் உதிரப் போக்கு சுட்டும் வளர்ச்சியும். மனிதனை உருவாக்க கருவாகும் உதிரப்போக்கின் தாய்மைத் தன்மையையும் அதற்கான விழிப்பணவையும் பேச மறுத்து, தீட்டை புனிதமாக்க சடக்கு சம்பரதாயமா அதுவும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிரா கொண்டாடுறாங்க.
குடும்பத்தார் போட்டோ போட்டு ப்ளக்ஸ் பேனர் அடிச்சு, மண்டபம் புடிச்சு கறி விருந்து போட்டு, லட்சக் கணக்குல செலவு பண்றவங்க அம்பது ரூபாய்க்கி நாப்கீன் வாங்கரத அனாவசியமா நினைக்கிறாங்க. பெரும்பாலும் படிக்கிற பிள்ளைகள தவிர யாரும் நாப்கீன் பயன்படுத்துறது கிடையாது. பள்ளிக்கூடத்துல குடுக்குற நாப்கீனும் உடம்போட பாதி உடையோட பாதியா ரெண்டு துண்டா பிச்சுகிட்டு வந்துருது.
பெண்கள் வீட்ட விட்டு வெளிய வராத அந்த காலத்துல இந்த விழாவை செஞ்சதோட நோக்கம் எங்க வீட்டுல கல்யாணத்துக்கு தயாரான பொண்ணு இருக்கான்னு ஊரு உலகத்துக்கு அறிவிக்கறதுக்குன்னு சொல்லுவாங்க. ஆணுக்கு சம்பாத்யமுன்னா பெண்ணுக்கு பிள்ளைத் தாய்ச்சி வேலை மட்டும்தான் என்பது கிராம சமூகத்தின் விதி. பருவம் வந்த அந்த நேரத்தை குறித்து வைத்துதான் பெண்ணின் கல்யாண சாதகமே பாக்கப்படுது. நீராட்டல் விசேசம் முடிந்ததும் கீரை விதை போட்ட பாலும் பழமும் கொடுப்பது குடும்பம் விதை போல விருத்தி அடைவதற்கு என்பார்கள்.
மாட்டை சந்தைக்கி ஓட்டிட்டு போயி விக்கிறது போல வீட்டுல பொண்ணு பெரியமனுசி ஆயிட்டா கல்யாணத்துக்கு ரெடியாயிட்டா என்று ஊரு உலகத்துக்கு தண்டோரா போட்டு சொல்லும் நிகழ்ச்சிதான் பூப்பு நீராட்டு விழா. கொச்சையா சொல்லனுமுன்னா எங்க வீட்டுல இருக்கும் பெண் பிள்ளை என்ற மிசினுக்கு பெத்துக்குற தகுதி வந்துருச்சுன்னு சொல்ற நிகழ்ச்சிதான் இது. ஏதோ சில காரணங்களால பருவம் வர தாமதமானா சம்பந்தப்பட்ட பெண்களை சமூகம் ஓரக்கண்ணாலும், வதந்தி வார்த்தையாலும் கொன்று விடும். ஆக வயசுக்கு வந்தாலும் பிரச்சினை, வரலேன்னாலும் பிரச்சினை.
ஒருத்தன் என்னை அடிச்சான்னு வெளிய சொல்ல கூச்சப்படாத பெண், பாலியல் வன்முறைகளை மட்டும் சொல்ல கூச்சப்படுவது ஏன்?. இந்த பயம் எங்கேருந்து வருது. இப்படிபட்ட சிந்தனை முறையில் வளர்க்கப்படும் பெண் எதிர்வரும் பாலியல் இன்னல்களை எப்படி எதிர்த்து போராடுவாள்? மாதவிலக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் சமூக கட்டமைப்பில் கருத்து ரீதியான பயிற்சிக்கு குறிப்பிடத்தக்க பாத்திரம் ஆற்றுகிறது.
போதையிலிருந்து தமிழகத்தை மீட்க, சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட மூடு டாஸ்மாக்கை என்ற எதிர்ப்புக் குரல், அலையாக மீண்டும் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. வயது வித்தியாசமின்றி, ஆண் பெண் பாகுபாடின்றி பாதிக்கும் மேலான தமிழக மக்கள் குடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான கட்சிகள், மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி வருகின்றன. ‘படிப்படியாக என்ற அளவிலாவது மதுவிலக்கை அமல்படுத்துங்கள்’ என்ற கோரிக்கையைக் கூடப் புறக்கணித்து டாஸ்மாக்கை மூட முடியாது என சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஜெயா அரசு அறிவித்துள்ளது.
சாராய ஆலை அதிபர்கள் பாதிக்கப்படக்கூடாது, பார் நடத்தி வரும் கட்சிக்காரர்களின் வருமானம் பாதிக்க கூடாது, எந்தப் பிரச்சினைக்கும் மக்கள் போராடக்கூடாது, சிந்தனையை மழுங்கடித்து தமிழ்ச்சமூகத்தை மாற்றியே தீர வேண்டும் என்பதில் ஜெயலலிதா அரசு விடாப்பிடியாக இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இல்லை. மது ஆலை முதலாளிகளின் லாபத்தை ஜெயா அரசு, உத்திரவாதப்படுத்துவதுதான் இதற்குக் காரணம். சாராய ஆலை அதிபர்கள் நலனுக்காக தற்போது கள்ளச்சாராயத்தை ஒழித்திருக்கும் அரசால் மக்கள் நலுனுக்காக டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாதா?.
குடி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது. 1984 ஆம் ஆண்டு டாஸ்மாக் ஆரம்பிக்க பட்டபோது அதன் ஆண்டு வருவாய் 134 கோடி ரூபாய் மட்டுமே. இன்றோ சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 230 மடங்கு அதிகரித்துள்ளது. ஜெயா ஆட்சியில்தான் இலக்கு வைத்து பல மடங்கு விற்பனை அதிகரிக்கபட்டுள்ளது. ஒரு கோடி பேர் குடிப்பதாகச் சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் குடி நோயாளிகள். இக்குடி நோயாளிகளால் பாதிக்கப்படும் பெற்றோர், பிள்ளை, மனைவி என மூன்று கோடிப் பேர் குடும்ப நோயாளிகளாக உள்ளார்கள். டாஸ்மாக் பேரழிவை படித்து தொகுப்பாக பார்த்தால் நெஞ்சம் பதறாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
தற்போது தேர்தல் திருவிழா, கூட்டணி பேரம், சூட்கேஸ் பேரம் வேட்பாளர் தேர்வு, என களை கட்டியுள்ள நிலையில் அடுத்த எம்.எல்ஏ. யார்?. என்ன செய்தார் எம்.எல்.ஏ.? என ஊடகங்கள் விவாதங்கள் டாஸ்மாக் ஒழிப்பு பிரச்சினையிலிருந்து மாற்றப்படுகிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது தேர்தல் கோரிக்கை அல்ல; அது தமிழ்ச்சமூகத்தின் தலைமுறைப் பிரச்சினை – பற்றி எரியும் பிரச்சினை; அதை மூடுவதுதான் அனைவரின் முதன்மையான கடமை என்பதை வலியுறுத்தி, டாஸ்மாக் சாராயப் பிரச்சினையை மீண்டும் அரசியல் அரங்கில் விவாத பொருளாக்கி தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படுவதுதான், திருச்சி பிப் 14 மூடு டாஸ்மாக்கை என்ற சிறப்பு மாநாடு.
சாராய சாம்ராஜ்ய அதிபர்களுடன் ஜெயலலிதாவின் உறவு பலமானது. ஜெயாவின் சொத்து ஏலத்துக்கு வந்தபோது மீட்டவர் சாராய உடையார்தான். ஐந்து தென் மாநிலங்களில் மேல் நாட்டு மதுவகைகளின் மொத்த விற்பனை முகவர் ஆந்திராவின் சுப்பிராமிரெட்டி சுட்டுக் கொல்லப்பட்டபோது ஜெயா, சசி ஆகிய இருவரும் தனி விமானத்தில் சென்று மரியாதை செலுத்தினர்.
டாஸ்மாக்கால் அரசுக்கு வருமானம் ரூ 30,000 கோடி என்றால் சாராய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வருமானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். டாஸ்மாக் சாராயத்தோடு ஆட்சியாளர்களின் வாழ்வும் இருப்பும் பின்னிப் பிணைந்துள்ளது. அனைத்து தேர்தல் கட்சிகளும் இதனால் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் அடைகின்றன. மாநாடு, கட்சிப் பிரச்சாரம் என அனைத்துக்கும், டாஸ்மாக் போதை எரிபொருளாக இருக்கிறது. எனவே சமரசமில்லாமல் மக்கள் போராடி மூடுவதுதான், நிரந்த, பூரண மதுவிலக்கு அமையும். கோடிக்கணக்கான கள்ளப் பணத்தில் வாக்குக்குப் பணத்தை வீசி எறிந்து போலீசை வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற முடிவால்தான் அனைவரும் எதிர்த்தாலும் டாஸ்மாக்கை மூட முடியாது என பிடிவாதமாக ஜெயா அரசு நிற்பதற்குக் காரணம். தமிழக மக்கள் இதை அனுமதிக்கக் கூடாது.
வட தமிழகத்தை உருக்குலைத்த வெள்ளப் பேரழிவில் பலர் உயிரையும், வீடுவாசல்களையும் இழந்தனர். உண்ணஉணவின்றித் தவித்தனர். செம்பரபாக்கம் ஏரியைத் திறந்த அரசு கைதூக்கி விடவில்லை. அனைத்து மக்களும்தான் களத்தில் இறங்கி உதவினர். வெள்ளப் பேரழிவு நின்று போனது. ஆனால் டாஸ்மாக் பேரழிவு தொடர்கிறது. அனைவரும் களத்தில் இறங்கிப் போராடினால் போதை சீரழிவில் இருந்து தமிழ்ச்சமூகத்தை மீட்க முடியும்
“மூடு டாஸ்மாக்கை!” என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கத்தினை, தமிழக மக்களின் குரலாக மாற்றியமைக்கும் திருப்பு முனையாக திருச்சி மாநாடு இருக்கும். தேர்தல் திருவிழாவில் பசியால் அழும் குழந்தைகளின் குரலாக, மக்களின் கவனத்தைக் கண்டிப்பாகத் திசை திருப்பும். டாஸ்மாக்கைப் பற்றி முடிவு எதுவும் எடுக்காமல் எந்த கட்சியும் மக்களிடம் வாக்கு கேட்க முடியாது என்ற நிலையை உருவாக்கவே இந்த மாநாடு.
மாநாட்டில் குடியால் குடும்பங்களை இழந்தவர்கள், தாலியறுந்த தாய்மார்கள் பேசுகிறார்கள். குடி போதைக்கு எதிராகத் தொடர்ந்து போராடும் ஆனந்தியம்மாள், மந்திரிகுமாரி. ஆகியோர் பேசுகிறார்கள். கோத்தகிரி பள்ளி மாணவி காவ்யாஸ்ரீ, டேவிட்ராஜ், நாகராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள. குடிநோய்க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பாலகுரு, குடியின் பாதிப்புகளை நேரில் கண்டுணர்ந்து எழுதிய பத்திரிகையாளர் சஞ்சீவி குமார், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் செயலாளர் தனசேகரன். ம.க.இ.க பொதுச் செயலாளர் தோழர் மருதையன், மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, தோழர் காளியப்பன் ஆகியோர் பேசுகின்றனர். தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பாடகர் கோவன், “ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்” என மீண்டும் பாட உள்ளார். மதுவிலக்கை அமுல்படுத்திய கேரளாவிலிருந்து கரநாதன் நாவேர் நாட்டுக்களரி கலைக்குழுவினர் பாட உள்ளனர். “தாலியறுப்பு” என்ற நாடகம் நடத்த உள்ளோம். டாஸ்மாக்கை மூட முடியும் என்ற நம்பிக்கையை இந்த மாநாட்டின் மூலம் தமிழக மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.
டாஸ்மாக் வேண்டாம் என நிறைவேற்றப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் தீர்மானங்கள், மூடுவதற்கான நீதிமன்ற உத்தரவுகள், மக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் என அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி பிடிவாதத்துடன் சாராயம் விற்கிறது அரசு. காந்தியவாதி சசிபெருமாளின் மரணம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம், அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் நடந்த மக்கள் போராட்டங்கள் அனைத்தையும் போலீசைக் கொண்டு ஒடுக்கியது அரசு. இவ்வாறு போராடியவர்களை சிறையில் அடைத்து, போலீஸ் காவலுடன் டாஸ்மாக் கடைகளைத் திறந்தது.
டாஸ்மாக் சாராய விற்பனை நடத்தும் தமிழக முதல்வரை கண்டித்துப் பாட்டு எழுதியதற்காக தோழர் கோவனை நள்ளிரவில் கைது செய்து தேசத் துரோக வழக்கில் சிறை வைத்தது. எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர் கொண்டு டாஸ்மாக்கை மூட முடியும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு. போதையிலிருந்து தெளிய வைத்து சிந்திக்கும் திறனுள்ள மனிதனாக மாற்றிய பிறகுதான் மக்களின் பிற எண்ணற்ற பிரச்சினைகளைப் பேச முடியும். அனைத்து பிரச்சினைகளிலும் முதன்மையானது டாஸ்மாக்கை மூடுவது.
மணற் கொள்ளை, டாஸ்மாக் போதை எல்லாம் அரசே முன்னின்று போலீசு பாதுகாப்போடு நடத்தகிறது. நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடினால்தான் தீர்வு கிடைக்கும். மனுக் கொடுப்பதாலோ, கெஞ்சுவதாலோ, புலம்புவதாலோ தீர்வு ஏற்படாது. மக்களின் அழிவில்தான், மது ஆலை முதலாளிகளின் லாபம் இருக்கிறது. அரசு அவர்களைப் பாதுகாக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் மாநாட்டிற்கு வரவேண்டும் என ஊடகத்தின் மூலமாகவும் அழைக்கிறோம். தொடர்ந்து நடைபெறும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும், தமிழக மக்களைப் போதையிலிருந்து மீட்க வேண்டும். சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது அனைவரின் பொறுப்பாகவும் கடமையாகவும் மாற வேண்டும்.
நன்றி!.
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு.
9-2-16 திருச்சி
டிசம்பர் 3 -ம் தேதி கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் கோவை பிரிக்கால் தொழிலாளர் வழக்கில், 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அவர்களின் வாழ்வைப் பறித்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு கோவை பிரிக்கால் நிறுவன தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வ உரிமைகளுக்காகப் போராடிய போது, அந்நிறுவன HR அதிகாரியான ராய் ஜார்ஜ் தொழிலாளர்கள் மீது கொடிய அடக்குமுறைகளை ஏவினார். பிரிக்கால் நிர்வாகமும், உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பொய்யான காரணம் கூறி பணிநீக்கம், தற்காலிக பணிநீக்கம், ஊதிய வெட்டு போன்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நியாயமாகப் போராடிய தொழிலாளர்கள் மீது சட்டவிரோதமாக ரவுடிகளை வைத்துத் தாக்கியது நிர்வாகம். நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்குமிடையே நடந்த இந்தப் போராட்டத்தில் HR அதிகாரி ராய் ஜார்ஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி கூட்டுச்சதி செய்து HR அதிகாரியைக் கொன்றனர் என்று கூறி வழக்கைப் பதிவு செய்தது. தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று வேட்டையாடியது போலிசு. அந்த வழக்கில் தான் மேற்படி தீர்ப்பு வந்துள்ளது.
இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கின்ற வகையிலும், தொழிலாளர்களுக்கெதிரான நீதிமன்ற பாசிசத்தை அம்பலப்படுத்தும் வகையிலும், இந்த அரசுக் கட்டமைப்பே மக்களை ஆளத் தகுதியிழந்து, மக்களுக்கே விரோதமானதாக மாறிவிட்டதை விளக்கும் வகையிலும், திருபுவனை பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தியது. ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளைத் தலைவர் தோழர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் மகேந்திரன் அவர்களும், புதிய ஜனநாகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச்செயலாளர் தோழர் லோகநாதன் அவர்களும் விளக்கவுரையாற்றினார்கள்.
விண்ணதிரும் முழக்கங்களுடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் தோழர் சங்கர் தனது தலைமையுரையில், கோவை பிரிக்கால் வழக்கின் தீர்ப்பையும், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் விளக்கி, “நீதிமன்றமும், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு விரோதமாய் மாறிப் போனது. எனவே, இனி இவர்கள் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்காமல், உழைக்கும் மக்களுக்கான அரசினை நாமே நிறுவுவோம்” என்று நிறைவு செய்தார்.
விளக்கவுரையில் பேசிய மகேந்திரன், “திருபுவனை வட்டாரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் சொற்ப எண்ணிக்கையில் நிரந்த தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கணக்கின்றி சுரண்டுகின்றனர் முதலாளிகள்” என்று இவ்வாட்டாரத்தில் உள்ள, ரானே பிரேக்ஸ், மதர் பிளாஸ்ட், டெக்ஸ்பாண்ட், வேல் பிஸ்கட்ஸ், ஸ்வஸ்திக், ரானே மெட்ராஸ், டிடிகே உள்ளிட்ட தொழிற்சாலைகளின் ஊதிய உயர்வுப் போராட்டங்களை பட்டியலிட்டார்.
“குறிப்பாக, வேல் பிஸ்கட்ஸ் ஆலையில், ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் இழுபறி, வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்கியது. தொழிலாளர்கள் தமது கண்டனத்தை அமைதியான வழியில் தெரிவிக்கும் பொருட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்குச் சென்றனர். உணவுப் பொருள் தயாரிக்குமிடத்தில் குண்டூசி உள்ளிட்ட சிறு பொருளும் வரக்கூடாது எனக் கூறி, நிர்வாகமே உற்பத்தியை நிறுத்தி விட்டு, தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலை நிறுத்தம் செய்கின்றனர் என்றும், அதனால் 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்யப் போவதாகவும் தொழிலாளர் துறையில் கூசாமல் பொய் புளுகி மிரட்டியது. தொழிலாளர் துறை அதிகாரியோ, அது பற்றி விசாரணை கூடச் செய்யாமல், நிர்வாகம் சொன்னதை அப்படியே பதிவு செய்து தனது வர்க்க விசுவாசத்தைக் காட்டினார். ஆனால், உண்மையில் நிர்வாகம் ஒரு புறம் கதவடைப்பு என்று சொல்லி மறுபுறம் சட்டவிரோதமான முறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியில் ஈடுபட்டது. இதை அம்பலப்படுத்திப் பேசிய பிறகு தான், எந்தவித நிபந்தனையுமின்றி நிறுவனத்தை திறக்க வேண்டும் என ஆணை போடும் நிலைக்குத் தள்ளப் பட்டார் தொழிலாளர் துறை அதிகாரி. ஆனாலும், இன்னும் ஊதிய உயர்வு பிரச்சினை தீர்ந்தபாடில்லை”.
“இது வேல் பிஸ்கட் கம்பெனியின் நிலை மட்டுமல்ல, பொதுவாகவே எந்த முதலாளியும் சட்டத்தை மதிப்பதில்லை. தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளைக் கூட அனுமதிப்பதில்லை. ருபுவனை தொழிற் பேட்டையிலுள்ள மற்ற நிறுவனங்களின் நிலையும் அது தான்” என்பதை பகுதி மக்கள் உணரும் வகையில் சொந்த அனுபவங்களிலிருந்து விளக்கினார். “இந்தப் பின்னணியில் தான் இந்த பிரிக்கால் தொழிலாளர்களின் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும். எனவே, நமது உரிமைகளை அரசின் தொழிலாளர் துறையோ, காவல்துறையோ பாதுகாக்காது, பெற்றும் தராது. நமது உரிமைகளை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என சொந்த அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன” என்று கூறி தனது உரையை முடித்தார்.
தோழர் லோகநாதன் தனது உரையில், “பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளைத் தர மறுத்து, அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட HR அதிகாரி, சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து போனதற்கு, தொழிலாளர்களைக் காரணமாக்கி, குற்றம் நிரூபிக்கப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். புதுச்சேரி பகுதியில் இந்தியா நிப்பான், எம்.ஆர்.எஃப், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை என தொழிலாளிகளை தற்கொலைக்குத் தூண்டியது அதிகாரிகள் தான் என அப்பட்டமாக நிரூபணம் ஆன பிறகும், அந்த அதிகாரிகள் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால், தொழிலாளர்களுக்கு, குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இரட்டை ஆயுள் தண்டனை. இது தான் இந்த அரசின் யோக்கியதை.
ஆனால், தொழிற்சங்கம் ஆரம்பிப்பதால் தான் பிரச்சினைகள் ஏற்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படுகிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப முதலாளிகளும், முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் ஓயாமல் புளுகித் திரிகின்றனர். இந்த புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் 13,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் 800 தொழிற்சாலை களில் கூட தொழிற்சங்கங்கள் இல்லை என்ற ஒரு புள்ளி விபரமே இதற்குச் சாட்சி. மேலும், தொழிற்சாலையை மூடிய எந்த முதலாளியும் தனது தொழில் முடங்கி வீதிக்கு வந்து பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்துவதாக வரலாறு இல்லை. இந்த 800 தொழிற்சாலைகள் உட்பட மூடப்பட்டதாகச் சொன்ன அனைத்து தொழிற்சாலைகளையும் ஏதோ ஒரு பெயரில், நடத்திக் கொண்டு தான் உள்ளனர். வரி ஏய்ப்பு செய்வது, அரசின் சலுகைகளைப் பெறுவது போன்ற உண்மைகளை மறைத்து சங்கம் வைத்து பிரச்சினைகள் செய்வதால் தான் தொழிற்சாலைகள் மூடப்படுவதாக தொழிலாளர்கள் மீது பழி போடுகின்றனர் முதலாளிகள். முதலாளிகளின் இந்த சட்டவிரோத செயல்கள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பவர்களே அரசின் அதிகாரிகளும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் தான்.
முதலாளிகள், ஒரு தொழிற்சாலை ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்த கிளைகளைத் துவக்கி வளருகின்றனர். ஒவ்வொரு புது கிளைக்கும் தனது எந்த சொத்தையும் விற்று புதிய முதலீடுகள் செய்வதில்லை. அரசின் சலுகைகள், வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும் பிரதானமாக, தொழிலாளிகளின் உழைப்பை ஒட்டச் சுரண்டுவதன் மூலமும், அதாவது, ஆசான் மார்க்ஸ் சொன்னது போல், தொழிலாளர்களின் கொடுக்கப்படா கூலியின் மூலம் லாபத்திற்கும் மேல் வரும் உபரியின் மூலம் தான் அடுத்தடுத்த கிளைகளைப் பரப்பி, அதன் மூலம் மேலும் மேலும் தொழிலாளர்களைச் சுரண்டுகின்றனர்.
இவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளிடம் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால், ஊதிய வெட்டு, பணிநீக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகள். அதையும் எதிர்த்துப் போராடினால் ரவுடிகளின் தாக்குதல், பொய்வழக்கு, கைது, சிறை. இவ்வாறு தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக விடாப்பிடியாகப் போராடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை மட்டுமல்ல; மாருதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி சிறையில் உள்ள தொழிலாளர் வழக்குக்கும் ஒரு முன்னுரையாகவும் தான் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த அநீதியான தீர்ப்பு.
கோவை பிரிக்கால் தீர்ப்பில், தொழிலாளர்கள் மீதான குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படாத போதும், அரசுத் தரப்பு சாட்சிகள், பொய் சாட்சிகள் என நீதிமன்றமே கூறிய போதும், குற்றத்திற்கான சதியில் ஈடுபட்டதாலேயே தண்டனையை உறுதி செய்வதாகக் கூறியுள்ளது நீதிமன்றம். குற்றங்கள் நீரூபிக்கப்பட வேண்டும் என்பதில்லை; முதலாளிகளை எதிர்த்துப் போராடினாலே தண்டனை தான் என்பது தான் நீதிமன்றம் இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்குச் சொல்லியிருக்கும் செய்தி.
பிரிக்கால் தீர்ப்பு மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீது தினம் தினம் அடக்குமுறைகளை ஏவிவரும் முதலாளித்துவத்திற்கு அடியாளாகத் தான் தொழிலாளர் துறையும், போலிசும், நீதிமன்றமும் செயல்படுகிறது. இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் தேவையற்றதாகவும், எதிர்நிலை சக்தியாகவும் மாறிவிட்டது. எனவே, நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பை தகர்த்து, அதிகாரத்தை நாமே கைப்பற்றுவதும், ஆலைகள் தோறும் ஆலைக்கமிட்டிகளை அமைத்து நமக்கான தேவைகளை நாமே நிறைவேற்றுவதும் தான் தீர்வு”.
இறுதியாக, நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி. தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, செல்: 9597789801.
பார்ப்பன ஆதிக்க சாதி வெறியின் தோற்றுவாய், அதன் ஆதிக்கம் புறமணத்தடையில் இருந்தே வந்துள்ளது – நீங்கள் மறுத்தாலும் உங்களின் இனக்கீற்று அமிலங்கள் (டி.என்.ஏ) மறுக்காது!
டி.என்.ஏ (DNA) அல்லது இனக்கீற்று அமிலங்கள் மனித இனத்தின் மரபணுத் தகவல்கள் மற்றும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி மட்டுமே சொல்லும் என நினைத்தால், இல்லை, நாங்கள் சாதிகள் தோன்றி வளர்ந்து மேலாதிக்கம் பெற்ற காலத்தையும் துல்லியமாகச் சொல்வோம் என நிரூபித்துள்ளன. கல்கத்தாவில் இருந்து செயல்படும் தேசிய உயிர்-மருத்துவ மரபியல் நிறுவனம் (NIBMG) மற்றும் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் மனித மரபியல் பிரிவும் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை எட்டியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் PNAS என்ற ஆய்விதழில் வந்துள்ள இக்கட்டுரையின் ஆராய்ச்சியை, NIBMG-இன் ஆய்வுப்பிரிவுத் தலைவர் அனலபா பாசு தலைமை தாங்கி நடத்தியுள்ளார்.
கடவுள் துகள்கள் (God particle) என அழைக்கபடும் ஹிக்ஸ்போசான் துகள்களின் கண்டுபிடிப்பு எவ்வாறு கடவுளை மறுத்த துகளாக மாறி இயக்க மறுப்பியலாளர்கள், சங்கப்பரிவாரங்கள் மற்றும் இதர மதக் கோட்பாட்டுவாதிகளின் வாதங்களுக்கு ஆப்பறைந்ததோ, அதைப்போல இவ்வாராய்ச்சி, இந்திய வரலாற்றில் ஆயிரமாண்டுகளாக கடைப்பிடித்து வருகிற வருணாசிரம முறை மேலாதிக்கம் பெற்று இறுகிய நிலைக்கு புறமணத்தடையை (அல்லது அகமண முறையைக் கட்டாயமாக்கிய) அமல் படுத்திய பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பும் அதன் பிரதிநிதிகளான மன்னர்களும் தான் காரணம் என்பதை அறிவியல் ஆதாரத்துடன் விளக்கி, சாதிகளைப் பற்றிப் புரிந்து கொள்ளும் சமூக ஆய்வில் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. புறமணங்களின்மீது அகமணமானது ஏறி ஆதிக்கம் செலுத்திய காலகட்டம்தான் சாதி மேலாண்மையின் தோற்றுவாயாக இருந்தது, எனக் கூறிய அம்பேத்கரின் வாதத்திற்கு இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வலுசேர்த்துள்ளன.
இந்தியாவில் மக்கள் ஏற்றத்தாழ்வான சாதியக் கட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதற்கான உயிரியல் ஆதாரங்களை இந்த ஆய்வு மெய்ப்பித்துள்ளது. அகமண முறையால் இந்த கூறு இன்றும் தொடருவதை இந்த ஆய்வு மெய்ப்பிக்கிறது. அதே நேரம் இந்த அகமண முறை அல்லது சாதியப் பிரிவினை பொருளாதார அலகுகளாக பிரிந்திருப்பதன் மூலம் இந்த சாதிய ஏற்றத்தாழ்வை ஆதிக்கம் செய்யும் சக்திகள் தமது அதிகாரத்தை கையில் வைத்திருந்தன.
வரலாற்று நோக்கில், தற்போதைய இந்திய மக்கள் தொகையின் மரபுத்தொகுதி புனரமைப்பு ஐந்துவகைப்பட்ட தனித்தனி மூதாதையர்களையும், சிக்கலான அமைப்பையும் கொண்டது, (Genomic reconstruction of the history of extant populations of India reveals five distinct ancestral components and a complex structure) எனத் தலைப்பிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில்தான் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாரய்ச்சியின் முதல்படியாக, இந்தியாவின் பல்வேறு சமூகக் கலாச்சாரம், மற்றும் மொழியில் வேறுபட்ட சுமார் இருபது சாதிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இந்திய நிலப்பகுதிகளில் வாழும் 18 சாதிகளிடம் இருந்தும் அந்தமான் தீவில் வாழும் இரண்டு பழங்குடியினரின் ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு சாதியில் இருந்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஏறக்குறைய 20 நபர்கள் என சுமார் 367 நபர்களின் ரத்த மாதிரிகளில் இருந்து மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றின் மரபணுத் தொடர்வரிசை கணக்கிடப்பட்டது (Genome sequence).
இதன்படி பல்வேறு முடிவுகளை கண்டடைந்துள்ளனர். குறிப்பாக 2009-களில் இந்திய மக்களின் மரபணுக்களைப் பரிசோதித்த ரீச் (ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக் கழகம், அமெரிக்கா) மற்றும் குமாரசாமி தங்கராஜ் (மத்திய செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்தியா) குழுவினரின் ஆய்வுப்படி இரண்டு தனி மூதாதையர்கள் மட்டுமே இருக்கின்றனர் என முடிவு செய்யப்பட்டது. அதாவது பெரும்பாலான தென்னிந்தியப் பகுதிகளில் இருக்கும், திராவிட வழியிலான மூதாதையர்கள் (ASI – Ancestral South Indian) மற்றும் வட இந்தியப் பகுதிகளில் இந்திய – ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மூதாதையர்கள் (ஆரியர்கள் எனவும் எடுத்துக்கொள்ளலாம், ANI – Ancestral north Indian) என இருப்பிரிவினர். அனால் தற்போது, இந்தியா முழுதும் உள்ள பரந்துபட்ட மக்களின் மரபணுக்களை ஆராய்ச்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் மேற்கூறிய இரண்டு பிரிவினரையும் சேர்த்து மொத்தம் 5 தனித்தனி மூதாதையர் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் காணப்படும் பழங்குடிகளான ஆஸ்திரிய-ஆசிய மக்கள் (AAA – Ancestral Austro -Asiatic), வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் திபத்திய-பர்மிய மக்கள் (ATB – Ancestral Tibeto -Burman) மற்றும் அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் மட்டுமே வாழ்ந்துவரும் ஜரவா, ஓங்கே உள்ளிட்ட பழங்குடிகள் உள்ளிட்ட மூன்று மூதாதையர்களை உள்ளடக்கியதுதான் இந்தியாவின் இன்றைய குடிமக்கள்.
இதற்கு முன்பு வந்த ஆய்வுகள் பல இதுபோன்ற தகவல்களைக் கூறினாலும் இச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை பலவெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் நடந்தாலும் ஆய்விற்கு சில சாதிகளின் ரத்த மாதிரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் அவர்கள் ஒரு முன்முடிவில் இருந்து அவ்வராய்ச்சியை நடத்தியுள்ளனர். ஆனால் இக்குறிப்ப்ட்ட ஆய்வு முழுக்க முழுக்க இந்தியாவில், இந்திய மரபணு ஆராய்ச்சியாளர்களால் பல வகைப்பட்ட பிரிவினரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, கடந்தகால சமூகப் பழக்கவழக்கங்களில் இருந்து நிறுவியுள்ளனர். பல சமூக ஆய்வாளர்கள் இவர்களின் அறிவியல்-சமூகப் பூர்வ தர்க்கத்தை ஏற்றுள்ளனர். நல்லவேளையாக இவ்வாராய்ச்சியின் முடிவுகள் ஏற்படுத்தப்போகும் விவாதங்கள் அல்லது எதிர்கால சமூக ஆய்வில் ஏற்படப்போகும் திருப்பங்கள் குறித்து இந்துத்துவப் பார்ப்பனப் பரிவாரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டும் தெரிந்திருந்தால் கண்டிப்பாக மோடி இவாராய்ச்சியை நடத்த விட்டிருக்கமாட்டார்கள். இல்லையென்றால் எடுக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரிகளை (samples) மாற்றியிருப்பார் எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த அளவிற்கு சங்க பரிவாரங்களை எரிச்சல்படுத்துவதோடு அறிவியல் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு இது.
சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தியா முழுவதும் 1575 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 1575 ஆண்டுகள் முன்பு வரையிலான இடைப்பட்ட காலங்களில் நமது அனைத்து மூதாதையர்களும் தங்கள் இனத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர், கலந்துள்ளனர். அதாவது புறமணமுறையானது (Exogamy) இருந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தங்கள் கணம் அல்லது சாதி/குழுக்களைத் தாண்டி திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அவர்கள் ஆராய்ந்த பொழுதுதான் அக்கால மக்களின் சமூக வாழ்நிலை அப்போதைய ஆட்சியாளர்களால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டதைக் கண்டனர். இந்தியாவின் பொற்காலம் என்றும் வேதங்களின் காலம் என்றும் புகழாரம் சூட்டப்படும் குப்தர்கள் பேரரசில்தான் அகமணமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அதாவது தர்மசாஸ்திரம்/மனுதர்மத்தின் பெயரில் சாதிக்கொடுங்கோன்மைகளும் ஒரு சாதியினர் மற்ற சாதியினருடன் மணமுடிப்பது தடுக்கப்பட்டு புறமணமுறை தடைசெய்யப்பட்டது. இச்செய்திகள் நமக்கு முன்கூட்டியே தெரியும் என்றாலும், உயிரித் தொழில்நுட்பம் மூலமாக உறுதியாகியுள்ளது எனலாம்.
இந்தியாவில் இருக்கும் குஜராத், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க பார்ப்பனர், தமிழகத்தின் ஐயர், மற்றும் கத்ரி போன்ற ஆதிக்கச்சாதி பிரிவினர்கள் கிட்டத்தட்ட 70 தலைமுறைகளுக்கு முன்பாகவே புறமணமுறையை கைவிட்டார்கள் என இவ்வாய்வு தெரிவிக்கிறது. 1100 வருடங்களுக்கு முன்பு ஆண்ட சாளுக்கியர்கள் காலகட்டத்தில் மராத்தா பிரிவினரின் புறமணமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்தான் ராஷ்டிரகுட மன்னர்கள் விவசாயிகளிடமிருந்து ஒரு படைப்பிரிவினரைத் தோற்றுவித்து அவர்கள் மற்ற சமூகத்தினரிடையே கலப்பதைத் தடுத்துள்ளனர், இவர்களே பிற்காலத்தில் அப்பகுதியின் சத்திரிய வம்சமாகத் தோன்றினர். இச்சாதிப் பிரிவால்தான் ஒரு கட்டத்தில் அதிக அளவில் நடந்த, திராவிட- பழங்குடியின கலப்பும், வேறுபட்ட பழங்குடியினரிடையேயான கலப்பும் தடைசெய்யப்பட்டது எனலாம்.
சாதிப்பாகுபாட்டினால் பல்வேறு பிரிவினையிடையே இருந்து வந்த கலப்பு முற்றுப் பெற்றாலும் அது முழுமையாக முடியவில்லை. ஆதிக்கசாதி ஆண்களின் மரபணுக்கள் மற்றசாதி குழந்தைகளிடையே காணப்பட்டுவதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது. அதாவது பார்ப்பன, ஆதிக்க சாதிகளின் ஆணாதிக்கம் திராவிட, பழங்குடிப் பெண்களின் வாழ்க்கையில், அவர்களின் குடும்பங்களில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் இது மற்றசாதி ஆண்கள் பார்ப்பன, ஆதிக்க சாதி பெண்களுடனான கலப்பைத் தடுத்திருக்கிறது. இதன் மிச்ச சொச்சம்தான் பொட்டுக்கட்டுதல், தேவதாசி மற்றும் தேவரடியார் முறைகளில் பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பனர்கள் மற்றும் இதர ஆதிக்க சாதியினர் பயன்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட ஏழை விவசாயிகளின் மனைவிமார்களை ஜமீந்தார்களுக்குப் பிடித்துவிட்டால் அவ்வளவுதான், அவ்விவசாயி தன் மனைவியை அவர்களின் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும், இது அம்மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டு கட்டாயமாக இருந்துள்ளது. அதை மீறி செயல்பட முடியாத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருந்துள்ளது. வீரம்செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தைப் பற்றி விளக்கும் மாபூமி படத்தில் கூட இது போன்ற காட்சிகளைப் படமாகப் பார்த்திருப்பீர்கள்.
எப்படி இதைக் கண்டுபிடித்தார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் ஆராய்ச்சியில் கூறப்பட்டவை அனைத்தும் அறியியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதைக் கண்டுபிடிக்க மனித உடலில் காணப்படும் Y குரோமோசோம்கள் (மரபணுச்சரம், மரபணுக்கோல் அல்லது நிறமூர்த்தம் என பல கலைச்சொற்கள் உள்ளன) மற்றும் மைட்டோகான்ட்ரீயா (மணியிழை) டீ.என்.ஏக்கள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் Y மரபணுச்சரங்களின் மூலம் ஆண்களின் பரம்பரைத் தகவல்களையும், மணியிழை டி.என்.ஏக்கள் மூலம் பெண்களின் பரம்பரைத் தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். Y மரபணுச்சரமானது ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது, ஆக ஆண்களிடமிருந்தே இத்தகவல்கள் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது. மரபணுக்களை மொத்தமாகப் படிக்கும்போது, இத்ததகவல்கள் குறிப்பிட்ட நபரின் தந்தை எந்த சமூகத்தைச் சார்ந்தவராக, சாதியைச் சார்ந்தவராக இருந்தார் என்பதைச் சொல்கின்றன. மணியிழை டி.என்.ஏ பெண்களிடமிருந்துதான் ஒருவருக்குக் கிடைக்கிறது. மணியிழை டி.என்.ஏவானது விந்துவில் மிகக் குறைவாகவும், கருமுட்டையில் அதிக அளவும் காணப்படுகிறது. கருவுறுதலின் பொழுது விந்துக்களில் உள்ள மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன,(மைட்டோகாண்ட்ரீயா அல்லது மணியிழைகள், இவை செல்களுக்கான ஆற்றலின் பிறப்பிடமாகும்) அதனால் ஒருவரின் உடலில் உள்ள மணியிழை டி.என்.ஏ தனது தாயிடமிருந்து பெறப்பட்டவையாக மட்டுமே இருக்கும்.
இதன்படி, இந்தியாவில் காணப்படும் திராவிட, பழங்குடியின மக்களின் மரபணுக்களில் Y மரபணுச்சரத்தின் பல்வகைப்பட்ட பிரிவுகள் காணப்படுகின்றன, அதே சமயத்தில் மணியிழை டி.என்.ஏக்கள் அனைத்தும் இப்பிரிவினரிடையே ஒன்றுபோல இருக்கின்றன. அதாவது மேல்சாதி ஆண்கள் திராவிட, பழங்குடி பெண்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் அவர்களின் வழியே பிறந்த குழந்தைகளிடம் Y மரபணுச்சரங்கள் வேறுபட்டு இருந்தன, ஆனால் தாய்க்கூறைக் கண்டுபிடிக்கும் மணியிழை டி.என்.ஏக்களில் எவ்வித வேறுபாடும் இல்லை. இத்தகைய பண்புகள் மேல்சாதியினரின் மரபணுக்களில் இல்லை, இதன் மூலம் திராவிட, பழங்குடியின ஆண்கள் மேல்சாதி பெண்களிடம் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே பார்ப்பனிய மேலான்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இது போன்ற தனிச்சிறப்பான ஆராய்ச்சிகள் மூலம் நமது ஆப்பிரிக்க மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பகுதிகளுக்கு வந்தனர், திராவிடப் பாரம்பரியம், ஆரியப் படையெடுப்பு பற்றிய தகவல்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.மேலும், பல்வேறு இனங்களுக்கிடையில் கலப்பு இருந்த நமது சமூகம் மிகுந்த ஆரோக்கியத்துடன்தான் இருந்துள்ளது. ஆனால் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள், பல நோய்களின் கூடாரமாக மாறியது சிலப் பல நூறாண்டுகளுக்கு முன்பு இவர்கள் கொண்டு வந்த அகமணமுறையின் மூலம்தான் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா. நம்பமுடியாவிட்டாலும் அதுதான் உண்மை. இதை அவர்களே மறுத்தாலும் அவர்களின் டி.என்.ஏக்கள் மறுக்காது. அதுபற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
பிப்ரவரி 14 – திருச்சியில் மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு ! மக்கள் அதிகாரம் தோழர்களுடன் மல்லுக்கட்டும் மாநகர மது விலக்கு போலீசு!
மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாட்டையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து விளம்பரங்கள், சுவரொட்டி பிரச்சாரம், குடியிருப்புகளுக்கே சென்று மக்களை சந்திக்கும் சிறப்பு பிரச்சாரக் குழுக்கள், விளம்பர வாகன ஏற்பாடுகள், ஆட்டோ விளம்பரத் தட்டிகள், பேருந்து, ரயில் பிரச்சாரங்கள் என பல்வேறு வகைகளில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ம.க.இ.க மையக்கலைக்குழு பாடகர் கோவன் திருச்சி மாவட்ட அளவிலான மாநாட்டு பிரச்சார வேனை கடந்த 04-02-2016 அன்று தில்லைநகர் – காந்திபுரம் பகுதியிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல்வேறு வடிவங்களில் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரம் நடைபெறவுள்ளதையும் விளக்கியுள்ளார். மாநாடு நடைபெறும் திருச்சி மாவட்டம் முழுவதும் எங்கு திரும்பினாலும் சுவரெழுத்து பிரச்சாரமும், மாநாட்டு பிரச்சாரக் குழுவினரின் பல்வகை பிரச்சார வடிவங்களாலும் இப்பொழுதே மாநாடு குறித்த எதிர்பார்ப்பு கூடி விட்டது.
தமிழகத்தின் ‘மதுவிலக்கு’ மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனே டாஸ்மக்கை மூட முடியாது என்று கூறிவிட்டதால் நம்பிக்கையற்று பேசும் நடுத்தர வர்க்கத்திடம் தமிழக அரசின் பொய் பிரச்சாரங்களை தோலுரித்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். அம்மாவுக்கு எதிராக ஏதாவது பேசினால் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று அதட்டலாக அடாவடி பண்ணிய சில அ.தி.மு.க அடிமைகளிடம் ஏண்டா மூடமுடியாது? என்று சவால் விட்டும் மக்கள் அதிகாரம் தன் பிரச்சார பணிகளை செய்து வருகிறது.
பேருந்து பிரச்சாரங்களில் பலதரப்பட்ட மக்களும் மனமுவந்து நமது முயற்சிகளை பாராட்டுவதும், பேசும் போதே கைதட்டி வரவேற்பதும், பேசி முடிப்பதற்குள் வந்து உண்டியலில் ரூபாய் நோட்டுகளை திணித்து விட்டுச் செல்வதும் நடக்கிறது. பேருந்து ஒன்றில் மக்கள் அதிகாரம் தோழர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயன்ற அ.தி.மு.க கரைவேட்டி காரர் ஒருவரை எதிர்த்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், “ஏய் அவரை ஏன் தடுக்கிற, 8 வருசமா இந்த குடியால தான் என் ஒட்டு மொத்த குடும்பமுமே அழிஞ்சிருச்சு, உனக்கென்ன தெரியும் எங்க வேதனைய பத்தி” என்று ஆத்திரத்தால் வெடித்து சீறியிருக்கிறார். “நீ பேசு தம்பி” என மக்கள் அதிகாரம் தோழர்களை அங்கீகரித்து விட்டு அவர் அமர, அவமானம் தாங்க முடியாத அ.தி.மு.க.காரரோ பேருந்தை விட்டே விருட்டென கீழே இறங்கி சென்று விட்டார்.
விளம்பர சுவரொட்டிகளை நகரங்களின் முக்கிய வீதிகளில் ஒட்டிய பின்னர் குடியிருப்புகளில், தனிநபர் வீடுகளில் ஒட்டும் போது தயங்கிக்கொண்டே சுவரொட்டி ஒட்டிய தோழர்களை பார்த்து, “அட என்ன தம்பி நல்ல விசயந்தானே செய்றீங்க, அதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்குறீங்க, இங்க வந்து ஒட்டுங்க” என்று தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுக்கின்றனர் மக்கள். பெண்கள் தண்ணீர் பிடிக்கும் இடங்கள், மாலை இருட்டிய பின் குடிமகன்கள் ஒன்று கூடும் இடங்கள் என “இங்கே ஒட்டு, அங்கே ஒட்டு” என்று கையோடு அழைத்துக் கொண்டு சென்று சுவரொட்டிகள் ஒட்ட வேண்டிய இடத்தையும் காட்டுகின்றனர்.
” எம் புள்ளையெல்லாம் ஏற்கனவே தறுதலையா திரியுது, இதுல இந்தம்மா (ஜெயலலிதா) வேற இன்னும் தறுதலையா போ-ன்னு இப்படி (டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து) பண்ணுது” என்று கூறி ஒரு பெண்மணி ஆத்திரப்பட்டார். மாநாட்டுக்கு வந்து விடுங்கள் என்று நாம் கூறிய போது, ‘இங்க பாரு தம்பி, என் தெருவுல யாரு வராங்களோ இல்லையோ நான் தனியாளா இருந்தாலும் கண்டிப்பாக மாநாட்டுக்கு வந்துருவேன்’ என கூறியுள்ளார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு அடுத்த இடத்திற்கு நகர முயன்ற தோழர்களிடம், “இப்படி போஸ்டர் ஒட்டிக்கிட்டே போறியே காலையில சாப்பிட்டியா இல்லையா?” என்று வாஞ்சையோடு கேட்டு விட்டு, தோழர்களது பதிலுக்கு கூட காத்திராமல் வீட்டிற்குள் சென்று சாப்பாட்டு பானையை எடுத்து கிளற ஆரம்பித்து விட்டார். பசை ஒட்டி காய்ந்து போன கைகளுடன் எப்படி சாப்பிடுவது என தயங்கிய போது அவரது கையாலேயே ஊட்டி விடவும் செய்துள்ளார். கலங்கிய கண்களுடன் விடைபெற்று சென்றுள்ளனர் தோழர்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பேருந்து நிலையத்தில் ஒட்டும் போது பணியில் இருந்த கீழ் நிலை ரோந்து போலீசார், யாரு அது மக்கள் அதிகாரமா? ஒட்டுங்க … ஒட்டுங்க… நல்ல விசயந்தானே செய்யுறீங்க என்று வாழ்த்தியதோடு ”தோழரே வாங்க டீ சாப்பிடலாம்” என தயக்கத்துடன் கேட்டுள்ளார்.” நாங்க போலீசுக்காரங்க, அதனால நாங்க வாங்கிக் குடுத்தா குடிக்க மாட்டீங்கன்னு தெரியும்” என வருத்தத்துடன் பேச, “நீங்கள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எதிரியா என்ன? டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கையில் மனப்பூர்வமா எங்களை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களை நாங்க எப்படி எதிரியா பார்க்க முடியும்? மக்களுக்கு விரோதமா நடக்கும் போது தானே எதிர்த்து நிற்கிறோம். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என கூறிவிட்டு அடுத்தடுத்த பிரச்சார வேலைகளுக்கு சென்றுள்ளனர்.
அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பலதரப்பட்ட வர்களையும் சந்தித்து மாநாட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டோக்களில் விளம்பர பிளக்ஸ்கள், விளம்பர வாகனங்களில் மூடு டாஸ்மாக்கை பாடலை ஒலிபரப்பிய படி செல்லும் பகுதிகளில் பொது மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்துள்ளது. ஊருக்குள் நுழைந்தாலே சிறுவர்கள் டாஸ்மாக் எதிர்ப்பு பாடலை பாடிக்கொண்டே கும்பல் சேர்ந்து விடுகின்றனர். ஒரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது 70 வயது மற்றும் 50 வயது மதிக்கத்தக்க குடிமகன்கள் இருவர் நமது டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுத்து, “நீ யாருடா டாஸ்மாக் கடைய இழுத்து மூடுறதுக்கு” என்று தகராறு செய்ததோடு “கடைய மூடிட்டா இத எப்புடி நிறுத்துறது” என நடுங்கும் தனது கைகளை காட்டி பேசியுள்ளார். நிதானமாக இருந்த மற்றொரு குடிகாரரிடம் நாம் யார் என்பதை விளக்கி விட்டு, உங்க வீட்டு மகன் போல இருக்கும் என்னிடம் இப்படி பிரச்சனை செய்வது சரியா? நான் பேசும் விசயத்தில் ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க என நோக்கத்தை விளக்கி பேச அவரோ ‘டாஸ்மாக்கை மூடுறது தான் சரி தம்பி, இந்த ஊர் பூரா போய் பிரச்சாரம் பண்ணு, போஸ்டர் ஒட்டு, எவனாவது தடுத்தான்னா இந்த வேல்முருகன் தான் (அவரது பெயர்) செய்ய சொன்னான்னு சொல்லிட்டு போய்ட்டே இரு… என்று கூறிவிட்டு ‘மூடு டாஸ்மாக்கை’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மேலும் கடை வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்டோரை சென்று சந்தித்து ஆதரவும், நிதி திரட்டும் வேலைகளையும் மாநாட்டு குழுவினர் செய்து வருகின்றனர். நகரின் பிரபலமான பழமுதிர்ச்சோலை, இனிப்பகங்கள் போன்ற கடைகள் வைத்திருக்கும் வணிகப்பிரிவினரிடம் செல்லும் போது, “அடடே மக்கள் அதிகாரமா! வாங்க..வாங்க..” என வரவேற்று உபசரித்தனர். அதில் ஒருவர் “பாடகர் கோவனுடைய பாட்டை வெளி மாநிலங்கள்ல இருக்கிற என்னோட நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் கூட whats app-ல் அனுப்பியிருக்கேன், உங்கள நானே சந்திக்கனும்னு இருந்தேன், நீங்களே தேடி வந்துட்டீங்கனு” ஏதோ நீண்ட காலம் பழகிய நண்பரை போல பேச ஆரம்பித்து விட்டார். அரைமணி நேரத்திற்கு மேல் பேசிய அவர், நாம் பேச வேண்டிய அனைத்தையுமே பேசிவிட்டதால் மாநாட்டு அழைப்பிதழை அவரிடம் வழங்கியவுடன் தனது கல்லாவிலிருந்து 10,000 ரூபாயை எடுத்து மாநாட்டு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
‘உங்களுக்கெல்லாம் இத விட அதிகமாத்தான் செய்யனும் இதை இப்போதைக்கு வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறி மாநாடு வெற்றி பெற வாழ்த்தியுள்ளார். “எப்படியாவது டாஸ்மாக்கை மூடிவிடுங்க, இப்ப எங்க கடையிலயே 10, 15 பேரு வேலை பாக்குறானுங்க, சில பேரு பகல்லயே குடிச்சுப்புட்டு வேலைக்கு வரான், கஸ்டமருங்க முகம் சுழிக்குறாங்க! என்ன செய்யுறதுன்னே தெரியல, இவன் வாங்குற சம்பளத்தை பூரா குடிச்சே அழிச்சான்னா எத மிச்சம் பண்ண போறான்னே தெரியல” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது அவரின் ஆதங்கம் மட்டுமல்ல மனித வள அழிவின் மோசமான குறியீடும், மெல்ல அழுகி நாறும் தமிழ்ச் சமூக பண்பாட்டின் குறுக்குவெட்டுத் தோற்றமும் ஆகும். எப்படியேனும் டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டிய தருணமும் இது தான்.
நாம் இப்படி சிந்திக்கிறோம். நமது பிரச்சாரம் அன்றாடம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் அதன் ’அபாயத்தையும்’ நன்கு உணர்ந்த திருச்சி மாநகர கமிசனர் சஞ்சய் மாத்தூர் மாநகர போலீசுக்கு புது உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம். அதனடிப்படையில் திருச்சி மாநகரம் முழுவதும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசு சார்பில் ‘கள்ளச்சாராய’ விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகங்கள், தெம்மாங்கு பாட்டுக்கள், கரகாட்ட நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். பெண் போலீசாரை ஆடவிட்டு விடுவார்கள் என்று யாரும் அஞ்ச வேண்டாம். பெரம்பலூரில் இருந்து ஓசைக் கலைக்குழு என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை குறிப்பிட்ட தொகை பேசி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.
இந்த முதல் சுற்று நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பாரதிதாசன் பல்கலைகழக NSS மாணவ – மாணவிகள், போலீசு நண்பர்கள் (FRIENDS OF POLICE) குழுவினர் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பேரணியும் நடைபெறவுள்ளதாம். பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடத்துவது, ஆட்டோ டிரைவர்கள் மூலம் பொதுமக்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மாநகரில் உள்ள 14 சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல்நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்களாம். இதன் தொடர்ச்சியாக போலீசார் தெரிவு செய்யும் 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவிப் பெட்டிகள் (FIRST AID BOX) வழங்கி (இல்லாத) ‘கள்ளச்சாராய’த்தை ஒழிக்கப் போவதாக ‘நாடகமாடு’கிறார்கள்.
அப்படி என்னதான் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை பார்க்கும் ஆவலுடன் கடந்த 06-02-2016 அன்று இராமக்கிருட்டிணா திரையரங்கம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். பறை இசைக்கும், கரகாட்டத்தை பார்ப்பதற்கும் கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் ‘கள்ளச்சாரா’யம் குடித்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படும், உடல் உறுப்புகள் நிரந்தரமாக ஊனமாகும் என்றும் வெளி மாநில மதுவோ, அந்நிய நாட்டு மதுவோ விற்பதற்கு இங்கே தடை செய்யப்பட்டுள்ளதால் அதை மீறுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும், யாராவது ‘கள்ளச்சாராயம்’ காய்ச்சினால் உடனடியாக போலீசிற்கு போன் பண்ண வேண்டும் என்றும் அறிவுரைசெய்து கொண்டிருந்தனர்.
சாராயமே குடிக்கக்கூடாது என்று பேசாமல் ‘கள்ளச்சாராயம்’ குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை எச்சரிக்கிறோம் என்ற பெயரில், அம்மா டாஸ்மாக் மதுபான வகைகளுக்கு நேரடி விளம்பரத் தூதர்களாக மதுவிலக்கு போலீசே களமிறங்கியதை கண்டு நமக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பொது மக்களோ தலையில் அடித்து கொண்டு சென்றனர். அது சரி தான் மாவட்ட ஆட்சியர்களே அம்மாவின் ஜால்ராக்களாக மாறி கழகப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும் போது I.P.S முதல் ஏட்டு வரை எம்மாத்திரம்?
அடுத்த நாள் செய்தியில் காரைக்கால் பகுதியிலிருந்து மதுபான வகைகளை அளவுக்கு அதிகமாக பைகளில் வாங்கிக் கொண்டு, ரயிலில் தமிழக எல்லைக்குள் நுழைந்த வாலிபர்கள் சிலரை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. போகிற போக்கை பார்த்தால், டாஸ்மாக்கை மூடும் வகையில் மக்கள் போராட்டங்கள் அதிகரித்தால் ‘கள்ளச்சாராயம்’ காய்ச்சி, சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக காட்டுவதற்காக மதுவிலக்கு போலீசாரே அம்மாவின் ஆணைக்கிணங்க களமிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
தகவல் மக்கள் அதிகாரம், திருச்சி.
கரூர்
கரூர் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை மையமாக வைத்து பகுதி பிரச்சாரம், கடைவீதி பிரச்சாரம், சிக்னல் பிரச்சாரம், வாயிற்கூட்டங்கள், பேருந்து பிரச்சாரம், இரயில் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள் என்ற வகையில் மூடு டாஸ்மாக்கை – பிப்ரவரி 14 சிறப்பு மாநாட்டை ஒட்டி வீச்சான பிரச்சாரம் செய்து வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதோடு அதிகபட்சமாக நிதியும் கொடுத்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கரூர் நகரத்தில் லைட்ஹவுஸ், தாந்தோணிமலை, வெங்கமேடு, தாலுக்கா அலுவலகம் அருகில் என்று மொத்தம் 4 கூட்டங்கள் நடைபெற்றன. மாயனூர் – கட்டளை பகுதியில் 06-02-2016 அன்று மாலை 6 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு மாயனூர் காவல் ஆய்வாளர் நாகராஜன் அனுமதி வழங்கினார். கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கட்டளை பகுதியில் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதைக் கண்டு பீதியடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் ரமேஸ்குமார் தலையிட்டு கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினார். பிறகு மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களை நேரில் சந்தித்து அனுமதி மறுத்தது தொடர்பாகப் பேசினோம். அறையை விட்டு தோழர்கள் வந்தவுடன் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமார் பொங்கி எழுந்து உதிர்த்த வார்த்தைகள் இதோ…
நீங்க நாலு பேரு பேசுவீங்க. 40 பேர் அடிக்க வருவாங்க. அதுக்கெல்லாம் நாங்க பாதுகாப்பு தர முடியாது! நாலாயிரம் பேருக்கு போட்டுக் காட்டுவீங்க (வினவு தளத்தைக் குறிப்பிடுகிறார்). உங்களுக்கு 4 இடத்தில் கொடுத்ததே அதிகம். அதுக்கு மேல் ஒரு இடம் கூட அனுமதி இல்லை. வழக்கறிஞரை பார்த்து நீங்க கோர்ட்ல வாதாடுங்க. இங்க வதாடக் கூடாது. இது ஒண்ணும் கோர்ட் இல்ல. நீங்க போய் மக்களுக்கு எடுத்துச் சொன்னா மட்டும் அவன் திருந்திட போறான்களா? கரூர்ல மட்டும்தான் உங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கோம். வேற எந்த மாவட்டத்திலும் கொடுக்கல.. அதுதான் எங்க வேலையா? மைனர் யாரும் குடிக்கல, மேஜர்தான் குடிக்கிறாங்க. நீங்க உங்க பப்ளிசிட்டி விளம்பரம் தேடுறீங்களா?”
ரவுடி போல அதிகார திமிருடன் நடந்து கொண்ட ரமேஸ்குமாரை எஸ்.பி அறைக்கு வெளியே மக்கள் அதிகாரம் தோழர்களும் வழக்கறிஞர்களும் சரமாரியாகக் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்ட களமாக்கினர். கட்டளை பகுதியில் மணல் கொள்ளையும், சந்துக்கடை சாராயம் விற்பனையும் அமோகமாக செய்து வருகின்றனர். இந்தக் கொள்ளையில் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமாருக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. மற்றும் உள்ளூர் போலீஸ் முதல் மாவட்ட போலீஸ் வரை மணல் மாஃபியா கும்பலுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் சொம்பு தூக்கும் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமாரை கண்டித்து நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டு ரமேஸ்குமாரின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மக்கள் அதிகாரம்.
சுவரொட்டி முழக்கங்கள் மூடு டாஸ்மாக்கை! மாயனூர் – கட்டளை பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடத்தத் தடை!
மாவட்ட நிர்வாகமே! மாயனூர் காவல் ஆய்வாளர் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தும் SP இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமார் ரத்து செய்த மர்மம் என்ன?
கரூர் மாவட்டத்தில் மக்கள் உரிமைக்காக பேச வேண்டும் என்றால் இன்ஸ்பெக்டர் மனது வைத்தால்தான் சாத்தியமா?
உழைக்கும் மக்களே! மக்களின் பேச்சுரிமையை மறுக்கும் அதிகார வர்க்கக் கும்பலை தூக்கியெறிய மக்கள் அதிகாரமே தீர்வு!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பலவேறு விதமான நேரடியான மற்றும் மறைமுகமான நெருக்குதல்கள் மூலம் ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தள்ளிய இந்துத்துவ பாசிச கும்பல், அவர் இறந்த பிறகும், தனது இழிவான பொய்ப்பிரச்சாரத்தைத் தொடர்கிறது. ரோகித் வெமுலாவின் ஜாதியில் தொடங்கி, அவருடைய கடந்தகால அரசியல் செயல்பாடுகள் வரை அனைத்தையும் தங்களுக்கு ஏற்றவகையில் வெட்டி, ஒட்டி ஊடகங்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டு ரோஹித் வெமுலாவை ‘பயங்கரவாதி’ என்றும் ‘ரவுடி’ என்றும் சித்தரிக்க முயல்கிறது.
முதலாவது, ஐந்து மாதத்திற்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் ரோகித்துக்கும் எ.பி.வி.பி மாணவர்களுக்கும் நடந்த உரையாடல் அடங்கிய வீடியோவை எ.பி.வி.பி முகநூல் மூலமும், தெலுங்கு சேனல்கள் மூலமும் பரப்பியது. அந்த வீடியோவில் உள்ள உரையாடலின் சாரம்
ஏ.பி.வி.பி மாணவர்கள்: பேனரைக் கிழித்தாயா? ரோகித்: ஆம். கிழித்தேன். ஏ.பி.வி.பி மாணவர்கள்: “எதற்காக பேனரைக் கிழித்தாய்?” ரோகித்: “ஏ.பி.வி.பியின், இந்துத்துவாவின், ஆ.எஸ்.எஸ்ஸின் காவி நிறம் கண்ணுக்குத் தெரிந்தது, கிழித்தேன்” ஏ.பி.வி.பி மாணவர்கள்: “உன் வீட்டில் காவி நிறம் இருந்தால் கிழிப்பாயா?” ரோகித்: ஆம். நிச்சயமாகக் கிழிப்பேன். ஏ.பி.வி.பி மாணவர்கள்: உன்னைப் போல் நாங்களும் பேனரைக் கிழிக்க ஆரம்பித்தால் உங்களுடைய பேனர் ஒன்று கூட இங்கே இருக்காது. ரோகித்: கிழித்துப்பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=sbOGvkZUhN8.
பொய்பிரச்சாரத்தையே பிழைப்பாகக் கொண்டுள்ள சங்கபரிவாரங்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த விடியோவில் இருக்கும் உரையாடல் நடந்தது 2015 ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில். இந்த வீடியோவை ஏ.பி.வி.பி முகநூலில் பதிவேற்றிய அன்றே ரோகித் அதற்கு தனது முகநூலில் பதிலளித்திருந்தார். ஆகஸ்டு 8, 2015 தேதியுடைய தனது முகநூல் நிலைத்தகவலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்
“ஏ.பி.வி.பியினர் அனைவரும் இந்த வீடியோவை முகநூலில் பகிர்வதாகத் தெரிகிறது. அனைவரும் இதைப் பகிருங்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் தான். அதில் நான் 20 க்கும் மேற்பட்ட ஏ.பி.வி.பியினருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். முதலில் கோபப்படாமல், நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் அம்பேத்கரையும், அம்பேத்கரிய அமைப்புகளையும் திட்டியவுடன் பொறுமை இழந்து நானும் திரும்பித் திட்ட ஆரம்பித்தேன். வளாகத்தில் உள்ள அனைத்து அம்பேத்கர் படங்களையும் கிழிப்பேன் என்று அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் கூறிய போது, எனக்கும் அவனுக்கும் சண்டை நடந்தது கூட அந்த வீடியோவில் இருக்கிறது. அதை ஏ.பி.வி.பி முழுமையாக வெளியிட வேண்டும். அதிலுள்ள ஒருவன், வளாகத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் பஜ்ரங் தளம், அம்பேத்கரியவாதிகள் என்றால் யாரென்று ஒரு கை பார்க்கும் என்று மிரட்டினான். இந்துதுத்துவத்தைத் திட்டியதற்காக எனக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியோ வருத்தமோ இல்லை. இந்துத்துவத்தின் கலாச்சார ஆதிக்கத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக, அதைக் கொள்கையாகக் கொண்ட அமைப்புகளுக்கு எதிராக வளாகத்திற்குள்ளும், வளாகத்திற்கு வெளியேயும் தொடர்ந்து போராடுவேன். ஜெ பீம்!!!”
ரோகித் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கத் துப்பில்லாத மானக்கெட்ட சங்கப்பரிவாரக் கும்பலும், அதை ஆதரிக்கும் ‘அறிவாளிகளும்’ ஏதோ புதிதாக ஒரு ஆதாரத்தைக் கண்டு பிடித்தது போன்று எடிட் செய்யப்பட்ட இந்த விடியோவை வெட்கமில்லாமல் பரப்புகிறார்கள். அப்படிப் பரப்புவதன் மூலம் ரோகித் வெமுலாவை ரவுடியாகவும், சமூக விரோதியாகவும் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், யார் ரவுடியிசத்திலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது அனவருக்கும் தெரியும்.
‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை அடித்து உதைப்பது, கொலை செய்வது, ‘கலாச்சார பாதுகாப்பு’ என்ற பெயரில் பிப்ரவரி 14 அன்று சாலையில் ஜோடியாக நடந்து போகும் ஆண்-பெண்களிடம் “தாலி கட்டு, இல்லை ராக்கி கட்டு” என்று மிரட்டுவது, சமூக சிந்தனையுள்ள எழுத்தாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் கலவரம் செய்வது, இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் படங்களைத் திரையிடவிடாமல் தடுப்பது, இந்துத்துவத்தை எதிர்த்துப் பேசும் நபர்களை கொடூரமாக கொலை செய்வது என அனைத்து வன்முறைகளிலும், சமூகவிரோத செயல்பாடுகளிலும் ஈடுபடுபவர்கள் ஏ.பி.வி.பியினர் உள்ளிட்ட சங்கபரிவாரக் கும்பல்தான்.
இத்தகைய ‘யோக்கியவாதிகளான’ ஏ.பி.வி.பியினர் தான் 2006-ம் ஆண்டு மத்திய பிரதேசே மாநிலம் உஜ்ஜயினியில், மாணவர் தேர்தலில் நடந்த முறைகேடுகள் காரணமாக தேர்தலை ரத்து செய்த கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் சபர்வாலை அடித்தே கொன்றனர். ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்கு தள்ளிய நிகழ்வுகளின் தொடக்கமே டெல்லியியில் முசாப்பர் நகர் கலவரம் பற்றிய ஆவணப்படம் (Muzaffarnagar Baaqi Hai) திரையிட்ட போது ஏ.பி.வி.பி-யினர் அந்த நிகழ்வில் வன்முறையில் ஈடுபட்டது, அதை எதிர்த்து ரோகித் சார்ந்திருக்கும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (Ambedkar Students Association) ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியதும் தான். இவர்கள் தான், வன்முறையைப் பற்றியும், தீவிரவாதத்தைப் பற்றியும், சமூகவிரோதத்தைப் பற்றியும் பேசுகிறார்கள்.
இரண்டாவது, ரோகித்தின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை தாழத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைப் பாதுகாப்பு சட்டத்திலன் கீழ் தண்டிக்க வேண்டும் என்ற குரல் வலுத்தவுடன், ரோகித் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரல்ல, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்ததவர் என்ற வதந்தியைப் பரப்பியது. போராட்டக் குழுவினர் ரோகித்தின் சாதிச் சான்றிதழை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றிய போது, அது போலியாகத் தயாரிக்கப்பட்ட சான்றிதழ் என்று கூறத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல், ரோகித்தின் தந்தை மற்றும் பாட்டியிடம் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பேட்டி எடுத்து அதன் மூலம் ரோகித் தலித் அல்ல என்று நிரூபிக்க முயன்றனர். ரோகித்தின் சாதிச் சான்றிதழைத் தேடி காவல்துறை குண்டூரில் இருக்கும் அவரது வீட்டில் ரெய்டு கூட சென்றது.
ரோகித்தின் சாதி சான்றிதழ்
ரோகித் தாயாரின் சாதி சான்றிதழ்
ரோகித் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவரின் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் போராடும் மாணவர்களின் நிலைப்பாடு. ஆனால், பா.ஜ.க, ஏ.பி.வி.பி மற்றும் துணை வேந்தர் அடங்கிய குற்ற கும்பல்தான் ரோகித்தின் மரணத்திற்குக் காரணம் என்று தெளிவாகத் தெரியும் இவ்விசயத்தில், ரோகித்தின் சாதி குறித்து கேள்வி எழுப்பவதென்பதே, மையமான பிரச்சனையிலிருந்து திசை திருப்பி குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் தந்திரம்தான். இதே வேலையைத்தான், தாத்ரி படுகொலை சம்பவத்தில் உ.பி அரசும், ஊடகங்களும் செய்தன. கொலை செய்தவனைத் தண்டிப்பது பற்றிப் பேசாமல் அவர் வீட்டில் இருந்தது ஆட்டுக்கறியா? மாட்டுக் கறியா? என்று பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். எப்படியிருப்பினும், சங்க பரிவாரங்கள் ரோகித் தந்தையின் பேட்டியை முகநூலில் பகிர்ந்து விசயத்தை திசை திருப்ப முயல்வதால், அதைப் பற்றி இங்கு பேச வேண்டியிருக்கிறது.
ரோகித்தின் தந்தை ‘வட்டெரா’ (Vaddera) என்ற சாதியைச் சார்ந்தவர். இச்சாதி ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (BC) வருகிறது. ரோகித்தின் தாய் ‘மாலா’ (Mala) என்ற சாதியைச் சார்ந்தவர். அது ஆந்திராவில் பட்டியலினத்தில் (SC) வருகிறது.
இவ்விசயம் குறித்து ரோகித் தாயார் ராதிகா அளித்த பேட்டி.
இவரை சிறுவயது முதலே தத்தெடுத்து வளர்த்தவர் ஒரு ‘வட்டெரா’ சமுதாயத்தைச் சார்ந்தவர். ராதிகாவை வளர்த்து, அவரை தனது சமுதாயத்திலேயே ஒருவருக்கு மணமுடித்து வைக்கிறார். திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் தான் இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் பிரிந்ததற்கு சாதியும் ஒரு முக்கியக் காரணம். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்தவர் ரோகித். கடந்த 25 வருடங்களாக ரோகித்தின் அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்கின்றனர். ரோகித்தும், அவரது தம்பி, தங்கைகளும் தாயின் அரவணைப்பில் தான் வளர்கிறார்கள். ரோகித் வெமுலாவின் இளமைப் பருவம் எப்படி இருந்தது, எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் வளர்ந்தார். ரோகித்தின் தந்தையும், தாயும் ஏன் பிரிந்தார்கள் எனபதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரை இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.
பொதுவாக கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதியினரில் தந்தை ஆதிக்க சாதியாக இருந்து, தாய் தாழ்த்தப்படவராகவோ அல்லது பழங்குடியினத்தவரகவோ இருந்தால், தந்தையின் சாதியில் தான் குழந்தையையும் சேர்க்க வேண்டும் என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், குழந்தைகள் யாரால் வளர்க்கப் படுகின்றன எனபதைப் பொறுத்துதான் குழந்தைகள் எந்த சாதி என்பது தீர்மானிக்கப்படவேண்டும் என்று 2012 உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. மேலும், தாயின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் குழந்தையை தம் சமூகத்தைச் சார்ந்ததாகவே கருதுவதாலும், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தைச் சார்ந்த தனது தாய் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகள், ஏற்றத்தாழ்வுகள் குழந்தையையும் பாதிக்கும் என்ற அடிப்படையில் குழந்தைகள் தாயின் சாதியில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்று கூறுகின்றது.
கலப்புத் திருமணமாக இருந்தாலும் தந்தையின் சாதிதான் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பார்ப்பனிய இந்துமத ஆணாதிக்கக் கண்ணோட்டம்தான். சட்டப்பூர்வமாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் ரோகித் பிறந்தது முதல் தலித்தாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார், தலித் குடியிருப்பில், தலித்தாகத் தான் வளர்கிறார். ஒரு தலித், சமுதாயத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறாரோ அது அத்தனையும் அனுபவிக்கிறார். அதைத்தான், தன்னுடைய இறுதிக் கடித்ததில் “சிலருக்கு வாழக்கை என்பதே சாபம்தான். என்னுடைய பிறப்பு ஒரு அபாயகரமான விபத்து. என் சிறு வயதுத் தனிமையில் இருந்து என்னால் மீளவே முடியாவில்லை” என்று குறிப்பிடுகிறார். இவ்வளவு இருந்தும், சங்க பரிவாரங்கள் ரோகித்தின் சாதி குறித்து கேள்வி எழுப்புவது அவர்களின் இழிவான அரசியலைத் தான் குறிக்கிறது.
மூன்றாவது, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடியதால் தான், பிரச்சனையே எழுந்தது என்று மொத்தப் பிரச்சனையையும் திசை திருப்புகின்றனர் இந்துத்துவக் கிரிமினல் கும்பல். இதன் மூலம், “யாகுப் மேமன் உச்சநீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதி. ஒரு தீவிரவாதியின் தூக்குக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினரை ‘தேசத்துரோகிகள்’ என்று அழைத்து என்ன தவறு?” என்பது போன்ற கருத்தை பரப்பை ரோகித் மரணத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் அனைவருக்கும் ‘தேசத் துரோகி’ முத்திரை குத்த எத்தனிக்கிறது சங்க பரிவாரக் கிரிமினல் கும்பல்.
ஆனால், பிரச்சினை ஆரம்பித்தது யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடியதால் அல்ல, டெல்லியில் முசாபர் நகர் கலவரம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்ட போது ஏ.பி.வி.பி அந்நிகழ்வில் கலவரம் செய்தது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து வளாகத்தில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு ஒரு போராட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஏ.பி.வி.பி யின் கருத்துரிமை நசுக்கும் பாசிசத்தை வன்மையாகக் கண்டித்திருந்தது. இந்தப்போரட்டத்தைப் பற்றி ஏ.பி.வி.பி யின் தலைவர் சுஷில் குமார் தனது முகப்புத்தகத்தில் “ASAவின் குண்டர்கள் ரவுடியிசத்தைப் பேகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது” (ASA goons are talking about hooliganism…-feeling funny) என்ற நிலைத்தகவலாக இடுகிறார்.
இதன் பிறகு தான் பிரச்சனை தொடங்குகிறது. ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதும் சுஷீல் குமாரைத் தாக்கியதாக வந்த குற்றச்சாட்டில் தான். பா.ஜ.க மத்திய அமைச்சர் பாண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில்தான் யாகுப் மேமன் தூக்குக்கு எதிராக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் போராடியது குறித்து குறிப்பிடுகிறார். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் எந்த அறிக்கையிலும் இதைப்பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க சார்பாகப் பேசும் அனைத்து அரைவேக்காடுகளும் யாகுப் மேமன் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்திப் பேசுகின்றது. அப்படி மையப்படுத்துவதன் மூலம் அனுதாப ரீதியிலும், வேறு சில காரணங்களுக்காகவும் ரோகித் மரணத்திற்கு நீதி வேண்டிய போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்பு சாராத நபர்கள், பொதுமக்கள் மத்தியில் ரோகித்தைப் பற்றியும், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைப் பற்றியும், இந்தப் போராட்டத்தைப் பற்றியும் ஒரு தவறான பொய்ச் சித்திரத்தை உருவாக்குவதான் இந்துத்துவக் கும்பலின் எண்ணம்.
ஆனால் நாம், யாகுப் மேமன் பிரச்சனை போராட்டத்தின் மையப்பிரச்சனையை திசை திருப்புவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று அம்பலப்படுத்தப்படுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடினால் என்ன தவறு என்று கேட்டு அதற்கான நியாத்தையும் உரக்கப் பேச வேண்டும். போராட்டத்தில் பங்குகொள்வோரில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் இதைப் பற்றிப் பேசுவதில்லை.
யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடுவதைப் பற்றி கூச்சலிடும் இந்துத்துவக் கும்பல், யாகுப் மேமன் வழக்கை விசாரித்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி ராமன் அவர்களது கட்டுரையை பற்றி வாய் திறப்பதில்லை. அதுமட்டுமல்ல, யாகுக் மேமன் இந்திய விசாரணை அதிகாரிகளால் எப்படி ஏமாற்றி இந்தியா வரவழைக்கப்பட்டார், அவரது உயிருக்கு எந்தவிதப்பிரச்சினையும் ஏற்படாது என்று உறுதியளித்துவிடு அனைத்து ஆதரங்களையும் அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு அதை எப்படி அவருக்கெதிராகவே பயன்படுத்தினர் மற்றும் விசாரணையில் நடந்த பல்வேறு குளறுபடிகள் ஆகியவை பற்றி பலரும் எழுதியிருக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் விவாதிக்க ஆரம்பித்தால், ஒன்று விவாதிப்பவர்களை ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துவது, இல்லையென்றால் “உச்சநிதிமன்றமே கூறிவிட்டது. அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும், விமர்சிக்கக் கூடாது?” என்று முழுப்புவது. இதுதான் இந்துத்துவக் கும்பலின் உத்தி. ஆனால், பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனை உள்ளிட்டு வேறு எந்த பிரச்சினையிலாவது இவர்கள் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்திருக்கிறார்களா?
ரோகித் விசயத்தில், இந்துதுவக் கும்பல் யாகுப் மேமன் பிரச்சனையை மையப் பிரச்சனையாக மாற்ற முயற்சிப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. 2015 ஆகஸ்டு 3-ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் சுஷீல் குமாரின் மீதான தாக்குதல் என்பது அப்பட்டமான பொய் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சுஷீல் குமாரைப் பரிசோதித்த மருத்துவரின் அறிக்கையும், அவ்வறிக்கை மற்றும் சாட்சிகள் அளித்த வாக்கு மூலம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சமர்பித்த விசாரணை அறிக்கையும் அதனை ஏற்கனவே உறுதி செய்திருந்தின. அதனால்தான், யாகுப் மேமன் பிரச்சனைய முன்னிறுத்தி தீவிரவாதப் பூச்சாண்டி காட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது காவி கிரிமினல் கும்பல்.
இதற்கு வலு சேர்க்கும் விதமாக, சட்ட பூர்வமாக மேலும் சில ஆதாரங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் சுஷீல் குமாரின் அம்மா தன் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இல்லையென்றும், தன் மகனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதற்கு பதில் மனு தாக்கல் செய்த பல்கலைக்கழக நிர்வாகமும், சைபராபாத் (Cyberabad) காவல் துறை ஆய்வாளரும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் சுஷீல் குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், சுஷீல் குமாரும் அவரது தாயாரும் அளித்த புகார் சற்று மிகையாகச் சித்தரிக்கப்படது என்றும், ஆகவே சுஷீல் குமாரின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்துவிடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் இந்துத்துவக் கும்பலின் பொய்ப் பிரச்சாரம் அம்பலப்பட்டுப் போயிருக்கின்றது.
ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்! மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு
14-02-2016 ஞாயிறு, மாலை 4.00 மணி உழவர் சந்தை மைதானம், தென்னூர், திருச்சி
ஏன் முடியாது? மூடு டாஸ்மாக்கை
குடிநோயால் குடும்பம் குடும்பமாக பலியாகிறது தமிழ்ச்சமூகம்
சாராய சாம்ராஜ்யாத்துக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!
தலைமை தோழர் காளியப்பன், மாநில ஒருங்கிணைப்புக் குழு, மக்கள் அதிகாரம்
சிறப்புரை தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
உரையாற்றுவோர் திரு டி.எம். சஞ்சீவி குமார், பத்திரிகையாளர், சென்னை க.காவ்யாஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, அவ்வூர், நீலகிரி மாவட்டம் திரு. தனசேகரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் Dr. இரா பாலகுரு, மனநல மருத்துவர், திண்டுக்கல்
டாஸ்மாக் கொடூரம் – நேருரைகள் திருமதி ஆனந்தி அம்மாள், உதவும் கைகள், சென்னை திருமதி மந்திரி குமாரி, கச்சிராயநத்தம், விருத்தாசலம் வட்டம் திரு நாகராஜ், அனுப்பராப்பாளையம், திருப்பூர் திரு. டேவிட் ராஜ், தேசிய சாம்பியன்- வாள்வீச்சு, தேமனூர், கன்னியாகுமரி
தப்பாட்டம் – மாலை 4.00 மணி ஜான் பீட்டர் – கலா தப்பாட்டக் குழு, ரெட்டிப் பாளையம், தஞ்சாவூர் நாடகம் – மையம் வீதி நாடக இயக்கம், மதுரை கலை நிகழ்க்கிசகள் – கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு, ஆலப்புழா, கேரளா புரட்சிகர கலை நிகழ்ச்சி – ம.க.இ.க மையக் கலைக்குழு
போதையிலிருந்து தமிழகத்தை மீட்க, சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டவாரீர்!
நிதி தாரீர்
வெற்றிவேல் செழியன்
வங்கிக் கணக்கு எண் : 62432032779
State Bank of Hyderabad
Pozhichalur, Chennai
IFSC Code SBHY0021334
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321
“மூடு டாஸ்மாக்கை” அரித்துவாரமங்கலம் மாணவர்கள் அறைகூவல்
மூடு டாஸ்மாக்கை மாநாடு தொடர்பாக அரித்துவாரமங்கலம் பகுதியில் கடந்த 24-01-2016 அன்று தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்கள் அதிகாரம் தோழர்களும் பு.மா.இ.மு தோழர்களும் காலை 10 மணியளவில் தொடங்கி பறைஅடித்துக்கொண்டும் மெகாபோன் மூலமாகவும் பிரச்சாரம் செய்து வந்தார்கள். மாலை 7 மணியளவில் அரித்துவாரமங்கலம் கடை வீதியில் தெருமுனை பிரச்சாரம் செய்யும் போது காவல்துறை வந்து “அனுமதி வாங்காம பிரச்சாரம் பண்ணக்கூடாது” என்று தகராறு செய்தார்கள்.
“ஒலிஒளி அமைக்கதான் அனுமதி வாங்கனும். மெகாபோனுக்கு எல்லாம் அனுமதி வாங்க தேவையில்லை” என்று தோழர்கள் வாதிட்டார்கள். அப்போது PRPC வழக்கறிஞர் தோழரும் கூட இருந்தார் அவரிடத்தில் SI, “இது எல்லாம் தொழில் ரகசியம்” என்று பம்மினார். அந்தப் பகுதியில் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் ஆனாலும் மக்கள் கடைசிவரை கலையாமல் நின்று பார்த்து கொண்டிருந்தனர். போலீஸ் விடாப்பிடியாக நின்றதால், “நாங்க மெகாபோன் வைத்து நாலுபேருக்கு தெரியனுன்னு நினைத்ததை போலீஸ் நானூறு பேறுக்கு தெரிவிக்கனுன்னு ஆசைபடுறாங்க. போலீசு ஆசைபடியே செய்துடலாம்” என்று சொல்லிவிட்டு தோழர்கள் கலைந்து விட்டார்கள்.
பிறகு அனுமதி வாங்கி 04-02-2016 அன்று மாலை மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாட்டு விளக்க தெருமுனை கூட்டம் சுமார் 6.45 மணியளவில் பறை அடிக்க துவங்கியது. கூட்டத்தின் துவக்கத்தில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ஜெயபாண்டியன் பேசுகையில்
“டாஸ்மாக்கால் தமிழகம் எந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதோடு போதை தலைக்கேறியவன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சுயநினைவை இழந்து விடுகிறான் என்பதற்கு உதாரணமாக ஒரு அரசன் குற்றவாளிக்கு தண்டனை தருகிறான் அப்போது ஒரு பெண், ஒரு குழந்தை, ஒருபாட்டில் சாராயம் இந்தமூன்றையும் காட்டி அந்தப் பெண்ணை கற்பழிக்க வேண்டும் இல்லை என்றால் அந்தக் குழந்தையை கொலை செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த சாராயத்தை குடிக்க வேண்டும் என்று சொல்கிறான். அவன் அந்த பெண்ணைக் கற்பழித்தாலோ அல்லது அந்தக் குழந்தையை கொன்றாலோ பாவம் என்று விட்டுவிட்டு சாராயத்தை குடிக்கிறான். குடித்தபிறகு போதை அதிகமானதும் பெண்ணை கற்பழிக்கிறான் அந்த குழந்தையையும் கொலை செய்கிறான். போதை தலைக்கு ஏறினா என்னவாகும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக குறிப்பிட்டு இந்த அரசு எப்படி குடிகார அரசாக இருக்கிறது என்று அரசை அம்பலப்படுத்தி பேசினார்.
அவரைத் தொடர்ந்து பிரவின் என்ற 7-ம் வகுப்பு மாணவன் பேசுகையில், “வெள்ளக்காரன் கிட்டயிருந்து நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது நம்மள குடிக்க வைக்கிறதுக்கா? எங்க பள்ளிகூடத்துக்கு பக்கத்துல உள்ள டாஸ்மாக்கை மூடுனுன்னு கலெக்டர்கிட்ட மனுகொடுக்கலான்னு பார்த்தா அந்த கலெக்டர்தான் டாஸ்மாக்கை நடத்துறதா சொல்லுறாங்க. போலீசு டாஸ்மாக்கு காவல்காக்குது” என்று அதிகாரவர்கத்தை எள்ளி நகையாடினார்.
அடுததபடியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர் சங்கத்தமிழன் பேசுகையில் “பள்ளிகூடத்துக்கு கழிப்பறை இல்லை பாடம் நடத்த வாத்தியார் இல்லை இதை எல்லாம் செய்து கொடுன்னு கேட்டா அதை செய்யமாட்டங்குது அரசாங்கம். எங்க ஊரில் டாஸ்மாக் வேண்டான்னு ஊராட்சி மன்றத்தலைவர் தீர்மானம் போடுறாரு. தீர்மானத்தை கொஞ்சமும் மதிக்காமல் செயல்படுகிறது” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அரித்துவாரமங்கலம் பகுதி அமைப்பாளர் தோழர் விஜயராகவன் பேசுகையில், “எங்களுடைய வரிப்பணத்துல சம்பளம் வாங்குற போலீசு எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காம சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்குது. இதுதான் போலீசோட நிலைமை. அதோடு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தன்னுடைய சகமாணவன் குடித்து சீரழியிறான்னு கல்லூரி பக்கத்துல உள்ள டாஸ்மாக்கை அடித்து உடைத்தார்கள். அவர்களை போலீசு மண்டையை அடித்து உடைத்து ஜெயில்ல தூக்கி போட்டது. எப்படி காவல்துறை சாராயக்கடைக்கு காவல் காக்குது” என்று போலீசோட அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார். “இன்னைக்கு மாணவர்கள் நாங்க போராடுறோம் நீங்க எல்லாம் வேடிக்கை பாக்குறிங்க” என்று பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அடுத்த படியாக அட்சயா என்ற 5ஆம் வகுப்பு மாணவி பேசுகையில், “சாராயம் குடிச்சிட்டு வந்து எங்ககிட்ட தண்ணி கேக்குறாங்க. பாட்டிலை போட்டு உடைக்கிறாங்க. எங்களால படிக்கமுடியல. உடம்புல துணியில்லாம கெடக்குறாங்க. அந்தப் பக்கம் நடந்து போகவே அசிங்கமா இருக்கு” என்று பேசினார்.
சிறப்புரையாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர். காவிரிநாடன் பேசுகையில், “சாக்ரடீஸ் பிறந்த ரோமில் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க முடிந்தது. சாக்ரடீஸிடம் நீதிபதி நீ அரசுக்கு எதிராக போராடுற அதனால் நாங்க உனக்கு தண்டனை தரலாம் என்று இருக்கோம். உனக்கான தண்டனையை நீயே சொல்லு என்று கேட்க்கையில் சாக்ரடீஸ் எனக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளமும் தினமும் உணவும் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை போல ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடிய நமது நாட்டில் அப்படி கேட்க முடியுமா? இங்கு ஜனநாயகம் எல்லாம் கிடையாது. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொன்ன பெரியார் பிறந்த மண்ணில் மானத்தையும் அறிவையும் இழந்து நிற்கும் அவலநிலை. ஊருக்கே சோறுபோட்ட விவசாயி நடுத்தெருவில. விவசாயம் பொய்த்துவிட்டது. ஆளும் ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கமும் இனி டாஸ்மாக்கை மூடமாட்டார்கள் நாம் தான் மூடவேண்டும் மக்கள்தான் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்” என்று டாஸ்மாக்கை மூட மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்தக் கூட்டத்தில் பெருந்திரளாக மாணவர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர் கூட்டத்தின் இடையே பு.மா.இ.மு தோழர்கள் வேலுவும், தமிழ்மாறனும் “மூடுடாஸ்மாக்கை”, “ஊருக்கு ஊரு சாராயம்” பாடல்களை பாடினார்கள்.
இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர் செல்வகுமார் நன்றியுரை ஆற்றினார்.
“கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும் போது யாராலும் போற்றப் படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.” – தற்கொலை என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹைதராபாத் பல்கலை நிர்வாகத் தால் கொலை செய்யப்பட்ட ரோகித் வெமுலாவின் வார்த்தைகள் இவை.
தலித் மக்கள் மீதான அடக்குமுறை இல்லாத மாநிலமோ வருடமோ இந்தியாவில் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே இன்றும் தலித் மக்களுக்கு தனித் தேநீர்க் குவளைதான். கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், நத்தம் காலனி இளவரசன், கடைசியாக திருச் செங்கோட்டில் கோகுல்ராஜ். கொல்லப்பட்டவர்களுக்கும், கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் முடிவில்லை.
மராட்டியத்தின் “கயர்லாஞ்சி படுகொலை”யில் போட்மாங்கே என்ற தலித்தின் மனைவியையும், மகளையும் வன்புணர்ச்சியோடு கொன்று, மகன்கள் இருவரையும் கொலை செய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.
இராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.
23 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்கவில்லை என்பதால் ஆந்திராவின் சுண்டூர் கிராம மக்கள், “எங்களது புதல்வர்களை ரெட்டி சாதிவெறியர்கள் வெட்டிக் கொல்லவில்லை என்றால் எங்களது இளைஞர்கள் அவர்களே வெட்டிக் கொண்டு, உடல்களை சாக்குப் பையில் திணித்துக் கொண்டு துங்கபத்ரா கிளைக் கால்வாயில் தாமாகவே வீசியெறிந்து கொண்டார்களா?” என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர்.
பா.ஜ.க ஆட்சியில் முசுலீம்கள் மற்றும் தலித்துக்களை கொல்வதற்கு போட்டியே நடக்கிறது.
பார்ப்பனியமும், பாராளுமன்றமும் தலித் மக்களின் மீதான ஒடுக்கு முறைகளை வளர்க்கிறது. நீதிமன்ற – போலிஸ் கூட்டணியோ சாதி வெறியர்களை விடுதலை செய்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்
அகதிகளா தலித் மக்கள் ? – புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
ரோகித் வெமுலா கொலை – பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி
கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
பொறியியல் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம் !
பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
ஊராட்சியில் சேரிக்கு இடமில்லை!
சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
தீண்டாமை இல்லையென்றால் பரிசு! இருந்தால் தண்டனை இல்லை!!
வன்கொடுமைகள்தான் இந்தியாவின் வளர்ச்சி!
சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர், பெரியாருக்குத் தடை !
பக்கங்கள் : 80 விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு)
$27
Payumoney மூலம்(உள்நாடு)
ரூ.400
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.