privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

என்னாது மாசா மாசம் வருமா ?

-

வாழ்க்கைத் தரம், வளர்ச்சியின் வேகம் நகரத்தை போல கிராமத்தில் கிடையாதுன்னாலும் மோசம் என்று சொல்ல முடியாது. ஒரளவு செழிப்பா விவசாயம் நடக்கும் இடங்களில் விவசாய உற்பத்திக்கான அனைத்து வகை இயந்திரங்களும் இல்லாத கிராமமே கிடையாது. அதை வாடகைக்கு பயன்படுத்தாத நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் கிடையாது. வீட்டு உபயோகப் பொருட்களில் நகரத்தைப் போல பயன்பாடு இல்லையென்றாலும் ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. பேசுவதற்கு காசு இல்லை என்றாலும் செல்போன் இல்லாத குடும்பமும் கிடையாது. அதையும் தாண்டி தெரியாதையும் தெரியவைக்க டிவியின் விளம்பரம் இருக்கிறது. டி.வி மட்டும் இல்லாத வீடுகள் கிராமங்களில் அறவே இல்லை என்று சொல்லலாம்.

இவற்றிலெல்லாம் மாற்றத்தை ஏற்றுக்கொண்ட மக்கள், பெண்களின் பருவ மாற்றத்தை தீட்டாக ஒதுக்கி வைத்து அவமதிப்பது இன்னும் தொடர்கதையாய் உள்ளது.

கிராமப்புற பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் மாதவிலக்குன்னா என்ன? முதல்ல இதுக்கு என்ன பொருள் என்றே தெரியாது. “தீட்டு, தலைக்கு ஊத்திகிட்டா, வெளிய, வீட்டுக்கு தூரம்”…இப்படி சொன்னால் போதும்…பருவ மங்கை முதல் பல்லு போன பாட்டி வரை வெட்கமும் அறுவெருப்பும் கலந்த முகத்துடன் குனிந்து கொள்வார்கள். அவர்களே இது தீட்டு, கெட்டது, அசுத்தம் என்றே பார்க்கிறார்கள். நகரத்தில் இருக்கும் ஓரளவு விழிப்புணர்வு கூட அங்கு இப்போதும் இல்லை.

காலையில தூங்கி எழுந்ததும் வயசுக்கு வந்த எனக்கு சாயங்காலம் (மாலை) சடங்கு செய்ய எல்லா ஏற்பாடும் தடபுடலா நடக்குதே தவிர ஒரு முழம் பழய துணிய குடுத்து ‘தீட்டு’க்கு வச்சுக்கன்னு சொல்ல யாருக்கும் தோணல. கட்டியிருந்த பாவாடை, தொடையெல்லாம் பிசுபிசுத்து போச்சு. விசேசம் எல்லாம் முடிஞ்சதும் கட்டியிருந்த பழய பாவாடையை எடுக்க வந்த சலவக்காரம்மா அதுல இருந்த ரத்தக்கரைய பாத்துட்டு ஒரு பழய துணிய கொடுத்து வச்சுக்கன்னு சொன்னாங்க. அந்த துணிய மாத்தி வச்சுக்கனுன்னு தெரியாம மூனு நாளா அதையே வச்சு நாத்தம் எடுத்து போச்சு. என்ன செய்றதுன்னு தெரியல. யார்கிட்ட கேக்கறதுன்னு கூச்சம். நாத்தம் வெளிய வந்ததுந்தான் மாத்து துணிக்கு விமோசனம் கெடச்சுச்சு.

இது நடந்தது பல ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அதிலிருந்து துளி கூட மாறாத மனநிலையை சமீபத்தில் பாத்தேன்.

menstruation-5
படம் : இணையம்

ஏழாவது படிக்கிற பொண்ணு வயசுக்கு வந்துருச்சுன்னு அன்னைக்கே ஊர கூட்டி வெளியூரு சொந்தக்காரங்களுக்கு போன போட்டு வரவச்சு தடபுடலா தண்ணி ஊத்துர சடங்கு செஞ்சு முடிச்சாங்க. அது புரட்டாசி மாசம். ரெங்கநாதருக்கு விரதம் இருக்கும் போது தீட்டு பட்டா வீட்ட சுத்தமா தொடச்சுரமுனுன்னு பகலெல்லாம் வேப்ப இலை, கருக்கருவான்னு பேயி வெரட்ற ஆயுதத்த கையில கொடுத்து மரத்தடியில ஒக்கார வச்சாங்க. சடங்கு சம்பரதாயத்தை தீவிரமா கடைபிடிக்காத பக்கத்து வீட்டுல அந்த குழந்தையெ ராத்திரிக்கு படுக்க வச்சாங்க.

படுத்திருந்த வீட்டுல படிச்சுகிட்டு இருந்த அந்த பொண்ணு திடிர்னு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சது. துணைக்கி கூட இருந்த பொண்ணோட பாட்டி “ஏண்டி அழுவுறே”ன்னு கேட்டாங்க.

“இது எனக்கு பிடிக்கவே இல்ல” பெரிய நகைச்சுவைய கேட்டது போல கூட இருந்த பெண்களும் சேந்துகிட்டு ஒரே சிரிப்பு.

“பொம்பளையா பொறந்துட்டு பிடிக்கலன்னு சொல்ல முடியுமா. அதுக்கு ஒங்காத்தா உன்ன ஆம்பளையா பெத்துருக்கனும்.”

“இன்னும் எத்தன நாளைக்கி தனியா படுத்துருக்கனும்?”

“பதினாரு நாளைக்கி படுத்து கெடக்கனும். தீட்டு கழிச்சு அதுக்கு அப்பறந்தான் உள்ள சேத்துக்க முடியும். பொங்கிப் போடறத தின்னுட்டு சும்மா படுத்திருக்க ஒனக்கு வலிக்குதா?”

“பதினாரு நாளைக்கி மட்டும்தான் அது வருமா?

“அட இவகிட்ட என்னடி, ஒரே கூத்தாப் போச்சு. இனிமே மாசா மாசம் தீட்டு வரும். அப்பையெல்லாம் இப்படிதான் ஒக்காந்துட்டு ஒப்பாரி வப்பியா?”

“என்னாது மாசா மாசம் வருமா?” என உடைந்த குரலில் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.

“அய்யய்யோ இந்த பிள்ள என்னடி மானத்த வாங்கும் போலருக்கு. இதெல்லாம் கடவுள் படைப்புடி. எங்க காலத்துல இதெல்லாம் பேசவே மாட்டோம். இப்ப உள்ளதுங்க என்னன்னே கேள்வியெல்லாம் கேக்குது பாரு.”

புதுசா உடம்பில் நடந்து விட்ட மாற்றம். அதுவும் வலி, எரிச்சல், கசகசப்பு என்று பிடிக்காத மனநிலை. மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் அச்சம். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அனுசரனையாய் இருப்பது பெரியவர்களின் கடமை. இங்கோ அதுவும் எதிர்மறையில் இருக்கிறது.

அறியாத வயதில் முதன் முதலில் நடக்கும் உடல் மாற்றம் ஏன் என்று சொல்லித் தருவதற்கு கூட பெரியவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. சிறுமிகளின் அச்சத்தையும், மாற்றத்தையும் சொல்லிக் கொடுக்க முடியாத அந்த பெரியவர்கள் சும்மா படுத்துக் கிடக்கும் பெருமாளுக்கு தீட்டு என்று வீட்டை சுத்தம் கொள்வதில் அவ்வளவு கவனமாயிருந்தார்கள்.  வீட்டில் உள்ள வயது வந்த பெண் தலைக்குளிக்கும் நாளை அம்மா சரியாக கணக்கு வைத்திருப்பாள். ஆனால் அந்த நாள் சம்மந்தமான எந்த பேச்சும் மகளிடம் பேச மாட்டார். அம்மா மகளுக்கே இதுதான் கதி என்றால் ஒரு சிறுமி என்னதான் செய்வாள்?

menstruation-4பெண்கள் பூப்படைவதை உடல் வளர்ச்சியின் ஒரு மாற்றம் என்று உணராமல் ஒரு விழாவாக கொண்டாடுவதும், பூப்படையும் குழந்தைக்கு அது குறித்த எந்த விழிப்புணர்வை சொல்லித்தருவதும் கிடையாது. மாறாக தீட்டு என்றும், இது ஒழிவு மறைவாக நடந்து கொள்ள வேண்டிய விசயம் என்றும், அது ஒரு பாவச்செயல் போலவும் குழந்தைகளுக்கு வழி காட்டுகிறார்கள்.

பூப்பெய்திய பெண்ணை ஓலை குடிசையில தனியா படுக்க வைப்பது, குளிக்கவோ அல்லது ஒன்னுக்கு ரெண்டுக்கு போகனுன்னா காத்து கருப்பு அண்டிருமுன்னு இரும்பை கையில கொடுத்து வேப்பலைய தலையில சொறுகி அனுப்புறது. படுக்குற எடத்துல பாய் தலையணை இல்லாம போர்வையும் மனைக்கட்டை (மரப்பலகை) கொடுத்தும், படுக்கைய சுத்தி தொடப்பம், செருப்ப பாதுகாப்பு அறனா போட்டு வைக்கிறது மேலும் எரிச்சலடைய செய்கிறது. மனிதர்களை விட பேய்கள் அந்த சிறுமியை என்ன செய்து விடமுடியும்?

மாதவிடாய் காலத்தில் தொட்டால் தீட்டு. மூனு நாளைக்கி வீட்டுக்குள்ள வரக்கூடாது. பகலில் தூங்க கூடாது. தனி தட்டுல சோறு. சாப்பிட்ட மிச்சத்த நாயிக்கி வைக்க கூடாது. ஊறுகாய தொட்டா கெட்டு போயிரும். விதைகளை தொட்டா முளைக்காது. பூவை தொட்டா கருகிரும்.  இதுமட்டுமல்ல இன்னும் ஆயிரத்தெட்டு மூட நம்பிக்கைங்களை, பொண்ணுங்களுக்கு வயசாகி உதிரப்போக்கு நிக்கற வரைக்கும் கடைபிடிக்கனும். கொஞ்சம் பிசகினாலும் மக்கள் பார்த்தே எரித்து விடுவார்கள். பேசினால் ஆயுசுக்கும் மறக்காது.

பெண்கள், குழந்தை பிறக்கும் தருணத்தில் பெண் பிள்ளையை விட ஆண் பிள்ளையை அதிகம் விரும்பவதற்கு இதுவும் ஒரு காரணம். மாதவிலக்கு காலங்களில் அனுபவிக்கும் வலியோடு தீட்டுன்னு சொல்லி அனுசரிக்கப்படும் மூட பழக்கங்களும் சேந்து ஆண் குழந்தைகளை கூடுதலாக விரும்ப வைக்கின்றன. கிட்டதட்ட நாப்பது நாப்பத்தைஞ்சு வருசத்துக்கு மாசா மாசம் வலியும் வேதனையுமா பெண்களுக்குள் இருக்கும் இந்த விசயத்தை உடம்போட இயக்கத்துல ஒன்னுன்னு நினைக்காம பாவமாகவும், தொந்தரவாகவும நினைப்பது துயரமானது.

சடங்கு, பூப்பெய்தல், பெரிய மனுசியாயிட்டா, குச்சிக்குள்ள குந்திட்டா, தீட்டுன்னு இதுக்கு தினுசு தினுசாபேரு வைக்கிறாங்க. மூனு கிலோவுல பொறக்குற குழந்தை கடந்து வரும் நாட்கள்ல கை கால் உடல் உறுப்புகள் வளர்ச்சி அடைவதை போலத்தான், பெண் உதிரப் போக்கு சுட்டும் வளர்ச்சியும். மனிதனை உருவாக்க கருவாகும் உதிரப்போக்கின் தாய்மைத் தன்மையையும் அதற்கான விழிப்பணவையும் பேச மறுத்து, தீட்டை புனிதமாக்க சடக்கு சம்பரதாயமா அதுவும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிரா கொண்டாடுறாங்க.

குடும்பத்தார் போட்டோ போட்டு ப்ளக்ஸ் பேனர் அடிச்சு, மண்டபம் புடிச்சு கறி விருந்து போட்டு, லட்சக் கணக்குல செலவு menstruation-6பண்றவங்க அம்பது ரூபாய்க்கி நாப்கீன் வாங்கரத அனாவசியமா நினைக்கிறாங்க. பெரும்பாலும் படிக்கிற பிள்ளைகள தவிர யாரும் நாப்கீன் பயன்படுத்துறது கிடையாது. பள்ளிக்கூடத்துல குடுக்குற நாப்கீனும் உடம்போட பாதி உடையோட பாதியா ரெண்டு துண்டா பிச்சுகிட்டு வந்துருது.

பெண்கள் வீட்ட விட்டு வெளிய வராத அந்த காலத்துல இந்த விழாவை செஞ்சதோட நோக்கம் எங்க வீட்டுல கல்யாணத்துக்கு தயாரான பொண்ணு இருக்கான்னு ஊரு உலகத்துக்கு அறிவிக்கறதுக்குன்னு சொல்லுவாங்க. ஆணுக்கு சம்பாத்யமுன்னா பெண்ணுக்கு பிள்ளைத் தாய்ச்சி வேலை மட்டும்தான் என்பது கிராம சமூகத்தின் விதி. பருவம் வந்த அந்த நேரத்தை குறித்து வைத்துதான் பெண்ணின் கல்யாண சாதகமே பாக்கப்படுது. நீராட்டல் விசேசம் முடிந்ததும் கீரை விதை போட்ட பாலும் பழமும் கொடுப்பது குடும்பம் விதை போல விருத்தி அடைவதற்கு என்பார்கள்.

மாட்டை சந்தைக்கி ஓட்டிட்டு போயி விக்கிறது போல வீட்டுல பொண்ணு பெரியமனுசி ஆயிட்டா கல்யாணத்துக்கு ரெடியாயிட்டா என்று ஊரு உலகத்துக்கு தண்டோரா போட்டு சொல்லும் நிகழ்ச்சிதான் பூப்பு நீராட்டு விழா. கொச்சையா சொல்லனுமுன்னா எங்க வீட்டுல இருக்கும் பெண் பிள்ளை என்ற மிசினுக்கு பெத்துக்குற தகுதி வந்துருச்சுன்னு சொல்ற நிகழ்ச்சிதான் இது. ஏதோ சில காரணங்களால பருவம் வர தாமதமானா சம்பந்தப்பட்ட பெண்களை சமூகம் ஓரக்கண்ணாலும், வதந்தி வார்த்தையாலும் கொன்று விடும். ஆக வயசுக்கு வந்தாலும் பிரச்சினை, வரலேன்னாலும் பிரச்சினை.

ஒருத்தன் என்னை அடிச்சான்னு வெளிய சொல்ல கூச்சப்படாத பெண், பாலியல் வன்முறைகளை மட்டும் சொல்ல கூச்சப்படுவது ஏன்?. இந்த பயம் எங்கேருந்து வருது. இப்படிபட்ட சிந்தனை முறையில் வளர்க்கப்படும் பெண் எதிர்வரும் பாலியல் இன்னல்களை எப்படி எதிர்த்து போராடுவாள்? மாதவிலக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் சமூக கட்டமைப்பில் கருத்து ரீதியான பயிற்சிக்கு குறிப்பிடத்தக்க பாத்திரம் ஆற்றுகிறது.

சரசம்மா