Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 621

ஆர்.எஸ்.எஸ் கட்டாய மதமாற்றம் – மகஇக பத்திரிகை செய்தி

14

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

_______________________________________________________________________
16.12.2014
பத்திரிகைச் செய்தி

சிறுபான்மை மக்களை மதம் மாற்றும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்!

ட்சியைப் பிடித்த ஆறே மாதத்தில் இந்தியாவை கூறுகட்டி விற்பதை அதிவேகமாக செய்து வருகிறது மோடி அரசு. கூடவே  தனது பார்ப்பனிய இந்துமதவெறி பாசிச செயல் திட்டத்தையும் புயல் வேகத்தில் நிறைவேற்றி வருகிறது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், புராணக் குப்பைகளை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, அவற்றையே வரலாறு என்று திரிப்பது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பது என்ற வரிசையில் தாய் மதத்திற்குத் திரும்புதல் என்ற பெயரில் கட்டாய மதமாற்றத்தை அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம்கள் மதமாற்றம்
படம் : நன்றி http://indianexpress.com

புகழ்பெற்ற தாஜ்மஹால் நகரமான ஆக்ராவில், இருநூறு ஏழை முஸ்லீம்களை, ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாள் படையான பஜ்ரங்தள் கும்பல் கட்டாய மதமாற்றம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பழைய – வீணான பொருட்களை சேகரித்து வாழும் ஏழைகள். மேற்கு வங்கத்திலிருந்து பிழைக்க வந்த பரிதாபத்திற்குரியவர்கள், இம்மக்கள்.

ரேசன் கார்டு, ஆதார் அடையாள அட்டை, உதவித்தொகை, போலீஸ் தொல்லையிலிருந்து பாதுகாப்பு என ஒருபுறம் ஆசை காட்டியும், மறுபுறம் குடியிருக்கும் இடத்தை விட்டு காலி செய்துவிடுவோம் என மிரட்டியும் நடத்தப்பட்ட மதமாற்றம் இது.

50 இடங்களில் ஒரு லட்சம் சிறுபான்மையினரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயித்து, வரும் டிசம்பர் 25 (கிருஸ்துமஸ்) அன்று 4000 கிருத்துவர்களையும், ஆயிரம் முஸ்லீம்களையும் மதமாற்றம் செய்யப்போவதாக பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவுடி சாமியார் ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் மண்டலத் தலைவர் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

மதமாற்றம் செய்ய மட்டும் மாதம் 50 லட்சம் ரூபாயும், போக்குவரத்து செலவுக்கு எட்டு முதல் பத்து லட்சம் ரூபாயும் செலவழிப்பதாக ராஜேஸ்வர் சிங் அறிவித்துள்ளார். வழிபாடு எதுவும் நடக்கவில்லை எனப் பொய் பிரச்சாரம் செய்து அறுபது கிருஸ்தவ தேவாலயங்களையும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கைப்பற்றியுள்ளது. கடந்த 2003 வாஜ்பாய் ஆட்சியில் இருந்த போது இப்போதைய மிரட்டல் வழியில் உ.பியிலும், உத்திரகாண்டிலுமாக 2.73 லட்சம் பேரை மதம் மாற்றினர்.

இந்தியாவில் மதமாற்றம் என்பது பார்ப்பனியக் கொடுங்கோன்மை காரணமாகவே வரலாறு நெடுகிலும் நடைபெற்று வருகிறது. விவேகானந்தர் எனும் இந்து சாமியாராலேயே “பைத்தியக்காரர்களின் நாடு” என்று அழைக்கப்பட்ட நம்பூதிரிகளின் சாதிக் கொடுமையில் சிக்கியிருந்த கேரளமோ, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சனாதன கிரிமினல் பிடியில் மாட்டியிருந்த குமரி மாவட்ட நாடார் சாதி மக்களோ, கம்மா-ரெட்டி காட்டுமிராண்டித்தனத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்த ஆந்திரத்து தலித் மக்களோ, ஒரிசாவின் பழங்குடியினரோ, வரலாற்று ரீதியாகவே பார்ப்பனியத்தின் பண்பாட்டு பிடியை ஏற்க மறுத்த வட கிழக்கு மக்களோ, நிலவுடமை ஆதிக்கத்தின் இறுமாப்போடு தலித் மக்களை ஒடுக்கி வரும் இந்தி பேசும் மாநிலங்களோ…இங்கெல்லாம் மதமாற்றம் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் பெருமூச்சாகவே இருந்தது.

இந்துமதவெறியர்கள் தூற்றுவது போல மதமாற்றம் என்பது வாளின் முனையிலோ இல்லை பால்பவுடர் தயவிலோ நடைபெறவில்லை. ஒருவேளை வாழ்க்கை வசதிகள் கிடைக்கும் என்பதால் ஏழைகள் மதம் மாறுகிறார்கள் என்றால் அது பார்ப்பனியத்தின் நிலவுடமை சமூகம் தோற்றுவித்த வறுமைதான் அடிப்படை. அப்போதெல்லாம் இகலோக வசதிகளுக்காக ‘தாய் மதத்தை’ – தாயை விற்றுவிட முடியுமா என்று நொள்ளை நியாயம் பேசினார்கள், இந்துமதவெறியர்கள்.

இப்போது அதே இகலோக வசதிகளை கொடுப்போம் என்று ஆசை வார்த்தையோடு, அதிகார மிரட்டலையும் சேர்ந்து மதம் மாற்றுகிறார்கள். இசுலாம், கிறித்தவம் போன்று இந்துமதம் அடிப்படியிலேயே ஒரு மதத்திற்குரிய அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை என்றார் அம்பேத்கர். அதனால்தான் இந்து மதம் மற்ற மதங்களைப் போல தனது மதத்தில் வெளிநபர்கள் யாரையும் சேர்ப்பதை விரும்பவில்லை, முயலவுமில்லை. காரணம் இது சாதி ஏற்றத்தாழ்வை ஆன்மாவாகக் கொண்டிருக்கும் ஒரு அதிகார அமைப்பு.

இப்போதும் கூட இவர்கள் மதம் மாற்றினாலும் அந்த மக்கள் வங்கதேச முசுலீம்கள் – ஆதலால் தலித்துக்கள் எனும் அடையாளத்தோடுதான் அங்கே நடத்தப்படுவார்கள். பாஜக அதிகாரத்தில் இல்லாத போது இந்தியா முழுவுதம் மதமாற்றத் தடை சட்டம் வேண்டும் என்று ஊளையிட்டதும் இதே கூட்டம்தான். ஆட்சிக்கு வந்த பிறகு அந்த தடை சட்டம் மற்ற சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமெனஅமல்படுத்தி விட்டு, இவர்கள் “தாய் மதம்” திரும்புதலுக்கு இது பொருந்தாது என்று மதம் மாற்றுவார்கள்.

பார்ப்பனியம் என்னதான் முயன்றாலும், எத்தனை இலட்சம் பேரை மதம் மாற்றினாலும் சாதி ஏற்றத்தாழ்வு எனும் கொடுங்கோன்மை இங்கே இல்லாமல் போய்விடாது. இந்து மதத்தின் கொடுமைகளுக்கு எதிராக மதம் மாறினார்கள் எனும் வரலாற்று உண்மை, இப்போதும் பொருள் இழந்து விடவில்லை. கட்டயமாக முசுலீம்களும், கிறித்தவர்களும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாலும் அக்ரஹாரம் சமத்துவபுரமாக மாறிவிடாது. பார்ப்பனியத்தோடு ஜன்ம பகை கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் குறைந்து விடாது.

ஆர்.எஸ்.எஸ்
படம் : நன்றி reuters

‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற மோசடி முழக்கத்தின் கீழ் நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, மேலும் 12 அணு உலைகளை நிறுவி மக்களை நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பது, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் உட்பட அனைத்து மானியங்களையும் வெட்டி வயிற்றிலடிப்பது, சமையல் எரிவாயுவுக்கு வங்கி கணக்கின் பெயரில் மறைமுக மானிய வெட்டு என பீடை நடை போடுகிறது மோடி அரசு.

நாட்டின் மீதும், மக்களின் மீதும் பொருளாதார பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் கலாச்சார ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு பார்ப்பன பாசிச மேலாதிக்கத்தை நிலைநாட்ட வெறிபிடித்து அலைகிறது. இந்தியாவை இந்து நாடு என மறைமுகமாக அல்ல பகிரங்கமாகவே அறிவிக்கிறது.

பெரியார், அம்பேத்கர் உட்பட ஏராளமான அறிஞர்களாலும், வரலாற்றறிஞர்களாலும் குப்பை என்றும் சாதிவெறிக் கிரிமினல் சட்டத் தொகுப்பு என்றும் இகழப்பட்ட பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்களையும், பகவத் கீதையையும் ஊதிப்பெருக்கி இந்து வெறியைத் தூண்டுகிறது இக்கும்பல்.

கீதையை தேசிய நூலாக்குவதன் மூலம் கருத்தியல் ரீதியாகவே பார்ப்பனிய மேலாதிக்கத்தை பறைசாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். கிறிஸ்மஸ் விடுமுறையை ரத்து செய்வதன் மூலம் பள்ளி மாணவரிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சமத்துவ உணர்வையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். பெரியார் உருவாக்கிய பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி மதம் பார்க்காத சமத்துவ நடைமுறைகள், சாதி மறுப்பு திருமணங்கள், பகுத்தறிவு ஆகிய பண்புகள் கோலோச்சிய தமிழகத்தில் கால்பதிக்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெளிப்படையாக கூட்டங்களையும் பயிற்சியையும் நடத்துகிறது.

அனைத்து ஓட்டுக்கட்சிகள், இனவாதிகள், சாதியக் கட்சிகள், அனைவரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு துணைபோகும் அபாயகரமான சூழலில் மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டிய வரலாற்று கடமை நம் முன் நிற்கிறது. எனவே பார்ப்பனியத்திற்கு பாடை, கட்ட உழைக்கும் மக்களை அணிதிரட்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் ஓரணியில் திரண்டு போராட வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

thai-matham-post-cartoon
படம் : ஓவியர் முகிலன்

பாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் அரசு பள்ளி

1

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன், அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இப்பள்ளி இயற்கை சூழலோடு சிறப்பாக இயங்கி வருகின்றது. பல்வேறு அரசு பள்ளிகளுக்கிடையே இப்பள்ளி முன்னுதாரணமாக இயங்கி வருகின்றது. அம்மையப்பனைச் சுற்றி ஏறத்தாழ 20 கிராமங்களில் இருந்து ஏழை எளிய மக்களின் பிள்ளைகளே இங்கே பயின்று வருகின்றனர்.

school-frontஇந்தப் பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் பெரிய பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ,மாணவிகளின் உயிரைக் குடிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இக்கட்டிடத்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் ஏராளமாக உள்ளன.

பாழடைந்த கட்டிடம்
பள்ளியின் மையத்தில் உள்ள பழைய பாழடைந்த கட்டடம்.

பாழடைந்த இந்தக் கட்டிடத்தில் உள்ள கொடிய பாம்பு போன்றவைகள் மற்ற வகுப்பறை கட்டிடங்களில் செல்வதும்ர மாணவர்கள் இதனைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடுவதும், ஊழியர்கள் அதனை விரட்டியடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்தக் கட்டடத்தை அப்புறப்படுத்தக் கோரி, பலமுறை நேரிலும், புகார் மனுவிலும் கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுவரை அந்தப் பாழடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதனால், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து 01.12.2014 அன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் நேரடியாக மனு கொடுத்தனர்.

collector-petition

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புரட்சிகர  மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம்
99434 94590

வெள்ளாறு பொங்கட்டும் ! போராட்டம் வெல்லட்டும் !

1

வெள்ளாறு பொங்கட்டும்! போராட்டம் வெல்லட்டும!

reclaim-vellaru-04ஊரையே காத்த ஆறு – அதற்கு
உன்னை விட்டால் வேறு யாரு?
முகம் கிழிந்து கிடக்குது பாரு
ரத்தம் கொதிக்குதடா மணல் மீது!

சேர்வராயன் தொடங்கி
சேரும் இடம் வரைக்கும்
வண்டல் வழங்கிய ஆறு,
மக்களை
வாழ வைக்கும் வெள்ளாறு!
அதன் தொண்டைக் குழியே
தூர்ந்து போகுது பாரு,

துடிக்கத் துடிக்க
கழுத்தை அறுக்கும் குவாரிகளை
வெட்டி எறி வேரோடு!

reclaim-vellaru-07நம் உதிரம் கலந்த ஆறு
உருக்குலைந்ததை பாரு,
மண்ணுயிர்க்கெல்லாம்
பால் வார்த்த வெள்ளாறு – அதன்
மார்பை டிப்பர் லாரிகள்
நசுக்கிய தடம் பாரு,

நம் உறவில் கலந்த ஆறு
ஒருவன் கொள்ளைக்கா கூறு?
நம் கண்ணைத் தோண்டுவதாரு
கலெக்டர், போலீசு, தாசில்தாரு,
ஆற்றைச் சுரண்டும் அதிகாரத்தின்
அடக்குமுறைகள் மீறு!

எத்தனை தலைமுறை
பருகிய ஆறு!
எத்தனை கால்நடை
பழகிய ஆறு!
எத்தனை பறவைகள்
உரசிய ஆறு!

reclaim-vellaru-09எத்தனை உயிரினம்
நம்பிய ஆறு!
அத்தனை உணர்ச்சியும்
அடி மணல் பாரு! – இதை
மொத்தமாய்க் கொல்லும்
குவாரிகளை மூடு!

நாணல் பூ நிழல் விழுந்தாலே
கூசும் நம் ஆறு – அதை
நாலாபக்கமும் பொக்லின் நகங்கள்
குதறி எடுப்பதைப் பாரு,
இயற்கையின் மடி அறுக்கும்
எந்திரங்கள் நம் தாய் மீது,
ஆற்றை அழிக்கும்
வன்முறைக்கு எதிராக
ஆயிரம் கரங்களாய்ச் சேரு!

reclaim-vellaru-02ஆற்றை காக்க முடியாத
ஓட்டு கேட்கும் தேர்தல் எதற்கு?
கூட்டு சேர்ந்து மணலை
கொள்ளையடிக்கும் கட்சிகளை
வெள்ளாற்றில் வைத்து நொறுக்கு!

சுட்டுப் பொசுக்கிய வெயிலிலும்
நமக்கு சுரந்து கொடுத்த ஆறு!
ஒட்டச்சுரண்டிய போதும் – இப்போது
மக்கள் ஊற்றெடுக்கும் ஆறு!
மணல் பரப்பெல்லாம் பாரு – மடியாத
உழைக்கும் மக்களின் வரலாறு
மக்கள் என்றால் கார்மாங்குடி – என
தமிழகமே நெஞ்சு நிமிர்கிறது!

போராட்ட உணர்ச்சியின் தடம் பதிந்து
வெள்ளாற்று மணலும் சிவக்கிறது!
நம் கர்ப்பம் சிதைப்பது யாரு?
அவன் கைகளை முறிக்கும்
போராட்டப் பெருக்கில்
பொங்கும் வெள்ளாறு!

– துரை.சண்முகம்

அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரஸை விடக் கொடியது!

0

லகையே அச்சுறுத்திச் சென்ற பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களின் வரிசையில் புதிய வரவாகச் சேர்ந்திருக்கிறது எபோலா எனப்படும் இரத்த ஒழுக்கு தொற்றுநோய். காங்கோவின் எபோலா நதிக்கரையையொட்டி 1976-களில் தோற்றமெடுத்த இந்த உயிர்க்கொல்லி நோய், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவ்வப்பொழுது பரவி ஏறத்தாழ 2,500 பேரைப் பலிகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலைமையோ முன்பைவிட அச்சமூட்டுவதாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நைஜீரியா, லைபிரீயா, செனகல், சியாரா லியோன், கினியா ஆகிய நாடுகளில் பரவத் தொடங்கிய இத்தொற்றுநோய்க்கு இதுவரை 5,000 பேர் பலியாகியுள்ளனர்.  அடுத்த டிசம்பர் மாதத்திற்குள் இச்சாவு எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுவிடும் என்பதோடு, உலகமயத்தின் விளைவாக நோயும் கண்டம் விட்டு கண்டம் பரவிவிடும் என்ற அச்சமும் உலகெங்கிலும் பரவியிருக்கிறது.

14-ebola-africaஆப்பிரிக்க கருப்பின மக்களை அடிக்கடித் தாக்கி வரும் எபோலா நோய் கண்டுபிடிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இந்நோயை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளோ, தடுப்பூசிகளோ ஆராய்ச்சி நிலையைத் தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்லவில்லை. இந்த அலட்சியத்திற்கு மருந்து உற்பத்தியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் நிறவெறியும் இலாபவெறியும்தான் காரணமாகும். குறிப்பாக, கனடா அரசின் பொது சுகாதாரத் துறை பத்தாண்டுகளுக்கு முன்பே இந்நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்கி அதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ளபோதும், அம்மருந்தினை உற்பத்தி செய்யும் உரிமையை கனடா அரசிடமிருந்து பெற்றுள்ள நியூலிங்க் ஜெனடிக்ஸ் என்ற அமெரிக்க மருந்து கம்பெனி. அம்மருந்தை சந்தைக்குக் கொண்டுவராமல் முட்டுக்கட்டை போட்டுவருகிறது. ஏகாதிபத்திய கம்பெனிகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் சொத்துடமை சட்டத்தைப் பயன்படுத்தி நியூலிங்க் நிறுவனம் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டு, கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைச் சோதித்துப் பார்க்கக்கூட முடியாதபடி தடைபோட்டு வருவதாக மேற்குலக அறிவியலாளர்கள் பலரும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மருந்தே இல்லாத இந்த நிலையும்; தனியார்மயம்-தாராளமயம் ஆப்பிரிக்க கண்டத்து நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் வறுமையும் ஏழ்மையும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளும்; உள்நாட்டுச் சண்டையாலும் ஏகாதிபத்திய கொள்ளையாலும் அந்நாடுகளின் அரசுகள் போண்டியாகி நிற்பதும்தான் நோய் தீவிரமாகப் பரவுவதற்கும், சாவு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.

14-ebola-us51 மருத்துவர்களே உள்ள லைபீரியாவிற்கும் (மக்கள்தொகை 42 இலட்சம்) 136 மருத்துவர்களே உள்ள சியாரா லியோனுக்கும் (மக்கள்தொகை 60 இலட்சம்) இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது மருத்துவர்களும், தாதிகளும், அடிப்படையான சில மருந்துகளும்தான். எபோலா நோயை எதிர்கொள்ளக்கூடிய முழுத் திறன் தன்னிடம் இல்லாதபோதும், இந்த மனிதாபிமான உதவியைச் செய்வதற்காக மருத்துவர்களையும் தாதிகளையும் கியூபா அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால், எபோலா வைரஸின் காப்புரிமையையும், அந்நோய்க்கான மருந்து உற்பத்தி உரிமையையும் பெற்றுள்ள பெரியண்ணன் அமெரிக்காவோ லைபீரியாவிற்கு மருத்துவ உதவி என்ற போர்வையில் 3,000 சிப்பாகளைக் கொண்ட படையணியை அனுப்பி வைத்திருக்கிறது.

ஏழை நாடுகள் மீதான தனது இராணுவத் தலையீடை மனித உரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் நியாயப்படுத்தி வரும் அமெரிக்காவுக்கு, அவசரகால மருத்துவ உதவி என்ற புதிய முகாந்திரம் கிடைத்திருக்கிறது.  இதனாலேயே, மனிதப் பேரழிவாகக் கருத வேண்டிய இந்நோய்த் தாக்குதலை, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாக, தீவிரவாதத் தாக்குதலைப் போல வரையறுத்துள்ளன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.
_______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
_______________________________

ஆபாச பத்திரிகை எரிப்பு – கல்லூரி மாணவிகள் பேராதரவு

1

அன்பார்ந்த மாணவ – மாணவிகளே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே,

பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் சென்னையில், வரும் 17-ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போராட்டம் ஒரு நாள் தள்ளி, 18-ம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப் போராட்டத்தையொட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் பெண்கள் கல்லூரிக்கிளை மாணவத் தோழர்கள் சென்னை நகரம் முழுவதும் சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள மகளிர் கல்லூரிகளான ராணிமேரி கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி, காயிதேமில்லத், எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, லேடி விலிங்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய கல்லூரிகளில் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் மாணவிகள், மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்வமுடன் கையெழுத்திடும் மாணவர்கள், பேராசிரியர்கள் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்த பெண் போலீசாரும் தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டுள்ளனர். இப்பிரச்சாரங்களை பார்க்கும் மாணவிகள் அதை படம் பிடித்து பேஸ்புக்கில் போடுவதையும் செய்கின்றனர். இந்த வகையில் புமாஇமு தொடங்கியுள்ள கலாச்சார சீரழிவுக்கு எதிரான இப்போராட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள இச்சமூகத்தை தட்டி எழுப்ப நள்ளிரவிலும் பிரச்சாரம்

மாணவிகள் மத்தியில் மட்டுமின்றி சென்னையின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை (கடற்கரையையொட்டிய சாலை) ஆகியவற்றில் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் புமாஇமு மாணவிகள் தீவீர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பிரசுரங்களை கேட்டு வாங்கி படித்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கலாச்சார சீரழிவை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த உரக்கத்தில் உள்ள மனிதர்களை தட்டி எழுப்பும் வகையில் நள் இரவிலும் (இரவு 12 மணிக்கும் ) பேருந்து, ரயில்களில் ஓயாமல் பிரச்சாரங்களை செய்து வருகிறது புமாஇமுவைச் சார்ந்த புரட்சிகர மாணவிகள் படை.

கலாச்சார சீரழிவுக்கு எதிரான பிரச்சார நடைப்பயணம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்திற்கு அனைத்துதரப்பு மக்களின் ஆதரவை திரட்டும் வகையில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் – இளைஞர்களுடன் புமாஇமு வின் புரட்சிகர கலாச்சார படை 15-ம் தேதி மதுரவாயலில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் வரை நடைப்பயணமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

டிசம்பர் – 18,
சென்னையில்…
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும்
ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்!

  • பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை ஆதரியுங்கள்.
  • போராட்டத்திற்கு வாருங்கள்.
  • வருபவர்கள் எமது புமாஇமு அலுவலக எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

அலுவலக தொடர்பு எண் : 9445112675

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

நள்ளிரவிலும் தொடர்கிறது வெள்ளாறு முற்றுகை – ராஜுவுடன் நேர்காணல்

0

டந்த 2-12-14 அன்று மணல் குவாரியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், விருத்தாசலம், வெள்ளாற்றுப்பகுதி மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் நடத்திய முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மாவட்ட நிர்வாகம் மணல் குவாரியை தற்காலிகமாக மூடி உத்திரவிட்டது. மேலும் மணல் கொள்ளை குறித்தும் விதி முறை மீறல் குறித்தும் விசாரணைக்கும் உத்தரவிட்டது.

பின்னர் எந்த முன்னறிவிப்பும் இன்றி எந்தவிதமான அதிகாரிகள் விசாரணையும் இன்றி மணல் குவாரியை துவக்கி  வழக்கம் போல் கொள்ளை தொடரப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் எனத் தொடங்கப்பட்டு மருங்கூரை சேர்ந்த எம்.ஜி.பி. பஞ்சமூர்த்தி அதன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த 11 உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.

நேற்று (15-12-14 அன்று) காலை 10.00 மணி முதல் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி முற்றுகைப் போராட்டம் நடந்து வருகிறது.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து நடத்திவரும் இப்போராட்டத்தில் வெள்ளாற்று இரு கரைகளிலும் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள், ஆண்கள், பெண்கள் பல தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

சுமார் 4 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் வந்தார். காவல் துறை புடைசூழ பந்தலுக்கு வந்தார்; அவர் “போராட்ட குழுவினருடன் பேச்சு நடத்த வேண்டும்” என்று அழைத்தார். .

“மக்கள் சாப்பிடாமல் இருக்கிறார்கள். கஞ்சி காய்ச்சி கொண்டு இருக்கிறோம். நாங்கள் சாப்பிட்ட பின்புதான் பேச முடியும்” என்று வழக்கறிஞர் ராஜு கூறினார். இதனை கைதட்டி வரவேற்றனர்.

ஆர்.டி.ஓ இதனால் காத்திருந்தார். சற்று நேரம் கழித்து டி.எஸ்.பி பாண்டியன் மீண்டும் வந்தார். “உங்களுடைய கோரிக்கை என்ன” என்று கேட்டார்.

“எங்களது ஒரே கோரிக்கை மணல் குவாரியை மூட வேண்டும்” என்பதுதான் என்றார் ராஜு.

ஆர்.டி.ஓ. “குவாரியை மூடமுடியாது” என்றார்.

“அப்படியானால் பேசமுடியாது” என்றார் ராஜு.

இருந்தாலும் டி.எஸ்.பி. பேச்சை முடிக்க விடாமல், “உங்களுடைய மற்ற கோரிக்கைகளை கூறுங்கள்” என்றார்,

“கார்மாங்குடி மணல் குவாரியில் ஆண்டுக்கு 10,91,000 கன மீட்டர், அதாவது 67000 யூனிட் மணல்தான் எடுக்க அனுமதி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட மணலை ஒருமாதத்திலேயே எடுத்து முடித்துவிட்டார்கள். மேலும் இதில் பல விதி மீறல்கள் நடந்துள்ளன. மணல் குவாரியை அரசே நடத்துகிறது என்று சொல்லுகிறார் அதிகாரி. அப்படியானால் ஏன் விதி மீறல்கள் நடக்கின்றன.”

“சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தின் விதிமுறை படி ஆற்றின் கரையில் மணல் எடுக்க கூடாது. 3 அடி ஆழத்துக்கு மேல் எடுக்கக்கூடாது. எந்திரங்களை வைத்து எடுக்க கூடாடது என்று விதிமுறை உள்ளது. அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது” என்றார் தோழர் ராஜு.

ஆனால் வருவாய் கோட்டாட்சியர், “விதிமுறை மீறல் இல்லை என்று பொதுப்பணித்துறை அறிக்கை கொடுத்துள்ளது” என்றார். மக்கள் இதை கடுமையாக எதிர்த்தார்கள்.

“விதிமீறல் இல்லை என்றால் கடந்த ஓராண்டு காலமாக மணலுக்காக பொதுப்பணித்துறை வாங்கிய பணம் எவ்வளவு என்ற கணக்கை கொடுங்கள்” என்று கேட்கப்பட்டது.

“அதைக் கொடுத்து விட்டால், போராட்டத்தை கைவிட்டுவிடுவீர்களா என்று DSP கேட்டார்.

“போராட்டத்தைகைவிட வேண்டுமென்றால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். முதலில் கணக்கை கொடுங்கள்” என்று கேட்கப்பட்டது.

“அந்தக் கணக்கை நீங்கள் பொதுப்பணித்துறையிடம் போய் கேளுங்கள்” என்றார்.

“அதெல்லாம் எங்கள் வேலையில்லை. அரசு என்றால் மாவட்ட நிர்வாகம்தான். எனவே நீங்கள்தான் தரவேண்டும்” என்றார் ராஜு.

“இந்த ஆவணங்களை வாங்கிக்கொண்டு நீதிமன்றத்துக்கு போங்கள்” என்றார்.

“நீதிமன்றம் போவது போகாதது எங்கள் பிரச்சனை. நீங்கள் முதலில் ஆவணக் கணக்குகளை கொடுங்கள்” என்றோம.

“குவாரியை மூடுவது இங்கே முடிவு செய்யப்படவேண்டியது இல்லை, அது அரசின் முடிவு” என்றார் டி.எஸ்.பி.

“அப்படியானால் விதியைமீறி அடிக்கப்பட்ட கொள்ளை, அதிகாரிகளுக்கு, அரசியல் தலைவர்களுக்கு, ஊராட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள லஞ்சம் இதைப்பற்றி நான் புகார் தருகிறேன். இதன்மீது நடவடிக்கை எடுங்கள், வழக்கு பதிவு செய்யுங்கள்” என்று கோரப்பட்டது.

புகார்மனுவை பெற்றுக்கொண்டார் டி.எஸ்.பி. அதன்பின் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

மீண்டும் டி.எஸ்.பி வந்து, “உங்களுடைய போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் காலையில் வந்து தொடரலாமே, எதற்கு உங்களுக்கு வீண்கஷ்டம், பொதுமக்களுக்கும் கஷ்டம்” என்றார்.

ஆனால் அவரது கோரிக்கை அனைத்து மக்களாலும் நிராகரிக்கப்பட்டது. இரவிலும் மணல் குவாரியிலேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர், மக்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடனும் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.பி பஞ்சமூர்த்தியுடனும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன்  நேற்று (15-12-2014) இரவு 10.30 மணி அளவில் நடத்திய தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு:

மேலும் படிக்க

எட்டப்பன் போனார் ! தொண்டைமான் வந்தார் !!

1

ரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்று ஆறு மாதங்கள் முடிவதற்குள்ளாகவே இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.  கடந்த ஆறு மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் ஒரு அங்குலம்கூட முன்னே நகர்ந்திராதபோது, கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பு  எகிறிப் பாய்ந்தது எப்படி? ஊரான் சொத்தைக் கொள்ளையடித்து திடீர்ப் பணக்காரர்கள் உருவாவது போல, நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதன் வழியாகத்தான் அவர்களின் சொத்து மதிப்பு எகிறியிருக்கிறது.  இக்கொள்ளைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும் புரோக்கர் வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது.

மோடி - ஜேட்லி
பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதியமைச்சர் அருண் ஜேட்லி : கார்ப்பரேட் முதலாளிகளின் விசுவாச புரோக்கர்கள்.

காப்பீடு துறையில் 49 சதவீதம் வரை அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கு ஏற்பச் சட்டத் திருத்தம் கொண்டுவருவது; முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்துவது; நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது; பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 52 சதவீதம் அளவிற்குக் குறைப்பது, பல்லாயிரம் கோடி சொத்துக்களைக் கொண்டுள்ள ரயில்வே துறையில் தனியார்மயத்தைப் புகுத்துவது – என அவரது அரசு அறிவித்துவரும் சீர்திருத்தங்கள் இந்த புரோக்கர் வேலைக்குச் சான்று பகர்கின்றன. நரேந்திர மோடி தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் வேகத்தைப் பார்த்தால், அவரது ஆட்சிக் காலம் முடிவதற்குள் இந்த நாடே கார்ப்பரேட் முதலாளிகளின் தனிப்பட்ட சொத்தாகிவிடும்.

இத்தனியார்மய நடவடிக்கைகளை  நாட்டின், மக்களின் நலனை முன்னிறுத்தித்தான் செய்வதாக வாய்பந்தல் போட்டு வருகிறார், மோடி.  கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் கோரியபடி தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த முயலும் அவர், அதற்கு உழைப்பே வெல்லும் எனப் பெயரிடுகிறார். தொழிலாளர்களின் வேலையைப் பாதுகாப்பதற்காகவே நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கப் போவதாக அறிவிக்கிறார், அவரது நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இந்த அறிவிப்பையும் இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளிகளின் சங்கங்கள் இணைந்து நடத்திய இந்தியப் பொருளாதார மாநாட்டில் வெளியிடுகிறார், அவர். அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற கவர்ச்சித் திட்டத்தைத் தொடங்கிவைத்தபொழுது, இது பொருளாதாரத் தீண்டாமையை ஒழிப்பதற்கான முயற்சி என்றார், மோடி. ஆனால், இத்திட்டத்தின் பின்னே சமையல் எரிவாயு மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் சீர்திருத்தம் மறைந்திருந்தது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மோடி அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

பாசிஸ்டுகள் எப்பொழுதுமே  மக்களை மயக்கும் கவர்ச்சி முழக்கங்களின் மூலம்தான் தமது நோக்கத்தை ஈடேற்றிக் கொள்கிறார்கள்.  இட்லர்கூட தேசிய சொசலிசம் என்ற  முழக்கத்தைத்தான் மக்கள் முன் வைத்தான் என்பதை நாம் இங்கு நினைவுகூர்வது அவசியமானது.  மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது நல்ல காலம் பொறக்கப் போகுது என முழங்கியதன் பின்னே முழுக்க முழுக்க கார்ப்பரேட் முதலாளிகளின் நல்லகாலம்தான் இருந்தது, இருக்கிறது என்பதைத்தான் அவரது இந்த ஆறு மாத கால ஆட்சி நிரூபித்திருக்கிறது.

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிரான தடைகளை உடைத்தெறிய வேண்டும் என ஜி-20 நாடுகள் மாநாட்டில் சூளுரைத்திருக்கிறார், மோடி.  நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதற்கு எதிராக விவசாயிகள் போராடத் துணிந்தால், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் போராடத் துணிந்தால், மானிய வெட்டுகளுக்கு எதிராகப் பொதுமக்கள் போராடத் துணிந்தால், அப்போராட்டங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி இதற்கு வேறு பொருள் கொள்ளமுடியாது. காங்கிரசு அணிந்துகொண்டிருந்த மனித முகத்துடன்கூடிய பொருளாதார சீர்திருத்தம் என்ற முகமூடியெல்லாம் மோடிக்குத் தேவைப்படவேயில்லை.

முந்தைய காங்கிரசு கூட்டணி அரசில் சில சில்லறை சலுகைகளை விவசாயிகளுக்கு அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை, கார்ப்பரேட் முதலாளிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப திருத்துவதற்கு மோடி அரசு முடிவு செய்திருப்பதும்; எதிர்வரும் ஜனவரி 1 முதல் சமையல் எரிவாயு உருளைக்கு வழங்கப்படும் மானியத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை நாடெங்கும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதும் இந்திய மக்களுக்கு மிகக் கொடூரமான கெட்ட காலம் நெருங்கிவிட்டதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

காப்பீடு ஊழியர்கள் போராட்டம்
காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டை 49% வரை அதிகரிக்க அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கொல்கத்தா நகரில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் நடத்திய சாத்வீகப் போராட்டம் : மெழுகுவர்த்திகளால் மோடியைச் சுட்டுவிட முடியாது.

மானியப் பணத்தைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் போடுவது என்ற நடைமுறை, மானியத்தை வெட்டுவதற்கான தந்திரமான திட்டமாகும். ஏனென்றால், இத்திட்டப்படி ஒவ்வொரு குடும்பமும் சமையல் எரிவாயு உருளையை  சந்தை விலையில் – கிட்டதட்ட 900 ரூபாய் கொடுத்து வாங்கிய பிறகுதான் மானியம் வங்கிக் கணக்கில் போடப்படும். மாதச் சம்பளக்காரர்களே மாதக் கடைசியில் தடுமாறி நிற்கும்பொழுது, தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் எரிவாயு உருளையை இனி எட்டாக் கனியாக்கிவிடும்.  சமையல் எரிவாயுவிற்கு அடுத்து, உணவு மானியத்திலும் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு மறைமுகமாக வெட்டிவிடுவதற்குத் தயாராகி வருகிறது, மோடி அரசு.

மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்பதை பிரீமியம் ரயிலும், டீசல், பெட்ரோல் மீதான கலால் வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதும் உணர்த்துகின்றன. பிரீமியம் ரயில் கட்டணம், அந்த ரயில் புறப்படும் தேதியும் நேரமும் நெருங்க நெருங்க பல மடங்காக ஏறிக்கொண்டே போகும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தனியார் ரயில் பயண முகவர்கள் பயணிகளின் அவசரத்தையும், டிக்கெட்டுக்கான டிமாண்டையும் பொருத்து சட்டவிரோதமாக அடித்துவந்த கொள்ளையை, மோடி அரசு பிரீமியம் ரயில் மூலம் சட்டபூர்வமாக ரயில்வே துறையே கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடாக மாற்றிவிட்டது. மேலும், முன்பதிவு பயணச் சீட்டு, உடனடி பயணச் சீட்டு வழங்கும் சேவைகளை முழுக்கமுழுக்கத் தனியாரிடம் ஒப்படைக்கும் ஏற்பாடு மூலம் கள்ளச் சந்தைக்கான புதிய வாய்ப்புகளைச் சட்டபூர்வமாகவே திறந்துவிட்டுள்ளது.

சமீபத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்த பிறகும், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விற்பனை விலை குறையவில்லை. இதற்குக் காரணம், கச்சா எண்ணெயின் விலை சரிந்த நேரம் பார்த்து, பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதுதான். இதுவொரு தந்திரமான முடிவு. இந்த உயர்வின் மூலம் இரட்டை இலாபத்தை மோடி அரசு அடைந்திருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை சரிந்தாலும், தனது வரி வருவாய் சரியாமல் இருப்பதற்கு ஏற்ப இந்த வரி உயர்வை அமலாக்கியது ஒன்று.  மற்றொன்று, எதிர்காலத்தில் கச்சா எண்ணெயின் விலை உயரும்பொழுது கூடுதலாக வரி வருவாய் கிடைப்பதையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறது.

05-thondaiman

ஏகாதிபத்திய முதலீட்டாளர்களின் முழுநம்பிக்கையைப் பெறுவதுதான் இந்த அரசின் இலட்சியமாக இருக்கிறது. அதற்கேற்றபடி வங்கித் துறை, காப்பீடு துறை, ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை என கேந்திரமான துறைகள் அனைத்திலும் தனியார்மயம் கிடுகிடுவென புகுத்தப்படுகிறது. காப்பீடு துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடை அனுமதிக்கும் முடிவை முந்தைய காங்கிரசு அரசே எடுத்திருந்தது.  அதற்குப் பின்வந்த மோடியோ அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களும் காப்பீடு துறையில் முதலீடு செய்வதற்கு ஏற்ப அத்துறையைச் சூதாடிகளுக்குத் திறந்து விடுகிறார்.

தனியார்மயம் என்பதே பொதுச் சொத்துக்களை ஏகாதிபத்திய முதலாளிகளும், உள்ளூர் தரகு முதலாளிகளும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுதான் – அச்சொத்து அலைக்கற்றையாகவோ, நிலக்கரி வயலாகவோ, பொதுத்துறை நிறுவனங்களாகவோ இருக்கலாம்.  மைய – மாநில அரசுகள், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோர் இக்கொள்ளைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் மாமா வேலையைத்தான் கௌரவமாகவும் சட்டபூர்வமாகவும் செய்து கொடுக்கின்றன. அந்த வகையில் நரேந்திர மோடி கார்ப்பரேட் முதலாளிகளின், முதலீட்டாளர்களின் மனம் கவர்ந்த மாமாவாக இருக்கிறார். தனது முதல் பட்ஜெட்டிலேயே நல்ல இலாபத்தில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகளைத் தனியாரிடம் விற்கும் முடிவை அறிவித்திருந்த மோடி அரசு, இப்பொழுது நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்க்கும் முடிவை தடாலடியாக எடுத்திருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் மாடர்ன் பிரட், வீ.எஸ்.என்.எல்., பால்கோ எனப் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. அந்நிறுவனங்கள் தனியார் வசமான பின்னே வேலையிழப்புதான் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினையாக உருவெடுத்தது. சென்னை-கிண்டியில் அமைந்திருந்த இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்டது.  இப்பொழுது அந்நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. அங்கு வேலை பார்த்துவந்த தொழிலாளர்களும், ஊழியர்களும் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. நமக்குப் பொதுத்துறை நிறுவனமாகத் தெரிவது தரகு முதலாளிகளின் கண்களுக்கு ரியல் எஸ்டேட்டாகத் தெரிகிறது என்பதுதான் உண்மை. ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் வேலையைப் பாதுகாப்பதற்காகவே அவற்றைத் தனியார்மயமாக்க முடிவு செய்திருப்பதாக”க் கூசாமல் புளுகி வருகிறார்.

தொழிற்சாலைகளைக் கண்காணித்து முறைப்படுத்தும் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வரி ஏய்ப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பின்தேதியிட்டு வரி விதிக்கும் சட்ட முன்வடிவு கைவிடப்படுகிறது. இதுவரை இருந்து வந்த வணிக வரிச் சட்டங்கள் கைவிடப்பட்டு, அதனிடத்தில் பொருள் மற்றும் சேவை வரி என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.  தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தும் முயற்சி தீவிரப்படுத்தப்படுகிறது. இத்திருத்தங்கள் மூலம் முதலீட்டாளர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த “இன்ஸ்பெக்டர் ராஜ்”-க்கும், சிவப்புநாடா முறைக்கும் முடிவு கட்டுவதாக அறிவிக்கிறது, மோடி அரசு. கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் மீது அரசிற்கு இருந்துவந்த பெயரளவிலான கட்டுப்பாடுகளும், கண்காணிக்கும் உரிமையும் கைவிடப்படும் அதேவேளையில், மக்கள் மீதான கண்காணிப்போ ஆதார் அட்டை உள்ளிட்டுப் பல்வேறு வழிகளில் தீவிரமடைகிறது.

“எட்டப்பனை நல்லவனாக்கிவிட்டார் எனது அருமை நண்பர் தொண்டைமான்” – இது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வந்துள்ள புகழ்பெற்ற வசனம்.  மோடியின் ஆட்சி அந்த வசனத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. எட்டப்பனிடத்தில் மன்மோகன்சிங், தொண்டைமான் இடத்தில் நரேந்திர மோடி என்பதுதான் வேறுபாடு.

– அழகு
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

இலக்கு வைத்து அரசு நடத்தும் கொலைகள்

0

“டாஸ்மாக்” – சாராயக் கடைகளுக்கு, மின்வாரியம் வசூல் மையங்களுக்கு, “பிரீமியம்” ரயில்களுக்கு இவ்வளவு தொகை கல்லாக் கட்ட வேண்டும்” என்று தான்தோன்றித்தனமாக ஒரு இலக்கு வைத்து அரசே கொள்ளையிடுவது – வழிப்பறி செய்வது பற்றிய செய்தி விமர்சனம் எழுதுவதற்கு எண்ணினோம்; ஆனால், இத்தனை நாட்களில் இத்தனைப் பேரைக் கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்யும் ஒரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.

வம்பர் 8 அன்று, சட்டிஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், பென்டாரி என்ற கிராமத்தில் நடந்த குடும்பக் கட்டுப்பாடு கருத்தடை சிறப்பு முகாமில், 83 பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ததில் 13 பெண்கள் மரணமடைந்தார்கள். அடுத்த இரண்டு நாட்களில் அதே மாவட்டத்தில் உள்ள குவரெல்லா கிராமத்தில் நடந்த கருத்தடை சிறப்பு முகாமில், 56 பெண்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ததில் ஒரு பழங்குடிப் பெண் மரணமடைந்தார். இவ்விரு முகாம்களிலும் மேலும் பல பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மாநிலத்தின் வெவ்வேறு மருத்துமனைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பென்டாரி படுகொலைகள்
பென்டாரி கிராமத்தில் நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பின் உயிருக்குப் போராடும் நிலையில் பிலாஸ்பூர் மருத்துவமனையில் கிடத்தப்பட்டுள்ள இளம் தாய்மார்கள்.

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற வசனம் எல்லா சந்தர்ப்பவாதக் குரூரங்களையும் அரசியல் கிரிமினல் குற்றங்களையும் நகைச்சுவை வேடிக்கையாக்கித் தட்டிக்கழிக்கும் தப்புவிக்கும் விசயங்களாக்கி விட்டதைப்போல, நமது மக்களின் அன்றாடச் சாவுகள் சகஜமாகிவிட்டன. பிழைகளோடு எழுதப்பட்ட காகிதத்தைக் கசக்கிக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போடுவதைப் போல இந்தச் சாவுச் செய்திகள் துச்சமாக மதிக்கப்பட்டு, மறந்து போய்விடுகின்றன.

உணர்வுகள் மரத்துப்போன இந்தத் “தேசத்தில்” மக்கள் உயிர்களுக்கு இவ்வளவுதான் மதிப்பு! ஆனால், உணர்வுகள் இன்னமும் மரத்துப்போகாத கொஞ்சம் பேருக்கு இந்த சட்டிஸ்கர் மாநிலச் சாவுச் செய்திகள் நெஞ்சைப் பதற வைக்கிறது!

கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் டாக்டர் குப்தா
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் டாக்டர் குப்தா

ஏனென்றால், இச்சாவுகள் ஏதோ மருத்துவச் சிகிச்சையின்போது, “கிரிமினல்” அலட்சியத்தால்  நேர்ந்துவிட்ட தவறுகள் அல்ல. இவ்வாறான “சாவுகள்” நிகழ்வற்கான எல்லா காரணிகளையும் -அடிப்படைகளையும் மருத்துவ மற்றும் அரசு நிர்வாகமே உருவாக்கி வைத்திருந்தது; இவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியங்கள் மனித மதிப்பீட்டிற்கு, அதுவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் மதிப்பீட்டிற்கு அப்பாற்பட்டதும் அல்ல. ஆகவே, தெரிந்தே நிகழ்த்திய இச்சாவுகளை ஏன் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலை என்று சொல்லக்கூடாது! அதுவும், இவ்வளவு காலத்துக்குள் இவ்வளவு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்து செய்து முடித்த கொலைகள் என்று ஏன் சொல்லக் கூடாது!

பிலாஸ்பூரில் சிறப்பு முகாம்களில் நடத்தப்பட்ட கருத்தடை அறுவைச் சிகிச்சைகள், மக்கட்தொகையை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவது என்ற நோக்கில் மட்டுமல்ல, அங்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படும் பெண்களைக் கொலை செய்வதன் மூலம் மக்கள் தொகையைக் குறைப்பதும் நடந்திருக்கிறது. இன்னும் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். “அங்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்ட பெண்களில் எல்லோரும் செத்து விடவில்லை; ஆகவே, இப்படி நடக்கும் என்பது  தங்களுக்குத் தெரியாது, நேர்ந்துவிட்ட சாவுகளுக்குத் தாங்கள் பொறுப்பல்லவென்றும்” அச்சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்தவர்கள் வாதாடவும் கூடும்.

ஆனால், கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் குறித்த முந்தைய அனுபவங்கள் அடிப்படையில் விதிக்கப்பட்ட தடைகள்,நெறிமுறைகள், வழி காட்டுதல்கள்  எல்லாவற்றையும் இலக்கு ஒன்றையே குறியாக வைத்து பிலாஸ்பூர் சிறப்பு முகாம்களில்  மீறப்பட்டுள்ளன. இந்த வகையில் அதிகாரிகள், ஆட்சியாளர்களோடு கூட்டுச்சேர்ந்து, தொழில்முறை “தர்மங்களை-நெறிமுறைகளை” மீறி மருத்துவர்கள்   நடந்து கொண்டுள்ளார்கள். அரசு விருதுகளையும் பதவி உயர்வுகளையும் பரிசுத்தொகைகளையும் குறிவைத்து போலி மோதல்களை (“என் கவுண்டர்களை”) அரங்கேற்றும் இராணுத்தினர், துணை இராணுவத்தினர், போலீசைப்போல இம்மருத்துவர்கள் கொலைகாரர்களாகச் செயல் பட்டிருக்கிறார்கள்.

சட்டிஸ்கர் பவன் ஆர்ப்பாட்டம்
இலக்கு வைத்து நடத்தப்பட்ட கருத்தடைக் கொலைகளை எதிர்த்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் மகளிர் அமைப்புகளும் இணைந்து டெல்லியிலுள்ள சட்டிஸ்கர் பவன் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்.

“ஓர் உதவியாளரை வைத்துக்கொண்டு ஒரு மருத்துவர், மூன்று ‘லேப்ரோஸ்கோப்’ கருவிகளைக் கொண்டு ஒருநாளைக்கு முப்பதுக்கும் மேலாக கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடத்தக்கூடாது. மேலும் சில அறுவைச் சிச்சை மருத்துவர்களையும் உதவியாளர்களும் ‘லேப்ரோஸ்கோப்’ கருவிகளும் இருந்தாலும் ஒரு முகாமில் ஒருநாளைக்கு ஐம்பதுக்கும் மேலாக கருத்தடை அறுவைச் சிகிச்சைகள்  நடத்தக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் 2008-ஆம் ஆண்டு தடை விதித்திருக்கிறது. (ஏற்கெனவே, இவ்வாறான பல கொலைகள் நடந்திருப்பதால்தான் உச்சநீதி மன்றம் தடை விதிக்க நேர்ந்திருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்!)

ஆனால், பென்டாரி என்ற கிராம சிறப்பு முகாமில் ஒரே நாளில் 5 மணிநேரத்தில் 83 பெண்களுக்கும், குவரெல்லா கிராம சிறப்பு முகாமில் ஒரே நாளில் 56 பெண்களுக்கும்  ஒரே உதவியாளரை வைத்துக்கொண்டு ஒரே மருத்துவர் ஒருநாள் விட்டு ஒரு நாள் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இரத்தப் போக்கோ, தொற்றோ ஏற்படக்கூடாது என்பதற்காக சிறுதுளைபோட்டு அறுவைச் சிகிச்சை செய்யும் ‘லேப்ரோஸ்கோப்’ முறையைப் பயன்படுத்தினாலும், குறித்த நேரத்தில் இத்தனை பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்பதால் அக்கருவியைக் கொதிநீரில் கழுவிக்கூட (அப்படி ஒருமுறை செய்வதற்குக் குறைந்தது 20 நிமிடம் பிடிக்கும்) அடுத்தடுத்த பெண்களுக்குப் பயன்படுத்தவில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்டு பாழடைந்த மருத்துவமனைக் கட்டிடத்தில், படுக்கை வசதிகள் ஏதுமின்றி, தரையில் கிடத்தி, நஞ்சாகிப்போன ‘லேப்ரோஸ்கோப்’ கருவியை வைத்துத்தான் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதனால், அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்ட பெண்களுக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட்டது; சீழ்கட்டியது, வலியால் துடிதுடித்துப்போன அவர்கள் ஒவ்வொருவராக மாண்டுபோனார்கள். காலாவதியாகிபோன மற்றும் கலப்பட மருந்துகளே கொடுக்கப்பட்டன. அதன் பிறகு நடந்த விசாரணையில் மருந்துக் கொள்முதலில் ஊழல்கள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறன.

08-state-murdersஏன் இவ்வளவு முறைகேடுகள்? ஏன் இவ்வளவு அவசரம்? ஏதுமறியாத ஏழைப் பெண்கள் இப்படிக்கொல்லப்படுவது நிற்குமா? அறிவிக்கப்படாத அரசிதழான “தி இந்து” எழுதுகிறது, “கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு ஈட்டுத்தொகைகள் வழங்குவதும் மற்றும் மருத்துவர்களுக்கு அறுவைச் சிகிச்சை எண்ணிக்கைகளுக்கேற்ப ஊதியமளிப்பதும், கருத்தடை இலக்குகளை எட்டுவதற்கான உயிர்க் கொல்லி நிர்ப்பந்தம் இருக்கும் வரை விதிகள் மீறப்படுவதும், மரணங்கள் நிகழ்வதும் வருத்தமளிக்கும் வகையில் நீடிக்கும்.  இதை மேலும் மோசமாக்குகிறது குழந்தைகள் பிறப்பு, பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பதின்மர்களின் ஆரோக்கியம் குறித்த 2020 ஆண்டுக்குள் ‘ஆயிரமாண்டுகளின் வளர்ச்சி இலக்கு’.

இதைச் சாதிப்பதற்கான  வழிவகையாகக் கருத்தடைக்கு மாறுபாடுகளின்றி அரசாங்கம் கவனம் செலுத்துவது இருக்கிறது. ‘உயர் கவனத்துக்குரிய பதினோரு மாநிலங்களின்’ முதலமைச்சர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநல மத்திய அமைச்சகம் 2014, அக்டோபர் 20 அன்று அனுப்பிய கடிதத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. இம்மாநிலங்களில் கருத்தடை செய்து கொள்ளும் பெண்களுக்கு ஈட்டுத் தொகையும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களுக்கு ஊதியமும்   அதிகரிக்கப்பட்டன. வேறுபிற கருத்தடை முறைகளோடு ஒப்பிடும்போது அறுவைச் சிகிச்சை செய்யும் எண்ணிக்கை ஏற்கெனவே நமது நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. கருத்தடை அறுவைச் சிகிச்சைக்காகப் பெண்களைத் திரட்டுமாறு அங்கீகரிக் கப்பட்ட சமூக சுகாதார ஊழியர்களை (ஆஷா)  நிர்ப்பந்திக்கும்போது, அதன் பொருள் இதுதான்: இம்மாநிலங்களில் பாதுகாப்பான கருத்தடைமுறைகள் குறித்த ஆலோசனைகளும் தகவல்களும் குறைவான அளவிலேயே வழங்கப்படும்.”

அழிந்துவிடும் நிலையில் உள்ள பைகா பழங்குடி இனத்தவருக்கு கருத்தடை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வினத்துப் பெண்ணுக்கு தடையை மீறி  அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மாண்டுபோனதைப் பற்றிக் கேட்டதற்கு, அவள் ஒப்புதலோடுதான் செய்ததாக மந்திரி சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது, அப்பெண்ணுக்கு என்ன, எப்படிப்பட்ட ஆலோசனைகளும் தகவல்களும் வழங்கப்பட்டிருக்கும் என்பது!

இந்து ஏடு தரும் செய்தியிலிருந்தே தெரிகிறது: இத்தனை நாட்களில் இத்தனை பேரைக் கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்தது என்பது கற்பனையோ அல்லது மிகையான குற்றச்சாட்டோ அல்ல, ஆதாரபூர்வமான உண்மைதான்!

பீகார் சிறப்பு முகாம் கோரக்காட்சி
பீகார் மாநிலத்தின் நேபாள எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் 2003-ல் நடந்த கருத்தடை சிறப்பு முகாமின் கோரக் காட்சி (கோப்புப் படம்)

‘உயர் கவனத்துக்குரிய பதினோரு மாநிலங்களில்’ ஒன்று தமிழ்நாடு என்பது மட்டுமல்ல, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் மாண்டுபோவதில் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடுதான். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளிலும், பாலியல் குற்றங்களிலும் கூட  முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடு தான். கடந்த ஒரு மாதத்தில் 27 குழந்தைகளைப் பலிகொடுத்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளங் குழந்தைகள் மூச்சுத்திணறி மாண்டு போவதில் மேற்கு வங்கத்தை விஞ்சி முதலிடத்துக்குப் பாய்வதும் தமிழ்நாடுதான்.

40 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா நிறைவேற்றிய  உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சியால் அமெரிக்கப் பாதுகாப்புக்கும் எல்லை தாண்டிய நலன்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள்” என்ற தேசியப் பாதுகாப்பு ஆய்வறிக்கை (NSSM 200) பின்வரும் செய்தியைச் சொல்லுகிறது. “அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சியடையாத நாடுகளின் கனிம வளங்கள் அதிகரித்த அளவில் தேவைப்படும். இந்நாடுகளில் ஏற்படும் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக வளங்களையும் மூலாதாரங்களையும் அமெ ரிக்கப் பொருளாதாரம் பெறுவது தடைப்படக் கூடும். எனவே, இந்நாடுகளின்  மக்கள் தொகையைக் கட்டுக்குள்  வைத்திருப்பது அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானது” என்கிறது, அந்த அறிக்கை.

மக்கள்நலத் திட்டங்களைக் காட்டிலும் அதிகமாகக் கருத்தடைத் திட்டங்களுக்கு இந்திய அரசு செலவிட்டிருக்கிறது. ஏகாதிபத்திய மற்றும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களுக்காக  இலக்கு வைத்து நமது நாட்டுப் பெண்களின் கருப்பைகளை நச்சுக் கருவிகளைக் கொண்டு அறுக்கிறார்கள், அரசும் ஆட்சியாளர்களும்.

– பச்சையப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?

0

மனித உரிமை பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை
11ம் ஆண்டு விழா நிகழ்வுகள்

னித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மடீசியா, மீனாட்சி அரங்கத்தில் 6.12.2014 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளைச் செயலர் லயனல் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.

மனித உரிமை தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளவும், மனித உரிமைக்கான போராட்ட உணர்வைத் தூண்டும் விதமாகவும் இந்த நிகழ்வு நடந்தது.

லயனல் அந்தோணி ராஜ்
லயனல் அந்தோணி ராஜ்

“கடந்த 10 ஆண்டுகளில் மனித உரிமைப் பிரச்சனைகள் இந்தியச் சமூகச் சூழலிலும் தமிழக அரசியல், சமூக சூழலிலும் மிகக் கடுமையானதாக மாறி வருகின்றன. மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மனித உரிமைக்கான போராட்டம் முன்னை விட அத்தியாவசியமாகிறது.

சுவரொட்டி ஒட்டக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. சமீபத்தில் ம.உ.பா.மை. ஒட்டிய சுவரொட்டிக்காக வழக்குப் போட்டுள்ளதாக போலீசு தெரிவித்தது. அ.தி.மு.க.வினர், சாதி அமைப்புகள், மத அமைப்புகள், சினிமாக்காரர்கள் என்று பலதரப்பினரும் சுவரொட்டி ஒட்டுகின்றனர், ஆனால் போலீசு அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ‘சுவரொட்டி ஒட்டுவதற்கு முதலில் காவல் உதவி ஆணையர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாநகராட்சியிடம் அனுமதி பெற்று மீண்டும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றுத் தான் சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும்’ என்கிறார்கள். பொதுக் கூட்டங்களுக்கு நீதிமன்றத்திலே அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ம.உ.பா. மையம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. ஜெயா மீதான தண்டனையை வரவேற்றும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல் கொள்ளை, கல்வி தனியார் மயம், மதுரைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் என பல பிரச்சனைகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்திருக்கிறோம்.

தொடக்கத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் பலரும் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதில் உறுப்பினராக இருப்பது பயன்படும் எனக் கருதுகிறார்கள். இது உறுப்பினர்களைப் பாதுகாக்கும் அமைப்பு அல்ல, மக்களுக்காகப் போராடி வருகிற அமைப்பு. சட்டபூர்வமாகவும், சட்டத்திற்கு வெளியேயும் போராடும் அமைப்பு. போராடத் தயாராக இருப்பவர்கள் இதிலே உறுப்பினராகச் சேருங்கள்”

என அறைகூவி லயனல் அந்தோணி ராஜ் உரையாற்றினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு விவகாரம் பற்றி மக்கள் கலை இலக்கிய கழக மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன்.

தோழர் மருதையன்
தோழர் மருதையன்

அவரது சிறப்புரையிலிருந்து சில கருத்துக்கள்….

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்குப் பிரச்சனை இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஆனால் தமிழக அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற பிரச்சனை. 2006-ம் ஆண்டு தி.மு.க அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி கோயில் பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். அர்ச்சகராகப் பயிற்சி பெற்ற, தகுதி உள்ள மாணவர்களுக்குப் பணி வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளார்கள். இதனால் தகுதி பெற்ற அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.

இந்தப் பிரச்சனை இப்போது உச்ச நீதிமன்றத்தில் இறுதிக் கட்ட விசாரணையை எட்டி இருக்கிறது. சில ஆண்டுகளாக போக்குக் காட்டி வந்த இந்த வழக்கு டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் முடிந்துவிடும் எனக் கருதுகிறேன். இந்த வழக்கில் மனித உரிமை பாதுகாப்பு மையம், அர்ச்சக மாணவர்கள் சார்பில் ஒரு தரப்பினராக இணைந்துள்ளது. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கோரிக்கையை முன் வைத்த பெரியாரின் தற்போதைய வாரிசுகள் இதில் தலையிடவில்லை. தி.க. தலையிடவில்லை. தி.மு.க. தலையிடவில்லை. மாணவர்கள் தற்போது அனாதையைப் போல் கேட்பாரில்லாதவர்களாக இருக்கிறார்கள். திராவிட வாரிசுகள், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இதை செய்வதற்குத் துப்பில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு மிகுந்த செலவு ஆகிறது. வழக்கறிஞர்களுக்கு மிகுந்த அளவு பணம் தரவேண்டும். நடிகர்கள் கால்சீட் போல் வழக்குக்கு ஆஜராவதற்கு வழக்கறிஞர்கள் பணம் கேட்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது உடனே பணத்தைத் திரட்டிக் கொண்டு ஓட வேண்டும். திட்டமிட்ட முறையில் கூட உச்சநீதிமன்றம் செயல்படுவதில்லை. கீழமை நீதிமன்றத்தைவிட தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகிறது உச்ச நீதிமன்றம். இதுவரை இவ்வழக்கில் 20 தடவை வாய்தா வாங்கி யிருக்கிறார்கள். ஆனால் தற்போது தமிழக அரசு நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக் கொள்கிறோம் என்று பேசிவருகிறது. அதன் அர்த்தம் ஆகம விதிப்படி உள்ள கோயில்களைத் தவிர அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிற கோயில்களில் பணி நியமனம் என்கிறார்கள். அர்ச்சக மாணவர்களைச் சங்கத்தை விட்டு விலகிவிடுமாறு மிரட்டினார்கள். அவர்களையும் நாம் தொடர்ச்சியாகப் பாதுகாக்க வேண்டியதிருந்தது.

சமீபத்தில் வீரமணி கருவறை நுழைவுப் போராட்டம் அறிவித்தார். ஆனால் போராட்டம் நடைபெறவில்லை. இந்த வழக்கில் இவர்கள் அனைவரும் கள்ள மவுனம் சாதித்து வருகிறார்கள். தங்கள் சொத்துக்களை, அரசியலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்கிறார்கள். இதை மக்கள் கண்டித்துப் போராட முன்வர வேண்டும்.

பெரியார் 1972-ல் கருவறைப் போராட்டம் அறிவித்தார். அதன் பின் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார். ஆகம விதிப்படி தகுதியுள்ளவர்கள் அர்ச்சகராவதற்குப் பதில் வாரிசு அடிப்படையில் 70% அர்ச்சகராக உள்ளனர். இதைக் கண்டித்து அரசு நீதிமன்றத்திற்குப் போயிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

தில்லைக் கோயிலை அறநிலையத்துறை எடுக்க உத்தரவு வாங்கிக் கொடுத்தோம். இது 2009-ம் ஆண்டு வழக்கு. பார்ப்பன நீதிபதியிடம் விசாரணைக்கு வந்தது. இந்த நீதிபதி தான் சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடைவிதித்தவர். ஜெயாவுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர். தில்லை வழக்கில் எங்களால் முடிந்த வரை போராடிப் பார்த்தோம். கட்டபஞ்சாயத்துப் போல சொத்து தீட்சிதர்களுக்குப் போனது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கில் தமிழக அரசு எதிரிகளுக்குத் துணை போகிறது. இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக நாம் போராடுவதற்குக் காரணம் தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு மரபு உள்ளது. அந்த மரபின் தொடர்ச்சியாகத் தான் நாம் இதை எதிர்த்துப் போராடி வருகிறோம். இந்த மரபைத் தான் ஒழித்துவிடத் துடிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல்.

தற்போது தருண் விஜய்க்குத் தமிழ் மீது திடீர்க் காதல். நடிக்கிறார்கள். திருவள்ளுவரைப் பிரபலப்படுத்துவது, தமிழ் பற்றிப் பேசுவது. இதெல்லாம் செய்கிறார். ஆனால் தருண் விஜய் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார். சமஸ்கிருதத்தை ஏற்க மறுப்பவர்களைத் தேச விரோதிகள் என்றார்.

சமீபத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தி வருகிறார்கள். ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கிறார்கள். ராஜராஜன் தான் பார்ப்பனர்களைக் கொண்டு வந்து குடியமர்த்தி பார்ப்பனியம் தழைத்தோங்க வழி வகுத்தான். பெரியார் சிலையை உடைத்தது போன்ற பல தருணங்களிலும் நாம் போராடி வந்திருக்கிறோம். பெரியார் சிலையை உடைத்த போது இராமனை செருப்பால் அடித்தோம்.

சமீபத்தில் பா.ஜ.க மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதி ராமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் முறைகேடாகப் பிறந்தவர்கள் என்றார். நாம் கேட்க வேண்டும் ராமன் யார்? அவன் அப்பன் யார் என.

பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்கப் போகிறோமா? அல்லது சரணடையவா? அனைத்து சாதியினரும் அர்ச்சகர் வழக்கில், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம். வழக்கிற்கு வக்கீல் வைத்தால் போதும். எங்களுக்கு நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் போராடாமல் தோற்கக்கூடாது என்பதால் போராடி வருகிறோம்.”

தாதுமணல் கொள்ளை” ஆவணப்படம் வெளியிடுவதற்கு முன்பாக அதைக் காட்சிப் பதிவு செய்த போது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி ம.உ.பா. மையத்தின் மாவட்டத் துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசியதாவது,

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

“கிரானைட் கொள்ளையைப் போல் தாது மணல் கொள்ளை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அறிக்கை தருகிறார். உடனே உண்மையறியும் குழு அமைத்து விசாரணைக்குச் செல்கிறோம். கடற்கரைப் பகுதி முழுக்க அழிவு. வைகுண்டராசன் ஆட்கள் எங்களைப் பின்தொடர்வது, மிரட்டுவது தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருந்தது.

பெரியதாழையில் வைகுண்டராசனின் சகோதரர் சுகுமாரன் கடல் நீரைத் திருடி, கடலை ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அங்கே இருந்த தூண்டில் வளைவுப் பாலத்தை அழித்துவிட்டார். தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்தினோம். அதில் வந்து ரவுடித்தனம் செய்து கூட்டத்தைக் கலைக்கப் பார்த்தார்கள். எஸ்.பி, டி.ஐ.ஜியிடம் பேசினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நமது தோழர்கள் கம்பு, தடி என களத்தில் இறங்கிய பின் தான் போலீசு வந்து அவர்களை அப்புறப்படுத்தியது.

சமீபத்தில் வைகுண்டராசன் மீது சி.பி.ஐ. லஞ்ச வழக்கு போட்டுள்ளது. அதற்காகத் தூத்துக்குடியில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த பிரச்சனையில் நாம் தலையிட்டதிலிருந்து விலகிக்கொள்ள எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஒருவர் பிரச்சாரத்தின் போது ரூ 25,000/- நன்கொடை தந்தார். அவர் நோக்கம் சந்தேகத்திற்கு உரியதாக இருந்ததால் அதை திருப்பித் தந்தோம். பணம் தருவது அல்லது போலீசு, ரவுடிகளை வைத்து மிரட்டுவது என்று செயல்படுகிறார் வைகுண்டராசன். அவருடைய உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படாத, பணத்திற்கு மசியாத ஆட்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் கடைசி வரையில் செயல்படுவோம்.”

தாது மணல் கொள்ளை” ஆவணப்படத்தை தோழர் மருதையன் வெளியிட, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலர் திருநாவுக்கரசு அவர்கள் பெற்றுக் கொண்டார்.

“தாது மணல் கொள்ளை” ஆவணப்பட வெளியீடு
“தாது மணல் கொள்ளை” ஆவணப்பட வெளியீடு

தாதுமணல் – கிரானைட் – ஆற்றுமணல் கொள்ளை : சகாயம் குழு விசாரணையை முடக்கும் அரசு! தீர்வு என்ன?” என்ற தலைப்பில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேசியதாவது,

“கொசு கடித்தால் அனிச்சைச் செயலாக அதை அடிக்கிறோம். அதுபோலத்தான் நமது பிரச்சனைகளுக்கு உடனே எதிர்வினை ஆற்ற வேண்டும். நம்மைப் பாதிக்கின்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக நாம் ஏன் போராடவில்லை. அதற்குத் தான் இந்தக் கூட்டம். ஒருவர் பிச்சை எடுக்கிறார் என்றால், ஒரு பிரச்சனைக்குப் போலீஸ் வழக்குப் பதியவில்லை என்றால், ஒரு பெண் தீக்குளிக்க முயன்றால் நாம் ஏன் என்று கேட்க வேண்டும்.

தோழர் சி ராஜூ
தோழர் சி ராஜூ

சகாயம் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். 23 ஆண்டுகள் சர்வீஸில் 22 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். நாங்கள் அவரை நாமக்கல் கலெக்டராக இருந்த போது சந்தித்திருக்கிறோம். ஒரு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் 7 பேர் இறந்து போனார்கள். உடனே நாங்கள் ‘தேர்தலுக்குத் தேவையற்ற பிணங்கள்’ என்று சுவரொட்டி ஒட்டினோம். கலெக்டர் சகாயத்தை சந்தித்து பீகார் தொழிலாளர்கள் பிணங்களை அவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உத்தரவு பெற்றுத் தந்தோம். ஆனால் இயற்கை வளக் கொள்ளையில் சகாயம் என்ன செய்ய முடியும்?

ஒவ்வொரு ஊழலிலும் நாம் அதன் மதிப்பைச் சொல்ல முடியும். ஆனால் வைகுண்டராசன் கொள்ளை எவ்வளவு, அதன் மதிப்பு எவ்வளவு எனச் சொல்ல முடியாது. இதைச் சொல்லத்தான் சகாயம். ஆனால், இதைச் சொல்லவிடக் கூடாது என நினைக்கிறார்கள். அதனால்தான் தடைபோடுகிறார்கள்.

உமாசங்கர் ஐ.ஏ.எஸ். எல்காட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த போது சில மின்னணுப் பொருட்கள் வாங்குகிறார். ஆனால் அதில் ராஜாத்தி அம்மாள் தலையிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அதை உமாசங்கர் புறக்கணித்தார். மாறன் சகோதர்களை என்.எஸ்.ஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார். எவ்வளவு கொள்ளை, திருட்டு, யார் உடந்தை என வாக்கு மூலம் தாக்கல் செய்தார். அதன் விபரங்களை ம.உ.பா.மையம் வாங்கி வழக்குப் போட்டோம்.

சகாயமும் எந்த உண்மையையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக மதுரையோடு நிறுத்துகிறார்கள். ஆற்று மணல், தாது மணல் கொள்ளைகளை விசாரிக்க விடாமல் முடக்குகிறார்கள். ஒருவேளை சகாயம் கொள்ளைகள் குறித்து நடவடிக்கைக்குப் பரிந்துரை கொடுப்பார். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ககன்தீப்சிங் பேடி அறிக்கையைத் தந்தார். அரசு வெளியிடவில்லை. நீதிமன்றத்திற்குச் சென்றால் மதுரையில் வெளியிட நீதிமன்றம் உத்திரவிட்டது. சென்னை நீதிமன்றம் வேண்டாம் என்றது.

சகாயம் குழு விசாரணை செய்ய வேண்டும் என்று டிராபிக் ராமசாமி ஒரு வழக்குத் தொடுத்தார். அதன் அடிப்படையில் விசாரிக்க குழு நியமித்தது நீதிமன்றம். ஆனால் தமிழக அரசு அதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றது. ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. மீண்டும் மேல் முறையீடு செய்தார்கள். ஆனால் ரூ 10,000/- அபராதம் போட்டது உயர் நீதிமன்றம். சகாயம் மதுரைக்கு வருவதற்கு ரயிலில் இடம் கூட ஏற்பாடு செய்து தரவில்லை தமிழக அரசு. சென்னையிலிருந்து காரில் வந்துள்ளார். நீதிமன்றத்தில், தான் எந்த மாவட்டத்தில் எந்தப் பிரச்னையைப் பற்றி விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மதுரையை மட்டும் பார்த்தால் போதும் என்று இப்போது சொல்லிவிட்டது உயர் நீதிமன்றம்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆண்டு விழாஆற்று மணலை பொதுப்பணித்துறை மட்டும் தான் அள்ளுகிறது என்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முழுக்க முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பினாமிகள் தான் அள்ளுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இவற்றையெல்லாம் இயற்கை வளக் கொள்ளைகள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் போலீஸையும் கூட்டிக் கொண்டே திருட வருவது போலத்தான், சுற்றுச் சூழல் ஆணையம், அனைத்து அரசு அதிகாரிகள், காவல் துறை ஆகியவர்களின் துணையோடு தான் கொள்ளை நடக்கிறது. கல்வி விசயத்தில் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக சிங்காரவேலர் கமிட்டி செயல்படுகிறது.

ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கிறார்கள். அதற்குச் சுற்றுசூழல் துறை அனுமதி அளிக்கிறது. மேலும் எதிர்த்தால் பசுமைத் தீர்ப்பாயம் போங்கள் என்கிறார்கள். அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவர் மணல் கொள்ளையின் கூட்டாளியாக இருப்பார். அங்கே வழக்கைப் பதிந்து விட்டு வழக்குப் போட்டவர் காசை வாங்கிக் கொண்டு கழண்டு கொள்கிறார். வக்கீல் தனியாக வாதாடிக் கொண்டிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை எத்தனையோ பேரை வாழ வைத்திருக்கிறது. ராஜாவிலிருந்து அதைப்பற்றி எழுதிய ஊடகங்கள் வரை நீதிமன்றம், அரசு, அதிகாரவர்க்கம் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. சகாயம் இன்று செய்யவேண்டியது இதுதான். விசாரணையை முடக்க நினைக்கும் அனைவரையும் அம்பலப்படுத்துவதுதான். அவர்களைத் தண்டிக்க நாங்கள் போராடுகிறோம் என அவரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆற்று மணல் கடத்தலில் கூட ‘லஞ்சம் வாங்கியவர்களைக் கைது செய்’ என எங்கள் பகுதியில் சுவரொட்டியைத்தான் முதலில் ஒட்டினோம். மணல் கொள்ளை விசயத்தில் மக்கள் போராட வருகிறார்கள். சிறுவர்கள் கூட கூரையை எரித்து துணிச்சலோடு போராடினார்கள். அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்சியைத் தாண்டி போராட்டத்திற்கு வந்தார்கள். நாம் போராடாமல் இருப்பதற்கு எவ்வளவு விலை வேண்டும் என்கிறார்கள். அதற்கு ஒரே விலை தான் உள்ளது. அது மக்கள் விடுதலை மட்டும் தான். நாங்கள் புரட்சிகர பாரம்பரியம் உள்ள அரசியலால் வழி நடத்தப்படுகிறோம். அது தான் அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்களைத் தொடர்ந்து அச்சுறுத்துவோம்”

எனக் கூறி முடித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கு : தண்டனை ஜெயலலிதாவுக்கா? தமிழ்ச் சமுதாயத்துக்கா? என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் உரையாற்றினார். (அந்த உரையின் சுருக்கத்தை தனிப் பதிவாக வெளியிடுகிறோம்).

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆண்டு விழா

தோழர் மருதையன் உரைக்குப் பின்னர் மையம் வீதி நாடக இயக்கத்தின் சார்பில் ‘கௌரவக் கொலை’ நாடகம் நிகழ்த்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இறுதியாக வாஞ்சிநாதன் நன்றி தெரிவிக்க கூட்டம் நிறைவடைந்தது.

கூட்டத்திற்குப் பெருந்திரளாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள், விவசாயிகள், பட்டறைத் தொழிலாளர்கள், தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அரங்குக்கு வெளியே திரையில் நிகழ்ச்சிகள் திரையிடப்பட்டது. அங்கும் நூற்றுக் கணக்கில் மக்கள் இறுதிவரை இருந்து கூட்டத்தைச் சிறப்பித்துப் புதிய புரிதலுடன் சென்றனர்.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை மாவட்டக் கிளை

பேச : 94434 71003, 98653 48163

மணல் கொள்ளையரை முறியடித்த மக்கள் – வீடியோ

2

தகவல், வீடியோ
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்

மணல் கொள்ளை : பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – முற்றுகை அறிவிப்பு

1

வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்
94432 60164

மற்றும்

திரு எம் ஜி பி பஞ்சமூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம்,
மருங்கூர்.

பத்திரிகைச் செய்தி

அன்புடையீர் வணக்கம்,

15-12-14 திங்கள் அன்று விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சியில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தை ஒத்திவைத்து உள்ளோம். கூட்டம் நடக்கும் தேதியை பின்னர் அறிவிக்கிறோம்.

கடந்த 2-12-14 அன்று மணல் குவாரியால் பாதிக்கப்பட்ட வெள்ளாற்றுப்பகுதி மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் நடத்திய முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மாவட்ட நிர்வாகம் மணல் குவாரியை தற்காலிகமாக மூடி உத்திரவிட்டது. மேலும் மணல் கொள்ளை குறித்தும் விதி முறை மீறல் குறித்தும் விசாரணைக்கும் உத்தரவிட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி எந்தவிதமான அதிகாரிகள் விசாரணையும் இன்றி மணல் குவாரியை துவக்கி லாரிகள் வழக்கம் போல் கொள்ளையை தொடர்கின்றன. கிராம முக்கியஸ்தர்களும் நமது வழக்கறிஞர்களும் என 20-க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டனர்.

“எந்த விதிமுறையும் மீறப்படவில்லை என அறிக்கை கொடுத்துள்ளனர். மணல் எடுக்கவில்லை என்றால் வளர்ச்சி தடைப்படுமே” என பதிலுரைத்தார்.

கிராமத்தினர், “எந்த மக்களின் வளர்ச்சிக்கு ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு விவசாயத்தை அழிக்கிறார்கள்” எனக் கேட்டனர். “உங்கள் விசாரணைக் குழுவில் உள்ள தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிரதி மாதம் மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கி வருகிறார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பகமான அதிகாரியுடன் வாருங்கள், நாங்களும் வருகிறோம். ஆய்வு செய்யுங்கள்” எனக் கேட்டா்கள்.

ஆர்.டி.ஓ., “டாக்டர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக நான் வைத்தியம் பார்க்க முடியுமா? அரசின் கட்டமைப்பு அப்படித்தான் உள்ளது” என தனது இயலாமையை தெரிவித்தார்.

“நீங்கள் இளம் வயதினராக புதியதாக வந்துள்ளீர்கள், சகாயம் போல் செயல்படுங்கள்” எனச் சொன்னதோடு, “சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் நீங்கள்தான் பொறுப்பு, நாங்கள் மீண்டும் போராடுவோம்,  தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம்” என எச்சரித்து மக்கள் திரும்பி சென்றனர்.

12-12-14 அன்று மாலை சி.கீரனூரில் கிராம முன்னணியாளர் கூட்டம் நடந்தது.

அதில், பொதுக்கூட்டத்தை பிறகு நடத்தலாம். முதலில் மணல் குவாரியை தடுத்து நிறுத்த அதிக மக்களை திரட்டி மீண்டும் முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் எனத் தொடங்கப்பட்டு மருங்கூரை சேர்ந்த எம்.ஜி.பி. பஞ்சமூர்த்தி அதன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த 11 உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.

மனித உரிமை பாது காப்பு மையமும், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும் இணைந்து தொடர்ந்து போராட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

manal-kuvari-mutrukai-noticeகோரிக்கைகள்

  • கார்மாங்குடி மணல் குவாரியில் அரசாங்க கணக்கில் வராமல் ரூ 100 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.
  • கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி சாலையில் மக்கள் நடமாட முடியாது என்ற நிலையில், அதிகாரிகள் கள்ள மவுனம் சாதிப்பது வன்மையாக கண்டிக்கிறோம். அதனை, உடனே சரிசெய்ய வேண்டும்.
  • ஆற்று மணலை வியாபாரப் பண்டமாக்கி தனியார் கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது. சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் வெள்ளாறு மட்டுமே, லட்சக்கணக்கான ஏகக்ர் நிலங்களின் பாசனம் வெள்ளாற்றை நம்பியே நடக்கிறது. எனவே கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.

manal-kuvari-mutrukai15-12-14 அன்று காலை 10.00 மணியளவில் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி நடைபெறும் எங்கள் போராட்டத்திற்கு அனைத்து பிரிவு மக்களும் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படிக்கு
வழக்கறிஞர் சி.ராஜு

தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்

174

சென்னை ஒரகடம் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டி துப்பப்படும் இடம்.

ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊரில் வாழ்வாதாரங்களை தொலைத்த உழைக்கும் மக்கள் இங்கு வந்து சேர்கின்றனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்.

நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை முன்பு வந்த தொழிலாளர்கள் 4 பேரை நிறுத்தி பேசினோம்.

டாஸ்மாக் கடை
நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை
கொல்கத்தா தொழிலாளர்கள்
“கொல்கத்தா சணல் தொழிற்சாலையிலிருந்து சென்னைக்கு பிய்த்து எறியப்பட்டோம்”

அவர்கள் கொல்கத்தா ஜூட் (சணல்) ஆலையில் வேலை பார்த்தவர்கள். ஆலை மூடப்பட்ட பிறகு தெரிந்தவர் மூலம் இங்கு வந்திருக்கிறார்கள். அப்பல்லோ தொழிற்சாலையில் துப்புரவு பணி செய்கிறார்கள். மாதம் 9,900 ரூபாய் சம்பளம். அதில் 7,000 ரூபாய் ஊரிலுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். 5,000 ரூபாய் வாடகைக்கு எடுத்த வீட்டில் 11 பேர் தங்கியிருக்கின்றனர்.

தமிழர் அல்லாதவரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதைப் பற்றிக் கேட்டதும், “அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்” என்றார்கள்.

“பொழுதுபோக்காக தொலைக்காட்சி இல்லை, ஆனால் மொபைலில் படம் பார்ப்போம்” என்றார்கள். மொழி புரியாத மண்ணிலும் அவர்களது ஓட்டை செல்பேசி மூலம் திரைப்படங்களை பார்க்கும் வசதியை தொழில் நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க தொழிலாளர்
“அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்”

6 மாதத்துக்குப் பிறகு ஊருக்குப் போய் விட்டு திரும்பி வருவார்களாம். வேலையில் நிற்கச் சொல்லும் வரை வேலை செய்வார்களாம். அடுத்த வேலை என்ன, எங்கே போக வேண்டும் என்ற கவலையெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. எப்படியாவது பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் சலிப்புடனாவது இருந்தது.

எதிரில் லாட்ஜ் அல்லது மேன்சன் போலத் தெரிந்த கட்டிடத்துக்குள் போனோம். நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு போல தென்பட்டது அந்த கட்டிடம். ஒரு அறைக்குள் நுழைந்தோம். கொஞ்சம் நடுத்தர வயதான 2 பேர் ஸ்டவ்வில் குழம்பு வைக்க தாளித்துக் கொண்டிருந்தார்கள். அறை முழுவதும் கமறலாக இருந்தது. இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் என்று சொல்லக் கூடிய 3 பேர் மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள். 2 பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தொழிலாளர் தங்குமிடம்
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தங்கியிருக்கும் தேன்கூடு

உத்தர பிரதேசத்தில் வாரணாசியிலிருந்து வந்தவர்கள் நிசான் நிறுவன கேன்டீனில் சமைக்கும் வேலை செய்கிறார்கள். சோடக்சோ என்ற நிறுவனம் இந்தப் பணிக்கு ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது. காலையில் 7 மணிக்கு புறப்பட்டு போனால், இரவுதான் திரும்புவார்களாம். ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

தேன்கூட்டு சிறை சமையல்
ஞாயிற்றுக் கிழமை மட்டும் தேன்கூட்டு சிறையில் சமையல்

“மாசம் 5,000 ரூபாய் தர்றாங்க, இங்க இந்த இடத்தில (10க்கு 15 அடி) 14 பேருக்கு தங்க இடம் கொடுத்திருக்காங்க. படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல பாருங்க” என்றார் ஒருவர்.

வாரணாசி தொழிலாளர்
“படுக்க ஒழுங்கான போர்வை கூட இல்ல”

தமிழினவாதிகள் பிற மாநில தொழிலாளர்களை எதிர்ப்பது பற்றிக் கேட்டதும் “போகவா சொல்றாங்க? நாங்க நாளைக்கே கிளம்பிர்றோம். வேலை செய்ற எங்களுக்கு எங்க போனாலும் பொழைப்பு உண்டு. ஆனா, இங்க உள்ளவங்கல்லாம் பட்டினி கெடக்க வேண்டியதுதான். எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான். நாங்க போயிட்டா அவன் என்ன செய்வான்.”

அப்போது குண்டாக ஒருவர் உள்ளே வந்தார். அவர்தான் இந்த கட்டிடத்துக்கு மேனேஜர். சோடக்சோவில் மேனேஜராக இருக்கிறார்.

உழைக்கும் கைகள்
“எங்க மேனேஜர் 60,000 ரூபா சம்பளம் வாங்குறாண்ணா நாங்கள்ளாம் அவனுக்கு வேல செய்றதாலதான் வாங்குறான்”

“நீங்க இப்படில்லாம் வந்து பேசக் கூடாது. கம்பெனில பெர்மிசன் வாங்கிகிட்டுதான் பேசணும்” என்றார். மும்பையில் பல ஆண்டுகள் வேலை செய்த இவருக்கு இந்தி நன்கு தெரியும்.

“நான் ஒரு தமிழன்ங்க, தமிழனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, இவங்க இல்லைன்னா நமக்கு வேலை நடக்காது. நம்ம ஆளுங்க இந்த மாதிரி வேலை செய்ய கிடைக்க மாட்டாங்க” என்றார். “தமிழ் ஆளுங்களை எடுக்க மாட்டேன்னா சொல்றோம். அவங்க யாரும் வேல கேட்டு வர்றதில்ல. போன வாரம் கூட பேப்பர்ல விளம்பரம் போட்டோம். யாரும் வரவில்லை. இவங்கதான் வர்றாங்க, அதான் எடுக்கிறோம்.” என்றார்.

“சோடெக்சோ நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தது. சென்னையில் மட்டும் 40,000 பேர் வேலை செய்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களுக்கு ஹாஸ்பிடாலிட்டி (அலுவலக பராமரிப்பு) சேவைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது” என்றார்.

இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கான்டீன் காண்டிராக்ட் எடுக்கக் கூட சோடக்சோ என்ற பன்னாட்டு நிறுவனம் வந்து விட்டது. இந்நிறுவனத்தில் சென்னையில 40,000 பேர் வேலை செய்கிறார்கள். நிசானில் மட்டும் 500 பேர் என்று கூறினார். மலிவான விலைக்கு மனிதர்கள் எங்கே கிடைப்பார்கள் என்ற விவரங்கள், ஆவணங்கள், தொடர்புகள், எல்லாவற்றிலும் பன்னாட்டு நிறுவனங்கள் கச்சிதம். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம், எங்கே தங்க வைப்பது, அதற்கு உள்ளூர் தரகர்கள் என்று விரிந்திருக்கிறது இந்த வலைப்பின்னல். அதில் சிக்கிக் கொண்டு உழைப்பே வாழ்க்கை என ஓடுகிறார்கள் இந்த தொழிலாளிகள்.

ஆஸ்பெஸ்டாஸ் தங்குமிடங்கள்
தனி வீட்டு லட்சணம்

“இவர்கள் குடும்பத்தினருடன் இங்கே வீடெடுத்து வாழ முடியுமா” என்று அந்த மேனேஜரைக் கேட்டால் அது அவர்களது சொந்த பொறுப்பில் செய்யலாம் என்றார். அதுவும் கணவன், மனைவி இருவரும் அருகருகே வேலை செய்ய வேண்டும்.

இந்தக் கட்டிடத்துக்கு எதிரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட வீடுகளுக்கு வெளியே சில இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ 200 சம்பளம்.

“பொழுதுபோக்கெல்லாம் கிடையாது. வேலை முடிஞ்சு வந்து எல்லாரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்போம், அப்புறம் படுத்து தூங்கி விடுவோம்” என்கிறார்கள். ஒரு டிவி பெட்டி அல்லது சினிமா பார்க்கும் வசதி கூட கிடையாது.

“மகாராஷ்டிராவில் ஏன சாதிக் கொடுமைகள் அதிகமாக இருக்கிறது” என்றால்,

மகாராஷ்டிரா தொழிலாளர்கள்
நிசான் கார் தொழிற்சாலையில் கான்கிரீட் தொட்டி கழுவும் வேலை

“நாங்க எல்லாம் பாபா சாஹிப் அம்பேத்காரின் பிள்ளைகள்” என்றார் ஒருவர். அவர்களில் ஒரு சிலர் தெலுங்கு பேசுபவர்கள், ஒரு சிலர் மராத்தி மொழி பேசுபவர்கள். சாப்பாடு சமைத்துக் கொள்கிறார்கள். மொத்தமாக மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து சமைப்பதற்கு என்று 4 பெண்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

ஒரு அறை/வீட்டில் இருந்த லாரி ஓட்டுனர்களிடம், “தமிழ்நாட்டுக்குள் அன்னியர்கள் வரக்கூடாது” என்ற முழக்கத்தைப் பற்றிக் கேட்டதும்,

வடஇந்திய தொழிலாளர்கள்
“நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”

“பஞ்சாப்ல எத்தனை தமிழன் இருக்கிறான், அவங்களை எல்லாம் திருப்பி கூப்பிட்டுக்கலாமா?” என்றார் ஒருவர்.

“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். வேலை செஞ்சு பொழைக்கத்தானே போறாங்க. அது போல பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?” என்று ஒரே போடாக போட்டார் இன்னொருவர்.

தமிழினவாதிகளை விட வட இந்தியத் தொழிலாளிகள் முற்போக்கானவர்கள்தான். என்ன இருந்தாலும் தொழிலாளிகள் அல்லவா!

வட இந்தியத் தொழிலாளிகளுக்காக நடக்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு.

ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு
ஞாயிற்றுக் கிழமை சந்தை தெரு

செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை செய்பவர் இடைவெளியில்லாமல் வேலையில் மூழ்கியிருந்தார். அடுத்தடுத்து யாராவது வந்து கொண்டிருந்தனர்.

“வட நாட்டுக் காரங்களுக்காகத்தான் நாங்க ஞாயிற்றுக் கிழமை கடையை தொறந்து வெச்சிருக்ககோம். 10 ரூபா, 20 ரூபான்னு அவங்க வசதிக்கேற்ப போடுவாங்க. சம்பளம் வந்த ஒரு வாரத்துக்கு கொஞ்சம் அதிகமா ரீசார்ஜ் பண்ணுவாங்க” என்றார்.

“இவங்க வந்ததால நமக்கு வேலை வாய்ப்புகள் இல்லாம போனது உண்மைதான். ஆனா இவங்க கிட்டதான குறைஞ்ச சம்பளம் கொடுத்து நிறைய வேலை வாங்க முடியும். சாப்பாடு போட்டு கொஞ்சம் பணமும் கையில கொடுத்திட்டா போதும். நம்ம ஆளுங்க அப்படி வேலை செய்ய மாட்டாங்க” என்றார்.

குறைந்த சம்பளத்தில் வேலை
“இவங்க கிட்டதான கொறைஞ்ச சம்பளம் கொடுத்து வேலை வாங்க முடியும்”

ஒரு ரெடிமேட் துணிகள் கடையில் விற்பனையாளராக 3 பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

“வடமாநிலத் தொழிலாளர்கள் வருவாங்க. நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம். உடனே எல்லாம் வாங்க மாட்டாங்க. நிறைய கேள்வி கேட்டு பேரம் பேசுவாங்க. அப்புறம்தான் வாங்குவாங்க. இதுவரைக்கும் எந்த தகராறும் வந்ததில்ல”

வட இந்தியத் தொழிலாளர்
“நாங்களும் 1 வருஷத்தில அவங்களோட பேசி ஹிந்தி பேச கத்துக்கிட்டோம்.”

“அவங்கள எப்படி சார் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும். நம்ம ஆளுங்க எவ்வளவு பேரு மத்த இடத்துக்கு போய் வேலை செய்றாங்க, வெளிநாடுகளுக்குப் போய் வேலை செய்றாங்க. அவங்களை எல்லாம் துரத்திட்டா ஒத்துப்போமா. அது போலத்தான் இதுவும். அவங்களே பாவம், ஊர்ல நல்லா இருந்தவங்க, இங்க வந்து கஷ்டப்படுறாங்க. அவங்களை போய் விரட்டணும்னு ஏன் சொல்றாங்க” என்றார்கள். ஆக தமிழ் பெண்களும் கூட வட இந்திய தொழிலாளிகளை புரிந்து கொள்கிறார்கள்.

அருகிலேயே காய்கறி/சிக்கன் கடை போட்டிருந்தார் சலாம் என்பவர். “எழுதுங்க சார், நல்ல ஃபோட்டோ புடிங்க. போன வருசம் இந்த கடைகள எல்லாம் ஹைவேஸ்காரன இடிச்ச போது வந்திருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும். நிறைய கடைகள்லாம் இருந்திச்சி, பின்னால வீடுங்க இருந்திச்சி. எல்லாத்தையும் பணம் கொடுத்து இடிக்க வைச்சான் அந்த ஆளு. அவன் அதிமுக.ல இருக்கான்னு சொல்றாங்க.

காய்கறிக் கடை
“எழுதுங்க சார், நல்ல ஃபோட்டோ புடிங்க”

நிறைய ரூம் கட்டி விட்டு ஒரு ஆளுக்கு 1000 ரூபான்னு சம்பாதிக்கிறான் சார். எங்க கடைகளை இடிக்கறதுக்கு முந்தின நாள்தான் சொன்னாங்க. 1.5 லட்சம் ரூபாய் சரக்கு எல்லாம் போச்சு. பின்னால பாருங்க எத்தனை வீடுகள இடிச்சிருப்பாங்க. ஆனா, இன்னும் ரோடு போடல. எதுக்காக இடிச்சானுங்க” என்றார்.

ஒரகடம் மார்க்கெட்
பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள்.

இது போல பல்வேறு இடங்களில் ஆளும் கட்சி புரோக்கர்கள் பிழைக்க வந்த மக்களை வைத்து கல்லா கட்டுகிறார்கள். அது தனிக்கதை.

“வியாபாரமே கொறைஞ்சு போச்சு சார். ஒரு வருசத்துக்கு முன்ன நல்லா இருந்தது. இப்போ எல்லாம் திரும்பப் போய்ட்டாங்க. இந்த காண்டிராக்டருங்க ஒழுங்க பணம் கொடுக்கறது இல்லை. இவங்க சம்பாதிக்கிறதே 200 ரூபாதான். அதையும் கொடுக்காம ஏமாத்தியிருக்கானுங்க. எல்லாம் போயிட்டானுங்க.” என்றார் சலாம்.

ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர் “ஆவோ பாய், ஆவோ, ஜல்தி சலே ஜாயேங்கே, பைட்டோ” என்று இந்தியில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் இந்தத் தொழிலாளர்களை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று சொல்பவர்களைப் பற்றி கேட்டால் “அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க” என்று வண்டியை கிளப்பினார்.

வடஇந்திய தொழிலாளர்
“அவன் கெடக்குறான். ஏதோ பொழைப்புக்கு வந்திருக்காங்க, அவங்கள துரத்தி என்ன செய்யப் போறாங்க”

ஒரகடம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன். சலூன் கடை நடத்துகிறார்.

“அப்பா 40 வருசமா கடை நடத்தினார், அப்புறம் நான் நடத்துகிறேன்” என்றார்.

“நான் ஐடிஐ படிச்சேன் சார். வெல்டிங் மெக்கானிக். எம்எஃப்எல்-ல அப்ரண்டிசா 2 வருசம் வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் நம்ம தொழிலையே செய்யலாம்னு வந்துட்டேன்.” என்றார்.

வட இந்தியத் தொழிலாளர்கள்
“இந்த கம்பெனிங்க வந்ததில ஊருக்கு எந்த உபகாரமும் இல்ல, உபத்திரவம்தான் மிச்சம்”

“ஒரு சுனாமி போல வந்துச்சு சார், 2007-லேர்ந்து 4 வருசம் கொஞ்சம் வருமானம் வந்திச்சி. இப்போ பழையபடி ஆயிப் போச்சி. இந்த கம்பெனிங்க வந்ததில ஊருக்கு எந்த உபகாரமும் இல்ல, உபத்திரவம்தான் மிச்சம்”

“2 வருசமா எல்லாம் போச்சு. நோக்கிய கம்பெனி மூடினதுல 28,000 பேருக்கு வேலை போச்சி. பி.ஒய்.டி கம்பெனில லாக்-அவுட் பண்ணிட்டாங்க. இவங்களுக்கெல்லாம் வேற எந்த கம்பெனிலையும் வேலையும் கிடைக்காது.”

அஜய் போரா, ஜாது சைக்கியா இருவரும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள், இங்கு செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள்.
ரூ 91-க்கு செல் ரீசார்ஜ் செய்து கொண்டால் 2-3 படங்கள் டவுன்லோட் செய்து கொள்வார்களாம். “ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்.” என்றார்கள்.

அசாம் தொழிலாளர்கள்
“ஒருத்தரை இன்னொரு ஊருக்கு வரக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் சேர்ந்து வாழணும்

கடைத்தெரு தமிழ் வியாபாரிகள் “சஸ்தே மேம் பிக்தா ஹை, கரீத் லோ, ஆவோ பாய் ஆவோ” என்று இந்தியில் பொருட்களை வாங்க அழைப்பதும், “பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்” என்று இந்தி தொழிலாளர்கள் தமிழில் பேரம் பேசுவதும் என்று களை கட்டியிருந்தது.

பேரம் பேசும் தொழிலாளர்கள்
“பேன்ட் 30 ரூபாய்க்கு தருவீங்களா. 50 ரூபாய்க்கு குறையாதா. சரி இந்தாங்க 50 ரூபாய்”

ஆந்திராவைச் சேர்ந்த சிவா ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்கிறார். பி.ஏ/பிஎட் படித்திருக்கிறார். வெளியில் கடைகளில் விலை அதிகம், அதுவும் சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும் என்று இங்கு வாங்க வந்திருக்கிறார்.

ஆந்திர தொழிலாளர்
“சிவில் வேலைக்கு இது போன்ற உடைகள் போதும்”

தண்ணீர் புகாத வாட்ச் வாங்க இரண்டு தொழிலாளர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். “செவன்டி ரூபீ வாட்ச், ஓகே” என்று அருகில் நின்ற நம்மிடம் ஆலோசனை கேட்டார்கள். இரண்டு பேரும் ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டார்கள். “நேரத்துக்கு டூட்டிக்கு போகணுமே, அதுக்கு தேவைப்படுது” என்றார் ஒருவர். அவர் பெயர் புனிலால் சௌத்ரி. அவரது மகன் பிரபோத் சௌத்ரியும் இங்குதான் வேலை செய்கிறார்.

“எங்க ரூமுக்கு வாங்க, மொத்தம் 400 பேரு சேர்ந்து வந்திருக்கோம். எல்லாத்தையும் பார்த்து பேசுங்க” என்று அழைத்தார்கள்.

பீகார் தொழிலாளர்
“பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு இருக்கறது எந்த மனுசனுக்கும் கஷ்டமானதுதான் சார்”

“பீகார்ல படகு ஓட்டியா இருந்தேன். இப்போ ஆத்துக்கு குறுக்கே 3 பாலம் கட்டிட்டாங்க, அதனால் படகு வேல இல்ல. அப்புறம் நோய்டா, லூதியானான்னு போய்ட்டு இப்போ இங்க இருக்கேன். அப்பல்லோ கம்பெனில துப்புரவு வேலைல இருந்தேன். இப்போ பக்கத்து கம்பெனில” என்றார்.

எந்த ஊர் என்று விசாரித்ததும் “நாங்க பீகார் பாகல்பூரை சேர்ந்தவங்க” என்றார்கள்.

ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை
ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறை

பாகல்பூரில் முஸ்லீம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது குறித்து கேட்டதும் ஒருவர், “ஹிந்து முசல்மான் க்யா பாத் ஹை, ஐசா காட்கே தேகா தோ சப் கா கூன் ஏக் ஜைசா ஹீ ஹை” (இந்து, முசுலீம் எல்லாம் என்ன பேச்சு. இப்படி வெட்டி பார்த்தா எல்லா ரத்தமும் ஒரே மாதிரிதான்) என்றார்.

வயதானவர் ராமாயண கதை சொல்ல ஆரம்பித்தார். “கோயிலுக்கெல்லாம் போவீங்களா” என்று கேட்டதும்.

“இங்க கோயிலுக்கெல்லாம் எங்க சார் போறது. கம்பெனி, ரூம், தூக்கம் என்று போகிறது” என்றார்.

“வெளியூர்க்காரனுங்கன்னா எல்லாரும் ஏமாத்துறாங்க, ஒரு காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா நம்மள பார்த்ததுமே வெளியூர் காரன்னு தெரிஞ்சு, ஒரு ஊசி போட்டு 200 ரூபா வாங்குறாரு. அதுவே தமிழ்காரங்களா இருந்தா குறைச்சு வாங்குவாங்களா இருக்கும்”. மருத்துவக் கொள்ளை என்பது மொழி பேதம் பார்ப்பதில்லை என்று அவருக்கு தெரியவில்லை, பாவம்.

வடஇந்தியத் தொழிலாளர்கள்
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள்.

மாடியில் ஓலைக் கூரை வேய்ந்த ஒற்றை அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அதற்கு வாடகை மாதம் ரூ 3,000. 11 பேர் தங்கியிருக்கிறார்கள். வீட்டு சொந்தக்காரரின் சுமார் 7 வயதான குழந்தை மேலே வந்து பேசிக் கொண்டிருந்தது, இந்தியில்.
“எங்க கூட சேர்ந்து ஹிந்து கத்துக்கிச்சு” என்றார்கள்.

“கெரசின் ஒரு லிட்டருக்கு 55 ரூபாய்க்கு வாங்குறோம். அரிசி கிலோ 32 ரூபா. கீழ் வீட்டில ரேஷன் அரிசி கிலோ 11 ரூபாய்க்கு தருவாங்க. குடிக்க தண்ணீ கீழ பிடிச்சிப்போம்” என்றார்.

“தண்ணிய கொதிக்க வைச்சி குடிப்பீங்களா”

“55 ரூபாய கெரசின் வாங்கி சூடு பண்ணி எல்லாம் எப்படி குடிக்கிறது. அப்படியேதான் குடிக்கிறோம்”

வடஇந்தியத் தொழிலாளர்கள்
இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள் தமிழினவாதிகள்.

“பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு இருக்கறது எந்த மனுசனுக்கும் கஷ்டமானதுதான் சார். தீவாளி அன்னைக்கு சிலர் ஊருக்கு போனாங்க. நாங்க போக முடியல. ஒண்ணும் செய்யலை. சாப்பிட்டுட்டு படுத்து தூங்கினோம், வேற என்ன செய்ய முடியும்”.

“சமைச்சுருவோம், சாப்பிட்டு விட்டு போங்க” என்று வற்புறுத்தினார்கள், அந்த தொழிலாளிகள்.

இவர்களைத்தான் விரட்ட வேண்டுமென்கிறார்கள் தமிழினவாதிகள்.

– வினவு செய்தியாளர் குழு

இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?

5

கழுத்தை இறுக்குது லாபவெறி! தொழிலாளி வர்க்கமே கொதித்தெழு!

“முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அவர்களது நலன்களைப் பாதுகாப்பதும் அரசின் கடமையாக உள்ளது. இல்லை என்றால் முதலீட்டாளர்கள் வேறு நாடுகளுக்குப் போய் விடுவார்கள். இதனடிப்படையில் முதலாளிகளுக்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் செய்து தருவதுதான் அரசின் வேலை” என்று மோடி சொல்லி வருகிறார். இதனை ஒவ்வொரு நடவடிக்கையிலும் செய்து காட்டி வருகிறார். நவமபர் 24 முதல் நடைபெற்று வருகின்ற நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் மூலமும், பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிப்பதன் மூலமும் முதலாளிகளின் மனதைக் குளிர வைப்பதற்கு எல்லாவித தயாரிப்புகளையும் செய்து வருகிறார் “மேககப்” மோடி.

capitalism-killsமோடி அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே தொழிலாளர் நலச்சட்டங்கள் சிலவற்றில் திருத்தம் செய்வதற்கு முடிவெடுத்தது. ஓவர்டைம் செய்வதற்கான வரம்புகளை தளர்த்துவது, பெண் தொழிலாளர்கள் இரவுப்பணி செய்வதற்கு இதுவரை இருந்து வந்த பாதுகாப்பு விதிகளை ஒழித்துக் கட்டுவது. எல்லாவித வேலைகளிலும் அப்ரன்டீஸ் தொழிலாளர்களை ஈடுபடுத்தி நிரந்தரத் தொழிலாளர்களை காவுகொடுப்பது, அரசாங்கத்துக்கு சட்டப்படியாக விபரங்களை தெரிவிக்கும் கட்டாயத்திலிருந்து முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பது போன்றவற்றை அறிவித்தார் மோடி. முதலாளிகளின் லாபவெறிக்கு இது போதாது என்பதால், மேக்-இன் இந்தியா என்ற திட்டத்தையும், “உழைப்பே வெல்லும்” என்கிற பெயரில் மற்றொரு திட்டத்தையும் அடுத்தடுத்து அறிவித்தார். இவை அனைத்துமே முதலாளிகளின் அகோரப்பசிக்கு தொழிலாளி வர்க்கத்தை பலியிடக் கூடிய நாசகாரத் திட்டங்களாகும்.

மேக்-இன் இந்தியா என்கிற பெயரில் எந்த நாட்டு முதலாளிகள் இந்தியாவில் தொழில் தொடங்கினாலும் அவர்களுக்கு தேவையான வரிச்சலுகைகள், கடன் வசதிகள், சர்வதேச தரம் வாய்ந்த உள்கட்டுமான வசதிகள் போன்றவற்றை செய்து தருவதோடு தொந்தரவு இல்லாத – மலிவான தொழிலாளர்களை சப்ளை செய்வதற்கும் உறுதியளித்துள்ளார். இது போதாது என்பதால் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா போன்ற பலநாட்டு முதலாளிகளை நேரில் சந்தித்து உத்தரவாதம் அளித்து வருகிறார்.

தொந்தரவு இல்லாத, மலிவான தொழிலாளர்களை சப்ளை செய்வதற்கு வசதியாக தொழிலாளர் நலச் சட்டங்களை இன்னும் கூடுதலாக திருத்துவதற்கு கூடுதலாக உழைக்கிறார் மோடி. “உழைப்பே வெல்லும்” என்கிற பெயரில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை மிகவும் மலிவான விலையில் முதலாளிகள் உறிஞ்சிக் கொழுப்பதற்கு திட்டம் போட்டுக் கொடுத்துள்ளார்.

எங்கும், எதிலும் அப்ரண்டீஸ் தொழிலாளர்களை திணித்து, நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டும் சதித்தனத்தை ஊக்குவிக்கின்றனார். அப்ரண்டீஸ் என்றாலே குறைந்த செலவில், அதிக வேலை செய்வது என்பது உலகறிந்த உண்மை. இந்த லட்சணத்தில் அப்ரண்டீஸ் தொழிலாளர்களுக்கு தரப்படுகின்ற சம்பளத்தில் (ஸ்டைபண்டு என்கிற உதவித் தொகையில்) பாதித் தொகையை மத்திய அரசே முதலாளிகளுக்கு திருப்பித் தந்து விடுமாம். உழைக்கும் மக்கள் பயன்படுத்துகின்ற ரேசன் பொருட்களுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் மானியம் தரமுடியாது என்று திமிர்த்தனம் செய்கின்ற அரசு, முதலாளிகளுக்கு செய்கின்ற சேவைகளைக் கண்டு நெஞ்சு கொதிக்கிறது.

இதோடு முடிந்து விடவில்லை மோடியின் முதலாளித்துவ சேவை. இனிமேல் முதலாளி எவனும் அரசு அதிகாரிகளைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. லஞ்சமும் கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால், ஆலைகளைக் கண்காணிக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற தொழிற்சாலைகள் ஆய்வாளர்களது பல்லைப் பிடுங்கி விட்டார் மோடி. ஆலைப்பாதுகாப்பு ஏற்பாடுகள், தொழிலாளர் நிலைமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்றவற்றை ஆய்வு செய்வதும், தவறுகள் செய்கின்ற ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதும் இந்த ஆய்வாளர்களது அதிகாரங்கள். ஆலைகள் நடத்தவும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்தவும் லைசன்ஸ் தருவது, 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது போன்ற அதிகாரங்கள் கூட தொழிற்சாலைகள் ஆய்வாளருக்கு இருக்கின்றன. இதை எல்லாம் எந்த ஆய்வாளரும் பயன்படுத்துவதில்லை, ஆனால், தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலமாக இந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கும் சாவுமணி அடித்துள்ளது மோடி அரசு.

இனிமேல் தொழிற்சாலை ஆய்வாளர் எந்த ஆலைக்கும் போக வேண்டியதில்லை. அவருக்கு தேவையான விபரங்களை முதலாளியே முன்வந்து தெரிவித்து விடுவார். முதலாளி சொல்லுகின்ற வாக்குமூலத்தை வாங்கி வைத்துக் கொள்வதை மட்டும் ஆய்வாளர் செய்தால் போதுமானது. எப்போதாவது, ஆயிரத்தில் ஒரு கம்பெனியை குத்துமதிப்பாக தேர்ந்தெடுத்து பார்வையிடலாம். அவ்வாறு போகின்ற கம்பெனிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டுத்தான் போக வேண்டும் என்றெல்லாம் முதலாளிகளைப் பாதுகாத்து வருகிறது மோடியின் கேடி அரசு.

வாயைத் திறந்தாலே பொய்களை அள்ளி வீசுகின்ற முதலாளிகள், தங்களது கம்பெனியில் வேலை செய்கின்ற நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் போன்ற விபரங்களையும், அவர்களது உழைப்புக்கேற்ற சம்பளம் தரப்படுகிறதா என்கிற விபரத்தையும் ‘நேர்மை’யாக தானாகவே முன்வந்து அரசுக்கு தெரிவித்து விடுவார்களாம்; அவர்கள்மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கேட்கின்ற லைசன்சை ஆன்-லைன் மூலமாக தருவதோடு, அவர்களுக்கு வேண்டிய சலுகைகளையும் அரசு செய்து கொடுத்து விடுமாம். முதலாளிகள் மீது மோடிக்கு எவ்வளவு கரிசனம்.

ஒட்டுமொத்த சமூகத்துக்கே எதிரியாக இருக்கின்ற முதலாளிகள் மீது காட்டுகின்ற அக்கறையை, நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் தங்களுடைய உழைப்பால் உருவாக்கி வருகின்ற தொழிலாளி வர்க்கத்தின் மீதும், ஏனைய உழைக்கும் மக்கள் பிரிவினர் மீதும் காட்ட மறுக்கிறது, அரசு. ஏனென்றால் இது முதலாளிகளின் அரசு. இதனால்தான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளை கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா ஆட்சியாளர்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றனர்.

நாட்டின் அனைத்து வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம், அனைத்து தொழில்களிலும் தனியார் மூலதனம் நுழைந்து நாட்டையே கொள்ளையடிக்க ஏற்கனவே வழிவகுக்கப்பட்டுள்ளது. தற்போது, நட்டம் என்கிற பெயரில் தேசிய பஞ்சாலைக் கழகம் (என்.டி.சி), இந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் (ஊட்டி) உள்ளிட்ட 8 பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்கு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது, மோடி அரசு. இதன் தொடர்ச்சியாக நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்சூரன்சு, பாதுகாப்பு ஆகிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. செவ்வாய்கிரகத்தை ‘சுற்றிப் பார்க்க’ ராக்கெட்டை அனுப்பி கைதட்டி குதூகலிக்கிறார் மோடி. ஆனால், பொது மருத்துவத்தை தனியார் மயமாக்கியதன் விளைவாக, தருமபுரியில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டைப் போன்ற கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ராக்கெட் விடத் தெரிந்த அரசுக்கு இலவச மருத்துவம் தருவதற்கு கசக்கிறது. தனியார்மயம் முதல் சட்டதிருத்தங்கள் வரை அனைத்தும் முதலாளிகளின் தேவைக்காகவே.

மற்றொரு புறத்தில், ஜெயாவின் பினாமி அரசு மக்கள் வாழ்வின் மீது கொடுந்தாக்குதல்களை நடத்தி வருகிறது. பால்விலை உயர்வும், மின்கட்டண உயர்வும் உழைக்கும் மக்கள் தலை மீது இடியாக இறங்கியுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி காவிரி நீரின்றி தவித்துக் கிடக்கிறது. பன்னாட்டு முதலாளிகளோ பூமிக்கடியில் கொட்டிக் கிடக்கின்ற மீத்தேன் வாயு வியாபாரத்திற்காக பொன்விளைந்த தஞ்சை பூமியை பாலைவனமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தெருவுக்கொரு சாராயக் கடையைத் திறந்து தாராள சப்ளை செய்து வருகின்ற அரசால், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை சப்ளை செய்ய முடியவில்லை. உரத் தட்டுப்பாடு காரணமாக எஞ்சி நிற்கும் விவசாயமும் அழிந்து கொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி பகுதியில் நீர்த்தேக்கம் கட்டுவதற்காக விளைநிலங்களை பறிமுதல் செய்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறித்துள்ளது, அரசு. விவசாயத்தையே அழித்து விட்டு யாருக்காக நீர்த்தேக்கம் கட்டுகின்றனர்.

மறுகாலனியாக்க நடவடிக்கைகள் முதலாளிகளுக்கு சொர்க்கத்தையும், உழைக்கும் மக்களுக்கு நரகத்தையும்தான் உருவாக்கி வருகின்றன. முதலாளிகளது லாபவெறி தொழிலாளி வர்க்கம் மட்டுமின்றி அனைத்து உழைக்கும் மக்களது கழுத்தையும் இறுக்குகிறது. கழுத்தின் ஒரு முனை முதலாளிகளின் கையில், மற்றொரு முனையோ அரசின் கையில். இதை சகித்துக் கொண்டு செத்து மடிவதா தொழிலாளி வர்க்கம்? நம்முடைய உழைப்புச்சக்தியை ஒட்ட ஒட்ட உறிஞ்சிக் கொழுக்கின்ற முதலாளிகளின் அதிகாரத்தின் கீழ் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கூலியடிமைகளாக  வாழப் போகிறோம்? முதலாளிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில் இருக்கின்ற ஆளும் வர்க்கம் மட்டுமே துணை நிற்கிறது. ஆனால் தொழிலாளி வர்க்கமோ விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுதொழில் புரிவோர் என பலகோடி உழைக்கும் மக்களின் துணையோடு நிற்கிறது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்குகின்ற பொறுப்பு தொழிலாளி வர்க்கத்துக்குத்தான் உள்ளது.

இரும்பை உருக்கி எந்திரங்கள் அனைத்தையும் படைக்கின்ற நம்முடைய கைகளுக்கு முதலாளித்துவம் போட்டிருக்கின்ற சுருக்குக் கயிற்றை அறுத்தெறிய முடியாதா? காட்டாற்றின் திசையையே மாற்ற வைக்கின்ற வலிமை படைத்த நம்மால் மூலதனத்தின் பாய்ச்சலைத் தடுத்து நிறுத்திடவும் முடியும். ஓடுகின்ற சக்கரங்கள் எல்லாம் நின்று விடும் – நம்முடைய கைகள் ஆணையிட்டால்!

ஓட்டுக் கட்சிகளாலும் அவர்களைச் சார்ந்த பிழைப்புவாத தொழிற்சங்கங்களாலும், தொழிலாளி வர்க்கத்து வழிகாட்டவோ, தலைமை தாங்கவோ முடியாது. 45,000 தொழிலாளர்களது வேலையைப் பறித்த நோக்கியா மூடப்பட்ட போது ஓட்டுக் கட்சிகளும், அவர்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் செய்த துரோகம் கண்முன்னே நிழலாடுகிறது. இதுபோன்ற எண்ணற்ற துரோகங்களே ஓட்டுக்கட்சிகளது வரலாறாக உள்ளது. கம்யூனிசம் என்கிற வாளேந்தி வருகின்ற புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தலைமையில் அணிதிரள்வோம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.

தொழிலாளர்களே!

  • தொழிலாளர்களது குரல்வளையை நெரிக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதை முறியடிப்போம்.
  • வேலைநிரந்தரத்தை அடியோடு மறுத்து, சுரண்டலுக்கு அங்கீகாரம் தருகின்ற சட்டத் திருத்தங்களை எதிர்த்து முறியடிப்போம்!
  • உழைக்கும் மக்களை மரணக் குழியில் தள்ளி, முதலாளிகளை கொழுக்க வைக்கின்ற தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளை முறியடிப்போம்.

தொழிலாளர் உதவி ஆணையர் – திருப்பெரும்புதூர்

கம்பெனிகள் பதிவுத்துறை – கோவை

அலுவலகங்கள் முன்பாக

முற்றுகைப் போராட்டம்.

17.12.2014 காலை 10 மணி

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
110/63, மாநகராட்சி வணிக வளாகம், 2-ம் தளம்,
என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24
தொ.பே – 88075 32859, 94442 13318, 95977 89801